சைபார்க் மனிதன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: August 12, 2020
பார்வையிட்டோர்: 55,121 
 
 

இமையமலை பகுதியில் ஏலியன் நடமாட்டத்தை கண்காணிக்கவும், ஏலியன் பற்றிய ஆராய்ச்சிக்கும், இந்திய அரசாங்கம் ரகசியமாக ஒரு விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை ராணுவத்துடன் இணைந்து நடத்திவருகிறது. திடீரென ராணுவ தலைமை அலுவலகத்தில் இருந்து அங்கு தகவல் ஒன்று வருகிறது.

எப்பொழுதும் அமெரிக்காவில் மட்டுமே தென்பட்ட UFO (UNIDENTIFIED FLYING OBJECT) எனப்படும் பறக்கும் தட்டுக்கள் முதல் முறையாக இந்தியாவில் இமைய மலைப்பகுதியில் இந்திய ராணுவ எல்லையில் ராணுவ வாகனம் ரோந்து செல்லும் பொழுது சிலவினாடிகள் அவர்கள் முன் தோன்றியுள்ளது. உடனே நமது ராணுவ வீரர்கள் அதை பீரங்கியால் தாக்கி உள்ளனர். பதிலுக்கு அவர்களும் லேசர் ஒளியால் தாக்கி உள்ளனர். இந்த தாக்குதலில் அந்த UFO சுட்டு வீழ்த்தப்பட்டது. மேற்கு திசையில் பாதுகாப்பு கோபரத்தில் இருந்து சுமார் இருபதாவது கிலோமீட்டர் தொலைவில், பத்து பேர் கொண்ட நமது ராணுவ குழு அந்த UFO வை சுற்றி பாதுகாப்பில் உள்ளது. UFO பற்றிய ஆராய்ச்சியாளர்களும் ஏலியன் பற்றிய ஆராய்ச்சியாளர்களும் , உடனே அந்த இடத்திற்கு வரவும் என்பதே அந்த தகவல்.

வருட கணக்கில் காத்திருந்த அந்த நிகழ்வு இப்பொழுது நடந்துள்ளது. உடனே அராய்ச்சியாளர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர். அந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஜானும் ஒருவர். ராணுவ படை சூழ ஜானும் டாக்டர் ஒருவரும் ஆர்வமாக அந்த இடத்தை நோக்கி தனி இராணுவ வாகனத்தில் சென்று கொண்டு இருந்தனர். ஜானிற்கு இந்த அனுபவம் புதுவிதமாக இருந்தது. போன விடுமுறையில் வால்பாறை சென்ற பொழுது அங்கு ஒரு இடத்தில் யானை இறங்கிய செய்தியை உள்ளூர்வாசிகள் மூலம் கேள்விப்பட்டவுடன் ஜானும் அவன் நண்பர்களும் யானையை பார்க்க நடு இரவில் அந்த இடத்தை தேடி சென்றது ஞாபகத்திற்கு வருகிறது. யானையை பார்க்க வேண்டும் என்ற ஆசை ஒருபுறம், திடீரென யானை சாலையில் நம்மருகே வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் ஒருபுறம் இருக்க, பயத்தில் யானையை பார்க்க சென்ற அதே பீலிங் இப்பொழுதும் ஏற்படுகிறது. இவ்வளவு நாள் ஏலியனையும் UFO வையும் எப்பொழுது பாப்போம் என்றிருந்த ஆர்வம் இப்போது இரண்டையும் பார்க்க போகிறோம் என்றவுடன் அச்சமாக மாறியுள்ளது. அதற்கு காரணம் அந்த UFO வின் உள்ளே இருக்கும் ஏலியன்கள் நம்மை விட மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருக்கலாம், அவர்களிடம் உள்ள ஆயுதங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாக இருக்கலாம் என்பதே.

சுமார் அரைமணிநேர பயணத்துக்கு பின் அந்த இடத்தை அடைகின்றனர். புகை மூட்டதிற்க்கு நடுவே அந்த பறக்கும் தட்டு தலைகீழாக கவிழ்ந்து கிடக்கிறது. அழகிய வேலைபாடுகளுடன் கூடிய வெளிப்புற தோற்றம். அதன் அடிப்பாகம் பளபளக்கும் தன்மையோடு கண்ணாடிபோல் உள்ளது. ரெக்கை ஏதும் இல்லாமல் சிறுவர்கள் விளையாடும் அழகிய விளையாட்டு பொருள் போன்று இருக்கிறது. லேசான …..ம்…… என்ற தொடர் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டு இருக்கிறது.

வண்டியில் இருந்து இறங்கி, ஜானும் அவர் குழுவினரும், மற்றும் டாக்டர் ஒருவரும் அந்த அதிசய காட்சியை பார்த்தவாறே அந்த UFO நோக்கி செல்லும்பொழுது, திடீரென அந்த ஹம்மிங் ஓசை அதிகமாகிறது. ராணுவம் உசார் ஆகிறது. ராணுவ வீரர்கள் அந்த UFO வை தாக்க தயார் நிலையில் உள்ளனர். ஜானும்,மருத்துவரும் திரும்ப பாதுகாப்பாக வண்டிக்கே சென்று விடுகின்றனர்.

அந்த சத்தம் இன்னும் அதிகமாகிறது. அதன் வெளிப்புறம் முழுவதும் மின்மினுக்கும் லைட் அணைந்து அணைந்து எறிகிறது. திடீரென கவிழ்ந்து கிடக்கும் UFO வின் கதவு திறப்பது போல் சத்தம் கேட்கிறது. ராணுவ வீரர்கள் பயத்துடனும் சற்று தைரியத்துடனும் அந்த கதவை நோக்கி குறிவைத்து தாக்குவதற்கு காத்திருக்கின்றனர்.

அப்பொழுது திடீரென அவர்கள் பின்புறம் இருந்து தாக்கப்படுகிறார்கள். அந்த இடம் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. லேசர் ஒளி குண்டுகள் போல் அவர்கள் மேல் பட்டு தெறிக்கிறது. அந்த தாக்குதலை அவர்களால் சமாளிக்க முடியவில்லை. தாக்குபவர்களும் புகையில் சரிவர தெரியவில்லை. ராணுவ வீரர்கள் மறைந்திருந்து தாக்குகிரார்கள், சிறிது நேர தாக்குதலுக்கு பிறகு புகை லேசாக விலகவும் தாக்குவது நம்மை போல் முக மூடி அணிந்த மனிதர்கள் தான் என்பது தெரிகிறது. மனிதர்கள் தான் ஆனால் கையில் வித்தியாசமான ஆயுதம்.

ஜான் சற்று தொலைவில் இன்னொரு UFO நிற்பதை பார்கிறார். ராணுவ வீரர்களும் அந்த UFO வை பார்கின்றனர். ஏலியன் என்றால் விசித்திர தோற்றத்தில் இருக்கும் என நினைத்தால் எப்படி மனிதர்கள் போல் இருக்கிறது. இல்லை இவர்கள் வேற்று கிரகத்தில் வாழும் நம்மை போன்ற மனிதர்களா..? இல்லை மனித வேடமிட்ட ஏலியன்களா என அடுக்கடுக்காக அவர்களுக்குள் கேள்விகள் எழுகிறது.

அப்பொழுது நான்கு பேர் கொண்ட அந்த முக மூடி அணிந்திருந்த குழு நாலா பக்கமும் தாக்குதலை நடத்தி கவிழ்ந்து கிடந்த UFO வின் அருகில் வருகின்றன. அதன் தாக்குதலை சமாளிக்க இயலாமல் ராணுவம் UFO வை விட்டு பின்வாங்குகிறது. அந்த உருவங்கள் தொடர்ந்து அக்கினியால் தாக்கி கொண்டு முன்னேறுகிறது. ராணுவ வீரர்கள் எவ்வளவு சுட்டாலும் அந்த உருவங்களுக்கு ஏதும் ஆகவில்லை. அந்த நான்கு பேரில் ஒரு உருவம் அந்த UFO வின் கதவில் கை வைக்கிறது அவ்வளவு நேரம் இருந்த அந்த ஹம்மிங் சத்தம் நின்று விடுகிறது.

சிறிது நேர இடைவெளிக்கு பின் கதவு திறக்கிறது. மேலிருந்து கீழ் அடுக்காக இரண்டு தலையுடன், மூன்று கண்களுடன், நான்கு கைகள் மற்றும் நான்கு கால்கள் கொண்ட ஒரு விசித்திர ஜந்து நடக்க முடியாமல் தட்டு தாடுமாரி உள்ளே இருந்து வெளியே வந்து சரிந்து விழுகிறது.

அந்த விசித்திற ஜந்துவை பார்த்து ராணுவ வீரர்கள் மிரட்சியடைகிறார்கள். ஜான் அந்த விசித்திர ஜந்துவை போட்டோ எடுக்க முயற்சிக்குறார். மொபைல் சுவிட்ச் ஆப் ஆகிறது. அந்த விசித்திர ஜந்துதான் ஏலியன். அப்ப மனிதர்களைப்போல் இருக்கும் அந்த உருவங்கள் யார். எப்படி குண்டு காயங்கள் அவைகளை ஒன்னும் செய்யவில்லை. உடலில் எங்கிருந்தும் ரத்தம் வரவில்லை, என ஜான் ஆழ்ந்த யோசனையில் இருக்கும்பொழுது சட்டென ஒரு யோசனை வருகிறது. வாக்கி டாக்கியில் மேஜர்க்கு ஒரு தகவல் தருகிறார். அந்த காயம்பட்ட ஏலியனை தூக்கி கொண்டு அந்த உருவங்கள் தொடர்ந்து எதிர்த்து தாக்கியவாறு தாங்கள் வந்த UFO வை நோக்கி நகருகின்றன. அந்த உருவங்களில் ஒன்று அந்த பழுதடைந்த UFO வை நோக்கி கையில் இருந்து ஒரு நீல நிற ஒளியை அடிக்கிறது அந்த ஒளி பட்ட அடுத்த நொடி அந்த UFO திடீரென பளபளப்பாக ஒளியை கக்கி காற்றுடன் கரைந்து போகிறது.

திடீரென UFO மறைந்த காட்சியை கண்ட ராணுவ வீரர்களும், ஜான் மற்றும் குழுவினரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் வந்த UFO வின் அருகில் வந்ததும் ஏலியனை மற்ற மூன்று உருவமும் தூக்கிகொண்டு கதவை திறந்து உள்ளே சென்றன. கீழ் இருந்து ஒரு உருவம் மட்டும் எதிர்த்து ராணுவ வீரர்களை தாக்கிகொண்டு இருந்தது. ஜான் சொன்ன ஆலோசனைப்படி மேஜர் அந்த உருவத்தை தாக்கினார். அடுத்த நொடி அந்த உருவம் சுருண்டு விழுந்தது. அதை பார்த்த ராணுவ வீரர்கள் உற்சாகமாயினர். அதே போல் மற்றவைகளையும் சுட்டு வீழ்த்த ஆயத்தமாகிய அடுத்த நொடி அந்த UFO வில் இருந்து நீல நிற ஒளி அந்த வீழ்த்தப்பட்ட உருவத்தின் மீது பட்ட அடுத்த நொடி அந்த உருவம் காற்றில் கரைந்து போனது. கதவடைக்கபட்டு UFO நொடிப்பொழுதில் மேலெழும்பி மறைந்தது.

ராணுவ வீரர்கள் UFO மறைந்த இடத்தை வானில் தொடர்ந்து தாக்கி கொண்டு இருகின்றனர். மேஜர் கையை உயர்த்தவும் தாக்குதல் நிறுத்தபடுகிறது. அதற்குள் வண்டியில் இருந்து ஜானும் டாக்டரும் இறங்கி வருகிறார்கள்.

மேஜர், சுடப்பட்டு அந்த உருவம் வீழ்ந்த அந்த இடத்தை நோக்கி நடக்கிறார். ஜானும் அவர் பின்னால் சென்று அந்த இடத்தை பார்க்கிறார். அங்கிருந்த பனிக்கட்டியில் ஒரு சொட்டு இரத்தம் மட்டும் உறைந்து இருக்கிறது. ஜான் அந்த இரத்தம் உள்ள பனிக்கட்டியை எடுத்து டாக்டரிடம் கொடுக்கிறார். அவர் அதை வாங்கி டெஸ்ட் டியூபில் பத்திரமாக மூடி எடுத்து கொள்கிறார்.

மேஜர், ஜானை பார்த்து, எப்படி கண்டு பிடுச்சீங்க…? நீங்க சொன்னது கரெக்ட் தான்.. தேங்க்ஸ்.. என சொல்லியவாறு, கைகளை தட்டி மூவ்… மூவ்… என கத்தவும், அடுத்த நொடி அணைத்து ராணுவ வீரர்களும் ஓடி சென்று வாகனத்தில் ஏறினர். ஜானும், மருத்துவரும் ஓடி சென்று வாகனத்தில் ஏறவும் வாகனம் அங்கிருந்து ஆராய்ச்சி மையம் நோக்கி நகர்ந்தது.

ஆராய்ச்சி நிலையம் வந்ததும் மருத்துவரையும், ஜானையும் அவர்கள் அராய்ச்சிகூட வாசலில் இறக்கி விட்டுவிட்டு ராணுவ வாகனம் அலுவலகம் சென்றது. மருத்துவரும் ஜானும் ஆராய்ச்சி நிலையத்தினுள் செல்கின்றனர். டாக்டர் அந்த பனிக்கட்டியில் உள்ள இரத்தத்தை வெளியே எடுத்து மைக்ரோஸ்கோப்பில் வைத்தவாறு, அவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த, அந்த மில்லியன் டாலர் கேள்வியை ஜானிடம் கேட்கிறார். டாக்டர் ராணுவத்தில் சேர்ந்து ஆறுமாதத்திற்குள் ஏலியனை பார்க்கும் வைப்பு கிடைத்திருக்கிறது. இன்னும் அவர் அந்த பிரம்மையில் இருந்து மீளவில்லை.

டாக்டர் :- அப்படி மேஜர்கிட்ட நீங்க என்ன சொன்னீங்க..? அந்த பெரிய உருவம் தான் ஏலியன்னுனா அப்ப அந்த மனித உருவில் இருந்தது எது ? எப்படி அந்த ஒரு உருவம் மட்டும் மடிந்தது..? அப்படி அந்த உருவத்துக்கு மட்டும் இரத்தம் வந்தது..? மற்ற உருவங்களுக்கு ஏன் காயம் ஏற்படவில்லை…?

என அடுக்கடுக்காக கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்தார்.. அவரை பார்த்து புன்சிரிப்பு சிரித்த ஜான் அங்கிருந்த போர்டில் “ சைபார்க் மனிதன் ” என எழுதுகிறார். டாக்டர் புரியாமல் ஜானை பார்க்கிறார்.

ஜான் :- “Cybernetic Organism என்பதன் சுருக்கம் தான் Cyborg – சைபார்க். இது, நரம்பு மண்டலத்தால் கட்டுப்படுத்தப்படும் செயற்கை உறுப்புகள் கொண்ட ஒரு உயிரினம்.”நாம இப்பதான் மனித உடலில் இயந்திரங்களைப் பொருத்தி சோதனைகள் மேற்கொண்டுட்டு வர்றோம் உயிரினமும் இயந்திரமும் ஒருங்கிணைந்து செயல்படும் அமைப்பைத்தான் சைபர்க் என்கிறார்கள்.“உயிர் மின்னியல் ( அதாவது பயோனிக்ஸ் ) விஞ்ஞானிகள், மனித உடலின் உறுப்புகள் இயங்கும் விதத்தை ஆய்வுசெய்து, அவற்றைப் போலவே இயங்கும் இயந்திரங்களை வடிவமைத்துவருகிரார்கள். செயல்பட முடியாத உறுப்புகளுக்கு மாற்றாகவோ செயலிழந்த நிலையில் உள்ளவற்றுக்கு ஆதரவளிப்பதற்காகவோ இந்த உயிர் மின்னியல் உறுப்புகள் பொருத்தப்படுகின்றன. சில உயிர் மின்னியல் சாதனங்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உங்களுக்கும் தெரியுமே…

டாக்டர் :- டயாலிசிஸ் இயந்திரம், பேஸ்மேக்கர், கைகளையோ கால்களையோ இழந்துவிட்டால் அவற்றுக்குப் பதிலாக மூளையால் கட்டுப்படுத்தக்கூடிய பயோனிக்ஸ் உறுப்பு, பயோனிக்ஸ் நாக்கு , பயோனிக்ஸ் கண் , பயோனிக்ஸ் குரல்வளை , இப்படி நவீன யுகத்தில் அனைத்திற்குமே மாற்று வந்து கொண்டு இருக்கிறது. இன்னும் பயோனிக்ஸ் மூக்கு உருவாகலைன்னு நினைக்குறேன். ஆனா சைபார்க் பத்தி நான் கேள்வி பட்டதில்லை..

ஜான் :- Cyborg என்றால் மனிதனோடு இயந்திரத்தை இணைத்து, அந்த இயந்திரம் மனித கட்டுப்பாட்டில் இயங்கி, அது அவன் உடலின் அங்கமாக பாவிக்கப்படுவது. அப்படிப்பட்ட மனிதனை Cyborg மனிதன் என்று சொல்கிறோம். உலகின் முதல் Cyborg மனிதர் நீல் ஹார்பிசன் (Neil Harbisson).இவர் 1984ல் லண்டனில் பிறந்தவர். பிறந்த நாள் முதல் அவருக்கு பார்வை குறைபாடு இருந்து வந்தது. அவர் கண்களால் வர்ணங்களை உணர இயலாது. உங்க பாசைல சொல்லனும்னா Colour Blindness. அனைத்தும் கருப்பு வெள்ளை சாயலில் தெரியும் (Grey Scale Vision). 2003ம் ஆண்டு, சில விஞ்ஞானிகளுடன் சேர்ந்து இந்த குறைபாட்டிற்கு மாற்று கிடைக்குமா என்று தன்னை ஆராய்ச்சி பொருளாக ஆக்கிக்கொண்டார்.

இதன் விளைவாக ஒரு புது கருவி கண்டுபிடிக்கப்பட்டது. வெளி உலகில் இருந்து வர்ணங்களை உணரும் உணரியை தன் மூளைக்குள் பொருத்தினார்கள். அதன் Antenna அவர் தலையின் பின் பகுதியில் இருந்து புடைத்துக்கொண்டு மேற்புறமாக வளைத்து நெற்றியின் மேல் நீட்டியவாறு அமைக்கப்பட்டது. அவர் பார்க்கும் திசையில் இருக்கும் வர்ணத்தை அந்த உணரி உள்வாங்கி அதை ஒலியாக மாற்றி அவர் மூளைக்கு அனுப்பி கேட்கச்செய்யும். அதாவது அவரால் வர்ணத்தை பார்க்க இயலாது கேட்க இயலும். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு ஒலி அலைவரிசை அந்த கருவியில் பதித்தார்கள். உதாரணமாக ஐந்து வித நிறங்களை காட்டினால் ஐந்து வித சப்தம் கேட்கும். அவர் சிறுவயதில் இசையும் ஓவியமும் கற்றிருந்தார் அதனால் கேட்கும் ஒளிக்கு ஒரு musical noteஉடன் ஒப்பிட்டுக்கொண்டார். அவருக்கு முதலில் கடினமாக இருந்தது, ஏனெனில் 24 மணிநேரமும் அந்த கருவி ஒளியை புணர்ந்து சப்தித்துக்கொண்டே இருந்தது. அவற்றை கேட்டவாரே எட்டு வருடங்கள் கழித்தார். கொஞ்சம் கொஞ்சமாக அவர் மூளை பழகிக்கொண்டது. இப்போது அதை ஒரு ஆறாம் உணர்வாக ஏற்றுக்கொண்டது.

உலகில் உள்ள எல்லா பொருளும் ஏதோ ஒரு ஒளியை பிரதிபலிக்கிறது அல்லவா. இந்த மொத்த உலகத்தையே ஒரு இசை களமாக உணர, அது ஒரு புது பரிமாணமாக அவருக்கு ஆகிவிட்டது. ஒரு கட்டத்தில் அவருக்கு கனவு படங்களாய் அல்லாமல் இசையாய் கேட்க ஆரம்பித்துவிட்டது, சிந்தனையிலும் அப்படிதான். அவரால் நம் முகநிறத்திற்கு வரும் ஒலியை musical notes ஆக குறித்துக்கொண்டு, நம் முகத்தின் mp3 Audio பைலை நமக்கு ஈமெயில் செய்வார். நம் முகத்தை தினமும் நாம் ஆடியோவாக கேட்டு கொள்ளலாம். அடுத்தக்கட்டமாக அவரால் சாதாரணமாக கேட்கும் குரலும், இசையும் வர்ணத்தோடு ஒப்பிட முடிந்தது. இப்போது மாறாக குரலிற்கு உருவம் கொடுத்தார். ஒவ்வொருவர் குரலுக்கும் ஒரு வர்ண ஓவியம். அவரை பொறுத்தவரை சப்தமும் வெளிச்சமும் ஒன்றுபோல் ஆகிவிட்டது. சமீபத்தில் Infrared மற்றும் Ultraviolet ஒலி அலைவரிசையை கிரகிக்கும் Antenna புதுப்பிக்கப்பட்டது. மனிதனால் காண முடியாத அலைவரிசையை கூட இப்போது அவரால் கேட்க முடியும். ஒரு Super Human போல மாறி விட்டார். ரஷிய அரசாங்கத்திற்கு இவரும் விஞ்ஞானிகளும் விண்ணப்பம் அளித்து அவரை முதல் Cyborg மனிதராக அங்கீகரிக்க சிபாரிசு செய்யப்பட்டது.. இதன் விளைவாக அவர் பாஸ்போர்ட்டில் அந்த ஆண்டெனா உடன் புகைப்படம் எடுத்து புதிதாக அச்சடித்து தந்தார்கள். நீண்ட ஆலோசனைக்கு பிறகு அக்கருவியை அவர் உடலின் அங்கமாக அரசு ஏற்றுக்கொண்டது.

டாக்டர் :- ஓகே ..அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ..?

ஜான் :- சம்பந்தம் இருக்கு.. போன வாரம் நீங்க ஒரு ராணுவ வீரருக்கு ஒரு ஆபரேசன் பண்ணீங்கள்ள அது என்ன ஆபரேசன் ?

டாக்டர் :- அது துப்பாக்கி சூட்டில் காலை இழந்த ராணுவ வீரர் ஒருவருக்கு புதுசா கண்டுபித்த செயற்கை கால்கள் அதான் நீங்க சொன்ன பயோனிக் கால்களை பொருத்தி அவரை முன்னாடி போல் சாதாரணமாக இயங்க வைத்தோம்..

ஜான் :- மனிதனோடு இணைக்கப்பட்ட இயந்திரம் இப்பொழுது ஐந்து சதவீதம் என்றால், போக போக அது கூடி நூறு சதவிகிதம் என்று ஆகும். உடலின் அணைத்து பாகங்களுக்கும் ஒரு மாற்று உறுப்பு இருக்கும். நம் மூளையின் ஆற்றலை ஆதாரமாக கொண்டு இயங்குபவையாக இருக்கும்.  இன்னும் 100 வருடங்கள் போனால் Technological Singularity என்றழைக்கப்படும் பூரண ஒருமை நிலை வந்துவிடும். இந்த ஒருமைக்கு அப்பால் புதிதாக உருவாக்க எதுவும் இருக்காது . பூமியில் உள்ள அணைத்து மனிதர்களும் இயந்திரமாக மாறி இருப்பார்கள். அதன்பின் நமக்கு இயற்கை தேவையில்லை, மழை தேவையில்லை, உணவு தேவையில்லை, சூரிய ஒளிமட்டும் போதும். அந்த சக்தியில் அனைவரும் வாழக்கூடும். ஏன் அதுகூட தேவைப்படாமல் போகலாம். Self Sustained Life Form எனப்படும் தனக்கு தேவைப்படும் அணைத்து சக்தியையும் தானே தயாரித்துக்கொள்ளும் நிலை வந்திருக்கும். பிறகு பூமி இருந்தால் எதற்கு இல்லாவிட்டால் எதற்கு. சூரியன் வெடித்தாலும் பரவாயில்லை, பிறப்பு இல்லை ஏனெனில் இறப்பு இல்லை .மூப்பு இல்லை பழுது மட்டுமே. புதிய உறுப்பை மாற்றி அதை சரிசெய்து விடுவார்கள். நாம் பார்த்தது இதற்கு முந்தைய ஸ்டேஜ் உடலின் மற்ற அனைதுபாகங்களையும் இயந்திரமாய் மாற்றி மனித மூளையை மட்டுமே இயற்கையாய் வைத்து அதை அவர்கள் கட்டுபாட்டில் இயங்க வைத்து, ஏலியனால் உருவாக்க பட்டதுதான் இந்த சைபார்க் மனிதன்.

டாக்டர் :- அப்ப.. மேஜர்கிட்ட நீங்க அந்த சைபார்க்கை தலைல சுட சொல்லியிருக்குறீங்க கரெக்டா..?

ஜான் ஆமாம் என்பது போல் தலையை ஆட்டுகிறார். டாக்டரும் BLOOD TEST ரிசல்ட்டை பார்த்தபின்பு, ஜானை பார்த்து இது மனித இரத்தம் தான் என உறுதிசெய்கிறார்.

ஜான் :- நம்மை விட ஏலியன்கள் பல நூறுவருடம் விஞ்ஞானத்தில் முன்னோக்கி உள்ளனர். அடுத்த உலகப்போர் மனிதர்களுக்கு இடையானது இல்லை. ஏலியனால் அடிமைபடுத்தபட்ட சைபார்க் மனிதர்களுடன்தான்.

என கூற டாக்டருக்கு, எதிர்காலம் சற்று நேரம் கண்முன்னால் வந்து போனது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *