ஷா ஆலம் முகாமின் ஆவிகள்

0
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: March 18, 2014
பார்வையிட்டோர்: 75,597 
 
 

ஷா ஆலம் முகாமில் பகல்கள் எப்படியோ ஒருவாறு கழிந்து கொண்டிருந்தன. ஆனால் இரவுகள் மட்டும் முடிவிலாது நீண்ட துர்சொப்பனாங்களாகிக் கொண்டிருந்தன. இந்தக் கொடுமையான நரகவேதனையிலிருந்து ஆண்டவரால் மட்டுமே எங்களைக் காப்பாற்ற முடியும். என்ன ஒரு மிகப் பயங்கரமான அமளி இது? உங்களுடைய குரலையே உங்களால் மிகவும் பலவீனமாகத்தான் கேட்க முடிகிற அளவுக்கு கூக்குரலும் ஓலமும், முனகலும், பேரழுகையும் மொத்தமாய்ச் சேர்ந்த ஒரு கலவையாக….

நள்ளிரவுக்குப் பிறகு ஆவிகள் தங்கள் பிள்ளைகளைப் பார்க்க வருகின்றன. அநாதைகளைத் தடவிக் கொடுக்கின்றன. தலையை ஆதுரமாகத் தடவி ஜீவனற்ற அந்த அநாதைக் குழந்தைகளின் கண்களுக்குள் தங்களின் பாழடைந்த வெற்று நிலம் போல வெறித்துக் கிடக்கும் கண்களால் எதையோ தெரிவிக்க விரும்புவதைப் போன்ற பாவனையுடன் வெறித்துப் பார்க்கின்றன. அந்தக் குழந்தைகளைத் தங்கள் மார்பகங்களில் அறைந்து புதைத்துக் கொண்டு அவர்களை உயிருடன் எரித்த போது வெளியேற்றிய அலறல்களை ஒத்துத் தொண்டைகளில் வெற்றுக் காற்றினை வெளியேற்றுகின்றன.

அந்த முகாமில் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் வேளையில் குழந்தைகள் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தன. அவை தங்கள் தாய்மார்களைப் பார்க்கவும், தந்தைமார்களுடன் இரவு உணவை சாப்பிடவும் காத்துக் கொண்டிருந்தன.

“எப்படி இருக்கிறாய் சிராஜ்?” தலைமயிரைப் பாசத்துடன் அளைந்து கொண்டும் தடவிக் கொடுத்தும் தாய் ஆவி கேட்டது.

“நீ எப்படி இருக்கிறாய் அம்மா?” அம்மா ஆவி மிகவும் சந்தோஷமாகக் காட்சியளித்தது. “நான் இப்போது ஒரு ஆவி சிராஜ். என்னை இனிமேல் யாரும் உயிரோடு எரிக்க முடியாது”.

“அம்மா, என்னால் உன்னைப் போல ஆக முடியுமா?

ஒரு நள்ளிரவில் மிகவும் படபடப்புடனும் கொதித்துப் போயும் காணப்பட்ட ஒரு பெண்மணியின் ஆவி ஷா ஆலம் முகாமுக்கு வந்தது. அது தன் உலகத்திலும் இங்கும் காணாமல் போன தன்னுடைய பிள்ளையைத் தேடி வந்தது. அந்த அன்னையின் இதயம் துக்கத்திலும் பீதியிலும் ஏறத்தாழ வெடித்துச் சிதறும் நிலையில் இருந்தது. அந்தத் தாயின் பிள்ளையைத் தேடிக் கண்டுபிடிக்க இன்னொரு பெண்மணியின் ஆவியும் துணைக்கு வந்தது.

முகாம் முழுதும் இருவரும் தேடிப்பார்த்தனர். பின்னர் அந்தத் தாய் உயிரோடு இருந்தபோது வசித்த வீட்டின் அக்கம் பக்கத்திலும் தேடிச் சென்று பார்த்தனர். தெரு முழுதும் பல இடங்களில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. விறகுக் குவியல் எரிவது போல வீடுகள் எரிந்து சிதைத்து கொண்டிருந்தன. இப்போது அவை ஆவிகளாக இருப்பதால் தங்கள் விருப்பத்துக்கு வந்து போக அவைகளால் முடிந்தது. அந்தக் கொழுந்து விட்டு எரியும் பகுதிக்குள் மிகவும் சுலபமாக அவைகளில் நுழைய முடிந்தது. ஒவ்வொரு மூலை முடுக்கிலும், புகை மண்டிய இருட்டு மூலைகளிலும் தேடிப்பார்த்தன. அந்தத் தாயின் குட்டி மகனை அவர்களால் எங்கும் காணமுடியவில்லை.

விரக்தியுடன் அவை கலகக்காரர்களின் வீடுகளுக்குச் சென்றன. அந்தக் கிராதகர்கள் அங்கு பெட்ரோல் குண்டுகளைத் தயாரித்துக் கொண்டும், துப்பாக்கிகளைத் துடைத்துக் கொண்டும் கொலைக் கருவிகளைத் துடைத்துக்கொண்டும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தனர். அந்தத் தாய் தன் சிறு பிள்ளையைப் பற்றிக் கேட்டதற்கு õõபைத்தியக்காரி, இங்கே கணக்கிலடங்காமல் ஆட்கள் உயிரோடு எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதில் ஒரு பொடியனை யாரால் கணக்கில் வைத்துக் கொண்டிருக்க முடியும்? அவன் எங்காவது சாம்பல் மேட்டுக்கு அடியில் புதைந்திருப்பான் அல்லது ஏதாவது இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிப் புதைந்து போயிருப்பான்öö என்று அவளை நோக்கி கேலிப்புன்னகையுடன் இரைந்தார்கள்.

“இல்லை, இருக்கவே இருக்காது. நான் எல்லா இடத்திலும் தேடிப் பார்த்தேன். அவனை எங்கும் காணமுடியவில்லையே”… என்று கதறியது.

ஒரு கலகக்காரன் கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டான். “ஏய்… திரிசூலத்தில் குத்தித் தொங்கவிட்டோமே, அந்தப் பையனின் தாயா இவள்? என்று கேட்டான்.

ஆவிகள் ஷா ஆலம் முகாமுக்கு நள்ளிரவுக்குப் பிறகு வருகின்றன. அவை உணவு, உடை, மருந்து போன்றவற்றை சொர்க்கத்திலிருந்து எடுத்து வருகின்றன. அதனால்தான் சீக்குப் பிடித்த, நிர்வாணமான, பசித்த அல்லது தாகத்தினால் வாடும் குழந்தைகளை நீங்கள் ஷா ஆலம் முகாமில் காண முடியாது. இந்த ஒரு காரணத்துக்காகவே ஷா ஆலம் முகாம் மிகவும் பிரசித்தி பெற்றது. அதன் புகழ் மாண்டவர்களிடையே மிகவும் ஓங்கி வளர்ந்திருந்தது. இந்த முகாமைப் பார்வையிட தில்லியிலிருந்து வந்திருந்த ஒரு குறிப்பிட்ட பிரமுகருக்கு இந்த முகாமில் கண்ட காட்சிகள் மிகவும் பிடித்துப் போனது. õõஇது மிகவும் அற்புதமான இடம். இந்தியா முழுமைக்கும் உள்ள முஸ்லிம் குழந்தைகளை இங்கு கொண்டு வந்து வைக்க வேண்டும்õõ என்று சொன்னார்.

ஷா ஆலம் முகாமுக்கு நள்ளிரவுக்குப் பிறகு ஆவிகள் வருகை தரும். இரவு முழுக்கத் தங்கள் குழந்தைகளுடன் தங்கியிருந்து, பாசத்துடன் அவர்களை உற்றுப் பார்த்துக்கொண்டு, அவர்களைப் பற்றிக் கவலைப் பட்டுக்கொண்டு, அவர்களைப் பற்றி அக்கறை எடுத்து, அவர்களுடைய எதிர்காலத்தின் மீது அக்கறையுடன் அவர்களுடன் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

“சிராஜ், இப்போது நீ வீட்டுக்குப் போக வேண்டும்” தாய் ஆவி தன் பிள்ளையிடம் சொன்னது.

“வீடா?” சிராஜ் கண்களில் பீதி இருள் சூழ திகைப்புடன் கிசுகிசுத்தான்.

“ஆமாம். வீடு. எவ்வளவு நேரம்தான் நீ இங்கே தங்க முடியும்? உன்னை ஒவ்வொரு ராத்திரியும் கண்டிப்பாக வந்து பார்த்து விட்டுப் போவேன்”.

முடியாது… முடியாது… எப்போதும் நான் வீட்டுக்குப் போக முடியாது. புகை, தீ, ஓலங்கள், கூச்சல். என்னால் வீட்டுக்குப் போக முடியாது”.

“அம்மா… எனக்கு உன்னுடனும் அப்பாவுடனும் வாழ வேண்டும்”.

“கண்ணே… நி எப்படி எங்களோடு வாழ முடியும்?”

“ஆனால் மாமாவும் அக்காவும் உன்னோடு இருக்கிறார்களே”?

“ஏனென்றால் எங்களோடு சேர்த்து அவர்களும் உயிரோடு எரிக்கப் பட்டார்கள்”.

“சரிம்மா. நான் வீட்டுக்குப் போகிறேன்”.

இருளில் மினுக்கிக் கொண்டு வரும் மின்மினிப் பூச்சிகளைப் போல ஒரு குழந்தை ஆவி நள்ளிரவுக்குப் பிறகு ஷா ஆலம் முகாமுக்கு வருகை தருகின்றது. அது முகாம் எங்கும் சுறுசுறுப்புடன் சுற்றிக்கொண்டிருக்கும். அங்கங்கு விஷமத்தனமான விளையாட்டுக்களிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கும். ஆனால் அதனிடம் மழலைப் பேச்சு இருக்காது. மிகவும் தெளிவாகப் பேசும். தன்னுடைய தாயின் ஆடை மடிப்புக்களுக்குள் ஓடி ஒளிந்து விளையாடிக்கொண்டிருக்கும். தந்தையின் கைவிரல்களைப் பிடித்துக்கொண்டு உற்சாகத்துடன் அலைந்து கொண்டிருக்கும்.

ஷா ஆலம் முகாமின் மற்ற குழந்தைகளைப் போல அல்லாது இந்தக் குழந்தைவியக்கத்தக்க வகையில் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும்.

யாரோ கேட்டார்கள், “நீ ஏன் எப்போதுமே இப்படி மகிழ்ச்சியாக இருக்கிறாய்?”

“தெரியாது. எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்று நினைத்தேன்”.

“என்ன தெரிந்திருக்கும்”

“நான்தான் சாட்சி என்று”.

“சாட்சியா? எதற்குச் சாட்சி?”

“நான் தைரியத்தின் சாட்சி”

“யாருடைய தைரியத்துக்கு நீ சாட்சி?”

“என்னுடைய தாயின் கருப்பையை உரித்துக் கிழித்து என்னை வெளியே எடுத்து இரண்டாக வெட்டிப் பிளந்தவர்களுக்கு”…

ஷா ஆலம் முகாமுக்கு நள்ளிரவுக்குப் பிறகு ஆவிகள் வருகின்றன. ஒரு தாயின் ஆவி தன் பிள்ளையை சந்திக்க வருகிறது. தன்னுடைய தாயைப் பார்த்ததும் அந்தக் குழந்தை ஆச்சரியம் அடைகிறது.

“அம்மா, இன்று நீ ஏன் இத்தனை மகிழ்ச்சியுடன் இருக்கிறாய்?”

“சிராஜ், உன் பாட்டனாரை சொர்க்கத்தில் இன்று சந்தித்தேன். அவர் தன்னுடைய தந்தைக்கு என்னை அறிமுகப்படுத்தினார். அவர் தன்னுடைய தந்தையிடம் என்னை அழைத்துப்போனார். அவருடைய பாட்டனார் மற்றும் கொள்ளுப் பாட்டனார். சிராஜ், கற்பனை செய்து பார். நான் உன்னுடைய தாத்தா-கொள்ளுத்தாத்தா-அவருடைய தாத்தா- அவருடைய கொள்ளுத்தாத்தாவை சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன்öö. குரலில் மகிழ்ச்சியும் பெருமையும் பொங்கி வழிய தாய் ஆவி சொன்னது. õõசிராஜ், உன்னுடைய கொள்ளுப்பாட்டனாரின் தாத்தா ஒரு இந்துவாக இருந்தார். இந்து… புரிகிறதா? சிராஜ், கண்டிப்பாக இதை எல்லோரிடமும் நீ கண்டிப்பாகச் சொல்லவேண்டும்”

ஷா ஆலம் முகாமுக்கு நள்ளிரவுக்குப் பிறகு ஆவிகள் வருகின்றன. ஓரிரவு ஒரு சகோதரியின் ஆவி, தன் சகோதரனைத் தேடிக்கொண்டு வருகிறது. அவனை எல்லா இடங்களிலும் தேடிப் பார்த்துவிட்டு அவன் படிக்கட்டில் ஒரு படியில் உட்கார்ந்து இருப்பதைப் பார்க்கிறது. மிகவும் மகிழ்ச்சியுடன் அந்த சகோதரி ஆவி சகோதரனைப் பார்க்க பரபரப்புடன் ஓடி வருகிறது. “அண்ணா” கரைந்து அழுகிறது. அவள் அழுவது சகோதரனுக்குக் கேட்கிறது. ஆனால் கேட்காதவாறு அவன் பாவனை செய்கிறான். ஒரு கற்சிலையைப் போல எவ்வித அசைவும் இன்றி மௌனமாக அமர்ந்திருக்கிறான்.

“அண்ணா, நான் சொல்வதைக் கேள்”

சகோதரன் அவளைக் கண்டு கொள்ளவில்லை. அவள் பேசுவதைக் கேட்கவோ அவளைப் பார்க்கவோ அவன் முயற்சிக்க வில்லை.

“என்னை ஏன் உதாசீனப்படுத்துகிறாய்?” சகோதரி ஆவி உரத்த குரலில் கதறியது. அவன் கோபத்துடன் விருட்டென்று எழுந்து தன் சகோதரியை இரக்கமில்லாமல் கடுமையாகத் தாக்குகிறான். கூட்டம் சேர்ந்து விடுகிறது. அந்தப் பெண்ணிடம் அப்படி அந்தப் பையன் கோபப்படுமாறு அவள் என்ன சொன்னாள் என்று கூட்டத்தில் யாரோ அவளைக் கேட்கிறார்கள்.

“நான் அவனை சகோதரனே என்று விளித்தேன். அவ்வளவுதான்” என்றாள்.

ஒரு முதிய பெண்மணி பேசத் துவங்குகிறாள். “இல்லை சலிமா. நீ மிகப்பெரிய தவறிழைத்து விட்டாய். ஏன் அப்படிச் சொன்னாய்? அப்படி நீ சொன்னது மிகப் பெரிய தவறு” என்று சொல்கிறாள். பிறகு அந்த முதிய பெண்மணி குழந்தையைப் போல விக்கி அழத் துவங்குகிறாள். அந்தச் சகோதரன் தன் தலையை சுவற்றில் வலுவாக மோதிக் கொள்ளத் துவங்குகிறான்.

ஷா ஆலம் முகாமுக்கு நள்ளிரவுக்குப் பிறகு ஆவிகள் வருகின்றன. ஒரு இரவில் மற்ற ஆவிகளுடன் ஒரு கிழட்டு ஆவியும் முகாமுக்கு வந்தது. அந்தக் கிழவர் ஏறத்தாழ அரை நிர்வாணமாகக் காட்சியளித்தார். ஒரு மெல்லிய கோவணத்தை உடுத்தியிருந்தார். காலில் எளிய தோல் செருப்பை அணிந்து கைத்தடி ஒன்றைக் கையில் பிடித்தபடி இருந்தார் அந்த முதியவர். ஒரு பழைய வட்டக் கடிகாரம் ஒன்று அவர் இடுப்புத் துணியின் மடிப்புக்களிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தது.

யாரோ அந்த முதியவரைக் கேட்கிறார்கள். ங்கள் உறவினர்கள் யாரையாவது தேடி இந்த முகாமுக்கு வந்தீர்களா?”

முதியவர் விடையளிக்கிறார்.

“ஆமாம் – இல்லை”

அவரை ஒரு கிறுக்கன் என்று நினைத்து ஒதுக்கி அவரிடம் ஒன்றும் பேசாமல் ஒதுங்கிப் போனார்கள் மற்றவர்கள். அந்த முதியவர் முகாம் முழுதும் நடந்து போகிறார்.

யாரோ முதியவரை மீண்டும் கேட்கிறார்கள். “பாபா. யாருக்காகப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்?”

“என்னைக் கொல்லப் போகிறவர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்”

“ஏன்”

“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு துப்பாக்கிக் குண்டினால் சுட்டுக் கொல்லப்பட்டேன். இப்போது அந்தக் கலகக்காரர்கள் என்னை உயிரோடு எரிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்”.

“பாபா, ஏன் இப்படி ஆசைப்படுகிறீர்கள்?”

“அவர்களின் துப்பாக்கிக் குண்டினால் நான் சாகவில்லை – அவர்கள் என்னை உயிரோடு எரித்தாலும் நான் சாக மாட்டேன் என்று உலகத்துக்குச் சொல்வதற்காக”.

ஷா ஆலம் முகாமுக்கு வந்த ஆவி ஒன்றிடம் ஒரு அரசியல்வாதி கேட்கிறார் –

“உனக்கு தாய் தந்தை இருக்கிறார்களா?”

“இல்லை. இருவரும் கொல்லப்பட்டார்கள்.

“சகோதர சகோதரிகள் என்ன ஆனார்கள்?”

“இல்லை”

“வேறு யாராவது உறவினர்கள் உயிரோடு இருக்கிறார்களா?”

“இல்லை. அவர்கள் எல்லோரும் இறந்து போய்விட்டார்கள்”.

“இங்கே நீ வசதியாக இருக்கிறாயா?”

“ஆமாம். இருக்கிறேன்”

“உனக்குத் தேவையான அளவுக்கு சாப்பிடக் கிடைக்கிறதா?”

“ஆமாம். கிடைக்கிறது”.

“உடுத்திக் கொள்ள ஆடைகள் இருக்கின்றனவா?”

“இருக்கின்றன”

“உனக்கு வேறு ஏதாவது தேவைப்படுகின்றதா?”

“வேண்டாம். ஒன்றும் வேண்டாம்”

“ஒன்றும் வேண்டாமா?”

“வேண்டாம்”

“வேண்டாமா?”

“வேண்டாம்”

தலைவர் மகிழ்ச்சியடைகிறார். தனக்குத் தானே சொல்லிக் கொள்கிறார். õõஇந்தப் பையன் புத்திசாலியாக இருக்கிறான். மற்ற முஸ்லிம்களைப் போல இல்லைöö.

ஷா ஆலம் முகாமுக்கு நள்ளிரவுக்குப் பிறகு ஆவிகள் வருகின்றன. ஓரிரவு ஒரு பேயின் ஆவி மற்ற ஆவிகளுடன் வருகிறது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு வந்த அந்தப் பேயின் ஆவிக்கு அங்கு காணும் காட்சியால் வெட்கம் கவ்விக்கொள்கிறது. அதனால் தலைநிமிர்ந்து மற்ற ஆவிகளைக் கண்கொண்டு பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது. மற்ற ஆவிகளைப் பார்க்க வெட்கப்பட்டுக் கொண்டு அங்கிருந்து நழுவப் பார்க்கிறது. இந்த விநோதப் பிராணியால் எரிச்சலுற்று அதன் கழுத்தைப் பிடித்து உலுக்கத் துவங்கினார்கள் சிலர்.

வெட்கத்தில் தலை கவிழ்த்து அது மன்றாடுகிறது. “எனக்கு இதில் எவ்விதப் பங்கும் கிடையாது. இங்கு நடக்கும் எதற்கும் எனக்குத் தொடர்பு கிடையாது. சத்தியமாக எனக்குத் தெரியாது. அல்லாவின் மீது ஆணையாகச் சொல்கிறேன். எனக்கு இதில் எது பற்றி ஒன்றும் தெரியாது”.

மக்கள் சொல்கிறார்கள். õõஆமாம். ஆமாம். எங்களுக்குத் தெரியும். உன்னால் இதைச் செய்திருக்க முடியாது. உன்னுடைய எண்ணங்களே வேறு. உனக்கென்று தனிப்பாணியை வைத்திருக்கிறாய் அல்லவா நீ?öö

ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட்டு அந்தப் பேய் சொல்கிறது. “உங்களுக்குத் தெரியாது. எனக்குள் எவ்வளவு பெரிய மனப்பாரம் நீங்கியது என்று. உங்களைப் போன்ற நல்லவர்களுக்கு உண்மை தெரிந்து இருக்கிறது”.

அவர்கள் சொல்கிறார்கள், “கொஞ்ச நாட்களுக்கு முன் கடவுள் இங்கே வந்திருந்தார். அவரும் இதையேதான் சொன்னார்”.

(நன்றி – தி லிட்டில் மாகஸின்)

– ஜூன் 2007

( மொழிபெயர்ப்புச் சிறுகதை / உருது மூலம் – அஸ்கர் வஜாஹத்)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *