ஊர்வசியின் சாப விமோசனம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: January 18, 2013
பார்வையிட்டோர்: 10,095 
 
 

சந்திர குல அரசர்களில் ஒருவர் புதன். இவரின் மகன் புரூரவன்; சிறந்த குணவான். மக்களின் நம்பிக்கையையும் பெரியோர்களது ஆசியையும் பெற்றவன்.

ஊர்வசியின் சாப விமோசனம்1ஒரு முறை, சாபத்தின் காரணமாக பூலோகத்தில் வசித்திருந்த ஊர்வசி எனும் தேவலோக மங்கை யைச் சந்தித்தான் புரூரவன். அவளின் பேரழகு புரூரவனைக் கவர்ந்தது. அவளிடம், ”உன்னை மணக்க விரும்புகிறேன்!” என்றான். ஊர்வசிக்கும் அதில் விருப்பம்தான். எனினும் மூன்று நிபந்தனைகள் விதித்தாள்.

”மன்னா… நான் இரு ஆடுகளை என் குழந்தைகளாகக் கருதி வளர்க்கிறேன். அவை, எப்போதும் எனது படுக்கை அறையிலேயே இருக்க வேண்டும்; அவற்றை, எவரும் கவர்ந்து விடாமல் நீங்கள் பாதுகாக்க வேண்டும்!

தாம்பத்தியம் அல்லாத தருணங்களில், தாங்கள் திகம்பரராக (ஆடைகள் இன்றி) என் கண்களில் படக் கூடாது! நான், நெய்யைத் தவிர, வேறு எதையும் உட்கொள்ள மாட்டேன். இந்த நிபந்தனைகளை ஏற்றால், உங்களுடன் வாழ்கிறேன்! இதில் ஒன்றை மீறினாலும் உங்களைப் பிரிவேன்” என்றாள் ஊர்வசி.

புரூரவன் ஒப்புக் கொள்ள… அவனை மணந்தாள் ஊர்வசி. 61 வருடங்கள் இனிதே கழிந்தன.

இந்த நிலையில், ஊர்வசி இல்லாமல் தேவலோகமே களை இழந்து விட்டதாகக் கருதிய விசுவாவசு என்ற கந்தர்வன், அவளை மீண்டும் தேவலோகத்துக்கே அழைத்து வர விரும்பினான். ‘எப்படியாவது… புரூரவன், ஊர்வசியின் நிபந்தனைகளை மீறும்படி செய்து விட்டால், அவளுக்கு சாப விமோசனம் கிடைக்கும்!’ என்று திட்டமிட்டான்.

ஒரு நாள் இரவு, ஊர்வசியின் ஆடுகளைக் கவர்ந்து சென் றான் விசுவாவசு. இதைக் கண்டு கோபம் கொண்ட புரூரவன், ஆடுகளை மீட்கும் அவசரத்தில்… படுக்கையில் படுத்திருந்த (திகம்பர) கோலத்திலேயே புறப்பட்டான். இதனால் அவன், இரு நிபந்தனைகளை மீற நேர்ந்தது! சாப விமோ சனம் பெற்ற ஊர்வசி தேவ லோகத்தை அடைந்தாள். ஊர்வசியை இழந்த புரூரவன், அவளது நினைவில் வாடினான். அவளது பெயரை புலம்பியபடி அலைந்தான்!

ஊர்வசியின் சாப விமோசனம்2இந்த நிலையில் ஒரு நாள்… தன் தோழியருடன் பூலோகம் வந்த ஊர்வசி, தாமரைக் குளம் ஒன்றில் நீராடிக் கொண்டிருந்தாள். அவளைக் கண்ட புரூரவன், தனது நிலைமையை விளக்கி தன்னுடன் வருமாறு ஊர்வசியை அழைத்தான். அவன் மீது இரக்கம் கொண்ட ஊர்வசி, வருடத்துக்கு ஒரு முறை அவனைச் சந்திப்பதாக வாக்குறுதி தந்தாள். அத்துடன்… ஏற்கெனவே, புரூரவன் மூலம் கருவுற்றிருந்த ஊர்வசி, ‘ஆயுசு’ என்ற மகனைப் பெற்றெடுத்து, அவனிடம் கொடுத்துச் சென்றாள்.

தன் மைந்தனுடன் புது வாழ்க்கையைத் துவங்கினான் புரூரவன். காலப்போக்கில், ஊர்வசி யின் ஆலோசனைப்படி யாகங்களும் விரதங்களும் மேற்கொண்டவன், ஊர்வசியுடன் நிரந்தரமாக சேர்ந்து வாழும் பாக்கியத்தையும் அடைந்தான். இவர்களுக்கு ஆபவசு, அமாவசு, விசுவாவசு, சுருத வாயு, சதாயு, அயுதாயு என்று ஆறு பிள்ளைகள் பிறந்தனர்.

இவர்களின் வம்சத்தில் வந்த ‘ஜன்ஹு’ என்பவன், கங்காதேவியை மகளாகப் பெறும் பேறு பெற்றதாக விஷ்ணு புராணம் கூறுகிறது.

– எம்.எஸ். ருக்மணிதேசிகன், சென்னை-33 (ஜூலை 2008)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *