விஷ் யு எ ஹாப்பி நியு இயர்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: November 27, 2016
பார்வையிட்டோர்: 12,897 
 

டிசம்பர் 31, கி.பி. 2100

‘உலகமே’ புது நூற்றாண்டின் பிறந்தநாளை வரவேற்கத் தயாராகிக் கொண்டிருந்தது. அதாவது கடந்த வெள்ளங்களில் சிக்கி இறக்காத சிலரும், வெயிலின் தாக்கத்திற்கு எதிர்ப்பு சக்தி கொண்ட சிலரும், காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படாத சிலரும்.

நான் வேலை செய்யும் அலுவலகத்தின் மூலம், ‘எவேகோ’ நட்சத்திர ஓட்டலில் புத்தாண்டு சிறப்புக் கொண்டாட்டத்திற்கான ஓர் அனுமதிச்சீட்டுக் கிடைத்ததால் நானும் இரவை நோக்கி ஆர்வமாகக் காத்திருந்தேன்.

ஆறு மணியடித்தது… என் டபுள் ரோட்டார் ஹோவர்காப்டரில் ‘எவேகோ’வை நோக்கிப்பறந்தேன். டிராபிக் அவ்வளவு மோசமில்லை. ஆனால் புத்தாண்டுக் குதூகலத்தில் இளைஞர்கள், தங்களின் காப்டரை 15௦களில் பறக்கவிட்டுப் பலரையும் கதிகலங்கவைத்துக்கொண்டு சென்றனர். சிக்னலில் ஒருவன் என் வண்டியைப்பார்த்து, ‘க்ரெக், இந்த மாடலெல்லாம், ம்யூசியத்தில் மட்டும்தான் பார்க்கலாம் என நினைத்தேன். ஃபண்ணி அவுட்டேட்டட் மெக்!’ என்று தன் பின்னிருக்கையில் அவனை இறுக்கமாகக் கட்டிகொண்டிருந்த பெண்ணிடம் கூறினான். இருவரும் என்னை ஏளனமாகப் பார்த்து சிரித்தது எனக்குக் கடும் கோபத்தை வரவழைத்தது. அனால் நான் பொதுவாக வம்பு சண்டைக்குப் போவதில்லை, வந்த சண்டைக்கும் போவதில்லை என்பதால், பல்லைக் கடித்துக்கொண்டேன். சிக்னல் வீழ்ந்து, அவன் வாகனம் வீரிட்டுப் பறந்தது.

கொஞ்ச தூரம் பறந்தேன். பில்லியனில் இருந்த அவனின் ஜி எஃப் சிரித்தது வெகு எரிச்சலாக இருந்தது. அவன் முகரைக்கு அழகான அவள். அந்த சம்பவத்திலிருந்து மீள ஒரு குளிர்பானம் அருந்தலாமா? சமீபத்தில் தென்பட்ட தானியங்கி ஃபுட் & ஏர் வெண்டாரிடம் சென்று, ஒரு ‘ஃபிஸ்’ மற்றும் ‘ஆக்சிஜன்’ ஒன்று… ஆர்டர் செய்தேன்.

இயந்திரம் ‘ஃபிஸ்.. ஒன்று ஆக்சிஜன் ஒன்று’ எனக்கூறி விஸ்ஸ்ஸ் என சத்தமிட்டது.

‘உங்கள் சிட்டிசன் எண்ணைக் கூறவும்.’

‘அ350மி319’ எனக்கூறி, என் கண்களை ஸ்கேனருக்குள் காட்ட, மீண்டும் விஸ்ஸ்ஸிட்டு குளிர்பானமும் ஆக்சிஜனும் வெளிவந்தன. இரண்டையும் கையில் எடுத்துக்கொண்டேன்.

பொருள் வாங்கியதற்கான எலெக்ட்ரானிக் பில் கைக்கணிணிக்கு அனுப்பப்பட்டதன் அடையாளமாக கையில் கட்டியிருந்த க்யூ-ட்ராக்கர் விறுவிறுத்தது.

‘சிட்விக்’கில் பொருள் வாங்கியதற்கு நன்றி. புத்தாண்டு முன்வாழ்த்துக்கள். மீண்டும் வ…

அதற்கு பதிலளிக்க நேரமில்லாததால் நகர்ந்தேன். கேனைத்திறந்து ஆக்சிஜன் டேங்கிற்குள் புது ஆக்சிஜனை ஏற்றினேன். நுரையீரலுக்கு இதம். ஹா… நிம்மதியான உணர்வு. காப்டரில் உட்கார்ந்துகொண்டு குளிர்பானத்தை ருசித்தபடி ‘எவேகோ’ வந்தடைந்தேன்.

தெருவெங்கும் விழாக்கோலம். சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் புத்தாண்டு பிறக்கப்போகும் மகிழ்ச்சியில் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டு இருந்தனர். அரசாங்கத்தால் நிர்மானிக்கப்பட்ட பிரம்மாண்ட வி.ஆர் விளம்பரப் பலகைகளில் பிரதமர் அனைத்து மக்களுக்கும் வாழ்த்து தெரிவித்துக்கொண்டிருந்தார். நடு நடுவே, புத்தாண்டின் போது பொதுமக்கள் கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள் ஒளி ஒலித்தன.

ஹோட்டலின் 66வது மாடியின் வாசலில் காப்டரை ஒப்படைத்துவிட்டு, நுழைவாயிலில் ஸ்கேனரில் கண்களைக் காண்பித்துவிட்டு உள்ளே சென்றேன். ஒரு ரோபோட் என்னிடம் வந்து, ‘இங்கே காற்று புதுப்பியுள்ளதால் உங்களின் பிராண வாயு செயலியைத் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்றது. மூக்கிலிருந்து கழட்டி அதனிடம் அளித்தேன். ‘செல்லும்போது நுழைவிடத்தில் செயலி எண்ணைக் கூறி பெற்றுக்கொள்ளவும் எனக்கூறி மறைந்தது.

கொண்டாட்டம் நடந்துகொண்டிருக்கும் அறையில் நுழைந்தேன். மிகவும் சத்தமாக ஒரு ரோபோட் டி.ஜே. மெட்டாலிக்கா போட்டுக்கொண்டிருந்தது. ஆண்கள், பெண்கள், ரோபோட்கள் என அனைவரும் தங்களை மறந்து ஆடிக்கொண்டிருந்தார்கள். நானும் ஒரு ‘அல்கோ’வைக் (ஆல்கஹால்) கையில் பற்றிக் கொண்டாட்டத்தில் புகுந்தேன். பண்ணிரண்டு மணிக்குப் பக்கத்தில் செல்ல செல்ல ஆட்டம் களைகட்டியது. பலரும் அன்றாட வாழ்விலிருந்து விடுபட்டு தங்களின் கோபம், துன்பம், ஆடைகள் என அனைத்தையும் தூரப்போட்டுவிட்டு மெய்மறந்து கொண்டாடிக்கொண்டிருந்தனர்.

அதில் ஒரு பெண், அழகான, கொஞ்சம் அதிகமாகவே, என்னிடம் வந்து: ‘ஹேயோ’…

பொதுவாக என்னிடம் பெண்கள் பேசுவது குறைவு. டேட்டிங் சென்றது கிடையாது. ஏன்? அரசாங்க சேவையான ஆர்-டேட்டிங் எனப்படும் ரோபோட் அழகிகளிடம்?.. இல்லை. பணம் செலவழிக்க எனக்குப் பிடிக்கவில்லை.

அவளிடம், என்னசொல்வது எனத் தெரியாமல், ‘ஹேயோ, புத்தாண்டு வாழ்த்துக்கள்’ என்றேன்.

அவள் ஆடிக்கொண்டே, ‘உங்களுக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் சென்னையா? என்றாள்’.

‘ஆம். நீங்கள்?’

‘நான் திருச்சி. புத்தாண்டுக்காக இன்று வந்துள்ளேன். சேர்ந்து ஆடலாமா?’

‘தாரளமாக! அவளுடன் சேர்ந்து ஆடினேன். மது, அழகிய மாது, மாலைப் பொழுது – மயங்கக் காரணங்கள் நிறைய இருந்தன.’

புத்தாண்டின் கவுண்டவுன் ஆரம்பித்தது. ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று….

‘ஹாய் எவ்ரிபடி, விஷ் யூ எ ஹாப்பி நியூ இயர்’ என அருகப்பழயதான ஒரு சினிமாப் பாடல் நியு இயர் வாழ்த்தினது. ஜோடிகள் இடைவெளியில்லாமல் கட்டிக்கொண்டு முத்தமிட்டுக்கொண்டனர். பலரும் ஹா ஊ என கத்தி உற்சாகமாக வாழ்த்துக்களை ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டனர்.

‘என்ன வழக்கம் இது? எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்தப் பழைய பாடல்தான் புத்தாண்டு அன்று முதல் பாட்டாக ஒலிக்கவேண்டுமா?’ என்றாள்.

நானும், ‘ஆம் வேற பாட்டுக்கென்ன பஞ்சமா. வருடா வருடம் இதைப்போட்டு இதை ஒரு புது வருடக் குருட்டு சம்பிரதாயம் ஆக்கிவிட்டார்கள். யு நோ வாட்? இது கிட்டத்தட்ட 120 ஆண்டுகள் பழமையான பாடல். நாயகன் டூ வீல்டு லேண்ட் ஆட்டோமோட்டிவை ஓட்டிவந்து நியு இயர் வாழ்த்து கூறுவார். ஒரு கண்ணாடித்திரையைக் கூட உடைப்பார். நல்ல தமாஷாக இருக்கும்.’

அவள், ‘ஹா ஹா ஹா. உனக்கு நிறைய விஷயம் தெரிந்திருகிறதே!’ என ஆச்சர்யப்பட்டாள்.

என் கன்னம் சிவந்தது. ‘ஹி ஹி. நன்றி. அந்த ஹீரோ பெயர் கூட… ஹ. கம்… கம்லாவோ?…’

‘பரவாயில்லை விடு. பை தி வே, உன் பெயர் என்ன? கேட்க மறந்துவிட்டேன். நான் ‘கியோ.’’

‘என் பெயர் ஜீத்ரீ’

‘ஜீத்ரீ, எங்காவது வெளியில் செல்லலாமா? இங்கு இருப்பது எனக்குக் கொஞ்சம் அன்னீசியாக உள்ளது.’

நானே எப்படி கேட்பது எனத் தயங்கியிருந்தேன். நன்றி கியோ.

‘கண்டிப்பாக! ஒரே இரைச்சலாக உள்ளது இங்கே. வா…’ அவசரமாக வாயிலில் ஏர் மாஸ்க் எண்ணைக் கூறி, வாங்கி அணிந்துகொண்டேன். வெளியே வந்தோம்.

‘நீ எப்படி வந்தாய்? வாகனம்?’

‘நான் ஏர் பூலிங்கில் வந்தேன் ஜீத்ரீ’

‘நல்லது, என் காப்டரில் செல்லலாம் என்றேன். உன் ஆக்சிஜன் மாஸ்க் எங்கே?’

‘நான் மாஸ்க் போட்டுக்கொள்வதில்லை. இந்த நச்சுத்தன்மையெல்லாம் என்னை ஒன்றும் செய்யாது. புத்தாண்டுக்காக அரசு இன்று அப்சர்பர்களை அதிக நேரம் இயக்குகின்றது. தவிர பல பில்லியன் காலன் ஆக்சிஜனும் இன்று டோமிற்குள் விடப்பட்டுள்ளது. செய்திகள் கேக்கலையா?

‘ஹி ஹி, இல்லை..’.

சீடியூப் சப்ஸ்கிரைப் செய்திருந்ததால் இன்று புத்தாண்டு பற்றி அந்தப் பழைய காணொளி வந்தது. முதலில் ஒரு செய்தி சேனலுக்கும் பதிந்துகொள்ள வேண்டும்!

காப்டரில் பறந்துகொண்டிருந்தோம். எனக்கு உடம்பெல்லாம் ‘ஜிவ்’வென்றிருந்தது. முதன்முறையாக ஒரு பெண்ணோடு தனியாக… அவளின் தேகம் என் பின்புறம் உரசிக்கொண்டிருந்தது. என் ரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸை மாற்றப்போபவள் இவள்தானா?

ஒரு தனிமையான உணவு விடுதிக்கு சென்று உணவருந்தினோம். மிகச்சீரான பல்வரிசை, பயோ லூமிநெசன்ட் வெளிச்சத்தில் பக்கத்தில் பார்க்கும்போது இன்னும் அழகாகவே இருந்தாள். அவளை இம்ப்ரெஸ் செய்வது இப்போது மிகமுக்கியமாதலால், ஏ ஜோக்ஸ், குட்டிக்கதை, அறிவியல் கட்டுரைகள், காமத்துப்பால் என அனைத்தையும் பிரயோகித்தேன்.

அனைத்திற்கும் பதில் ‘களுக்’ என்ற சிரிப்பு. நிறைய பேசினோம், சிரித்தோம், இடையிடையில் தெரியாமல் படுவதுபோல் அவள் கையைத்தொட்டேன். சாப்பிட்டுவிட்டு காப்டரில் ஏறினோம்.

‘எங்கு செல்லலாம் கியோ?’

‘காப்டரை இறக்கிவிட்டு கொஞ்ச தூரம் நடக்கலாமா?’

‘கண்டிப்பாக’.

தனியாக இருப்பதால், அதுநடக்கும் பட்சத்தில் இந்த இடைஞ்சல் எதற்கென ஆக்சிஜன் மாஸ்கை கழற்றி காப்டரில் வைத்தேன்.

நள்ளிரவு. சற்று நேரம் மெளனமாக நடந்தோம். என்னதான் கார்பன் அப்சர்பர்கள் இரவில் இயங்கினாலும், மூச்சு விடும்போது தொண்டை கரகரத்தது.

ஓரிடத்தில் நின்றோம். ‘ஹ, கியோ!’

‘யெப்?’

மெதுவாக அவள் கைகளைப் பற்றினேன். அவளிடமிருந்து எந்த எதிர்ப்புமில்லை. ஒரு இடத்தில் நின்று அவள் இடையைப்பற்றி என் பக்கம் திருப்பினேன். கிட்டத்தட்ட அவள் இதழ்களிடம் நெருங்கும்போது…

‘ஒரு நிமிஷம் ஜீத்ரீ’…..

கொஞ்சம் அளவுக்கு மீறி போய்விட்டேனா?.. லேசாக வியர்த்தது.

‘அங்கே ஒரு கேமரா உள்ளது. சற்றுதள்ளிப் போகலாமா?’

அப்பாடா!….. கொஞ்சதூரம் நடந்து சற்றே இருளான சந்து ஒன்றினுள் நுழைந்தோம். ஒரு ஆள் ஆட்டோமேட்டன்கள் நடமாட்டமுமில்லை.

அவள் இரு கைகளையும் என் இரு கைகளால் பற்றி… நேரே அவள் வாயைக் கவ்வ… என் கைகளில் பயங்கரமான அழுத்தத்தை உணர்ந்தேன்.

‘கியோ, ஏன் இப்படி என் கைகளை முறுக்குகிறாய்? ஆஆஆ!?’

திடீரென என் மர்மஸ்தானத்தில் விழுந்த அடியால் நிலைகுலைந்தேன். கீழே மண்டியிட்ட எனக்கு, மண்டையில் ஓங்கி ஒரு அடி. என் வலது கையைப் பிடித்துத் திருகி ஒரு சுவரின்மேல் என் தலையை வைத்து அழுத்தினாள். எனக்கு மயக்கமாய் இருந்தது….

‘உன் சிட்டிசன் நம்பரைச் சொல்.’ அவள் குரலில் அதட்டலோ கோபமோ இல்லை. அதே அன்பான குரல்.

‘கியோ… நீ என்ன செய்கி..?’ பேசி முடிப்பதற்குள் அடி வயிற்றில் ஒரு மரண உதை.

‘நம்பர்?’

‘ஆஆஆ…. அ350மி319…. ஆஆ….’

என் ஒரு கண்ணை பலவந்தமாய் திறந்து கையடக்க ஸ்கேனர் ஒன்றால் அதை ஓத்தி எடுத்தாள். பின் ஒரு உக்ரமான உதை. சாலையோரத்தில் சுருண்டு விழுந்தேன்.

காப்டரின் ‘கடகட’ சத்தம்போல் கேட்டது. அரைகுறையாக கண் விழித்து தலை நிமிர்ந்து பார்த்தேன்.

‘ஜீத்ரீ, நீ நல்ல பையன். அதிகம் தொந்தரவு கொடுக்கவில்லை. உன் புத்தாண்டு பரிசுக்கு நன்றி. அப்புறம் அந்தப் புத்தாண்டுப் பாட்டில் வரும் ஹீரோவின் பெயர் கம்லா அல்ல. கமலஹாசன். விஷ் யு எ ஹாப்பி நியு இயர்’… என்னுடைய காப்டரில் பறந்துகொண்டிருந்தாள்.

கையில் டிராக்கர் ‘பீங்க் பீங்க்’: ‘உங்கள் கணக்கில் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்துவிட்டீர்கள். ஓவர்டிராஃப்ட் லிமிட்டைத் தாண்டுவது பரிந்துரைக்கப்படுவதன்று.’

வலியில் உடம்பை அசைக்கமுடியவில்லை.

இன்ஸ்யூரன்ஸ் க்லெய்ம் கிடைக்க சில வாரங்கள் ஆகலாம். ஆனால் ஆக்சிஜன் மாஸ்க் இல்லையென்றால் சிலமணி நேரத்தில் மரணம்தான்.

தூரத்தில் ஒரு கட்டடத்தின் க்யூ-விளம்பரப்பலகை புத்தாண்டு அன்று கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகளை ஒலித்துக்கொண்டிருந்தது மெல்லியதாகக் கேட்டது: ‘மக்கள் அனைவரும் பாதுகாப்பாக புத்தாண்டைக் கொண்டாடுமாறு அரசு கேட்டுக்கொள்கிறது. யாருமற்ற இடத்தில் அந்நியர்கள் உதவி கேட்டாலோ அல்லது இன்ஸ்டன்ட் டேட்டிங் செல்லலாம் எனத் தெரியாதவர்கள் அழைத்தாலோ, ஏமாறாதீர்கள். அவை வழிப்பறி செய்யும் ரோக் ரோபாட்டுகளாக இருக்கலாம். விழிப்புணர்வு அவசியம்.’

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *