கம்பஞ் சோற்று விருந்து

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சரித்திரக் கதை
கதைப்பதிவு: April 22, 2024
பார்வையிட்டோர்: 165 
 
 

  “சோழநாடு பாழ் போகிறதா என்ன? நினைத்த இடங்களில் எல்லாம் பூம்பொய்கையும் ஆற்றுக் கால்களுமாக இருக்க, நீர்வேட்கையைத் தணித்துக் கொள்ள இயற்கை வசதி சிறிதும் இல்லையே! மற்றவர்களின் உதவியை நாடித்தான் ஆகவேண்டும் போலிருக்கின்றன!” கம்பருக்குத் தண்ணீர் தாகம் ஒரேயடியாக நாவறண்டு போகச் செய்கிறது. ‘சோழ நாட்டிலே எல்லா வளமும் இருந்தது. கூற்றிலும் பாவலர் கொடியவர் என்றான் சிந்தனை யுணர்ச்சி அற்ற அந்தச் சோழ மன்னன். உடலை வருத்தித் துன்புறுத்தினாலும் பொறுத்துக்கொண்டு இருந்துவிடலாம். உண்மைக்கு நேர்மாறான கருத்தைக்கொண்டு உள்ளத்தை வருத்துவதைப் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது, “நீ முனிந்தால் எங்கட்கு இல்லையோ இடம்?” என்று கூறி அவன் கருத்தை எதிர்த்துவிட்டுப் புறப்பட்டேன். இங்கோ கொங்கு நாட்டில் வந்து பார்த்தால் இப்படி இருக்கிறது! எங்கே பார்த்தாலும் கல்லும் பாறையுமாகத் தெரிகின்ற கல்லாங்காடுகள். காண்ப் பசுமை மிகுந்து தோன்றும் சோழ நாடெங்கே? கொங்கு நாடெங்கே?’ சிந்தித்துக்கொண்டே வந்த கம்பர் தாம் ஒரு சிற்றூரை நெருங்குவதை உணர்ந்தார். தண்ணீர் வேட்கை அவரை நடையில் வேகங் கொள்ளச் செய்தது.

  ஊருக்குள் இரண்டோர் வீடுகளில் மனையேறித் தண்ணீர் கேட்கும் நிலைக்காகக் கூட அவர் நாணவில்லை. ஆனால் அப்படிக் கேட்டும் பாராமுகமாக நடந்து கொண்ட அம் மனைக் குரியவர்களின் பாண்பாட்டுக்காக நாணினார். இதை விடத் தண்ணீர் குடியாமலே மேற்சென்று விடுவது நல்லது என்று வழிநடையைத் தொடர்ந்த அவரை ஓர் இனிய குரல் திரும்ப வைத்தது. “ஐயா, எங்கள் வீட்டிற்கு வரலாமே” கம்பர் திரும்பிப் பார்த்தார். இருபது இருபத்திரண்டு வயது மதிக்கலாம். ஒரு வேளாளப் பெண் தயங்கித் தயங்கி நின்றுகொண்டே அவரை அழைத்தாள். அவள் இடுப்பில் தண்ணீர்க்குடம் இருந்தது. “ஏன் அம்மணி! இங்கேயே சிறிது தண்ணீர் வார்த்தால் உண்டு செல்வேன்” என்றார் கம்பர். ” இல்லை , நீங்கள் மிகவும் களைப் படைந்தவராகத் தென்படுகிறீர்கள். எங்கள் மனைக்கு வந்து சிறிது உணவருந்தி விட்டுப் போகவேண்டும்.” அவள் குரலில் கெஞ்சுகின்ற பாவம் இருந்தது. மறுத்துரைக்க முடியாமல் கம்பர் பின்தொடர்ந்தார். வீட்டு வாயிலில் அவள் கணவன் என்று மதிப்பிடத் தக்க ஆடவன் ஒருவன் அமர்ந்து கொண்டிருந்தான். குறிப்புணரும் திறம் மிக்கவனாக இருக்க வேண்டும் அவன். தண்ணீர்க் குடத்தோடு மனைவி உள்ளே சென்றதும் ஒரு நொடியில் உள்ளே சென்று யாவற்றையும் அறிந்து கொண்டு வாசலுக்கு வந்து கம்பரை வரவேற்று அமரச் செய்தான். கம்பர் தண்ணீர் வேண்டும் என்றார். அவன், “உணவருந்த வேண்டும்” என்றான். “ஆகட்டும், நான் மறுக்கவில்லை. முதலில் தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்” என்று அவர் கூறவும், அவன் நன்றாக விளக்கிய ஒரு செம்பு நிறையக் குளிர்ந்த நீர் கொண்டு வந்து கொடுத்தான். தாகந் தீரப் பருகினார் கம்பர். பசுமைமிக்க சோழ நாட்டில் அந்நாடு முழுமையும் ஆளும் சோழ வேந்தனுக்கு இல்லாத மனப் பசுமை, கல்லும் மண்ணுமாகக் காட்சியளிக்கும் இந்தப் பசுமையற்ற கொங்கு நாட்டில் ஓர் ஏழை வேளாளன் மனைவிக்கும் வேளாளனுக்கும் இருந்ததை அவர் உணர்ந்தார். அவன் பெயர் செல்லன் எனவும் தம்மை அழைத்து வந்தவள் அவன் மனைவி எனவும் தெரிந்து கொண்டார்.

  சிறிது நேரத்தில் உள்ளேயிருந்த கதவிடுக்கில் அந்த வேளாளப் பெண்ணின் தலை தெரிந்தது. அவனுக்கு ஏதோ சைகை செய்தாள். அவள் கம்பரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான். உள்ளே இரண்டு இலைகளில் ‘கமகம்’ வென்ற மணத்துடன் ஆவி பறக்கும் கம்பஞ் சோறு படைக்கப் பட்டிருந்தது. கம்பருக்கு நல்ல பசி வயிறார அந்தக் கம்பஞ்சோற்று விருந்தை நுகர்ந்தார். செல்லன் மனைவியின் அன்புக் கரங்கள் விருப்போடு படைக்கும்போது மனத்தயக்கம் ஏற்படக் காரணமே இல்லையே! கைகழுவி முடிந்ததும் கம்பர் அந்தக் கம்பஞ் சோற்று விருந்தையும் செல்லன் மனைவியையும் பாராட்டிப் பாடினார். அதில் நன்றி உணர்வு தொனித்தது.

  “கல்லங்காடு தனில் விளையாக்
  கடுக நிலத்திற் றான்முளையா
  அல்லனிருந்த கருங்கூந்தல்
  அணங்குக்கு அணங்குபோல்வாள்
  செல்லன் தேவி மனைகள்தொறும்
  தேடித் திரிந்துங் காணாத
  நெல்லஞ்சோறே கம்பஞ்சோற்றினை
  நீ சுமந்து திரிவாயே”

  உள்ளமில்லாத எத்தனையோ பேர்களுக்கு நடுவே அன்பே உள்ளமாக இருந்த செல்லனையும், அவன் மனைவியையும் அவர்களிட்ட கம்பஞ்சோற்று விருந்தையும் பாடியதில் அவருக்கு ஒரு திருப்தி.

  – தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.

  Print Friendly, PDF & Email

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *