மாற்றம் – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 24, 2023
பார்வையிட்டோர்: 2,273 
 
 

டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து மேஜை மேல் வைத்தான் திவாகரன்.

பிரஷர் மாத்திரை எடுக்க அலமாரி திறந்தான்.

“டமால்…!”

பள்ளிக்குச் செல்லும் அவசரத்தில், மேஜை விளிம்பில் பலமாக இடித்துக் கொண்டாள் வனிதா டீச்சர்.

பொறி கலங்கிவிட்டது.

‘டமா’ரெனச் சாய்ந்தது தண்ணீர் டம்ளர்..

“அறிவிருக்காடீ உனக்கு…! ?”

காய்ந்தான் திவாகரன்.

‘பலமா இடிச்சிக்கிட்டு வலியோடத் துடிக்கிறேன், இவரானா, இப்படிக் கடுப்படிக்கறாரே…!?’

நொந்துகொண்டாள், கண் கலங்கிவிட்டது.

அவசரமாக ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்தாள் வனிதா.

ஆன் டைம் அரைவல்.

அவசர அவசரமாக வகுப்புக்கு விரைந்தாள்.

ப்ரேயர் மணி அடித்தது.

மாணவர்கள் அமைதியாக எழுந்து நின்றார்கள்.

தாமதமாகிவிட்டப் பதட்டத்தில் ஓடிவந்தான் ஒரு மாணவன்.

“டமால்…”

மேஜை விளிம்பில் பலமாய் இடித்துக் கொண்டான்.

‘டமா’ரென டீச்சரின் தண்ணீர் பாட்டில் கீழே விழுந்து உருண்டது.

வழக்கம் போல டீச்சரின் சுடுசொல்லை, எதிர்ப்பார்த்து, குற்ற உணர்வோடு, நடுங்கியபடி நின்றான் அந்த மாணவன்.

“ரொம்ப வலிக்குதா? மொழங்காலை தேச்சி விட்டுக்கோ!” என்றாள் வனிதா டீச்சர்.

– கதிர்ஸ் மார்ச் 2023

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *