போக்குவரத்து மிகுந்த சாலை.
பேருந்துகள் இருபுறமும் நின்று விட்டன.
ஸ்கூட்டர்கள், சைக்கிள்கள் மட்டும் அவளிடம் இருந்து விலகிச் சென்றன.
அவள் ஒரு பைத்தியக்காரி.
சிக்கலும் முடிச்சுமாய் நரைத்தும் நரைக்காத நாற்றம் அடிக்கும் தலைமுடி. கிழியாத பகுதிகளும் ஆங்காங்கே இருக்கும் சேலை. தோளில் தொங்கும் அழுக்கு மூட்டையில் ஒரு நிறம் மாறிய வாட்டர் பாட்டில் துருத்திக் கொண்டிருந்தது.
புடவை என்ற பெயரில் சுற்றியிருந்த துணியில் ஓட்டை விழுந்து பிருஷ்டம் தார் ரோட்டில் தேய, இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி நீட்டியும் மடக்கியும் கைகளை ஊன்றிச் சாலையை கடந்து கொண்டிருந்தாள்.
சைக்கிள் மட்கார்டில் மாட்டிய கொடியோ வாழைப்பட்டையோ தொடர்ந்து பின்னாலே தேய்த்துக் கொண்டே வருவதைப் போல் அவளின் அழுக்குத் துணியும் அவளைத் தொடர்ந்தது.
அவள் சாலையின் மறுபுறம் வந்துவிட்டாலும் சாலையில் பரவிக் கிடக்கும் துணித்தொடரை அனுதாபத்துடன் பார்த்தார் தலைமுடியும் முகமுடியும் தும்பையாய் நரைத்து , புரை மறைக்கும் கண்பார்வையுடன் கூன் விழுந்த அவள் வயதொத்த முதியவர்.
தன் கைத்தடியால் மெதுவாக அதை நகர்த்தி, அவளருகே தள்ளியபின், தன் அழுக்கு மூட்டையில் இருந்து “வருக்கி” எடுத்து அவள் கையில் தருகிறார்.
அவர் தருவதும் இவள் பெறுவதும் நெஞ்சை உலுக்குகிறது.
போக்குவரத்து சீராகித் தொடர்கிறது.
பிச்சைக்காரக் கிழவர் ஃஅழுக்கு கையால் கொடுத்த காய்ந்த வருக்கியை பல்லில்லாத வாய்க்குள் செருகிக் கொண்டாள் கிழவி.
வருக்கி ஊறத் தேவையான உமிழ்நீர் போக, உபரி எச்சில் முழங்கையில் வழிந்து அவள்மேல் சொட்டியது.
கண்ணீரை வரவழைக்கும் இந்த சர்வதேச விருது பெற்ற காட்சியை பிச்சைக்கார தாத்தா ரோல் செய்த பாலிவுட் நடிகர் உமேஷ் மற்றும் பைத்தியக்காரியாக நடித்த ஹாலிவுட் நடிகை க்ளாரா இருவரும் முள் கரண்டியால் ஃபீஸா சுவைத்துக்கொண்டே சின்னத்திரையில் மீண்டும் மீண்டும் போட்டு ரசித்தார்கள்.
(கதிர்ஸ், மே 16-31)