துடுப்பதி ரகுநாதன்

 

கடந்த 60 ஆண்டுகளில் கதை, கட்டுரை, நாவல்கள், தொடர்கதைகள் என 600-க்கும் மேற்பட்ட படைப்புகளை எழுதியிருக்கும் துடுப்பதி ரகுநாதன், 80 வயதைக் கடந்த நிலையில் இன்னும் சுறுசுறுப்பாய் எழுதிக்கொண்டிருக்கிறார்.

தற்போது கோவை நஞ்சுண்டாபுரம் சாலை நேதாஜி நகரில் வசித்து வரும் துடுப்பதி ரகுநாதனை சந்தித்தோம். “பூர்வீகம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகேயுள்ள துடுப்பதி. பெற்றோர் செல்லப்பன்-செல்லம்மாள். ஜவுளி வியாபாரம். பெருந்துறை உயர்நிலைப் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி முடித்துவிட்டு, கோவையில் தங்கி கூட்டுறவில் பட்டயப் படிப்பு பயின்றேன். 1961-ல் மத்தியக் கூட்டுறவு வங்கிப் பணியில் சேர்ந்தேன். 1971-ல் சென்னையில் உள்ள மாநில நிலவள வங்கியில் சேர்ந்து, 1991-ல் கணக்குப் பிரிவு அலுவலராக ஓய்வுபெற்றேன்.

சிறு வயது முதலே படிப்பதிலும், எழுதுவதிலும் ஆர்வம் அதிகம். பள்ளிப் பருவத்திலேயே சின்ன சின்ன கதைகள் எழுதுவேன். மதுரை கருமுத்து தியாகராஜர் நடத்திய ‘தமிழ்நாடு’ நாளிதழில் முதல் சிறுகதை வெளியானது.

தொடர்ந்து, ஆனந்தவிகடன், கலைமகள், குமுதன், குங்குமம், அமுதசுரபி என ஏராளமான இதழ்களுக்கு சிறுகதைகள் எழுதி அனுப்பி, அவை பிரசுரமாகின. கடந்த 60 ஆண்டுகளில் தமிழில் வெளிவந்து நின்றுபோன, தற்போதும் வெளிவந்துகொண்டிருக்கிற பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், குறுநாவல், நாவல், தொடர்கதை என எழுதி வருகிறேன்.

இதுவரை 6 சிறுகதை தொகுப்புகள் வெளியிட்டுள்ளேன். இதில், ஆனந்த கண்ணீர், அம்மா உன் நினைவாக ஆகியவை பரிசுபெற்ற சிறுகதை தொகுப்புகள்.

முதல் நாவலான ‘மாஞ்சோலை மன்மதன்’ மாலைமதி நாவலில் வெளியானது. இதேபோல, ஏறத்தாழ 10 நாவல்களை எழுதியுள்ளேன். ‘என் உயிர்த் தோழி நீ அல்லவா’ என்ற நாவலுக்கு திருப்பூர் தமிழ்ச் சங்கம் விருது வழங்கிப் பாராட்டியது. 1971-76-ல் நான் எழுதிய நாடகங்கள் வானொலியில் ஒலிபரப்பாகின. 1967-ல் கோவை ‘நவ இந்தியா’ நாளிதழில் எழுதிய ‘உறவு தான் என்னவோ’ என்ற தொடர்கதை மேடை நாடகமாக்கப்பட்டு, ஈரோடு மாவட்டத்தில் பலமுறை அரங்கேறியது.

முதல்வர்கள் நடத்திய இதழ்களில்…

தமிழக முதல்வராக இருந்த அண்ணா நடத்திய திராவிட நாடு, காஞ்சி, கருணாநிதியின் குங்குமம், சுமங்கலி, வலம்புரி ஜானை ஆசிரியராக கொண்டு எம்.ஜி.ஆர். நடத்திய தாய் ஆகிய பத்திரிகைகளில் நான் எழுதியுள்ளதை பெருமையாகக் கருதுகிறேன்.

இலங்கைப் பிரச்சினை குறித்து எழுதிய ‘புத்தரின் அழுகை’ சிறுகதை மிகுந்த வரவேற்பு பெற்றது. ஒரு நாள் திடீரென வைகோ தொலைபேசியில் தொடர்புகொண்டு, அந்தக் கதையை வெகுவாகப் பாராட்டியதுடன், தனியே ஒரு கடிதமும் அனுப்பிவைத்தார்.

சாவியும்… லண்டன் முரசும்…

சென்னையில் வசித்தபோதுகூட நான் எந்த பத்திரிகை ஆசிரியரையும் நான் நேரில் சந்தித்ததில்லை.

1981-ல் ஒரு சிறுகதை எழுதி, சாவி பத்திரிகைக்கு தபாலில் அனுப்பியிருந்தேன். அந்த நேரத்தில் ஓவியர் ஜெயராஜ் ஏதோ வேலையாக லண்டனுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.

இந்த சூழலில், சாவி என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு, “என் நண்பர் லண்டனில் ‘லண்டன் முரசு’ என்ற தமிழ்ப் பத்திரிகையை நடத்திக் கொண்டிருக்கிறார். அவர், ஒரு நல்ல சிறுகதை வேண்டும் என்று கேட்டார்.

நான் உங்கள் கதையை, ஓவியர் ஜெயராஜ் படத்துடன் கொடுத்தனுப்பியுள்ளேன். லண்டன் முரசு பத்திரிகையில் உங்கள் கதை பிரசுரமானவுடன், உங்களுக்கு நகல் வரும்” என்று கூறினார். அதேபோல, அந்தக் கதை லண்டன் முரசு இதழில் வெளியானது.

ஏறத்தாழ 52 ஆண்டுகளுக்கு முன் கோவை தமிழ் எழுத்தாளர் சங்கத்துக்கு கவிஞர் சக்திக்கனல் தலைவராக இருந்தபோது, நான் பொதுச் செயலராகப் பொறுப்பு வகித்தேன். நாங்கள் நிறைய எழுத்தாளர்களை பரிசுகள் வழங்கி ஊக்குவித்தோம். தற்போது சிறுகதைகளுக்கென உள்ள பிரத்யேக இணையதளத்தில் (www.sirukathaigal.com) புதுமைப்பித்தன் முதல் ஜெயமோகன் வரை நூற்றுக்கணக்கான எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. அதில், 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் பதிவு செய்துள்ளது நான் மட்டுமே.

அதேபோல, எனது சிறுகதை, கட்டுரைத் தொகுப்புகள், நாவல்கள் என 24 நூல்களை இ-புத்தகங்களாகப் பதிப்பித்துள்ளேன்” என்றார் துடுப்பதி ரகுநாதன். இவரது மனைவி சுமதி ரகுநாதனும் எழுத்தாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

எழுத்தாளர்கள் சாண்டில்யன், மு.வ., ஜெயகாந்தன், கவிஞர் முத்துலிங்கம், இசைஞானி இளையராஜா என ஏராளமானோரை சந்தித்துப் பேட்டி எடுத்துள்ளார். இவற்றைத் தொகுத்து ‘மறக்க முடியாத சந்திப்புகள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார்.

2013-ல் கவி ஓவியா பத்திரிகை நடத்திய சிறந்த நூல் போட்டியில் இவரது ‘ஆனந்தக் கண்ணீர்’ என்ற சிறுகதை தொகுப்பு, சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டது. சென்னை தங்கமுத்து அறக்கட்டளை, நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் 2014-ல் நடைபெற்ற போட்டியில், இவரது ‘அம்மா உன் நினைவாக’ சிறுகதை தொகுப்பு சிறந்த நூலாகத் தேர்வு செய்யப்பட்டது.

இதேபோல, ‘இன்னொரு அன்னை தெரசா’ என்ற சிறுகதைக்கு வானதி பத்திரிகை நிறுவனம் 2016-ல் விருது வழங்கிக் கவுரவித்தது. “பாவையர் மலர், ராமகிருஷ்ண விஜயம் நடத்திய சிறுகதைப் போட்டிகள், குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவுப் போட்டி, ராஜம் கிருஷ்ணன் நினைவுப் போட்டிகளிலும் எனது படைப்புகள் பரிசு வென்றன.

திருப்பூர் தமிழ்ச் சங்கம் 2015-ல்வெளியான நாவல்களில், லேனா தமிழ்வாணன் தலைமையிலான நடுவர் குழுவை நியமித்து சிறந்த நாவலை தேர்வு செய்தது.

அதில், எனது ‘மாயமான் காப்பகம்’ என்ற நாவல் தேர்வு செய்யப்பட்டு, லேனா தமிழ்வாணன், சிலம்பொலி செல்லப்பனார் மூலம் விருது வழங்கப்பட்டது.

2017-ல் ‘முன்னேற்றம் உங்கள் கைகளில்’ என்ற கட்டுரைத் தொகுப்புக்காக, ராஜபாளையம் மணிமேகலை மன்றம் ‘எழுத்துச் செம்மல்’ என்ற விருது வழங்கி கவுரவித்தது.

இதேபோல, பல்வேறு திறனாய்வு, விமர்சனப் போட்டிகளிலும் எனது கட்டுரைகளுக்குப் பரிசுகள் கிடைத்துள்ளன.

2017-ல் மலேசிய தமிழ் மணி மன்றம், திருமூர்த்திமலை தென் கயிலைத் தமிழ்ச் சங்கம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து மதுரையில் உலகளாவிய தமிழ்ச் சிறுகதைகள் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடின.

இதில், உலக அளவில் சிறந்த 100 சிறுகதைகள் கொண்ட நூலை வெளியிட்டனர்.

அதில், எனது ‘ஒரு நிருபரின் கதை’ என்ற சிறுகதை இடம் பெற்றிருந்தது. மேலும் அந்த விழாவில் ‘சிந்தனைச் சிகரம்’ என்ற விருதையும் கொடுத்து கவுரவித்தனர்” என்றார் மகிழ்ச்சியுடன் துடுப்பதி ரகுநாதன்.

மக்களுக்குத் தேவையானதை எழுதுங்கள்…

“இளைய தலைமுறை எழுத்தாளர்களுக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?” என்று கேட்டதற்கு, “தங்களது எழுத்தும், பெயரும் அச்சில் வந்தால் போதும் என்று கருதி, தனக்குத் தோன்றியதெல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். நமக்குப் பிடித்ததை எழுதுவதைக் காட்டிலும், மக்களுக்கு என்ன பிடிக்குமோ அல்லது அவர்களது மேம்பாட்டுக்கு என்ன தேவையோ அதை எழுத வேண்டும்.

பெண்கள் பணியிடங்களில் பாதுகாப்பாற்ற சூழ்நிலையை உணர்கிறார்கள். அவர்களது பாதுகாப்பை வலியுறுத்தி, “நானும் கூட…” என்ற நாவலை எழுதினேன். 2018-ல் சிகரம் இலக்கியப் பத்திரிகை இதை சிறந்த நாவலாக தேர்வு செய்தது. இதுபோல, மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும், அவர்களது முன்னேற்றத்துக்கு உதவும் எழுத்துகளே சிறந்தவை. இந்த தலைமுறை நிச்சயம் இதுபோல எழுதும்” என்கிறார் நம்பிக்கையுடன் துடுப்பதி ரகுநாதன்.

– நன்றி: ஹிந்து (https://www.hindutamil.in/news/literature/172749-80-600-60.html)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *