காயத்ரி அஷரங்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 19, 2020
பார்வையிட்டோர்: 14,587 
 
 

(இதற்கு முந்தைய ‘காயத்ரி மந்திர மஹிமை’ சிறுகதையைப் படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

குடிலுக்கு வெளியே மழை முற்றிலுமாக நின்றிருந்தது.

அந்த வயதான பெண்மணி தன் கைப்பையில் இருந்து தோசை போன்ற பெரிய மொபைலை எடுத்து குதிரை வண்டிக்காரனை வரச்சொல்லி போன் செய்தாள்.

“அவன் வர பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகும் சுவாமி… தாங்கள் தொடருங்கள்.”

“காயத்ரி மந்திரம் தன்னைச் சரணடைந்து ஓதுபவர்களைக் காப்பாற்றும் என்பதை விளக்க மிகச் சமீபத்தில் குற்றாலத்தில் நடந்த ஒரு சம்பவம் போதுமானது… இதை 02-08-1988 தேதியிட்ட தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் பெரிதாக வெளியிட்டன.

குற்றாலத்திற்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா சென்ற இருபத்திநான்கு வயது இளைஞர் கல்யாண்குமார், மலை மேலுள்ள தேனருவிக்குச் சென்றார். குறுகிய பாதை ஒன்றை அவர்கள் கடக்க முயன்ற போது, திடீரென்று கல்யாண்குமாரைக் காணவில்லை. நண்பர்கள் பயத்தில் உறைந்து போயினர்.

வெள்ளமென ஆர்ப்பரித்து கீழே விழும் அருவிப் பெருக்கில் அவர் அடித்துச் செல்லப்பட்டார் என்று அனைவரும் முடிவு செய்தனர். உடனே தேடுதல் வேட்டை தொடங்கியது. மூன்று நாட்கள் கழிந்தன. பயன் ஒன்றும் இல்லை. உடலும் கிடைக்கவில்லை.

நெல்லை மாவட்ட வனத்துறை அதிகாரி மனோஜ் குமார் சர்க்காரியா முனைப்புடன் தேடுதலில் இறங்கினார். தூத்துக்குடியில் இருந்து முத்துக் குளிப்பவர்களை அழைத்து வந்து மிகத் தீவிரமாக தேடச் சொன்னார். அதில் ஒருவர் இருண்ட குகை ஒன்றில் இருட்டில் ஒரு உருவத்தை என்னால் காண முடிகிறது என்றார்.

உடனே அனைவரும் அந்த குகைப் பக்கம் தண்ணீர் செல்வதை பாறைகளை வைத்து அணை கட்டி நிறுத்தினர்.

குகையின் நடுவில் ஒரு பெரிய ஓட்டை போடப்பட்டது. யார் உள்ளே இருப்பது? என்ற கேள்விக்கு குகைக்குள்ளிருந்து ஹீனமான குரலில் பதில் வரவே, ஓட்டை இன்னமும் பெரிதாக போடப்பட்டு பிஸ்கட்; வாழைப் பழங்கள்; குடிநீர் வழங்கப்பட்டது. பின்னர் பல மீட்பு வீரர்கள் குகையின் உள்ளே கயிறு கட்டி இறங்கி, அவரை மீட்டனர்.

“எப்படி மூன்று நாட்கள் இருட்டில் இந்தக் குகையில் கழித்தாய்?” என்று கல்யாண்குமாரைக் கேட்டபோது, அவர் “இடைவிடாது நான் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக் கொண்டிருந்தேன்… காயத்ரி தேவி என்னைக் காப்பாற்றி விட்டாள்..” என்று கண்ணீர் மல்கக் கூறினார்.

“உண்மையாவா சுவாமி?”

“ஆமாம். காயத்ரி மந்திர தேவதைகள் அவ்வளவு வீரியமான மந்திர சக்தி உடையவர்கள்…

ஆக்னேயம்; ப்ரஜாபத்தியம்; செளம்யம்; ஸமானம்; சாவித்திரம்; ஆதித்யம்; பார்ஹஸ்பத்யம்; மைத்ராவருணம்; பகதெய்வதம்; ஆர்யமைஸ்வரம்; கணேசம்; துவாஷ்ட்ரம்; பெளஷ்ணம்; ஐந்திராக்னம்; வாயவ்யம்; வாமதேவ்யம்; மைத்ராவருணி; வைஸ்வதேவம்; மாத்ருகம்; வைஷ்ணவம்; வததெய்வம்ஸும்; ருத்ரதெய்வதம்; கெளபேரம்; மற்றும் ஆஸ்வின ஆகிய இருபத்திநான்கு தேவதைகள் காயத்ரி மந்திரத்திற்குள் இருக்கின்றன.

மஹா பாபங்களை போக்கடிப்பதாகவும், பரம சிரேஷ்டமாகவும் உள்ள இந்த இருபத்திநான்கும் வீரியமான தேவதைகளாகச் சொல்லப் படுகின்றன.

இவைகளைக் கேட்ட மாத்திரத்தில் சாங்கமாகக் காயத்ரியை தினமும் ஜபம் செய்தால் அதன் பயன்கள், பலன்கள் அளப்பரியது.

நான் இப்போது சொன்ன இருபத்திநான்கு காயத்ரி மந்திர தேவதைகள் தேவி பாகவதத்தில் பன்னிரெண்டாம் ஸ்கந்தத்தில் முதல் அத்தியாயத்தில் தரப்படும் அபூர்வமான விவரங்களாகும்.

முதலில் காயத்ரி மந்திரம் சொல்லுகிறேன்…

‘ஓம் பூர்புவஸ் ஸுவ

தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ யோன ப்ரசோதயாத்’

காயத்ரி அஷரங்களின் பயனை இனி பார்ப்போம்…

ஒவ்வொரு அஷரமும் ஒவ்வொரு பயனைத் தரும்.

‘தத்’ என்பது பிரம்ம ஞானத்தையும்; ‘ஸ’ என்பது சக்தியை நல் வழியில் பயன் படுத்தலையும்; ‘வி’ என்பது நல்ல வழியில் செல்வத்தைப் பயன் படுத்தலையும்; ‘து’ என்பது தைரியத்தையும்; ‘வ’ என்பது பெண்மையின் சிறப்பையும்; ‘ரே’ என்பது வீட்டிற்கு வரப்போகும் இல்லத்தரசியையும் அவள் குடும்பத்திற்கு கொண்டுவரும் நலனையும்; ‘ண்யம்’ என்பது இயற்கையை வழி படுதலையும்; ‘பர்’ என்பது நிலையான மனத்தின் கட்டுப்பாட்டையும்; ‘கோ’ என்பது ஒத்துழைப்பு மற்றும் பொறுமையையும்;

‘தே’ என்பது எல்லாப் புலன்களும் கட்டுப் பாட்டிற்குள் இருப்பதையும்; ‘வ’ என்பது தூய்மையான வாழ்க்கையையும்; ‘ஸ்ய’ என்பது மனிதன் இறைவனுடன் ஒன்று படுவதையும்; ‘தீ’ என்பது எல்லாத் துறைகளிலும் எல்லாவித வெற்றி பெறுதலையும்; ‘ம’ என்பது இறைவனது நீதி மற்றும் ஒழுக்கக் கட்டுப் பாட்டையும்; ‘ஹி’ என்பது நுண்ணறிவையும்;

‘தி’ என்பது வாழ்க்கை மற்றும் மரணத்தையும்; ‘யோ’ என்பது தர்ம நெறிப் படியான வாழ்க்கையைப் பின்பற்றுவதையும்; ‘யோ’ என்பது வாழ்க்கை சேமிப்பையும்; ‘நஹ’ என்பது எச்சரிக்கை மற்றும் பாதுகாப்பையும்;

‘ப்ர’ என்பது நடக்கப் போவதை அறிவது மற்றும் நல்ல காரியங்களுக்கு உதவி செய்வதையும்; ‘சோ’ என்பது அறநெறி நூல்களைப் படிப்பதையும் மஹான்களின் தொடர்பு ஏற்படுதலையும்; ‘த்’ என்பது ஆன்மாவை அறிதல் மற்றும் ஆத்மானந்தத்தையும்; ‘யா’ என்பது சத் மக்கட் பேற்றையும்; ‘த்’ என்பது வாழ்க்கையில் உள்ள ஒழுக்கக் கட்டுப் பாட்டையும் ஒத்துழைப்பையும் குறிக்கிறது…”

குதிரை வண்டிக்காரன் குடிலுக்கு வெளியே வந்து காத்து நின்றான்.

“என்னுடைய அனைத்து சந்தேகங்களையும் தீர்த்து வைத்து விட்டீர்கள் சுவாமி. இன்று மாலையில் இருந்தே நான் காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்து விடுவேன்…”

“இன்னொன்று, நீங்கள் அனைவரும் தினமும் சோஸ்திரங்கள் பல சொல்லலாம், ஆனால் காயத்ரி மட்டுமே மந்திரம்… ஒரு சோஸ்திரத்தை விட மந்திரத்தின் மஹிமை மகத்தானது… அதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.”

“ அப்படியா? ரொம்ப சந்தோஷம் சுவாமி.”

கைகளைக் கூப்பி விடை பெற்றாள்.

“சென்று வாருங்கள்…”

முற்றும்

நன்றி: மஹாஸ்ரீ சந்தானம் நாகராஜன்

என் பெயர் எஸ்.கண்ணன். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார். முதல் நான்கு கதைகள் ஆனந்தவிகடனில் வெளிவந்தது. இவரது 'தாக்கம்' சிறுகதை கலைமகள் நடத்திய அமரர் கா.கா.ஸ்ரீ.ஸ்ரீ நினைவுச் சிறுகதைப் போட்டியில் 2003 ம் ஆண்டிற்கான முதல் பரிசை பெற்றது. 'புலன் விசாரணை' 1990 ம் ஆண்டிற்கான அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டியில் பிரசுரமானது. ஸ்ரீ ராமகிருஷ்ணவிஜயம் 2015ம் ஆண்டு நடத்திய சிறுகதைப்போட்டியில் இவரது 'மனிதர்களில் ஒரு மனிதன்'…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *