யோ.பெனடிக்ற் பாலன்

 

பெனடிக்ற் பாலன்பெனடிக்ற் பாலன், யோ. (1939 – 1997) ஓர் எழுத்தாளர். இவர் கல்வித்துறையில் முதுகலைமாணிப் பட்டம் பெற்று உளவியல் விரிவுரையாளராகக் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் 1984 முதல் 8 ஆண்டுகள் பணியாற்றிப் பின்னர் பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றினார்.

இவர் பல சிறுகதைகளையும் நாடகங்களையும் எழுதியுள்ளார். இவரது ‘விபச்சாரம் செய்யாதிருப்பாயா’ என்ற சிறுகதைத் தொகுதிக்கு 1995 இல் சாகித்திய மண்டலப் பரிசு கிடைத்தது. இவரது நீயொரு பெக்கோ என்ற நாடகம் நன்கறியப்பட்டதாகும். இவர் கல்வி உளவியல் அடிப்படைகள் போன்ற கல்வியியல் சார் நூல்களை எழுதியுள்ளார்.

என்னுரை ……..

நான் ஏறக்குறைய 45 ஆண்டுகளாக எழுதிய எனது சிறுகதைகள் தொகுதியாக நூலுருப் பெறாமல் இருந்தன. இதையிட்டு நான் எனக்குள்ளேயே கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் எந்தவொரு இலக்கிய அன்பர்களும் அதுபற்றி என்னிடம் கேட்டது கூட இல்லை.

யுனைட்ரெட் மேர்ச்சன்ஸ் அதிபரும், தமிழ்ப் பெருந்தகையும் எனது இனிய நண்பருமான திரு. எஸ். பி. சாமி அவர்கள் எனது சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட முன் வந்தார்கள். அவரது பேருதவியும், அவர் அளித்த உற்சாகமும் காரணமாக எனது இந்தச் சிறுகதைத் தொகுதி வெளிவருகின்றது. என் ஆத்மா உள்ளவரை எனது நன்றியுணர்வு அவர்களுக்கு.

இச் சிறுகதைத் தொகுதியிலே எனது 18 சிறுகதைகள் அடங்கியுள்ளன.

நான் அவ்வப்போது சேகரித்துப் பாதுகாத்து வைத்த எனது ஆக்கங்கள் 1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது பேரின வெறியர்களால் எரிக்கப்பட்டு விட்டன.

நான் எனது சிறுகதைத் தொகுதியொன்றை நூலுருவில் வெளியிடுகின்ற ஆசையில் அருஞ்சுவடிகள் திணைக்கத்தின் சில கதைகளைத் தேடிப் பெற்றேன். நண்பர்கள் சேகரித்து வைத்திருந்த சில எனக்குக் கிடைத்தன. இவ்விடயத்திலே எனக்கு அருந்தொண்டாற்றிய எமது எழுத்தாளர் தெளிவத்தை யோசப் அவர்களுக்கு எப்படி நன்றி கூறுவதென என் மனம் துடித்துக் கொண்டி ருக்கின்றது. இலங்கைத் தமிழ் எழுத்தாளருள் அவர் ஒரு சத்தியமான இலக்கிய நெஞ்சம்.

நான் ஏன் சிறுகதைகள் எழுதுகின்றேன்? ஏன் அவற்றைத் தொகுதிகளாக நூலுருவிலே பிரசுரிக்க ஆவலுடன் இருக்கின்றேன்?

நான் யாழ்ப்பாணத்திலே ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்தவன். ஏழைகளின் துன்ப துயரங்களையும், அவலங்களையும் பசிபட்டினிகளையும் அவர்களது கல்வி அறிவின்மையையும் நான் அனுபவரீதியாக அறிவேன்.

நாம் வாழும் இலங்கைச் சமூகம் மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கின்ற ஒரு அமைப்பாகும். பெரும்பான்மை மக்களின் வாழ்வு துன்ப துயரங்கள் அமைதியின்மைகள், வறுமையின் தாக்கங்கள் நிறைந்ததாயிருப்பதற்கு மனிதனை மனிதன் சுரண்டுகின்ற வர்க்க சமுதாயமே காரணமென்பதை அறிந்தேன்.

அரசியலே சகலவற்றையும் தீர்மானிக்கின்றது. இந்த ஓர வஞ்சகமான சமுதாயத்தை மாற்றி அமைப்பதற்கு உழைக்கும் மக்களின் அரசியலாலேயே முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், இச் சமுதாய அமைப்பை மாற்றி அமைத்து, சகலரும் சரிநிகர் சமானமாக, சுபீட்சமாக வாழத்தக்க ஒரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக மக்களைத் தயார்ப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த மார்க்னிய இயக்கத்திலே இணைந்து உழைத்தேன்.

அந்த இயக்கம் எனக்கு ஒரு சரியான உலகப் பார்வையை அளித்தது, மக்களை நேசிக்கக் கற்றுக் கொடுத்தது. மக்களிடம் கற்று மக்களிடமே மீண்டும் அளித்தல் வேண்டும் என்ற கோட்பாட்டைப் போதித்தது.

இவைகளால் தெளிவும், பரந்த உணர்வும் பெற்ற நான் மனிதனை * மனிதன் சுரண்டுவதை அம்பலப்படுத்தவும், சுரண்டலினால் மக்கள் வாழ்வில் விளைகின்ற துன்ப துயரங்கள், அவலங்கள், ஏக்கங்கள், கல்வி அறிவின்மை , அடிப்படை மனித உரிமைகள் பறிக்கப்படுதல் முதலியவைகளை வெளிப்படுத்தவும் நான் எழுதத் தொடங்கினேன். அத்தகைய நோக்குடன் எழுதப்பட்ட சிறு கதைகளில் சிலவே இத் தொகுதியில் அடங்கியுள்ளன.

இச்சிறு கதைத் தொகுதிக்கு வழமை போல் விமர்சகர் ஒருவரின் முகவுரையை நான் பெற விரும்பவில்லை. இலங்கையிலே தமிழ் இலக்கிய விமர்சகர்கள் தம்மிடம் அளிக்கப்படுகின்ற நூல்களுக்கு முகவுரையை மனமுவந்து அளிக்கின்றபோது நூலாசிரியருக்கு மதிப்பளித்தே முகவுரை எழுதுகின்றனர். அங்கே உண்மை மாசுபட்டு விடுகின்றது. அதிகமான கலை இலக்கிய விமர்ச கர்கள் பல்கலைக்கழகங்களிலே தமிழ் விரிவுரையாளராக இருப்போர். அவர்களுக்கு விமர்சனம் செய்வது அவர்களது தொழிலின் ஒரு கூறு. பெரும்பாலோர் யதார்த்த நிலையைக் கருத்திற் கொண்டன்றி, வரைவிலக் கணங்களிலிருந்து கலை இலக்கியப் படைப்புகளை நோக்குபவராவர். அதனால் ஒரு சிருட்டி கர்த்தாவின் படைப்பைப் பற்றி உண்மையான மதிப்பீடு நிகழ்வ தில்லை. அக் காரணத்தால் எனது இக்கதைத் தொகுதியைப் படித்து மதிப்பீடு செய்யுமாறு வாசகர்களிடமே ஒப்படைக்கின்றேன்.

எனது இச்சிறுகதைத் தொகுதியிலுள்ள கதைகள் இதைப் படிக்கின்ற மக்களின் அறிவிலும், உணர்விலும் ஒரு சிறு பொறியைத் தட்டி விடுமென்ற நம்பிக்கை எனக்குண்டு.

என் சிறுகதைகளைப் பிரசுரித்து உதவிய வீரகேசரி வார மஞ்சரி ஆசிரியர், இராஜகோபாலனுக்கும், தினகரன் ஆசிரியர் குழுவுக்கும், சிந்தாமணி, ஈழநாடு, முரசொலி, தாயகம், வசந்தம், குமரன் முதலிய பத்திகைகளுக்கும் இலக்கிய சஞ்சிகைகளுக்கும் எனது நன்றிகள்!

இச் சிறுகதைத் தொகுதி வெளிவர ஒத்துழைப்பு நல்கிய எல்லோருக்கும் குறிப்பாக ஓவியர் தம்மிக்கா அக்மீமனவுக்கும், சிவகுருநாதனுக்கும் என்னன்றிகள் உரித்தாகும்.

– யோ. பெனடிக்ற் பாலன்
134, எலிஹவுஸ் வீதி, முகத்துவாரம்
கொழும்பு 15.

நூலின் பெயர்: விபசாரம் செய்யாதிருப்பாயாக (சிறுகதைத் தொகுதி)
ஆசிரியர்: யோ.பெனடிக்ற் பாலன் B.A. (Cey), B.A (Hon. Cey), Dip – in Education
உரிமை: ஆசிரியருடையது
வெளியீடு: விவேகா பிரசுராலயம் 134, எலிஹவுஸ் வீதி, கொழும்பு-15
பதிப்பு அச்சகம்: முதற் பதிப்பு கார்த்திகை 1995 : யுனைட்ரெட் மேர்ச்சன்ஸ் லிமிட்ரெட்
விலை ரூபா 125/
விற்பனை உரிமை : பூபாலசிங்கம் புத்தகசாலை, 340, செட்டியார் தெரு, கொழும்பு -11. தொலைபேசி : 422321

பொருளடக்கம்

  1. விபசாரம் செய்யாதிருப்பாயாக – தாமரை 1963
  2. சமுதாய வீதி – தினகரன் 1965
  3. அந்தோனியும் விசேந்தியும் – ஈழநாடு 1962
  4. மாரியாயி ஒரு மாடு தானே? – சிரித்திரன் 1972
  5. பட்டத்துக்குரிய இளவரசன்- சிந்தாமணி 1981
  6. ஒரு பாவத்தின் பலி – வீரகேசரி 1982
  7. கீழைக்காற்று – வீரகேசரி – 1983
  8. இப்படி எத்தனை காலம்? – முரசொலி 1985
  9. ஒரு வண்டியில் பூட்டிய மாடுகள் – தாயகம் 1984
  10. பட்டம் விடுவோம் – வீரகேசரி 1991
  11. கரையேறும் மீன்கள் – தினகரன் 1991
  12. லூக்காஸ் மாஸ்ரர் – தினகரன் 1995
  13. சபிக்கப்பட்டவனா? – தினகரன் 1995
  14. ஓர் அக்கினிக் குஞ்சு – வீரகேசரி 1996
  15. உனக்கு இது போதும் – குமரன் 1973
  16. கைதேர்ந்தவர்கள் – வசந்தம் 1967
  17. கவரிமான்கள் – குமரன் 1982
  18. தேயிலைப்பூ – சிந்தாமணி 1967

தெளிவத்தை ஜோசப்
சிந்தனைத் தெளிவும்; சிருஷ்டித் திறனும் கொண்ட திரு பெனடிக்ற் பாலன் அவர்களின் சிறுகதை, நாவல், கவிதை, நாடகம், குட்டிக்கதைகள் போன்ற தனது படைப்புக்கள் மூலம் ஈழத்து இலக்கியத்துக்கு வளமான பங்களிப்புச் செய்து வரும் ஒரு மூத்த எழுத்தாளர்.

இலங்கை இலக்கியத்துறையில் அறுபதுகளுக்குச் சற்று முன்னதாக அடி எடுத்து வைத்த இவர் முற்போக்கு இலக்கியப் பேரியக்கத்தால் ஆகர்ஷிக்கப்பட்டு உழைக்கும் மக்களின் எழுச்சிக்கும், ஐக்கியத்துக்கும் உறுதுணையாய் நிற்கும் தனது படைப்புக்கள் மூலம் கலை இலக்கியத்துறையில் நல்ல பல விளைச்சல்களைத் தந்தவர்.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்தாலும் 1965க்குள் மூன்று சிறுகதைப் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று தனது எழுத்தாற்றலை நிரூபித்துக் கொண்டவர்.

யாழ் இளம் எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பித்து, எழுத்தாளர் சங்கத்தின் ஏடான “மலர்” என்னும் சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் யாழ்கிளையின் தீவிர ஊழியராகச் சேவை யாற்றியவர் திரு.பெனடிக்ற் பாலன்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பி. ஏ. பட்டமும், அரச அறிவியலில் பி. ஏ. ஆனர்ஸ் பட்டமும், பெற்று கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தில் பத்திராதிபராகவும் பணியாற்றிய இவர் ஒரு பயிற்றப்பட்ட ஆசிரியருமாவார். எம். ஏ. பட்டதாரியுமாவார். பதுளையிலிருந்து கிழக்கே பத்து மைல் தொலைவில் உள்ள கந்தேகெதரைத் தமிழ் மகா வித்தியாலயத்தில் 1964லிருந்து ஐந்தாண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்தார். மலையத்தில் பணிபுரிந்த இவருடைய மனித நேயமிக்க மனம்; அடிப்படை உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்ட மலையக உழைக்கும் மக்கள் பால் ஈர்க்கப்பட்டு அவர்களின் எழுச்சிக்காகவும் தனது எழுத்தைப் பயன்படுத்தினார். தமிழக – ஈழத்துச் சஞ்சிகைகளில் முப்பதுக்கும் குறையாத மலையகச் சிறுகதைகளைப் படைத்துள்ளார்.

வசந்தத்தில் தொடர்கதையாக வந்து, பின்னர் நூலுருப் பெற்ற “சொந்தக்காரன்” நாவல் மலைக மக்களின் வீடில்லாப் பிரச்சினையை மையமாகக் கொண்டது. இலக்கிய உலகில் இவருக்கு ஒரு தரமான இடத்தையும், கவனிப்பையும் பெற்றுக் கொடுத்த நூல் இது.

1963ல் எழுத்தாளர் கூட்டுறவுப் பதிப்பகம் இவருடைய “குட்டி” என்னும் நாவலை நூலுருவில் வெளியிட்டது. கண்டி கலாச்சாரக் குழு இவருடைய குட்டிக் கதைகளைத் தொகுத்து “தனிச்சொத்து” என்னும் பெயரில் வெளியிட்டது.

பூபாலசிங்கம் புத்தகசாலை இவரது “கல்வி உளவியல் அடிப்படைகள்” என்ற நூலை வெளியிட்டுள்ளது.

ஈழத்துச் சிறுகதையுலகில் நல்ல சுவடுகளைப் பதித்துள்ள திரு. பெனடிக்ற் பாலனின் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவருகிறது என்னும் செய்தியே இலக்கியச் சுவையான செய்திதான். எனது வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *