பெயர்: எம்.எஸ்.அமானுல்லா
பிறப்பிடம்: மூதூர்
பிறப்பு: மே 27 1962
படைப்பாற்றல்: இந்திய முஸ்லிம் எழுத்தாளர், ஆளுர் கன்னியாகுமரி மாவட்டத்தைப் பிறப்பிடாகவும் சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு கட்டுரையாளராவார். திறனாய்வு, நாட்டுப்புறவியல் முதலிய துறைகளில் அதிக ஆர்வமிக்க இவர் சென்னை புதுக்கல்லூரி நூலகராகவும், பல்வேறு அமைப்புகளின் வாழ்நாள் உறுப்பினராகவும் பணியாற்றுகிறார்.
படைப்புகள்:
சிறுகதைகள்:
வரால்மீன்கள்
இருதுளிக் கண்ணீர்
கருவேலங்காடுகள் தாண்டி – என்பன
இவரது குறிப்பிடத்தக்க சில சிறுகதைகள்.
சிறுகதைத் தொகுப்பு:
வரால்மீன்கள் – பரிசுபெற்ற பத்துக்கதைகளின் தொகுப்பு – 2007
விருதுகள்:
கருவேலங்காடுகள் தாண்டி – இரசிகமணி கனகசெந்திநாதன் கதா விருது பெற்றது.
இவர்பற்றி:
இவர் மூதூரின் முதலாவது பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர். தற்போது ஓய்வுபெற்றுள்ளார். ஈழத்திலும், சர்வதேச மட்டத்தலும் நடந்த சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். இவர் பத்திரிகைகளுக்கு எழுதுவது மிகவும் குறைவு. தான் எழுதி சேகரித்து வைத்திருக்கும் சிறுகதைகளை அவ்வப்போது நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பிவைப்பார். முனித இனம் என்ற இவரது சிறுகதை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
தன்னைப்பற்றி எம்.எஸ். அமானுல்லா :
வரால் மீன்கள் எனக்குப் பிடித்த கதை. உண்மையில் யுத்தச் சூழலில் அகால மரணமான எனது மூத்த சகோதரனின் வாழ்வுதான் அது. கொஞ்சம் அழகுபடுத்தி 1997ல் எழுதினேன். கல்வியமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் தேசிய ரீதியில் இரண்டாம் பரிசைப் பெற்றுக் கொண்டது. அதன் பிறகுதான் தீவிரமாக சிறுகதைகள் எழுதினேன். எவ்வாறாயினும் 22 சிறுகதைகளே இதுவரை எழுதியுள்ளேன். இவற்றுள் 20 சிறுகதைகள் தேசிய, சர்வதேச ரீதியாக பரிசில்களைப் பெற்றுக் கொண்டன. சிங்கள, ஆங்கில மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்ட கதைகளும் அடங்கும். நாவல் ஒன்று எழுதும் முயற்சியிலும் தற்போது ஈடுபட்டுள்ளேன்.
மூதூர் மத்திய கல்லூரியிலும் பலாலி கலாசாலையிலும் கற்று விஞ்ஞான ஆசிரியராக நியமனம், அதிபராகப் பதவியுயர்வு பெற்று இளைப்பாறி, மீண்டும் ஆசிரிய சேவைக்கு ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்டுள்ளேன்.
இளம் வயதில் வயதுக்குரிய பொழுதுபோக்குகளில் நாட்டம் அற்று இருந்தேன். நூலகங்களிலேயே எனது மாணவப் பருவமும், இளைய பருவமும் கழிந்தது. யாழ் நூலகத்திலும் இலக்கியங்களைத் தேடிப்படித்தேன்.
அகவை அறுபது தாண்டியும் வாசிப்பில் உள்ள ஈடுபாடு குறையவில்லை. சிறுகதைகள்தான் என்னை வெகுவாக ஈர்த்தன. வாழும் சூழலும் மண்ணின் வளமும் எனது எழுத்துக்குள் வலுவாகப் புக முயற்சிக்கின்றன. ஈழத்து எழுத்தாளர்கள்
சிலரைப் போலவே, தி. ஜானகிராமனும், கி. ராஜநாராயணனும் எனக்கு எழுத்துத் தடத்தை வலிமைப்படுத்தித் தந்தார்கள். அவர்கள்தான் எழுத்துலகில் எனது ஆதர்ச ஆத்மாக்கள்.
இதுவரை ஒரேயொரு சிறுகதைத் தொகுதியைத்தான் (வரால் மீன்கள்) வெளியிட்டுள்ளேன். 2008ம் ஆண்டுக்கான அரச சாகித்திய விருது, கிழக்கு மாகாண இலக்கிய விருது, இலங்கை இலக்கியப் பேரவை விருது ஆகியன அந்த நூலுக்குக் கிடைத்தது மகிழ்ச்சியான வரலாறாகும். மேலும் கனக செந்தினாதன் விருது, தகவம் விருது, விபவி விருது, கலாச்சார அமைச்சு விருது, முதலமைச்சர் விருது, கலாபூஷணம் விருது என்பன எனது சிறுகதை ஆக்க முயற்சிகளுக்காகக் கிடைத்த முக்கிய அங்கீகாரங்களாகும்.