அடையாளம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: June 21, 2018
பார்வையிட்டோர்: 39,348 
 
 

மனநல மருத்துவர் டாக்டர். சிவகுருநாதன் காரை விட்டு இறங்கி கைப் பெட்டியுடன் ஏதோ சிந்தனையில் திவ்யா மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிட்டலின் உள்ளே நுழைந்தார். அந்த பல்நோக்கு மருத்துவமனையில் அவருக்குரிய ஆலோசனை அறையை அடைய வரவேற்பறையைத் தாண்டித்தான் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அவரது வரவை கண்ணுற்ற வரவேற்பாளினி கனிஷ்கா நமுட்டுச் சிரிப்புடன் “வணக்கம் டாக்டர், வழக்கம் போல பேஷண்ட் அப்பாயின்மெண்ட் இல்லை” என்றதை காதில் வாங்கி புன்சிரிப்புடன் தலையசைத்துக் கடந்தார்.

கனிஷ்கா ஸ்டெல்லாவில் ஆங்கில இலக்கியம் படித்தவள். அப்புறம் அப்பல்லோவில் ஹாஸ்பிட்டல் மேனேஜ்மெண்ட். தன் சரளமான ஆங்கிலத்தில் வருபவரை வேண்டுமென்றே திணறடிப்பாள். அதில் கொஞ்சம் கர்வம் கலந்த அல்பத் திருப்தி உண்டு. சிவகுருநாதன் தன் வாழ்நாளில் பாதிக்கு மேல் வெளிநாடுகளில் ஆராய்ச்சிகளுக்காக கழித்தவர் என்பது அவள் அறியாத ஒன்று. அவரது எளிய தோற்றம் அவளை மற்ற மருத்துவர்களை விட அவரை ஒருபடி குறைவாகவே மதிப்பிடத் தோன்றியதில் வியப்பொன்றும் இல்லை. அவரும் தன் அனுபவத்தையோ கல்வித் தகுதிகளையோ மருத்துவ மனை பணியாளர் எவரிடமும் பறைசாற்றியது இல்லை.

அந்த மருத்துவமனையில் பொதுவாகவே ஆலோசனை மருத்துவர்களின் அறைகளின் முன்பு எப்போதும் புற நோயாளிகளின் கூட்டம் ஜே ஜே என்றிருக்கும். மாலை ஆறு மணிக்கான ஆலோசனை அப்பாயிண்ட்மெண்ட் என்றால் மதியம் மூன்று மணிக்கே போய் காத்திருந்தால்தான் கிடைக்கும். ஆனால் டாக்டர் சிவகுருநாதன் அறைக்கு முன் ஒரு நாளும் அப்படியெல்லாம் மொய்க்கும் கூட்டமோ இல்லை பரபரப்போ இருந்தது மருத்துவமனை சரித்திரத்திலேயே கிடையாது.

மருத்துவமனையில்ஆயாக்களைப் பொருத்தவரை இதய டாக்டர், கிட்னி டாக்டர் மாதிரி இவரை மெண்டல் டாக்டர் என்றே குறிப்பிடுவார்கள். சிவகுருநாதன் அவர்களது கிண்டலையோ நமுட்டுச் சிரிப்பையோ என்றுமே பொருட்படுத்தியதில்லை. அவர் மனநல மருத்துவத்தை விரும்பிப் படித்தார். வெளிநாடுகளில் அதற்கு உள்ள மதிப்பும் மரியாதையும் இந்தியாவில் மெண்டல் டாக்டர் என்ற ஒற்றை வர்ணிப்பில் காணாமல் போய் விடுவதில் வருத்தம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொண்டதில்லை. பல நாடுகளில் மருத்துவ கல்லூரி பேராசிரியராகப் பல ஆண்டுகள் பணியாற்றி விட்டார். செல்வந்தக் குடும்பத்தின் வாரிசு என்பதால் பெரிதாக சம்பாதிக்கும் ஆசையும் அவருக்குக் கிடையாது. மனநல மருத்துவத்தில் பெரிய அளவில் ஒரு பிரேக் த்ரூ கிடைத்து பெரிய சாதனை படைக்க வேண்டும் என்ற ஆசை இன்னமும் நீறுபூத்த நெருப்பாக அடி மனதில் இருக்கிறது. அவரது பணிக்காலத்தில் மன நல மருத்துவம் குறித்து ஐம்பதுக்கும் மேலான ஆய்வுக் கட்டுரைகள் உலகத்தரம் வாய்ந்த மருத்துவ ஜர்னல்களில் வெளியாகி உள்ளது. இன்று கொடிகட்டிப் பறக்கும் பல முன்னணி மருத்துவர்கள் அவரது முன்னாள் மாணவர்களே.

அப்படியாகப்பட்ட முன்னாள் மாணவர்களில் ஒருவர் டாக்டர். தினேஷ். தன்னுடைய மனைவி திவ்யாவின் பெயரில் பல் நோக்கு மருத்துவமனை அமைத்த போது, மருத்துவ மனையில் எல்லாத் துறைகளிலும் தலைசிறந்த மருத்துவர்களைஆலோசனை மருத்துவர்களாக நியமித்தார். மனநல மருத்துவத்தில் தன் ஆசிரியர் சிவகுருநாதனை நியமிக்க அணுகிய போது “தினேஷ், இந்தியாவில் மன நல மருத்துவத்தின் முக்கியத்துவம் இன்னும் பொது மக்களிடம் பரவவில்லை. ஆகவே நான் அங்கு ஒரு காட்சிப் பொருளாக மட்டுமே இருக்க முடியும். பெரிய அளவில் என்னால் உனக்கு வருமானமோ அல்லது வேறு வகையில் உபயோகமாகவோ இருக்க முடியாது” என்று மறுத்தும் தினேஷ் கேட்கவில்லை.

டாக்டர் தினேஷும், “ஸார், என் மருத்துவமனையில் ஒரு அறை உங்களது அறை. அதை ஆலோசனை, ஆராய்ச்சி என்று எப்படி வேண்டுமானாலும் பயன் படுத்திக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டான். சரி என்று ஒப்புக் கொண்டு விட்டார். தின்மும் மாலை ஐந்து மணிக்கு வந்து விடுவார். தினம் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று பேர் ஆலோசனைக்கு வந்தால் அதிசயம். அதிலும் பாதிக்கு மேல் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தம்பதிகள்தான். அவர்களில் பலரது மணமுறிவு முடிவை மாற்றியதில் கிடைத்த மனநிறைவு அவருக்குப் போதுமானதாக இருந்தது.

மருத்துவமனையில் மற்றதுறை மருத்துவர்கள் ஆலோசனைக்கு வாங்கும் அளவு பெரிய தொகை அவர் தன் ஆலோசனைக்கு வாங்குவதில்லை. சொல்லப் போனால் பலரிடம் பணமே வாங்குவதில்லை. ஆலோசனைக்கு யாரும் வராத நேரத்தில் படித்துக் கொண்டிருப்பார். சில நேரங்களில் மூப்பின் அசதியில் சற்றே கண்ணயர்வதும் உண்டு. ஆலோசனை அறைக்கு வெளியே ஒரு காரியதரிசி மற்றும் உதவிக்கு ஒரு ஆயா. ஆள் யாராவது வரவேற்பில் விசாரித்தால் அவருக்கு இண்டர்காமில் தெரிவிக்கப்படும். அவர்கள் அவரது கணினிக்கு நோயாளியின் விவரங்களை அனுப்பி விடுவார்கள். அதைப் படித்த பின்னர் அவர்களை அழைப்பார். இது வாடிக்கை.

நேற்று இரவு சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைத்ராபாத் அணி ஆட்டம் தொலைக் காட்சியில் பார்த்துவிட்டு படுக்கும் போது மணி பன்னிரெண்டு. மதியம் தூங்குவது இல்லை. குளிர்பதன அறையின் மிதமான குளிரில் ஈ.எஸ்.பி பற்றிய “அன்னி ஜேக்கோப்சென்” எழுதிய “பினாமினா” வை எடுத்துப் படிக்க ஆரம்பித்தார். பத்து பக்கம் ஓடியிருக்கும். லேசாக தூக்கம் சொக்கியது. இண்டர்காம் மெல்ல ஒலித்தது.

வரவேற்பில் சுமாராக அறுபத்தைந்து முதல் எழுபது வயது மதிக்கத்தக்க நெற்றியில் திருமண் அணிந்த, ஒல்லியாய் உயரமாய், சாதாரண உடையில் டிராபிக் ராமசாமி போன்ற தோற்றத்தில் கனிஷ்காவிடம் அமெரிக்க உச்சரிப்பில் விசாரித்துக் கொண்டிருந்தார். அவரது தோற்றத்தைக் கண்ட கனிஷ்கா தன் ஆங்கில அறிவை பியோக்கிக்க அதற்குப்பதிலாக அவரது ஆங்கிலத்திற்கு சமமாக உரையாடத் திணறும் கனிஷ்காவை ஆச்சரியமாகப் பார்த்தனர் மற்ற பணியாளர்கள். மன நல மருத்துவர் ஆலோசனை என்று தெரிந்து கொண்டு, டாக்டர் சிவகுருநாதனை இண்டர்காமில் அழைத்தாள். அந்த பெரியவர் விவரம் எதுவும் அளிக்கவில்லை. டாக்டரிடம் மட்டுமே சொல்ல முடியும் என்று கூறுவதாகத் தெரிவித்து பேஷண்டை அனுப்பவா என்று அனுமதி கேட்டாள்.

கனிஷ்காவிடம் அனுப்பச் சொல்லிவிட்டு பஸ்ஸரை அழுத்தி காரியதரிசியிடம் அந்த மனிதரை வரச் சொல்லி, காத்திருந்தார். கதவை மெல்லத்திறந்து உள்ளே நுழைந்த மனிதர் மாலை வணக்கம் டாக்டர் என்றார். பின்னர் அமெரிக்க பாணியில் கை கொடுத்து,

“ஐ யம் கரோலின் ஃப்ரம் நியூ ஆர்லியன்ஸ்” என்று சொல்லி அதிர வைத்தார்.

இது போல் பல கேஸ்களை பார்த்த அனுபவத்தில்,

“ வெல். கரோலின். ஐ ஆம் டாக்டர் சிவகுருநாதன், சைக்யாட்ரிஸ்ட், வாட் ஐ கன் டூ பார் யூ”? என்றார்.

இனியும் அவர்களது உரையாடலை ஆங்கிலத்தில் தருவது தமிழ் சிறுகதையில் ஞாயமில்லை. ஆகவே இனி வரும் உரையாடல்கள் தமிழில்.

“ டாக்டர், எனக்குச் சரியாக நினைவில்லை. நேற்றிரவு என்று கருதுகிறேன். நியூ ஆர்லியன்ஸில் என் வீட்டில் பகலில் படுத்து தூங்கி விட்டேன். கண் விழித்துப் பார்த்தால் சம்பந்தம் இல்லாமல் எதோ ஒரு இந்திய நகரம், சென்னை என்று சொல்கிறார்கள் இங்கு இருக்கிறேன். ஒன்றுமே புரியவில்லை”.

“ஒரு நிமிடம் கரோலின், நீங்கள் இங்கு எந்த இடத்தில் கண்விழித்தீர்கள்”?

“அது ஒரு படுக்கை அறை ஃபிளாட். அந்த ஃபிளாட்டில் படுக்கை அறையில் நான் மட்டும் தனியே இருந்தேன். யாரோ கதவைத் தட்டும் ஓசையில் எழுந்து வந்து கதவைத் திறந்தால் புரியாத மொழியில் பேசியபடி வயதான பெண்மணி உள்ளே வந்து வீட்டை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள். வேலை முடித்த பின் ஃபிரிட்ஜிலிருந்து பால் எடுத்து காபி தந்து விட்டு காலை உணவிற்கு எதோ இந்திய பலகாரம் செய்து விட்டு மீண்டும் புரியாத மொழியில் சொல்லி விட்டு கிளம்பிப் போனாள். அந்தப் பெண் பேசும் போது சொன்னதில் ஈவ்னிங், வாட்டர், மார்கெட் ஆகிய வார்த்தைகள் தெரிந்தவையாக இருந்தன. ஆகவே ஆங்கிலம் இந்த இடத்தில் பேசும் மொழி என்று தெரிந்தது. குழப்பத்தில் படுக்கை மீது கிடந்த கைபேசியை எடுத்துக் கொண்டு, வீட்டின் சாவியைத் தேடிப் பார்த்து கண்டு பிடித்து எடுத்தேன்”.

“கதவைப் பூட்டிக் கொண்டு வெளியில் வந்தேன். கண்ணில் பட்ட பலரும் எனக்கு காலை வணக்கம் சொல்லிச் சென்றனர். யாரும் எந்த வித்தியாசமான மாற்றத்தையும் என்னிடம் காணவில்லை. நல்ல வேளை கைபேசியில் ஜிபிஎஸ் இருந்தது. அதிர்ஷ்டவசமாக ஃபோன் பூட்டப் பட்டிருக்கவில்லை. கூகிள் மேப்ஸ் மூலம் என் இருப்பிடம் மற்றும் அருகில் உள்ள பெரிய மருத்துவமனையைக் கண்டறிந்து இங்கு வந்து சேர்ந்தேன். உங்களைச் சந்தித்ததும் என் வினோதமான நிலைக்கு நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன் டாக்டர்”.

“நல்லது கரோலின், நேற்று நீங்கள் படுக்கச் செல்லும் முன் என்ன செய்தீர்கள்”

“ எனக்கு தொலைக் காட்சியில் ட்ராவல் எக்ஸ்பிரஸ் நிகழ்ச்சிகளைக் காணப்பிடிக்கும். அதில் இந்தியா பற்றிய ஒரு டாக்குமெண்டரி பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் தென் இந்திய கோவில்களில் ஏதோ பார்த்தசாரதி பெருமாள் கோவில் என்று ஒன்றைப் பற்றிச் சொல்லியிருந்ததாக நினைவு.”

“ ஓ. அப்படியா”, என்று யோசனையில் ஆழ்ந்தார் சிவகுருநாதன்.

எதிரே நாள் காட்டி.

பெரியதாக திருவள்ளுவர் படம் போட்டு

18.05.2018 வெள்ளி என்றும்

“உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி

விழிப்பது போலும் பிறப்பு”

என்று எழுதியதைப் படித்ததும் பொறி தட்டியது.

ஏன் இது ஒரு வகையான உடல் விட்ட நிலையாக (OUT OF BODY EXPERIENCE) இருக்கக் கூடாது?

“கரோலின், உங்களுக்கு வாட்ஸ் ஆப் உண்டா”?

“ஆம். இருக்கிறது”.

சரி. நல்லது. உங்களிடம் இப்போது கையில் உள்ள அந்த போனில் வாட்ஸ் ஆப் இருக்கிறதா என்று பாருங்கள்”.

“இருக்கிறது டாக்டர்”.

“இப்போது உங்களது எண்ணை இதில் அழையுங்கள். அப்போது உங்கள் உடலில் யாருடைய ஆன்மா உள்ளது என்று முதலில் அறியலாம்.அந்த ஜீவன் அங்கே என்ன பிரச்சனைகளைச் சந்திக்கிறது என்று பார்ப்போம்”.

“என் தியரிப்படி பகல் உறக்கத்தில் உடலை விட்டு திரிந்த உங்கள் ஆன்மாவும், இங்கு இரவு உறக்கத்தில் உடலை விட்டு திரிந்த இன்னொருவரின் ஆன்மாவும், எதோ எதிர்பாராத நிகழ்வில் தவறுதலாக கூடு திரும்பும் அவசரத்தில் இடம் மாறி இருக்க வேண்டும். இது போன்ற நிகழ்வு எதுவும் இதுவரை மருத்துவ உலகின் வரலாற்றில் இல்லை. ஒரு வகையில் நம்ப முடியாமலும் அதே நேரத்தில் புதிராகவும் உள்ளது. முதலில் உங்கள் உடலில் உள்ள ஆன்மா யார் என்று பார்க்கலாம். பின்னர் அவர் உடலில்தான் உங்கள் ஆன்மா உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம். அப்புறம் மீண்டும் ஆன்மாக்களை அவரவர் சொந்த கூட்டிற்கு அனுப்புவது பற்றி சிந்திக்கலாம்”

“புரிகிறது டாக்டர். நான் உடனே என் எண்ணைத் தொடர்பு கொள்கிறேன்”.

“………………………..ப்ச், வாட்ஸ் ஆப்பில் பத்து முறை கூப்பிட்டு விட்டேன். எடுக்கவில்லை. மனமும், உடலும் சோர்வாக இருக்கிறது. இந்த சேரில் சற்று தூங்கிக் கொள்கிறேன் டாக்டர்”

“நல்லது. தாராளமாக. அரைமணி நேரம் ஓய்வெடுங்கள். வேண்டுமானால் உள் நோயாளியாக உங்களை பதிவு செய்து கண்காணிப்பில் வைக்கவும் ஏற்பாடு செய்கிறேன். எனக்கும் அடுத்த கட்டத்திற்கு நடப்பது பற்றி சற்று சிந்திக்க வேண்டும்.”

அந்த முதியவர் பிளாஸ்டிக் நாற்காலியில் தூங்க ஆரம்பித்தார். கடிகாரம் மணி 7.00 என்று காட்டியது. டாக்டர் சிவகுருநாதன் நிகழ்வை சிந்தித்தபடி கண்ணை மூட லேசாக உறக்கம் வந்தது. திடுக்கிட்டு கண் விழித்த போது மணி 8.00. நேரமாகி விட்டது. இன்று 8.30 மனைவி காமாட்சியுடன் சவேரா ஹோட்டலில் இரவு டின்னர் என்பது நினைவுக்கு வர கைப் பெட்டியையும் கார் சாவியையும் எடுத்துக் கொண்டு அவசரமாகக் கிளம்பிய போது எதிர் நாற்காலி காலியாக இருந்தது. கரோலின் தாத்தாவைக் காணவில்லை. எல்லாம் கனவாக இருக்கும் போலிருக்கு. அறைக் கதவைத் திறந்து வெளியில் வந்தால் காரியதரிசி, ஆயா எல்லாரும் வீட்டிற்குப் போய் விட்டனர். வராந்தா காலியாக இருந்தது. வரவேற்பில் இரண்டு கற்றுக் குட்டி நர்ஸ்கள் இருந்தனர். தெரிந்த முகம் எதுவும் இல்லை. சரி நாளைக்கு கனிஷ்காவிடம் விசாரித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் காரை கிளப்பிக் கொண்டு வெளிவந்து செக்யூரிட்டியிடம் பாஸ் காட்டி வெளியில் வந்து வேகம் பிடித்து வீட்டை அடைந்து கதவைத் திறக்க மணி அழுத்த,

ஒரு நிமிடம் கழித்து பூட்டியிருந்த கிரில் கதவுக்குள் இருந்த மரக் கதவைத் திறந்த மகன் மாதவன்,

“அம்மா, அப்பாவைத் தேடி யாரோ வந்திருக்காங்க”.

“யாரு வேணும். டாக்டர் இன்னும் வரவில்லை என்று சொல்லி கதவை படார் என்று மூடினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *