தான் கூறிய அந்தக் கருத்தினால் கம்பரை மாத்திரம் சோழன் பழித்திருந்தால் அவரும் தம் தீவினையை நொந்து கொண்டு பேசாமல் போயிருப்பார். புலவர் சமூகத்தையே பழிக்கும்படியான சொற்களால் அவன் அந்தக் கருத்தைக் கூறியதுதான் கம்பருடைய உள்ளத்தைச் சுட்டது. பாவலர்கள் கூற்றினும் கொடியவர்கள்’ என்று சோழன் சொல்லி முடித்தபோது அதை அவரால் பொறுத்துக்கொண்டிருக்க முடியவில்லை. அவருடைய தன்மான உணர்ச்சி உள்ளத்தின் அடித்தளத்தில் உரக்கக் கூவிக் குமுறி எழுந்து விட்டது.
நடந்த நிகழ்ச்சி இதுதான். கம்பர் ஒருவருக்கு எழுதிக் கொடுத்த பாட்டு ஒன்றின் பொருளைப்பற்றிச் சோழன் அவைக்களத்தில் பேச்சு எழுந்தது. அப்போது கம்பரும் அதே அவையில் அமர்ந்திருந்தார். தம்முடைய அந்தப் பாடலுக்குச் சோழன் அவையிலிருந்த மற்ற புலவர்கள் கற்பித்துக் கூறிய பொருளைக் கேட்டு, கம்பர் திடுக்கிட்டார். ஏனென்றால் கம்பர் எண்ணி எழுதிய பொருளுக்கு நேர் விபரீதமாக இருந்தது அவர்கள் தாமாகக் கற்பித்துக் கூறிய பொருள். சோழனும் அந்த மற்ற புலவர்கள் கூறிய பொருளே ஏற்றதாக இருக்கிறது’ என்ற கருத்தோடு பேசினான். அதோடு மட்டுமின்றி அவர்கள் பலவந்தப் படுத்திக் கற்பித்த அந்தப் பொருளால் பாட்டை எழுதிய கம்பருக்கே அறியாமைப் பட்டத்தைக் கட்டிவிடப் பார்த்தார்கள். சோழனும் அதை ஆதரித்ததுதான் கம்பரை வருந்தச் செய்தது.
அவர் தமக்கு அதனால் தோன்றிய சினத்தையும் வருத்தத் தையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் நிதானமாக அவையில் எழுந்திருந்து தாம் பாடிய பாட்டின் உண்மையான பொருளை விளக்கிப் பேசி, ‘அவர்கள் கருதியது அசம்பாவிதமானது, பொருந்தாதது’ என்று தக்க சான்றுகளால் எடுத்துக்காட்டினார். ஆனால் அப்படி அவர் விளக்கிப் பேசியபின்னும் சோழனும் அவர்களும் தாங்கள் கூறிய பொருளே அதற்குப் பொருளாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்தி வாதிட்டனர். அவர்கள் பிடிவாதத்தால் கம்பர் மனச் சான்றையே வஞ்சித்து வதை செய்ய ஆரம்பித்தார்கள். ஒரு கவிக்கு அவன் சொந்த உயிரைக் காட்டிலும் உயர்ந்த பொருள் அவனுடைய சிருஷ்டி. தனக்குத் துன்பம் ஏற்படுவதை அவனால் பொறுத்துக்கொள்ள முடியும். ஆனால் தன் சிருஷ்டியின் அழகைக் குலைத்து விபரீதம் செய்பவர்களை அவனால் பொறுத்துக் கொள்ளவோ, மன்னித்து விட்டுவிடவோ முடியாது. கம்பரும் அப்போது இதே நிலையில்தான் இருந்தார். தன்னை அன்போடு வரவேற்று, ‘என்னிடம் சில நாள் விருந்தினராகத் தங்கி மகிழ்விக்க வேண்டும்’ என்று கேட்டு உபசரித்த சோழ வேந்தனே அப்படிப் பொருளைப் பேதம் செய்து காட்டியதுதான் கம்பரைப் பெரிதும் புண்படுத்தியது.
விஷயம் அதோடு முடிந்திருந்தால்கூட கம்பர் சினங் கொண்டு சீறி எழுந்திருக்க விரும்பியிருக்க மாட்டார். அவர்களை மறுத்து, கம்பர் உண்மையை எடுத்துச் சொல்லி முடித்தவுடன் சோழன் வெம்மையான சொற்களால் வெறுப்போடு கூறிய அந்த மறுமொழிதான் அமைதியைக் குலைத்துவிட்டது.
“போற்றினாலும் போற்றுவார்கள்! கேட்ட பொருளைக் கொடுக்காவிட்டால் அதே போற்றுதலை நீக்கி வேறுவிதமாகத் தூற்றுவார்கள். முதலிற் கூறிய சொற்களை மாற்றிப் பொருளைத் திரித்துக் கூறவும் தயங்கமாட்டார்கள். பார்க்கப் போனால் எமனைவிடக் கொடியவர்கள் இந்தக் கவிஞர்கள் தாம் ! இவர்களுடைய சாகஸம் எமனது சாகஸத்தை விட மிகவும் பெரியதாக அல்லவா இருக்கிறது.” என்று ஆத்திரத்தில் தான் என்ன பேசுகிறோம் என்பதே தெரியாமல் கம்பரைப் பார்த்துப் பேசிவிட்டான் சோழமன்னன். அவன் பேசிய அந்தப் பேச்சு அங்கிருந்த பாவலர்களின் சமூகத்தையே தாழ்த்தும் கருத்துடையதுதான். ஆனால் சோழன் அதைக் கம்பருக்காகவே சொல்லுகிறான் என்றெண்ணி அவர்கள் யாவரும் பேசாமல் இருந்து விட்டார்கள். அரசனுடைய ஆதரவினால் கம்பர் பாட்டிற்கு அதை இயற்றிய அவரே எண்ணியும் பார்த்திராத விபரீதப் பொருளைக் கற்பித்து அவர் வாயை அடக்கிவிட்டோம்’ என்ற மமதையில் அழுந்திப் போயிருந்த அவர்கள் சோழனின் அந்தக் கருத்து, தங்கள் வர்க்கத்தையே ஆழத் தாழ்த்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் கம்பர் புரிந்து கொண்டார். அவருடைய உணர்ச்சி பொங்கியது. உள்ளம் சீறியது. அவர் கண்கள் சிவக்க, மீசை துடிக்கச் சினத்தோடு ஆசனத்திலிருந்து எழுந்து அவைக்கு நடுவே நின்றார். சோழனை நோக்கிப் பேசலானர்.
“சோழர் பேரரசே! அளவற்றுப் பரந்து கிடக்கும் இந்த அகண்ட உலகத்திலே அரசன் என்ற பதவிக்குரியவன் நீ ஒருவன் மட்டும் தானா?… அப்படி இல்லையே? பொன்னி நதி பாயும் வளத்திற்குரிய நாடு போல உலகில் வேறெங்கும் இல்லையா, என்ன? எண்ணற்ற பல நாடுகள் இதைப்போல உலகில் உள்ளன. அந்தத் தமிழ்ப் பாடல் உனக்காகவும் உன் விபரீதப் பொருளுக் காவும்தானா பாடினேன்? தமிழையறிந்து பாராட்டுபவர்களின் உலகம் உன் ஒருவனோடு அடங்கிவிடவில்லை ! அது பரந்து விரிந்து பரவிக்கிடக்கிறது! என் பாடலையும் என்னையும் ஆதரித்துப் பாராட்ட உலகெங்கும் வேந்தார்கள் உள்ளனர். நீ ஒருவன் தான் என்பது இல்லை. குரங்கு தாவும்போது ஏற்றுக்கொள்ளாத கிளையும் உண்டோ? சோழநாட்டிற்குரிய இருபத்து நான்கு காதம் பூமிக்கு வேண்டுமானால் நீ அரசனாக இருக்கலாம். அது தவிர உலகின் மற்ற பகுதிகளை எல்லாம் கடல் விழுங்கிவிட இல்லை. கவிஞர்கள் அங்கே போய் வாழ முடியும்! உன் கருத்தைத் திருத்திக்கொள்! வருகிறேன் நான்.”
“மன்னவனும் நீயோ? வளநாடும் நின்னதுவோ?
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன் – என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு?
காதம் இருபத்து நான் கொழியக் காசினியை
ஒதக் கடல் கொண் டொளித்ததோ — மேதினியில்
கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா ! நீ முனிந்தால்
இல்லையோ எங்கட் கிடம்?”
ஓதினேன் = சொன்னேன், விரைந்து = சீக்கிரமாக, வேந்து = அரசன், கொம்பு = கிளை, காதம் = ஓர் அளவு. மேதினி = உலகம், ஓதக்கடல் = அலைபாயும் கடல், கொற்றவா = அரசே, முனிந்தால் = வெறுத்தால்.
இவ்வாறு கூறிவிட்டுச் சோழனின் விடையையோ, மறுமொழியையோகூட எதிர்பார்க்காமல் விடுவிடென்று மேலாடையை உதறிக்கொண்டு அவையிலிருந்து நடந்து வெளியேறினார் கம்பர். ‘உலகம் பரந்தது!’ என்று அவர் கூறிவிட்டுச் சென்ற அந்த வார்த்தை கணீரென்று வெகு நேரம் வரை அங்கே எதிரொலித்துக் கொண்டிருந்தது.
– தமிழ் இலக்கியக் கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1977, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.