இங்கேயிருந்து … அங்கே

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: August 31, 2012
பார்வையிட்டோர்: 11,837 
 
 

சடகோபன் இந்தமாதிரி ஒரு நிலவறையில் கச முசாவென ஒயர்கள் பிண்ணிய சூழலில் லாபரட்டரி வைத்திருப்பான் என ஒரு எறும்புக்குக் கூட சந்தேகம் வராது.

“ஹேமா.. இந்த தடவை பாரு.. ஹுயுமன் டிரான்சிஷன் சக்ஸஸ் ஆயிடும்.. அப்புறம் நோபெல் பரிசு நிச்சயம்.. உன் பேரும் பிரபலமாயிடும்”

ஹேமாவுக்கு நோபெல்லைவிட அங்கிருந்து தப்பித்தால் போதும் என்பதே பிரதானமாயிருந்தது. அமெரிக்கா அனுப்புகிறேன் என்று சொல்லி சாமர்த்தியமாய் கிழவன் பாஸ்போர்ட்டை கவர்ந்து எங்கேயோ ஒளித்து வைத்துவிட்டான்.

“எங்கே இந்த பாஸ்கரை காணோம்” சடகோபன் நிலையில்லாமல் நடக்க ஆரம்பித்தான்

”வா பாஸ்கர்… ஆள் கிடைச்சுதா..”

“ஆமாம் புரொபசர்.. கடற்கரையில சிப்பி சேகரிச்சிண்டு.. நடந்துண்டிருந்தான்.. நைச்சியமா பேசி கூட்டிண்டு வந்திருக்கேன்’

” எங்கேடா அவன்”

“ மொத ரூம்லே உட்கார வச்சிருக்கேன்”

“ஆள் எப்படி .. விவரமெல்லாம் சொல்லிட்டியா.. சம்மதிச்சானா?”

“ஆரோக்கியமா இருக்கான். மேலோட்டமா சொன்னேன்.. சரின்னான்.. பைசா தருவேளான்னு கேட்டான்.. புரொபசர் தாராளமாய்த் தருவார்னு சொல்லியிருக்கேன்”

“வா பார்க்கலாம்”

அந்த ஆள் மத்திய வயசினன்.

“ உம் பேரென்னப்பா”

”மோகன்”

‘பாஸ்கி விவரம் சொன்னானா உனக்கு சம்மதமா”

“நீங்கள்தான் சடகோபனா”

”ஆமாம்”

“இது என்ன மாதிரி ஆராய்ச்சி.. நான் என்ன பண்ணணும்”

“உனக்கு பேக்ஸ்னா தெரியுமா”

“தெரியும். ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு ஓர் ஆவணத்தை நகலாக அனுப்ப்புவது”

“சபாஷ் .. சரியா சொன்னே. அதே மாதிரி. ஒரு மனுஷனையும் ஒரு மெஷின் வழியா அனுப்ப முடியும்னு நிரூபிக்க போறேன். அந்தமாதிரி இங்கேயிருந்து … அங்கே டிரான்ஷிஷன் ஆகப் போற முதல் ஹியூமன் நீ தான்”

இது அவனை கொஞ்சமும் அதிர்ச்சியாக்கவில்லை.

”சரி இதற்கு முன் ஏதாவது விலங்குகளை வைத்து பரிசோதித்தாகிவிட்டதா”

“ ஓ பேஷா. ஒரு பூனை, ஒரு மூஞ்சூறு, சின்னதா ஒரு மான்குட்டி எல்லா பர்பெக்டா போச்சு .. நீ தான் முதல் மனுஷன்”

“எனக்காக ஒரு விலங்கை வைத்து செய்து காண்பிக்க முடியுமா”

“இதோ பண்றேனே.. இதோ பார்.. இது தான் அனுப்பற இடம்.. இங்க இந்த மூஞ்சூறை வைக்கிறேன் பார்” என்று சொல்லி ஒரு பெட்டியில் வைத்து மூடினான் சடகோபன்.

“அதோ அந்த் ரூமில் ஒரு குழாய் மாதிரி தெரியறது பார் . அதும் வழியா இந்த மூஞ்சூறு வந்துடும் பாரு”

“இந்த பெட்டிக்கும் குழாய்க்கும் சுரங்க வழி இருக்கிறதா”

“அப்படி இல்லைப்பா.. நீயே பாரு இந்த பெட்டியைத் தூக்கிக் காண்பிக்கிறேன்.. சுரங்கமெல்லாம் இல்லை தானே. என்ன பண்ணியிருக்கேன்னா. இந்த பொட்டியோட நான் கண்டுபிடிச்ச ஒரு விஷேஷ ஸ்கானர் அப்புறம் சக்தி வாய்ந்த ஒரு மோடம் இரண்டையும் சேர்த்திருக்கிறேன்.. ஸ்கானர் இந்த பிராணியை ஸ்கான் பண்ணி சின்ன சின்ன டிஜிட்டல் இமேஜா மாத்திடும் அப்புறம் மோடம் அதை அனலாக் சிக்னலா மாத்தி ஒரு டெலிபோன் லைன் வழியா அந்த குழாய்க்கு முன்னாடி இதே மாதிரி ஒரு மிஷினுக்கு அனுப்பிடும். அந்த மிஷின் திரும்பவும் அதை மூஞ்சூறா மாத்தி அந்த குழாய் வழியா தள்ளிவிடும்”

“புரிகிறது .. எங்கே செய்து காட்டுங்கள்”

சடகோபன்… எதேதோ சுவிட்சுகளை தட்டினான். டெலிபோன் மாதிரி ஒன்றில் டயல் செய்தான். கொஞ்ச தூரத்தில் குழாயுடன் கூடிய அந்த இன்னொரு மெஷினில் “ரூரூரூ ம்ம்ம்ம் “ என்று சத்தம் கேட்டது. கொஞ்ச நேரம் கழித்து இங்கே வைக்கப்பட்ட அந்த மூஞ்சூறு அந்த குழாய் வழியே அந்து விழுந்தது. கொஞ்ச் நேரம் அசைவில்லாமல் கிடந்த்தது. பின் எழுந்து ஒடியது.

சடகோபன் பெட்டியை திறந்து காட்டினான். “பார்த்தியா எலி இங்கெ இல்லை.. டாகுமென்டை பேக்ஸ்ஸில் அனுப்பினால் ரீசீவ் ஆகிற இடத்தில் காப்பிதான் கிடைக்கும். இங்கே ஒரிஜினாலாவே வருது பார்.. காரணம்.. பேக்ஸில் ஒரு பிரிண்டரும் இருக்கு. இங்கே ஒரு விஷேஷ டிரான்ஸ்மிஷன் சூட்ட்சுமம் வச்சிருக்கேன்”

“புரிகிறது.. எனக்கு சம்மதம்.. இந்த நவீன கருவி வழியே பயணப்பட நான் தயார்.. போய் அந்த பெட்டியில் படுத்துக் கொள்ளவா”

”இரு அவசரப படக்கூடாது.. ஒரு பெரிய சாதனையில பங்கு பெற போறாய்.. உன்னைப் பத்தி சில விஷயம் குறிப்பு எழுதி என்னோட ஆர்ரய்ச்சி குறிப்போட சேர்த்துறேன்.. உனக்கும் உலகப் புகழ் நிச்சயம்”

“நீ என்ன வேலை செய்றே”

“எழுத்து”

“புரியலைப்பா”

“நான் ஒரு இலக்கியவாதி”

“ஓ கதை கவிதை எழுதறியா .. பேஷ் பேஷ்”

“அப்படியும் சொல்லலாம். நான் சமூகத்தின் மீது தீவிர அவதானிப்பு கொண்டு அதனால் தேடல் பசி அதிகமாகி தினம் மானுடம் அருந்தும் ஒரு பிறவி”

“ஏம்பா சமீபத்தில் உனக்கு தலையில ஏதாவது அடிபட்டதா”

“ஏன் கேட்கிறீர்கள்”

”இல்ல சும்மா கேட்டு வச்சேன். சின்னதா ஒரு டெஸ்ட் எடுக்கணும் அதுக்கு தான் ஆமா இந்த மாதிரி பரிசோதனை பண்ண உன் வீட்டில் சம்மதிப்பாளா”

“வாழ்க்கையே ஒரு பரிசோதனை தானே”

“ஆமா வந்த போதே கேட்கணும்னு நினைச்சேன். அது என்ன பொஸ்தகம் கையில”

”மோ. அபராஜிதாவின் சமூக நோக்கு”

“யார் எழுதினது”

“நான் தான்”

“அபராஜிதா யாரு. பெரிய சோஷியலிஸ்டா”

“அது என் மகள்”

“என்னப்பா உன்னைப் பார்த்தா நாப்பது நாப்பத்தி அஞ்சு வயசு சொல்லலாம். உனக்கு அவ்ளவு பெரிய பொண்ணா?’

“எனது மகளுக்கு ஆறு வயது”

“சரி தான்.. ரொம்ப லாகிரி வஸ்து உபயோகிப்பியோ ?”

“ஏன் கேட்கிறீர்கள்”

“எனக்கு தெரிஞ்ச ஒருத்தர். வைத்தியர். குணசீலத்தில் இருக்கார்.. முடிஞ்சா போய் பாரு.. அப்புறமா விலாசம் தரேன்… ஏம்பா பாஸ்கி.. என்னப்பா ஸ்திரமா ஒரு ஆளை அழைச்சிண்டு வான்னா.. என்னவோ.. மாதிரி பேசறானேப்பா.. ”

“புரொபசர்… அவன் எப்படி பேசினா என்ன பிசிக்கல் ஹெல்த் செக் பண்ணிப் பாருங்கோ.. ஒத்து வந்தா ஆச்சி இல்லைன்னா அனுப்பிடலாம்”

“அதுவும் சரிதான்.. இந்தாப்பா மோகன்.. இங்க வா”

சில பரிசோதனைகள் முடிந்து.

“மோகன் இப்ப போய் அந்த பெட்டியில் படுத்துக்கோ.. உலக சாதனை பண்ணப்போறே”

அவன் போய் பெட்டியில் படுத்தபின் மூஞ்சூறுக்கு செய்த மாதிரியே செய்தான்.

கொஞ்ச நேரம் வழக்கமான ரூரூம் ரூரூம் சப்தம். மோகன் அந்த குழாய் வழியே வந்தான்.

சடகோபனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை

“பாஸ்கி கை குடு கை குடு. இந்த வருஷம் நோபெல் நிச்சயம்..மோகன் மோகன் .. ரொம்ப தாங்ஸ்பா”

“ஐயா இந்த் குழாய் வழியே பயணமாகும்போது ஒரு வித பிழியப்பட்டதாய் உணர்ந்தேன். மற்றபடி வேறொன்றுமில்லை”

“அதுவா மோகன் .. இப்ப சரி பண்ணிடறேன். இப்பவே இன்னொரு தபா பண்ணலாம். சரியா”

“சரி “

“ஏய் பாஸ்கி.!! இந்தா இப்ப நீ நம்பர் டயல் பண்ணு.. நான் அந்த டியூப் டைமன்ஷன் சிஸ்டம் சரி பண்றேன்”

மோகன் அந்தப் பெட்டியில் படுத்தான்.. அதே …

ஆனால் வழக்கமான சப்தம் வரவில்லை.

“ஏண்டா பாஸ்கி. என்னடா இது. அந்த ஆசாமியைக் கானோம் “

“புரொபசசர் .. பெட்டியை திறந்து பார்க்கவா ‘’

“ டிரான்ஸ்மிஷன் மெசேஜ் வந்ததா”

”வந்தது புரொபசர்”

“அப்ப திற”

“அய்யோ .. அந்தாளைக் காணோம்…”

“என்னடா பாஸ்கி சொல்றே. ஒரு வேளை குழாய் நடுவிலே சிக்கிண்டுட்டானோ.. இல்லையேடா..” திறந்து பார்த்து விட்டு அலறினான் சடகோபன்.

“ஏண்டா பாஸ்கி போலீஸ் பிரச்சனையாடுமோடா”

”அதெல்லாம் வராது .. இவன் இங்க வந்தான்னு யாருக்குத் தெரியும்”

“ஏண்டா பாஸ்கி என்னடா இது கிரகச்சாரம்.. இரு டிஸ்பிளேயில் ஏதாவது மெசேஜ் இருக்கா பாக்கறேன்.. அட என்னடா இது.. என்னவோ நம்பர் டயல் பண்ணிருக்கே”.

“இல்லியே சரியாத்தானே பண்ணேன்”

”இல்லைடா இது அந்த குழாயோட பொறுத்தின போன் நம்பர் இல்லை.. எதுக்கும் இந்த நம்பரை லாண்ட் லைனிலிருந்து டிரை பண்ணு எங்க போறதுனு பார்க்கலாம்”

பாஸ்கி டயல் செய்தான்.

மறுமுனை “ Good Evening Pakistan Central Prisons .. Shall I turn the fax tone now” என்றது

– 6 மே 2008

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *