சகுனம் பார்ப்பது தப்பில்லை. ஆனா, ஒவ்வொண்ணுக்கும் சகுனம் பார்ப்பது என்பது சங்கடத்தையே தரும். விசாலம் பேருக்குத்தான் விசாலம். ஆனா ரொம்ப ‘ஆர்த்தடெக்ஸ்’. எல்லாத்துக்கும் சகுனம் பார்ப்பது அவள் வழக்கம்.
அன்றைக்கு மருமகளுக்கு அவள் மாசமா இருக்காளா இல்லையான்னு செக்கப் பண்ணப் போக, ஆஸ்பத்திரிக்கு அரக்கப்பரக்க வீடே கிளம்பியது. அதிக்காலை என்பதால் குளித்துக் கிளம்ப ஆளாளுக்கு பாத்ரூம் டாய்லெட்டில் இடம்பிடிக்க அடிதடி. கூட்டுக் குடும்பம்னா சும்மாவா?! இந்த சிக்கல்களுக்குப் பயந்துட்டுத்தான் இன்னைக்கு எல்லாரும் ஓண்டி குடித்தனம் பண்றாங்க போல!. ‘ஏழு மணிக்கு கால்டாக்ஸி புக் பண்ணு!’ என்று மகனிடம் விசாலம் சொல்லவும் ‘சரிம்மா!’ என்றான் அவள் பெத்த அந்த அசடு. அப்போது பார்த்து விசாலத்தின் கணவர் விஸ்வம் ‘ஹ்ச்சுன்னு’ ஒத்தைத் தும்மல் போட்டார்.
‘கர்மம்… கர்மம்.. இந்தக் கர்மத்தை வச்சிட்டுக் காலம் தள்ளணும்!’னு என் தலை எழுத்து.. நல்ல விஷயம் பேசும் போதா ஒத்தைத் தும்மல் போடுவாங்க?’ எரிந்து விழுந்தாள்.
பாவம் அவர் என்ன பண்ணுவார். ‘தைமாதப் பனி தரையைத் தொளைக்குமாமே?! அது அவர் தலையைத் தொளைக்க அவர் தும்மித் தொலைத்தார். ’ஏங்க இன்னொரு தும்மல் போடுங்களேன். ரெட்டைதான் சகுனப்படி ஒசத்தி.’ என்றாள். அவர் சொன்னார். ‘நானெனன் வச்சுட்டா வஞ்சகம் பண்றேன். வந்தா போட மாட்டேனா?’ என்றார் வருதத்தோடு. ‘கால் டாக்ஸி வந்திடுச்சா பாருங்க!’ என்றதும் வாசல் போனவர் குளிர் தாக்க, கூட்டுத் தும்மல் போட்டார்.
சகுனம் சளியாய்க் கசிந்தது. நம்ம நாட்ல குணம் பார்க்கிற குணம் இல்லாட்டாலும் சகுனம் பார்க்கிற சங்கடம் இருகே அப்பப்பா!