ரங்கனுக்கு மனச்சுமை தலைச்சுமையை விட அழுத்தியது. ‘எப்படியாச்சும் இன்னைக்கு கொண்டு போற ரக்கிரி முழுசா வித்துப்போச்சுன்னா ஒரு புடிக்காச உண்டியல்ல போடறேன்’ என உள்ளூர் மாரியம்மனை வேண்டி, நேற்று பறித்த கீரைகளை புடிகளாக வாளை நாறில் கட்டி, ஒரு வேட்டியை விரித்து அதில் அடுக்கி தலை மேல் வைத்து விற்பதற்காக கிராமத்திலிருந்து பக்கத்தில் உள்ள நகரத்துக்கு நடந்து சென்றார்.
“ஏப்பா கீரை ஒரு புடி என்ன விலை…?” கேட்ட பெண்ணை ஏறிட்டுப்பார்த்தார்.
“ரக்கிரி ஒரு கட்டு பத்து ரூபா தானுங்க. நெம்முளுக்கு எத்தன புடி வேணுமுங்க?” எனக்கேட்டவரை பரிவுடன் பார்த்த பெண் ஒரு புடியை எடுத்துக்கொண்டு இருபது ரூபாயைக்கொடுத்து விட்டு பாக்கி வாங்காமல் செல்ல, எழுந்து ஓடியவர் தன்னிடமிருந்த அழுக்குப்படிந்த பத்து ரூபாயை அப்பெண்ணின் கையில் கட்டாயமாக திணித்து விட்டு திரும்பி வருவதற்குள் பாதையில் சுற்றித்திரிந்த மாடு ஒன்று கீரைகளை தின்று கொண்டிருந்ததைப்பார்த்தவுடன் “ஐயோ…. எல்லாம் போச்சே…. பாத்துப்பாத்துப்பொறிச்ச கீரைய படுபாவி மாடு தின்னு போடுச்சே… அம்பது புடி ஐநூறு போச்சே…. ஒன்னி கொழந்தைகளுக்கு குடுக்கறதுக்கு என்ன பண்ணுவேன்? மாரியாத்தா உனக்கு ஒரு புடிக்காச உண்டியல்ல போடறேன்னு சொன்னனே. இப்ப எந்த சாமியும் காப்பாத்துலியே….” கதறி அழுதவரை பாதையில் போவோர் வருவோரெல்லாம் ‘என்ன கஷ்டமோ பாவம்” எனக்கூறியபடி வேடிக்கை பார்த்தபடி சென்றனர். சிலர் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என பிச்சை போட்டுச்சென்றனர்.
சோர்வில் மாடு தின்ற கீரைக்கட்டுகளைப்பார்த்தவாறு சோகமாக மரத்தடியில் படுத்துக்கொண்டவருக்குப்பக்கத்தில் வந்து நின்ற காரிலிருந்து இறங்கிய, சற்று முன் கீரை வாங்கிய பெண்மணி உணவு பொட்டலமும், வேட்டி, சேலையும் ஐநூறு ரூபாய் பணமும் வைத்து அவனிடம் நீட்டி”என்ற பேரு மாரியம்மா. எனக்கு பெத்தவங்க யாருமில்லை. வெள்ளிக்கிழமை நாள்ல பெரியவங்களுக்கு சாப்பாடும், வேட்டி சேலையும்,பணமும் கொடுப்பேன். இன்னைக்கு உங்களுக்கு கொடுக்கனம்னு தோணுச்சு” எனக்கூறி கொடுத்ததை தான் கும்பிட்ட மாரியம்மாவே வந்து கொடுத்ததாக நினைத்து பெற்றுக்கொண்ட ரங்கன், பசிக்கு உணவை சாப்பிட்டு விட்டு ஐநூறு ரூபாயை சுதந்திர தின விழாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகங்களை வாங்கிக்கொடுக்க பள்ளி ஆசிரியர் கையில் கொண்டு போய் மகிழ்ச்சியுடன் கொடுத்தார்.
தான் ஏழை வீட்டில் பிறந்ததால் படிக்க முடியாமல் போனது போல் மற்றவர்கள் போய் விடக்கூடாது என்பதால் வருடம் ஒரு முறை அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகங்கள் வாங்கிக்கொடுப்பார்.
இந்த வருடம் தோட்டத்தில் விளைச்சலில்லை. மாடும் கறக்கவில்லை. கையில் பணமுமில்லை. சிறு வயதில் கீரை விற்ற பழக்கம் ஞாபகம் வர இன்று கீரை விற்பது ஒன்றே வழி என நினைத்து கீரையை விற்கப்போனாலும் அக்கீரையை மாடு தின்ன, ரங்கன் கவலையில் மூழ்க, காரில் வந்த பெண் கொடுத்த பணத்தில் தான் வருடா வருடம் கொடுக்கும் உதவி நிறைவேறப்போவதில் மகிழ்சிப்பட்டவர், அப்பெண் கொடுத்த சேலையை மனைவிக்கு கொடுத்து விட்டு, வேட்டி சட்டையை தான் அணிந்து கொண்டு சுதந்திர தின நாளில் பள்ளிக்கு சென்ற போது ஏற்கனவே பார்த்த காரும், தனக்கு உதவிய பெண்ணும் அங்கே இருந்ததைக்கண்டு ஆச்சரியப்பட்டவர் தனது இருக்கையில் போய் மாணவர்களுடன் அமர்ந்து கொண்டார்.
கொடி ஏற்றிய பின் அனைவருக்கும் இனிப்போடு உணவு வழங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் தான் கொடுக்கும் நோட்டுப்புத்தகங்கள் மட்டும் இருக்கும் மேஜையில் இன்று குழந்தைகளுக்கான ஆடைகளும் வைத்திருந்ததைப்பார்த்த போது தனக்கு துணியும், பணமும் கொடுத்த பெண் தான் கொண்டு வந்திருக்க வேண்டுமென யூகித்துக்கொண்டார்.
நோட்டுப்புத்தகங்களோடு ஆடைகளையும் ரங்கனை அழைத்து முன்னிறுத்தி அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டபோது ரங்கன் மகிழ்ச்சிப்பட்டதோடு ஆச்சர்யத்தின் உச்சத்துக்கே சென்றவர், அப்பெண்ணைப்பார்த்து கையெடுத்து கும்பிட்டார். ‘தனக்குப்பின் நோட்டுப்புத்தகம் கொடுப்பதற்கு ஆளில்லை. வசதியிருந்தும் இவ்வூரில் கொடுக்க மனமில்லாதவர்களே உள்ளனர்’ என வருந்தி, கவலையுடன் நினைத்திருந்த நிலையில் இப்பெண்ணின் செயலால் மகிழ்ந்து தோட்டத்து வீட்டிற்கு நடந்தே சென்று வெளியில் கிடந்த கயிற்றுக்கட்டிலில் அமர்ந்து “ஆராயி ஒரு குவள மோர் குடு தாகமா இருக்குது” எனக்கூறிய போது உள்ளிருந்து மோர் கொண்டு வந்து கொடுத்த கைகள் இளம் பெண்ணின் கைகளாக இருந்ததை கவனித்தவர் அன்னாந்து பார்த்த போது அந்தப்பெண் “குடிங்க தாத்தா” என்றதும் சற்று தடுமாறியவர் “ஆரு தாயி நீயி” எனக்கேட்ட போது, “நான் இந்த ஊர்ல வாழ்ந்த முருகனோட பொண்ணு மாரியம்மா. என்னோட அப்பா எனக்கு மூணு வயசா இருக்கும் போதே இறந்துட்டாரு. என்னோட அம்மா நடக்க முடியாம ஊனமா வாழ்ந்தவங்க. எங்களோட நிலையைப்பார்த்து நீங்க கொடுத்த ராகிய கழியாக்கி, உங்க தோட்டத்து கீரைய சட்னியாக்கி உண்டு பசியாறி, நீங்க கொடுத்த நோட்டுப்புத்தகத்துல எழுதி படிச்சு இன்னைக்கு கலெக்டரா ஆகியிருக்கேன். என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க” என அப்பெண் கூறி தன் காலில் விழுந்த போது ஆசீர்வதித்தவர், ‘கடவுளே ஒன்னம் பல வருசம் என்ற உசுரக்காப்பாத்து. இந்த மாதர பல கலெக்ட்டர கண்ணுல பாக்க, ஏழைக்கொழைந்தைகளுக்கு படிக்க நான் ஒதவோணும்’ என வேண்டிக்கொண்டார் என்பது வயதை எட்டிப்பிடித்திருந்த ரங்கன்.