கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: December 17, 2016
பார்வையிட்டோர்: 16,521 
 

சவிதா பாலாவை சந்தேகப்பட்டதில்தான் எல்லாமே ஆரம்பித்தது.

எந்நேரமும் ஃபோனை நோண்டிக் கொண்டே இருந்தான். மறைத்து மறைத்து அதைப் படிப்பதும், ரிப்ளை செய்வதும், திடீரென ராத்திரி வெடுக்கென விழித்து போர்வைக்குள் வைத்து ஃபோனை ஆன் பண்ணிக் கொள்வதும் சந்தேகத்தைக் கிளப்பத்தான் செய்யும்.

ஐந்து வருஷமாய்க் காதலித்த போது அவன் அனுப்பிய குறும்பான குறுஞ்செய்திகள அத்தனையும் அவளுக்கு ஞாபகத்துக்கு வந்து பதற வைத்தன. அந்தக் குறும்புத்தனத்துக்கு எந்தப் பெண்ணும் விழுந்து விடுவாள்.

அவள் சமைக்கும் சாப்பாட்டைக் கூட முன்பு போல் ருசித்து ரசிப்பதில்லை.

வாரத்தின் எல்லா நாட்களூம் வீட்டிலிருந்து வேலை பார்ப்பதால் அவள் ஆபிஸ் போன பின்பு அவனே ஏதோ சமைத்து சாப்பிட்டுக் கொள்கிறான் என்று கண்டு பிடித்தாள். சில சமயம் கவிச்ச வாடை கூட வருவதாய்ப் பட்டது.

எவளாவது அசைவப் பட்சிணியிடம் மனதைப் பறி கொடுத்து விட்டானா?

ஒரு நாள் அவனுடைய ஃபோனை அவனுக்குத் தெரியாமல் அன்லாக் செய்ய முயலும்போது கையும் களவுமாய்ப் பிடித்து விட்டான்.

இருவரும் காச் மூச்சென்று கத்திக் கொண்டார்கள். காதலித்த நாட்களில் அவளுக்குக் கோபம் வந்தால் ஒரு மெல்லிய புன்னகையோடு அவளையே உற்றுப் பார்த்து ரசிக்கும் அந்த பாலாவா இவன்? இப்படி எதிர்த்து சண்டை போடுகிறானே? சவிதாவுக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது.

“நீ என் கிட்டே எதையோ மறக்கிறேடா. இல்லேன்னா நான் ஏன் உன் ஃபோனை பார்க்கிற அளவுக்குப் போறேன். யார் அவள்ன்னு சொல்லு.”

“யார் அவளா?” அவன் திடுக்கிட்ட மாதிரிதான் தெரிந்தது. “வாட் நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங்?”

“லவ் பண்றவன்தான் மறைச்சு மறைச்சு ஃபோனைப் பார்ப்பான். யாராவது ஃபோனை எடுத்தா பதட்டமாவான். கொஞ்ச நேரம் ஃபோனைப் பார்க்கலைன்னா டென்ஷன் ஆயிடுவான். இந்த எல்லா அறிகுறிகளும் உன் கிட்டே இப்ப இருக்கு.”

கொஞ்சம் முகத்தில் நிம்மதி பரவ அவளைப் பார்த்தான் பாலா. “இப்ப எனக்குப் புரியுது. ரெண்டு மாசத்துக்கு முன்னால நான் ஒரு சீக்ரெட் க்ரூப்ல சேர்ந்தேன்.”

சவிதாவின் பதட்டம் அதிகமானது. “சீக்ரெட் க்ரூப்பா?”

“எஸ். இட்ஸ் அபவுட் பேலியோ.”

“பேலியோவா? என்ன அது? எனக்கு பயமா இருக்குடா. சீக்ரெட் க்ரூப்புங்கறே. புரியாத வார்த்தையெல்லாம் சொல்றே.”

“பேலியோங்கிறது ஒரு உணவு முறை. அவ்வளவுதான். நீ பயப்படற அளவுக்கு ஒண்ணுமில்லை சவிதா. அந்த ஃபேஸ்புக் க்ரூப்ல அதைப் பத்தி விளக்கமா சொல்றாங்க. என்ன சந்தேகம் கேட்டாலும் பதில் சொல்லுவாங்க.”

“ஓகே, அதை ஏன் என் கிட்டே நீ மறைக்கணும்? சீக்ரெட் க்ருப்புங்கறே. திருட்டுத்தனமா மெஸேஜ் பார்க்கிறே.”

“காரணம் இருக்கு. பேலியோங்கிறது குகை மனிதன் உணவு முறைங்கிறாங்க. குகையில் வசிச்ச மனிதர்கள் வேட்டையாடி சாப்பிட்டு வந்தாங்களே அப்ப அவங்க சாப்பிட்ட உணவு முறை. அசைவம்தான் அதிலே முக்கியம். பாரு இப்போ நான் சொல்லச் சொல்லவே உன் மூஞ்சி குமட்டற மாதிரி ஆயிட்டு வருது…”

சவிதா அழுது விடுவது போல் அவனைப் பார்த்துக் கேட்டாள். “நீ அசைவம் சாப்பிடுறியாடா? ஆடு மாடெல்லாம் வீட்ல சமைச்சியாடா? நம்ம வீட்ல சமைச்சியாடா?”

பாலா மவுனமாய்த் தலையாட்ட – ஒரு பெரும் விசும்பலோடு படுக்கையில் குப்புற விழுந்து முதுகு குலுங்க விசும்ப ஆரம்பித்தாள்.

அவளை சமாதானப்படுத்த அவன் எடுத்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை.

இப்போது டாக்டர் ராகவ்வின் க்ளினிக்கில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

சவிதா குமுறினாள். “டாக்டர், இந்த மடையனுக்கு நீங்களே எடுத்துச் சொல்லுங்க. இப்படி கொழுப்பு சாப்பிட்டா உடம்பு குறையாது. ஹார்ட் அட்டாக்தான் வரும்.”

பாலா மறுத்தான். “அப்படித்தான் நானும் முதல்ல நினைச்சேன். ஆனா நீ கார்ப்ஸ் கட் பண்ணினா உடம்பு கொழுப்பிலிருந்து எனர்ஜி எடுத்துக்கும். ஃபேட் உடம்பில் சேராது.”

“அதை நீ சொல்லாதேடா. டாக்டர் ராகவ் சொல்லட்டும்.”

“பேலியோ க்ரூப்லயே நிறைய டாக்டர்ஸ் இருக்காங்க. அவங்களே சொல்றாங்க.”

“டாக்டர் ராகவ் சொல்லட்டும். நீ அவரைப் பேச விடு,”

ராகவ் சாலமன் பாப்பையா மாதிரி இருவருக்கும் இடையில் சிக்கியிருந்தார்.

நிதானமாய்ச் சொன்னார். “பாலா சொல்றது உண்மைதான்ம்மா. அதிகமா மாமிச உணவு சாப்பிட்டு மாவுச்சத்தை நீக்கினா உடல் பருமன் குறைய வாய்ப்பிருக்கு.”

சவிதா அதிர்ச்சிப் பார்வையோடு, “டாக்டர் அமெரிக்காவில் படிச்ச நீங்களுமா இப்படிப் பேசறிங்க?”

“ஆனா… லாங் டெர்ம்ல இது எந்த அளவுக்கு நல்லதுன்னு இன்னும் யாராலும் தெளிவா சொல்ல முடியலை.”

ராகவ் கொஞ்சம் சப்போர்ட் தந்ததும் பாலாவுக்குத் தெம்பு வந்தது.

“சொல்லுங்க டாக்டர். நம்ம முன்னோர்கள் சாப்பிட்ட உணவு ஆரோக்கியமாத்தான் இருக்கணும். வேட்டையாடி வாழ்ந்த அவங்க எவ்வளவு ஆரோக்கியமா வலுவோட இருந்திருப்பாங்க. ஹார்ட் அட்டாக், டயாபடீஸ் எல்லாம் அப்ப இருந்துதா? நோ சான்ஸ்.”

சவிதா கோபமாய்க் குறுக்கிட்டாள். “என்னடா ஆதாரம்? அவங்களுக்கு ஹார்ட் அட்டாக் இல்லை, டயபடீஸ் இல்லைங்கிறதுக்கெல்லாம் என்ன ஆதாரம்? நீ ஏதோ சார்ட் போட்டு வெச்சிருக்கியே அதைத்தான் குகை மனிதர்கள் சாப்பிட்டாங்க அப்படிங்கிறதுக்கு என்ன ஆதாரம்? சொல்லுங்க டாக்டர், அதுக்கெல்லாம் ப்ரூஃப் இருக்கா?”

பாலாவே இப்போதும் குறுக்கிட்டான். “இப்படி மடத்தனமா ஆர்க்யூ பண்ணினா ஒண்ணுமே பதில் பேச முடியாது. வீ ஆர் டாக்கிங் அபவுட் லைஃப் ஸ்டைல் ஆஃப் தி பீப்பிள் ஹூ லிவ்டு தவ்சண்ட்ஸ் அண்ட் தவ்சண்ட்ஸ் ஆஃப் தி இயர்ஸ் எகோ. ஆதாரம் ஆதரரம்ன்னா குகை மனிதர்களை யாராச்சும் போய் நேரில் பார்த்தால்தான் உண்டு.”

சவிதா முடிவாய்ச் சொன்னாள். “ஆதாரம் இல்லாம என்னால இதெல்லாம் ஏத்துக்க முடியாது. ஒண்ணு இந்த பேலியோவை விடு. இல்லேன்னா என்னை விட்டுடு. டாக்டர் ஆபிஸ்ல இருந்து நேரா நாம வக்கீல் ஆபிஸுக்குப் போகலாம்.”

பாலா டென்ஷனில் கையை இறுக்கிக் கொண்டு அவளைப் பார்க்க – ராகவ் அவனை சமாதானப்படுத்தினார்.

“பாலா, கவலைப்படாதே. சவிதா, நீ சொல்றது சரிதான். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால நடந்த விஷயத்தை நேரில் பார்த்தால் ஒழிய யாரும் ஆணித்தரமா இதுதான் இப்படித்தான்னு சொல்லிட முடியாது. ரெண்டு பேரும் என் கூட அந்த ரூமுக்கு வாங்க.”

பக்கத்து அறைக்குள் நுழைந்து லைட் ஸ்விட்சைப் போட – இருவரும் திகைத்தார்கள்.

ஒரு பெரிய இயந்திரம்.

“டாக்டர்… இது…?” சவிதா துணுக்குற –

பாலா துள்ளிக் குதித்தான். “எனக்குத் தெரியுமே! பேக் டு தி ஃபியூச்சர்ல இருந்து நேத்து வந்த 24 வரைக்கும் எத்தனை படத்தில் பார்த்திருக்கேன். டைம் மெஷின்தானே டாக்டர்?”

“யூ ஆர் ரைட் பாலா. நீங்க ரெண்டு பேரும் இதில் ஏறி உக்காந்தா குகை மனிதர்கள் காலத்துக்குப் போயிடலாம். அவங்க என்ன சாப்பிட்டாங்கன்னு நேர்லயே பார்த்து முடிவு பண்ணிக்கலாம். என் கிட்டே பிரச்சனைன்னு வந்துட்ட உங்களுக்கு எப்படியாவது தீர்வு குடுக்கறதுதான் ஒரு டாக்டரா என்னோட கடமை.”

ராகவ் டைம் மெஷினுக்கு பாஸ் கோடு போட்டுக் கொடுக்க – நீங்கள் பல படங்களில் பார்த்த மாதிரியே டபார் என்று பெரிதாய் ஒரு வெடி வெடித்து புகையெல்லாம் அடங்கிய போது கற்கால வனாந்திரத்தில் ஒரு குகைக்கு அருகில் இருந்தார்கள்.

தூரத்து மரத்தடியில் ஒரு பெண் சிங்கம் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தது. அருகில் ஓர் ஆண் சிங்கம் இறந்த மானைக் கிழித்துக் குதறி சுவைத்துக் கொண்டிருந்தது.

“பார்த்தியா, சிங்கம் அசைவம் சாப்பிட்டு எவ்வளவு ஸ்லிம்மா இருக்கு.” என்றான் பாலா.

“ஷட்டப். வீ ஆர் ஹியர் டு நோ அபவுட் கேவ் மென். மனுஷங்களைப் பார்க்கணும்.”

அந்தக் காட்டு மிருகங்களின் பார்வையில் படாமல் குகைக்குள் நுழைந்து செல்ல – சரியாய் டின்னர் டயத்துக்குதான் வந்திருக்கிறார்கள்.

ஒரு கருங்கல் மேடை டைனிங் டேபிள் மாதிரி தீப்பந்த ஒளியில் தெரிய – தோலுடை அணிந்த கட்டுமஸ்தான ஆண்களும் பெண்களும் சுற்றி அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். எல்லார் வாயிலும் சீஸ். கருங்கல் மேடையில் பீட்ஸா, பர்க்ர், லெமன் ரைஸ், பீன்ஸ் பொரியல், மிளகாய் பஜ்ஜி, பாயாசம் எல்லாம் இருந்தது.

பாலா திடுக்கிட்டுப் போனான்.

சவிதா சிரித்தாள். “பார்த்தியாடா? ஆதாரத்தை நீயே பார்த்துக்கோ. குகை மனிதர்களும் பீட்ஸாதான் சாப்பிடறாங்க.”

பாலாவால் நம்பவே முடியவில்லை.

அரை மனதோடே சவிதாவிடம் தன் தோல்வியை ஒப்புக் கொண்டு அவளோடு அந்த இடத்திலிருந்து அகன்றான்.

குகையின் இருட்டில் அங்கே ஒரு டைம் மெஷின் நின்றிருந்ததை அவன் கவனிக்கவே இல்லை.

– 08 நவ 2016 (நன்றி: http://www.sathyarajkumar.com/)

Print Friendly, PDF & Email

1 thought on “பேலியோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *