அம்மாவின் வற்றக் குழம்பு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: August 29, 2023
பார்வையிட்டோர்: 2,744 
 
 

ஒரு சனிக்கிழமை மதியம். லிடோ என்கிற என்னுடைய சமையில்கார ரோபோ தட்டில் சாப்பாடுடன் வந்தது. “புதிதாக செய்திருக்கிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்.”

“புதிதா? என்னது?”

“வற்றக் குழம்பு. நெட்டில் ரெசிபி கண்டு பிடித்து செய்தேன்.”

நான் சாப்பிட்டானதும், அருகில் வந்து, “எப்பிடி இருந்தது?”

“சுமாராக இருந்தது. என் அம்மா செய்வது போல் இல்லை.” என்றேன். லிடோவிடம் ஒரு சௌகர்யம். அது மனம் புண்படுமோ என்று பொய் சொல்லத் தேவையில்லை.

முகத்தில் எந்த சலனமும் இன்றி, “உங்கள் அம்மாவின் ரெசிபி கொடுக்க முடியுமா?” என்றது.

அம்மா இறந்து இரண்டு வருடங்கள் ஆகின்றன. அம்மாவின் பூட்டிய அறைக்குச் சென்று, துசு படிந்த பெரிய பைண்ட் செய்த நோட் புக்கை கொண்டு வந்து கொடுத்தேன். குண்டு குண்டான அம்மா கையெத்தில் நூற்றுக்கும் மேலான ரெசிபிகள்.

அடுத்த சனிக்கிழமை. மறுபடி அதே வற்றக் குழம்பு. “உங்கள் அம்மாவின் ரெசிபி படியே செய்திருக்கிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்.”

சாப்பிட்டு விட்டு, “இந்த தடவை பரவாயில்லை. ஆனாலும்,என் அம்மா செய்வது போல் இல்லை.” என்றேன்.

சிறிது நேரம் யோசித்த லிடோ, “உங்கள் அம்மா வற்றக் குழம்பு செய்த சட்டியை கொடுக்க முடியுமா?” என்றது. பரண் மீது ஏறி, அம்மா பயன்படுத்திய பாத்திரங்கள் இருந்த மூட்டையை பிரித்து, கருப்புக்கறை படிந்த சட்டியை எடுத்துக் கொடுத்தேன்.

அடுத்த சனிக்கிழமை, மறுபடி லிடோவின் வற்றக் குழம்பை சாப்பிட்டு விட்டு, அதே “அம்மா செய்வது போல் இல்லை.” கமெண்ட் அடித்து விட்டு, “அம்மா குழாய் தண்ணி ஊற்றுவாள். நீ எந்த தண்ணி ஊற்றினாய்?” என்று கேட்டேன்.

“ஓ, நான் பாட்டில் தண்ணி ஊற்ற்றினேன். அடுத்த முறை சரியாக செய்கிறேன்.”

அடுத்த சனிக்கிழமை. மறுபடி வற்றக் குழம்பு. “இந்த முறை சரியாக இருக்கும். சாப்பிட்டுப் பாருங்கள்.” என்றது லிடோ.

ஒரு வாய் எடுத்து சாப்பிட்டேன். அம்மா வற்றக் குழம்பின் மணம் இல்லை.

அப்போது தான் லிடோவின் கம்பெனி விற்பனையாளர் சொன்னது ஞாபகம் வந்தது. “இனி மேல் லிடோவுக்கு நீங்கள் தான் எல்லாம். உங்களை திருப்தி செய்வது மட்டுமே அதற்கு குறிக்கோள். அதற்காக விடாது வேலை செய்யும். அந்த மாதிரி அதை ப்ரோக்ராம் செய்திருக்கிறோம்.”

நான் லிடோவைப் பார்த்து, “ஆஹா, என்ன ருசி… அம்மா செய்வது போலவே உள்ளது.” என்றேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *