(2012 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
டிங் டாங்…டிங் டாங்… காலிங் பெல் ஒலித்தது. கேரோலின் போய்க் கதவைத் திறந்து, வாசலில் நின்ற வனிதாவைப் பார்த்து, “அக்கா வாங்க. சுகமாய் இருக்கிறீங்களா? உள்ளே வாங்க, சோபாவில் வந்து உட்காருங்க” என்று அன்போடுவரவேற்றாள் கேரோலின்.
அதற்கு வனிதா, “அக்கா, நீங்க சௌக்கியமா? வருகிற வழியில் உங்கள் பையன்கள் இரண்டு பேரும் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.” நேற்று கோயிலில் நீங்க முன் வரிசையில் பெஞ்சில் இருந்தீங்க. நான் உங்களுக்குப் பின்னால் பெஞ்சில் உட்கார்ந் திருந்தேன். பிரசங்கம் சூப்பர் ஆக இருந்தது. என் இடது பக்கத்தில் இருந்த இரண்டு பேர் கிசுகிசு என்று மெதுவாகப் பேசினார்கள்.
ஒரு அம்மா உங்களைக் கையைக்காட்டி, பட்டுப் புடவையைப் பார்! என்னா அழகாக இருக்கிறது. ஜரிகை தூக்கலா இருக்குது என்றார்கள்.
அதற்கு இன்னொரு அம்மா என்ன சொன்னாங்க தெரியுமா? அந்த அம்மா அழகுக்கு, எந்தப் புடவைக் கட்டினாலும் கியூட்டாகத் தானிருக்கும் என்று. உங்கள் அழகைப் புகழ்ந்தார்கள் என்றாள் வனிதா. உடனே கேரோலின் உச்சு குளிர்ந்தது.
மேலும் வனிதா தொடர்ந்தாள். நேற்று என் கணவரைப் பார்த்து, நம்ம தெருவிலியே, கேரோலின் அக்காதான் அதிக அழகு. சிவப்பு நிறம். சிற்றுடம்பு, சிற்ப அழகு, சிற்றெறும்பு சுறுசுறுப்பு, என்று சொன்னேன்.
அதற்று அவர், ஆமாம் எங்கள் கம்பெனியிலும் அப்படித்தான் பேசிக்கொள்ளுகிறார்கள், என்று சொல்லி உங்களை மிகவும் புகழ்ந்து பேசினார், என் கணவர்.
உடனே கேரோலின் கணவர், கென்னடி, தன் மனைவியைப் பார்த்து, அம்மாடியோ, என்னாப் புகழ்ச்சி. எதும் வலையில் மாட்டி விடாதே. “முகஸ்துதி இஷ்டம், முடிவில் நஷ்டம்” என்று எங்கள் பாட்டி சொல்வார்கள் என்றார் கென்னடி.
அதற்கு கேரோலின், சும்மா கிடங்க, உங்களுக்குப் பொறாமையா இருக்காங்கும்? என்று சொல்லிக் கொண்டே ஆப்பிள் ஜூஸ் எடுத்துக் கொண்டு வந்து வனிதாவுக்குக் கொடுத்தாள்.
மகிழ்ச்சியோடு இருந்தகேரோலின், வனிதாவைப் பார்த்து, அக்கா உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? நேற்று கலியாண வீட்டில் ஒரு நல்ல ஜோக்! நேற்று நானும் அவரும் ஒரு கலியாண ரிசப்ஷனுக்குப் போயிருந்தோம். அந்தக் கூட்டத்தில் எங்கள் தூரத்து சொந்தம் ஒரு பாட்டி என்னைப் பார்த்ததும் எங்க அம்மா அப்பாவைப் பற்றி விசாரித்தார்கள். பின்பு போகும்போது, கேரோலின் செல்லம், பாட்டிக்கு உன் நகைத் திருடி கலியாணக்கார்டு அனுப்ப மறந்துவிடாதேம்மா என்று சொன்னதும் என் கணவர் குப்பென்று சிரித்துவிட்டார்.
உடனே வனிதா, ஆமாம் உங்களைப் பார்த்தால், இரண்டு பிள்ளைகள் பெற்றவர்கள் என்று யார் சொல்வார்கள் என்று சொல்லி மேலும் புகழ்ந்தாள். கேரோலினுக்கு ஒரே சந்தோஷம்.
அப்பொழுது வனிதா, அக்கா ஒரு அவசரமாய் உங்களைப் பார்க்க வந்தேன். நாளைக்கு எங்கள் வீட்டுக்காரர் வேலைப் பார்க்கும் கம்பெனி மேனேஜர் மகனுக்குக் கல்யாணமாம். நான் வரவில்லை என்று சொன்னாலும் என்னைவிட மாட்டேன் என்கிறார். அங்கே படித்தவர்கள், பணக்காரர்கள் பட்டு உடுத்தி நகை அணிந்து வந்திருப்பார்கள். நான் எப்படி இந்த மொட்டைக் கழுத்தோடு போக என்று யோசித்தேன். எனவே ஒரு நெக்லஸ் மட்டும் கொடுங்கள். போட்டுவிட்டு நாளை மறுநாள் தந்து விடுகிறேன் என்றாள் வனிதா.
உடனே கேரோலின் இதைக் கேட்கவா இவ்வளவு தயக்கம். இந்தாங்க போன வாரம் வாங்கிய புது நெக்லஸ், மூன்றரைப் பவுன் என்று சொல்லி ஒரு டப்பாவில் வைத்துக் கொடுத்தாள்.
வனிதா கலியாணத்தில் போட்டுவிட்டு அடுத்த நாளே அட்டை டப்பாவோடு நெக்லசைப் பத்திரமாகத் திருப்பிக் கொடுத்தாள். உடனே கேரோலின், “தோழி என்றால் இப்படி அல்லவா இருக்கணும், சொன்ன மாதிரியே கொண்டுவந்து விட்டீர்களே” என்றாள்.
ஒரு வாரங்கழித்து கேரோலினும் கென்னடியும் ஒரு கலியாணத்துக்குப் புறப்பட்டார்கள். கேரோலின் நெக்லசை எடுத்துப் பார்த்தாள்; பொசுக்கென்று இருந்தது. எடை குறைந்து காணப்பட்டது. கழுத்தில் போட்டுப் பார்த்தால் போட முடியவில்லை. செயின் எட்டவில்லை . உடனே இருவரும் அடுத்த தெருவில் உள்ள நகைக் கடையில் எடை போட்டார்கள். ஒரு பவுண் குறைந்திருந்தது. அப்போது அந்த நகைக்கடைக் காரர் சொன்னார். போனவாரம் இந்த நெக்லசைக் கொண்டு வந்து ஒரு அம்மா என் மகளுக்குப் போடுவதற்குப் பெரியதாயிருக்கிறது. ஒரு பவுண் வெட்டி எடுத்து விடுங்கள் என்றார்கள். நான் தான் வெட்டிக் கொடுத்தேன் என்றார்.
உடனே கேரோலின் வனிதாவுக்குப் போன் போட்டார். தொடர்பு எல்கைக்கு வெளியே இருக்கிறார்கள் என்ற பதில் வந்தது. உடனே வீட்டுக்கு விரைந்தனர். வீடு பூட்டிக் கிடந்தது. பக்கத்து வீட்டுக்காரர்கள், சொன்னார்கள்.
அந்த அம்மா வாடகை வீட்டைக் காலி பண்ணிவிட்டு நாகர்கோவில் போய்விட்டார்கள். நாலு நாளாகி விட்டது என்றார்கள்.
உடனே கேரோலின் சிரித்த முகம் இன்று சிறுமுகமாக சுருங்கியது. கண்ணில் கண்ணீ ர் வந்தது. 25 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஆகிவிட்டதே. கூடா நட்பு கேடாய் முடிந்து விட்டதே. நான் என்ன செய்வேன். என்னை ஏமாற்றிவிட்டாளே அந்தப் பாவி, துரோகி, நய வஞ்சகி என்று ஏசினாள்.
கென்னடி கேரோலினைப் பார்த்து நெக்லஸ் கொடுக்கு முன்னால் மரியாதைக்காகவாவது என்னிடம் நீ ஒரு வார்த்தை கேட்டாயா? அவள் முகஸ்துதியில் நீ மயங்கிவிட்டாய். அவளுடைய ஏமாற்றுவலையில் நீ விழுந்துவிட்டாய். பெண் புத்தி பின்புத்தி என்பது எவ்வளவு உண்மையாயிற்று. சரி, இனியாவது புருஷனை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள் என்று புத்திமதி சொன்னதும், அருகிலுள்ள ஆலயக் கோபுரக் கடிகாரம், மாலை ஆறுமணி அடித்து அழகான பைபிள் வசனம் ஒன்றும் சொல்லிற்று.
“பிறனை முகஸ்துதி செய்கிறவன், அவன் கால்களுக்கு வலையை விரிக்கிறான்” (நீதி மொழிகள் 29 : 5)
உடனே கென்னடி கையிலுள்ள மொபைல் போன் இனிய பாடல் ஒன்று பாடிற்று.
“பொய்யும் புரட்டும் உருட்டும் திருட்டும்
பொறாமையும் ஆணவமும்
விட்டுயும்படி அருள்செய்யும்
அனாதி ஓர் ஏக திருத்துவனே” – ஐயாயா நான் பாவி
(பெயர்கள் அனைத்தும் கற்பனையே)
– சாம் குருபாதம் சிறுகதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 2012, சாம் குருபாதம் பதிப்பகம், திருநெல்வேலி.