கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 4, 2024
பார்வையிட்டோர்: 242 
 

 (1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

‘மோட்சம் அடைவதற்கு மானிடர் முன் மூன்று மார்க்கங்கள் உள. அவரவர் யோகத்தைப் பொறுத்தது அவரவர் மார்க்கம்….!

அன்றைக்கு வெள்ளிக்கிழமைச் சமய வகுப்பு. நாவலர் பிரசங்கம் செய்தார். 

‘நாம் இந்த உடலைப் பெற்றதின் பயன் இறைவனைச் சேவிப்பதுவே. இறை பக்தி மோட்சம் அடைவதற்கான நிச்சய பயணச்சீட்டு. பிறவிப் பெருங்கடல் நீங்கி, இறைவனுடன் இரண்டரக் கலத்தலே மோட்சநிலை. மோட்சம் அடைவதற்கு மூன்று மார்க்கங்கள் உள எனக் கூறுகின்றது பகவத்கீதை. அவரவர் யோகத்தைப் பொறுத்தது அவரவர் மார்க்கம், கர்மயோகம், ஞானயோகம், பக்தி யோகம் என….‘ 

‘யானே கர்மயோகத்தின் திருட்டாந்தம். என் கடமை யைச் செய்கின்றேன். பயனை ஈசுரார்ப்பணமாக்கிவிட்டேன். எனவே, மோட்சமடைவதற்குச் சிறந்த வழி கர்மயோகமே…. எனக் கூறியது அக்கினியில் எரிந்துகொண்டிருந்த நிலக்கரி.

‘கர்மம் இயற்றாமலே, ஞானவழி நின்று ஈசனைச் சார்ந்து மோட்சமடைவதிலுள்ள இன்பம் பிறிதுண்டோ? ஞானமும் ஞானவிருத்தியுமே என் யோகமாக அமைந்தது….’ என்றது அறிஞனின் கையிலிருந்த காரீய எழுதுகோல். 

நிலக்கரியும், காரீய எழுதுகோலும் பேசியவற்றைக் கேட்டு, ஈசனின் செவியில் ஜொலித்த வைரம் சிரித்தது. 

‘நான் வைரம். என் மதிப்புத் தெரியுமா? என் மேனி யிலிருந்து வீசும் ஒளியைப் பார்க்க உங்கள் கண்கள் கூசவில்லையா? நான் சக்தியின் வடிவம். அதனாலேதான், இந்த ஒளியும் ஈசன் செவிகளிலே வீற்றிருக்கும் பேறும்!’ 

விஞ்ஞான ஆசிரியர், விடுதியின் இரவு வகுப்பிலே போதித்துக் கொண்டிருந்தார். 

‘முன்னர் தொண்ணுற்றறு தனிமங்கள் இருப்பதாகவே வ விஞ்ஞானிகள் நம்பிக்கொண்டிருந்தார்கள். விஞ்ஞான அறிவு இப்பொழுது எவ்வளவோ வளர்ச்சியடைந்து விட்டது. இற்றைவரை நூற்றியேழு தனிமங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்குக் காரீயம் என்ற தனிமத்தைப் பற்றிப் படிப்போம். நிலக்கரி இன்னமும் முக்கிய எரிபொருள்களுள் ஒன்றாக உபயோகப்பட்டு வருகின்றது….காரீயம் எழுது கோல்களின் உள்ளீட்டுக் கூர்கள் செய்யவும் உபயோகப்படுகின்றது… வைரம் அதிகப்பிரகாசமானது; அதிகவிலையுள்ளது. இவை மூன்றும் மூன்று வெவ்வேறான பொருள்களாகத் தோன்றினாலும் உண்மை அதுவல்ல. மூன்றும் கரியம் என்ற ஒரே தனிமப் பொருள்களே….’ 

– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *