நிஷ் காம்ய கர்மா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: March 28, 2021
பார்வையிட்டோர்: 4,573 
 
 

ஜனக ராஜா, சீதையின் தந்தை, ராமனின் மாமனார், மிதிலையின் அரசர், ஒரு சிறந்த கர்ம யோகி.

ஜனக ராஜா , அஷ்டவக்கிரர் எனும் மகாமுனியின் சீடர். ஜனகரின் குணம் அறிந்து, ஜனக ராஜாவை தன்னுடன் என்றும் ஆசிரமத்திலேயே வைத்துக் கொள்ளாமல், நாட்டை ஆள திருப்பி அனுப்பி வைத்துவிட்டார் அஷ்டவக்கிரர். நாட்டை ஒரு சிறந்த கர்ம யோகி ஆண்டால் நாட்டுக்கு நல்லது தானே ?

அடிக்கடி தன் குருவைக் காண, அவரோடு பேச, அவர் உரைகளை கேட்க ஜனக ராஜா, காட்டிற்கு வருவது வழக்கம். வந்தால், இருவரும் தனியாக மணிக் கணக்கில் சிரித்து பேசிக் கொண்டிருப்பர், நேரம் போவதே தெரியாமல்.

மற்ற சீடருக்கு இது பொறுக்கவில்லை. பொறாமை, ஆற்றாமை, கோபம் இவை சீடர் நடுவே வளர்ந்து கொண்டிருந்தது. நமது குரு, ஜனகர் ஒரு ராஜா என்பதால் தான் அவருக்கு நெருக்கமாக இருக்கிறார். அவர் வந்தால், நம்மை உதாசீனப் படுத்துகிறார் என ஏளனமாக நினைத்தனர்.

இது குருவிற்கு தெரியவந்தது. அஷ்டவக்கிரர் அதை பொருட்படுத்தவில்லை. நாட்கள் இப்படியே போனது.

ஒரு நாள், ஜனகர், அஷ்டவக்கிரர் ஆசிரமத்திற்கு வந்து அவரது சொற்பொழிவை கேட்டு கொண்டிருந்தார். அப்போது, ஒரு சேவகன் அரசரை தேடி ஓடிவந்தான். மூச்சிரைக்க “ அரசே ! உங்கள் மாளிகை தீப்பிடித்து எரிகிறது”

ஜனகர், அவனை திரும்பி கூட பார்க்க வில்லை . “ முட்டாளே ! நான் குருவோடு இருப்பது தெரிய வில்லையா. மந்திரி , சேனாதிபதி பார்த்து கொள்வார்கள். மூடனே, குருவை மதியாமல், எப்படி நீ குறுக்கே வரலாம் ? செல் இங்கிருந்து” என ஆணையிட்டார்.

நேரம் போய்க்கொண்டிருந்தது. சத் சங்கம் நடந்து கொண்டிருந்தது. அப்போது , ஒரு சீடன் குருவிடம் ஓடி வந்தான். “ குருவே, குரங்குகள், நமது ஆசிரமத்தில் , நமது சீடர்களின் துவைத்து உலர வைத்த ஆடைகளை கிழித்து விளையாடிக் கொண்டிருக்கின்றன”

இதைகேட்ட சீடர்கள், அலறி அடித்துக் கொண்டு தங்கள் உடமைகளை காக்க ஓடினர். மரியாதைக்கு கூட, குருவிடம் ஒரு வார்த்தை அனுமதி கேட்கவில்லை.

சிறிது நேரம் கழித்து மாணவர்கள் வந்த போது, அஷ்டவக்கிரர் அவர்களை கேட்டார் . “ இப்போது சொல்லுங்கள் ! தனது மாளிகை, தன் சொத்து, தன் குடும்பம் , தன் மக்கள், நெருப்பினால் அழிவு ஏற்படும் என்று தெரிந்தும், ஜனகர் துளியும் கவலைப் படவில்லை. ஆனால், சாதாரண துண்டுக்கு, லங்கோட்டாவிற்கு ஆபத்து என்றவுடன் விழுந்து அடித்துக் கொண்டு ஓடினீர்கள். இப்போது தெரிகிறதா, யார் உண்மையில் கர்ம யோகி என்று ?”

அப்போது ஒரு மாணவன் சொன்னான் “ குருவே ! அவர் செல்வந்தர் ! மீண்டும் ஒரு மாளிகை கட்டிக் கொள்ளலாம் ! எங்கள் சொத்து இந்த ஆடை மட்டும்தானே ! “

அஷ்டவக்கிரர் சொன்னார் “ இது சொத்து பற்றிய விஷயம் அல்ல. நிஷ் காம கர்ம யோகியாக இருப்பது எப்படி என்பது பற்றியது. உலக இன்ப சுகங்களை அனுபவிப்பது பற்றியது. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதாற்காக தான் இந்த மாயையை நான் உருவாக்கினேன்.”

****

‘நிஷ்காம கர்மம்’ என்றால், ‘ஆசைகளிலும் விளைவுகளிலும் எதிர்பார்ப்புகளிலும்’ மனதை விட்டுவிடாத செயல் என்று சொல்லலாம். பகவத் கீதையின் முக்கிய சாரமான ‘கர்ம யோகம்’ தான் ‘நிஷ் காம்ய கர்மம்’.

ஆசை இல்லாமல் மனிதன் இல்லை. ஆசைப் படுவது தவறும் இல்லை.

மனிதருக்கு, ஒரு காரியம் செய்யும் போது, காரியம் பூர்த்தி அடைந்தால், அடி மனதில் ஒரு சந்தோஷம் உண்டாகிறது. பூர்த்தி அடையவில்லை எனில், துக்கம் உண்டாகிறது.

இப்படிச் செய்தால் இன்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் ஆசையிலும் மட்டுமே மனதை செலுத்தினால், செய்யும் செயலில் கவனம் இருக்காது. செய்யும் செயலில் கவனம் இல்லா விட்டால், செயலில் நிறைவு கிட்டாது.

செயலின் விளைவு எப்படி இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். அதற்காக, என்ன ஏற்பட்டாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது பொருளில்லை. நான், எனது, என்னால் தான் இந்த வெற்றி என்ற அகந்தை, என்னால் தான் இந்த தோல்வி என்கிற தாழ்வு மனப்பான்மையோ ஏற்படாமல் இருக்க வேண்டும்.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். ( திருக்குறள்)

நிஷ் காம கர்மா பற்றி ஒரு சிறு கதை

ஒரு யோகி, ஒரு காட்டில், ஆற்றிற்கு பக்கத்தில், யோகத்தில் இருந்தார். அப்போது அந்த பக்கம் வந்த தேள் ஒன்று ஆற்றில் விழுந்து கரையேற முடியாமல் தத்தளித்துக்கொன்டிருந்தது. அதை கண்ட யோகி, அதை மெல்ல பிடித்து, தரையில் விட்டார். தேள் அவரை கொட்டி விட்டது. மீண்டும் சிறிது நேரத்தில் அதே தேள் ஆற்றில் விழுந்து கரையேற முடியாமல் தத்தளித்துக்கொன்டிருந்தது. இப்போதும், அது கொட்டும் என்ற சிந்தனையே இல்லாமல், யோகி அதை மீண்டும் தரையில் எடுத்து விட்டார். தேள் மீண்டும் அவரை கொட்டி விட்டது இதை பார்த்துக் கொண்டிருந்த வழிப் போக்கன் ஒருவன் கேட்டான் “ ஏஞ்சாமி ! தேள் தான் கொட்டும்னு தெரியுதே, அதை ஏன் திரும்பி திரும்பி காப்பாத்தறீங்க!

யோகி சொன்னார் “ கொட்டுவது அதன் குணம் ! எதையும் எதிர்பாராமல் காப்பாற்றுவது என் குணம் “

இது தான் நிஷ் காம கர்மா.

நிஷ் காம கர்மாவுக்கு இன்னொரு உதாரணம் :

முன்பொரு சமயம், ரங்காச்சாரி என்ற பெயர் கொண்ட தெலுங்கு பண்டிதர் ஒருவர் ரமண மகரிஷியிடம் ‘நிஷ்காம்ய கர்மம்’ பற்றி கேட்டார். ரமணரிடம் இருந்து பதிலே இல்லை. சிறிது நேரத்திற்கு பின்னால், ஒரு குன்றின் மேல் ஏறி நடக்கலானார். கேள்வி கேட்ட பண்டிதரும் இன்னும் சிலரும், ரமணரை தொடர்ந்து நடக்கலானர்.

கீழே தரையில் இருந்த ஒரு முட்கள் நிறைந்த குச்சியை கையில் எடுத்தார் ரமணர். பின்னர் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு மெதுவாக, அந்த குச்சியில் இருந்த முட்களை நீக்கலானார்!. அந்த குச்சியின் முடிச்சுகளை நேராக்கினார். பின்னர் ஒரு தடினமான இலையைக் கொண்டு, அந்த குச்சியை வழவழப்பானதாக மாற்றினார். சுற்றி இருந்தவர்கள் இவர் என்ன செய்கிறார் என்று வியந்து கொண்டு இருந்தார்கள்!

சற்று நேரத்தில் பக்கத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஒரு சிறுவன் அந்தப் பக்கம் வர எல்லோரும் ஒதுங்கி ஆடுகளுக்கு வழி விட்டனர். அந்த சிறுவன் கையில் குச்சி இல்லாமல், ஆடுகளை வழிப்படுத்த சிரமப்பட்டுக் கொண்டு இருந்தான்! இதைப் பார்த்த உடனே ரமணர், தன் கையில் இருந்த புதுக் குச்சியை, அந்த சிறுவனுக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் ரமணர்!.

கேள்வி வினவிய பண்டிதரோ, ஆகா, என் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்றார்!

நிஷ் காம கர்மாவிற்காக ஆறு விதிகள் :

முதலில், உன் ஆசைகள் என்னவென்று முதலில் வரையறுத்துக் கொள். மாற்றிக் கொண்டே இருக்காதே. ஹோட்டலுக்கு சென்று தோசை ஆர்டர் செய்கிறாய். பின்னர், ஊத்தப்பம் சொல்லியிருந்தால் நன்றாயிருந்து இருக்குமோ என சஞ்சலபடாதே !
உனக்கு என்ன வேண்டும் என மிகதெளிவாக சொல் . ஒருவர் பேரில் கோவம் இருந்தால், கோபத்தை காட்டாதே. ஏன் கோபம் என்பதை கோபப்படாமல் தெளிவாக சொல்.
நீ விருப்பபடுவது நியாயம் தானா, இல்லையா என ஆராய்ந்து முடிவெடு. பட்டதாரியாக கூட இல்லாமல், ஐம்பது வயதில் ஐ யே எஸ் ஆக ஆசை படுவது நியாயமா ? தகுதி வேணாமா ?
கிடைத்ததை ஏற்றுக்கொள்ள பழகு
அதை மூழு திருப்தியுடன் அனுபவி .
சில நிறைவேறா ஆசைகள் நன்மைக்கே என திரும்பி பார்க்க கற்றுக்கொள் . சிலரிடம் ஒரு லக்ஷ ரூபாய் கையிலிருக்கலாம். ஆனால், ஒரு கோப்பை தேநீருக்காக அலைய வேண்டியிருக்கும் அல்லது குடி நீருக்காக அல்லாட வேண்டியிருக்கும் . அது எளிதாக உனக்கு கிடைக்கிறதே என திரும்பி பார்க்க கற்றுக்கொள்

இப்படியெல்லாம் நிஷ் காம்ய கர்மாவை அனுசரி என்று சொல்வது எளிது. ஆனால், செய்வது மிக கடினம் .

இன்றைய கால கட்டத்தில் இது நடக்க கூடுமா ? அறுவது வயதில் இதை பேசி திரியலாம். ஆனால், வாழ வேண்டிய கால கட்டங்களில், இச்சை இல்லையென்றால் இந்த உலகில் வாழ்வேது ? பணம் , புகழ் வேண்டுமே !

இதற்கு ஸ்ரீ கிருஷ்ணன், கீதையில் பதில் கூறுகிறான் : மிக பிரபலமான சுலோகம்

கர்மண்யேவாதி⁴காரஸ்தே மா ப²லேஷு கதா³சந|
மா கர்மப²லஹேதுர்பூ⁴ர்மா தே ஸங்கோ³ऽஸ்த்வகர்மணி ||2-47||

கடமை செய்ய உனக்கு அதிகாரம் இருக்கிறது. அதன் பலன்களில் உனக்கு நாட்டம் இருக்கக் கூடாது. அதற்காக கடமையை செய்யாமலும் இருக்கக் கூடாது.

மனதை அடக்குவது எப்படி ? அது இயலாத காரியமாயிற்றே ?

இந்த கேள்வியைத்தான் அர்ஜுனன் கண்ணனிடம் வைக்கிறான் . அதற்கு கண்ணனின் பதில் 6.34 -6.35

6.34 அர்ஜுனன் : கிருஷ்ணா, நிச்சயமாக மனமானது அலையும் தன்மையடையது. உள்ளே கலங்கியிருப்பது,பலமானது, அடங்காதது, அதை அடக்குவது என்பது காற்றை அடக்குவது போல இயலாதது என்று நான் நினைக்கிறேன்.

-6.35 ஸ்ரீபகவான் சொன்னது

அர்ஜுனா, மனமானது அடக்க முடியாதது. அலைந்து திரிவது. இதில் சந்தேகமில்லை. ஆனால் குந்தியின்மைந்தா, தொடர்ந்த பயிற்சியினாலும், உலகியல் பற்றின்மையாலும் அடக்கமுடியும். ( Abhyasa and Vairagya )

நிஷ் காம்ய கர்மாவை புரிந்து கொள்ள ஒரு எளிதான குஜராத்தி பாடல் : (மகாத்மா காந்தியின் விருப்ப பாடல் – நரசிம்ஹ மேத்தா எழுதியது )

வைஷ்ணவ ஜனதோ தேனே கஹியே ஜே பீடு பராயே ஜானெரெ
பரதுக்கே உபகார் கரே தொயெ மன் அபிமான் ந ஆனெ ரெ

“வைஷ்ணவன் என்போன் யாரென கேட்பின் வகுப்பேன் அதனை கேளுங்கள்…
பிறருடையத் துன்பம் தனதென எண்ணும் பெருங்குணத் தவனே வைஷ்ணவனாம்;உறுதுயர் தீர்த்ததில் கர்வம் கொள்ளான் உண்மை வைஷ்ணவன் அவனாகும்;”

ரமண மகரிஷி செய்து காட்டியது போல் நாமும் செய்ய முயற்சிப்போமே ! முயற்சி திருவினையாகும் !

*** முற்றும்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *