சூரிய வம்சத்தில் தோன்றிய இக்ஷ்வாகுவின் மகன் மகாபிஷக். இவன், ஆயிரம் அசுவமேத யாகங்களை நடத்தியவன் ஆதலால், இந்திரனுக்கு நிகராக விளங்கினான்.
ஒரு முறை, பிரம்மலோகம் சென்றிருந்தான் மகாபிஷக். பிரம்மனின் சபையில் தேவர்கள் அனைவரும் கூடி இருந்தனர். கங்காதேவியும் இருந்தாள். அவளது மகிமையை எல்லோருக்கும் உணர்த்தும் விதம், ”பூலோக மாந்தர்களின் பாவங்களைப் போக்குபவள் இவள்” என்று புகழ்ந்தார் பிரம்மதேவன். அவையில் கூடியிருந்த அனைவரும் அவளை பெருமிதத்துடன் நோக்க… கங்கா தேவிக்கு, ‘தனக்கு நிகர் எவரும் இல்லை’ என்ற கர்வம் தலை தூக்கியது. பிரம்மதேவனும் இதை உணர்ந்தார்.
‘புனிதமானவர்களுக்குக் கர்வம் கூடாது. அதைக் களைய வேண்டும்’ என எண்ணினார் அவர். திடீரென, பலத்த காற்று வீச, கங்காதேவியின் மேலாடை பறந்து போனது. அவையில் வீற்றிருந்த மகாபிஷக் கங்கையின் அழகைக் கண்டு மயங்கினான். அதே நேரம், மகாபிஷக்கின் அழகில் கங்காதேவியும் மனதைப் பறிகொடுத்தாள்.
இருவரது நோக்கத்தையும் அறிந்த பிரம்மதேவன் கோபம் கொண்டார். ”பிரம்ம சபையில் காம உணர்வுகளுக்கு இடம் கிடையாது. சாதாரண மனிதர்களைப் போல இத்தகைய சிந்தனையில் மூழ்கியதால் நீங்கள் இருவரும் பூமியில் மனிதர் களாகப் பிறந்து தம்பதியாகி, சுக- துக்கங்களில் உழல்வீர்கள்!” என்று சபித்தார்.
தனது தவறை உணர்ந்த கங்காதேவி, பிரம்மனிடம் மன்னிப்பு வேண்டினாள். சற்று கோபம் தணிந்த பிரம்ம தேவன், ”மண்ணுலகில் சில காலம் இருந்து விட்டு, மீண்டும் தேவலோகம் வருவாய்!’ என்று அருளினார்.
பிரம்மதேவனின் சாபத்தின்படி, பிரதீபன் என்ற மன்னனுக்கு மகனாகப் பிறந்தான் மகாபிஷக். இவனுக்கு ‘சந்தனு’ என்று பெயரிட்டனர். இதே போல், கங்கா தேவியும் பூமியில் மனிதப் பிறப்பு எடுத்திருந்தாள்!
ஒரு நாள், மன்னன் பிரதீபன் காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கங்காதேவி, அவனின் வலது தொடையில் அமர்ந்து கொண்டாள்.
திடுக்கிட்டுக் கண் விழித்த மன்னனிடம், ”என்னை மனைவியாக ஏற்றுக் கொள்கிறீர்களா?” என்று கேட்டாள் கங்காதேவி. அறநெறி தவறாத பிரதீபன், அதிர்ந்துபோனார்!
”மனைவி என்பவள் இடது தொடையிலும், மகன், மகள் மற்றும் மருமகள் ஆகியோர் வலது தொடையிலும் அமர வேண்டும். எனது வலது தொடையில் அமர்ந்த உன்னை, மனைவியாக ஏற்க இயலாது. அதேநேரம் மருமகளாக ஏற்றுக் கொள்கிறேன்!” என்றார்.
இதைக் கேட்ட கங்காதேவி சட்டென்று அங்கிருந்து
மறைந்தாள். இதன் பிறகு, அரண்மனை திரும்பிய பிரதீபன், தன் மகன் சந்தனுவை அழைத்து, ”கங்கைக்
கரையில் அழகான பெண் ஒருத்தி இருக்கிறாள். அவளைச் சந்திக்க நேர்ந்தால், அவளையே மணம் புரிந்துகொள்” என்று தெரிவித்தார்.
காலங்கள் ஓடின. மன்னன் பிரதீபன் இறந்த பின் சந்தனு அரியணை ஏறினான். இந்த நிலையில் ஒரு நாள், கங்காதேவியை அவன் சந்திக்க நேர்ந்தது. அவளது அழகில் மயங்கிய சந்தனு, கங்காதேவியிடம் தனது விருப்பத்தைத் தெரிவித்து, ”என்னை மணக்கச் சம்மதமா?” எனக் கேட்டான்.
கங்காதேவியும் சம்மதித்தாள். கூடவே நிபந்தனை ஒன்றும் விதித் தாள்: ”திருமணத்துக்குப் பிறகு, நான் எப்படிப்பட்ட பாதகச் செயலைச் செய்தாலும் நீங்கள் என்னைத் தடுக்கக் கூடாது. மீறினால், மறு கணமே தங்களை விட்டு நான் பிரிந்து விடுவேன்!” என்றாள்.
இதை சந்தனு ஏற்றுக்கொண்டான். இருவரும் திருமணம் முடித்து, மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். இதையடுத்து கங்கா தேவி கருவுற்றாள். மாதங்கள் கழிந்தன. குழந்தையும் பிறந்தது!
ஆனால், கங்காதேவி அந்தக் குழந்தையைக் கங்கை நதியில் வீசியெறிந்தாள். இதேபோல், அடுத்தடுத்து பிறந்த ஆறு குழந்தைகளையும் நதியில் வீசி எறிந்தாள். கங்கா தேவியின் நிபந்தனையால் வாயடைத்து நின்ற சந்தனு, அவளது கொடூரச் செயல்களால் கவலையுற்றான்.
இந்த நிலையில், கங்காதேவிக்கு எட்டாவது குழந்தை பிறந்தது. இந்த முறை குழந்தையை எடுத்துக் கொண்டு கிளம்பியவளை, சந்தனு தடுத்து நிறுத்தினான்.
”ஏழு குழந்தைகளைக் கொன்ற பாதகியே! இந்தக் குழந்தையையாவது விட்டு விடு!’ என்று கதறினான்.
உடனே கங்காதேவி, ”நிபந்தனையை மீறி விட்டீர்கள். தவிர, என்னையும் இகழ்ந்து பேசி விட்டீர்கள். இனி, உங்களுடன் வாழ மாட்டேன்” என்றவள், தான் குழந்தைகளைக் கொன்றதற்கான காரணத்தையும் அவனிடம் விவரித்தாள்.
”ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இளமை மாறாத அழகு வாய்ந்த பசு ஒன்று வசிஷ்டரிடம் இருந்தது. கேட்பதைக் கொடுக்கும் அந்தப் பசு, மகிமை வாய்ந்தது!
ஒரு முறை, வசிஷ்டரது ஆசிரமத்துக்கு அஷ்ட வசுக்கள் (தேவர்களில் ஒரு பிரிவினர்) வந்தனர். அவர்களில் ஒருவனின் மனைவி, ஆசிரமத்தில் இருந்த பசுவைக் கண்டாள். அந்தப் பசு தனக்கு வேண்டும் என்று கேட்டாள். உடனே அவளின் கணவனும் மற்ற வசுக்களும் தெய்விகப் பசுவைத் திருடிச் சென்றனர்.இதையறிந்த வசிஷ்டர் சினம் கொண்டார். ‘எட்டு பேரும் பூலோகத்தில் பிறக்கக் கடவது!’ என்று சபித்தார். பிறகு அவர்கள் மன்னிப்பு கேட்டதால், ‘உங்களில் ஏழு பேர் பிறந்ததும் இறந்து, விண்ணுலகம் வருவீர்கள். பசுவைத் திருடிய வசு, பிரம்மச்சாரியாகவே பல காலம் வாழ்வான்!’ என சாபத்தை மாற்றினார்.
அதன்படி, வசுக்கள் எனக்குக் குழந்தை யாகப் பிறந்தார்கள். அவர்களில் ஏழு பேர், பிறந்ததும் விண்ணுலகம் சென்றனர். இதோ இந்தக் குழந்தையே எட்டாவது வசு. இவனை நல்ல முறையில் வளர்த்து, உரிய வேளையில் உங்களிடம் ஒப்படைப்பேன்!” என்ற கங்காதேவி, தான் யார் என்பதையும் பிரம்மனின் சாபத்தையும் சந்தனுவிடம் விவரித்து விட்டு மறைந்தாள்!
அந்த எட்டாவது வசு, பின்னாளில் தேவ விரதன் என்ற பெயருடன் வளர்ந்து, பீஷ்மர் என்ற மகா புருஷனாகப் புகழ் பெற்றார்!
– எம்.எஸ். ருக்மணி தேசிகன், சென்னை-33 (செப்டம்பர் 2008)