(1975ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
‘ஓம் என்றால் ஆம் என்றும் அர்த்தம்; பரம்பொருள் என்றும் அர்த்தம். பரம்பொருளான அவன் நித்தியன் ‘
அந்த மந்திரத்தைப் பக்தி நனிசொட்டும் பாவனையில் உச்சரித்தார் தபஸ்வி. அர்த்தமற்ற உச்சாடனத்தில் நேரத்தை அவர் பாழாக்குவதாக நாஸ்திகனுக்குத் தோன்றியது.
“உச்சரிக்கும் ‘ஓம் தத் ஸத்’ அர்த்தமற்ற சொற் கோவை…. ‘
‘நான், நீ என்று பிரித்துப் பேசாதே. உன்னையும் என்னையும் இணைக்கும் பொழுது நாமாகி விடுகின்றோம். நாமையும் அவனான பரம்பொருளையும் இணைத்து விட்டால், சுயநலம் – பிறர் நலம் – பரமார்த்தம் எல்லாமே ஒன்றாகிப் பேரின்பம் சித்திக்கின்றது. இக்கருத்தையே ஓம்தத்ஸத் பரப்புகின்றது.
‘ஓம் என்றால்….’
‘ஆம் என்றும் அர்த்தம்; பரம்பொருள் என்றும் அர்த்தம். பரம்பொருளான அவன் நித்தியன். நேற்று-இன்று-நாளை என்ற கால வரம்புகளைக் கடந்தவன். அவன் பகவான்; நாம் சாதகர். நம்முடைய இந்த சிருஷ்டி பூஜைப் பொருள். அவனுடைய வழிபாட்டிற்கே உதவுவது. இந்தப் பாவனை நமது நெஞ்சில் நிறையும்பொழுது நாம் ஓம் என்பதைப் புரிந்து ஆமோதிக்கின்றோம்.’
‘ஸத் என்ற சொல்தான் ஆண்டவனைக் குறிக்குமெனக் கேள்விப்பட்டேன்….’
‘ஆண்டவனின் நாமங்கள் அளப்பரியன. எனவே, ஸத் என்பதும் அவனைக் குறித்தது. பகவான் மங்களகர மானவனாகையால் ஸத் ஆனான். சிருஷ்டி என்ற ஆறு வேகத்தினால் சுத்தமாகிக் கொண்டிருக்கின்றது. சிருஷ்டி முழுமையும் சுபமானதாகவும், மங்களகரமானதாகவும் இருப்பது போலவே நமது செயல்களும் அமைதல் வேண்டும். சுத்தமாகவும் பக்தி மயமாகவும் நாம் செயலாற்றும் பொழுது ஸத் நமதாகி விடுகிறது….’
‘நடுவிலுள்ள தத் என்பது எதைக் குறிக்கிறது?’
‘தத் என்றால் அது. அதுவும் பகவானையே குறிக்கும். சிருஷ்டியிலிருந்து பகவான் வேறுபட்டவன் என்பது தாற் பரியம். சூரியன் உதித்ததும் இருள் அகலுகின்றது. பறவைகள் கீதமியற்றிப் பறக்கின்றன. பங்கயம் மொட்ட விழ்த்து விரிகின்றது. உயிர்கள் உயிர்ப்புக் கொள்ளுகின்றன. ஆனால், இந்த விளைவுகளிலிருந்து சூரியன் முற்றிலும் தனித்து நிற்கின்றது. நம் வாழ்க்கையில் அத்தகைய தொடர்பின்மை கைவந்து விடுமானால், ‘தத்’ தத்துவம் நம் வாழ்க்கையில் புகுந்து கொள்ளுகின்றது’.
‘நீ செத்த பிறகு….நீ ‘ஓம் தத் ஸத்’ என்பதின் மூலம் நம்பிக்கை வரித்த பரம்பொருளைக் காணமுடியாது. இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பித்து வாழ்நாளின் பெரும் பகுதியை வீணே செலவு செய்ததைப் பற்றி உனக்கு ஏற்படக்கூடிய துக்கத்தை நினைத்து நான் இப்பொழுதே அநுதாபப்படுகின்றேன்….’- போலி அநுதாபத்தைத் தன் குரலிலே நாஸ்தீகன் குழைத்தான்.
‘இல்லை. நாமில்லாத நமது சாதனை; எப்பொழுதும் மங்கள நினைவு; தற்பற்றை அழித்த சமத்துவநிலை; இவையே, எஞ்சியிருக்குமானால், எனக்கு நிறைவின் நிறைவே சித்திக்கும்’ எனத் தபஸ்வி அமைதியாகப் பதிலிறுத்தார்.
– கீதை நிழலில், முதற் பதிப்பு: அக்டோபர் 1975, கலைஞன் பதிப்பகம், சென்னை.