வழியனுப்புதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 24, 2022
பார்வையிட்டோர்: 2,058 
 

நாகப்பச் செட்டியாருக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தும் நெஞ்சு எரிச்சல் தீரவில்லை. கொஞ்ச நாட்களாகவே இந்த எரிச்சல் நீங்காமலேயே நெஞ்சில் தேங்கி நிற்கிற மாதிரிதான் இருக்கிறது. குடிச்சதுக்கப்புறம் வயித்துக்கு எதாவது கொடுத்தாத்தானே, அப்புறம் சாராயம் உள்ளே குடலை அரிக்காம என்ன பண்ணும் என்பாள் ரேவதி, ஏதோ புருஷன் மேல் ரொம்ப அக்கறை இருக்கிற மாதிரி. நாசமாய்ப் போனவள். என்னை இப்படி ஆக்கினதே அவள்தானே. ஊருக்குள் ராஜா மாதிரி துதிபாடும் ஆட்கள் புடைசூழ வலம் வந்தாலும், மனசில் விழுந்து விட்ட முடிச்சு மட்டும் அவிழ்க்க மாட்டாமல் நெஞ்சை சதா நிரடிக்கொண்டிருக்கிறது. அந்த முடிச்சு தரும் வலிக்குத்தான் வேளாவேளைக்கு மருந்து தர வேண்டியிருக்கிறது. கூண்டிற்கு வந்து வேலை செய்கிற பசங்கள் எல்லாரும், வாத்தியாரே, உங்க திறமை யாருக்கு வரும்? ரெண்டு ஆஃப் பாயிலை வச்சுக்கிட்டே ஒரு ஆஃபு, ரெண்டு க்வாட்டரு உள்ள தள்ளிருவீங்களே.’ என்பார்கள். எப்படி வாத்தியாரே ஃபுல்லா ஏத்திட்டு மலை மாதிரி ஸ்டெடியா நிக்கிறீங்க? என்று அதிசயிப்பார்கள். அது சரிப்பா வாத்தியாரு நம்பள மாதிரியா, இப்பவும் கூண்டுக்கு வந்து வேலை செய்ய ஆரம்பித்தார்னா விடாம இருநூறு தண்டால், நூறு புஷ் அப்பு, பார்ல ஏறி இறங்கிட்டு அப்புறம் வெய்ட்டும் அடிப்பாரு பாரு, ஸ்டீல் பாடிப்பா என்று புகழ்வார்கள். இந்தப் பசங்கள் இப்படி ஏத்தி விட்டு விட்டுத்தான் இந்தக் குடியை நிறுத்த முடியாமல் ஆகி விட்டது. ஆனாலும் இப்படி நாளுக்கு நாள் குடி அதிகரித்துக் கொண்டே போவதுக்கு அது மட்டும் காரணமில்லையே.

நாகப்ப செட்டியாருக்கு இந்த ஆவணியோடு நாற்பத்தி மூன்று வயது முடிகிறது. இருந்தாலும் இப்பவும் பார்ப்பதற்கு அந்தக் காலத்து ராஜ்குமார் மாதிரி அமைப்பாகத்தான் இருக்கிறார். வீட்டில் எப்போதும் சட்டையில்லாமல் தான் இருப்பார். பனியன் அணிகிற வழக்கம் கிடையாது. பரந்த தோள்களும், புடைத்த புஜங்களும், மயிர் சுருண்டு கிடக்கிற எடுப்பான மார்புமாக கட்டின வேஷ்டியோடு வீட்டு வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பார். அவரைப் பார்ப்பதெற்கென்றே எதிர்வீட்டு கோமதி சர்க்கரை வாங்கவோ, சீட்டுப் பணம் வாங்குகிற சாக்கிலோ வந்து போகிற மாதிரி இருக்கும். வயசுப் பெண்கள் எல்லாருமே அவரிடம் குழைந்து குழைந்துதான் பேசுவார்கள். நாகப்பன் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. அவருக்கு வீடு விட்டால் ஒரே புகலிடம் பெண் வாசனையே படாத ஆஞ்சேனயர் கோயில் கூண்டுதான். அங்கு உடற்பயிற்சி செய்ய வருகிற இளைஞர்கள் எல்லாரும் கூண்டு நடத்தும் பயிற்சியாளர் ஒருவர் இருந்தாலும் இவரைத்தான் வாத்தியார் என்று கூப்பிடுவார்கள். இவர் என்ன சொன்னாலும் பசங்கள் செய்யத் தயாராகி விடுவார்கள். இவர் தலைமையில்தான் அவர்கள் தெருவில் நற்பணிகள் யாவும் நடந்தேறும். மாசிமாதத்துக் காளியம்மன் கோயில் திருவிழா, பொங்கல் பண்டிகையின்போதெல்லாம், நாகப்பன் தலைமையில் வீடு வீடாகச் சென்று வசூல் செய்து சந்துப் பொங்கல் விழா நடத்துவார்கள். காலையிலேயே தண்ணீர்க் குடம் சுமந்து நதிக்குச் சென்று திரும்புவார்கள். சந்தின் முனையில் வைத்திருக்கிற அம்மனுக்கு அபிஷேகம் செய்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்து சிறுவர்களுக்கு போட்டிகள் நடக்கும். பிஸ்கெட் கடித்தல், ஸ்பூன் எலுமிச்சம்பழம் ரேஸ், சாக்கு ரேஸ் என்று விதவிதமான போட்டிகள். எல்லாவற்றுக்கும் நாகப்பன்தான் முன்னிலை. எல்லாரும் போட்ட பணத்தில் வாங்கிய ஆட்டுக்கறியைக் கூறு போட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் பகிர்ந்து கொடுப்பதும் நாகப்பனின் வேலைதான். அவர் கூறு போட்டுக் கொடுக்கும் போதுதான் தெருப்பெண்கள் முணுமுணுக்காமல் இது குறைகிறது அது குறைகிறது என்று குறை சொல்லாமல் வாங்கிக் கொண்டு போவார்கள்.

தெருவில் எல்லாரும் விரும்புகிற, யார் கூப்பிட்டாலும் ஓடிப்போய் உதவுகிற, எல்லார் மரியாதைக்கும் பாத்திரமானவராக இருந்தார் நாகப்பச் செட்டியார். சின்னச் சின்னக் கடன் வேண்டுமா, நாகப்பச் செட்டியாரிடம் கேட்டால் கிடைத்து விடும். திருப்பதியில் தேவஸ்தானத்தில் தங்க இடம் ஏற்பாடு செய்து தர வேண்டுமா, நாகப்பன் இருக்கிறார். தண்ணீர்க் குழாய்ப் பிரச்னையா நாகப்பன் முடித்துத் தருவார். இப்பேர்ப்பட்ட புகழ் கொண்ட நாகப்பனுக்கு வீட்டில் மட்டும் ஏன் இப்படி சபிக்கப்பட்ட மாதிரி ஆகி விட்டது.

எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ரேவதியைத் திருமணம் செய்து வந்த புதிதில் மிதப்பாகத்தான் திரிந்தார். தலைவருக்கு புது அண்ணி வந்து விட்டார் என்று பசங்களும் பூரித்துப் போய்த்தான் கிடந்தார்கள். ரேவதி கறுப்புதான் என்றாலும் மினுமினுக்கும் கறுப்பு. பத்தொன்பது வயதில் கறுப்பு தேவதை மாதிரிதான் இருந்தாள். அவர்கள் சனத்தில் கறுப்பு என்பதே அபூர்வம். என்னடா நாகப்பா, கறுத்த பொண்ணுக்குத் தலையாட்டிட்டு வந்திருக்கியே என்று தெருக்கிழவிகள் கூட அங்கலாய்த்துக் கொண்டார்கள். அதென்னவோ நாகப்பனுக்கு ரேவதியைப் பார்த்ததும் இவள்தான் தனக்கு என்று முடிவேற்பட்டுவிட்டது. அவள் கழுத்தோரம் தெரிந்த சின்னத் தேமலைக் கூடப் பொருட்படுத்தவில்லை. அல்லது அதுவும் அவருக்கு அழகாகத் தெரிந்ததோ என்னவோ. ரேவதிக்கும் தன் புருஷனை நினைத்து நினைத்து ஓரே கிறக்கம்தான். இருவரும் சாரைப் பாம்புகள் போலப் பின்னிக் கிடந்தார்கள் திருமணமான புதிதில். நாகப்பன் போகுமிடமெல்லாம் ரேவதியும் இழைந்து கொண்டேதான் போவாள். கடைசியில் எல்லார் கண்ணும் பட்டது போலாகி விட்டது.

இப்படிப் படுக்கையில் விழுந்து இரண்டு மாதமாகி விட்டது. முதலில் அவ்வப்போது எழுந்து நடமாடிக் கொண்டிருந்தவருக்கு இப்போது கழிப்பறை செல்வது கூடக் கடினமாகி விட்டது. ரேவதியைப் பக்கத்தில் விடுவதேயில்லை நாகப்பன். அவள் கண்முன் தெரிந்தாலே எரிந்து விழ ஆரம்பித்தார். வாய் அதிகம் பேசாது. அவர் முகத்தில் தெரியும் வெறுப்பு நெருப்பு மாதிரி அவளைக் காந்தி அனுப்பி விடும். அவளும் அவர் கண்ணில் படாமலேயே வீட்டுக்குள் உலவப் பழகிக் கொண்டாள். நாகப்பனுக்கு பெட்பேன் மாற்றுவது. அவர் எடுக்கிற வாந்தியை அள்ளுவது. உடை மாற்றி விடுவது எல்லாமே அவர் அம்மாதான். அவள் படுகிற கஷ்டத்தையும், அவள் உடல் முழுக்கப் பரவியிருக்கிற வேதனையையும் பார்த்து நாகப்பனுக்குத் தான் சீக்கிரம் செத்துப்போய் விட வேண்டும் என்று தீவிரமான எண்ணம் ஏற்பட்டது. முருகானந்தம் பயல், பெரியாஸ்பத்திரியில் வேலை செய்கிறவன், அவனிடம் கூட சொல்லச் சொல்லி விட்டார். அவன் இன்றைக்கு வருகிறேன், நாளைக்கு வருகிறேன் என்று இழுத்துக் கொண்டு இருக்கிறான். எப்படியும் நாளைக்கு அவன் பிடரியைப் பிடித்து இழுத்து வருமாறு பசங்களிடம் சொல்லியிருக்கிறார் நாகப்பன்.

எல்லாவற்றுக்கும் வரதன்தான் காரணமா என்று தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை நாகப்பனுக்கு. அவனை நினைத்தால் நெஞ்செரிச்சல் அதிகமாகிவிடுகிறது. எப்படி இருந்தார்கள் இரண்டு பேரும். அண்ணனும், தம்பியும் போல. வரதன் ரேவதிக்கு முறைப்பையன் என்றாலும், அவனுக்குத்தான் முதலில் ரேவதியை முடிப்பதாக இருந்ததும் அவர்கள் உறவு அண்ணன் தம்பி உறவுதான் என்பதை உறுதிப்படுத்தியிருந்தது. தன் எல்லா ஜமாக்களிலும் அவனைக் கூட்டளியாகச் சேர்த்துக் கொள்வார் நாகப்பன். ரேவதி திருமணம் முடித்துப் போனபிறகு வரதனும் அவர்கள் வீட்டுக்கே குடிபோனதைப் போல அங்கேயே தவம் கிடந்தான். தறியோட்டும் நேரம் போக நாகப்பன் இருக்கும் இடத்தில்தான் அவனும் இருப்பான். சமயத்தில் நாகப்பனுக்கு மாற்றாகக் கூட விஷயங்களைத் தலைமையேற்று நடத்துவான். ரேவதி மேல் கொள்ளைப் பாசம் அவனுக்கு. அவளையேக் கல்யாணம் செய்து கொள்ள விரும்பியிருந்தான். அவர்கள் வீட்டிலும் அதற்குச் சம்மதம்தான். ஆனால் சொந்த வீடு, தறிப்பட்டறையோடு தங்க நிறத்தில் மாப்பிள்ளை வரும்போது என்ன செய்ய முடியும். ரேவதியின் சந்தோஷம்தானே முக்கியம். வீட்டிலிருப்பவர்கள் நினைத்தது போலவே அவனும் அவளுக்காகவே தான் இந்தத் தியாகத்தைச் செய்ய வேண்டுமென்று முடிவு செய்து விட்டான். பெரும்பாலான நேரங்களில் நாகப்பன் வீட்டில்தான் வரதனுக்குச் சாப்பாடு. ரேவதியும் மாமா, நல்லா அள்ளிச் சாப்பிடுங்க மாமா என்று அருகிலேயே அமர்ந்து இருவருக்கும் பரிமாறுவாள். சிரிப்பும், கும்மாளமுமாகத்தான் இருந்தது வீடு. ஆனாலும் நாலு வருஷமாகியும் குழந்தை இல்லாமலிருந்தது ஒரு சிறிய உறுத்தலாக இருந்தது நாகப்பனின் மனதில். இப்பொது அந்த உறுத்தல் நீங்கி விட்டது. அதைப் பெரிய உறுத்தல் ஒன்று பிரதியிட்டு உள்ளே அரித்துத் தின்ன ஆரம்பித்து விட்டது. இந்தச் சனியன் பிடிச்ச நினைப்பைத் தொலைக்கத்தானே குடிக்கிறேன் என்று நினைத்துக் கொண்டார் நாகப்பன். அப்படியே நான் செத்தாலும் அது குடியால் இருக்காது என்றும் நினைத்துக் கொண்டார்.

எல்லாம் போனவருஷம் அக்கா பெண் வயதுக்கு வந்த விஷேஷத்தின் போது ஆரம்பித்தது. எல்லாரும் மண்டபத்தில் இருந்தார்கள். நாகப்பன் பந்தி விரிக்க ஜமுக்காளம் பற்றவில்லை என்பதற்காக வீட்டில் இருந்து ஜமுக்காளம் எடுப்பதற்காக வந்தார். அடுப்படியில் ரேவதி மாராப்பு விலகி நின்றிருக்க, வரதன் ஸ்டூலிலிருந்து இறங்கிக் கொண்டிருந்தான். நாகப்பனுக்கு இந்தக் காட்சிக்கு எப்படி எதிர்வினையாற்றுவதென்றே தெரியவில்லை. இருவரும் நாகப்பனைப் பார்த்ததும் சட்டென்று விலகினார்கள். அடுப்படி அட்டாலியில் வைக்கப்பட்டிருந்த பலகாரங்களை எடுப்பதற்காகத்தான் வரதன் வந்ததாகவும், அது எங்கிருக்கிறதென்று தெரியாமல் ரேவதியை வந்து எடுத்துத் தரச்சொல்லி அழைத்தபோது அவள் அவசரமாக வந்ததாகவும், அடுப்படிக் கதவின் தாழ்ப்பாளில் சிக்கித்தான் முந்தானை விலகியதாகவும் அவர்கள் இருவரும் மெதுவாக, நேரம் எடுத்துக்கொண்டு சொல்லியும் சொல்லாமல் அவர் கேட்க விரும்பாவிட்டாலும் விளக்கியிருந்தார்கள். நாகப்பனுக்கு இந்தச் சம்பவம் ஒரு பொருட்டாக இல்லை. அவருக்கு வரதன் மேல் அதீத நம்பிக்கை இருந்தது. நானொண்ணும் துரியோதனன் இல்லியே, எடுக்கவோ கோக்கவோன்னு கேட்க என்று கிண்டலடித்துக் கூடச் சிரித்தார். ஆனால் இந்த விஷயத்தில் அவர் துரியோதனன் மாதிரி நடந்து கொண்ட மாதிரிதான் பட்டது.

ஆனால் இரண்டு மாதம் கழித்து ரேவதி உண்டான பிறகுதான் வினை ஆரம்பித்தது. மகிழ்ச்சியில் துள்ளாட்டம் போடமுடியவில்லை நாகப்பனுக்கு. ரேவதி அவரிடம் விஷயத்தைச் சொன்னதும் ஒரு நிமிடம் உறைந்துபோய் நின்றவர் அதற்கப்புறம் சட்டென்று வீட்டை விட்டு வெளியேறினார். நேரே வரதன் வீட்டுக்குப் போய் காரணம் சொல்லாமல் அவனொடு கட்டிப்புரண்டிருக்கிறார். தெருவே நின்று வேடிக்கை பார்க்க இருவரும் தெருவில் உருண்டார்கள். காரணம் சொல்லவில்லை. விளக்கம் ஏதும் தரவில்லை. அன்றிலிருந்து வரதனுக்கு அவர் பரம வைரியாகிவிட்டார். இவர்கள் திடீர் விரோதத்துக்குக் காரணமாக மக்கள் மத்தியில் பல்வேறு கதைகள் நிலவின. நிலம் வாங்கித் தருவதாக நாகப்பனிடம் காசை வாங்கிக் கொண்டு வரதன் ஏமாற்றி விட்டதாகவோ, நாகப்பன் பட்டறையில் இருந்து வரதன் நூலைத் திருடி விற்று வெகுநாட்கள் பிழைத்து வந்ததாகவோ, நாகப்பன் அடிக்கடி தறிச்சாமான் வாங்கச் செல்கிற வீரப்ப நாயக்கனூரில் வட்டிக்கடைக்காரர் மகள் ஒருத்தியை வைத்துக் கொண்டிருந்து அதை வரதன் தட்டிக் கேட்டதாகவோ பேசிக் கொண்டார்கள். வரதனுக்கும், ரேவதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதை நாகப்பன் கண்டுபிடித்து விட்டதாகவும் கூடப் பேசிக்கொண்டார்கள். முதற்சொன்ன காரணங்களையெல்லாம் கேட்டு நாகப்பன் சிரித்துக் கொண்டாலும், கடைசிக் காரணத்தை அவரால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. புறந்தள்ளி விடவும் முடியவில்லை.

ரேவதி கர்ப்பத்துக்கு வரதன்தான் காரணம் என்று அவரால் அவர் மனசுக்கே நம்பவைப்பது கடினமாக இருந்தது. இருந்தாலும் அதுதான் உண்மையாக இருக்கும் என்று அவர் திடமாக நம்பினார். இதற்கு முன்பு நிகழ்ந்த நிகழ்வுகள் எல்லாம் அங்கங்கே கோர்க்கப்பட்டு கோர்வையாக மனதில் ஓர் சித்திரம் தோன்றி அவர் நம்பிக்கைக்கு வலுவூட்டியது. தன்னால் குழந்தைப் பேறு தரமுடியவில்லை என்று நினைக்க நினைக்க தலை தீப்பற்றிக் கொண்டதைப் போல எரிகிறது. அந்த நெருப்பை அணைக்கவே உள்ளே பிராந்தியும், விஸ்கியும் இறங்குகிறது. இப்படியே ஆறுமாதம் அவர் குடித்த குடி பரம்பரைக் குடிகாரன் குடிப்பதற்கு ஐந்து வருஷம் ஆகியிருக்கும். ரேவதியிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். வீட்டுக்குச் செல்வதே அரிதாகி விட்டது. வீட்டுக்குப் போனாலும் அம்மாவைத்தான் சமைக்கச் சொல்லி இரண்டு வாய் சாப்பிடுவார். திடீரென்று வெறி வந்தாற்போல் ரேவதி தலைமயிரைப் பிடித்து இழுத்து முகமெல்லாம் அறைவார். அவள் சத்தம் வராமல் அழுவாள். காறித்துப்புவார். எந்த வசைச்சொல்லும் அவர் வாயிலிருந்து வெளிப்படுத்துவதில்லை. எதையும் அவர் யாரிடமும் சொல்வதுமில்லை. இந்த நாகப்பன் இப்படி ஆயிட்டானே என்று தெரு மக்கள் எல்லாரும் வருந்தினார்கள். அவர் நிம்மதியைக் கெடுத்த ரேவதியை வசைபாடினார்கள். வரதன் அந்தத் தெருப்பக்கம் தலைகாட்டுவதைக் கூட நிறுத்தி விட்டான்.

பசங்கள் எல்லாரும் கும்பலாக வந்து விட்டார்கள். தலைவரே, இன்னும் ரெண்டு வாரத்துல நீ எந்திரிச்சு நடமாட ஆரம்பிச்சுடுவே, நீ வந்தாதான் களை கட்டும் என்றான் ஒருத்தன். எல்லாரும் அதை ஆமோதிக்கிற மாதிரி பேசிக்கொண்டார்கள். வரதன் அவர்களைப் பார்த்து பலவீனமாகப் புன்னகைத்தார். இந்தப் பயலுகளுக்குத்தான் நம்ம மேல எவ்வளவு பாசம் என்று நினைத்துக் கொண்டார். முருகானந்தம் எப்போ வருவான் என்று கேட்டார். பசங்கள் மத்தியில் பேச்சு இல்லை. என்னடா என்றார். தலைவரே, அவன் வரமாட்டேங்கிறான் என்றார்கள். அவனுக்கு ஃபோனைப் போட்டு உடனே வரச் சொல்லுடா என்றார். மனமேயின்றி முருகானந்தத்தைக் கூப்பிட்டார்கள். வரும்போது மருந்து கொண்டு வரச் சொல் அவனை என்றார். இன்னைக்குத் திங்கட்கிழமை நல்ல நாள்தான் என்றார். முருகானந்ததை அவர்கள் கூப்பிட்டுக் கொண்டிருக்கையில்தான் அவர்கள் மத்தியில் வரதனும் நின்றிருப்பதை நாகப்பன் கவனித்தார். இவன் எதுக்கு இங்கே வந்தான் என்று கேட்க நினைத்துப் பிறகு பேசாமலிருந்து விட்டார்.

முருகானந்தம் வந்துவிட்டான். ஆனாலும் அவனால் முடியாதென்று பிடிவாதமாக மறுத்துவிட்டான். நாடி பிடித்துத் தருகிறேன், யாராவது போட்டுக் கொள்ளுங்கள், என்னால் இந்த பாவகாரியத்தைச் செய்ய முடியாது. அதுவும் தலைவருக்கு எப்படி என் கையால் ஊசி போடுவதென்று கேட்டான். யாரும் ஊசி போட முன்வரவில்லை. எல்லாரும் தயங்கித் தயங்கி நின்று கொண்டு குமுறினார்கள். நாகப்பன், டேய், எவனாவது ஒருத்தன் போடுங்கடா உங்க கையால போய்ச் சேர்ந்தா எனக்குப் புண்ணியந்தாண்டா என்றார். யாரும் அசையவில்லை. எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்க வரதன் சட்டென்று முன்னேறி முருகானந்தத்திடமிருந்து ஊசியை வாங்கி நாடி காட்டு என்றான். நாகப்பனின் முகம் பார்க்கவில்லை. நாகப்பன் கத்தப்போகிறான் என்று எல்லாரும் பயந்தார்கள். ஆனால் அவனோ அமைதி காத்தான். முருகனாந்தன் கதறிக்கொண்டே நாடி காட்ட வரதன் ஊசியைச் செலுத்தினான். நாகப்பன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கண்ணிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் துளிர்த்து வழிந்து காதை நனைத்தது.

– June 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *