டார்ச் லைட்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 9,673 
 

“ஏண்டா பாஸ்கி.. போன் பண்ணா எடுக்க இவ்வளவு நேரமா? “

“இல்லை புரொபசர்.. டாய்லெட்ல இருந்தேன்.. சொல்லுங்கோ “

”எப்டிடா ஒருமாசம் லீவு நல்லா போச்சா “

“ஆச்சு … நாளைக்கி வந்து ஜாயின் பண்ணிடுவேன்.. அத ஞாபகப்படுத்தான் கூப்பிட்டேளா “

“இல்லைடா.. இது அதைவிட முக்கியம்.. காரணமாத்தான் உனக்கு ஒரு மாசம் லீவு கொடுத்து அனுப்பிச்சேன்.. ஆனா நான் சும்மா இல்லை.. ஒரு புது இன்வென்ஷன்.. நீ இன்னிக்கே ஜாயின் பண்ணிடு அதுவும் இன்னும் ஒரு மணி நேரத்தில… அதுவும் நாலு நாள் வெளியூர் போய் தங்கர மாதிரி ரெடியா வா.. நாம இன்ன்னிகு ஊட்டி போறோம்”

”புரொபசர்.. என்ன இந்த ஸ்பீடு.. ஊட்டி அது இதுன்றேளே .. விவரமா சொல்லுங்கோ .. “

“உங்கிட்ட சொல்லாம யார்கிட்ட சொல்லப் போறேன்.. எல்லாம் நேர்ல சொல்றேன்.. வரும் போது மறக்காம ஒரு பெரிய தோசைக்கல்.. கிரேன்ல இருககுமே ஸ்டீல் ரோப் அதுல ரெண்டு மீட்டர்.,, ஒரு கெட்டி பெட்ஷீட்.. ம்ம்ம் அப்புறம்.. இது போதும் வாங்கிண்டு வந்திடு”

சொன்னபடியே இந்த வஸ்துக்களை சேகரம் பண்ணிக்கொண்டு பாஸ்கியாகப்பட்ட பாஸ்கர் சடகோபன் எதிரில் ஒரு மணி நேரத்தில் ஆஜரானான்.

“என்னடா கிளம்பலாமா?”

”நீங்க ரொம்ப மோசம் புரொபசர்.. ஒரு விவரமும் சொல்ல மாட்டேங்கறேளே.. இந்த ப்ராஜக்டில் நான் கிடையாதா”

“பறக்காதேடா.. ஊட்டி வரை போக இன்னும் எத்தனை நாழியிருக்கு.. போறச்சே எல்லாம் விலாவரியா சொல்றேன்.. நாழியாறது .. இப்ப கிளம்பினாத்தான்.. கார்தால போக முடியும். நம்ம ரெண்டு பேரும் மாத்தி மாத்தி கார் ஓட்டலாம்”.

”அதான் கிளம்பி 100 கிலோ மீட்டர் பக்கம் வந்தாச்சே. இன்னும் நீங்க சொல்லலை”

“விட மாட்டியே… சரி இப்ப நான் கேக்றதுக்கு ஒவ்வொண்னா பதில் சொல்லு”
“கேளுங்கோ”

“உன் முடி ஏன் இப்படி ஆடறது”

“விளையாடறேளா.. 70 ல கார் ஸ்பீடா போறது அதான்”

“கார் ஸ்பீடா போனா உன் கேசம் ஏண்டா ஆடணும்”

“காத்தடிச்சா வேகமா அடிச்சா ஆடாதா.. புரொபசர்.. ஏன் கடிக்றேள்”

“சரியாச் சொன்னே.. இப்ப காரை நிறுத்தறேன் “

நிறுத்திவிட்டு பாண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன டார்ச் லைட் எடுத்தார்.. அதை உயிர்பித்து வெளிச்சத்தை பாஸ்கி முடி மேல் அடித்துவிட்டு ,

“இப்பவும்தான்.. லைட் உன் முடிமேல வேகமா அடிச்சது.. ஏன் ஆடலே..”

“இதென்ன பைத்தியக்காரத்தனம்.. சாரி புரொபசர் ..வாய் தவறிடுத்து.. லைட் எப்படி பொருள நகர்த்தும்.. இட் இஸ் நாட் அ மேட்டர். ஐ மீன்.. அது திடமோ, திரவமோ, வாயுவோ இல்லையே “

“கிட்டக்க வந்துட்டடா… இப்ப பிஸிக்ஸல மேட்டர்னா என்ன”

“ அதுக்கு வெயிட் இருக்கணும்.. இடத்தை அடைத்துக் கொள்ளும் குணாதிசயம் இருக்கணும்”

“பிரமாதம்டா… இப்ப காத்துக்கு வெயிட் இருக்றதால அது ஒரு வேகத்துல உம் மேல பட்டா. முடி, டிரஸ் எல்லாம் ஆடறது. சரியா. “

“ஆமாம்.. சரிதான்”

”இப்ப உம்மேல பட்ட லைட்டுக்கு வெயிட் அதாவது எடை இருந்தா அது உன்னை அசைக்குமா “”

”லைட்டுக்க்தான் வெயிட் கிடையாதே”

அதில்லைடா வெயிட் இருந்தா … என்னவாகும்”

“அசையும்… நிச்சயம் அசையும்”

“அதாண்டா கண்ணா என்னோட புது இன்வென்ஷன்.. எடை இருக்கிற வெளிச்சம்.. அதாவது அந்த மாதிரி எடையுடன் வெளிச்சம் தர ஒரு டார்ச் லைட், பல்பு.. ரெண்டும் கண்டுபிடிச்சிருக்கேன்.. அதை டெஸ்ட் பண்ணத்தான்.. இப்ப ஊட்டி போறோம்.”

பாஸ்கி ரொம்பவுமே பிரமித்தான்…

“புரொபசர்.. பிரில்லியண்ட்.. ஆனா லைட்டோட வேகம் ஒரு செகண்டுக்கே கிட்டத்தட்ட 2 லட்சம் மைல் ஆச்சே புரொபசர்.. அந்த வேகத்தில ஒரு சின்ன வெயிட் மேல பட்டாலே.. எல்லாம் சிதறிடுமே..”

“அதாண்டா பாஸ்கி சூட்சுமம்.. எல்லாம் ஊட்டில விவரமா சொல்றேன்.. இனிமே எல்லாம் பிராக்டிகல் விளக்கம் தான்”

விடிகாலை அந்த மலைப்பாதை ரொம்பவுமே குளிராக இருந்தது.. இருவருக்கும் இரவு முழுநேர கார்ப்பயணம் ரொம்பவுமே களைப்பைத் தந்தது.. கார் கொஞ்சம் கொஞ்சமாய் ஊர்ந்து மேலேறிக் கொண்டிருந்தது.

“புரொபசர்.. இது ஏதோ.. காட்டுப்பாதை மாதிரி தெரியறது.. இதுல ஏன் திருப்றேள்.. ”

“தெரிஞ்சுதாண்டா திருப்றேன்.. ஏன் இப்படி கத்றே.. ஊட்டி கிரவுடட் பிளேஸ்.. அங்க போய் இந்த லைட் வேகத்தில் பரிசோதனை செய்ய முடியுமா .. யோசிச்சுப் பாரு.. இப்படி ஆள் அரவம் இல்லாத வனாந்திரமா பார்த்து டெஸ்டெல்லாம் பண்ணிட்டு.. அப்புறமா.. ஊட்டி போறோம். அங்க கெஸ்ட் ஹவுஸ் புக் பண்ணிட்டேன்.. ஒரு பிரஸ் கான்பிரன்ஸ் இருக்கு.. அவாளெல்லாம் ஊட்டிக்கு மேல தொட்டபெட்டா போற வழியில இதே மாதிரி ஒரு இடத்துக்கு கூட்டிண்டு போய் டெமோ செஞ்சி காமிக்கப்போறோம்.. எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு”

“அது சரி.. ரொம்ப பிரிபேர்டாத்தான் இருக்கேள்.. ஆள் இல்லாத வனாந்திரம் சரி.. அரவம் இல்லைனு சொல்ல முடியாது..”

கொஞ்ச தூரத்திலேயே சடகோபன் கற்பனைக்கு ஈடு கொடுத்த ஒரு சின்ன வெட்ட வெளி.. அங்கிருந்து சடக்கென சரியும் பள்ளத்தாக்கு.. தூரத்தில் சின்ன சின்னதாய் மலைகள் தொடர்ச்சியாய்.. மலையை சுற்றி செல்லும் எந்தப் பாதையும் கண்ணுக்கு தெரியவில்லை..

“இந்த இடம்தாண்டா ஐடியல் பாஸ்கி.. டயம் கூட இப்ப ஆறரைதான் ஆச்சி.. இங்க ஜன நடமாட்டமே இருக்காதுனு நினைக்கிறேன்.. ஜஸ்ட் 30 நிமிஷம்.. ரெண்டு மூணுதரம் டெஸ்ட் பண்ணி அத ஹேண்டிகாம்ல் பதிஞ்சிண்டுட்டு புறப்பட வேண்டியதுதான்”

“முதல்ல அந்த டார்ச் லைட்ட கண்ல காட்டுங்கோ”

சடகோபன் காரின் டிக்கியிலிருந்து ஒரு பெட்டியை சர்வ ஜாக்கிரதையாக இறக்கினான். அதைத் திறந்து அதிலிருந்து துணிகளுக்கு மத்தியில் ஏறக்குறைய ஒளித்து வைக்கப்பட்ட அந்த விஷேஷ டார்ச்சை எடுத்தான்..

‘இதாண்டா அது.. “

“எங்க குடுங்கோ பாக்றேன்”’

“இரு அவசரப்படாதே.. இதுல நிறைய விஷயம்.. கவனிக்கனும்.. இந்த டார்சுக்குனு விஷேஷ பல்பு, ஒரு ரியோஸ்டாட். அப்புறம் ஷாக் அப்சார்ப் பண்ண ஒரு செட்டிங்”

“புரியற மாதிரி சொல்லுங்கோ”

“மண்டு .. லைட்டோட வேகத்தில இங்கேயிருந்து சந்திரனுக்கே ஒன்றை செகண்ட்ல போய்டலாம்.. சோ அந்த வேகத்துக்கு அதோட வெயிட் சும்மா ஒரு கிராம் இருந்தா கூட இந்த மலையைக் கூட பேர்த்து எடுத்துடும். அதுவும் இல்லாம எடையுள்ள ஒரு வஸ்து காத்தைக் கிழிச்சிண்டு அந்த வேகம் போனா ப்ரிக்‌ஷன்ல என்ன சூடு ஜெனரேட் ஆகும். இதெல்லாம் விட நியூட்டன் விதிப்படி இந்த வேகத்தில் ஒரு வஸ்து முன்னே போனா அதோட ஆப்போஸிட் ரியாக்‌ஷன் எப்படி இருக்கும்.. இதுக்குதான் இதெல்லாம்”

“எக்ஸலண்ட் புரொபசர்.. இப்போ இதெல்லாம் செட் பண்ணி இங்க அந்த டார்ச் லைட்டில் எடை தர வெளிச்சம் காமிக்கப் போறேள் அப்படித்தானே”

”ஆமாண்டா.. இந்த ரியோஸ்டாட்.. இந்த விஷேஷ டார்ச்/ பல்பிலிருந்து வரும் வெளிச்சத்தோட வெயிட்டை கூட்ட குறைக்க.. இப்போதைக்கு ஒரு கிராமில் ஒரு கோடியில் ஒரு பங்கு வரை எடை உள்ள வெளிச்சம் வர்ற மாதிரி செட் பண்ணியிருக்கேன். ஒரு தடவை இந்த டார்ச்சை ஆன் பண்ணினால் ” டக்னு” ஒரு பிளாஷ் மாதிரி லைட் அடிக்கும்.. ”எடையுள்ள வெளிச்சம்”. உடனே ஆப் ஆயிரும். அப்புறம் 5 அல்லது 6 செகண்ட் கழிச்சுதான் திருப்பவும் செய்யமுடியும்.. ஏன்னா தொடர்ச்சியா எடையுள்ள லைட் அடிச்சா அதிர்வு சூடு இதெல்லாம் தாங்க முடியாது. இந்தோ பார்த்தியா. இந்த பைபர் ஷாக் அப்சார்ப் சிஸ்டம் இந்த டார்ச் எடையுள்ள வெளிச்சத்தை தரும் போது பின்னால எகிறாம இருக்க. இந்த ஷாக் அப்சார்பர் நிரந்தரம் இல்லை அப்பப்ப லோட் பண்ணனும். ஒரு தடைவை 12 லோட் பண்ணலாம். 12 தடவை வெளிச்சம் அடிக்கலாம். இப்ப 12 லோட் பண்ணியிருக்கு . எக்ஸ்டிரா ஸ்டாக் இல்லை”

”புரொபசர் நீங்கள் ஒரு அதிசயம்… இப்போ எப்படி டெஸ்ட் பண்ணலாம்”

“அந்த தோசைக்கல்லை ஒரு மரத்தில் கட்டி தொங்கவிடு”

அந்த விஷேச டார்ச் உமிழ்ந்த எடையுள்ள வெளிச்சம் பௌதிக விதிகளை மீறாமல் அந்த அப்பாவி தோசைக்கல் மீது பட்டதுதான் தாமதம் தோசைக்கல் முதலில் ஒட்டையானது அதே ஷணத்தில் நொறுங்கியது..

”பாத்தியா பாஸ்கி.. எப்படி”

“புரொபசர்.. மார்வ்லெஸ்.. இந்த யுகத்தின் இணையில்லாத விஞ்ஞானி நீங்கள்தான்.. இந்த டார்ச் லைட்ட வெச்சி எதை வேணுமின்னாலும் சுட்டு வீழ்த்தலாம்”

“போடா மண்டு.. டிஸ்டரக்டிவா நினக்காதே.. கன்ஸ்ட்ரக்டிவா யோசி.. இந்த வேகத்தை எல்லா வகை டிரான்ஸ்போர்ட் சிஸ்டம்,, பூமியை தண்ணி எண்ணெய்க்காக தோண்டரதுக்கு, பாரம் தூக்றதுக்கு.. இப்படி நல்ல காரியத்துக்கு யூஸ் பண்ணலாம்.. சரி கொண்டு வந்த பெட்ஷீட் எங்க அதை அந்த ரெண்டு மரத்துக்கும் இடையில் கட்டு”

“புரொபசர் இப்ப நான் சுடறேன்”

”ஏண்டா ஆயுதாமாவே நினைக்கிறாய்.. இந்தா அந்த பெட்ஷீட் மேல வெளிச்சம் அடி “

பாஸ்கி டார்சை பெட்ஷீட் எதிரே காட்டி ஸ்விட்சைப் போட்டான். காட்டன் பெட்ஷீட் குபுக்கென்று தீப்பிடித்தது.

”புரொபசர் போதும்.. இப்பவே, ரெண்டுதரம் ஆய்டுத்து.. அப்புறம் பிரஸ் ஆசாமிகளுக்கு காண்பிக்க லோட் இருக்காது “

“இருடா அங்க அவாளுக்கு ஒரு அஞ்சி தரம் தான் காண்பிக்கப்போறேன். இங்க இன்னும் ஒரு தடவை பார்ப்போம்.. மூணு தடவை ஆய்டும்.. ஊருக்கு திரும்றச்சே மிச்சம் நாலு லோட் கையில் இருக்கும்.. நம்ம லேப்ல இன்னும் கொஞ்சம் பண்ணிக்கலாம்”

“இப்ப எப்படி டெஸ்ட் பண்ணப் போறேள் “

”இந்த லைட்டோட வெயிட்டை இன்னும் கொஞ்சூண்டு ஜாஸ்தி பண்ணி.. இங்க இந்த பூமியில் அடிச்சுப் பார்ப்போம்”

“புரொபசர் எதுக்கும் ஜாக்ககிரதை. எல்லா அளவும் சரியா இருக்கானு பார்த்துட்டு பண்ணுங்கோ.. எதுக்கும் பூமாதாவை என்னை ஷமிச்சுடுமான்னு கேட்டுண்டுடுங்கோ “

சடகோபன் ரியோஸ்டாட்டை அட்ஜஸ்ட் செய்துவிட்டு,, ஷாக் அப்சார்பர் சரியாயக இருக்கிறாதா எனப்பார்த்து விட்டு, அந்த கையை தோளளவில் நேராய் நீட்டிக் கொண்டு விஷேஷ டார்ச்சை தரைக்கு 90 டிகிரி செங்குத்தாய் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, ஸ்விட்ச் போட்டான்.

ஒரு செகண்டுக்கு சுமார் 2 லட்சம் மைல் செல்லும் அந்த விஷேஷ, எடையுள்ள லைட் அந்த மஹா சொற்பமான நாலரை அடி தூரத்தைக் கடந்து தரையைத் தொட்டு துளைத்து மண், கல் எல்லாவற்றையும் வாரியெறிந்த வேகம், சடகோபன் சடக்கென கையை மடக்கிக் கொள்வதை விட பல லட்சம் மடங்கு வேகமாய் இருந்தது. அவன் கையில் இருந்த டார்ச்சை ஒரு கனமான கல் எகிறடித்து கண்கானாமல் தூக்கி எறிந்தது

– 24 மே 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *