கண்ணபிரான் யார் பக்கம்?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 9,200 
 

போருக்கு முன்னால் போட்டி… கண்ணபிரான் யார் பக்கம்?

குருஷேத்திரப் போர் நடப்பது உறுதியானது. இதையடுத்து பாண்டவர்களும் கௌரவர் களும் தங்களது படைபலத்தைப் பெருக்கிக் கொள்வதிலும் அரசர்கள் பலரை சந்தித்து ஆதரவு திரட்டுவதிலும் தீவிரம் காட்டினர். இதன் பொருட்டு ஸ்ரீகிருஷ்ணரைச் சந்திக்க துவாரகைக்கு வந்தான் துரியோதனன்.

கண்ணபிரான் யார் பக்கம்அப்போது, கோட்டை மதிலின் மேல் பறந்த கொடிகள் இட வலமாக அசைந்தாடின. இந்தக் காட்சி, ‘துரியோதனா, நீ இங்கு வந்தும் பயனில்லை. மேக வண்ணனான எங்கள் அழகுக் கண்ணன், பாண்டவர்களுக்குத் துணையாக வருவானேயன்றி, உனக்குத் துணையாக வர மாட்டான்’ என்று கொடிகள் சொல்வது போல் இருந்ததாம்! இதையே,

ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடைய
எழிலி வண்ணன்
பாண்டவர் தங்கட்கு அல்லால் படைத்
துணையாக மாட்டான்
மீண்டு நீ போகென்று அந்த வியன்மதில்
குடுமி தோறும்
காண்டகு பதாகை ஆடை கைகளால்
தடுப்ப போன்ற

என்று விவரிக்கிறது வில்லி பாரதம்.

ஆனால், துரியோதனனுக்கு இதெல்லாம் புரியவில்லை. அவன் கோட்டைக்குள் நுழைந்தான். பகவான் கண்ணன் உறங்கிக் கொண்டிருந்தார் (அவரா உறங்குவார்… அவர் எதிர்பார்த்திருந்தது அர்ஜுனனை. ஆனால், வந்திருப்பது துரியோதனன் அல்லவா! எனவே, தூங்குவது போன்று பாவனை செய்தார் என்றே சொல்ல வேண்டும்). அவரது

மஞ்சத்தை நெருங்கியவன் பகவானின் தலைமாட்டில் அமர்ந்தான்.

வேதங்களில் வல்ல முனிவர்களும் துதிபாடும் அந்த மாலவனின் திருவடி அருகே அமர வேண்டும் என்று துரியோதனனுக்குத் தோன்றவில்லை. ‘மன்னவர்க்கும் மன்னவனான நான், மாடு மேய்க்கும் இவனது காலடியில் அமர்வதா?’ என்ற அகம்பாவம் அவனுக்கு. ‘ஆணவம் உள்ளவர்கள், ஆண்டவனின் திருவடிகளைக் கூட நெருங்க மாட்டார்கள்’ என்பதற்கு துரியோதனனே சிறந்த உதாரணம்!

கண் மூடிப் படுத்திருந்த பகவானுக்கு பதைபதைப்பு. ‘எங்கே அர்ஜுனன்? இன்னும் காணோமே!’ என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கும்போதே அர்ஜுனன் வந்து சேர்ந்தான். பகவான் தூங்குவதைக் கண்டவன் அருகில் வந்து அவரின் திருவடிகளை வணங்கினான். பிறகு, அங்கேயே கை கூப்பியபடி நின்றான்.

பகவான் கண்ணன், விழித்ததும் முதலில் தென்பட்டது… திருவடி அருகே நின்றிருந்த அர்ஜுனனே! அதன் பிறகே தன் தலைமாட்டில் இருக்கும் துரியோதனனைக் கவனித்தார். இருவரிடமும் நலம் விசாரித்தவர், அவர்கள் வந்த காரணத்தைக் கேட்டார்.

உடனே துரியோதனன், ”கண்ணா, குருஷேத்திர யுத்தத்தில், எங்களுக்கு உதவியாக நீ பங்கேற்க வேண்டும். நீ விருப்பு வெறுப்பற்றவன். முதலில் வந்தவன் நான் என்பதால் போரில் எங்களுக்கே உதவி புரிய வேண்டும்!” என்றான்.

”துரியோதனா… நீயே முதலில் வந்தவன். என்றாலும் நான் முதலில் பார்த்தது அர்ஜுனனையே! இருப்பினும் உங்கள் இரு தரப்புக்குமே உதவுகிறேன். பெரும் வீரர்களைக் கொண்ட எனது படைகள் வேண்டுமா? அல்லது போரில் நிராயுதபாணியாக கலந்து கொள்ள முடிவு செய்திருக்கும் நான் வேண்டுமா? நீங்களே முடிவு செய்யுங்கள்!” என்றவர் தொடர்ந்தார்:

”உங்கள் இருவரில் இளையவனான அர்ஜுனன் முதலில் தனது விருப்பத்தைக் கூறலாம்!” என்றார்.

அர்ஜுனன் சற்றும் யோசிக்கவில்லை. ”கண்ணா! உன் துணையே எங்களுக்குப் போதும்; உனது படைகள் தேவை யில்லை” என்றான்.

இதைக் கேட்டு துரியோதனன் பூரித்தான். ‘நிராயுதபாணியான கண்ணனை வைத்துக் கொண்டு என்ன செய்ய… அவனது படை பலம் கிடைத்தால் அல்லவா நன்று!’ என்பதுதானே அவன் எண்ணம். அது பலித்ததில் அவனுக்கு மகிழ்ச்சி.

”கண்ணா! அர்ஜுனனின் விருப்பத்தையே நிறைவேற்று! எனக்கு உனது படைகளைக் கொடு!” என்று கேட்டான்.

அதன்படி, கண்ணனின் படைகளைப் பெற்ற துரியோதனன் உறவினர்களுடன் அழிந்ததையும், பகவான் கண்ணனையே பெற்ற அர்ஜுனன், சகோதரர்களுடன் வாழ்ந்ததையும் அறிவோம்.

நாமும் கண்ணனிடம், கண்டதையும் கேட்காமல் கண்ணனையே துணையாகக் கேட்டுப் பெற்றால், வாழ்வில் நிச்சயம் உயரலாம்!

– ஜூன் 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *