பாவத்துக்கு தண்டனை நிச்சயம்!

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 6,087 
 

பத்ராசலம் என்ற ஊரில் வாழ்ந்தவர் கோபண்ணா. ஹைதராபாத் மன்னன் தானீஷா ஆட்சியில் தாசில்தாராகப் பணியாற்றினார் இவர். பத்ராசலத்தில் ராமர் கோயில் சிதிலம் அடைந்திருந்தது கண்டு கோபண்ணா மனம் வருந்தினார். ஆகவே, மக்களிடமிருந்து வசூலித்த வரிப் பணம் ஆறு லட்சம் வராகன்களைக் கொண்டு, ராமர் கோயிலுக்கு மராமத்துப் பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்தினார்.

பாவத்துக்கு தண்டனை நிச்சயம்வரிப் பணத்தில் கோயில் பணிகள் செய்ததைக் கேள்விப்பட்ட மன்னன் தானீஷா, கோபண்ணாவைக் கைது செய்ய உத்தரவிட்டான். வீரர்களும் கைது செய்து அவைக்குக் கொண்டு வந்தனர். கோயிலுக்குச் செலவு செய்த வரிப் பணத்தைத் திரும்பத் தரும் வரை கோபண்ணா சிறையில் இருக்க வேண்டும் என்று மன்னன் தானீஷா கட்டளையிட்டான்.

சிறையில் கோபண்ணா மிகவும் துன்பப்பட்டார். அவருக்கு உப்பும் அரிசியுமே உணவாகக் கொடுக்கப் பட்டன. கசையடி தண்டனையும் வழங்கப்பட்டது. கோபண்ணா படும் துயரம் கண்டு பக்தர்கள் மனம் கலங்கினர். ஆண்டுகள் பல உருண்டோடின. துன்பத்தைத் தொடர்ந்து தாங்க முடியாமல், ஒரு நாள் விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்தார் கோபண்ணா. அதற்கு முன், ராமரை தியானம் செய்தார்.

கோபண்ணாவின் நிலை கண்டு சீதா பிராட்டியின் மனம் நெகிழ்ந்தது. எனவே ராமபிரானிடம், ‘‘கோபண்ணா தங்களைப் போற்றும் சிறந்த பக்தன். அவனைத் தாங்கள் கஷ்டப்படுத்தலாமா?’’ என்று கேட்டாள். அதற்கு ராமர், ‘‘கோபண்ணா தனது சிறு வயதில் ஒரு கிளியைப் பிடித்துப் பன்னிரண்டு ஆண்டுகள் கூண்டுக்குள் அடைத்து வைத்திருந்தான். அதற்குரிய தண்டனைதான் இது. அவன், தனது பாவத்துக்கான பிராயச்சித்தம் செய்து விட்டான். எனவே, மன்னன் தானீஷாவைச் சந்தித்து, கோபண்ணா தர வேண்டிய ஆறு லட்சம் வராகன்களை இன்று தந்து விடுவேன். அவன் விடுதலை பெறுவான்!’’ என்றார்.

உடனே சீதாதேவி, ‘‘கோபண்ணா நம் பக்தன். முதலில் அவனைப் பார்க்காமல் மன்னனைப் பார்க்கிறீர்களே… இதென்ன நியாயம்?’’ என்றாள்.

அதற்கு ராமர், ‘‘தானீஷாவும் முற்பிறவியில் சிறந்த பக்தனாக விளங்கியவன். அவன் ஆயிரம் குடங்களின் நீரை எனக்கு அபிஷேகம் செய்வதாக வேண்டிக் கொண்டான். 999 குடங்கள் வரை அபிஷேகம் செய்தவன், அதன்பின் பொறுமையிழந்து கடைசிக் குடத்தை அந்த விக்கிரகத்தில் போட்டு உடைத்தான். அதனால் போன பிறவியில் என் அருள் கிடைக்காத அவனுக்கு, இப்போது காட்சி அளிக்கப் போகிறேன்!’’ என்றார்.

அதன்பின் ராமரும் லட்சுமணனும், மாறுவேடத்தில் சென்று மன்னன் தானீஷாவைச் சந்தித்தனர். அவர்களிடம் மன்னன், ‘‘நீங்கள் யார்?’’ என்று விசாரித்தான். ‘‘என் பெயர் ராம்ஜி. இவர் லட்சுமண்ஜி. கோபண்ணா தர வேண்டிய பணத்தைச் செலுத்த வந்திருக்கிறோம்!’’ என்றனர். பணத்தைப் பெற்றுக் கொண்ட மன்னன், ஒப்புகைக் கடிதம் ஒன்றை எழுதி அவர்களிடம் கொடுத்தான். ராமரும் லட்சுமணனும் அந்தக் கடிதத்தைக் கோபண்ணாவின் பக்கத்தில் வைத்து, மறைந்து விட்டனர்.

அதன் பின்னரே பக்தன் கோபண்ணாவுக்காக கடவுளே மாறுவேடத்தில் வந்ததை மன்னன் உணர்ந்தான். அவரது பக்தியை வியந்து நடந்தவற்றுக்காகப் பெரிதும் வருந்தி, உடனேயே கோபண்ணாவை விடுதலை செய்தான்.

கோபண்ணா இறைவனின் கருணையை நினைந்து மெய்சிலிர்த்தார். அதுமுதல் தன் பெயரை ராமதாசர் என்று மாற்றிக் கொண்டு கடைசிக் காலம் வரை ராம பக்தியில் சிறந்து விளங்கினார்!

– என். மணிமேகலை நெடுஞ்செழியன் சிதம்பரம்-1

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *