சூடிக் கொடுத்த சுடர்க்கொடி

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: June 8, 2023
பார்வையிட்டோர்: 13,562 
 

‘ஹோய்..ஹோய்’ என்று மெலிதான சத்தம் கேட்டது.

பல்லக்கு தூக்கிகள் முகத்தில் ஆஸ்வாசம். சில்லென்ற காற்று முகத்தில் அடிக்க ஆரம்பித்து விட்டது.

“நாம் அரங்கனை நெருங்கி விட்டோம்” என்ற குரல் கேட்டது.

“எப்படி சொல்கிறீர்கள்”

“தென் திருக் காவிரியின் சமீபம் வந்து விட்டோம்.. சோலைகள் அதோ தெரிகின்றன.. என்ன ஒரு சுகந்தம்.. குளிர்ச்சி ..காற்றில்.பரிமள வாசனை.. “

“தேவி உறங்குகிறாரா”

மெல்லிய நகைப்புடன் ஒருவன் சொன்னான்.

“அவருக்கு உறக்கமா.. அரங்கனைப் பார்க்கும்வரை அவருக்கு வேறேது நினைப்பு”

“மானுடர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே”

பல்லக்கு உள்ளே ஆண்டாள் இந்தப் பேச்சை எல்லாம் கேட்டுக் கொண்டுதானிருந்தாள்.

திரைச் சீலையை விலக்கி எட்டிப் பார்த்ததில் விஷ்ணுசித்தர் தம் தளர்ந்த நடையில் முன்னால் சென்று கொண்டிருந்தது தெரிந்தது.

ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து எத்தனை கல் தூரம்.. ஆனால் அவர் ஒரு வார்த்தை கூட மறுப்பு சொல்லவில்லை.

என்றைக்குத்தான் சொல்லியிருக்கிறார்..

‘அப்பா..’

‘என்ன குழந்தாய்’

‘எனக்கு நேரம் வந்து விட்டதப்பா’

பெரியாழ்வார் தாம் பெறாத மகளை உற்றுப் பார்த்தார்.

என்ன ஒரு தீட்சண்யம்.. கண்களில்.

இவள் மானிடப் பிறவியல்ல. இத்தனை நாட்கள் அப்பா, பெண்ணாய் ஆடிய நாடகம் அதன் திரையைப் போடும் காலம் வந்து விட்டது.

மளுக்கென்று உள்ளே ஏதோ தளும்பியது. பிரியப் போகிறோம் என்பதே இவ்வளவு வேதனை தருமா.. கேசவா..

‘போகலாம்மா’

வேறு பேச்சே இல்லை. மளமளவென்று வேலைகள் நடந்தன.

ஸ்ரீவில்லிப்புத்தூரே அமர்க்களப்பட்டது.

‘பட்டர்பிரான் கோதை ஸ்ரீரங்கம் போகிறாளாம்’

‘அரங்கனைத்தான் மணக்கப் போகிறாளாம்’

‘என்னடி இது அதிசயமா இருக்கு’

‘கோதை விஷயத்துல எல்லாமே ஆச்சர்யம் தான்’

ஆண்டாளின் காதுகளில் இந்தப் பேச்சு விழாமலில்லை. ஆனால் அவள் அதற்காக பதில் பேசுவதும் இல்லை.

திரு நந்தவனத்தில் திருத்துழாய் மண்டிக் கிடந்தது. அதன் வாசம் காற்றில் மணத்துக் கொண்டிருந்தது. அதன் மண்ணில் போய் அமரும் போதெல்லாம் தாய் மடி உணர்கிற மனசு.

அங்கே தான் விஷ்ணுசித்தர் ஆண்டாளைக் கண்டார் முதன் முதலில்.

அழாத அழகான குழந்தை.. துளசிச் செடியின் கீழ். அவரைப் பார்த்ததும் சிரித்தது.

‘யார் இங்கே விட்டது.. ‘

நந்தவனம் முழுக்க பார்வை அலசியது. ஒரு வாரமாகவே ஏதோ ஒரு நினைப்பு. விடியலில் தூக்கம் கலைந்து பிரம்ம முஹூர்த்தத்திற்கு முன்பே விழிப்பு.

‘உங்க கூட வந்து இருக்கட்டுமா’

பிஞ்சுக்குரலின் கொஞ்சல் த்வனி. ஆனால் எதிரே யாரும் இல்லை.

‘ப்ரபோ.. என்ன இது உன் விளையாட்டு.. ஏதோ என் போக்கில் உனக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து காலத்தைக் கழிக்கிறேன்.. அடியேனுக்கு அதுவே போதும்’

‘அப்பா..’

இந்த முறை ஸ்பஷ்டமாய் குழந்தைக் குரல். என்ன அழகான மழலை..

ஒரு பக்கம் அந்தக் குரலின் மீது மனசுக்குள் ஈர்ப்பு.. இன்னொரு பக்கம் சம்சாரக் கடலில் பிணைக்க விதியின் விளையாட்டா என்ற அச்சம்..

இதோ கனவு பலித்து எதிரே துளசி மண்ணில் பிஞ்சுக் குழந்தை.

அதன் பாதங்கள் சிவந்த மலர் போல..

‘முகுந்தா.. கேசவா.. ‘

சீதக்கடலுள் அமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் அசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாதக் கமலங்கள் காணீரே பவள வாயீர்! வந்து காணீரே

‘கோதை.. கோதை..’

யசோதையாகிப் போன பெரியாழ்வார் இப்போது தந்தையாகவும் ஆகிவிட்டார்.

அவள் வளர்ந்ததில் அவர் பங்கு ஏதுமில்லை. என்ன ஆச்சர்யம்.. தவழ்ந்தது.. பிடித்து நடந்தது.. அவர் பாசுரங்களைக் கூடவே பாடியது.. எதுவுமே மானுடக்குழந்தையின் செயல்கள் இல்லை.. என்ன ஒரு அவசரம். ஒரு வயதுக்குள் ஸ்பஷ்டமாய் பேச்சு.

‘கோதை.. நீ யாரம்மா’

வாய் விட்டு கேட்டிருக்க வேண்டும்.

“என்னப்பா..”

“ஒண்ணுமில்லை”

தேவ ரகசியங்கள் அப்படியே இருப்பதுதான் சுவாரஸ்யம்.

வடபத்ர சாயிக்கு கோதை சூடிக் கொடுத்த மாலைகளை சூடிக் கொள்வதில் தான் எத்தனை ஆனந்தம். அதை முதலில் பார்த்த ஆழ்வார் ஆடிப் போனார்.

‘என்ன காரியம் பண்ணி விட்டாய் அம்மா’

குழந்தை மலங்க விழித்தது. அதில் என்ன தப்பு..

‘அபச்சாரம் மகளே’

‘அப்பா..’

வேறு மாலை கட்டி எடுத்துபோனார் அன்று. திரும்பி வந்தால் கோதை அன்று சாப்பிடவே இல்லையாம். தேஜஸ் குறையாமல் படுத்திருந்த கோதையைப் பார்த்தார்.

‘எழுப்பலாமா’

வேண்டாம். அவள் தப்பு புரியட்டும். மனசு வைராக்கியம் போதித்தது. தாமும் உணவருந்தாமல் படுத்தார். கனவில் கண்ணன் வந்தான். வடபத்ர சாயியின் சித்தம் வேறு விதமாய் இருந்ததைப் புரிய வைத்தான்.

‘விஷ்ணுசித்தரே.. உமது மாலை இன்று பரிமளிக்கவில்லை எமக்கு.. கோதை சூடிக் கொடுத்த மாலையே எமக்கு உகப்பு’

தூக்கிவாரிப் போட்டது ஆழ்வாருக்கு.

‘எம்பெருமானே.. என்ன சொல்கிறீர்’

‘அவள் என்னுடையவள்..’

வேறு வார்த்தைகளே இல்லை. இதை விட அழகாய் எப்படிச் சொல்ல முடியும்..
மறுநாள். ஆழ்வார் மாலையைத் தொடுத்து கோதையிடம் கொடுத்தார்.

‘சூடிக் கொள் கோதை..’

அவள் அதை எதிர்பார்த்த மாதிரி ஆட்சேபம் தெரிவிக்காமல் வாங்கி சுவாதீனமாய் அணிந்து கொண்டு ஆடியில் அழகு பார்த்து மீண்டும் களைந்து குடலையில் வைத்துக் கொடுத்தாள்.

பட்டர் வாங்கும்போதே சொல்லி விட்டார்.

“ஸ்வாமி.. இன்று நேற்றை விட அழகு ஜொலிக்கிறது மாலையில்..”

எம்பெருமானின் முகத்தில் முறுவல். ஆழ்வாரை கடாக்ஷித்தான்.

‘கோதை பாவை நோன்பு நோற்கப் போகிறாளாம்..’

எல்லோர் வீட்டிலும் பெண்குழந்தைகள் அடம் பிடித்தன.

‘கண்ணனுக்காகவாம்.. ஆய்ப்பாடி பெண்களைப் போல..’

‘நாங்களும் போவோம்’

‘என்னடி இது அதிசயம்’

‘எம் பொண்ணு இத்தனை சமத்தா’

‘கோதை பண்ண சாமர்த்தியம்’

வில்லிப்புத்தூர் இன்னொரு ஆய்ப்பாடி ஆனது. மார்கழிக் குளிர் மறைந்து போனது. பாவை நோன்பு நோற்று பாடிப் பரவசம் ஆனார்கள்.

“ஏண்டி பெண்ணே.. கண்ணன் வருவானா.. உன் பாட்டுக்கு’

சீறிய சிங்கம் அறிவுற்று தீ விழித்தது அப்போது கோதையின் பார்வையில்.

‘அதில் என்ன சந்தேகம் மாமி..’

‘இல்ல.. நாமெல்லாம் வெறும் மனுஷ ஜென்மம்டி.. பகவானைப் பார்க்கறதே கஷ்டம்.. இதுல அவனே புருஷனா..’

‘எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமேயாவேம் உனக்கே யாமாட்செய்வோம்’

‘கோவிலுக்கே வரதில்ல.. ஆனா பாரேன் அவளுக்கு.. என்ன நெஞ்சழுத்தம்.. பகவானைத்தான் கல்யாணம் பண்ணிப்பாளாம்’

‘ஆழ்வார்ட்ட எல்லா திவ்ய தேச எம்பெருமான்களைப் பத்தி கேட்டாளாம்.. ஸ்ரீரங்கம் நம்பெருமாளைப் பத்தி கேட்டதும் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லிட்டாளாம்’

‘என்னடி இது அதிசயம்.. தக்குணூண்டு பொண்ணா இருந்துண்டு.. இப்படி ஒரு பிடிவாதமா’

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத
முத்துடைத்தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து
என்னைக் கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழீ! நான்

‘நிஜமாவே அவ மனசுல பகவான் தாண்டி இருக்கான்’

‘ஆழ்வார் படற வேதனையைப் பார்த்தா பாவமா இருக்குடி’

‘சீச்சீ.. அவருக்கு கோதை என்ன செஞ்சாலும் ஆட்சேபணை இல்லைடி’

ஊர் மக்கள் ஆழ்வாரையும் புரிந்து வைத்திருந்தார்கள். கோதையையும் புரிந்து வைத்திருந்தார்கள்.

விஷ்ணுசித்தருக்கு முதலில் கொஞ்சம் மனக்குறைதான்.

‘ஏம்மா.. இவ்வளவோ ஈடுபாட்டோட இருக்க.. ஸந்நிதிக்கு வரமாட்டேங்கிறியே’

‘இல்லப்பா’

‘அதான் ஏம்மா’

கோதையின் சிரிப்பில் ஆயிரம் அர்த்தங்கள். ‘போனால் என்னால் திரும்பி வர முடியாதே’

‘ம்ம்..’

மேலே வற்புறுத்தாமல் விட்டு விட்டார். கோதை எது செய்தாலும் சரியாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கை.

‘அரங்கனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்’ என்று சொன்னபோதும் அவரால் மறுப்பு சொல்ல முடியவில்லை. ‘சாத்தியமாடி குழந்தே’ என்று மனசுக்குள் எழுந்த கேள்வி கோதையின் தீர்க்கமான பார்வையின் முன் அடிபட்டுப் போனது.

ஸந்நிதிக்கு போனார். ‘என்னப்பனே.. அடியேன் என்ன செய்யட்டும்’

விடியலில் மீண்டும் கனவு. ‘அழைச்சுண்டு வா எம்மிடம்’ அரங்கனின் குளிர் முறுவல் தெரிந்தது.
இதோ கிளம்பியும் வந்தாச்சு.

வடதிருக்காவிரியின் கரையில் மண்டபம். தீர்த்தமாடி புது மணப்பெண் போல அலங்கரித்துக் கொண்டும் ஆகிவிட்டது. அரங்கன் கோவில் முரசின் ஒலி கேட்டது. கைங்கர்யபரர்கள் மாலை மரியாதைகளுடன் வந்தார்கள்.

“ஸ்வாமி.. ஸந்நிதிக்கு அழைச்சுண்டு வர எங்களுக்கு உத்திரவு”

திருவீதி ஜனங்கள் ஆச்சர்யமாய் சூழ்ந்து பின்னாலேயே வந்தார்கள்.

யானை பிளிறிற்று.. நடக்கப்போகும் அதிசயம் உணர்ந்த மாதிரி. ‘ரெங்கா.. ரெங்கா’

நாழிகேட்டான் வாசல் நுழைந்து பிரதட்சிணமாய் வந்து இதோ மூலஸ்தானம். இரு திருமணத்தூண்கள் நடுவில் காயத்ரி மண்டபத்தில் கஸ்தூரிரெங்கன். சயனத்திருக் கோலம்.

தேவியை மீண்டும் பார்த்ததில் உல்லாசம் திருமுக மண்டலத்தில்.

‘தீபாரத்தி ஆகட்டும்’

பட்டர் கை நடுங்க தீபம் உயர்த்திக் காட்டினார்.

திருவடி.. அயனைப் படைத்த நாபிக்கமலம்.. ஸ்ரீவத்ஸம்..திருவார மார்பு.. கண்டம்.. திருமுகம்.. பவளச் செவ்வாய்..

‘வா.. பூதேவி.. உன் ஆசை தீர என்னைத் தமிழால் ஆண்டாய்.. ஆண்டாளுமானாய்.. அத்தனை ஆழ்வார்களையும் விஞ்சியது நின் தமிழ்.. இனியொருவர் உன்னைப் போல வரப் போவதுமில்லை.. மனதுக்கினியானைப் பாடப் போவதுமில்லை..’

ஆழ்வார்.. பட்டர்.. ஸ்ரீபாதந்தாங்கிகள்.. ஜனங்கள்.. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க.. தடுக்கவோ.. தவிர்க்கவோ இயலாத படி.. ஆண்டாள் தனக்கான இடம் என்கிற ஸ்வாதீனமாய் மெல்லடி பெயர்த்து கர்ப்பக் கிரஹத்தினுள் போய்..

ஆழ்வார் தம் பெருமையெல்லாம் மறந்து தேம்பியதை அத்தனை பேரும் பார்த்தார்கள்.

ஒரு மகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனான்

(கல்கி – 26.06.2011)

என் படைப்புத் திறமையை வெகுவாய் ஊக்குவிக்கும் ”கல்கி” க்கு மனப்பூர்வமான நன்றி !

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *