கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 334 
 
 

பரிசில் கொடுக்காது தம்மைப் போக்குக் காட்டி அனுப்பிவிட்ட செல்வர்களை எல்லாம் வரிசையாக எண்ணிப் பார்த்தார் கவிராயர். ‘ஆமாம்! அவர்கள் எல்லாரையும் வாயலுக்கப் பாடி வைத்தோமே? அதற்குச் சரியான பாடம் கற்பித்து விட்டார்கள். கல்லுக்கும் இறுக்கமான இவர்கள் நெஞ்சு கொல்லுக்கா உருகிவிடப் போகிறது? ஒருபோதும் இல்லை. காசு பணம் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை! கவிதையை உணரக்கூட இவர்களுடைய உள்ளம் இயலாததாக இருக்கின்றதே? குட்டிச் சுவருக்குக்கூட உணர்ச்சியும் சுவையும் தட்டுப்பட்டுவிடலாம்! இந்தக் கஞ்சப் பிரபுக்களுக்கு எங்கே? பொன்னும் முத்தும் பட்டுப் பீதாம்பரமுமாகத் தங்கள் பருத்த உடலை மறைக்க அழகு செய்து கொண்டு வெளிக்குப் பெரிய மனிதர்களாக நடிக்கிறார்கள். ஒரு வேளை நடப்பது இப்படியும் இருக்குமோ?’ கவிராயரின் குயுக்தி வேலை செய்கிறது. பண்பாடுகளிடம் மழைக்குக்கூட ஒதுங்கி இருக்காத இவர்களை, இவர்களிடம் இல்லாத பண்பாடுகளையெல்லாம் இருப்பதாகப் பாடிவைத்ததால்தான் நமக்கும் இல்லை என்று சொல்லி விட்டார்களோ? ஆமாம்? அதுதான் காரணமாயிருக்க வேண்டும்! பொய் சொன்ன வாய்க்குத் தகுந்த தண்டனை வேண்டுமல்லவா? கவிராயர் தமக்குள் சிரித்துக் கொள்கிறார், அது கேலிச் சிரிப்பு!

“அசல் மடையனைப் பெரிய அறிவாளிபோல இருக்கும்படி கருத்தமையப் பாடினேன். வெறும் காட்டுப் பயலை நாகரிகம் தெரிந்த நாட்டுக்குத் தலைமை சான்றவன் என்றேன். கொலை, கொள்ளை, வஞ்சகம் இவைகளை எல்லாவற்றையும் ஒன்று விடாமல் செய்துவிட்டுக் கெளரவப் போர்வைக்குள் மறைந்து கொள்ளும் அந்தப் பிரபுவை மிக நல்லவன் என்ற பொருள் தோன்றப் பாட்டில் கூறினேன். போர் முகத்தைச் சித்திரத்திலே கூட பார்த்திருக்காத ஒரு வேளை பார்த்திருந்தாலும் மூர்ச்சித்து விழுகின்ற) ஒரு கோழையைப் போரிலே புலி எனப் புனைந்துரைத்தேன். கையும் காலும் உடம்புமாக மொத்தத்தில் ஒரு தோலால் மூடப்பட்ட எலும்புக் கூடு போன்ற நோஞ்சல் மனிதனை “மல் விளையாடிய பெரிய புயத்தையுடையவனே!” என்று முழுப் பொய்யாகப் புகழ்ந்தேன். கனவில் கூட எச்சிற் கையை உதறியறியாத கஞ்சனை, வள்ளல் என்றேன். இவ்வளவும் கவிதைக்காக நான் மிகுதியாகப் புனைந்துரைத்த பொய்யுரைகள். இப்படி இல்லாதவற்றை எல்லாம் சொன்னதற்காகத்தான் அவர்களெல்லாரும் கூடிப் பேசிக்கொண்டவர்களைப் போல் எனக்கும் இல்லையென்று கையை விரித்துவிட்டார்கள். கவிராயர் இப்போது வாய்விட்டுச் சிரித்தார்.

“கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறியும் மறவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்
போர் முகத்தை அறியானைப் புலியேறு என்றேன்
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை வழங்காத கையனை தான் வள்ளலென்றேன்
இல்லாது சென்னேனுக்கு இல்லையென்றார்
யானுமென்றன் குற்றத்தால் ஏகின்றேனே!”

சிரிப்பொலி நின்றதும் இந்தப் பாட்டொலி வந்தது. கவிராயர் புனைந்துரைத்ததும், கஞ்சர்களான பிரபுக்கள் கையை விரித்ததும் ஒன்றுமில்லாத வெற்று நிகழ்ச்சிகள் தாம். ஆனால் இவர் சமத்காரமாக இல்லாது சொன்னேனுக்கு இல்லை என்றான்’ எனத் துன்ப மிகுதியால் நெஞ்சு துடித்துப் புண்ணாக வேண்டிய நிலையில் புன்முறுவல் பூப்பதுதான் இலட்சிய வாதிகள் சொந்த மனச் சமாதானத்தை அடையும் முறைக்கு ஒரு சிறு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. சாதாரணமானவர்களால் பாதிக்கப்படும்போது குறிக்கோள் கொண்ட இலட்சிய முடையவர்கள் பெரிய சாதனைகளால் அந்த வேதனைகளை வெல்வதில்லை. வெறும் சிரிப்பைக் கொண்டேகூட வென்று விடுகிறார்கள்.

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *