சாதுவாக மாறிய ராட்சசன்

0
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 8, 2013
பார்வையிட்டோர்: 6,393 
 

புத்தர் காலத்தில் அங்குலிமாலன் என்ற ஒரு ராட்சசன் இருந்தான். ‘தன் வாழ்நாளுக்குள் ஆயிரம் பேரைக் கொல்வது’ என்பது அவனது குறிக்கோள்.

ஓர் ஆசாமியைக் கொன்றதும் எண்ணிக் கைக்காக, அவரது விரலை வெட்டிக் கழுத்து மாலையில் கோத்துக் கொள்வான். அப்படி, 999 விரல்கள் அவனது மாலையில் இடம்பெற்றுவிட்டன. அங்குலிமாலனுக்கு பயந்து அவன் வசிக்கும் பகுதிக்கு ஊர்மக்கள் செல்வதே இல்லை.

சாதுவாக மாறிய ராட்சசன்ஒரு நாள் புத்தர் அந்தக் காட்டு வழியே செல்ல முற்பட்டார். மக்கள் அவரை எச்சரித்து, ‘‘அந்தப் பக்கம் செல்லாதீர்கள்!’’ என்று தடுத்து விவரம் சொன்னார்கள். இந்த விஷயம் கேட்டு புத்தருடன் வந்தவர்களும் தயங்கினர். எனவே, புத்தர் மட்டும் தனியாகக் காட்டுக்குள் நுழைந்தார். தூரத்தில் வரும்போதே புத்தரின் அழகு அங்குலிமாலனை ஈர்த்தது.

ஆனாலும் அவன் புத்தரை எச்சரித்தான். ‘‘என்னை நெருங்கினால், உங்களுக்கு ஆபத்து. நீங்கள் ஞானி என்றாலும், என்னைப் பொறுத்தவரையில் ஒரு மனிதன்தான். உங்களைக் கொன்றால் எனது குறிக்கோள் பூர்த்தி அடையும். நெருங்காதீர்கள்!’’ என்றான்.

புத்தர் பயமின்றி, ‘‘நான் அப்படியேதான் இருக்கிறேன். நீதான் கொஞ்சம் கொஞ்சமாக என்னை நோக்கி வருகிறாய்!’’ என்றார்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. புத்தர் அவனுக்கு விளக்கினார். ‘‘நான் உடலால் முன்னேறினாலும், மனதளவில் சலனம் இல்லாமல் இருக்கிறேன். ஆனால், நீ உடலால் ஒரே இடத்தில் இருந்தாலும், மனதால் சலனப்படுகிறாய்!’’

அங்குலிமாலன் பதற்றத்தோடு காணப் பட்டான்.

புத்தபிரான் சொன்னார்: ‘‘நாம் சாப்பிடு முன் இலையைத் துடைத்து, எல்லா வகைப் பதார்த்தங்களையும் பரிமாறி அழகு படுத்துகிறோம். சாப்பிட்ட பிறகு இலையை வீசி எறிகிறோம். அதுபோலவே ஆத்மாவின் ஒலியைக் கேட்பதற்கு உடம்பு ஒரு சாதனம். அதை அடைந்து விட்டால், பிறகு உடம்பு தேவையில்லை. என் உடல் உனது குறிக்கோளை நிறைவேற்றப் பயன்படும் என்றால், தாராளமாக என்னைக் கொல்லலாம்!’’ என்றார்.

ராட்சசன் மௌனமாக இருந்தான். அப்போது, பக்கத்தில் இருந்த மரத்தின் கிளையை சுட்டிக் காட்டிய புத்தர் அதை வெட்டச் சொன்னார். ‘மனிதனை வெட்டும் என்னிடம் மரத்தின் கிளையை வெட்டச் சொல்கிறாரே!’ என்று எண்ணிய ராட்சசன் அந்தக் கிளையை அலட்சியமாக வெட்டினான்.

‘‘இப்போது இந்தக் கிளையை மறுபடியும் அந்த மரத்தில் ஒட்ட வை!’’ என்றார் புத்தர்.

‘‘வெட்டிய கிளையை எப்படி மரத்தில் ஒட்ட வைக்க முடியும்?’’ என்று கேட்டான் அங்குலிமாலன்.

புத்தர் அமைதியாகச் சொன்னார்: ‘‘இப்போது புரிகிறதா? ஆக்கல் சக்தி உன்னிடம் இல்லாதபோது, எப்படி நீ ஒரு பொருளை அழிக்கலாம்?’’

புத்தரின் கேள்வி அங்குலிமாலனைச் சிந்திக்க வைத்தது. அவன் புத்தரின் காலில் விழுந்து வணங்கினான். ‘‘உங்களது பேச்சு என்னை மாற்றி விட்டது. இனிமேல் நான் யாரையும் கொல்ல மாட்டேன்!’’ என்று கூறியவன், அதன்பின் துறவியாக மாறினான்.

துறவியாக மாறிய அங்குலிமாலன் தெருவில் நடந்து போகும்போது மக்கள் அவனைப் பலவாறு கேலி செய்தனர். அடித்துத் துன்புறுத்தினர். அவன் பதில் எதுவும் பேசாமல் இருக்கவே, மேலும் மேலும் துன்புறுத்தினர்.

அப்போது அவனை மீண்டும் ஒரு முறை சந்தித்த புத்தர், ‘‘இவர்கள் இவ்வளவு துன்புறுத்தியும் நீ பேசாமல் இருக்கிறாயே?’’ என்று கேட்டார்.

அதற்கு அவன், ‘‘நீங்கள் சொன்னபடி ஆத்மாவை அறியும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அதனால்தான், அவர்கள் கல்லால் அடிப்பதும் அவர்களது கடுஞ்சொற்களும் என் அறிவைத் தொடவில்லை!’’ என்றான்.

நாமும் ஆத்மாவை அறிய முயன்றால், உடலுக்கு ஏற்படும் சாதாரண வலிகள் தெரியாது!

– ஸ்ரீமுரளீதர சுவாமிஜியின் உரையிலிருந்து…
_ ஆர். பிருந்தா, மதுரை&20.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *