(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
யூத தேசத்தில் ரோம சாம்ராஜ்யத்தின் பிரதிநிதியாக இருந்த பொன்ரியஸ் பைலேட் தன் தீர்ப்பைக் கூறிவிட்டான். மது வெறியால் கொவ்வைப் பழம்போலச் சிவப்பேறி வீங்கிப் போயிருந்த அவனுடைய கண்களிலே கோபப் பொறி பறந்தது. “இவனுடைய தலையில் முள்முடிசூட்டிச் சிலுவையில் அறைந்து கொல்லுங்கள். யூதர்களின் மன்னனாம், மன்னன்! ஆண்டிப்பயல்!”
எதிரே இருந்த உப்பரிகைகளில் ஆவலோடு காத்து நின்ற யூத ஆலய கர்த்தர்களும், பணக்கார வர்க்கத்தினரும் தம் பூரிப்பை உள்ளடக்கமாட்டாமல் ஆரவாரம் செய்தனர் “பைலேட் வாழ்க! ரோமசாம்ராஜ்யம் தழைக்க!” என்று அவர்கள் வாழ்த்திய வாழ்த்தொலி வானளவும் எழுந்தது. பிறகு, தங்களுக்குள் கீழ்க்குரலில் பின்வருமாறு பேசிக் கொண்டனர். “ஒழிந்தது பீடை! பிச்சைக் காரர்களுக்கும், கூலிக்காரர்களுக்கும், ஒட்டகக்காரர்களுக்கும், மீன் பிடிப்பவர் களுக்கும் வரி வசூல் செய்பவர்களுக்கும், திருடர்களுக்கும், வேசிகளுக்கும், தத்துவ ஞானம் போதிக்க வந்த இந்தக் கிராமாந்தரத்துப் பக்கிரி தலையெடுத்துவிட்டால் சனங்களின் மேலிருக்கும் எங்களுடைய ஆதிக்கத்தின் கதி என்னவாகும்? பிறகு நாங்களும் இந்தப் போகவாழ்வைத் துறந்து ஓடு எடுத்துக் கொண்டு பிச்சைக்குக் கிளம்ப வேண்டியதுதான், அவனைப் போல! ரோமர்களின் வாட்களின் கூர்மையிலும் பார்க்க அவனுடைய வார்த்தைகளின் இனிமை பயங்கரமானதன்றோ…!”
கீழே, வீதிகளிலும் சதுரங்களிலும் நிறைந்து நின்ற பிச்சைக் காரர்கள், கூலிக்காரர்கள், திருடர்கள், வேசிகள், மீன் பிடிப்பவர்கள், ஒட்டகம் ஓட்டிகள் முதலிய ஏழைச் சனங்களின் பிரலாபம் கடல் அலைகளின் ஓலம் போல எங்கும் பரந்தது. தங்களுடைய துயரமும் பாபமும் தேங்கிய வாழ்க்கைகளில் அன்பையும் இனிமையையும் நம்பிக்கையையும் பெய்துவிட்ட அந்த அருள்மலை இன்று செய லற்றுக் குன்றிப்போய் நின்ற காட்சி அவர்களுடைய இருதயங்களைக் கசக்கிப் பிழிந்துவிட்டது. சிலர் அந்தப் பரிதாபக் காட்சியைக் காணச் சகியாமல் மௌனமாகக் கண்ணீர் உகுத்தனர்; சிலர் ரோமர்களையும், ஆலயகர்த்தர்களையும் வைதனர். இன்னும் சிலர், “தேவனுடைய குமாரன், யூதகுலத்தின் மெசையா இன்னும் ஏன் இந்த நிஷ்டூரங்களைச் சகித்துக் கொண்டு வாழா நிற்கிறான். பயங்கர வடிவங்கொண்டு துஷ்டர்களை ஹதம் செய்து எங்களை ரட்சிப்பதற்கு ஏன் காலம் தாழ்த்துகிறான்” என்று நினைத்தார்கள். ஓ! அவர்களுடைய நம்பிக்கைக்கு எல்லையே இல்லை.
கிறிஸ்துவநாதர் ரோம யுத்தவீரர்களின் மத்தியில் தலை குனிந்தபடி மௌனமாக நின்றார். அவருடைய முகத்திலே கோரமான மரணபயம் பிரதிபலித்துக் கொண்டிருந்தது.
பைலேட்டின் தளகர்த்தன் ஒருவன் – பிசாசின் மனம் படைத்த ஒரு ஜெர்மனியன் – திடீரென்று யேசுநாதருடைய கரத்தைப் பற்றி இழுத்தான். அவரைச் சித்திரவதை செய்து கொல்லும் வேலை குரூரத்தின் உருவமான அவனிடம்தான் ஒப்படைக்கப் பட்டிருந்தது. அவன் அவருடைய தலையிலே ஒரு முள்முடியை வைத்துப் பலமாக அழுத்திவிட்டு, “யூதர்களே, இதோ உங்கள் மன்னனுக்கு முடிசூட்டுகிறேன், பார்த்து மகிழுங்கள்” என்று கூறிப் பிசாசு போலச் சிரித்தான். அவனுடைய பழுப்பு நிறமான கண்கள் எதிரே நின்ற ஜனத்திரளை ஊசிமுனைகள்போல் உறுத்தி நோக்கின.
முள்முடி கவிழ்க்கப்பட்ட தலையில் இருந்து புறப்பட்ட செங்குருதி அருவிகள் நெற்றியிலும் கன்னங்களிலும் ஓடிக் கரிய தாடிக்குட் புகுந்து மறைந்து, பிறகு பாதங்களில் கொட்டின. ரோமப் போர்வீரர்கள் ஒவ்வொருவராக வந்து அந்த முள்முடி யணிந்த தலையிலும் அதன் கீழிருந்த திவ்வியமான முகத்திலும் எச்சிலைக் காறி உமிழ்ந்தார்கள்.
“இதோ உங்கள் மன்னனுக்கு வாசனை நீர் அபிஷேகம்” என்று கொக்கரித்தான் அந்த ஜெர்மனியன்.
இவ்வளவையும் வைத்தவிழி வாங்காமல் பார்த்துக் கொண்டு தூணோடு தூணாகிச் சமைந்து நின்றாள் மேரி – யேசுவின் தாய்.
அவள் தன் உடலை மறைத்து ஒரு நீளமான அங்கியையும், தலையை மறைத்துச் சதுரமான ஒரு துணியையும் அணிந்திருந்தாள். வேறு ஆபரணமோ, அலங்காரமோ எதுவும் அவளிடத்திற் காணப் படவில்லை. அவள் ஒரு ஏழைத் தச்சனின் மனைவி. ஏழைகளுக்காக மரணத்தைக் கோரும் ஒரு ஏழையின் தாய்!
இந்த முடிவை அவள் ஒரு அளவுக்கு எதிர்பார்த்துத்தான் இருந்தாள். மேய்ப்பவனைத் தொடரும் ஆடுகள் போல எத்தனை ஏழைகள் அவளுடைய மகனைத் தொடர்ந்து ஆறுதல் பெற்றார்கள். “ஏழைகளே, பாபிகளே, என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு ஆறுதல் தருகின்றேன்” என்று அவர் திரும்பத் திரும்பக் கூறவில் லையா? தூய வெண்ணிறமான அங்கியை அணிந்த அவருடைய நெடிய தோற்றமும் சாந்தமும் கருணை ததும்பும் முகமும், அவருடைய வாயில் இருந்து கிளம்பும் வார்த்தைகளின் இனிமையும் அவளுக்கு எவ்வளவு பெருமையையும் பூரிப்பையும் கொடுத்தன!
ஆனால், அவர் நாட்டில் ஆதிக்கம் பெற்றிருந்த ஆலய கர்த்தர்களையும் பணக்கார வர்க்கத்தினரையும் இழிவுபடுத்தித் தூக்கி எறிந்து பேசினபொழுது அவள் நெஞ்சம் கலங்கியது. இதன் விளைவு யாதாகுமோ? “மகனே, நீ அபாயமான பாதையில் கால் மிதிக்கின்றாய். என் நெஞ்சம் துடிக்குதடா கண்ணே ” என்று அவள் எத்தனையோ தரம் அவரை எச்சரித்திருக்கின்றாள். ஆனால் அவர் ஒன்றையும் பொருட்படுத்தவில்லை.
அதிற்கூட அவளுக்கு ஒரு பூரிப்பு. ஒரு சாதாரண தச்சனுடைய மகன் நாட்டின் முதல்வர்களுக்குச் சவுக்கடி கொடுத்துப் பேசுவ தென்றால்! அவரை ஈன்றபொழுது கண்ட பெருமையும் மகிழ்ச்சியும் இதற்கு எம்மாத்திரம்….?
ஆனால் இன்று….
வெளியே இளவெயில் வீதிகளிலும் சதுரங்களிலும் வீட்டுக் கூரைகளிலும் படிந்து எல்லாவற்றையும் வெண்ணிறமாக்கிக் கொண்டிருந்தது. எங்கும் ஒரே மனிதக்குரல். ஏழைத் தாய்மார் களின் வரண்ட முலைகளைக் கவ்விக்கொண்டிருந்த குழந்தைகள் பால் காணாமல் வீரிட்டலறின… அலை வீசும் சமுத்திரம் போல் நெருங்கிவரும் ஜனத்திரளை ரோம வீரர்கள் அதட்டியும், தங்கள் வாள்களைக் காட்டிப் பயமுறுத்தியும் அப்புறப்படுத்த முயன்று கொண்டிருந்தனர்.
மேரி தூணோடு சாய்ந்தபடி அசையாமல் நின்றாள். உலகத்தில் உள்ள சோகம் அத்தனையையும் உருவாக்கி வார்த்து நிறுத்திவிட்ட மௌனச் சிலை போல அவள் நின்றாள்.
சில போர்வீரர்கள் எங்கிருந்தோ ஒரு பிரம்மாண்டமான மரச்சிலுவையைக் கொண்டு வந்து யெஷுவாவின் தோள் மேல் வைத்தார்கள். அவருடைய நிமிர்ந்த நெடிய தோற்றம் அப்பாரத்தின் கீழ் வளைந்து குனிந்தது. ஒன்பது வார்கள் பாய்ந்த ஒரு சாட்டையைக் கையிற் பிடித்த ஒரு போர்வீரன் அவர்பின் ஆயத்தமாக நின்றான். அந்தக் கோரமான ஊர்வலம் கொல்கோதா என்ற குன்றை நோக்கி மெதுவாக நகர்ந்தது…
முடுக்கி விடப்பட்ட யந்திரம்போல் மேரியும் நகர்ந்தாள்…
சிலுவையின் பாரம் தாங்கமாட்டாமல் யேசுநாதர் அடிக்கடி தள்ளாடித் தயங்கினார். அச்சமயங்களில் அந்த இரக்கமற்ற நெடிய வார்ச்சாட்டை ஜெர்மனிய மிருகபலத்தோடும் குரூரத்தோடும் அவர் முகுகில் விழுந்து தசையை ஒன்பது பிரிவுகளாக வாரி, ரத்தம் வழிந்தோடச் செய்தது…. பின்னால் தொடர்ந்து வந்த ஏழைச்சனங்கள், “என்ன கொடுமை இது! கேட்பவர் இல்லையா? ஆண்டவனே, இந்த மிருக குலத்தையும் அதர்ம ராஜ்யத்தையும் பூண்டோடு நசித்துப் பொடியாக்கி விடமாட்டீரா?” என்று ஓல மிட்டார்கள். சிலர் கோபாவேசம் கொண்டு அருகிற் செல்லவும் முயன்றனர். ஆனால் போர்வீரர்களின் ஈட்டிகளும் வாள்களும் விரைந்து தடுக்கவே, அவர்கள் செயலற்றுப் பின்னடைந்தனர்.
கடைசியாகச் சிலுவையின் பாரத்தையும் அடிகளின் நோவையும் தாங்கமாட்டாமல் யேசுநாதர் கைகளையும் முழுங் கால்களையும் நிலத்தில் ஊன்றிக் கீழே விழுந்துவிட்டார். சிலுவை அவர் முதுகின்மேல் விழுந்தது. அப்பொழுது சைமன் என்ற வர்த்தகன் ஒருவன் ஆவேசத்தோடு போர்வீரர்களின் மத்தியிற் புகுந்து தானே அந்தச் சிலுவையைத் தோள்மேற் சுமந்தான். ரத்த வெறிகொண்ட சாட்டை அவன் முதுகிலே இடம் பெற்றது…
தொடர்ந்து வந்த சனங்களின் தொகையும் வரவரக் குறைந்து கொண்டே வந்தது. அவர்களுடைய நம்பிக்கையும் தளர்ந்து விட்டது. தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளமுடியாத ஒருவன் மற்றவர்களை எவ்வாறு காப்பாற்றமுடியும்? தியாகாக்கினியினால் தகிக்கப்பட்ட பிறகுதான் மனிதன் அமரனாகிறான் என்று யேசு நாதர் எத்தனையோதரம அவர்களுக்கு எடுத்துரைத்திருக்கின்றார். ஆனால் அவர்களுக்கு அது புரியவில்லை. இச்சம்பவத்திலே எல்லையில்லாத சோகத்தையும் ஏமாற்றத்தையும்தான் அவர்களால் காணமுடிந்தது. அச்சோக நாடகத்தின் முடிவைக் காணச் சகியாமலே பலர் பாதி வழியில் திரும்பிச் சென்றனர்.
அந்த ஊர்வலத்தின் பின்னணியில் உருவத்தைத் தொடரும் நிழல் போலவும், கன்றைத் தொடரும் தாய்ப்பசு போலவும் மேரி நகர்ந்து வந்து கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் ஒன்றையும் பார்க்காமல் செயலற்று விழித்துக் கொண்டிருந்தன.
கொல்கோதா என்னும் குன்றின்மேல் யேசுநாதரைச் சிலு வையில் தூக்கி நிறுத்தி, ஆணி அறையும் சமயத்தில், அவ்விடத்தில் ரோமப் போர்வீரர்களும் மேரியும் தளராத நம்பிக்கை கொண்ட சில சிஷ்யர்களும் அன்பர்களுமே நின்று கொண்டிருந்தனர்.
மேரி சிறுவைக்குப் பதினைந்து அல்லது இருபது அடி தூரத்தில் நின்று தன் மகனைக் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
யேசுநாதருடைய முகத்தில் இப்பொழுது பயத்தின் சின்னம் எதுவும் காணப்படவில்லை . அதற்குப் பதிலாக விவரிக்கமுடியாத வேதனை கலந்த ஒரு சாந்தி குடிகொண்டிருந்தது. பிரயாணத்தின் முடிவை அடைந்துவிட்டது போன்ற ஒரு ஆறுதல்; ஒரு அமைதி…
மேரியின் கண்கள் அவருடைய கண்களைக் கௌவி அணைத்துக் கொண்டிருந்தன. செவிப்புலனாகாத ஏதோ ரகஸ்ய மான ஒரு சம்பாஷணை அந்த இரண்டு இருதயங்களுக்கும் இடையில் நிகழ்ந்தது போலும்.
திடீரென்று அவர் தம்முடைய நாவையும் உதடுகளையும் அசைத்து அருந்துவதற்குத் தண்ணீர் வேண்டும் என்று சைகை செய்தார். அவருடைய கண்கள் கெஞ்சின.
அதைக் கண்ட மேரி துடிதுடித்துத் தன் கைகளை அகல விரித்துக்கொண்டு சிலுவையை அணுகுவதற்காகக் காலை எடுத்து வைத்தாள்… அவளுடைய கன்னிமையின் முதற்கனி செயலறியாத குழந்தையாக அவளுடைய மடியிற் கிடந்து கொண்டு நாவையும் உதடுகளையும் அசைத்துப் பதகளிப்போடு அவளுடைய முலைக் காம்பைத் தேடிய ஞாபகம் முப்பத்தி இரண்டு வருடங்களை மின்வெட்டுப்போல் கடந்து வந்து அவளுடைய தாய்மை இருதயத்தின் கதவில் அறைந்தது.
“குழந்தாய், என் குழந்தாய்… என் கண்ணே” என்று அவளுடைய வாய் மெதுவாக முணுமுணுத்தது. உள்ளே அவளுடைய அந்தராத்மா அதிர்ந்து ஓலமிட்டது…
அதற்குள் ஒரு போர்வீரன் பஞ்சில் ஏதோ திரவத்தை நனைத்து அதைத் தன் ஈட்டிமுனையில் வைத்து யேசுநாதரின் வாயில் திணித்தான்…
மேரி முன்வைத்த காலை பின்னுக்கு எடுத்துக் கொண்டாள்.
வானம் இருண்டு மின்னித் தெறித்தது. பேரிடியும், பேய்க் காற்றும் கலந்து குன்றுகளில் எதிரொலித்தன. பிணம் தின்பதற்கு வந்திருந்த கழுகுகளும் கூகைகளும் பயங்கரமாக அலறிக்கொண்டு மறைவிடங்களை நோக்கிப் பறந்தன…
– வெள்ளிப் பாதசரம், முதற் பதிப்பு: ஜனவரி 2008, மித்ரா ஆர்ட்ஸ் அண்ட் கிரியேஷன்ஸ், சென்னை.