காலப் பெட்டகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: October 27, 2016
பார்வையிட்டோர்: 10,346 
 
 

“ராகவா எழுந்திருடா, மணி எட்டு அடிக்கப் போறது”, என்ற அம்மாவின் குரல் கேட்டு எழுந்திருக்க முயன்றேன். ஆனால் கண்களைத் திறக்க முடியவில்லை. சுதாகரித்துக் கொண்டு கண்ணைத்திறந்து, ”என்னம்மா, அதற்குள்ளாகவா எட்டு மணியாகி விட்டது.இன்னிக்கு லீவுதானேமா, இன்னும் ஒரு மணி நேரம் தூங்கிட்டு ஒன்பது மணிக்கு எழுந்திருக்கிறேன்” என்றேன்.

“இல்லைடா, கொல்லைப்புறத்தில் செடிக்கு எல்லாம் தண்ணீர் விடப் போயிருந்தேன். அப்போ வாய்க்காலுக்கு குளிக்க வந்த உன் ஃபிரண்ட் ரகுவின் அம்மாவைப் பார்த்தேன். அவன் உன்னைப்பத்தி விசாரித்தானாம், உன்னை பார்க்கணுமாம்.உடம்பு சரியில்லாமல் சோமசேகரன் ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்காங்களாம். அதனால் சொன்னேன்.அப்புறம் ஏன் எங்கிட்ட சொல்லலைன்னு வானத்துக்கும் பூமிக்குமாக குதிப்பாய்.” என்றாள்.

ரகு என்றதும் பட்டென எழுந்தேன். “அப்படியா, என்ன உடம்புக்கு? அமெரிக்காவில எங்கியோ கலிபோர்னியாவில இல்லையா இருந்தான். எப்போ இந்தியா வந்தான்?” என்றபடி முகம் கழுவி காலைக்கடன்களை முடிக்கக் கிளம்பினேன். என்னவோ தெரியவில்லை மனம் பரபரப்பாக இருந்தது.

நானும், ரகுவும் பால்ய சினேசிதர்கள். வடிவேல் சார் கூட எங்களை டபரா, டம்ளர் என்று கிண்டல் செய்வார். வருகைப் பதிவேட்டிலும் அடுத்தடுத்த பெயர்கள்.எப்பொதும் நான் அவன் வீட்டிலோ, அவன் என் வீட்டிலோ இருப்போம். பள்ளியில் படிப்பில் அவன் படு சுட்டி. நான் சராசரி. ஆனால் அதில் அவனுக்கு கர்வம் துளியும் கிடையாது. எனக்கும் அவனுடன் பழகுவதில் தாழ்வு மனப்பான்மை இல்லை.

அவன் எப்போது படிக்கிறான். எப்போது உறங்குவான் என்பது யாருக்கும் தெரியாது. இரவு திண்ணையில் படுப்பதாகச் சொல்லிவிட்டு, வீட்டுக்குத் தெரியாமல் பத்து மணிக்கு வைராவிகுளம் டூரிங்க் தியேட்டரில் படம் பார்த்துவிட்டு அசந்து உறங்கினால் அதி காலை ஐந்து மணிக்கு எப்போதும் போல எழுந்து ஆற்றில் குளிக்கப்போக என்னை எழுப்பிவிடுவான். பள்ளிக்கூடத்தில் அவன் கேட்கும் கேள்விகளுக்கு பல ஆசிரியர்கள் திணறிப் போய்விடுவார்கள். அவன் தெருவில் உள்ள மற்ற பசங்களுக்கு புரியாத புதிர். நாங்கள் இரும்புக்கை மாயாவி, சிந்துபாத் படிக்கும் போது அவன் நூலகரிடம் ஜெயகாந்தன், புதுமைப் பித்தன் புத்தகங்கள் பற்றி விசாரிப்பான். அவரோடு விவாதம் செய்வான். அதேசமயம் ராமு கனபாடிகளிடம் கடோபனிஷத்தில் சந்தேகம் கேட்பான். ஒரு தடவை பெருமாள் கோவில் அர்ச்சகரிடம், “நீங்க சொல்லும் மந்திரம் தப்பு இப்படி தப்புத்தப்பா மந்திரம் சொல்லி பெருமாளை ஏன் ஊரை விட்டு துரத்துற கைங்கரியத்தை உங்களை மாதிரி சிறப்பா யாரும் செய்ய முடியாது” ,என்று சொல்லிவிட்டு சரியா உச்சரிப்புடன் மந்திரங்களைச் சொல்ல அவர் பஞ்சாயத்தில் பிராது தர ஒரே அமர்க்களம்.

திடீரென்று ஒரு நாள் அவனைக் காணவில்லை. பள்ளிக்கும் வரவில்லை. அவனை பார்க்காமல் தலை வெடித்துவிடும் போல் இருந்தது. சாயங்காலம் அவன் வீட்டிற்கு போய் விசாரித்தால், அவன் அம்மாவிடம் மெட்ராஸ் போகப் போறதாதா சொல்லி ஆயிரம் ரூபாய் பணம் கேட்டதாக சொன்னாள். “ஆயிரம் ரூபாய் புரட்டிக் கொடுத்தேன் , நேற்று ராத்திரி 7.30 மணி பாபனாசம் – சென்னை பஸ்ஸில் தான் கிளம்பிப்போனான். நாளைக்கழித்து காலையில் வந்து விடுவதாகச் சொன்னான்”.

“சரி, அவன் வந்ததும் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

வியாழக் கிழமை பள்ளிக்கு பிரேயர் முடிந்து காலதாமதமாக வந்தான். முத்துசாமி சார் வகுப்பு. வாசலில் நின்றவனை அவர் சட்டையே செய்யவில்லை. “தலைகனம் பிடிச்சி அலையறான். பெரிய தாமஸ் ஆல்வா எடிசன் நினைப்பு” இப்படியெல்லாம் அவனைப்பற்றிய எண்ணம் அவருக்கு உண்டு.

காரணம் ஒருநாள் அவரிடம் கருப்புப் பொருள் (Dark Matter) பற்றி கேட்க, அவர் அது பற்றி தெரியாது, நான் தகவல் திரட்டிய பின் சொல்கிறேன் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அவருக்கு எல்லா வாத்தியார்களின் பொதுப்புத்தி. மொளைச்சு மூணு எலை விடலை, இவனுக்கு அப்படி என்ன தெரியும் என்று. அவர் எதோ சம்பந்தம் இல்லாமல் விளக்கம் சொல்ல ,ரகு அது தவறு என்று சுட்டிக்காட்ட , பிரச்சனையாகி தலைமை ஆசிரியரிடம் போக, வகுப்பில் மரியாதை இல்லாமல் ஆசிரியரை திட்டியதாக பொய்யாக புகார் தரப்பட்டது. கடுமையாகக் கண்டிக்கப் பட்டு,பத்து நாள் பள்ளியை விட்டு வெளியேற்றம். அவன் அம்மா மன்னிப்புக் கடிதமும் எழுதிக்கொடுத்து ஆயிரம் ரூபாய் வார்ட் கவுன்சிலரின் சிபாரிசுக் கடிதத்திற்கு மொய்யும் கொடுத்து பள்ளியில் மீண்டும் சேர்த்தாள்.

அதிலிருந்தே முத்துசாமி சாருக்கு அவனையும் அவன் கூட எந்தப் பையனைப் பார்த்தாலும் ஒரு வன்மத்துடனேயே கருவியபடி இருப்பார்.

“எக்ஸ்கியூஸ் மீ சார்” என்று நாலைந்து முறை கூப்பிட்டும் கண்டுகொள்ளப்படவில்லை. பிரிவேளை முடிந்து வெளியே வரும் போது
“தொரைக்கு, இன்னிக்கு லேட்டா வந்ததால் ஆப்சென்ட்தான். லேட்டுக்கும் இரண்டு நாள் வராமல் இருந்ததற்கும் காரணம் எழுதிக் கொடுத்துவிட்டு அடுத்த பிரிவேளைக்கு வகுப்புக்கு போ” என்றார்.

காரணம் எழுதிய கடிதத்தில் சென்னை சென்று பாஸ்போர்ட் எடுக்க நேர்காணல் சென்றதால் இரண்டு நாள் விடுப்பும் , சென்னையிலிருந்து வரும் பேருந்து காலதாமதமாக வந்ததால் முதல் பிரிவேளை வரத்தாமதம் என்றும் எழுதியதைப் பார்த்த முத்துசாமி வாத்தியாருக்கு மயக்கமே வந்துவிட்டது.

ஒரு அப்பா இல்லாத பையன், அதிலும் மேல்நிலை வகுப்பில் படிக்கும் பொடியன் , தனியா சென்னைக்குப் போய் பாஸ்போர்ட் எடுக்கிறதா? அது சாத்தியமா? கொஞ்சம் பொறாமையாகக் கூட இருந்தது.பொறியியல் பட்டதாரியான அவர் மகன் பாஸ்போர்ட் நேர்காணலுக்கு

“அப்பா, நீயும் துணக்கு வாங்கப்பா” என்று அழைத்ததும் அவனுடன் துணைக்கு சென்றதை நினைத்து வெட்கம் பிடுங்கித் தின்றது.

“ஏலெ, பொய்சொல்லாதேலே, பாஸ்போர்ட் எடுப்பது என்ன டெண்ட் கொட்டாய் சினிமா டிக்கெட்டாலெ கவுண்டரில் காசு கொடுத்து வேங்க? 18 வயசாவத எப்படிலே பாஸ்போர்ட் எடுக்க முடியும். பின்ன நாளைக்கு பாஸ்போர்ட் கொண்டி காணிக்கனும் ஆமா சொல்லிப் போட்டேன்” என்றார்.

“சரிங்க அய்யா” என்று சுருக்கமாக சொல்லி பேச்சை முடித்துக் கொண்டான்.

இன்னும் நான்கு மாதம் பல்லைக் கடித்துக் கொண்டு ஓட்ட வேண்டும். பரிட்சை எழுதி ரிசல்ட் வந்து விட்டால், அப்புறம் பிரச்சனை இல்லை. அதற்கிடையில் வாத்தியாருடன் தகராறு பண்ணியதாக புகார் வந்தால் எல்லாம் பாழாயிடும் என்றவாறு ரகுவின் மனத்தில் சிந்தனை ஓடியதை நாங்கள் அறியவில்லை.

மதிய உணவு இடைவேளையில் நான், “என்னடா ரகு, இப்படி பாஸ்போர்ட் அது இதுன்னு மிரட்டுகிறாய்” என்று கேட்டதுதான் தாமதம் “ ராகவா இந்தப் படிப்பு எல்லாம் சுத்த வேஸ்ட். தலையெழுத்தென்னு இந்த சிலபஸ்லெ படிக்கிறேன்” என்றான். “பாரு எஸ்.எஸ்.எல்.சி முடித்தபிறகு அமெரிக்கா போய் படிக்கப் போகிறேன், அதுக்கு வேண்டி எல்லாம் செய்து விட்டேன். பாஸ்போர்ட் எடுத்துவிட்டேன். சென்னையில் ஒருத்தர் என்னை அமெரிக்காவிற்கு அனுப்பி படிக்க வைக்கும் செலவு எல்லாத்தையும் ஏற்றுக்கிறதா சொல்லியிருக்கார். அவரிடம் என் புராஜெக்ட் பத்தி எல்லாம் சொல்லியிருக்கேன். அவர் ரொம்பவும் இம்பிரஸ் ஆகிட்டார்டா” என்றான். என்னால் அவன் சொல்வதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் என்னை மாதிரி ஒரு பொடிப்பய தனியா சென்னைக்கு போய் பாஸ்போர்ட் எடுத்து, புரவலரைப் பார்த்துப் பேசி , ஹும் ஆச்சரியம் தான்.

அப்புறம் நாட்கள் படு வேகமாக நகர்ந்தன. பரிட்சை எழுதியவன் மாநிலத்தில் முதலிடம் பிடித்தான். செய்தி வந்ததும் முத்துசாமி வாத்தியார் ஃபோட்டோக்கு வந்து விட்டார். ரகுவின் ஆற்றலை முதன் முதலில் தான் தான் கண்டுபிடிச்சதாக பேட்டி தந்தார். ரகுவும் அதை ஆமோதித்து தலையசைத்து அங்கீகரித்தான். அப்புறம் பைசா செலவில்லாமல் அந்த புரவலர் அவனை மேற்படிப்புக்கு வெளிநாடு அனுப்பியது. அவன் அம்மாவுக்கு கிராமத்தில் வசிக்க ஒரு பெருந்தொகையை வங்கியில் போட்டு அதன் வட்டியை பயன் படுத்த ஏற்பாடுகள் செய்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு படித்து முடித்து சென்னை வந்தவன் அம்மாவை சென்னைக்கு கூப்பிட அவள் கிராமத்தை விட்டு வர மறுத்து விட்டாள்.

பென்சில்வேனியா பல்கலைகழகத்தில் இயற்பியல் பேராசிரியராக இருப்பதாக அவன் அம்மா சொல்லுவாள். திருமணம் செய்து கொள்ளவில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சென்னைக்கு வந்து புரவலரையும், கிராமத்தில் தன் தாயாரையும் பார்த்துவிட்டுச் சென்று விடுவான். இடைப்பட்ட காலத்தில் நான் தமிழ்நாடு பப்ளிக் செர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி திருநெல்வேலி கலெக்டர் ஆபீஸில் சூப்பிரண்டெண்ட் ஆக செக்குமாட்டு வாழ்க்கையில் . என் இரண்டு பசங்களும் பக்கத்து மெட்ரிக் ஸ்கூலில் படிக்கிறதே வாழ்க்கையின் மகாசாதனை. மற்றபடி குறைப்பட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை.

அவசர அவசரமாக ஆஸ்பத்திரியை அடைந்தேன். உள்ளே நுழையும் முன்பே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் வழிமறித்து, “சார், நீங்கதான் ராகவனா? அவர் சயின்டிஸ்ட் உங்க நெருங்கிய நண்பராமே. நான் அவரது பாதுகாப்பு அதிகாரி. உங்கள் இருவரும் பேசுவதை யாரும் கேட்காமல் நான் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு எனக்கு தரப்பட்டுள்ளது” என்றார். சட்டையில் மாணிக்கம் காவல் ஆய்வாளர் என்றிருந்தது. “நீங்களும் சயின்டிஸ்டா சார்?” என்றார். “இல்லை, கலெக்டர் ஆபீஸில் சூப்பிரண்டெண்ட், சர்வே டிபார்ட்மெண்ட்” என்றபோது ஏதோ தாழ்வு மனப்பான்மை மனதில் தோன்றியதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். “சரி சார், நீங்க உள்ளே போங்க” என்று சொல்லிவிட்டு விறைப்பாக சல்யூட் வைத்தார்.

அறைக்குள் கட்டிலில் படுத்திருந்தான் ரகு. “வாடா ராகவா, என்று சொல்லிவிட்டு கையில் இரண்டு கடிதங்களைத் தந்தான். இது என்னடா என்ற என்னிடம், வாயில் விரல் வைத்து எச்சரித்தான். “இதில் பெரிய அறிவியல் கண்டுபிடிப்பு பற்றிய குறிப்புகள் இருக்கு. அதை என்னிடமிருந்து கவர்ந்து கொள்ள ஒரு பெரிய கூட்டமே அலைகிறது. அது அவர்கள் கையில் கிடைக்கக் கூடாது, அதனால் தான் சென்னையில் தங்காமல் இங்கே வந்து இருக்கிறேன். என்னை மோப்பம் பிடித்து இங்கு அந்தக் கூட்டம் வருவதற்குள் அதை உன்னிடம் தந்து விட்டேன். வீட்டில் ஒரு கடிதத்தை எங்காவது மறைத்து வைத்துவிடு. மற்றதை பக்கத்தில் எதாவது பெரிய தபால் ஆபீஸில் அதில் உள்ள விலாசத்திற்கு ஏர் மெயில் அனுப்பி விடு.

ஒரு வேளை என்னை யாராவது கொன்றுவிட்டால், சரியாக ஒரு மாதம் கழித்து இரண்டாவது கடிதத்தை பிரிக்காமல் அதிலுள்ள விலாசத்திற்கு அனுப்பிவிடு” என்றான். “இடையில் உனக்கு ஏதாவது பிரச்சனை வரமாதிரி இருந்தா அதை கேட்பவர்களிடம் கொடுத்துவிடு. எனக்காக செய்வாயா. இதை கைப்பற்ற பல பன்னாட்டுக் கம்பெனிகளும், அரசியல் தலைவர்களும் அலைகின்றனர். அவர்கள் கையில் மாட்டாமல் இதுவரை காப்பாற்றிவிட்டேன். இனி உன்னிடம் ஒப்படைத்து விட்டேன் இனிமேல் கவலையில்லை”.

“அப்படி என்னடா அதில் உயிர் போகிற ரகசியம்”

“டேய் , நீ இயற்பியலில் நிறை, நீளம், காலம் – அடிப்படை அளவுகள் என்ரு படித்திருப்பாய். ஒரு பொருளைஉதாரணமாக ஒரு பெட்ஷீட் இருந்தால் அதன் நீளம் ஏழு அடி என்றால், ஊருக்குப் போகும் போது அதை மடித்து இரண்டு அடி நீளமுள்ள பெட்டியில் அடைத்து வைக்கிறோம் இல்லையா? அதேபோல குறிப்பிட்ட கன அளவில் அதிக நிறையை அடைக்கிறோம். இதனால் அடர்த்தி கூடும். இது திரவத்திற்கு சாத்தியம் இல்லை. ஆனால் வெப்ப நிலையை அதிகரித்தால் ஆவியாக்கி சாத்தியப் படுத்தலாம் இல்லையா? ஒவ்வொரு பொருளையும் வெவ்வேறு சூழலில் சுருக்க முடியும்.

Time Dilation பற்றி ஈன்ஸ்டீன் சொன்னது படித்திருப்பாயே, அதிகமான வேகத்தில் காலம் நீட்டிப்புஅடைந்து விடும் இல்லையா, அதே மாதிரி காலத்தை பாய் மாதிரி சுருட்டி நம்ம கக்கத்தில் வைத்துக் கொண்டு போகிற மாதிரி ஒரு தியரி அதில் உள்ளது. இப்பொ உன்னைச் சுற்றி ஒரு காலப் பெட்டி உள்ளது. அதை விட பெரிய ஒரு காலப் பெட்டியில் நீ இருந்தால் உன் ஆயுள் முன்னை விட அதிகம். பெட்டியை திறந்தால் காலப் பெட்டகத்தை விட்டு வெளிவந்த உயிர்கள் வெளியில் (Space) கலந்து விடும். அப்புறம் அதையும் வெளியையும் பிரித்துப் பார்க்க முடியாது. சிறிய காலப் பெட்டியில் இருப்பவன் அப்படியே பெரிய காலப்பெட்டிக்கு மாறிவிட்டால் அவனுக்கு ஆயுள் அதிகரித்துவிடும்” என்று சொல்லிக் கொண்டு போனவனை “நிறுத்துடா, நிறுத்துடா, எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த அளவுக்கு எனக்கு புத்திசாலித்தனம் கிடையாது என்பது உனக்குத் தெரியாதா. சரி, நீ சொன்னபடி செய்கிறேன்”
என்று புறப்பட்டேன்.

“அம்மாவிடம் என் பிரச்சனை எதையும் சொல்ல வேண்டாம்” “பிழைச்சுக்கிடந்தா சாயங்காலம் பார்க்கிறேன்” என்று கையசைத்தான்.
வெளியில் வந்தவனை, மாணிக்கம் இன்ஸ்பெக்டர் சல்யூட் வைத்தபடி சிரித்து வழியனுப்பினார். வீட்டிற்கு வராமல் நேராக பஸ் ஸ்டாண்ட் வந்து பத்தரைமணி மணி புளியரை வண்டியைப் பிடித்து கடையம் தபால் அலுவலகம் வந்து கடிதத்தை ஏர் மெயில் அனுப்பினேன். ரசீதை கிழித்துப்போட்டேன். மத்தியானம் வீட்டிற்கு வந்து அசந்து தூங்கியவனை அம்மா எழுப்பினாள்.

“யாரோ போலீஸ்காராளாம் வந்திருக்கா உன்னை பார்க்கணுமாம். ஆபீஸீல் என்னடா தப்புத்தண்டா பண்ணிணாய்” என்றாள். வந்த ஆட்கள் யாரும் யூனிபார்மில் இல்லை. அதில் சற்று வயதானவராக இருந்தவர், “என்பெயர் மதுசூதனராவ், மத்திய புலனாய்வுத் துறையில் அஸிஸ்டெண்ட் கமிஷ்னர், உங்களிடமொரு வருத்தமான செய்தியை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் நண்பர் சயன்டிஸ்ட் டாக்டர் . ரகு உங்களை சந்தித்த பின் மாயமாகி விட்டார். அவர் இருந்த அறையை விட்டு வெளியே வரவில்லை.

அவர் பாதுகாப்புக்கு இருந்த இன்ஸ்பெக்டர் மாணிக்கம், கடைசியாக நீங்கள் தான் அவரைப் பார்த்ததாகக் கூறினார். அவர் அறையில் இருந்த காமிராவில் உங்கள் சந்திப்பு பதிவாகி இருந்தது. நீங்கள் புறப்பட்டு விட்டபின் அது பதிவெதுவும் செய்யவில்லை. அது சம்பந்தமாக உங்களை விசாரிக்க வந்துள்ளேன்” என்றார்.

அவர்களிடம், நானும் ஆதியோடந்தமாக நடந்த எல்லாவற்றையும் சொன்னதும். அந்த இரண்டாவது கவரை கொடுத்துவிடுங்கள், நாங்கள் மத்திய அரசின் சார்பில் அதை பறிமுதல் செய்ய ஆணையுடன் வந்துள்ளோம். உங்கள் வீட்டை சோதனையிடப் போகிறோம் என்றனர். கடிதம் என் மேசை மீதே கிடந்ததால் அவர்களுக்கு அதிகம் சிரமம் இல்லை. அவர்கள் கூட வந்திருந்த ஒருவர் ரகுவின் கையெழுத்தை உறுதி செய்தார். மதுசூதனராவ் , “ நாங்கள் கூப்பிடும் போது விசாரணைக்கு வந்து ஒத்துழைக்க வேண்டும். முதல் கவரை கடையம் போஸ்டாபிஸிலிருந்து வாங்கி விட்டோம்”. மறுநாள் செய்தித்தாளில் விஞ்ஞானி மாயம் என்ற செய்தி மட்டும் வந்திருந்தது. கடிதங்களைப்பற்றி எந்த குறிப்பும் இல்லை.

அந்த மத்திய அமைச்சரின் முன்னிலையில் இரண்டு கடிதங்களும் பிரிக்கப்பட்ட போது இரண்டிலும் நான்கு A 4 சைஸ் வெற்றுத் தாள்களே இருந்தன. என்னையும் அப்புறம் யாரும் தொடர்பு கொள்ளவில்லை.

இதெல்லாம் முடிந்து நான்கு ஆண்டுகளுக்குப் பின் பாபனாசத்தில் ஆடி அமாவாசைக்கு பாணதீர்த்தத்தில் குளிக்கச் சென்ற போது அந்த இருள் பிரியாத அதிகாலைபொழுதில் காணி ஒருவருடன் பேசியபடி என்னைக் கணப் பொழுதில் கடந்து சென்ற சடாமுடி சாமியாரின் முகம் ரகு மாதிரி இருந்தது போல் மனதில் பட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *