அங்கையன் கயிலாசநாதன்

 

Angaian_Kailasanathanஅங்கையன் கயிலாசநாதன் (ஆகத்து 14, 1942 – ஏப்ரல் 5, 1976) ஈழத்து எழுத்தாளர். 33 ஆண்டுகளே வாழ்ந்திருந்த அங்கையன் நாவல், சிறுகதை, கவிதை, ஓவியம், வானொலி நாடகம் போன்ற பல துறைகளில் கால் பதித்தவர். ஒரு பத்திரிகையாளராக ஈழநாடு, வீரகேசரி ஆகியவற்றில் ஊடகத்துறையில் பணியாற்றியவர். சிறிதுகாலம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் தமிழ் வானொலி நாடகத் தயாரிப்பாளராகவும், ‘வானொலி மஞ்சரி’ இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். 1960 தொடக்கம் 17 ஆண்டுகள் எழுதியவர். ஈழத்து நெய்தல் நில மக்களது அவல வாழ்வைச் சித்திரித்து வெளிவந்த முதல் ஈழத்துப் புதினம் இவரது “கடல் காற்று” (1962) என்றே ஆய்வறிஞர்கள் கருதுகின்றனர்.சிறிதுகாலம் இவர் ‘சமூக தீபம்’ என்ற இதழையும் வெளியிட்டார்.

1942 ஆம் ஆண்டு மண்டைதீவில் பிறந்த அங்கையன், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். 1960 ஆம் ஆண்டு பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் சு. வித்தியானந்தன், க. கைலாசபதி ஆகியோரின் வழிகாட்டலில் தமிழ் மொழியைச் சிறப்புப் பாடமாகக் கற்று சிறப்புப் பட்டதாரியாக வெளியேறினார். கொழும்பிலுள்ள பிரித்தானியத் தூதராலயத்தில் மொழிபெயர்ப்பாளராகக் கடமையாற்றிய போது, 1967 இல் இராஜலட்சுமி அம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். இராசலட்சுமி இலங்கைத் தமிழ்க் கலாசார, பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தில் பணிப்பாளராக இருந்தவர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் போதே அங்கையன் தன்னையொரு படைப்பாளியாக வெளிக்காட்டிக் கொண்டார். இலக்கியக் கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் பலவற்றை எழுதினார். 2000 ஆம் ஆண்டின் பின் அங்கையன் சிறுகதைத் தொகுப்பு, நாவல் பிரசுரமாகின. பிரபல திறனாய்வாளர் கே. எஸ். சிவகுமாரன் அங்கையன் நூல்களை ஆய்வு செய்திருக்கிறார். 2000, 2001 இல் வடகிழக்கு மாகாண சபை அவரது சிறுகதைத் தொகுப்புக்கும் “சிட்டுக் குருவிகளும் வானம்பாடிகளும்’ என்ற நாவலுக்கும் பரிசு கொடுத்துக் கௌரவித்தது. 4 ஆண்டுகளாக அங்கையன் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றினார்.

எழுதிய நூல்கள்

  • கடற்காற்று (நாவல்) பின்னர் வானொலி நாடகமாகவும் இவரால் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டது.
  • செந்தணல் (நாவல்)
  • வானம்பாடியும் சிட்டுக்குருவியும் (நாவல்)
  • அங்கையன் கதைகள் (சிறுகதைத் தொகுப்பு)
  • வைகறை நிலவு (கவிதைத் தொகுப்பு)
  • அங்கையன் கயிலாசநாதன் கட்டுரைத் தொகுப்பு (2010)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *