கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 273 
 
 

கையிலும் காலிலுமாக மெய்யிலே சுட்ட தீப்புண்கள் விரைவில் ஆறிவிடும். அழியும் இயல்பினதாகிய உடலோடு தொடர்புடைய எல்லாப் புண்களுமே ஆறிப்போகின்றவைதாம். உடலுக்கு ஏற்படும் துன்பங்கள் மனத்தை வருத்துவது போலத் தோன்றினும், அந்தத் துன்பங்கள் மறைகின்ற கால எல்லையோடு அவற்றால் விளைந்த வருத்தமும் மறைந்துபோகும். உடலோடு உள்ளம் கொண்டிருக்கும் தொடர்பு பெரிது. இதனால்தான் மனத்தோடு தாக்குதல் நடத்தும், ‘சொற்களால் புண்படுத்தும் நிலைகள்’ என்றுமே யாருக்கும் ஆறுவதில்லை.

‘ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும்’ என்று பழமொழிவழியாகச் சொல்லின் சாதாரணத்திற்கு அப்பாற்பட்ட சக்தி பேசப்படுகிறது. அதுவும் படித்தவர்களிடம் சொல்லின் பயனை நுகரும்போதும் சரி, கொடுக்கும் போதும் சரி, அதற்குரிய சக்தியின் மாற்றுக் குறையாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கத்தின் மாற்று நிலைகளைப் பொற்பரிசோதகர்கள் கண்டறிய வது போலவே சொல்லின் நன்மை தீமைகளைக் கண்டறிந்து சொல்ல வேண்டும்.

மதுரகவிராயர் ஆனந்தரங்கப் பிள்ளையிடம் ஏற்கெனவே நல்ல பழக்கம் உடையவர்தாம். அடிக்கடி ரங்கப் பிள்ளையிடம் உதவி பெற்றவருங்கூட அப்படியிருந்துங்கூட அன்று என்னவோ வருத்தமுறும்படியான அந்தச் சம்பவம் நடந்து விட்டது. படித்தவராக, நான்கும் தெரிந்த அறிவுடன் விளங்கும் பழக்கமான புலவர் ஒருவரை நோக்கி அப்படி மரியாதை குறைவான வார்த்தைகளை அவருந்தான் சொல்லியிருக்கக் கூடாது. ஏதோ போதாத காலம், ஆத்திரத்தில் வாய்தவறி வார்த்தைகள் வந்துவிட்டன. ‘விஷக்கடி வேளை’ என்றுதான் சொல்ல வேண்டும்.

அரசாங்க விஷயமாய் அப்போது சில நாட்களாக ஏதோ ஒரு பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்தார் ஆனந்தரங்கர். சென்னையைச் சேர்ந்த பிரம்பூர் அவருடைய பூர்வீகமாக இருந்தாலும், அவருடைய தகப்பனார் காலத்தில் இருந்தே புதுச்சேரியில்தான் வாசம். தகப்பனார் காலத்திற்குப் பின்பு தம் சொந்த முயற்சியால் படிப்படியாக முன்னேறி துவிபாஷி பதவியை அடைந்து அதைப் பொறுப்புடனே நிர்வகித்து வந்தார் அவர்.

அந்தப் பெரும் பதவியில் அமர்ந்து அவர் புதுவை அரசாங்கத்தின் முக்கிய உத்தியோகஸ்தராகப் பணியாற்றி வந்தபோதுதான் மதுரகவிராயர் அவரை அடிக்கடி சந்தித்துத் தமக்கு அவ்வப்போது தேவையான உதவிகளைப் பெற்றுச் செல்வார். அவ்வாறு அவர் சந்திக்கும் போதெல்லாம் நகை முகத்தோடு அவரை வரவேற்று அன்புடன் வேண்டிய உதவியைச் செய்வதற்கு ஆனந்தரங்கம் தவறியதில்லை.

ஆனால் அந்த முறை புலவர் வந்திருந்த போது மேலே கூறியவாறு அரசாங்க சம்பந்தமான சில சிக்கல்களில் அகப்பட்டுக்கொண்டு தவித்த நிலையிலிருந்தார் பிள்ளை. எனவே கவிராயர் வந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகியும் அவரைக் கவனிக்காமல் இருந்துவிட்டார். மதுரகவிராயர் அவசரமான உதவியை நாடி வந்திருந்தாலும் ரங்கப் பிள்ளையின் இந்தத் துன்பம் நிலையை உணர்ந்து பொறுத்துக் கொண்டார்.

நான்கு, ஐந்து, ஆறு, ஏழு என்று வரிசையாக எழு நாட்கள் கழிந்துவிட்டன. மதுரகவிராயர் மேலும் பொறுத்திருந்தார். புலவர் வந்த இரண்டொரு நாட்களிலேயே அவர் வந்திருப்பதைக் கவனித்துக் கொண்டாலும் ஆனந்தரங்கர் தம் போக்கிலேயே இருந்துவிட்டார். அவருடைய அப்போதைய மனநிலை எதிலும் பற்றாத வெறுப்பு எண்ணங்களில் சிக்கிக் கிடந்ததனால் புலவரைக் கண்டபின்புங்கூட இவர் வந்து காத்துக்கிடக்கிறாரே! என்னவென்று விசாரித்து அனுப்புவோம்’ என்ற நினைவே அவருக்கு எழவில்லை . எதைக் கண்டாலும் எரிந்து விழுதல், எதிலும் பற்றில்லாத சினவுணர்ச்சி, இப்படி இருந்த அவருடைய அப்போதைய மனோபாவத்திற்குக் காரணம் அந்தப் பழைய அரசாங்கத்தைப் பற்றிய சிக்கல்களே. அதைத் தீர்க்கும் முயற்சியில் பூரணமாக ஈடுபட்டிருந்தும் விரைவிலே வெற்றிபெற முடியாமல் இருந்ததனால்தான் அவர் இத்தகைய உள்ளப் பான்மையை அடைந்திருந்தார்.

இன்னும் ஒரு மாதம் அப்படிப் பொறுத்திருக்க வேண்டும் என்றாலும், மதுரகவிராயரால் பொறுக்க முடியும். ஆனால் அதற்கு முன்பெல்லாம் நகைமுகத்தோடு வரவேற்றுப் போற்றியவர் அப்போது வா’ என்றுகூடச் சொல்லவில்லை. இந்த ஏழு நாட்களிலும் தாமாக அவர் கவனத்தில் தென்படும் சந்தர்ப்பங்களை மிகுதியாக ஏற்படுத்திக் கொண்டும், அவர் கவனித்திருந்தாலும் கவனியாதது போல் நடந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்துதான் மதுரகவிராயரை அங்கே இனியும் தங்கலாமா வேண்டாமா என்று எண்ணும்படி செய்தன. இறுதியில் அவர் ஒரு முடிவிற்கு வந்தார். மறுநாள் காலை எப்படியும் வள்ளலை நேருக்கு நேர் சந்தித்துத் தாம் வந்த காரியத்தைக் கூறி உதவி கேட்பது. அவர் கொடுத்தால் பெற்றுக் கொள்வது, இல்லையென்றால் ஊர் திரும்பிவிடுவது ‘ என்பதே அவர் முடிவு. மறுநாளோடு அவர் வந்து எட்டு நாட்கள் ஆகிவிடுவதனால் அதை நினைத்து, ‘இனியும் தங்குவதில் பயனில்லை’ என்ற கடைசித் தீர்மானத்துடனேயே அவர் இந்த முடிவிற்கு வந்திருந்தார்.

மறுநாள் பொழுது விடிந்தது. ஆனந்தரங்கப் பிள்ளை காலைக் கடன்களை எல்லாம் முடித்துக்கொண்டு சாவகாசமாக அமர்ந்து கொண்டிருந்தபோது மதுரகவிராயர் அவர் முன் தோன்றினார்.

“வந்து.. நான் ஒரு அவசரக் காரியமாக உங்களிடம் உதவிபெற்றுப் போக வந்தேன். வந்து ஏழு எட்டு நாட்கள் ஆகிவிட்டன. இப்போது இங்கே சந்தர்ப்பம் சரியாக இல்லை என்று தெரிகிறது. நான் விடைபெற்றுக் கொள்கிறேன்.”

புலவர் நிறுத்தி நிறுத்தி வார்த்தைகளைத் தயக்கத்தோடு வெளியிட்டார். வள்ளல் தலை நிமிர்ந்து சினத்துடனே அவரைப் பார்த்தார். கண்களிலும் முகத்திலும் சினச்சாயை தென்பட்டது.

“ஏன் ஐயா பறந்து தொலைக்கிறீர்?” ஆத்திரத்தில் ஆனந்தரங்கர் இப்படிக் கூறிவிட்டார். ஆனால் அந்தச் சொற்கள் புலவர் செவியில் சொற்களாக விழவில்லை. நெருப்புக் கங்குகளாக விழுந்து உள்ளத்தைச் சுட்டன. சொல்லின் அந்தச் சூடு பொறுக்காமல் அவரது தளிர் உள்ளம் கருகியது. வள்ளலுக்கு அதை உணர்த்த விரும்பினார் கவி சொல்லின் சூடு தெளிவாகத் தெரியும்படி அவரது குறையைத் தம் பாட்டால் சுட்டிக் காட்டினார் கவிராயர். அந்தப் பாட்டுரங்கப் பிள்ளையை நாணச் செயதுவட்டி செய்துவிட்டது.

“கொக்குப் பறக்கும் புறா பறக்கும்
குருவி பறக்கும் குயில் பறக்கும்
நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்
நான் ஏன் பறப்பேன் நராதிபனே
திக்கு விஜயம் செலுத்தி உயர்செங்
கோல் நடத்தும் அரங்காநின்
பக்கம் இருக்க ஒருநாளும் பற
வேன் பறவேன் பறவேனே!”

இடி முழக்கம் போன்ற குரலில் இந்தப் பாடலின் முதல் இரண்டு அடிகளைப் பாடிவிட்டுச் சிறிது நேரம் நிறுத்திப் பின் இரண்டு அடிகளைச் சுபாவமான குரலில் பாடினார். சோற்றுக்கு வழியின்றி அலைபவர்களை ‘நக்குப் பொறுக்கிகள்’ என்று கூறி இகழ்வது நாட்டு வழக்கிலுள்ள மொழி. அதை இரண்டாம் அடியின் முதலில் எதுகையாக வைத்து ‘நக்குப் பொறுக்கிகளும் பறப்பர்’ என்று வல்லின ஓசையை அழுத்திப் பாடும்போது வள்ளல் கூறிய சொற்களால் புலவர் மனம் எவ்வளவு புண்பட்டி ருக்கவேண்டும் என்று தெரிகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இறுதியில் நின் பக்கம் இருக்க ஒருநாளும் பறவேன்’ என்று கூறி வள்ளலைத் தழுவிக் கொண்டதைக் கேட்ட பின்பும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு பரிசிலளித்து அனுப்பாமல் வேறு என்ன செய்வார் பிள்ளை?

– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

Print Friendly, PDF & Email
'நா. பா' என்று வாசகர்களால் அன்புடன் அழைக்கப் பெறும் நா. பார்த்தசாரதி அவர்கள் 18.12.1932ல் இராமநாதபுரத்தைச் சேர்ந்த நதிக்குடியில் பிறந்தவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் 'பண்டிதர்' பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலையில் வித்வான் பட்டமும், முதுகலைப் பட்டமும் பெற்றவர். பழந்தமிழர் கட்டிடக் கலையும் நகரமைப்பும் என்கிற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வேடும் சமர்ப்பித்தவர். இளம் வயதிலேயே எழுதத் தொடங்கிய இவர் சுமார் 50 நாவல்களையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் பல…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *