ஹோட்டலின் முன்வரிசை சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்தான் ரவிசங்கர்.
‘கன்னங் கரேல்’ என்று சுருள் சுருளான தலைமுடி.
‘வெள்ளை வெளேர்’ சந்தன முல்லை.
‘செக்கச் செவேல்’ பன்னீர் ரோஜா.
எல்லாம், பின்னிப் பிணைந்து,
‘கம்… கம்…’ சுகந்தமான ஒரு கலவை மணத்தை பரவவிட்டபடி,
‘தக… தக… தக…’வென ரவிசங்கரின் சாப்பாட்டு மேசையை,
‘சரக்… சரக்…’ கென நூல் புடவை சரசரக்க ’பளிச் பளிச்…பளிச்…’ தாரகைப் போல்,
அவனுடைய சாப்பாட்டு மேசையை கடந்து சென்றாள் ஒரு நங்கை .
ஊரிலில்லாத இல்லாள் நினைவு வந்துவிட்டது ரவிசங்கருக்கு.
‘அவள் இருந்திருந்தால்.., ஏன் இந்த ஓட்டலுக்கு வரப்போகிறோம்..?’ நினைத்துக்கொண்டான்.
‘பச்சைப் பசேல்’ என்ற வாழை இலையில் பரிமாறினார் சர்வர்.
“லபக்… லபக்…’கென சூடான ஐட்டங்களைச் சாப்பிட்டான்.
வீடு திரும்பினான். படுத்தான். புரண்டான். ம்ஹூம்.. தூக்கம் வரவேயில்லை.
விரக தாபம் , அவனைத் தூங்க விடவில்லை.
‘சரி ! பௌர்ணமி நிலவில் காலாற நடப்போம்!’ என்று நடந்தான்.
ஊரின் விரிவாக்கத்தில் ஓலைக் கூரை வீட்டின் முகப்பில், கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்திருந்தான் ‘மூட்டை தூக்கும் கூலி’ முனியப்பன்.
‘நம்மைப்போல் இவன் மனைவியும் ஊரில் இல்லை போல!’ என்று நினைத்தான் ரவிசங்கர்.
“ஏன் முனியப்பா இன்னும் தூங்காம இருக்கே?”
“தூக்கம் வல்லீங்க சார்..”
“வீட்ல’ ஊருக்குப் போயிருச்சோ…?”
கேள்வியின் உட்பொருள் புரிந்தது முனியப்பனுக்கு.
‘சட்’டென்று வயிற்றை தொட்டுக் காட்டி, ஏதோ சொல்ல வந்தான்.. முனியப்பன்.
‘என்ன சொல்லப் போகிறான்?’ ஆர்வத்துடன் கவனித்தான் ரவிசங்கர்.
“ரெண்டு நாளா வேலையில்லே .. கூலி இல்லே… சோத்துக்கு வழில்லே… ! பசி! பசி!”
– கதிர்ஸ் (1-15 ஜூலை 2022)