இன்டெர்வியூ தொடங்கும் போது சியாரா கொஞ்சம் பதற்றமாய்த்தான் இருந்தாள். ஆனால் கடவுளின் கனிவான கண்களும் மென்மையான குரலும் அவள் பதற்றத்தை வெகுவாக குறைத்தது. கடவுள் சியாராவின் விண்ணப்பத்தை கவனமாகப் படித்துப் பார்த்துவிட்டு, “எங்கள் கலைத் துறையில் கிரியேட்டிவ் டைரக்டர் பதவிக்கு விண்ணப்பித்ததற்கு நன்றி. நீங்கள் நிறைய படித்திருக்கிறீர்கள். இந்த வேலைக்கு தேவையான எல்லா தகுதிகளும் உங்களிடம் இருக்கின்றன. ஆனாலும் உங்கள் வேலைத் திறனை நான் நேரிடையாக பார்க்க விரும்புகிறேன். உங்கள் கைத் திறமையை வெளிப்படுத்துவதற்கு நீங்கள் ஏதாவது ஒரு கலை வடிவத்தை இங்கேயே உருவாக்கி காட்ட முடியுமா?” என்று கேட்டார். சியாரா உடனே வேலையில் இறங்கினாள். முப்பதே நிமிடங்களில் அவள் மிகவும் அழகான ஒரு கலை வடிவத்தை உருவாக்கினாள். அதை பார்த்து விட்டு அசந்து போன கடவுள் சியாராவிற்கு அந்த இடத்திலேயே கிரியேட்டிவ் டைரக்டர் பதவியைக் கொடுத்தார்.
எல்லோரும் அலுவலகம் முடிந்து வீடு கிளம்பும் போது லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. அவர்கள் பேருந்து நிறுத்தத்தை அடையும் போது மழை முற்றிலுமாக நின்று வானம் தெளிந்திருந்தது. அந்த சமயம் மாலை வானத்தில் ஒரு அழகான வானவில் ஒன்று தோன்றியது. ஆனால் அது எப்போதும் தோன்றும் மற்ற வானவில்களைப் போல் இல்லாமல் மிகவும் புதுமையான வடிவத்தில் இருந்தது. ஏழு வண்ணங்களும் சேர்ந்து செதுக்கிய ஒரு அழகான கிளி ஒன்று தூர வானத்தில் அமர்ந்திருந்தது.