டாக்டர் மாப்பிள்ளை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 20, 2024
பார்வையிட்டோர்: 1,516 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

மைலாடி சந்தை புதன்கிழமை அதிகாலையில் வேகமாக வியாபாரத்தில் களை கட்டியிருந்தது. சுற்றியுள்ள ஊர்களிலிருந்து வந்த காய், கனிகள், தானியங்கள், ஆடுமாடுகள் பெட்டி, பாய்கள் எல்லாம் விற்பனையாகிக் கொண்டிருந்தன.

கல்லூரி படிப்பை முடிந்திருந்தாலும் கணேசன் வேலை எதுவும் கிடைக்காததால் வண்டி மாடு வாங்கித் தன் ஊரில் விளையும் பொருட்களை சந்தைக்கு கொண்டு வந்து அதற்கான வாடகை படினம் வசூலித்து சம்பாதித்துக் கொண்டிருந்தான்.அன்றும் பொருட்களையெல்லாம் உரியவர்களிடம் ஒப்படைத்து விட்டு, விற்றுப்பணம் கொண்டு வரச் சொன்னவர்களின் காய் கனிகளை விற்று பணம் வாங்கிக் கொண்டு காளை மாடுகளை அவிழ்த்து வண்டியில் பூட்டச் சென்றவன் எதிர்பாராத மழையினால் மாடுகளை ஓட்டிச் சென்று ஒரு ஓலைக் கொட்டகையின் அடியில் நிற்கவிட்டு மழைக்கு ஒதுங்கிய போதுதான் பிரபுவும் மழைக்கும் ஒதுங்குவதற்காக அந்த ஓலைக் குடிசையின் கீழ் ஒதுங்கினான்.

கணேசனைப் பார்த்த பிரபு “என்ன மச்சான் மழைக்கு ஒதுங்கி நிற்கிறீர்களா? வியாபாரமெல்லாம் முடிஞ்சு போச்சாச்சா?” என்று கேட்டான்.

“வா சுப்பு எப்படி இருக்கே, பொட்டல் குளத்திலே மழை ஏதும் உண்டா இப்படி ஒதுங்கி நில்லு. தூவானம் அடிக்குது பாரு. எல்லா இடமும் சுற்றிச் சுற்றி மழை பெய்யுது மச்சான்.தமிழ் நாடே தண்ணீயிலே மூழ்குது. எங்க ஊரிலே மழை தூறலாய் போட்டுண்டு ஏமாற்றிட்டுப் போயுருது. ஊரிலே தோப்புக்கு பாய்க்கத் தண்ணீ போதாம கிணற்றை வேறே தோண்டுறாக”

அது சரி நல்லவங்க இருக்கிற இடத்திலே தானே மழை பெய்யும்

சும்மா இருங்க மச்சான். எப்பவுமே உங்களுக்கு இடக்கு பேச்சு தான். ஆமா சங்கனாபுரத்திலே ஆச்சி மாமா எல்லாம் சௌக்கியந்தானே.

நல்லா இருக்காங்க அப்பு. ஆமா நீ காலேஜுக்குப் போறவனாச்சே இங்கே எப்படி ?

அது வேற ஒண்ணுமில்லே. என் தங்கச்சிடாக்டர் படிப்பு முடிச்சிருக்கில்லே. ஒரு நல்ல டாக்டர் சம்பந்தம் வந்திருக்கு. அப்பனும் ஆத்தாவும் உடனே கல்யாணத் தைப் பண்ணிடனும்ணு கட்டுத் தடியாக நிற்கிறாக. அதான் கல்யாணத்திற்காக ஒரு வாழை குலைகளையும் வெள்ளரிக்கா மூட்டையையும் விற்று விட்டு வரச் சொன்னாங்க.

ம். என் ராசாத்திக்கு என்னை விட்டு விட்டு வேறு பையனுக்குக் கல்யாணம் பண்ணப் போறீங்க அப்படித்தானே அப்பு.

மச்சான் நீங்க வெவரம் தெரிஞ்ச ஆளு, அவளோ டாக்டர். நீங்க இங்கன வெவசாயம் செய்யுறவரு, ஏணி வச்சாலும் எட்டுமா. அதை விடுங்க நீங்க எப்போ கல்யாணச் சாப்பாடு போடப் போறீங்க.

அத்தை மகளை மறக்கச் சொல்லி நாசூக்கா சொல்லிட்டீங்க. இனி ஏதாவது நாட்டுக் கட்டையா தேடிப்பிடிச்சு கல்யாணத்திற்கு சொல்லி அனுப்புகிறேன் சுப்பு.

சரிமச்சான். மழை நின்றுடுச்சு, பஸ் வர்ற நேரம். இந்த பஸ்ஸை விட்டா இன்னும் ரெண்டு மணி நேரத்துக்கு பொட்டாகுளம் உள்ளே போறதுக்கு பஸ் கிடையாது வரட்டுமா?

என்ன சுப்பு பொண்ணைத் தான் கட்டித் தரமாட்டேன்னுட்டீங்க. காபி பலகாரமாவது சாப்பிடாலமுங்க. நான் காசு தாறேன்.

இன்னொரு நாள் பார்க்கலாம் மச்சான் வாறேன் என்று மெலிதாக பெய்த மழைத் தூறலுக்கு மறைவாக கையைத் தூக்கி வைத்துக் கொண்டு ஓடினான் பிரபு.

ராச்சாத்திக்காக எத்தனை நாள் பொட்டல் குளத்திற்கு சைக்கிளில் ஏறி சுற்றி வந்திருப்பேன். எனக்கு அவளும் அவளுக்கு நானும் என்று தானே சொல்லிச் சொல்லி வளர்த்தார்கள். இப்போது மட்டும் அவள் டாக்டருக்குப் படித்தவுடனே என்னைக் கழற்றி விட்டு டாக்டர் மாப்பிள்ளை தேடுகிறார்கள்.

டாக்டருக்கு அவளைப் படிக்க வேண்டாம் என்று சொன்ன போது கூட நான் டாக்டருக்குப் படித்தால் உங்களுக்குத்தானே. டாக்டர் மனைவி என்று பெருமை என்று சொன்னவள் இப்போது எப்படி இன்னொருவனுக்குக் கழுத்தை நீட்ட தயாராகிவிட்டாள். கணேசன் பெருமுச்சு விட்டபடி டவலை எடுத்து தலையில் முண்டாசுக் கட்டிக் கொண்டு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு மாடுகளை அவிழ்த்து வண்டியில் பூட்டிக் கொண்டு கிளம்பினான்.

திருமணத்திற்காக ஏற்பாடுகள் எல்லாம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. தனக்குப் பெண்தரவில்லை என்ற வருத்தம் ஒரு புறம் இருந்தாலும் ராசாத்தியின் திருமணத்திற்கு வந்த கணேசன் அங்குள்ள பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தான்.

மாப்பிள்ளை வரும் நேரமாகிக் கொண்டிருந்தது. ஊர்ப் பெண்கள் எல்லோரும் ராசாத்தியின் அறையில் அமர்ந்து அவளைக் கேலி பண்ணியவாறு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர்.

ராசாத்தியின் அப்பாவும் மகன் பிரபும் காரசாரமாக பேசிக் கொண்டிருக்கும் போது “என்ன அப்பு இந்த நேரத்திலே சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள்?” என்றவாறு உள்ளே வந்தான் கணேசன்.

“வா கணேசா, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரமாச்சு. நேற்றே ஒரு லட்சம் பணம் கொண்டு வருவதாகச் சொல்லி விட்டுப் போன மாசான முத்து இன்னும் வரவில்லை. நேற்று நான்கு முறை போய்ப் பார்த்து விட்டு வந்தாயிட்டு.

அவர்கள் வந்தவுடனே ரொக்கப் பணம் கொடுத்தாகணும். இந்த நிலையிலே இவன் ஒரு கிலோ தங்கத்துக்கும் ஒரு லட்சம், லட்சம் ரூபாய்க்கும் ஏன் ஒத்துக் கொண்டீர்கள் என்று சண்டைக்கு நிற்கிறான்.”

ஒரே பொண்ணு,சீர் செனத்தியை நல்லாச் செஞ்சு கல்யாணத்தைப் பண்ணிப்புடலாமுன்னு நெனச்சா இந்த மாசானமுத்து எங்கே போய்த் தொலைஞ்சான்னுதான் தெரியலை என்று கையைப் பிசைந்து கொண்டிருந்தார் பிரபுவின் அப்பா.

நீங்க ஒண்ணுங்கவலைப்படாதீங்க மாமா. மாப்பிள்ளை படிச்சவர் தானே.இப்படி விஷயம், பணம் வருவதற்கு பிந்தி விட்டது. நாளையே கொடுத்து விடலாம் என்று சொல்லி விடலாம். இதுக்குப் போட்டுச் சண்டை போட்டுகிட்டு… வாங்க இன்னும்

எனக்கு அவளும் அவளுக்கு நானும் என்று தானே சொல்லிச்சொல்லி வளர்த்தார்கள். இப்போது மட்டும் அவள் டாக்டருக்குப் படித்தவுடனே என்னைக் கழற்றி விட்டு டாக்டர் மாப்பிள்ளை தேடுகிறார்கள்

கல்யாண வேலை எத்தனை பாக்கியிருக்குது, மாப்பிள்ளை வருகிற நேரம்…. என்ன அப்பு… நீங்க வேறே இந்த நேரத்திலேயா மாமா கூட சண்டை போடணும் என்று அவர்களுக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்தான்.

மாப்பிள்ளை வீட்டார் வந்து விட பெண்ணை அழைத்து வந்து மணவறையில் உட்காரச் சொல்லிச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன.

டாக்டர் பழனியின் அப்பா ராசாத்தியின் தந்தை குமரேசனை அழைத்துக் கொண்டு போய் தனிமையாக கேட்டார் “என்ன சம்பந்தி தர வேண்டிய ரூபாய் ஒரு லட்சம் தயாராக இருக்கிறதல்லவா” என்று

“எல்லாம் ரெடி பண்ணி விட்டேன், வந்து சேரலை. பக்கத்து டவுனிலே இருந்து பணம் கொண்டு வரப் போனவன் வந்து சேரலை. நான் வந்து சேர்ந்ததும் உங்கள் கையிலே கொடுத்து விடுகிறேன்”

“என்ன விளையாடுகிறீர்களா? முதலிலே பணம் கொடுத்தால் தான் கல்யாணம் நடக்கும்”

நான் சொல்றதைக் கேளுங்க சம்பந்தி. நாளை விடியறதுக்குள்ளே பணத்தை உங்க கையிலே கொண்டு வந்து. கொடுத்துடறேன்.

அப்படீன்னா கல்யாணத்தை நாளைக்கு காலையில் வைத்துக் கொள்வோம்.

அப்படியெல்லாம் கிண்டல் பண்ணாதீங்க, என் பொண்ணோட வாழ்க்கைப் பிரச்சினை மட்டுமில்லே… என்னோட மானப் பிரச்சினையும் கூட…

இதெல்லாம் தெரிஞ்சிருந்தா நேற்றே நீங்கள் நேரடியாக போய் பணத்தை வாங்கிக் கொண்டு வந்திருக்கலாமே?

“கல்யாண வேலைகள் அதிகமாயிருந்தது”

ஸாரி நான் எதையும் கேட்க விரும்பவில்லை என்று பந்தலுக்கு வந்தவர் மாப்பிள்ளையிடம் “எழும்புடா, கல்யாணமும் வேண்டாம் ஒரு இழவும் வேண்டாம். ஒரு லட்சம் ரூபாய் தற்றேன்னுச் சொல்லிட்டு இப்போ ஒத்தப் பைசா கூட தராமல் ஏமாற்றப் பார்க்கிறார்கள். வாடா போகலாம்” என்று கத்தினார் மாப்பிள்ளையின் தந்தை.

கொஞ்சம் பொறுங்கள் ஒரு லட்சம் மதிப்புள்ள தங்கம் தருகிறேன், நாளைக்கு பணத்தை தந்து விட்டுத்திருப்பி விடுகிறேன். என்று முன்னுக்கு வந்தான் கணேசன். இல்லேப்பா பணம் இப்போ தந்தால் கல்யாணம் இல்லேண்ணா வேரே மாப்பிள்ளை பார்த்துக்கோங்க என்றா மாப்பிள்ளையின் தந்தை.

வேகமாக எழுந்து வந்த ராசாத்தி “நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். நாளைக் காலையில் பணம் தருகிறேன் என்றாலும் கேட்கவில்லை அந்த அளவிற் தங்கம் தருகிறேன் என்றாலு கேட்கவில்லை, இந்த மாப்பிள்ளையால வாயைத் திறந்து ஒரு வார்த்தை பேசுவார் என்றால் அதுவுமில்லை. இந்த மாப்பிள்ளை எனக்குத் தேவையில்லை. கணேசன் எனக்குத் தாலி கட்டுங்க, நீங்க தான் எனக்குப் பொருத்தமான மாப்பிள்ளை” என்று மணப்பெண் கணேசனின் கையை பிடித்துக் கொண்டு போய் மணவறையில் அமர எல்லோரும் திகைத்துப் போய் நின்றனர்.

– தமிழ் போஸ்ட், 4 செப்டம்பர் 2004

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *