பூச்சாண்டி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: அமானுஷம்
கதைப்பதிவு: June 20, 2023
பார்வையிட்டோர்: 12,259 
 

(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பேய் பிசாசுகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நான் பார்த்ததில்லை. அவ்வளவு தூரம் எதற்கு? கடவுளைக்கூட நான் கண்டதில்லை!

கடவுள் இருக்கட்டும். நான் கடவுளை வைத்துப் பிழைக்கிறவன் அல்ல. புகழ் பாடிப் பிழைக்கும் பஜனைக் கோஷ்டியைச் சேர்ந்தவனும் அல்ல; இகழ் பேசிப் பிழைக்கும் பகுத்தறிவுக் கும்பலைச் சேர்ந்தவனும் அல்ல. இரண்டு பேரும் சேர்ந்து பகுத்தறிவில்லாத மக்களை, பக்தி இல்லாத மந்தைகளை நன்றாக ஏமாற்றட்டும். முட்டாள்கள் ஏமாறப் பிறந்தவர்கள்.

கடவுள் எனக்குக் காசு கொடுக்காததால், அவரை விட்டுவிட்டுக் கதைக்கு வருவோம். இப்போதைக்கு எனக்குப் படி அளக்கும் பரமசிவம், கண்கண்ட கருணை வள்ளல், இந்தப் பூச்சாண்டி தான்.

பூச்சாண்டிகளும் பயந்து நடுங்கக்கூடிய பயங்கரமான இருள்; பேய் பிசாசுகள் பேந்தப் பேந்த விழிக்கக்கூடிய அமாவாசை இருட்டு – நீங்கள் தாம் பிசாசுகளைப் பார்த்ததில்லையே என்று என்னைக் கேட்டு வைக்காதீர்கள். நான் பார்த்ததில்லை. உண்மை. நம்பவில்லை என்று யார் சொன்னது? பிசாசுகள் நடுங்கக்கூடிய பொல்லாத இருட்டு என்று சொன்னேனா? சரி. அது ஓர் சவுக்கமரத் தோப்பு.

உச்சி வெயில் ஒய்யாரமாய்க் கொளுத்தும்போதே ஒளியின் ஜம்பம் அங்கே சாயாது. ‘கரு கும்’ என்று இருக்கும் நட்ட நடு ராத்திரியில். அமாவாசை அன்றைக்குக் கேட்கவா வேண்டும்? வானத்துக்கும் பூமிக் கும் வளர்ந்து சவுக்க மரங்கள் ஐயனார் கோயில் ஈட்டி முனை களைப்போல் குத்திட்டு நின்றன. அந்தத் தோப்புக்கு அந்த வேளையில் காற்றின் துணை கிடைத்துவிட்டது. கூத்துக்கும் கும்மாளத்துக்கும் குறைவில்லை; ஆங்காரத்துக்கும் ஓங்காரத்துக்கும் அணையில்லை.

சவுக்கத் தோப்புக்கு எதிர்த்தாற்போல் வறண்ட ஆறு. ஒரு காலத் தில் ஆறாக இருந்து நீராக ஓடி இப்போது அழிந்துபோய் மணலாய்க் காயும் மலட்டுத் தரைவெளி. அதில் புல்லோ, பூண்டோ , செடியோ, கொடியோ ஒன்றும் கிடையாது. ஈரம் இல்லாத கஞ்சப் பயல் நெஞ்சு மாதிரி காய்ந்து பொசுங்கி மொட்டையாய்க் கிடந்தது. இந்த இரண்டுக்கும் மத்தியில் எல்லை வகுத்தாற்போல் ஒரு ஜோடிக் கரு நாகப் பாம்புகள். அவைகளுக்கு ஒரே வயசு, ஒரே நீளம், ஒரே அகலம், ஒரே பருமன். பாம்புகளுக்குத் தலையும் காணோம்; வாலும் காணோம். முதலும் முடிவும் அற்ற பராபரம்போல் எங்கிருந்தோ வந்தன; எங்கேயோ போயின. இடையில் எத்தனையோ காடுகள், மலைகள், வனம் வனாந்தரங்கள்.

சக்தியும் சிவமும் போல அந்த ஜோடி எப்போதும் இணைபிரிவதே இல்லை. ஆனால் அவை ஒன்றோடொன்று ஒட்டாமல் ஒரே தூரத்தில் விலகி நின்றன. இந்தக் குளுமையான கருநாகப் பாம்புகளைப் பகலில் பார்த்தால் தண்டவாளங்கள் என்பார்கள். எதையுமே பகலில் பார்த் தால் ஒரு மாதிரி; ராத்திரியில் பார்த்தால் ஒரு மாதிரிதான்.

ராத்திரியில் எத்தனையோ விசித்திரமான காரியங்கள் எல்லாம் நடக்கின்றன. பிசாசுகளும் ராத்திரியில் தான் நடமாடுகின்றனவாம்.

அப்போது அந்த இடத்தில் எந்தப் பிசாசும் இல்லை. ஒரே ஒரு மனிதன் நின்றுகொண்டிருந்தான். அவனை மனிதன் என்றால் நீங்கள் நம்பமாட்டீர்கள். அவன் பிசாசைப்போல் பயங்கரமாக இல்லாமல் பிசாசைவிடப் பயங்கரமாய் இருந்தான். அங்கே அவன் வருவதற்கு முன்பு பிசாசுகள் உலவிக்கொண்டிருந்தால் நிச்சயம் அவனைக் கண்ட வுடன் அவைகள் சவுக்கத் தோப்பில் ஒளிந்து கொண்டிருக்க வேண்டும்.

கரடிக் குட்டி மாதிரி தாடி மீசை வளர்த்துக்கொண்டு அவன் அந்தப் பாம்புகளின் பக்கத்தில் வந்து நின்றான். இடுப்பில் நாலு முழு அழுக்குத் துணி. கண்களின் சிவப்பு இருட்டில் தெரியவில்லை. நெற்றி நிறையத் திருநீற்றை அப்பிக்கொண் டிருந்தான். யாரையோ, எதையோ, அவன் ஆவலோடு, ஆத்திரத்தோடு எதிர்பார்ப்பதுபோல் தெரிந்தது.

மெதுவாய்த் தரையில் மண்டியிட்டு ஒரு பாம்பின் முதுகில் காதை வைத்து உற்றுக் கேட்டான். பாம்பு ஆடவில்லை; அசையவில்லை. அவன் முகத்தில் நம்பிக்கை ஒளி ஊறியது. –

முன்போல எழுந்து நின்று அவன் திடீரெனச் சிரித்தான். இடி இடித்தாற்போன்ற சிரிப்பு. அந்தச் சவுக்கத் தோப்பு காற்றோடு சேர்ந்து ஊளையிடுவதை ஒரு கணம் நிறுத்தி இந்தச் சிரிப்புக்கு மதிப்புக் கொடுத் தது.

தெற்கே அவன் பார்த்துக்கொண்டிருந்த திக்கில் ஓர் ஒளிப் புள்ளி தெரிந்தது. வானத்து மீன் குஞ்சு தரைக்குச் சற்று உயரத்தில் உதய மாகும் அபூர்வக் காட்சி. ஆனால் அந்த ஒளி அதோடு நிற்கவில்லை. நிமிஷத்திற்கு நிமிஷம் பெரிதாகிக்கொண்டே இருந்தது. கொஞ்சம் பெரிதாக , இன்னும் கொஞ்சம் பெரிதாக, மிகப் பெரிதாக மாறியது. நட்சத்திரமும் அல்ல, சந்திரனும் அல்ல; பிசாசு, கொள்ளிவாய்ப் பிசாசு!

அந்தப் பிசாசு அந்த மனிதனைக் குறி வைத்து அண்டம் அதிரப் பாய்ந்தோடி வந்தது. புதருக்குள் புகுந்த புள்ளிமானை மோப்பம் பிடித்து விட்ட வேங்கைப் புலி மாதிரி அது தாவி ஓடி வந்தது. மனிதன் அதைக் கண்டு அலட்சியமாய்ச் சிரித்தான். கருநாகப் பாம்புகள் அந்த ஒளிப் பெருக்கில் தங்கள் வழுவழுப்பான முதுகைக் குளிப்பாட்டிக்கொண்டு பளபளத்தன.

‘ஹா! ஹா! ஹா! ஹு, ஹு, ஹு!”

பிசாசு இப்போது அதிக நெருப்பை உமிழ்ந்தது. அதிகமாகக் கூச்ச லிட்டது.

“ஜிகு , ஜிகு , ஜிகு , ஜிகு ! குபு, குபு, குபு குபு! ஜிகு , ஜிகு. குபு, குபு!- கூ!… கூ!… கூ!”

கண்ணைப் பறிக்கும் ஒளியைக் கக்கிக்கொண்டு, நெஞ்சை உலுக்கும் ஒலியை எழுப்பிக்கொண்டு அந்தப் பேய் மனிதனை நெருங்கியது. அவன் நிதானமாகக் கீழே படுத்து அதன் குறுக்கே விழுந்தான்.

“கிரீச்!”

அவனைத் தாண்டிக்கொண்டு போய், அவனுடைய ரத்தத்தைத் தன் கால்களில் பூசிக்கொண்டு அனல் மூச்சு விட்டபடி நின்றது அந்தக் கொள்ளிவாய்ப் பிசாசு. பகலில் நீங்களும் நானும் அதைப் பார்த்தால் ரெயில் என்று சொல்வோம். வெள்ளைக்காரன் நம்முடைய முதுகில் சவாரி செய்வதற்காக, நம்முடைய சவாரிக்கு ஏற்படுத்தியதாய் ஏட்டில் எழுதி வைத்து, நம்மை நம்பச் சொன்ன யந்திரப் பிசாசு.

டிரைவர் வண்டியை நிறுத்திவிட்டுத் தலை தெறிக்கக் கீழே இறங்கி ஓடி வந்தார். கரி தள்ளுகிறவரும் அவரைப் பின்பற்றினார். ரெயிலுக்குள் உறங்கிக்கொண்டும் உறங்காமலும், பேசிக்கொண்டும் பேசாமலும் வந்த பிரயாணிகள் கூட்டம் ஒன்றும் தெரியாமல் ஒரு கணம் திகைத்தது. கோழித் தூக்கம் போட்டவர்கள் கொக்கானார்கள்; விழித்துக்கொண்டு கழுத்துக்களை ஜன்னலுக்கு வெளியே நீட்டினார்கள். கண்கள் கூர்மை யாயின; காதுகள் தீட்டப்பட்டன. சிலர் கீழே இறங்கி டிரைவருக்குப் பின் ஓடி வந்தார்கள்.

இன்னும் சிலருக்கும் கீழே இறங்கி வேடிக்கை பார்க்க ஆசைதான். டிக்கட் வாங்கிக்கொண்டு வண்டியில் ஏறி இருந்தால் நிச்சயம் அப்படிச் செய்திருப்பார்கள். இப்போது எதற்காக அநாவசியமாய்ப் போய் ஒரு வனிடம் மாட்டிக்கொண்டு விழிக்க வேண்டும்?

சிறிய கூட்டம் அந்த ரெயிலுக்குப் பின்னால் கூடிவிட்டது. ரெயில்வே ஊழியர்கள் அத்தனை பேரும் அந்த இடத்தில் இருந்தார்கள். ஒருவனை மாத்திரம் அங்கே காணவில்லை. எவன் அந்த வேளையில் அதிகத் தேவையோ அவனை மட்டும் காணவில்லை.

செத்துப்போனவன் கச்சிதமாய்ச் செத்துப் போயிருந்தான். முன்பே ஒரு தரம் ரெயிலில் அகப்பட்டுச் செத்துப் போய்ப் பழக்கப் பட்ட மாதிரி அவன் செத்துக் கிடந்தான். தலை வேறு; முண்டம் வேறு. இரண்டே உருப்படிகள். சிதைவோ சித்திரவதையோ கிடையாது.

ரெயில்வே கார்டு சுற்று முற்றும் பார்த்தார். கூட இருந்த ஊழியர்களும் சுற்று முற்றும் பார்த்தார்கள்.

“போலீஸ் எங்கே? வண்டியில் யார் வந்தது?”

“9333ங்க!”

அப்போது அந்த 9333 பிரேக் வானில் படுத்துச் சுகமாக நித்திரை போய்க் கொண்டிருந்தது. அடுத்த ஸ்டேஷன் வருவதற்கு இன்னும் பதினைந்து மைல்கள் இருந்தன. இதுவரை அறுவடை செய்த மாமூலில் அதன் பங்கு முப்பது ரூபாய் முழுசாய்ப் பணப்பைக்குள் கலகலத்தது. புரண்டு படுக்கும்போது அந்தக் கலகலப்பு அதன் தூக்கத்தைக் கொஞ் சம் கெடுக்காமல் இல்லை. ‘இந்த வெட்டிப் பயல்கள் நோட்டாய்க் கொடுக்காமல் எதற்காகச் சில்லறையாகத் தருகிறான்கள்!’ என்று அரைத் தூக்கத்தில் சலித்துக்கொண்டபடியே அது புரண்டு படுத்தது.

“இந்தாப்பா, மூணு!”– நீளப் பெயராக இருப்பதால் கடைசி எண்ணைச் சொல்லித்தான் அதை வழக்கமாய்க் கூப்பிடுவார்கள்.

‘மூணு’ விழித்துப் பார்த்தது.

“ஸ்டேஷன் வந்திருச்சுங்களா?”

“ஸ்டேஷன் இல்லேப்பா; உனக்கு வேலை வந்திருக்கு!”

“வேலை வந்திருக்குங்களா?”

“ஆமா, வேலை வந்திருக்கு.”

வேலை என்றால் 9333-இன் அகராதியில் இந்த இரண்டு வருஷமாய்ப் பணம் என்று பொருள். இரண்டாவது உலகப் போர் என்று சொல்லப் படுகிற நீசப் படுகளம் அப்போது நடந்து கொண்டிருந்தது. பையில் இந்த நிமிஷம் குலுங்குகிற முப்பது ரூபாய் மறு நிமிஷத்தில் இன்னும் ஐந்தோ பத்தோ குட்டி போடப் போகிறதென்று அவனுக்குக் கும்மா ளம். ‘பணம் பணத்தோடு சேரும்’ என்று சொன்ன பாவிப்பயல் இன்றைக்கு எதிர்ப்பட்டால் அவன் வாயில் பத்து வெள்ளி ரூபாய்களைத் திணிக்கலாம் போலிருந்தது.

பணத்தின் முகத்தில் விழிக்கப்போன போலீஸ், பிணத்தின் மூஞ்சி” யில் விழித்தான். பார்த்தவுடன் கண்களை ஒரு தரம் மூடித் திறந்தான். அதை உற்றுப் பார்க்கப் பிடிக்கவில்லை. தண்டவாளத்துக்குச் சற்று ஒதுக்கமாக அதைத் தள்ளிப் போட்டிருந்தார்கள்.

“சாகப்போகிற கழுதை ஊருக்குப் பக்கத்தில் விழுந்து செத்தால் என்ன? நடுக்காட்டுக்குத்தானா வந்து தொலையவேணும்?” என்றான் மூணு.

“ஆறு கீறு, குளங்குட்டை கிடையாதா?” என்று ஒத்துப்பாடினார் ஒரு பிரயாணி.

சற்று நேரத்தில் ரெயிலில் ஏறவேண்டியவர்கள் எல்லாரும் ஏறிக். கொண்டார்கள். இருக்க வேண்டியவன் மட்டும் அங்கு இருந்தான். பையில் இருந்த முப்பதில் ஒரு ரூபாயை மாத்திரம் வைத்துக் கொண்டு பாக்கியைத் தன்னை எழுப்பின நண்பரிடம் கொடுத்தான். வீட்டில் கொண்டு போய்க் கொடுக்கச் சொன்னான்.

“மடியிலே கனம், வழியிலே பயம்” என்றார் அவர்.

“திருட்டுக் காசு பாருங்க; கவனமாக இருக்கணும். இந்தக் காலத் தில் பொணங்கூடப் பண்மின்னா வாயைத் திறக்கும்!”

ரெயில் ஊதியது. நகரத் தொடங்கிய வண்டியில் நண்பர் ஓடிப் போய்த் தொத்திக்கொண்டார். அந்த ரெயில் ஒரு மனிதனைச் சாகடித்து’ விட்டுப் பல மனிதர்களைச் சுமந்து கொண்டு இன்னொரு மனிதனைச் செத்த வனுக்குக் காவல் வைத்துவிட்டுக் கிளம்பியது. வண்டியின் பின்புறத்தில் வட்டமாய் ஒட்டிக்கொண் டிருந்த சிவப்பு விளக்கைக் கவனித்தான் 9333. அது விளக்காக அவன் கண்ணுக்குப் படவில்லை; செத்துப்போன மனிதனின் ரத்தக் கறை.

2

ஒன்பதாயிரத்து, முந்நூற்று முப்பத்து மூன்றின் பிறப்போ வளர்ப்போ ஒன்றும் சுவையானதல்ல. அவனுடைய வாழ்க்கையின் எந்தப் பகுதியும் வெட்கக்கேடான படலந்தான். ஏதோ ஒரு தாலூகா வில் ஏதோ ஒரு வட்டத்துப் பட்டாமணியத்தின் பத்தாவது பிள்ளையாய்ப் பிறந்தான். பதினைந்தாவது வயசில் பள்ளிப் படிப்புக்குப் புள்ளிவைத். தாயிற்று. ஐந்தாம் வகுப்பு வாத்தியார் அவனுடைய அப்பாவின் முறுக்கு. மீசைக்கும் கெடுபிடிக்கும் பயந்து கொண்டு அவனுக்குப் பாஸ் போட்டார்.

அந்த வட்டாரத்தில் வேறு மிராசு, மிட்டா , ஜமீன் ஒன்றுமே இல்லாததால் பட்டாமணியத்தின் கொடி அங்கே பட்டொளி வீசிப். பறந்தது. அவரது செல்லப்பிள்ளை தினந்தோறும் அங்கு விதம் விதமான திருவிளையாடல்கள் புரிந்து வந்தான். மாந்தோப்பில் மல்கோவா மாம் பழங்கள் மறைந்த மாயம் எல்லோருக்கும் தெரியும்; தென்னந்தோப்பில் மண் கலையங்கள் தொங்க, கள் மட்டும் காணாமற்போகும் ரகசியம் ஊர றிந்த செய்தி. தெரிந்து என்ன செய்வது? பட்டாமணியத்தின் பணப் பெட்டிக்குக்கூடப் பசி வந்து அடிக்கடி ஐந்தோ பத்தோ சாப்பிட்டுத் தொலைத்தது. கிராமத்திலுள்ள வயசுப் பெண்கள் தங்களுக்குள் காதைக் கடித்துக்கொண்டார்கள்; தேடுவாரற்ற தெருநாய் மாதிரி அவர்களைச் சுற்றிச் சுற்றி வந்து பல்லிளித்தானாம்!

கிராமத்தில் முகாம் செய்திருந்த ரெவின்யூ இன்ஸ்பெக்டரிடம் ‘சொல்லிப் பட்டாமணியம் இவனுக்கு ஒரு வேலை வாங்கித்தரச் சொன்னார். எப்படியாவது இவனை ஊரைவிட்டு அனுப்பித் தம் மானத்தைக் காத்துக் கொண்டால் போதும் என்ற ஏண்ணம் அவருக்கு. ரெவின் யூ இன்ஸ் பெக்டர் பையனை அழைத்து வரச் சொல்லி, மேலும் கீழும் பார்த்தார். பையனா அவன்? தீவட்டித் தடியனுக்கு அண்ணன்!

“உனக்குப் பொய் சொல்லத் தெரியுமா?” என்று கேட்டார்.

“தெரியாதுங்க!”

“அடிக்கத் தெரியுமா?”

“தெரியாதுங்க!”

“அடி வாங்கத் தெரியுமா?”

“தெரியாதுங்க!”

“இவனுக்குப் பொய் சொல்ல, அடிக்க, அடி வாங்கத் தெரியும்” – என்றார் ரெவின்யூ இன்ஸ்பெக்டர்.

“இது மட்டுமா? இன்னும் ரொம்பக் காரியம் செய்வானுங்க” என்றார் மணியகாரர்.

“இந்த லட்சணத்தில் என்னைச் சிபாரிசு செய்யச் சொல்கிறீரா? எவன் ஐயா இவனை வேலைக்கு வச்சுக்குவான்?”

பட்டாமணியம் சும்மா இருந்தார். பட்டத்து இளவரசுக்கு அப் படியே அவர் கழுத்தைத் திருகிவிடலாமா என்ற ஆத்திரம். இன்ஸ்பெக்டரைச் சுற்றி நாலு வெட்டியான்கள் நின்று கொண்டிருந்ததால் தன் கோபத்திற்குக் குழி வெட்டிக்கொண்டான்.

பேச்சில்தான் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் அப்படி இருந்தாரே தவிர, ஊருக்குப் போன ஒரு மாதத்துக்கெல்லாம் அவனுக்கு உத்தரவு வந்து விட்டது; ரெயில்வே போலீஸ் உத்தியோகம். இந்த உபகாரத்துக்காகப் பட்டாமணியம் தம்முடைய களஞ்சியத்திலிருந்து பத்து மூட்டை நெல்லை இன்ஸ்பெக்டர் பெயருக்குப் பட்டா மாற்றி வைத்தார்.

இருபது வருஷங்கள் ஆகிவிட்டன. இதற்குள் எத்தனையோ மாறுதல்கள். பட்டாமணியம் பரலோகம் போய்விட்டார். பாகப்பிரிவினைக்காக அடிதடி, கோர்ட்டு, வழக்கு விவகாரம் எல்லாம் முறைப்படி நடந்து முடிந்தன. இப்போது அந்தப் பத்துப் பிள்ளைகளுக்கும் பாகப் பத்திரப் படி ‘ரத்த சம்பந்தமே தவிரச் சொத்து சம்பந்தம் இல்லை’. இவனுடைய பங்குக்கு இரண்டு ஏக்கர் நன்செய், ஒரு பெண்டாட்டி, ஐந்து குழந்தைகள்: மூன்று ஆண், இரண்டு பெண். ஆறாவது குழந்தை இப்போது அவன் வீட்டுக்காரியின் வயிற்றில் ஆறு மாதம்.

9333 எத்தனையோ ஏட்டையாக்களை, சப் இன்ஸ்பெக்டர்களை, சர்க்கிள்களைப் பார்த்துவிட்டான். பல ஊர்த் தண்ணீர் குடித்தாயிற்று. இவனுக்குக் கீழே இருந்து பலர் மேலே வந்துவிட்டார்கள். இவன் மட்டிலும் இன்னும் வேலையை விட்டு வெளியே தள்ளப்படாமல் இருந்தது ஆச்சரியந்தான்.

ரெயில்வே போலீஸின் வேலை ஓர் எல்லைக்கு உட்பட்டிருந்தது. இந்த எல்லைக்கோடு அவனுக்குப் பிடிக்கவில்லை. தெருவெல்லாம் தலை நிமிர்ந்து நடக்கும் சிவப்புத் தொப்பிகளின் மேல் அவனுக்கு எல்லையற்ற பொறாமை.

இருபது வருஷமாய் எல்லா ரெயில்களும் தண்டவாளத்தின் மேல் தான் ஓடுகின்றன. கொஞ்சங்கூட முன்னேற்றத்தைக் காணவில்லை. புதுமை இல்லை; புரட்சி இல்லை! புரட்சிக்காரர்கள் செய்த புதுமையால் சில சமயம் ரெயில் தண்டவாளத்தை விட்டு முன்னேற்றப் பாதையில். போய்த் தலை கவிழ்ந்திருக்கிறது. அவ்வளவுதான்.

தெருத்தெருவாய், சந்து பொந்தெல்லாம் ரெயில் நுழைந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்? மூணாம் நம்பரின் அதிகாரம் மூலை முடுக்கெல் லாம் பரவாதா? அவனுடைய முறுக்கு மீசைக்கும் சிவப்புக் கண்ணுக்கும் அழுத பிள்ளை வாய் மூட வேண்டாமா?

இருந்தாலும் அவனுடைய அட்டகாசத்துக்குக் குறைச்சல் இல்லை.

அப்போது அரசியல்வாதிகள் அளந்து கொட்டுகிற காலம் அல்ல; அடி வாங்கும் காலம். அவர்களைக் கைது செய்து ரெயிலேற்றிக்கொண்டு போகும்போது ஆயிரக் கணக்கில் மக்கள் ஸ்டேஷனுக்கு வந்து அலைமோது வார்கள். அப்போது 9333-க்கு வருகிற ஆத்திரத்தையும் வெறியையும் பார்க்க வேண்டுமே! உத்தரவு கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும். சரி, ஓங்கிய கை நிற்காது. வீசிய தடிக்குச்சி வீக்கம் காணாமல் விடாது.

மிரண்டு பதுங்கும் மனிதர்களை விரட்டி அடிப்பதில் அவனுக்கு இன் பம். மக்கள் அலறித் துடிப்பதைக் காண்பதில் ஆனந்தம். மற்றவர்களை – ஏழை எளியவர்களைத்தான் – ஆளவும் ஆட்டிவைக்கவும் தான் பிறந்திருப் பதாக அவனுக்கு நினைப்பு. இப்பேர்ப்பட்ட வீரன் இரண்டு ரூபாய்க் காசுக்காக ஒரு முதலாளிக்கு, டிக்கட் வாங்கிப் பழக்கமில்லாத பெரிய மனிதருக்கு , மெத்தை தட்டிப் போடத் தயங்க மாட்டான். காசுக்காக அவன் எதையும் செய்வான்.

பிச்சைக்காரப் பயல் ஒருவன் தனியாக ஒரு நாள் 9333- இடம் எக்கச் சக்கமாய் மாட்டிக் கொண்டான். ஒரே அறை! பிச்சைக் காசு ரூபாயும் சில்லறையும் கை மாறியது. பிச்சைக்காரனுக்குப் பிச்சைக் காரப் புத்தி போகுமா?

“ஸார்! பசிக்குது ஸார்; ரெண்டணாக் குடு ஸார்; பாக்கியை நீ வச்சுக்கோ!” என்று கை நீட்டினான்.

“போடா!”

பிச்சைக்காரன் தனக்குள் முனகிக் கொண்டான் : “பிச்சை எடுக்கு தாம் பெருமாள்; அத்தைப் புடுங்குதாம் அநுமார்!”

அநுமார் பெருமாளின் மீது பாய்ந்து அதை அப்பளமாய் ஆக்கி விட்டது. பெருமாளுக்குக் கோவணம் மட்டிலும் மிச்சம். அப்படியே ஒரு கொத்துத் தலைமயிரை அவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டு தான் அநுமார் நகர்ந்தது.

இன்னும் இதைப்போல எத்தனை எத்தனையோ! – இப்போது போலீஸ் புலி பிசாசுகளும் பயப்படக்கூடிய நடுக்காட்டில், நள்ளிருளில், பிணத்துக்குக் காவலாய்த் தனிமையில் நிற்கிறது.

3

ரெயில் கண்ணுக்கு மறைந்தது. 9333 வண்டிக்குப் பின்னால் தெரிந்த சிவப்பு விளக்கையே பார்த்துக்கொண் டிருந்தான். இருட்டு மங்கையின் நெற்றிப் பொட்டான அந்தச் செம்புள்ளி இப்போது முற்றும் அழிந்துவிட்டது.

அவனுக்குச் சிவப்பு நிறமென்றால் பிடிக்காது. ஏன் பிடிக்காதென்று அவனுக்கே தெரியாது. ஒருவேளை தன்னை வெள்ளைக்காரனின் தத்துப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டதால் வந்த கோளாறாக இருக்கலாம். வெள்ளைத் தோலுக்குத்தான் சிவப்பு நிறமென்றால் கிலி ஆயிற்றே!

“டேஞ்சர் சிக்னல்; சிவப்பு எனக்கு வெறுப்பு!” என்பான். ஆனால் சிவப்பான பெண்களுக்கும் அவர்களுடைய சிவப்புச் சேலைகளுக்கும் இது விதி விலக்கு. டேஞ்சர் இப்போது சிவப்புக்குத்தான்!

சிவப்பு விளக்கு மறைந்தவுடன் நிம்மதியாய்ப் பெருமூச்சு விட்டவன் அப்போது தான் தன் கையிலிருந்த கண்ணாடி விளக்கைக் கவனித்தான். என்ன அக்கிரமம்! அதில் ஒருபுறம் சிவப்புக் கண்ணாடி; இன்னொரு புறம் பச்சைக் கண்ணாடி. சிவப்பின் வழியே ஒளி ரத்தவெள்ளமாய்ப் பாய்ந்தது.

கோபத்தால் அவனுடைய முறுக்கு மீசை துடித்தது. ஓங்கி அந்த விளக்கைத் தண்டவாளத்தில் மோதிச் சுக்கு நூறாய் உடைக்கலாமா என்று பார்த்தான். பிறகு இருட்டு மங்கையின் பயங்கரம் இன்னும் அதிகமாயிருக்கும். அமங்கலமாய்ப் போன ஆத்திரத்தில் அவனையே தூக்கி விழுங்கினால் என்ன செய்வது?

அவனுடைய கைக் கடிகாரத்தில் மணி ஒன்றரை. பொழுது விடி யும் வரையில், இன்னும் நாலுமணி நேரத்திற்குமேல் அங்கு நின்று தொலைக்கவேண்டும். துணைக்கு இன்னோர் ஆளை யாவது இறக்கி விட்டுப் போனார்களா?

பிணத்தின் முகத்தைப் பார்க்க வேண்டும் போலிருந்தது அவனுக்கு. பயம் தன்னை அறியாமல் தலைகாட்டுவதை உணர்ந்தான். சே! செத்த பிணத்திடம் பயப்படலாமா? பத்துப் பேருடைய பல்லை உடைக்கும் பலம் உடம்பில் இருக்கிறது. தடிக்குச்சி வேறு கையில் கொடுத்திருக்கிறார்கள். செத்தவன் பிழைத்து வம்புக்கு வந்தால்கூடக் கணுவுக்குக் கணு எலும்பை இறக்கலாம்.

ஒரு கையில் விளக்கும் இன்னொரு கையில் குச்சியுமாகப் பிணத் தருகில் போனான். தலை துண்டாகக் குப்புறத் திரும்பிக் கிடந்தது. முகம் தெரியவில்லை. மெதுவாய்க் குச்சியால் புரட்டினான். செத்துப் போன முகமாகத் தோன்றக் காணோம். தாடியும் மீசையும், விபூதியும் குங்குமமும் – குங்குமமா அது?

இன்னும் சற்றுக் குனிந்து அந்தப் பொட்டைக் கவனித்தான். இடது கையிலிருந்த விளக்கு அவன் பிடியிலிருந்து தானாகத் திரும்பிச் சிவப்புக் கண்ணாடி வழியே அந்த முகத்தை வேடிக்கை பார்த்தது. கோபத்தோடு பச்சைக் கண்ணாடிப் பக்கம் திருப்பினான். திருப்ப முடியவில்லை. யாரோ அந்த நிலையிலேயே அதைக் கெட்டியாகப் பிடித்திருப்பது போல் பிரமை தட்டியது. அப்போது விளக்குக்குள்ளே யிருந்த ஒளிக்கற்றை துடித்த துடிப்பு! ஏன் இப்படி நடுங்குகிறது?

அந்த முகத்தை அவனுக்கு இதற்கு முன்பு பார்த்த நினைவு. நன்றாக உற்று நோக்கினான். விபூதியும் குங்குமமும் அழியாமல் அப்படியே இருந் தன. அது விபூதி என்பதில் கொஞ்சமும் சந்தேகம் இல்லை. ஆனால் அந்தச் சிவப்புப் பொட்டு? கல்யாணத்தின்போது ஆரத்தி எடுத்து மாப்பிள்ளைக் கோலத்தில் ஒருவனுக்குச் செந்நீரில் திலகமிடுகிறார்களே அந்த மாதிரி இருந்தது. 9333-க்கு ஒரு விபரீத ஆசை. வலதுகை ஆள்காட்டி விரலால் அதை மெதுவாய்த் தொட்டுப் பார்த்தான். குங்கு மம் அல்ல; ரத்தம்! எவ்வளவு கணக்காக நெற்றிமையத்தில் அது ஒட்டிக் கொண்டிருக்கிறது!

கண்களை அகலத் திறந்து அவன் கவனித்தான் : ‘அதே ஆசாமிதானா? அவன் கூட இப்படித்தான் தாடியும் மீசையும், திருநீறும் செம் மண்ணும், ஆடு வெட்டுகிற ஐயனார் கோயில் பூசாரி மாதிரி இருந்தான்.’

அவனுக்குச் சந்தேகம் வலுத்தது.

ஆள்காட்டி விரலில் ரத்தம் ஒட்டிக்கொண் டிருந்தது அருவருப் யாகப் பட்டதால் அதைத் தரையில் குனிந்து துடைத்தான். ரத்தக் கறை பிசாசாக அப்பிக் கொண்டது. லேசில் விடவில்லை. இன்னும் ஆத்திரத்தோடு தரையில் அழுத்தித் தேய்த்தான். குபுகுபுவென்று அவனுடைய விரல் நுனியிலிருந்து ரத்தம் பாய்ந்தது. ஒரு சொட்டு ரத்தத்திற்குப் பதில் ஒன்பது சொட்டு.

“அவனே தான்!” என்றான்.

“அவனேதான்!” – எதிரொலியா?

அதற்குமேல் அந்த முகத்தைப் பார்க்க அவனுக்குப் பயம். இரண்டடி பின்னால் எடுத்து வைத்து நகர்ந்தான். கண்கள் இரண்டும் ஒரு முறை மூடித் திறந்தன. போலீஸின் கண்கள் தாம் !

விரல் நுனி அதிகமாய் எரிச்சல் எடுத்ததால் அதை வாயில் வைத்து. உறிஞ்சினான். அவனுடைய அங்கத்தின் ஒவ்வோர் அணுவிலும் அந்தக் கணத்தில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்ச்சி. மயிர்க்கால்கள் குத்திட்டு நின்றன.

“எல்லாம் இந்தப் பொம்பளைங்களாலே வர்ற வினை!”

வினை என்ற சொல் அவனை மீறி வெளிவந்து விட்டதே தவிர, சுய நினைவோடு அவன் அதைச் சொல்லவில்லை. நல்வினை, தீவினை, கடவுள், பக்தி இந்தமாதிரி ‘மூட நம்பிக்கை’ ஒன்றும் அவனுக்குக் கிடையாது. தன் அறிவுக்குப் பொருந்தாத எதையும் அவன் நம்ப மாட்டான். அவனுடைய அறிவில் இருக்கும் ஆயிரம் ஓட்டைகள் அவனுக்குத் தெரியா.

பிணமாகக் கிடக்கும் மனிதனைப்பற்றி அவன் நினைத்தான். கூடவே பெண்களின் நினைவும் வந்தது.

“பொம்பளையா அவ? பிசாசு”

திடீரென்று சிரிப்பு வெடித்தமாதிரி கலகலப்பு. மிரண்டுபோய்ப் பிணத்தை நோக்கினான்; அது சிரிக்கவில்லை. பின்புறம் திரும்பினான். சவுக்கத் தோப்பிலும் சந்தடி குறைந்திருந்தது. யோசித்தான். தோப் பிற்குள்ளிலிருந்து ஏதோ ஒன்று சிரித்திருக்கவேண்டும்; அல்லது அந்தப் பிணத்துக்குள்ளிலிருந்து கேலிச் சிரிப்பு வெளிப்பட்டிருக்க வேண்டும்; அல்லது அவனுக்குள்ளே இருந்து யாரோ நகைத்திருக்க வேண்டும். யார் அது?

4

அப்போது அவனுக்கு அந்தப் பெண்பிள்ளையின் ஞாபகம் வந்தது. “அறிவில்லாதவர்கள் சொல்வதை நம்பினால் அவள் கூட இப்போது ஒரு பிசாசாகத்தான் இருக்க வேண்டும். சற்று முன்பு சிரித்தது அவள் குரலா?’

இன்றைக்குப் போலவே நடுராத்திரி. சண்டைச் சமயமல்ல, கூட்டம் கிடையாது. ஸ்டேஷனை விட்டு ரெயில் நகர்ந்தவுடன் ஓடி வந்து ஒரு பெட்டியின் கைப்பிடியைப் பற்றித் தொத்தினான் போலீஸ். கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான். ஆறேழு பேர்கள் மாத்திரமே உட்காரக்கூடிய மிகச் சிறிய இடம். எதிரும் புதிருமாய் இரண்டு பெஞ்சிகள் இருந்தன.

உள்ளே யாரும் இல்லாததால் சாவகாசமாய் உட்கார்ந்து பீடியைப் பற்ற வைத்து இரண்டு இழுப்பு இழுத்தான். மூக்கிலும் வாயிலுமாகப் புகை வெளியேறிற்று. இருந்தாற் போலிருந்து பெஞ்சிக்கடியில் தொங்கிய கால்களில் ஏதோ துணிமூட்டை தட்டுப்பட்ட மாதிரி இருந் தது. குனிந்து பார்த்தான். பெண்பிள்ளை ஒருத்தி நல்ல தூக்கத்தில் புரண்டு படுத்துக்கொண் டிருந்தாள்.

நன்றாகப் பார்த்தான். அவள் ஒரு புதுப் பிச்சைக்காரி. இந்தப் – பக்கம் அவள் வந்து இரண்டு வாரங்கூட ஆகவில்லை. எவனோ நொண் டிப் பயலோடு சேர்ந்து பாட்டுப் பாடிக் காசு வாங்கிக்கொண் டிருந் தாள். வயசும் குரலும் கூடிக் கலந்ததால் பிச்சைக் காசுக்குக் குறை வில்லை. முன்பே அவளைப் பல தடவைகள் கவனித்திருக்கிறான் 9333. “நம்மை விட்டு எங்கே போகப் போகிறாள்?’ என்ற எண்ணம். கழுதை. கெட்டால் குட்டிச்சுவருக்கு வராமலா போகும்?

தன்னை மறந்து தூங்கும் அவளை அங்கம் அங்கமாய்க் கண்களால் அளந்து பார்த்தான். பதினெட்டு முழச் சேலைக்கும் பாங்கான ரவிக்கைக் கும் அவள் எங்கே போவாள்? மானத்தை மறைத்து விட்டதாக அவள் நினைத்துத் தூங்கிக்கொண் டிருந்தாள். அவளிடம் அழகில்லை; வயசும் வளப்பமுந்தான். அவளுடைய நொண்டிப் புருஷன் எங்கே போனானோ தெரியவில்லை.

“இந்தா புள்ளே!” வாரிச் சுருட்டிக்கொண்டு அவள் எழுந்தாள்.

“அடுத்த ஸ்டேஷனிலே இறங்கிட்றேனுங்க.” – உள்ளே இருந்து கொண்டே அவள் பேசினாள்.

“சரி புள்ளே, வெளியே வா! வந்து பெஞ்சிமேலே உட்கார்.”

“டிக்கட்டு வாங்கலிங்க; அடுத்த ஊர்லே இறங்கிட்றேனுங்க.”

“ஏன் இப்படிப் பயந்து சாகிறே? நான் உங்கிட்டே டிக்கட் கேக்கலே; எழுந்திருச்சு வா! இது என்ன, எங்க பாட்டன் வீட்டு ரெயிலா? என்னோட தலையிலேயா ரெயில் ஓடுது?”

“இல்லிங்க …”

“என்ன இல்லிங்க?” – அவன் சிரித்தான்.

அவள் எழுந்து பெஞ்சின் ஓரத்தில் கூனிக் குறுகி நின்றாள். உடம்பு லேசாகப் பதறியது. கண்களில் பயம் கலந்த பார்வை. இரண்டு மூன்று முறை அவன் அவளை உட்காரச் சொன்னான். அவள் கேட்கவில்லை.

“உட்காரப் போறியா, உன்னை உட்கார வைக்கட்டுமா?”

“இல்லிங்க.”

“உட்காராட்டி உன்னைத் தூக்கி வெளியே எறிஞ்சிடுவேன், பார்த்துக்க.”

அவள் உட்கார்ந்தாள்.

“இந்த வயசிலே நீ ஒரு நொண்டிப்பயலோட சேர்ந்துக்கிட்டுப் பிச்சை எடுக்கலாமா? வயசுப் பொம்பிளை வெளியே வரலாமா? இது உனக்கு நல்லா இருக்கா?”

“……”

“உனக்கு வேண்டியது சோறுஞ் சேலையுந்தானே? அதைக் குடுத்தா நான் சொல்றபடி கேக்கிறியா?”

“…..”

“என்ன புள்ளே, இடிச்ச புளிமாதிரி உட்கார்ந்திருக்கே! – சொல்ற வேலையைச் செய்யறியா?”

“என்ன வேலையுங்க?”

“ரொம்ப நல்ல வேலைதான்! சொகுசான வேலை.- நல்ல சேலை கட்டலாம். நல்ல சோறு திங்கலாம். நாலு பேர் முன்னாலே நாயாக் குலைச்சுக் காசு கேட்க வேண்டாம்.”

என்ன வேலையென்று இன்னும் அவள் தெரிந்து கொள்ளவில்லை ஆனால் நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா? எந்த எந்த மாதிரி வேலைகள் எல்லாம் உலகத்தில் நடக்கின்றன தெரியுமா?

விபசாரம் செய்வது சட்டப்படி குற்றம். அதற்குத் தூண்டுவதும் குற்றம். ஆனால் பட்டினி கிடப்பது குற்றமல்ல; பத்துப் பேர் உணவை ஒருவன் தின்பதும் குற்றமல்ல. ஆகையால் பட்டினியும் பசியின்மையும் சேர்ந்து சட்டத்தை இன்று படாத பாடு படுத்துகின்றன.

9333-க்கு இது உபதொழில். எத்தனையோ அநாதைப் பெண்கள் இல்லையா? சோறும் சேலையும் முதலீடு; வருவதெல்லாம் லாபம். காசைக் கொடுத்து நோயை விலைக்கு வாங்கிக்கொள்ள இந்த நாட்டில் காலிக் கூட்டத்துக்குத்தானா பஞ்சம்? சட்டம் என்ற சண்டிக் கழுதைக்கு மூஞ்சி யில் ஒரு குத்தும், முதுகில் ஓர் உதையும் விட்டுக் காசைக் கறந்தான் அவன்.

பிச்சைக்காரிக்கு அது இன்னும் என்ன வேலை என்று புரியவில்லை. மிரண்டு மிரண்டு விழித்தாள்.

“என்ன வேலை தெரியுமா?” – திடீரெனப் பாய்ந்து அவள் கையைப் பற்றினான்.

அவள் முகம் பேயறைந்த மாதிரி ஆகிவிட்டது. வாய்விட்டுக் கத்தினாள். கத்தி என்ன செய்வது, ரெயிலின் சத்தத்தில்?

ரெயிலுக்கு இருந்தாற்போலிருந்து வெறி பிடித்துவிட்டது. மலை உச்சியிலிருந்து தலை குப்புற விழும் வேகத்தில் அது தடதடவென்று பதறிக்கொண்டு ஓடியது. எதிரே இருந்த இருண்ட உலகம் இரண்டாகக் கிழிந்து விழுந்தது.

கையை உதறிக்கொண்டு அவள் பின்னே நகர்ந்தாள். அவன் விகாரமாய்ச் சிரித்தான். மெதுவாக அவனும் அவளை நெருங்கினான். ரெயிலின் சத்தம் அப்போது மிகப் பயங்கரமாக இருந்தது. ஆற்றுப் பாலத்தின் இறக்கத்தில் போய்க்கொண்டிருந்ததால் வானம் கிடு கிடுப்பதைப் போன்ற சத்தம்.

“என்னடி, பிச்சைக்காரக் கழுதை! பத்தினி வேஷமா போடுறே?”

“ஐயோ !…… ஆ!”

அதற்கப்புறம் என்ன நடந்ததென்று போலீஸ்காரனுக்குத் தெரியாது. அவன் கண்கள் திறந்து கொண்டுதான் இருந்தன.. ஐம்புலன்களும் அவனுக்கு உயிரோடுதான் இருந்தன.

பின்புறமாக நகர்ந்தவள் அப்படியே கதவில் சாய்ந்தாள். வெளிப் பக்கம் திறக்கக் கூடிய கதவுகள் அவளுடைய சுமை தாங்காமல் வழி விட்டன. கீழே நுங்கும் நுரையுமாய், சுழித்து ஓடிக்கொண்டிருந்த காட்டாறு அந்தப் பிச்சைக்காரியை மடியில் ஏந்திக்கொண்டு, அவள் மானத்தைக் காப்பாற்றியது. உயிரைக் காக்கும் திறன் அதற்கு இல்லை.

எல்லாம் மின் வெட்டும் நேரத்தில் நடந்தன. நினைக்கும் போதெல்லாம் அவனுக்கு அந்தக் காட்சி கண்முன்னே வரத் தவறுவதில்லை. நினைக்கும் போது மட்டும் வந்தால் குற்றமில்லையே! நினைக்காத போதெல்லாம் வந்து வெறியாட்டம் போட வேண்டுமா?

மனம் என்கிற மாயப்பேய் மனிதனுக்குள்ளே இருந்து படுத்துகிற பாட்டை அவன் அப்போதுதான் உணர்ந்தான். அது சண்டித்தனம் செய்யத் துணிந்துவிட்டது. கிளைக்குக் கிளை தாவிக் கண்டதை யெல் லாம் கடித்துக் குதறும் கிழட்டுக் குரங்குபோல் அது கடந்தவற்றைத் தன் கூரிய பற்களால் கிழித்துக் கிழித்து அவனுக்கு வேடிக்கை காண்பித்தது.

“ஐயோ !……. ஆ!”

இரண்டு மூன்று வருஷங்களுக்கு முன்பு அந்தப் பெண்பிள்ளை அழுதகுரல் இன்று அவனுக்குள்ளே இருந்து வீறு கொண்டெழுந்தது. அப்புறம் அவள் என்ன ஆனாள்?

நல்ல வேளையாக அந்த ஆற்றங்கரையில் நிற்காமல் வேறோர் இடத்தில் நிற்கிறோமே என்று தன்னைத் தேற்றிக்கொள்ளப் பார்த்தான். செத்துப்போன பெண்பிள்ளையிடம் ஓர் ஆண்மகன், போலீஸ்காரன், பயப்படலாமா? தண்டவாளங்களுக்கு அப்பால் எதிரே தெரிந்த மணல் வெளியைப் பார்த்தான். என்ன இது? எங்கிருந்து இந்த ஓங்காரச் சத்தம்? திடீரென்று புது வெள்ளம் பாய்ந்து மணலை விழுங்கி மறையச் செய்கிறதே!… அந்தக் காட்டாற்றில் அன்றைக்குச் சுழிப்பும் கொழிப்பு மாய்த் திமிரோடு பாய்ந்த வெள்ளம் இன்றைக்குத் திசை மாறிவிட்டதா? – நட்டாற்றின் மத்தியில் நாணல் பூவைப்போல் ஒருத்தி ஒய்யாரமாக மிதந்து வந்தாள். அலையோடு அலையாகத் தன்னுடைய கருங்கூந்தலை வெள்ளத்தில் படரவிட்டு, அதையே படுக்கையாக்கி அசைந்து வந்தாள்.

“அலைமோதுதே. ஐயா! அலைமோதுதே” சந்தேகமே இல்லை. அந்தப் பிச்சைக்காரியின் குரல்தான். ரெயிலில் பிச்சை எடுக்க அவள் பாடுகிற பாட்டு…

போலீஸ் புலி உளறிற்று. உருவமில்லாத ஒலி அவன் தொண்டையி லிருந்து கிளம்பியது. துப்பாக்கிக் குண்டுபட்டுத் துடிக்குமே வேங்கை, அதன் குரல் போன்ற அண்டத்தை நடுங்கச் செய்யும் அலறல்…..

கண்களை இறுக மூடிக்கொண்டான். இருந்தும் என்ன? அந்த அற்று வெள்ளம் ஏன் அவனுடைய மார்புக்குள் மளமளவென்று பாய்கிறது? ஏன் அந்தப் பெண்பிள்ளை அவனுடைய நெஞ்சைப் பிளந்து கொண்டு உள்ளே நுழைகிறாள்? அங்கே போய்த் தாமரை மொட்டுப் போல் தலைகீழாய்த் தொங்கும் அவன் இருதயத்தைக் கடித்து உறிஞ்சுகிறாள்? – ஏன், ஏன், ஏன்?

‘கடவுளே!’ – வேதனை தாங்காத இருதயத்தின் இருண்ட மூலையி லிருந்து ஓர் ஒலி ஏக்கத்தோடு இறைவனைக் கூவி அழைத்தது.

கண்களை அவன் திரும்பவும் திறந்து பார்த்தபோது எதிரில் ஆற்று வெள்ளமும் இல்லை; பெண்பிள்ளையும் இல்லை. பழைய மணல்வெளி பரந்து கிடந்தது. பாட்டொலி எங்கோ பதுங்கிக்கொண்டது.

5

இந்த நிமிஷ அவஸ்தைக்குள் அவனுக்கு வேர்வையால் உடம்பு முழுவதும் நனைந்துவிட்டது. பொத்தான்களைக் கழற்றிச் சட்டையைத் திறந்து விட்டுக்கொண்டான். அந்த இடத்தில் நிற்பதற்கு இருப்புக் கொள்ளவில்லை. தொலை தூரத்துக்கு விலகிப் போய்விட வேண்டும் போலிருந்தது. மெதுவாகத் திரும்பி நடந்தான்.

அவனுக்குப் பின்னால் யாரோ அவனைவிட வேகமாய் நடந்து வந்தார் . கள். படீரென்று திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை! திரும்பவும் தடந்தான்; திரும்பவும் அதே போல் நடையோசை!- .

அவனுக்குக் கோபம் வந்தது. ”எங்கிட்டே பூச்சாண்டியா காட் டுறே?” என்று சொல்லிப் பல்லைக் கடித்தான். கையிலிருந்த தடிக் குச்சியைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு காற்றை அடித்தான். குச்சியை அவன் வீசி எறிய விரும்பவில்லை. ஆனால் அது தானாக நழுவிக் காற்றில் பறந்தது. படம் எடுத்த நாகம்போல் சீறிக்கொண்டு அந்தப் பிரேதத்தின் மேல் போய் விழுந்தது.

குச்சி நழுவும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. அவனுக்கு ஒரே திகைப்பு. உருவமில்லாத ஏதோ ஒன்று குச்சியை அவனிடமிருந்து வெடுக்கென்று பிடுங்கி எறிந்துவிட்டதா?

ஒரு கணம் தயங்கினான். திரும்பிப்போய் அதை எடுத்து வருவதா வேண்டாமா என்ற பிரச்னை. வெறும் கையோடு இருப்பதற்கு அவ னுக்குப் பயமாக இருந்தது. அதைப் போய் எடுத்து வருவதற்கும் பயம். இந்தச் சிக்கலுக்கு வழி? கடைசியில் துணிந்து அந்தப் பிணத் தருகில் சென்றான். குனிந்து குச்சியை எடுக்கப் போனான்.

குனியும்போது கண்கள் அந்த முகத்தைக் கவனித்தன; ‘சந்தேகம் இல்லை: அவன் தான்; அவனே தான்!’

“என்னப்பா, சுகமா இருக்கிறயா? நான் வெளியே வந்திட்டேன், தெரியுமா?”- பிணம் வாய் திறந்து பேசுவதுபோலிருந்தது. கைத் தடியை எடுத்துக்கொண்டு வெறுப்போடு அந்த முகத்தைப் பார்த்தான்.

நாலைந்து நாட்களுக்கு முன்பு இதே மனிதனை ரெயிலில் பார்த்த நினைவு போலீஸுக்கு. இரண்டு வருஷங்களுக்குப் பின்பு அது அவர்க ளுடைய முதற் சந்திப்பு. இதற்கு முன்பு அவனுக்குத் தாடிமீசை கிடை யாது; திரு நீற்றுப் பூச்சும் செம்மண் பொட்டும் இல்லை. இரண்டு வருஷச் சிறைவாசம் அவனைப் புது மனிதனாய்ச் செய்திருந்தது. கூண்டுக்குள் கிடந்த அவன் குண்டோதரனாய்ப் பெருத்திருந்தான்.

அப்போது அவன் 9333 – ஐக் கேட்ட முதற் கேள்வி இது: “என்னப்பா, சுகமாக இருக்கிறயா? நான் வெளியே வந்திட்டேன், தெரியுமா?”

“அடையாளமே தெரியலியே? சாமியாராப் போயிட்டியா?”

“ஆமா, சாமியாராப் போய், சாமியைப் பார்க்கணுங்கற ஆசை!” ஆசாமிக்கு அரைப் பைத்தியம் என்று தீர்மானித்தான் போலீஸ்:

“கடவுளைக் கண்ணாலே பார்க்கணும்; பார்த்து வரங் கேக்கப் படாது. காறித் துப்பணும். உன்னைப்போல அயோக்கியனை அவன் படைக்கலாமா?”

அதற்குமேல் அந்த இடத்தில் தங்குவது ஆபத்து என்று பட்டது போலீஸுக்கு. முன்பு ஒரு முறை அவனிடம் வாங்கிய அடி, உதை, குத் தெல்லாம் போதாவா? பாவி! மூக்கில் ரத்தம் கொட்டக் கொட்ட அவன் விட்ட குத்துகளை 9333 மறக்கவில்லை.

அதுவும் ஒரு வெட்கங்கெட்ட காரியந்தான். ரேஷன் காலத்தில் சட்ட விரோதமாய் ரெயிலில் கால் மூட்டை அரிசி கொண்டு வந்தாள் ஒரு விதவை. விதவை என்றால் கிழவியல்ல; அவள் தனியே வந்தாள். அவள் செய்த குற்றத்திற்குப் பரிகாரமாய் அவளை இன்னொரு குற்றத் துக்கு ஆளாக்கப் பார்த்தான். அவள் பதறி அடித்துக்கொண்டு வந்து அடுத்த பெட்டியிலிருந்த எவன் காலிலோ விழுந்தாள்.

அந்த மூன்றாவது மனிதனுக்குச் சட்டம் தெரியவில்லை; நியாயம் தெரிந்தது. அவனுக்கு மண்டையில் மூளை இல்லை: நெஞ்சில் உரம் இருந்தது; உடலில் வலு இருந்தது. ‘டூட்டி’ யில் இருந்த போலீஸை வாட்டி எடுத்துவிட்டான்.

இரண்டு வருஷம் அவன் இரும்புக் கம்பி எண்ண வேண்டியதாயிற்று.

ஜெயிலுக்குப் போய் வந்தபிறகும் அவனுடைய திமிர் குறைய வில்லை என்று கண்டு மெதுவாய் அந்த இடத்தை விட்டு நழுவினான் போலீஸ். ‘எங்கே போய்விடப் போகிறான்? இன்னும் இரண்டொரு கேஸில் மாட்டவைத்து உள்ளே தள்ளினால் தன்னால் வழிக்கு வருகிறான்.’

“இருந்தும் கெடுத்தான், செத்தும் கெடுத்தான்” என்று தனக்குள் அவன் சொல்லிக்கொண்டான்.

இந்தப் பேச்சைக் காது கொடுத்துக் கேட்டாற்போல் சவுக்கத் தோப்பு, குபீரென்று சிரித்தது. திரும்பிப் பார்த்தான். ஒவ்வொரு சவுக்க இலையும் ஓர் ஊசி முனையாகிக் குத்துகிறது!

சிரிப்பது யார்? செத்துப் போனவன் பிசாசாக மாறிச் சிரிக்கிறானா? சே! பிசாசாவது, மண்ணாங்கட்டியாவது!

அவனுக்குள்ளே. இருந்து இப்போது அந்தச் சிரிப்புக் கேட்டது.

“உன்னாலே என்னை என்னடா பண்ண முடியும்? உயிரோட இருந் தப்பவே அசைக்க முடியவில்லை; இப்ப மிரட்டிப் பார்க்கிறானாம்!”

பயமா. ஆத்திரமா, வெறியா என்று தெரியவில்லை. மிதமிஞ்சிய போதை அவனுக்கு. கையிலிருந்த தடிக்குச்சியால் ஓங்கி அந்தச் செத்த உடலை அடிக்கப் போனான்.

“உஸ்!… உஸ்!…”

அம்பைப்போல் காற்றைக் கிழித்துக் கொண்டு இரண்டு பறவைகள் அவன் தலைக்கு மேலே பறந்தன. ஒன்றை ஒன்று துரத்திச் சென்றன. பறவைகள் மறைந்த பிறகும் அந்த ‘ உஸ்’ என்ற ஒலி மறையவில்லை.

அவனுக்குள்ளே இருந்து சிரிப்பும் குரலும் கேட்கத் தொடங்கின்.

‘ஹ ஹ ஹ் ஹா! ஹ ஹ ஹ் ஹா! உடம்பில்லேடா; உயிர்! தேக மில்லேடா; ஆவி! ஹ ஹ ஹ் ஹா!’

அடிப்பதற்குக் குச்சியை ஓங்கியவன் அயர்ந்துவிட்டான். ஆனால் அடுத்த கணம் அவனுடைய மூர்க்கத்தனம் அவனை விடவில்லை. தன்னுடைய பலமெல்லாம் சேர்த்து ஓங்கி அடித்தான்.

“சட்டுச் சட சட சட்! சடார்!..ஹா! … ஹூ! … ஹோ !” – மரம் முறிந்து விழுந்து அலறும் ஓசை.

திரும்பிப் பார்த்தான். கண்கள் நிலை குத்திவிட்டன. ஆயிரம் ஆயிரம் சவுக்க மரங்கள் நின்ற இடத்தில் ஒரு மரத்தைக் கூடக் காண வில்லை. அங்கே ஆயிரம் ஆயிரம் ஜடாமுனிகள்! ஆயிரம் ஆயிரம் கரும் பிசாசுகள்!

ஈயத்தைக் காய்ச்சி எலும்புக் குருத்துக்குள் பாய்ச்சுவது போலிருந் தது 9333-க்கு. பேய்கள் தலை விரித்தாடின. சடையும் முடியுமாய்க் கற்றை கற்றையாய்த் தொங்கிய மயிர்க் குவியலைக் காற்றில் சுழற்றிச் சுழற்றி வீசின. கைகளை அகல விரித்துக்கொண்டு அணு அணுவாக நகர்ந்து அவனருகில் வந்தன. அவை அலறிய அலறல்! உறுமிய உறுமல்!

கண்களை அவன் திரும்பவும் மூடிக்கொண்டான். உள்ளே பார்த் தான். சூறாவளியில் அகல் விளக்குத் துடிப்பதுபோல் அவன் உயிர் அங்கே துடித்தது.

‘உடம்பில்லேடா; உயிர்! தேகமில்லேடா; ஆவி!’

தன்னுடைய உயிர் கால் போன போக்கில் வெறி நாய்க்குப் பயந் தோடும் சின்னஞ் சிறு குழந்தை போல் அவனுடைய உள்ளத்துக்குள் தறி கெட்டலைந்தது. பயத்தினால் பதைபதைக்கும் அந்தப் பாலகனின் பாதுகாப்புக்கு ஓர் காவலன் வேண்டி இருந்தது. அந்தக் காவலன் எங்கே?

தன்னுடைய உள்ளத்துக்குள்ளே, உயிருக்குள்ளே, உள்ளத்தின் உள்ளத்திலே, உயிரின் உயிரிலே அவனை இந்தக் கணத்தில் தேடி அலைந் தான் போலீஸ். அவன் தேடிய இடமெல்லாம் ஒரே இருள்! மின்மினிப் பூச்சி போல் ஒரு சொட்டு ஒளியாவது அங்கே காணோம். ஆனால் அவன் யாரைத் தேடினானோ அந்த அவன் அங்கே தான் இருக்கிறான் என்பது போலீஸுக்குக் கடைசி நிமிஷத்தில் தெரிந்தது. இரண்டு அன்புக் கரங் கள் அவனை அணைத்துக்கொள்ளத் தயாராக இருந்தன. கரங்களுக்கு உரியவனைக் காண்பது எப்படி? அவன் கால்களைப் பற்றிக் கதறுவது எப்படி?

கண்களைத் திறந்தான் 9333.

ஆயிரம் ஆயிரம் ஜடாமுனிகளும் – அப்போது ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு அண்ட சராசரத்தையே ஆக்கிரமித்துக் கொண்டன. திரும்பிய பக்கமெல்லாம் ஒரே கறுப்பு. ஆகாயத்திலிருந்த அத்தனை நட்சத்திரங்களும் செத்துப் போய்விட்டன. மலையைவிடப் பெரிய மிருகம் மாதிரி ஒரே பேயாய் அது அங்கு நின்றது.

புயலும் கடலும் சேர்ந்து கொண்டு உறுமும் ஓசையைவிடப் பயங்கர மாயிருந்தது அந்தப் பிசாசின் பெருமூச்சு. 9333-இன் கைகள் நடுங்கின. முதலில் தடிக்குச்சி கீழே விழுந்தது. அடுத்தபடியாக விளக்குத் தரையில் புரண்டு அணைந்தது.

மடி கனத்தது; நெஞ்சும் கனத்தது; கால்களும் கனத்தன. கனம் தாங்காமல் நெஞ்சு வெடிக்கும் போல் தெரிந்த தால் அதை இரு கைகளாலும் கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டான். கால்கள் ஒன்றோடொன்று பின்னிக்கொண்டு அவனைக் கீழே தள்ளின. அதன் பிறகு அவன் பயப்படவில்லை.

பொழுது விடிந்தது. சவுக்கத் தோப்பு சவுக்கத் தோப்பாய்த்தான் இருந்தது. வறண்ட ஆறு மணல் வெளியாய்த்தான் இருந்தது. தண்ட வாளங்கள் இரும்புக்கம்பிகளாய்த்தான் இருந்தன. ஆனால் ஒரு பிணம் கிடந்த இடத்தில் இரண்டு பிணங்கள்!

ரெயில்வே டாக்டரும் ஊழியர்கள் சிலரும் அங்கே வந்தார்கள். ஒரு மூன்றாவது மனிதனும் வழிப்போக்கில் அங்கு வந்தான். அந்த வழிப் போக்கனையும் ரெயிலில் அடிபட்டுச் செத்தவனையும் மாறி மாறிப் பார்த் தார்கள் மற்றவர்கள். கிட்டத் தட்ட ஒரே மாதிரித் தோற்றம். வழிப் போக்கனுக்கும் முகத்தில் தாடி மீசை, நெற்றியில் வெள்ளை சிவப்பு எல்லாம் இருந்தன. 9333-இன் நாடியைப் பிடித்துப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்கினார் டாக்டர்.

“பிசாசு அடிச்சுப் போட்டிருக்கும்” என்றான் ரெயில்வேக் கூலி.

“கடவுளுக்குக் கண் இருக்குங்க!” என்றான் அந்த வழிப்போக்கன். முன்பொரு நாள் அவனைப் பார்த்துக் காறித் துப்ப நினைத்த அதே ஆத்திரக்காரன் தான் அவன்.

– மே, 1953 – கலைமகள் கதம்பம் (1932-1957), வெள்ளி விழா வெளியீடு, முதற் பதிப்பு: ஏப்ரல் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

0 thoughts on “பூச்சாண்டி

  1. அருமையான கதை. வித்தியாசமான சிந்தனைகள். வாழ்த்துக்கள் கண்ணன் சார். – லாவண்யா மேட்டூர் டேம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *