அங்கு கண்ட மனிதர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அறிவியல்
கதைப்பதிவு: September 12, 2023
பார்வையிட்டோர்: 2,690 
 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பன்னாட்டு வான்வெளி ஆய்வு மையம் மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டு இருந்தது. ஆம் பல நூறு ஒளியாண்டுகள் தள்ளி இருக்கும் ஒரு கோளில் மனிதர்கள் இருப்பதை கண்டுபிடித்து விட்டனர். அண்ட சராசரத்தில் முடிவிலா பயணம் மேற்கொண்டு இருக்கும் புவியில் இருந்து அனுப்பப்பட்ட ஒரு விண்கலம் அதை படம் பிடித்து அனுப்பி இருக்கின்றது. வந்து இருந்த படத்தில், மிகப்பெரிய சமவெளியில் கூட்டம் கூட்டமாக மனிதர்கள் இருக்கின்றனர்.

‘ஆடைகள் இன்றி இருப்பதால், நாகரிக காலம் இன்னும் அங்கு தோன்றாமல் நாம் ஆதியில் இருந்ததைப் போல இருக்கின்றனர் போலும்” என்றார் ஓர் அறிவியல் ஆளர்

“இந்தக் கோளின் ஒரு பகுதியைத் தானே படம் பிடித்து இருக்கின்றது நமது விண்கலம்… மறு பகுதிக்கான படங்கள் என்று வரும் ?” என்ற பத்திரிக்கையாளரின் கேள்விக்கு

‘இன்னும் ஓர் ஆண்டில் எதிர்பார்க்கின்றோம் ” பதில் சொன்னார் தலைமை அறிஞர்.

உலகமே இதைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருந்தது . கல் தோன்றா மண் தோன்றா காலம் முன்னரே அங்கு சென்ற நமது தொப்புள் கோடி உறவுகளாக இருக்கும் என தமிழ் நாட்டுத் தலைவர்கள் கட்டுரைகள் எழுதினர். ஏக இறைவன் மனிதனைப் படைத்தான். பல இடங்களில் அவனை அமர வைத்தான் என ஆபிரகாமிய மதங்கள் புது விளக்கங்கள் கொடுத்தன. அவர்கள் அனேகமாக இந்திரனைத் தலைமையாகக் கொண்ட தேவர்களாக இருக்கக் கூடும். ஆடை இல்லை என்பது ஒரு முக்கியமான விஷயம் என்பதால், ஒளிக்கூசும் ஆடைகளை விண்கலம் படம் பிடிக்க இயலவில்லை என வேத விற்பனையாளர்கள் விளக்கம் சொன்னார்கள். மேற்கு உலகில், எவ்வளவு விரைவில் அங்கு போக முடியும் என்பதற்கான ஆராய்ச்சிகள் தொடங்கலாயின.

அதே நேரத்தில் மனிதர்களைக் கண்டுபிடித்த கோளின் மறுபக்கத்தில்,

பிரம்மாண்டமாய் இருந்த டைனசோர்கள், கற்பனையின் உச்சத்தில் ஒரு கட்டிடம் இருந்தால் எப்படி இருக்குமோ அவ்வகையான கட்டமைப்பின் மையத்தில், இன்னும் இருபது வருடங்களுக்குள் ஏற்படப் போகும் உணவுப் பற்றாக்குறையை விவாதிக்கக் கூடி இருந்தன. “மனித இனப்பெருக்கம் குறைந்து கொண்டே வருகின்றது .. அடுத்த பத்து ஆண்டுகளுக்குள் நமக்கு சத்தான மனித மாமிசம் கிடைப்பது நின்று விடும்

விவாதம் போய்க் கொண்டிருக்கையில் தலைமை காவல் மையத்திடம் இருந்து தகவல் வந்தது. ஐயத்திற்கு இடமான ஒரு பொருள் ஒன்று நமது கோளின் மேல் சுற்றிக் கொண்டு இருக்கின்றது. “அழித்து விட வேண்டாம், அதன் தொடர்புகளைக் கண்காணியுங்கள்… பின் தொடருங்கள் ” அடுத்த சில மணி நேரத்தில் அடுத்த செய்தி வந்தது

“மகிழ்ச்சியான செய்தி, அந்த சந்தேகத்திற்கு இடமான பொருள் தொடர்பு கொள்ளும் கிரகத்தில் , நாம் உணவிற்காக வளர்க்கும் மனித விலங்குகள் ஏராளமாக இருக்கின்றன.”

“அருமை… நாளையே நமது கலங்களைத் தயார் செய்யுங்கள் .. நமது எதிர்கால உணவுப் பிரச்சினை தீர்ந்தது”

கோளின் மறுபக்கப் படங்கள் புவிக்கு வரும் முன்னரே, டைனோசர்கள் பூமியில் களம் இறங்கின.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *