‘திருமணத்துக்கு முன்பான தன் வாழ்க்கை பற்றிய கற்பனையாக மனத்திரையில் காட்சிப்படுத்தப்பட்ட அனைத்துமே நடைமுறை வாழ்வில் நிகழவில்லை. மாறாக கற்பனையே செய்திராத நிகழ்வுகள் நடந்து விட்டன’ என நினைத்து வருந்தினாள் சுபா.
“ஏண்டி ரொம்ப சோகமா இருக்கே…? உன்னோட சிரிப்பை நேர்ல பார்க்கனம்னு தான் சென்னைல இருந்து ஐநூறு கிலோ மீட்டர் தாண்டி கோயமுத்தூர் வந்திருக்கேன். வித, விதமா சமைச்சு சாப்பாடு போட்டு அசத்திப்போட்டு இப்படி மௌனமா இருந்தா எப்படி? சாப்பிட்டது ஜீரணமாகுமா…?” தோழி சுகன்யாவின் கேள்விக்கு கண்களில் வடியும் கண்ணீரால் பதில் சொன்னாள் சுபா.
ஏதோ யோசனையின் முடிவில் சேலைத்தலைப்பால் முகத்தை துடைத்துக்கொண்டு பெரு மூச்சு விட்டவள், மடியில் தலைவைத்து படுத்திருந்த பத்து வயது மகளை சுகன்யாவின் குழந்தையுடன் விளையாடச்சொல்லி விட்டு வீட்டின் முன் வளர்ந்து நிழல் தரும் செண்பக மரத்தின் கீழ் போடப்பட்டிருந்த பிரம்பு சேரில் சென்று அமர்ந்தபடி இன்னொரு சேரில் சுகன்யாவை அமரச்சொன்னாள்.
” இந்த வீட்ல இல்லைங்கிற குறை எதுவுமே இல்லை. வசதியா வாழறேன். ஆனா வருத்தத்தோட இருக்கறேன். பணத்துக்கு கஷ்டமில்லை. மாமியார், மாமனார் பெத்தவங்க மாதிரி பாத்துக்கறாங்க. ரெண்டு காரு இருக்கு. நினைச்ச எடத்துக்கு கூட்டீட்டு போக டிரைவர் இருக்காங்க. கேட்டேடு கம்யூனிட்டில பாதுகாப்பு, கரண்டு, தண்ணி, செக்யூரிட்டி, எலக்ட்ரீசியன், பிளம்மர், மேசன்னு யாரையும் தேடி போக வேண்டியதில்லை. ஒரு பட்டனை அழுத்தினா என்ன வேணும்னு கேட்க ஆளுக இருக்காங்க. சமைக்க, வீட்டு வேலை செய்ய ஆளுங்க இருக்காங்க. மாசமான அவரோட சம்பளத்தக்கூட என்னோட அக்கவுண்ட்ல தான் போடறாரு. எதுக்காக செலவுன்னு ஒரு நாளும் கேட்டதில்லை. ஆனா….” தேம்பி அழுதாள்.
“ஆனா…… என்னடி சொல்ல வர்றே….?”
“புருசனோட இடத்தை, அவரால கூட இருந்து கொடுக்கக்கூடிய சுகத்தை யாரால கொடுக்க முடியும்...? நீயே சொல்லு…..” தொடர்ந்து அழுததில் சாரை சாரையாக கண்ணீர் வடிந்தது.
“பணம் இல்லேன்னாலும் வாழ முடியாது சுபா. இன்னைக்கு மட்டுமில்லை, என்னைக்கும் வேணும். உடம்புல ரத்தம் சுரக்கிற வரைக்கும் தான் மத்ததெல்லாம். அது நாப்பதுல கூட முடிஞ்சு போகும். தொன்னூறு வரைக்கும் வாழனம்னா பணம் வேணும். அவருக்கும் உன்னைப்போல வருத்தம் இருக்காதுன்னு நினைக்கிறியா…? அதெல்லாம் சகிச்சிட்டு கடல்ல, அலைகளைக்கண்டு பயப்படாம ராத்திரி, பகலா கண்ணு முழிச்சு தேசம், தேசமா பரதேசி மாதிரி வருசக்கணக்குல குடும்பத்தைப்பிரிஞ்சு சுத்திட்டு பணம் சம்பாதிச்சு அனுப்பறாரு…”
“எங்க கிட்ட கார்டன பராமரிக்கிற தம்பதிகள் எவ்வளவு சந்தோசமா இருக்கறாங்க தெரியுமா…?மனைவியோட மடில கணவன் தலை வைத்து படுத்துட்டு….தலைய கோதி விட்டிட்டு….”
“அந்த வாழ்க்கைய உன்னால வாழ முடியுமா…?அவங்க படிக்காதவங்க. எந்த வேலையும் செஞ்சு பிழைப்பு நடத்திடுவாங்க. படிச்ச உன்னால அது முடியாது. எத்தனையோ வரன் உன்னப்பார்க்க வந்தும் வீட்டையும், சம்பளத்தையும் தானே உங்கப்பா பார்த்தாரு. காரணம் அவரால இன்னைக்கு வரைக்கும் சொந்த வீடு வாங்க முடியல. சேமிக்கிற அளவுக்கு சம்பாதிக்க முடியல. அதுக்காக ஒன்னா இருந்துட்டு தெனமும் சுகப்பட்டிருப்பாங்கன்னு நம்பறியா? என்னையே எடுத்துக்கோ. நாங்க கல்யாணம் ஆனதிலிருந்து ஒரே வீட்ல தான் இருக்கோம். ஆனா ஒன்னா இல்லே….” சுகன்யாவின் கண்களிலும் கண்ணீர் வந்தது.
“என்னடி சொல்லறே…?” அதிர்ச்சியுடன் கேட்டாள் சுபா.
“வாரிசுக்காக மட்டும் தானே தவிர ஒரு நாளும் வசியத்துனால எதுவுமே நடக்கலை. பண நிலையால மன நிலை அப்படி. ஒரு குழந்தைக்கப்புறம் வேலை, பணம், சொத்துன்னு அலையறமே தவிர சந்தோசமா ஒரு நாளும் இருக்க முடியல. ஒரு நாள் லீவு எடுத்தாலும் மாதச்செலவ சமாளிக்க முடியலை. வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ், மற்ற செலவுன்னு நிம்மதியா இருக்க முடியலை. காலைல செஞ்ச சாப்பாட்டக்கூட மீதம் இருந்தா சூடு பண்ணி ராத்திரியும் சாப்பிட்டிட்டு உடம்பு சோர்வுல தூங்கிடறேன். சோறே இல்லாட்டியும் தூக்கம் பெருசாத்தெரியுது. உன்னோட புருசன மாதிரி அவரும் சம்பாறிச்சா நான் நிம்மதியா வீட்ல இருந்திடுவேன். சில ராத்திரி சாப்பிடறதே இல்லை. காலைல இருந்து ஆபீஸ் டென்சன் அப்படி. வாழ்க்கை முறையே ஸ்பீடு லைப் முறைல சந்தோசமா நம்ம முன்னோர்கள் வாழ்ந்த ஸ்லோ லைப் முறை மாதிரி இல்லை. தொன்னூறு சதவீதம் பேரோட நிலைமை இது தான்” என தோழி சுகன்யா சொல்லக்கேட்டதில் ஆறுதலடைந்தவளாய் வறண்டு போயிருந்த உதடுகளுக்கு நாக்கின் துணையால் ஈரப்பதம் கொடுத்தவளாய் எகுறு தெரிய சிரித்தாள் சுபா!