நண்பர்களுக்கிடையில் ஒரு பின் நம்பர்

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: கிரைம்
கதைப்பதிவு: April 1, 2024
பார்வையிட்டோர்: 3,399 
 
 

மலைப் பாதையின் வளைந்த சாலையில் நேர்த்தியாக காரை ஒட்டிக் கொண்டிருந்தான் முரளி. பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருந்த அவன் மனைவி லதா மலைக்குப் பின் ஒளிந்து கண்ணா மூச்சி விளையாடிக் கொண்டிருந்த இளம் சூரியனை ரசித்துக் கொண்டிருந்தாள்.

அங்கிருந்த அமைதியைக் குலைப்பது போல முரளியின் ஐபோன் அலறியது. விடுமுறைக்காக ஆஸ்திரேலியா சென்றிருந்த முரளியின் ஆத்ம நண்பன் சேகர் வாட்ஸாப்பில் கூப்பிட்டுக் கொண்டிருந்தான்.

இடது கை ஸ்டீரிங்கில் இருக்க, முரளியின் வலது கை லாவகமாக வாட்ஸாப்பிற்கு பதிலளித்தது. கூடவே ஸ்பீக்கர்ஃபோன் பட்டனை தட்டிய முரளி, “என்னடா சேகர், ஆஸ்திரேலியா சுற்றுப் பயணமெல்லாம் எப்படி இருக்கிறது?” என்று கேட்டான்.

“பிரமாதமாக இருக்கிறது. ஒரு வாரம் போனதே தெரியவில்லை.” சேகரின் குரல் சளியால் அவதிப்படுகிறவன் போல கரகரத்தது.

“என்னடா, குரல் ஒரு மாதிரியாக இருக்கிறது? உடம்பு கிடம்பு சரியில்லையா?”

“ஒன்றுமில்லை, முரளி. கண்ட இடங்களில் தண்ணீர் குடித்து தொண்டை கொஞ்சம் கட்டிக் கொண்டது.”

இரண்டு நொடி இடைவெளிக்குப் பின், “டேய், முரளி, இப்போது நான் ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டேன்டா.” என்றான்.

“அடடா, என்ன நடந்தது?” என்று முரளி கேட்க, லதா தலையை திருப்பி உரையாடலில் கவனம் செலுத்த ஆரம்பித்தாள்.

“என்னுடைய பர்ஸை தொலைத்துவிட்டேன். இந்த புது நாட்டில் பணமில்லாமல் தவிக்கிறேன், எனக்கு கொஞ்சம் உதவி தேவை.” சேகரின் குரலில் பதற்றமும் ஆயாசமும் கலந்திருந்தது.

முரளியும் லதாவும் ஒரு விரைவான பார்வை பரிமாற்றம் செய்து கொண்டனர். பிறகு முரளி தொண்டையைச் செருமிக் கொண்டு, “சாரிடா, சேகர். நான் கண்டிப்பாக உதவி செய்கிறேன். ஆனால் அதற்கு முன்பு ஒரு கேள்வி.”

“என்ன கேள்வி?” சேகரின் குரல் எச்சரிக்கையுடன் ஒலித்தது.

“இந்த மாதிரியான இக்கட்டான சமயங்களில் நாம் பரிமாறிக் கொள்ள ஒரு பின் (PIN) நம்பர் வைத்துக் கொண்டோமே – ப்ரண்ட்ஷிப் பின் நம்பர் – அது என்ன?”

சிறிது நேரம் அபத்தமான ஒரு அமைதி அங்கு நிலவியது. பின்னர் திடீரென அழைப்பு துண்டிக்கப்பட்டது. முரளி லதாவின் பக்கம் திரும்பி புன்னகைத்தான்.

“ஆஹா! சேகரைப் போல் நடித்துப் பணம் பறிக்க முயன்ற மோசடிக்காரனை எவ்வளவு சாமர்த்தியமாக கையாண்டீர்கள்,” லதாவின் கண்களில் ஆச்சரியம் விரிந்தது. “உங்களுக்கும் சேகருக்கும் இடையில் இருக்கும் ப்ரண்ட்ஷிப் பின் நம்பர் – என்ன நம்பர் அது? எனக்கும் தான் சொல்லுங்களேன்?” குழந்தைத்தனமான ஆர்வத்துடன் கேட்டாள் லதா.

“பின் நம்பராவது, மண்ணாங்கட்டியாவது. அப்படியெல்லாம் ஒன்றுமில்லை எங்களுக்குள்.” என்றான் முரளி, குறும்புத்தனமான புன்னகையுடன்.

லதாவின் முகத்தில் குழப்பம். “அப்படியென்றால், போனில் நீங்கள் சொன்னது…”

“எல்லாம் பொய். மோசடிக்காரனக்கு அது தெரியாதல்லவா!” என்று சிரித்தான் முரளி. “போன் செய்தது உண்மையில் சேகராக இருந்தால், ப்ரண்ட்ஷிப் பின் நம்பர் என்று எதுவும் நாம் வைத்துக் கொள்ளவில்லை என்றல்லவா சொல்லியிருப்பான்!”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *