நாயும் பேயும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 24, 2023
பார்வையிட்டோர்: 1,299 
 
 

காலையில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பக்கத்து வீட்டு நாய் டாமி தன் கூடவே வாலாட்டியபடி வந்ததைக்கண்டு ஆச்சர்யப்பட்டார் நளன்.

ஐந்து வருடங்களாக அந்த நகரத்தின் முக்கியப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து, தனியார் நிறுவனத்தில் மேலாளராக இருந்தாலும் பக்கத்து வீட்டினர் யாரும் தன்னுடன் அவ்வளவாக நட்புடன் இருப்பதில்லை எனும் வருத்தம் இருக்கத்தான் செய்தது.

நாயின் முதலாளியான சுமன் ஒரு மாதமாக வீட்டில் இல்லாமல் வெளியூர் போனதால், அவரது நாய் டாமி உணவை விரும்பாமல் சோகமுடன் வீட்டிலும், வீதியிலும் படுத்தே கிடந்த போது நாயின் பாசத்தையும், விசுவாசத்தையும் எண்ணி பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் வியந்து அதிசயத்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக தன்னுடன் இணக்கமாக டாமி பழகியதும், பிஸ்கட் போட்ட போது அதைத்தின்று விட்டு நேசமாக சக மனிதனைப்போல தன்னைப்பார்த்து அதன் கண்களில் கண்ணீர் வெளிப்பட்டதும் கண்டு தானும் அழுது விட்டார் நளன்.

மனைவி வாசுகி வந்து “அந்த நாய் கூட உங்களுக்கென்ன அப்படி பாசம் வேண்டிக்கெடக்குது…? இந்த வீட்டுக்கு நாம குடி வந்து அஞ்சு வருசத்துல சுமனோட பொண்டாட்டி சுந்தரி கூட அஞ்சு வார்த்ததான் பேசியிருப்பேன். நாம வாடகை வீட்ல வாழறோம்னு சொந்தமா பங்களா வீடு வெச்சிருக்கிற அவ என்னை மதிக்கிறதே இல்லை. அவ புருசனும் வெளியூர் போயிட்ட இந்த சமயத்துல நாயும் செத்துக்கித்துப்போச்சுன்னா நம்ம தான் விசம் வெச்சுட்டோம்னு அவ நம்பிக்குவா. வேண்டாங்க அதத்தொரத்தியுட்டுட்டு கேட்ட சாத்துங்க” என்ற போது நளனால் மனைவியின் பேச்சைத்தட்ட முடியவில்லை.

அடுத்த நாள் நடைபயிற்ச்சிக்கு சென்ற போது தன்னைத்தேடி வந்த டாமி தன்னைப்பார்த்து உளைப்பதும், சற்று தூரம் ஓடுவதும் பின் திரும்பி வருவதுமென இயல்புக்கு மாறாக அதனது செயல் இருந்ததைக்கண்டு நடைபயிற்சி செய்வதை விட்டு, ஓரிடத்தில் நின்ற போது தனது உடையைக்கவ்வி இழுப்பதும், உடனே முள் செடிகளுக்குள் ஓடி விட்டு வருவதும் என தன்னிடம் ஏதோ சொல்ல வருகிறது என புரிந்தவாறு நாயின் பின்னே செல்ல, வெகு தூரம் ஓடி முற்புதர்கள் நிறைந்த ஒரு ஏரிப்பக்கம் நின்றது.

அங்கே முற்களைப்பிடுங்கி புதிதாக தோண்டப்பட்டு மூடப்பட்டிருந்த குழியருகே சென்று முன் கால்களால் மண்ணைப்பரைத்தபடி தன்னைப்பார்த்துக்குரைத்த போது தான் நளனுக்கு அதன் செயலின் அர்த்தம் புரிய ஆரம்பித்தது.

உடனே யோசனையில் ஆழ்ந்து ஒரு முடிவுக்கு வந்தவராக வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால் நாய் டாமி தன்னுடன் வராமல் அங்கேயே படுத்துக்கொண்டது.

” நாயோட செயல்பாடுகளை வைத்து நாம உறுதியான முடிவுக்கு வர முடியாது. வீட்டு நாய்களுக்கு இப்படியொரு புத்திசாலித்தனம் இருந்ததை நான் பார்த்ததில்லை. இருந்தாலும் நீங்க சொல்லறதை பார்க்கும் போது ஒரு வேளை உண்மையாகவும், சந்தேகப்படும் படியாகவும் இருக்க வாய்ப்புகள் அதிகம். நீங்க சந்தேகப்படற ஆளுக்காக ஏற்கனவே கொடுத்திருக்கிற கேஸ் சம்மந்தமா ஆக்ஸிடென்ட்ல இறந்து போன அனாதைப்பிணத்தை திருச்சில பார்க்க வரச்சொல்லியிருக்காங்க. சம்மந்தப்பட்டவரோட மனைவியும் வராங்க. உங்க போன் நெம்பர கான்ஸ்டபிள் கிட்ட கொடுத்திட்டு போங்க. நாளைக்கு கோயமுத்தூர் வந்ததும் கூப்பிடறேன்” எனக்கூறி கை குலுக்கி அனுப்பி வைத்த இன்ஸ்பெக்டர் சிகனின் பேச்சில் நம்பிக்கை கொண்டவராய் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்து தனது காரை ஸ்டார்ட் செய்த போது பக்கத்து வீட்டு சுந்தரியும் இன்னொரு பெண்ணும் காரில் அமர்ந்தவாறு தன்னை முறைத்தவாறு பார்த்ததைக்கண்டு கொள்ளாமல் கிளம்பிச்சென்றார் நளன்.

அடுத்த நாள் காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வர உடனே புறப்பட்டுச்சென்று இன்ஸ்பெக்டர் சிகனைப்பார்த்தபோது “வாங்க மிஸ்டர் நளன். உங்களாலேயும், உங்க பிரண்ட் டாமியாலேயும் எங்களுக்கு பெரிய ரிஸ்க்கான வேலை ஈசியா முடிஞ்சிருச்சு. டைம் இருந்தா வாங்க நீங்க சொன்ன ஸ்பாட்டுக்குப்போகலாம்” என கூறியவர், இரண்டு காவலர்களுடன் ஜீப்பில் ஏற, நளன் தனது ஸ்கூட்டியில் அவர்களுக்கு வழிகாட்டியாக முன்னால் சென்றார்.

சற்று நேரத்தில் பெரிய கூட்டமே கூடி விட்டது. டாமி கூட அங்கே வந்து நளனை நட்பாகப்பார்த்து சுற்றிச்சுற்றி வந்தது. மண் தோண்டும் இயந்திரம் வரவழைக்கப்பட்டு தோண்டியபோது துர் நாற்றத்தைக்கண்டு பலரும் மூக்கில் துணியை வைக்க, சிலர் இடத்தைக்காலி செய்தனர்.

‘தன்னால்…. இல்லையில்லை…. டாமி நாயால் ஒரு கொலை சம்பவம் வெளியில் வரப்போகிறது. சுமன் மனைவி சுந்தரியின் கைகளில் விலங்கு மாட்டப்போகிறார்கள். கணவனைக்கொன்று விட்டு வெளியூர் சென்றிருப்பதாக நாடகமாடுகிறாள் என்பது காவல் நிலையத்தில் நேன்று முறைத்துப்பார்த்த போது உறுதியாகி விட்டது’ என சிந்தனையில் ஆழ்ந்த போது, காவல் துறை வாகனம் ஒன்று வேகமாக வந்து நின்றது. 

கைகளில் விலங்கு மாட்டப்பட்டிருந்த சுமனை இரண்டு காவலர்கள் அழைத்து வந்ததைப்பார்த்த போது தான் நினைத்தது வேறு, நடந்தது வேறாக ஆகி விட்டதை நினைத்து அதிர்ச்சியுடன் இன்ஸ்பெக்டர் சிகனைப்பார்த்தபோது “பொறுமையா இருங்க. கொஞ்ச நேரத்துல எல்லாம் தெரிஞ்சிடும்” என்றவர், தோண்டி வெளியே எடுக்கப்பட்ட மனித சடலத்தின் அருகே சுமனைக்கூட்டிச்சென்று சில கேள்விகளைக்கேட்ட போது ‘தன்னால் கொல்லப்பட்டு இங்கே புதைக்கப்பட்ட நண்பர் விபின் தான் இந்த சடலம்’ என்பதை ஒத்துக்கொண்டான்.

சுமனின் கல்லூரித்தோழன் விபின். இருவரும் நகரத்தில் கூட்டாக தொழில் செய்து வந்த நிலையில் தொழில் வரவு செலவுகளை சுமனை முழுமையாக நம்பி விட, பெரும்தொகையை ஏமாற்றி, தொழிலில் நஷ்டம் காட்டி வீடு கட்டியது தெரிந்து தட்டிக்கேட்க, தன் வீட்டிற்கு வந்தால் பிரச்சினை முடியும் என கூறி அழைத்து வந்து இரவு நேரத்தில் நண்பனை தன் மனைவியுடன் சேர்ந்து அடித்துக்கொன்று இங்கே புதைதத்ததாகவும், தானும் விபினும் தொழில் விசயமாக வெளியூர் சென்றது போலவும், ஹோட்டல் ரூமிலிருந்து வெளியே போன விபின் திரும்ப வரவில்லையென்றும், நான் மட்டும் வீடு வந்தால் விபின் வீட்டினருக்கு சந்தேகம் வருமென்றும், நானும் காணாமல் போனதாக என் மனைவி மற்றும் விபின் மனைவியை வைத்து காவல் நிலையத்தில் கம்ளய்ண்ட் கொடுக்க வைத்து நாடகமாடினேன். அடையாளம் தெரியாத அனாதை பிணத்தை விபினோட பாடின்னு சொல்லி பிரச்சினைய முடிச்சிட்டு நான் ஊருக்கு வந்திடலாம்னு போட்ட திட்டம் நான் வளர்த்தின நாயாலயே வெளிச்சத்துக்கு வரும்னு கனவுலயும் நினைக்கவில்லை” என்று தன் நாய் டாமியை கொலை வெறியுடன் பார்த்தவாறு வாக்குமூலமாகக்கூறிக்கொண்டிருந்த போது யாரும் எதிர் பாராத விதமாக திடீரென சுமன் மீது ஆக்ரோசமாகப்பாய்ந்தது டாமி.

காவலர்கள் கட்டுப்பாட்டிலிருந்து நிலை தடுமாறி கீழே சுமன் சரிந்து விழ, வெறித்தனமாக தனது கூர்மையான பற்களால் அவனது கழுத்தைக்கடித்துக்குதறியதை அங்கிருந்தவர்கள் தடுக்க இயலாமல் போக, காவலரின் துப்பாக்கிக்குண்டு டாமி மீது பாய்ந்ததும் கீழே துடித்து விழுந்தது . அப்போது டாமியால் கடிபட்ட சுமனின் மூச்சும் அடங்கியது. அதை அவனது அருகில் குற்றுயிராகக்கிடந்த டாமி பார்த்த போது, கடித்த போதிருந்த கோப முகம், ஆக்ரோசம் முற்றிலும் மாறி அவனை தனது எஜமானாகப்பார்த்து நேசத்துடன் தனது காலை எடுத்து அவனது கையின் மீது வைத்து சாந்தமாகி உயிர் விட்டது. 

“வளர்த்துன நாயே தன் எஜமானனை கடித்துக்கொன்றது இது வரைக்கும் எங்கேயுமே பார்க்காத சம்பவம்தான். ஆக்ரோசமா கடிக்கும் போது இருந்த நாய் வேறு, கடித்த பின்னாடி சாந்தமா எஜமானனோட கைல தன்னோட முன் வலது காலை நேசமாக வைத்தது வேற. ஒரு வேளை செத்துப்போன விபினோட ஆவி நாயோட உடல்ல புகுந்து காட்டிக்கொடுத்ததோட, கடிச்சுக்குதறி தன்னைக்கொன்றவனைக்கொன்று வஞ்சம் தீர்த்திருக்கலாம். இறந்த பின்னாடி ஆத்மாவ ஆவின்னும் சொல்லுவாங்க, பேயின்னும் சொல்லுவாங்க. நாளைக்கு ‘நாயுக்குள்ளே புகுந்து பழி வாங்கிய பேய்’ னு தலைப்புல கூட பத்திரிக்கைல இந்த செய்தி வரலாம்” என இன்ஸ்பெக்டர் சிகன் சொன்ன போது அங்கிருந்த மற்றவர்களை விட நளனால் உறுதியாக நம்ப முடிந்தது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *