கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
தின/வார இதழ்: குமுதம்
கதைத்தொகுப்பு: அமானுஷம் கிரைம்
கதைப்பதிவு: February 3, 2024
பார்வையிட்டோர்: 17,700 
 
 

(1992ல் வெளியான தொடர்கதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அத்தியாயம் 26-30 | அத்தியாயம் 31-35 | அத்தியாயம் 36-40

அத்தியாயம்-31

“ஆனந்தியின் வீட்டில் சீதாவிற்கு நேர்ந்ததெல்லாம் அவள் வீட்டிற்குத் திரும்பியதும் அவள் சொல்லித் தான் தெரிந்து கொண்டேன். ஆனால் என் வாக்குமூலம் தெளிவாக இருக்க வேண்டிய காரணத்தால், நான் உடனிருந்து பார்த்ததுபோல் விவரிக்கிறேன். அதற்குக் கோர்ட்டாரின் அனுமதி வேண்டும்”, என்று ராமநாதன் கூறி விட்டுத் தன் வாக்குமூலத்தை நிறுத்தினான். 

நீதிபதி, சைகையால் மேற் கொண்டு வாக்குமூலத்தைத் தொடரும்படி உத்தரவிட்டார். ராமநாதன், பின் தொடர்ந்த நிகழ்ச்சிகளைத் தானே அங்கிருந்து பார்த்ததுபோல விவரித்தான். 

சீதா அந்த வீட்டிற்குள் நுழையும் பொழுது தயக்கத்துடன்தான் நுழைந்தாள். தனது வாழ்வில் சூறாவளி போல் தோன்றி இன்பத்தைச் இந்த வீட்டில் குறையாடிய அந்தப் பெண் ஆனந்தியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் ஒருபுறமும், தனது உள்ளத்தின் தெய்வமான திலீபன் தன்னைப் பார்த்தும் பாராததுபோல் சென்று விட்டானே என்ற ஏமாற்றம் மறுபுறமும் அவளை வாட்டி வதைத்தன. பாவம். செல்லமாக வளர்ந்தவள் சீதா. இப்பொழுதுதான் முதன் முறையாக ஏமாற்றம் என்ற உணர்ச்சியின் கசப்பைத் தெரிந்து கொண்டாள். பிறந்த நாள் முதல் செல்வமாக வளர்க்கப்பட்ட ஒரு சீமானின் மகள் என்ற நிலையில் அவளது சிநேகிதிகள், பந்துக்கள், வேலைக் காரர்கள் எல்லோரும் மரியாதையோடும் பயத்துடனுமே அவளுடன் பழகி இருந்தனர். வருந்தி வருந்திப் பலமுறை அழைக்கப்பட்டாலொழிய ஓரிடத்திற்கும் சீதா போனவள் அல்ல. ஆனால் இன்று அழையாத வீட்டில் நுழைந்துவிட்டாள், தன் பெருமையை மறந்துவிட்டு. 

அந்த வீட்டின் நடு ஹாலில் – சிதறிக் கிடக்கும் தினசரிகள் கிழிந்து தொங்கும் திரைச்சீலைகள், அழுக்குப் படிந்த சோபாக்கள் எல்லாம் சீலமில்லாப் பெண் வாழும் இடம் என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டின. உடல் இன்பத்தைத் துரத்தி வாழும் ஒரு பெண்ணுக்கு வீட்டை அழகுபடுத்த அவகாசம் ஏது? ஆசை தான் ஏது? அதை நினைத்தவுடனே சீதாவிற்கு வெட்கமும் வேதனையும் மனத்தைப் பின்னிக் கொண்டன. உட்காரவும் தோன்றாமல் வெளியே செல்லவும் மனம் இல்லாமல் குழப்பத்தோடு சிந்தனையில் ஆழ்ந்தபடி நின்றாள். 

அப்போது அங்கு வந்த வேலைக்கார ரங்கன், மிடுக்காகவே, “நீங்க யாரு? உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டான். 

“இந்த வீட்டிலிருப்பவர்களைப் பார்க்க வந்தேன்”, என்றாள் சீதா. 

“இந்த வீட்டிலே யாரும் இல்லை. ஐயாவும் அம்மாவும் இப்பத்தான் வெளியே போனாங்க.” 

அவனுடைய அலட்சிய பாவமும், பொய்யும் வேதனை தரவில்லை. கசப்பைத்தான் கொடுத்தன. “ஏனப்பா பொய் சொல்கிறாய்? ஐயா மட்டும் தனியாகக் காரில் போவதைத் தெருவில் பார்த்தேன். ஆனந்தி அம்மா வீட்டில்தானே இருக்க வேண்டும்?” என்று படபடப்புடன் சொன்னாள் சீதா. 

“நான் சொன்னால் சொன்னதுதாம்மா. நீங்க யாரையும் பார்க்க முடியாது.” என்றான் ரங்கன். 

கண்டிப்பான குரலில் சீதா, “உங்கள் எஜமானி அம்மாவைப் பார்க்காமல் நான் இந்த வீட்டை விட்டு வெளியே போகப் போவதில்லை. உங்கள் எஜமானியிடம் போய், ‘சீதா வந்திருக்கிறாள்’, என்று சொல்லு!” என்று கட்டளையிட்டு வேறுபுறம் திரும்பிக் கொண்டு நின்றாள். 

சீதா என்ற பெயரைக் கேட்டதுமே ரங்கனின் முகம். தோரணை எல்லாம் மாறின. ஆச்சரியத்துடன் ”அம்மா! நீங்க சீதா அம்மாவா? என் தங்கச்சி சொர்ணத்தின் எஜமானி அம்மாவா?” என்று மரியாதையுடன் கேட்டான். 

சீதா பதில் சொல்லவில்லை. 

“ஏம்மா இங்கே வந்தீங்க? நீங்க ஒரு தெய்வம். இந்த மாதிரி ஒரு நரகத்துக்கு நீங்க வரலாமா? உங்க அந்தஸ்து என்ன? ஏம்மா இந்தச் சாக்கடைக்கு வந்தீங்க?” என்று கண்களில் நீர் நிறையக் கேட்டான் அவன். சீதா மெளனமாக நின்றாள். 

“அய்யா வெளியே போயிருக்கிறப்போ அம்மா ரூமை விட்டு வெளியே வரமாட்டாங்க. ஐயா இல்லாதப்போ அம்மா யாரையும் பார்க்கிறதில்லீங்க. ரூமிலேயே அடைபட்டுக் கிடப்பாங்க”. 

சீதா பொறுமை இழந்தாள். “ஆனந்தி அம்மாவிடம் போய் என் பெயரைச் சொல்லு. நிச்சயமாக வருவார்கள்”, என்று வற்புறுத்திச் சொன்னாள். 

ரங்கன் மரியாதையோடு, “அப்படியே சொல்லிப் பார்க்கிறேனுங்க”, என்று உட்புறம் நோக்கிப் புறப்பட்டான். 

சீதாவிற்கு என்ன யோசனை தோன்றியதோ, அவளும் ரங்கனைப் பின் தொடர்ந்தாள். 

ரங்கன் மெயின் ஹாலை அடுத்து வராந்தாவில் பத்தடி நடந்தான். பிறகு ஒரு மூடப்பட்ட கதவின் முன்பு நின்றான். 

”அம்மா! அம்மா!” பதில் இல்லை. 

சீதாவின் மனத்தில் ஆனந்தியைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆவல் எழுந்தது. அத்தோடு, அவள் தன்னிடம் எப்படி நடந்து கொள்வாளோ என்ற பயமும் எழுந்தது. தன்னைக் காதலித்து மயங்கிக் கிடந்த திலீபனே தன்னைப் பார்த்து பாராதவன்போல் போய்விட்டான். அவனை இவ்வளவு தூரம் மாற்றி. விட்ட ஆனந்தியின் மனத்தில் எவ்வளவு போட்டி உணர்ச்சி, குரோதம் இருக்குமோ? 

மறுபடியும் ரங்கன், “அம்மா! அம்மா!” என்று கூப்பிட்டான். 

அறையின் உட்புறமிருந்து, ”ரங்கா, என்ன வேண்டும்?” என்ற குரல் வந்தது. 

“உங்களைப் பார்க்க சீதா அம்மா வந்திருக்காங்க.” 

ஓரிரண்டு வினாடிக்கு மெளனம். பிறகு, “யார்? சீதாவா? நான் வீட் டிலே இல்லை என்று சொல்லிவிடு!” என்ற கட்டளை அறையினுள்ளிருந்து, வந்தது. 

“அப்படிச் சொல்லிடேனுங்க. அவுங்க கேட்க மாட்டேங்குறாங்க. உங்களைப் பார்த்திட்டுத்தான் போவேன்னு பிடிவாதமாச் சொல் ங்க.” 

அறையின் உட்புறமிருந்து உடனே வந்த பதிலில் கோபம் இல்லை. ஆணவம் இல்லை. துக்கம்தான் தொனித்தது. “ஐயோ! ரங்கா! நான் எப்படியடா அவளை இந்த நிலையிலே பார்க்கிறது? எப்படியாவது போகச் சொல்லுடா! தயவு செய்து போகச் சொல்லுடா!” 

கோபத்தை எதிர்பார்த்த சீதாவிற்கு இந்தக் கெஞ்சும் குரல் ஆச்சரியமாக இருந்தது. அது மட்டுமல்ல. அந்தக் குரலில் நயம் தொனித்தது. முதல் பகுதி பெண் குரலாகவும். இரண்டாவது பகுதி ஆண் குரலாகவும் இருந்தது. 

ரங்கன், “அந்த சீதா அம்மாவே அறைக் வெளியே நிக்கறாங்க”, என்றான். 

“முட்டாள்! அவர்களை யாரடா உன்னை இங்கே அழைத்து வரச் சொன்னது?” என்று ஆனந்தி கூறிவிட்டு எழுந்து வந்து கதவை உட்புறம் தாளிட முயற்சி செய்யும் ஓசை கேட்டது. அதற்குள் சட்டென்று சீதா கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்துவிட்டாள். 

ஆனந்தியும், அறையினுள் நுழைந்த சீதாவும் ஒரு வினாடி ஒரு வரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். அடுத்த வினாடி ஆனந்தி முகத்தை வேறுபுறம் திருப்பிக் கொண்டு அழ ஆரம்பித்துவிட்டாள். 

சீதாவுக்கு வியப்பும் ஆத்திரமும் பெருகின. ”அழ வேண்டியவள் நான் அல்லவா? நீ ஏன் அழுகிறாய். ஆனந்தி? திருமணத்திற்குக் காத்து நின்ற என் வாழ்விலே திடீரென்று தோன்றி என் எதிர்காலத்தைத் திருடிக் கொண்ட நீ ஏன் அழவேண்டும்? தாயிடமிருந்து மகனைப் பிரித்திருக்கிறாய். அண்ணனிடமிருந்து தம்பியைப் பிரித்திருக்கிறாய். ஒரு பெண்ணிடமிருந்து அவள் வருங்காலக் கணவனைப் பிரித்திருக்கும் நீ சிரிக்க வேண்டும். அழக்கூடாது. இப்படித் திரும்பு. ஆனந்தி! உன் கவர்ச்சியின் ரகசியத்தை நான் அறிய வேண்டும்!” என்று கூறி, ஆனந்தியை வேகமாகத் திருப்பினாள். 

ஆனந்தியின் கன்னங்களில் கண்ணீரின் கறை இருந்தது. அவள் ஆடையின் அலங்கோலம், அவளுடைய உடலின் தளர்ந்துபோன அமைப்பு எல்லாம் தெளிவாய்த் தெரிந்தன. இவளிடமா திலீபன் தன் உள்ளத்தை இழந்தான்? பொறாமை இருந்த இடத்தில் பச்சாதாபமே மிஞ்சியது. சீதாவின் முன்னால் நின்ற ஆனந்தியிடம் ஆணவம் இல்லை. சாகசம் இல்லை. திமிர் இல்லை. அவள் பயந்த பெண்ணாகத் தான் காணப்பட்டாள். 

”சீதா! இங்கிருந்து போய்விடு. சீக்கிரமே இங்கிருந்து போய்விடு. இந்த வீட்டில் தங்குவது ஆபத்து சீதா. உன்னைப் போன்ற ஒரு நல்ல பெண்ணுக்கு இது இடமில்லை சீதா”, என்று கூறியபடி ஆனந்தி சீதாவை அறைக்கு வெளியே தள்ளினாள். கதவைத் தாளிட்டாள். 

ஆனந்தியின் அந்த வார்த்தைகளிலே உலகத்தின் சோகமெல்லாம் நிறைந்து நின்றது. 

திகைத்து நின்ற சீதா அப்படியே ஆனந்தியை விறைத்துப் பார்த்தாள். ஆனந்தியின் கண்களைப் பார்க்கப் பார்க்கச் சீதாவின் சிந்தனை சூழல ஆரம்பித்தது. அந்தக் கண்களை அவளால் மறக்க முடியவில்லை. அது மட்டுமல்ல. அந்தக் கண்களை அவள் இதற்கு முன்பு பார்த்ததாகத் தோன்றியது. எந்தப் பெண் முகத்தில் அந்தக் கண்களைப் பார்த்திருக்கிறோம் என்று நினைத்து நினைத்துக் குழம்பினாள். எந்தப் பெண் முகத்திலும் பார்த்த கண்கள் அல்ல அவை. ஓர் ஆண் முகத்தில்தான் அக்கண்களை அவள் பார்த்திருந்தாள். அந்த ஆனந்தியின் கண்கள். போட்டோவில் உள்ள திலீபனின் தந்தை சபாபதியின் கண்கள் போலவே இருந்தன! ஏன், திலீபன் கண்களைப் போலவும் இருந்தன. 

கதவைத் தாளிட்ட பின்பு அறையினுள்ளிருந்து ஆனந்தி கேவிக் கேவி அழும் சப்தம் கேட்டது. 

சீதா அறையின் கதவைத் தட்டியபடி, “ஆனந்தி! ஆனந்தி! கதவைத் திற, ஆனந்தி!” என்று கூச்சலிட்டாள். 

அத்தியாயம்-32

வராந்தாவில் திலீபனும். மேஜரும் நின்று கொண்டிருந்தார்கள். மேஜரும், திலீபனும் எப்பொழுது நுழைந்தார்கள் என்பது தெரியவில்லை. திலீபனைப் பார்த்ததும் சீதாவுக்குத் தைரியம் குறைய ஆரம்பித்தது. தலையைக் கவிழ்ந்த படியே, “உங்களையும் ஆனந்தியையும் பார்த்துப் போக வந்தேன்”, என்று அடக்கமாகச் சொன்னாள். 

‘உங்களையும்’ என்ற வார்த்தையை உச்சரிக்கும் பொழுது சீதாவின் ஆசையெல்லாம் அந்த வார்த்தையில் பொதிந்து நின்றது. 

ஆனால் திலீபனோ, சீதாவின் ஆழமான அன்பைப் புரிந்து கொண்டவனாகவே தெரியவில்லை. வெறுப்போடு சீதாவைப் பார்த்தான். 

“உன்னை இங்கு யார் வரச் சொன்னது? போ வெளியே”, என்றான். 

சீதா அசையாது, பேசாது நின்றாள். 

“போ வெளியே ! ஐ சே, கெட் அவுட்!” 

சீதா நிமிர்ந்து பார்த்தாள். அவள் கண்கள் திலீபனின் கண்களைக் கவனித்தன. எந்தக் கண்களுக்கு சீதா தன் இதயத்தை. ஆன்மாவை இழந்து அடிமையானாளோ, அந்தக் கண்களின் கவர்ச்சி அங்கு இல்லை. எந்தக் கண்களைப் பார்க்கும்போதெல்லாம் சீதாவின் இதயம் ஆசையால் பட் பட் என்று அடித்துக் கொள்ளுமோ, மார்பு விம்மி எழுந்து அடங்குமோ, அந்தக் காந்த சக்தி அந்தக் கண்களில் இல்லை. சீதா கூர்ந்து கவனித்தாள். திலீபன் ஆத்திரத்தோடு, “என்ன அப்படி என்னை முழித்துப் பார்க்கிறாய்? நட, வெளியே,” என்றான்.

“நீங்களா இப்படிப் பேசுகிறீர்கள்? அதுவும் என்னைப் பார்த்தா பேசுகிறீர்கள்? அடியோடு மாறிவிட்டீர்களே! மனிதர்களுக்கு ஆசைகள் மாறும், குணமும் மாறும்… ஆனால் அவர்களுடைய கண்களும், பார்வையும் கூடவா மாறும்?” என்று புலம்பினாள் சீதா. 

இதுவரை பேசாதிருந்த மேஜர், முதன் முறையாகப் பேசத் தொடங்கினார். தமது வயதுக்குத் தகுந்த கண்ணியத்தை வரவழைத்துக் கொண்டு, “சீதா. திலீபனிடம் எந்த வித மாற்றமும் இல்லை. நீயாகவே ஏதேதோ நினைக்கிறாய். நீ உடனே வீட்டுக்குப் போய்விடுவதுதான் சரி”, என்று சொல்லி, சீதாவை அழைத்துப் போக நெருங்கினார். 

திலீபன் ஏறெடுத்தும் சீதாவைப்  பார்க்கவில்லை. அப்படியே தலையைக் குனிந்தபடியே ஆனந்தி இருக்கும் அறையை நோக்கி நடந்தான். அப்பொழுது மல்லிகை மணம் மிதந்து வந்து சீதாவைத் தாக்கிற்று. 

சீதா வேதனையோடு வெளியேறினாள். வீட்டின் வெளிப்புறம் வந்து காரில் ஏறி உட்கார்ந்ததும், வீட்டின் உள்புறத்திலிருந்து ஓர் இரைச்சல் கேட்டது. 

யாரோ ஓடுவது போலவும் இருவர் துரத்துவது போலவும் கேட்டது. 

சீதாவின் காரை ஸ்டார்ட் செய்தான் டிரைவர். சீதா வீட்டின் உட்புறம் திரும்பினாள். ஆனந்தி ஓடிவந்து கூச்சலிட்டாள். “இந்த வீட்டுப் பக்கம் வராதே! தயவு செய்து இந்த வீட்டுப் பக்கம் வராதே! பூண்டு இல்லாமல் வெளியே செல்லாதே!” 

இந்த எச்சரிக்கை வார்த்தைகளை ஆனந்தி கூறி முடித்தவுடன் திலீபன் ஆனந்தியைக் கரகரவென்று உள்ளே இழுத்துச் சென்றான். சீதாவுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஆனந்தி என்பவள் நல்லவளா? திலீபன் கெட்டவனா? ஆனந்தியைத் திட்டுவதா, இல்லை. அவளைப் போற்றுவதா என்ற குழப்பத்தோடு சீதா வீடு வந்து என்னிடம் எல்லாம் சொன்னாள். 

எனக்கும் நடந்ததைக் கேட்டுக் குழப்பம்தான் ஏற்பட்டது.” 

ராமநாதன், நீதிபதி மணிவாசகத்திடம் சொல்லிவந்த வாக்குமூலத்தைச் சற்று நிறுத்திக் கொண்டான். 

நீதிபதியும், வக்கீல்களும் இந்த விசித்திர நிகழ்ச்சியைக் கேட்டபின், ஹூம், என்று பெருமூச்சு விட்டார்களே அல்லாமல் வேறொன்றும் பேசவில்லை. 

ஆனந்தியின் வீட்டுக்குச் சீதா சென்று திரும்பிய விவரங்களைப் பற்றி ராமநாதன் கூறிய பின்பு சில வினாடி கோர்ட்டில் அமைதி நின்று நிலவியது. 

பிராசிக்யூடிவ் வக்கீல், ராமநாதனை ஒரு கேள்வி கேட்டார். 

“மிஸ்டர் ராமநாதன், நீங்கள் பி.ஏ. பி.எல். படித்த வக்கீல். சட்டம் தெரியாதவர் அல்ல. உங்கள் வாக்கு மூலப்படி பார்த்தால் திலீபன் வீட்டைத் துறந்து சென்றதிலிருந்து எத்தனையோ மனத்தைக் கலக்கும் விஷயங்கள் நடந்திருக்கின்றன. சட்டப்படி ஏன் எவ்வித நடவடிக்கையும் நீங்களோ, உங்கள் மாமாவோ மேஜர் மாயநாதன் மீது எடுக்கவில்லை?” 

ராமநாதன், “நாங்கள் போலீஸின் உதவியை நாடி இருக்கலாம். அல்லது நானே முரட்டுத்தனமாக மேஜரிடம் நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் வாழ்க்கைப் பிரசினைகள், நிகழ்ச்சிகள் நம்மை நேரடியாக வந்து தாக்கும்போது நாம் மனம் குழம்பிவிடுகிறோம். திலீபன் என் சகோதரன். மேலும் சீதா அவன்மீது உயிரையே வைத்திருந்தாள். திலீபனின் தாய், எங்கள் வீட்டில் தங்கி இருந்தாள். அன்புத் தடைகள் பல சூழ்ந்து எங்களை எல்லா விதத்திலும் கட்டிப் போட்டு விட்டன. ‘காலம் மாறும்; அதோடு திலீபனின் மனமும் மாறாதா? எல்லாச் சிக்கல்களையும் இயற்கை சரிசெய்து விடாதா?’ என்ற ஆசையும் நம்பிக்கையும் என்னைப் பேசாமல் இருக்கச் செய்தன. கோர்ட்டின் உதவியால் மேஜர் மாயநாதனையும், ஆனந்தியையும், திலீபனையும் அவமானப்படுத்தக்கூடுமே அல்லாமல் அவர்கள் மனத்தை மாற்ற முடியுமா? எங்களுக்கே பூரணமாகப் புரியாத ஒரு விவகாரத்தில் நாங்கள் எந்தவிதமான நடவடிக்கை எடுத்துக் கொள்வது?” என்றான். 

“ஆல்ரைட் ராமநாதன். உங்கள் வாக்குமூலத்தைத் தொடருங்கள்”, என்றார் நீதிபதி. 

ராமநாதன் கூறினான்: 

சீதா என்னிடம் அடையாறு வீட்டில் அவளுக்கு நிகழ்ந்ததைக் கூறிய பின்பு, ஆனந்தி என்ற அந்தப் பெண்ணை வெறுப்பதா, திலீபனை வெறுப்பதா என்று எனக்குப் புரியவில்லை. திலீபனைப் பார்க்கவோ அவன் தங்கியிருந்த அடையாறு பங்களாவை நெருங்கவோ எனக்கு விருப்பமில்லை. ஆனால் அந்த வீட்டு நடவடிக்கைகளைப் பற்றி அங்கு வேலை பார்த்துவந்த ரங்கன் மூலமாக அவ்வப்போது தெரிந்து கொண்டோம். 

சீதாவை, ஆனந்தி இருக்கும் அறைக்கு அழைத்து வந்ததற்காக ரங்கனைக் கடுமையாக மேஜர் திட்டினாராம். அன்றிலிருந்து ரங்கன், அந்த வீட்டில் எங்கள் ஒற்றனாக மாறினான். மாலை ஆறு மணிக்கு மேல் ரங்கன் அந்த வீட்டில் தங்க அனுமதிக்கப்படுவதில்லை என்று எனக்குத் தெரியும். 

ஒரு நாள் விடியற்காலையில் நான் அரைத் தூக்கத்தில் இருந்த போது, என்னைப் படுக்கையிலிருந்து அவசர அவசரமாகச் சீதா வந்து எழுப்பினாள். சீதா என் படுக்கை அறைப் பக்கம் வந்தது கிடையாது. என்னைத் தொட்டு எழுப்பியது எப்போதுமே கிடையாது. 

அவள் முகம் கலக்கத்தோடும் கலவரத்தோடும் காணப்படவே, “என்ன சீதா, என்ன நடந்தது?” என்று பதற்றத்தோடு கேட்டேன். 

சீதா நெறித்த புருவத்துடனும், பின்னிய விரல்களுடனும், “ரங்கன் வந்திருக்கிறான். அவசரமாக உங்களைப் பார்க்க வேண்டுமாம். என்ன விஷயம் என்று கேட்டேன். உங்களிடம் தான் சொல்ல வேண்டும் என்கிறான். எனக்கு ஒரே கவலையாக இருக்கிறது. அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டதோ என்னவோ புரியவில்லை”, என்று பதறினாள். 

“பதறாதே .திலீபனுக்கு ஒன்றும் நேர்ந்திருக்காது. அவன் சந்தோஷமாகத்தான் இருப்பான்”, என்று கூறிப் படுக்கையைவிட்டு எழுந்து நடு ஹாலுக்கு வந்தேன். 

ரங்கன் முகத்தில் பீதியோடும் அச்சத்தோடும் நின்றிருந்தான். அவன் கைகள் நடுங்கியபடி இருந்தன. அவன் உதடுகள் துடித்தபடி இருந்தன. அவன் விழிகள் மருண்டு அங்குமிங்கும் ஓடியபடி இருந்தன. 

”ரங்கா! என்ன நடந்தது?” என்று அவனைக் கேட்டேன். 

அவன், “எஜமான்… எஜமான்…” என்று முணுமுணுத்தானே தவிர, மேற்கொண்டு அவனால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவன் மூச்சு மட்டும் பலமாகச் சப்தம் செய்தபடி வந்து போய்க் கொண்டிருந்தது. எண்ணங்களை வெளிப்படுத்த வார்த்தைகள் இன்றித் தவிக்கிறான் என்று தெரிந்தது. பிறகு சமாளித்துக் கொண்டு, “நான் இனி அந்த வீட்டுக்குப் போக முடியாது, எசமான், போக முடியாது” என்றான். 

“ஏன் ரங்கா, நீ இங்கு வந்து தகவல் கொடுப்பது அவர்களுக்குத் தெரிந்து விட்டதா? உன்னை வேலையை விட்டு நீக்கி விட்டார்களா?” என்று கேட்டேன். 

“அவுங்க வேலையைவிட்டு நீக்கத் தேவையில்லை, எசமான். அவுங்க என்னை வேலைக்கு வச்சுக்கிட்டாலும் நான் போகமாட்டேன். எனக்குப் பைத்தியம் புடிச்சுடும்போல இருக்கு, எசமான். நீங்க யாரும் அந்த வீட்டுப் பக்கம் போகாதீங்க. போகவே போகாதீங்க,” என்று கூறிவிட்டு நடுங்கினான். 

சீதா கவலையோடு, “ரங்கா, அவருக்கு ஆபத்து ஒன்றுமில்லையே?” என்று கேட்டாள். 

ரங்கன் அவளை ஒருமுறை பார்த்து விட்டு, “எனக்கு ஒன்றுமே விளங்கலீங்க. அந்த வீட்டிலே உள்ளவங்களைப் பத்தி மேசரைத் தவிர, ஒண்ணுமே சொல்ல முடியல்லைங்க. மேசர் முழு அயோக்கியன்னு திட்டமாச் சொல்லலாம். ஒரு சமயம் ஆனந்தி அம்மாவைப் பார்த்தா நல்லவங்களாத் தெரியுது. இன்னொரு தபா அவுங்களைப் பஜாரின்னுதான் சொல்லத் தோணுது…” 

மேலே பேசத் தயங்கினான் ரங்கன். சீதாவை அவன் பார்த்த விதத்திலிருந்து அவள் முன்னிலையில் விஷயங்களை விவரிக்க யோசிக்கிறான் என்று எனக்குத் தோன்றியது. நான் சீதாவை அர்த்தத்தோடு பார்த்தேன். அவளுக்குத் திலீபனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற ஆவல் இருந்தபோதிலும், என்னுடைய முகக் குறிப்பைப் புரிந்து கொண்டு வெளியேறினாள். நான் ரங்களை நடு ஹாலை அடுத்த தனி அறைக்கு அழைத்துச் சென்றேன். 

அங்கே வந்ததும் ரங்கன் ஓரளவு அமைதி அடைந்தான். “ரங்கா, என்னப்பா நடந்தது?” என்று கனிவோடு கேட்டேன். 

“எங்கே ஆரம்பிக்கிறதுண்ணு தெரியலீங்க! நேத்தைக்கு…. நேத்தைக்குப் பிற்பகல் மூணு மணிக்கு மேசரும் அவர் மகளும் தனியா அறையிலே இருந்தாங்க. அப்போ நான் அங்கே போனேனுங்க. என் சிநேகிதன் ஒருத்தனுக்குத் திருவான்மியூர்லே கல்யாணமுங்க. சாயங்காலமே போகணும்னு லீவு கேட்டேனுங்க. மேசர் ரொம்ப சந்தோஷத்தோட லீவு கொடுத்துட்டார். நான் அறையை விட்டு வெளியே போறப்ப மேசர் சொன்னாரு: ‘ரங்கன் இன்னிக்குச் சாயந்திரம் வீட்லே இல்லாம இருப்பது நல்லதுதான். இன்றைக்கு மட்டும் நம்ம சோதனைக்கு வெற்றி கிடைச்சுட்டா அப்புறம் திலீபனைப் பற்றிக் கவலையே பட வேண்டாம்.’ உடனே ஆனந்தி, ‘அவருக்கும் நாம செய்யப் போவது தெரிஞ்சு போச்சுன்னு தோணுது. அவர் அறையை விட்டு வரவே மாட்டேங்கிறார். அவர் அறை தாளிட்டபடியே இருக்கு,’ என்றாள். மேசரும் மகளும் பேசினதை அப்போ நான் பெரிசா நினைக்கலீங்க. வீட்டுக்குப் போறதுக்குச் சைக்கிளை எடுக்கப் போனேனுங்க. சைக்கிளை எப்பவுமே வராந்தா கோடியில் தான் வைப்பேனுங்க. வராந்தாவில் போறப்போ திலீப் எசமானது ரூமைத் தாண்டிப் போனேன். 

“அப்போ ஜன்னல் வழியா எட்டிப் பார்த்தேன். அவரு கட்டில்ல தேவாங்கு மாதிரி தொங்கிப் போய்ப் படுத்திருந்தாருங்க. முகமெல்லாம் வெளுத்த சவம் மாதிரி இருந்ததுங்க. ஜன்னல் வழியா நான் எட்டிப் பார்க்கறதை அவரு பார்த்துட்டாருங்க. அவரு ஏதோ பேசினாருங்க. ஆனா வார்த்தை வரலீங்க. ஊமை சாடையா இருந்தது. நான் சன்னலை விட்டுத் திரும்பறப்போ அவர் கையை நீட்டி, ஜாடையிலே என்னை அங்கேயே இருக்கச் சொன்னாருங்க. அப்புறம் அவர் ரொம்பக் கஷ்டப் பட்டு எழுந்திருச்சாருங்க. படுத்தவர் எழுந்திருச்சு உட்காரவே இரண்டு நிமிஷம் ஆச்சுங்க. அப்புறம் குழந்தை மாதிரி தத்தி தத்தி ஜன்னல்கிட்டே வரத் தவியாத் தவிச்சாருங்க. படுக்கையிலிருந்து சன்னலுக்கு வர்றத்துக்குள்ளே மூணு முறை கீழே விழ இருந்தாருங்க. ரத்தமெல்லாம் கொட்டிப் போன வெறும் சதை போத்தின எலும்புக் கூடு மாதிரி இருந்ததுங்க அவரைப் பார்க்க. சன்னல் கிட்ட நெருங்கிறதுக்குள்ளே மூணு நிமிஷம் ஆயிடுச்சு. மூச்சு முட்டிப் போச்சுங்க. ஏதோ ஒரு மைல் ஓடி வந்த மாதிரி சன்னக் கம்பி யைப் புடிச்சுக்கிட்டு, ‘ரங்கா உடனே கடைக்குப் போய் ஒரு பலம் பூண்டும். கந்த சஷ்டி கவசமும் வாங்கியாறியா?’ன்னு கேட்டாருங்க. சரின்னேன். எங்கிட்ட பணமில் நாளைக்குத் தர்றேன். சாயங்காலம் ஆறு மணிக்குள்ளே வாங்கிட்டு வந்து எங்கிட்டே கொடுத்திடு. மேசருக்கும் அந்தப் பாழாப்போனவளுக்கும் தெரியக் கூடாது,’ன்னார். 

“எனக்கு ஒரே சங்கடமா இருந்தது. அவரைப் பார்தது சாயந்திரம் கல்யாணத்துக்குப் போறேன். காலையிலே வாங்கிட்டு வர்ரேனுங்க”, ன்னேன். திலீப் அய்யா முகம் அப்படியே பயத்திலே வெளிறிப் போச்சுங்க. ‘ஐயோ. காலைவரை தாங்க முடியாது ரங்கா. பொஸ்தகத்தையும் பூண்டையும் விளக்கு வைக்கிறதுக்குள்ளே வாங்கிட்டு வா’ன்னு சொல்லிட்டு அப்படியே சாஞ்சிட்டாருங்க… 

அத்தியாயம்-33

ரங்கன் தொடர்ந்து சொன்னான்: “கந்தசஷ்டி சுவசத்துக்கும் பூண்டுக்கும் என்ன இம்புட்டு அவசரப்படறாருன்னு புரியலீங்க. சைக்கிளை எடுத்துக்கிட்டு அடையாறு பலசரக்குக் கடையிலே பூண்டு ஒரு பலம் வாங்கிப் பையிலே போட்டுக்கிட்டேன். பக்கத்திலே இருக்கிற பொஸ்தகக் கடையிலே கவசம் இருக்குதான்னு கேட்டேன். ‘இப்ப இல்லே நாளைக்கு வா.தர்ரேன்’னாங்க. அப்புறம் என் வீட்டுக்குப் போனேன். திலீப் அய்யா சொன்னது வேலையிலே மறந்தே போயிடுச்சுங்க. நேரே கல்யாணத்துக்கு போயிட்டேன். விருந்து சாப்பிட்டுச் சீட்டாட்டத்திலே பொழுது போனதே தெரியலீங்க. 

‘ராத்திரி மணி பத்தானதும்தான் எனக்குப் பூண்டுப் பொட்டணம் ஞாபகம் வந்திச்சு. என் வீட்டு ஞாபகமும் வந்திச்சு. உடனே ராவோட ராவா சைக்கிள்லே வீட்டுக்குப் புறப்பட்டேன். அடையாறு வரவும் மணி பதினொண்ணு ஆயிடுச்சு. அலுப்பா இருந்திச்சு. இன்னும் ரெண்டு மைல் சைக்கிள்ளே போவானேன், பங்களாவிலேயே தூங்கிடலாம்னு நெனச்சு சைக்கிளைக் காம்பவுண்டுக்குள்ளே விட்டேன். வேலைக்காரங்க ராத்திரி பங்களாவிலே தங்கறதை மேசர் அனுமதிக்கமாட்டாருன்னு தெரியும். அதனாலே சத்தமில்லாம வெளிப்புற வராண்டாவிலே படுத்தேன். படுத்த அஞ்சே நிமிஷம் இருக்கும். வீணை சத்தம் கேட்டதுங்க. என்னடாது நடு நிசியிலே வீணைச் சத்தம்ணு எந்திருச்சேன். 

“நான் படுத்திருந்த இடத்தை அடுத்த அறையிலே வெளிச்சம் தெரிஞ்சதுங்க. ரூமுக்குள்ளாற சிவப்பு வெளிச்சம். சுவரெல்லாம் ரத்த நிறமாத் தெரிஞ்சதுங்க. மேசர் சட்டையில்லாம மல்லிப் பூ மாலை போட்டுக்கிட்டு உட்கார்ந்து வீணை வாசிச்சுக் கிட்டு இருந்தாரு. பாக்கறதுக்குப் படா தமாஷா இருந்துச்சு. எதிர்த்தாலே ஒரு அம்மா படம் வச்சிருந்ததுங்க. படம், படமா இல்லீங்க. படத்து பிரேமுக்குள்ளாற இருந்து ஒரு பொம்பளை எட்டிப் பார்க்கறாப்பலே இருந்தது. அவ்வளவு உசிரோட இருந்ததுங்க அந்தப் படம். பாத்துகிட்டேயிருந்தேன். திடீர்னு எனக்கு பூண்டு பொட்டணம் ஞாபகம் வந்திச்சு. அதைக் கொண்டுபோய்த் திலீப் ஐயாகிட்டே கொடுத்திடலாம்ணு பார்த்தேன். அவரு வெளக்கு வைக்கிறதுக்கு முன்னாடியல்ல கொண்டு வரச் சொன்னாரு, கவசப் புஸ்தகம் வாங்கியாரல்லியே, திட்டினார்னா என்ன செய்றதுன்னு பார்த்தேன். 

“எதுக்கும் அவர் ரூமுக்குப் போய்ப் பார்ப்போம்னு நடுஹால் பக்கம் போனேன். கதவு விரியத் திறந்து கிடந்ததுங்க. வீடு பூராவும் மல்லிப் பூ வாசம் கம்முன்னு வந்திச்சு. மெள்ள நடந்து திலீப் ஐயா ரூம் வரையிலும் வந்தேன். அறைக்குள்ளாற பார்த்தேன். ஆனந்தி அம்மா இல்லீங்க. ஐயாதான் படுக்கையிலே கிடந்தாருங்க. முனகிக் கிட்டே இருந்தாருங்க. முருகா முருகான்னு முனகிக்கிட்டே இருந்தாருங்க. பாவமா இருந்ததுங்க. பூண்டு பொட்டணத்தைப் படுக்கையிலே விட்டெறிஞ்சேன். அதே சம யத்திலே யாரோ வர்ற மாதிரித் தெரிஞ்சதுங்க. விணை சத்தம் பலமாக் கேட்டதுங்க. யாரும் என்னைப் பாக்கக் கூடாதுன்னு அங்கேயே சாக்கு மூட்டை தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டிருந்த மறைவுக்குள்ளே போய் மறைஞ்சிட்டேனுங்க. 

வீணை சத்தம் மாறி. வீணையிலிருந்து ஏதோ ஊளையிடற மாதிரிக் கேட்டுதுங்க. எனக்கு ஒரே கிலியாப் போச்சு. அடுத்த வினாடி மல்லிப்பூ வாசம் அடியோட நின்னுபோச்சுங்க. வேறு வாடை, வீடு பூராவும் வீசுச்சுங்க. நெருப்பிலே ஏதோ மாமிசம் சுடற வாடை. மறைவிலிருந்து வெளியே வரவே எனக்குப் பயமா இருந்ததுங்க. பதுங்கி இருந்த இடத்திலே இருந்து, தென்கோடி கதவுப் பக்கம் பார்த்தேன். ஆனந்தி அம்மா கதவோரத்திலே நின்னிட்டிருந்தாங்க. என்னைப் பார்த்துட்டாங்களோன்னு என் மனசு திக் திக்குன்னு அடிச்சுகிட்டதுங்க. ஆனந்தி அம்மா அடிமேலே அடிவச்சு நடந்து வந்தாங்க. அந்தம்மா இடுப்புக்கு மேலே துணியே இல்லீங்க. அவுங்க கையை நீட்டிக்கிட்டு ஏதோ கையால தேடற மாதிரி நடந்து வந்தாங்க. அவங்க கண்ணு இரண்டும் மூடி இருந்துச்சுங்க. ஆனந்தி ஏதோ தூக்கத்திலே நடக்கிற மாதிரி நடந்து வந்தாங்க.நான் மறஞ்சிருந்த இடம் வந்ததும் அப்படியே நின்னுட்டாங்க. 

“அவுங்க கை இரண்டும் அசஞ்சு ஏதோ தேடற மாதிரி தேடிச்சுங்க. என் தலைமேலே அவுங்க கை பட்டிடுமோன்னு பயந்து கிடந்தேன். ஆனா அவுங்க நகர்ந்திட்டாங்க. திலீப் ஐயாவுடைய அறைக் கதவுக்கு முன்னாடி போய் நின்னாங்க. வீணையிலிருந்து ஊளைச் சத்தம் அதிகமாயிட்டே போச்சு. அறைக் கதவு திறந்துச்சுங்க. ஆனந்தி அம்மா உள்ளே போனாங்க. ரூமுக்குள்ளேருந்து முருகா முருகாங்கிற சத்தம் உரத்துக் கேட்டதுங்க. அதோட ராத்திரி வேளையிலே வூட்டுமேலே நின்னுகிட்டு பூனை அழுவுற மாதிரி அழுகை கேட்டதுங்க. வீணை ஒரு பக்கம்; முருகா முருகா என்ற சத்தம் ஒரு பக்கம்; பூனை அழுகை ஒரு பக்கம் – மூணும் சேர்ந்து படா கிலியாப் போச்சுங்க. திடீர்னு கதவு திறந்துச்சு. 

“ஆனந்தி அம்மா வெளியே வந்தாங்க. அவுங்க கண்ணு கொள்ளிக் கட்டை மாதிரி மின்னிச்சுங்க. ‘பூண்டு! பூண்டு! யாரு கொண்டு வந்தது பூண்டு?’ என்று கூச்சல் போட்டாங்க. 

“நான் அப்படியே நடுங்கி நின்னேன். ஆனா ஒண்ணு மட்டும் நிச்சயமுங்க. திலீப் ஐயாவுக்கு நேர இருந்த ஆபத்து தப்பிப் போயிடுச்சுங்க. ஆனந்தி மறஞ்ச உடனே என் தோள்மேலே ஒரு கை விழுந்த மாதிரி இருந்துச்சு. திரும்பினேன். ஆள் யாரும் இல்லீங்க. முதுகு பூராவும் நெருப்பா எரிஞ்சுதுங்க. என்னைச் சுத்தி யாரோ சிரிக்கிற மாதிரி இருந்துச்சுங்க. ஆனா ஆள் இல்லை. ஒரே ஓட்டமா ஓடியாந்துட்டேன். பார்த்தது கனவா இல்லை நெசமாவே நடந்துச்சா ஒண்ணும் புரியல்லீங்க!”

ரங்கன் சொன்னதில் எவ்வளவு உண்மை எவ்வளவு பிரமை என்று புரியவில்லை. அவனை அடையாறு வீட்டுக்குப் போய்ப் பார்த்து வரும்படிச் சொன்னேன். அவன் அந்தப் பக்கமே போக மறுத்துவிட்டான். மறு நாள் எங்கள் வீட்டு வேலைக்காரனை அனுப்பினேன். அவன் அடையாறு வீடு பூட்டப்பட்டிருக்கிறது என்றும், மேஜர். ஆனந்தி, திலீபன் மூவரும் வெளியூர் போய்விட்டனர் என்றும், அவர்கள் வீட்டிற்குப் பால் ஊற்றும் பால்காரன் தெரிவித்ததாகச் சொன்னான். ரங்கன் என்னிடம் கூறியதை நான் சீதாவிடம் சொல்லவில்லை. 

நாட்கள் பல கடந்தன. திலீபனைப் பற்றித் தகவல் எதுவும் தெரியவில்லை. ஊட்டிக்கு மேஜர் சென்றாரா? அவர் எங்குதான் போயிருப்பார்? ஒன்றும் புரிய வில்லை. மாமா ராமலிங்கம் சென்னைப் பக்கமே வருவதில்லை என்று பிடிவாதமாக எழுதிவிட்டார். திருச்சியிலிருந்தே சென்னையில் குடும்பச் செலவிற்கு என்று ரூபாய் டிராப்டாக அனுப்பிவிட்டார். திலீபனின் தாய் தன் துக்கத்தை மனத்திலே வைத்திருந்தமையால் நோய்வாய்ப்பட்டாள். அலங்கோலமான வீட்டின் தலைவனாக நான் உலவி வந்தேன். 

ஒரு மாதமான பின்புகூட ஒரு தகவலும் கிடைக்கவில்லை. சீதாவுக்குக் கவலை அதிகமாகிவிட்டது. சீதா என்னிடம் அழவே ஆரம்பித்து விட்டாள். திலீபன் உயிருக்கு ஓர் ஆபத்தும் ஏற்பட்டிராதே? அவரைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லையே? தவித்தாள். எனக்கும் உள்ளூர அந்தப் பயம் இருக்கத்தான் செய்தது. ஆனால் அதை நான் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. 

“அதெல்லாம் ஒரு நாளும் ஏற்படாது. கவலைப்படாதே சீதா. எல்லாம் நல்லபடியாக முடியும்!” என்று தேறுதல் கூறிவந்தேன். 

ஒருநாள் இரவு சாப்பாடான பின்பு நான் படுக்கப் போகையில் வீட்டின் வெளிப்புறத்தில் சைக்கிள் மணி சத்தம் கேட்டது. கதவைத் திறந்து பார்த்தேன். தந்தி பியூன் பியூன் நின்று கொண்டிருந்தான். 

தந்தி குற்றாலத்தை அடுத்த ஊரிலிருந்து என் பெயருக்கு வந்திருந்தது. அதில், “உங்கள் சகோதரன் திலீபன் ஆபத்தான நிலையில் இருக்கிறான், உடனே வரவும். டாக்டர் சந்தோஷம்,” என்று எழுதி இருந்தது. 

தந்தியைப் பார்த்ததும் என் கைகள் நடுங்கின. 

சீதா தந்தியைப் பார்த்தால் அவள் உயிரே போய்விடும் என்று பயந்தேன். அவளிடம் உண்மையைத் தெரிவிக்காமல் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். 

என் வேதனையை மறைத்துக் கொண்டு முகத்தில் குதூகலத்தை வரவழைத்துக் கொண்டேன். 

சீதாவிடம், “குற்றாலத்தில் திலீபன் இருக்கிறான்! என்னை வரும்படி தந்தி அடித்திருக்கிறான்! நான் உடனே காரில் போக வேண்டும்”, என்று முழுப் பொய்யைச் சொன்னேன். 

சீதா, “அப்படியா! அவரே தந்தி அடித்திருக்கிறாரா! எங்கே அத்தான் அந்தத் தந்தி? அதை நான் பார்க்க வேண்டுமே!” என்று துடியாய்த் துடித்தாள். 

“சுத்த அசட்டுப் பெண்ணாக இருக்கிறாயே! நாளை சாயந்தரத்திற்குள் திலீபனையே பார்க்கப் போகிறாய். தந்தியைப் பார்ப்பானேன்? பர்ஸை எடுத்து வா. நான் உடனே கார் ஷெட்டுக்குப் போய்க் காரை ரெடி செய்கிறேன்,” என்று சொல்லிவிட்டு நேரே ஷெட்டிற்குச் சென்றேன். 

சீதா பர்ஸை எடுத்துவர அவள் அறைக்குச் சென்றுவிட்டாள். நான் காரை எடுத்து வெளியே கொண்டு வரவும் சீதா பர்ஸோடு காரின் அருகில் ஓடிவந்தாள். 

“இரவு வேளை. காரை ஜாக்கிரதையாக ஓட்டிச் செல்லுங்கள்”, என்று அன்போடு எச்சரித்தாள். 

நான் போலிப் புன்னகையுடன், “திலீபனை அழைத்துத் திரும்பும்போது நிச்சயமாகக் காரை ஜாக்கிரதையாக ஓட்டிவருவேன். கவலைப்படாதே சீதா!” என்றேன்.

என் வார்த்தைகளைக் கேட்ட சீதாவின் முகம் வெட்கத்தால் குபீரென்று சிவந்தது. 

பாவம், அவள் தன் துன்பமெல்லாம் விலகிவிட்டது என்ற நினைத்தாள் போலும். குழந்தை உள்ளம் படைத்த அவளை ஏமாற்றுகிறோமே என்று நான் என்னையே நொந்து கொண்டேன். 

அவளுக்குத் திலீபன் திரும்பி வரப்போகிறான் என்ற சந்தோஷம். அந்தச் சந்தோஷத்தில் என்னிடம் தந்தியைப் பற்றிக் கேட்கவே மறந்து விட்டாள். 

நானும் காரை ஓட்டிச் சென்றேன். கார் நகர ஆரம்பித்ததும் என்னைக் கவலை வந்து சூழ்ந்தது. 

திலீபனை எந்த நிலையில் வீடுகொண்டு வந்து சேர்க்கப் போகிறோம், அபாயமான நிலையில் வீடு திரும்பிவரும் திலீபனைப் பார்த்ததும் சீதாவின் மனம் என்ன பாடு படும் என்று நினைத்தபடியே காரை எழுபது மைல் வேகத்தில் குற்றாலத்தை நோக்கி ஓட்டினேன். 

வேகமாகச் சென்னை -நாகர் கோயில் செல்லும் டிரங்க் ரோட்டில் போய்க் கொண்டிருந்தேன். 

தலைக்கு மேல் ஆகாயத்தில் சந்திரன். செல்லும் வழியெல்லாம், ‘டீ’க் கடை விளக்குகள் தோரணம் போல் தொடர்ந்து வந்தன. அதோடு என் சிந்தனை அலைகளும் தொடர்ந்தபடி வந்தன. விழுப்புரத்தை நெருங்கும் போது ஒரு ரயில்வே ‘லெவல் கிராசிங்’ அடைத்திருந்ததால் என்னுடைய டூரை நிறுத்தும்படி ஆகிவிட்டது. ஆனால் என் சிந்தனை ஓட்டத்தைத் தடுக்க ஒரு தடைக் கதவு இல்லை. என் வாழ்வை நினைத்துப் பார்த்தேன். 

மாமா ராமலிங்கத்தின் வீட்டில் நான் கவலை இல்லாமல் வாழ்ந்து வந்தேன். அமைதியாக – நான் ஓட்டி வந்த கார்போல். அது சீராகப் போய்க் கொண்டிருந்தது. திடீரென்று என் வாழ்வோட்டத்திலே ஒரு திருப்பம். ஒரு தடை. குழப்பம். என் தந்தை இறந்தார். திலீபன் எங்கள் வீட்டிற்கு வந்தான். குழந்தைப் பருவத்திலிருந்து ‘எனக்குச் சீதா, சீதாவிற்கு நான்’ என்ற நிலை மாறி, சீதா திலீபனை விரும்பினாள். அதுவே சீதாவின் தந்தைக்குப் பேரிடியாய் இருந்தது. தன்னுடைய உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டு ஒருவாறு சீதாவைத் திலீபனுக்கு மணமுடிக்க இசைந்தார். புயல் ஓய்ந்து அமைதி நிலவியது போல் தெரிந்தது. கல்யாணத் தேதி நெருங்கி வரும்போது திலீபன் வீட்டை விட்டு ஓடினது இரண்டாவது புயலாக இருந்தது. 

அத்தியாயம்-34

இந்தச் சோதனையை மாமாவால் சமாளிக்க முடியவில்லை. திருச்சிக்குப் போனவர் மறுபடியும் சென்னை திரும்பவில்லை. பணம் மட்டும் ஆபீஸ் குமாஸ்தாக்களால் அனுப்பப்பட்டு வந்தது. நினைத்ததை நடத்தி வந்தவர் மாமா ஆரம்பத்தில் சகோதரியால் துக்கமும் ஏமாற்றமும்; இப்போது மகளால் ஏமாற்றம். குற்றாலம் போகும் வழியிலேயே திருச்சி இருந்தால் மாமாவைப் பார்த்துவிட்டே போவோம் என்று நினைத்தேன். மாமாவோடு செலவழிக்கும் நேரத்தை ஈடுசெய்யக் காரை வேகமாகத் திருச்சிக்கு ஓட்டினேன். கார் திருச்சியை அடையும்போது காலை மணி நான்கு இருக்கும். ஒழுங்காக நான் வந்திருந்தால் மணி ஆறு ஆக இருக்கும். வீட்டை நெருங்கும் போது மாமாவின் அறையில் வெளிச்சம் இருப்பதைப் பார்த்தேன். 

அதிகாலையிலேயே எழுந்து விட்டாரா, இல்லை இரவு பூரா தூங்கவில்லையா? ‘வியாபாரத்தையே மறந்துவிட்டார். ஆபீஸ் பக்கமே வருவதில்லை,’ என்ற தகவல் சென்னை வந்த குமாஸ்தா மூலமாக எனக்குத் தெரிந்திருந்தது. ஆபீஸ் விஷயமாக அவர் கண் விழித்திருக்க முடியாது.சீதாவின் நினைவுதான், அவளைப் பற்றிய கவலைதான் அவருடைய தூக்கத்தை விரட்டியிருக்க வேண்டும் என்று தோன்றியது. வீட்டின் முன்னால் காரை நிறுத்திவிட்டு மெள்ள உள்ளே சென்றேன்.

மாமாவின் அறையில் படுக்கை விரிக்கப்பட்டிருந்தது. அதில் அவர் படுத்ததாகவே தெரியவில்லை. கூண்டிலடைக்கப்பட்ட புலி போல அறையில் உலவிக் கொண்டிருந்தார். நடுநடுவே பெருமூச்சு விட்டார். ”சீனிவாசா! என் உயிரைக் கொண்டுபோகக் கூடாதா? என்னை ஏன் இப்படி வதைக்கிறாய்?” என்று பெருமாள் படத்தின் முன் நின்று புலம்பிக் கொண்டிருந்தார். க்ஷவரம் செய்யாத முகம். பல நாட்கள் மாற்றாததால் சுருங்கிப் போயிருந்த மேல்சட்டை. மேஜையில் குடிக்காமல் ஆடை படிந்து ஈ விழுந்த பால் – எல்லாம், அவர் உலக நினைப்பையே மறந்துவிட்டார் என்பதை விளக்கின.

அறையின் திறந்த கதவின் முன் அவர் நின்று கொண்டிருந்தார். என்னை அவர் கவனிக்கவே இல்லை. அவர் உடல் மட்டும் அறையிலே இருந்தது. உள்ளம் எங்கோ இருந்தது. கண் திறந்திருந்தும் பார்க்கவில்லை. ‘சப்தமில்லாமல் திரும்பி விடலாமா?’ என்று கூட எண்ணினேன். ஆனால் அவர் நிலை பரிதாபமாக இருந்தது. செல்வமிருந்தும் ஏழைப் பிச்சைக்காரனைப்போல நின்று கொண்டிருந்தார். மகளும் நானும் உயிரோடு
இருந்தும் அனாதைபோல் அந்த அறையில் அடைந்து கொண்டிருந்தார். யாருக்கும் தீங்கு நினைக்காத ஒரு நல்லவர். முதியவர். அதுவும் என்னை மனிதனாக்கியவர். அவர் இப்படி அல்லல்படும்போது எப்படி அவரைப் பாராமல் செல்லுவது! 

‘இவருக்கு ஏன் இவ்வளவு சோதனையைக் கொடுத்தான் அந்த சீனிவாசப் பெருமாள்!’ என்று நினைக்கவும் என் உள்ளத்திலே நாஸ்திகம் பிறந்தது. 

“மாமா! மாமா!” என்று அழைத்தேன். 

வேகமாகத் திரும்பினார். அவர் உதடுகள் துடித்தன. 

“யார் நீ?” 

“என்ன மாமா அப்படிக் கேட்கிறீர்கள்! நான்தான் உங்கள் சகோதரி மகன் ராமநாதன்.” என்றேன். 

“ராமநாதன்? ஆம், ராமநாதன்தான்”, என்று திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டு என்னை விறைத்துப் பார்த்தார். அடுத்த வினாடியே அலறி அழ ஆரம்பித்து விட்டார். 

“என்ன மாமா, உங்கள் வயசுக்கு நீங்கள் இப்படி அழலாமா?” என்று கேட்டேன். 

நான் அந்தக் கேள்வியை கேட்டிருக்கக் கூடாது என்பதை உடனே உணர்ந்தேன். 

“மடப் பயலே! என்னடா அப்படிக் கேட்கிறாய்? இருபத்து ஐந்து வயதிலே மனைவியை இழந்தேன். அப்புறம் நான் துறவியாக வாழ்ந்தேண்டா. எனக்கு மற்றவர்கள் மாதிரி ஆசையில்லை என்று நினைக்கிறாயா? ஆசை இருந்தது. அதைப் பூட்டுப் போட்டு அடக்கினேன். தசையின் தேவைகளுக்குப் பலி ஆகக் கூடாதென்று ஒவ்வொரு நிமிடமும் பேய்மாதிரி நிலத்திலேயும், கடையிலேயும் உழைத்தேன்.ஒவ்வொரு ரூபாயாகச் சேர்த்தேன். எதற்கு, தெரியுமா? சீதாவிற்காக, சீதாவோடு நீ வாழப் போகும் சந்தோஷத்துக்காக. பல வருஷங்கள் தவமே செய்திருக்கிறேனடா! அதற்குப் பலனில்லாமல் போய்விட்டதேடா. சீதா அந்தத் தறுதலையைக் கட்டிக் கொண்டாவது சந்தோஷமாக இருப்பாள் என்று நினைத்தேன். அதுவும் நடக்கவில்லை. அந்தக் குணசீலம் சீனுவாசனுக்கு எவ்வளவு அபிஷேகம் செய்திருப்பேன், தெரியுமா? ஒன்றும் பலிக்கவில்லை. குடும்பச் சாபம்தான் பலித்ததடா. குடும்பச் சாபம்தான் பலித்தது!” 

கையால் முகத்தை மூடிக் கொண்டே அழுதவரிடம், “என்ன மாமா. என்ன என்னமோ சொல்கிறீர்கள்? குடும்பச் சாபமா?” என்று கேட்டேன். 

மாமாவோ, எதையோ வாய் தவறிச் சொல்லிவிட்டவர்போல் சிறிது நேரம் நின்றார் பிறகு மறுபடியும் பேச வாயெடுத்தார் நிறுத்திக் கொண்டார். மறுபடியும் என்னைப் பார்த்து, “உன்னிடம் சொன்னால் என்ன! உனக்கும் தெரிய வேண்டியதுதானே?” என்று ஒரு கதையை ஆரம்பிப்பவர்போல் தொடங்கினார். 

எனக்குப் பயமாகி விட்டது. ‘திலீபனைப் பார்க்கப் போகும் வழியில் நான் இங்கு காலம் தாழ்த்துவதா?’ என்று நினைத்தேன். 

“பரவாயில்லை மாமா, உங்களுக்கு வேதனையாக இருக்கும் ரகசியத்தை என்னிடம் சொல்வானேன்?” என்று மழுப்பினேன். 

மாமா வெறியோடு என்னைப் பார்த்து, “உனக்குத் தெரிய வேண்டும். நிச்சயமாக உனக்குத் தெரிய வேண்டும். இந்தச் சொத்தில் ஓரணாப் பங்கு கொள்பவன் கூட இதைத் தெரிந்துகொள்ள வேண்டும்”, என்று என்னைப் பிடித்து வலுக்கட்டாயமாக நாற்காலியில் உட்கார வைத்தார் 

கடிகாரத்தைப் பார்த்தேன். மணி நாலேமுக்கால் ஆகிவிட்டது. மாமா இருந்த மன நிலையில். திலீபன் குற்றாலத்தில் அபாயமான நிலையில் இருக்கிறான் என்று சொல்வதும் சரியாகப் படவில்லை. ஆகையால், அவரிடம், “அவசரமாக நான் குற்றாலம் செல்ல வேண்டும்”, என்றேன். 

“பரவாயில்லை, இதைக் கேட்டு விட்டுப் போ,” என்று கட்டளையிட்டார். 

தட்டமுடியாமல் தவித்தபடி உட்கார்ந்தேன். 

மாமா அவரது இயற்கைக்கு மாறாகப் படபடப்புடன் பேச ஆரம்பித்தார். 

“ஒருவன் செய்த தவறு மற்றவரைப் பாதிக்கும். கர்மா அல்லது வினைப்பயன் என்பது ஆகாயத்தில் வீசி எறிந்த கல் போல, பூமிக்குத் திரும்பி வந்து சில சமயம் வீசியவன் தலையிலேயே விழும். சிலசமயம் மற்றவர் தலையிலும் விழும். என் தந்தைக்குத் தந்தை ராஜலிங்கத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய். அவர்தான் நம் குடும்ப சொத்துக்கு மூல காரணம். அவர் சம்பாதித்த நிலத்தை வைத்துக்கொண்டுதான் நான் வளர்ந்து இன்று லட்சாதிபதியாக இருக்கிறேன். 

“அந்த ராஜலிங்கம் சொத்தைப் பயங்கரமான விதத்தில் சம்பாதித்தார். லால்குடி தாலூகாவில் ஒரு பெரும் மிட்டாதார் இருந்தார். அவரிடம் காவல்காரனாக இருந்தார் ராஜலிங்கம். மிட்டாதார், தமது அறுபதாவது வயதில் பார்வதி என்ற பதினெட்டு வயதுப் பெண்ணை இளையதாரமாக மணம் செய்து கொண்டார். அந்தப் பெண் சீலமானவள். கோவில்குளம் போய் ஒழுக்கமாக இருந்தவள். அவளிடம் ராஜலிங்கம் தகாத முறையில் பேசி நடக்க ஆரம்பித்தார். பார்வதி கணவனிடம் ராஜலிங்கத்தின் நடவடிக்கை பற்றிக் கூறாமல், ஜாடையாக. ‘மரியாதை இல்லாமல் நடக்கிறான்,’ என்று வேலையிருந்து நீக்கி விட்டாள். ராஜலிங்கம் அன்றிலிருந்து அவளை எப்படியாவது அடைந்தே தீருவது என்று சூளுரைத்தார். ஒரு நாள் இரவு பார்வதி கோவிலுக்குச் சென்றிருந்தபோது அவளைக் கோவில் நந்தவனத்திலேயே பலவந்தமாகக் கெடுத்து, புனிதமாக இருந்த பார்வதியின் நிர்மலமான மனத்தில் கலக்கத்தை உண்டாக்கி விட்டார். நந்தவனத்தில் அன்று ராஜலிங்கம் என்ன வித்தை செய்தாரோ அன்றிலிருந்து பார்வதி, ராஜலிங்கம் இல்லாமல் வாழ முடியாத நிலைக்கு வந்துவிட்டாள். ராஜலிங்கம் மறுபடியும் எஸ்டேட்டில் சேர்க்கப்பட்டார், இம்முறை பண்ணை பார்க்கியாக. 

“பார்வதிக்குப் பிறந்த குழந்தை ராஜலிங்கத்தின் குழந்தை என்று ஊரார் பேசினர். மிட்டாதார் திடீரென்று இறந்துவிட்டார். அதற்குக் காரணம் கூட ராஜலிங்கம் என்பது வதந்தி. பார்வதியின் மகன் பெரியவனானதும் ராஜலிங்கத்தை விரட்ட நினைத்தான். அவனுக்குத் தாயே மருந்து கொடுத்துப் பைத்தியமாக்கிவிட்டாள். பார்வதியின் மகன், பைத்தியமான இரண்டு வருடங்களில் இறந்து விட்டான். தன் தேக சுகத்துக்காக மகனையும், கணவனையும் இழக்கத் துணிந்த பார்வதியை அவளது சொத்தையெல்லாம் எடுத்துக்கொண்டு ராஜலிங்கம் விரட்டிவிட்டார். பார்வதி கோர்ட் மூலம் வாதாடிப் பார்த்தாள். சொத்தை விற்றுச் சாசனப் பத்திரத்தில் அவளும், மகனும் கையெழுத்து செய்திருந்தனர். முடிவில் பார்வதி சாகும்போது. என் பாட்டனார் ராஜலிங்கத்தை அழைத்து, ”பெண்ணாலே சொத்தை அடைந்தவன் நீ. உன் வமிசத்திலே ஆண்கள் பெண் சுகம் இல்லாமலே போவார்கள். பெண்கள் ஒன்று விதவையாகப் போவார்கள். அல்லது புருஷனிடம் சித்திரவதைப்பட்டு சுமங்கலியாகச் சாவார்கள்,” என்று சாபமிட்டு இறந்தாளாம். 

“நானும் ஆரம்பத்திலே நம்பவில்லை. எங்கப்பா மனைவி இழந்து, நான் தாய் இல்லாப் பிள்ளையானேன். என் சகோதரி உங்கப்பாவிடம் சித்திரவதைப் பட்டுச் செத்தாள். என் மனைவியும் சீதாவை விட்டுவிட்டுதான் செத்துப் போனாள். இப்போது சீதாவுக்கு நடப்பதெல்லாம் பார்க்கும்போது சாபம்தான் வாட்டுகிறதோ என்றும் நினைக்கிறேன்”, என்றார். 

சீதாவின் வீட்டுக்கு நான் திலீபனை உயிரோடு எடுத்துச் செல்ல முடியுமா என்ற கவலை அதிகமாகியது. மாமாவிடம் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் பேசாமல் வெளியேறினேன். 

காரை எடுத்துக்கொண்டு வேகமாகக் குற்றாலம் நோக்கிப் பறந்தேன். நான் காரை ஓட்டவில்லை; என் மனத்தில் உருவான பீதிதான் காரை ஓட்டியது. 

காலை ஒன்பது மணிக்குக் குற்றாலம் வந்து, டாக்டர் தந்தியில் கொடுத்த விலாசத்துக்கு ஓடினேன். டாக்டர் வீடு இருக்கும் தெருவில் நுழைந்ததும் சங்கு சத்தம் கேட்டது. தெருவில் ஒரு வீட்டின் வெளியில் நெருப்புச் சட்டியும் மூங்கில்களும் பரப்பி வைக்கப்பட்டிருந்தன. காரை நிறுத்தி விட்டுக் காரின் ஸீட்டில் அப்படியே கண்களை மூடிச் சாய்ந்துவிட்டேன்.

அத்தியாயம்-35

சீதாவிடம் என்ன சொல்வேன்? அவள் முகத்தில் எப்படி விழிப்பேன்? ராஜலிங்கத்தின் தவறுக்காக ஏற்பட்ட சாபம் திலீபன் மூலம் சீதாவை வந்து தாக்க வேண்டுமா? என்ற கேள்விகள் ஒன்றன்பின் ஒன்றாக என் மனத்தில் எழுந்தன. 

வெள்ளை சங்கின் ஓசை – தெருவிலே பரத்தப்பட்டிருந்த காய்ந்த ஓலைகள், மூங்கில்கள், தணல் சட்டி- 

ஏற்கனவே டாக்டர் அனுப்பிய தந்தியால் திலீபன் உடல்நிலை பற்றிக் கவலையுற்றிருந்த எனக்கு, இந்த இறுதிச் சடங்குச் சாதனங்களைப் பார்த்ததும் ஏற்பட்டது ஒரே ஒரு முடிவுதான். 

டாக்டரின் பெயர் தாங்கிய பலகை தொங்கும் வீட்டை நோக்கி மெள்ள நடந்து சென்றேன். ஒவ்வோர் அடியாகத் தள்ளாடி டாக்டர் வீட்டை அடைந்து படிகளில் ஏறி அவர் வீட்டினுள் நுழைந்தேன். டாக்டர் வீட்டின் அமைப்பிலிருந்தும் அந்தத் தெருவின் நிலையிலிருந்தும் அவர் ஒரு சாதாரண டாக்டர் என்றும், குற்றால சீசன் சமயத்தில்தான் அவருக்கு ஏதாவது அதிகப்படி வரும்படி கிடைக்கும் என்றும் தோன்றியது. நோயாளிகள் உட்காருவதற்கென்று போட்டிருந்த பெஞ்சில் உட்கார்ந்தேன்.  

தரையில் தளம் சமநிலையில் இல்லாத. காரணத்தால் அந்தப் பெஞ்சு நொடிந்து ஆடியதா, அல்லது என் மனத்தில் உள்ள கலவரத்தால் அது அப்படி ஆடியதா? எனக்கே புரியவில்லை. டாக்டரின் வீட்டினுள் நிலவிய அமைதியிலிருந்து அந்த வீட்டில் எந்தவிதமான விபத்தும் நேர்ந்திருக்க முடியாது என்று தோன்றியது. பெஞ்சில் உட்கார்ந்தபடி தெருவை நோக்கினேன். எதிர்வீட்டிலிருந்து அழுதபடி பெண்கள் வெளியே வருவது தெரிந்தது. 

திலீபனுக்கு ஆபத்தில்லை. மரணம் எதிர் வீட்டில்தான். நான் ஆறுதல் அடையும்போதே, உட்புறமிருந்து நரைத்த மீசையுடன் வழுக்கைத் தலையுடன் ஒருவர் நான் உட்கார்ந்திருந்த அறையில் நுழைந்தார். 

மல் பனியனும் கதர் வேட்டியும் அணிந்திருந்தார் ‘நீங்கள் யார்?’ என்ற கேள்வி தொனிக்கும்படி என்னைப் பார்த்தார். 

“நீங்கள்தானே டாக்டர் நாதன்? நான்தான் ராமநாதன். திலீபனின் சகோதரன். திலீபனுக்கு ஒன்றுமில்லையே?” என்று படபடப்புடன் வாக்கியங்களை அடுக்கினேன். 

நரைத்த மீசைக்குள்ளிருந்து அவருடைய உதடுகள் அகல விரிந்து புன்னகையை வெளிப்படுத்தின. அவரது புன்னகை திலீபனுக்கு ஆபத்தொன்றுமில்லை என்பதை நிச்சயப்படுத்திற்று. 

“என்னோடு வாருங்கள்”, என்று சொல்லி என்னைப் பக்கத்திலிருந்த அறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு திலீபன் கண்களை மூடிய படி படுத்துக் கிடந்தான். லேசாக மூச்சு வந்து கொண்டிருந்தது. கன்னங்கள் குழி விழுந்து, உதடுகள் வெளுத்து, முற்றிய க்ஷயரோக வியாதியினால் தாக்கப்பட்டவன் போல் காணப்பட்டான். அவனைப் பார்க்கவே எனக்குப் பரிதாபமாக இருந்தது. 

“திலீபா! திலீபா!” என்று இருமுறை கூப்பிட்டேன். பதில் ஒன்றும் இல்லை. கவலையோடு டாக்டரைத் திரும்பிப் பார்த்தேன். 

“இன்னும் அபாயமான நிலையில்தான் இருக்கிறார் உங்கள் சகோதரர். நிறைய ரத்தம் செலுத்தி இருக்கிறேன். இல்லாவிட்டால் அவரை நீங்கள் உயிரோடு பார்த்திருக்க முடியாது. அவர் ரத்தமெல்லாம் சேதமாகியிருக்கிறது. தேகத்தில் அவருக்கு ஒரு காயமில்லை. அடி இல்லை. அவர் எப்படி இவ்வளவு ரத்தத்தையும் இழந்திருப்பார் என்பது எனக்கே புதிராக இருக்கிறது! இம்மாதிரியான ரத்த சோகை ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, அதுவும் பெண்கள் விஷயத்தில் அதிகமாக ஈடுபடுபவர்களுக்கு வரலாம். இவ்வளவு இளைஞருக்கு இம்மாதிரியான நிலை வருவது ஆச்சரியமாக இருக்கிறது!” 

“இப்போது நிலை எப்படி இருக்கிறது?” என்று கேட்டேன். 

“நீங்கள் கார் கொண்டு வந்திருந்தால் அழைத்துப் போகலாம். ஆபத்து ஒன்றுமில்லை. ஆனால் இன்னும் இரண்டு மாதங்களுக்கு அவரால் எழுந்து உட்கார முடியாது. நடக்க முடியாது. கை கால்களை அசைக்க முடியாது. மிகவும் ஜாக்கிரதையாகக் கவனித்து வரவேண்டும்”, என்று கூறிவிட்டு டாக்டர் என்னை அவர் ஓய்வெடுக்கும் அறைக்கு அழைத்து வந்தார். 

திலீபன் மயக்கத்தில் கிடந்தான். 

“திலீபன் கண்ணைத் திறக்க மாட்டானா? அவன் பேச இன்னும் எத்தனை நாள் ஆகும் டாக்டர்?” 

“நான் மயக்க மருந்து கொடுத்திருக்கிறேன். அதனால் கண் திறக்கவில்லை. இன்னும் அரை மணி நேரத்தில் கண் திறந்து விடுவான். பேசுவான். நேற்று மாலைகூட அவன் விலாசம் சொல்லித்தான் நான் உங்களுக்குத் தந்தி கொடுத்தேன்.” 

உள்ளே சென்று. டாக்டர் எனக்கும் அவருக்கும் ஒரு தட்டில் இனிப்பும், காப்பியும் எடுத்து வந்து உபசரித்தார். மருத்துவத் தொழிலையே ஒரு சேவையாக நினைத்துப் பணி புரியும் பழங்கால டாக்டர் என்று தோன்றியது. சுவர்களில் விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ராமலிங்க சுவாமிகள் ஆகியோரது சித்திரங்கள் தொங்கின. படாடோபமில்லாதவர். பணத்தின் பளபளப்பு அந்த டாக்டரிடம் இல்லை. குணத்தின் சிறப்பு இருந்தது. திலீபனை எங்கு சந்தித்தார், எப்படிச் சந்தித்தார் என்பது பற்றி, சாப்பிட்டுக்கொண்டே அவர் கூறினார்: 

“உங்கள் தம்பி குற்றாலம் காட்டுக்கு ஏன் வந்தார் என்று தெரியவில்லை. வேட்டையாட வந்தார் என்றால் அவர் கையில் துப்பாக்கி இல்லை. அருவியில் குளிக்க வந்தவராயும் தெரியவில்லை. ஐந்தருவிக்கு நான்கு மைலுக்கு அப்பால் ஒரு பாழும் கோயிலில் கிடந்தார். நான் அவ்வழியே ஒரு சினேகிதருடன் வரும்போது, அங்கு வேலை செய்து கொண்டிருந்த குடியானவர்கள் ஓடி வந்து காரை நிறுத்தினர். யாரோ இளைஞன் சாகும் தருவாயில் கிடப்பதாகச் சொன்னார்கள். நான் காரை விட்டு இறங்கிக் கோயிலுக்கு ஓடிப் போய்ப் பார்த்தேன். அங்கு குற்றுயிராகக் கிடந்தார் உங்கள் சகோதரர். அந்தப் பாழும் கோயிலில் சிலை ஒன்றும் இல்லை. பலிபீடத்தில், இறைச்சித் துண்டுகள் – நெருப்பில் சுடப்பட்ட இறைச்சித் துண்டுகள் – கிடந்தன. மல்லிகைப் பூச்சரங்கள் எங்கும் தொங்கிக் கொண்டிருந்தன. 

உங்கள் சகோதரர் பக்கத்தில் ஒரு துணிப்பை கிடந்தது. அதில் ஒரு சிறு கண்ணாடி, லிப்ஸ்டிக், சீப்பு, கைக்குட்டை எல்லாம் இருந்தன. உங்கள் சகோதரரைத் தூக்கி வந்து காரில் ஏற்றினோம். வீட்டுக்குக் கொண்டு வந்ததும் அவரைப் பரிசோதனை செய்தேன். அவர் உதடுகளில் மனிதப் பற்களின் குறிகள் இருந்தன. கன்னத்திலும் மார்பிலும் பற்களின் குறிகள் இருந்தன. அவருடைய நாடித் துடிப்பும் மரணத்தின் வாயிலில் உங்கள் சகோதரர் இருக்கிறார் என்பதைக் காட்டின உடனே ஆஸ்பத்திரியுடன் தொடர்பு கொண்டு அவர் உடலில் ரத்தம் செலுத்த ஏற்பாடு செய்தேன். மாலைதான் கண் விழித்தார் விழித்ததும், ‘ஐயோ, அவள் எங்கே? அவள் இல்லையா? அவள் போய் விட்டாளா?’ என்று அரற்றினார். பிறகு பையிலிருந்து உள்ளிப் பூண்டை எடுத்து மென்று தின்றார். நான் அவரை விசாரித்தேன். அவர் உங்கள் அட்ரஸைக் கூறிவிட்டு மயக்கமுற்று விட்டார்”. 

டாக்டர் கொடுத்த துணிப்பையில் இருந்த பொருள்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்தேன். அவைகளைத் தொடவும் எனக்கு அருவருப்பாக இருந்தது. அது ஆனந்தியின் பைதான். அதிலுள்ள பொருள்கள் அவளுடையவை என்பதில் எனக்குச் சந்தேகமில்லை. அந்தப் பாழுங் கோயிலில் என்ன நடந்தது? ஆனந்தி எங்கு சென்றுவிட்டாள்? மேஜர் எங்கு போயிருப்பார்? இந்தக் கேள்விகள் என் மனத்தில் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றின. 

மறுபடியும் திலீபன் படுத்திருக்கும் அறைக்குச் சென்றோம். கண் திறக்காமல் படுத்திருந்தான். மாலைக்குள் சென்னை செல்ல வேண்டும் என்ற ஆசையில், திலீபனை உடனே காருக்கு எடுத்துச் செல்லலாமா என்று கேட்டேன். டாக்டரும் ஒப்புக் கொண்டார். 

“எதிர்வீட்டிலுள்ளவரின் உடலை அப்புறப்படுத்தியபின் நீங்கள் திலீபனை அழைத்துச் செல்லலாம்,” என்று சொன்னார். 

அந்தத் தெருவில் நுழைந்த போது சங்கையும் தணல் சட்டியையும் பார்த்தவுடன் ஏற்பட்ட சந்தேகத்தைச் சொன்னேன். 

டாக்டர் சிரித்தார். 

“எதிர்வீட்டுக் கிழவருக்கும் நான்தான் வைத்தியம் செய்தேன். ஆனால் வயது அவருக்கு எதிராக இருந்தது. திலீபனுக்கு அதுவே சாதகமாக இருந்தது”, என்று என்னிடம் மருந்துகளைக் கொடுத்தார் 

ஒரு பிளாஸ்க்கில் சூடான ஹார்லிக்ஸும் போட்டுத் தந்தார். மொத்தமாக எல்லாச் செலவுகளுக்கும், வைத்தியச் செலவுக்கும் பில் கொடுத்தார். பில்லில் போட்டிருந்த தொகையைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அவர் போட்டிருந்த தொகை இருபத்தைந்து ரூபாய்த்தான். இவ்வளவு குறைந்த தொகை பில்லில் இருக்கும் என்று எதிர்பார்க்க கொஞ்சமும் வில்லை. “என் சகோதரனின் உயிரைக் காப்பாற்றியதற்கு இவ்வளவு தானா உங்களுக்குக் கொடுப்பது? குறைந்தது ஐந்நூறு ரூபாயாவது பெற்றுக்கொள்ள வேண்டும்”, என்று மன்றாடினேன். 

டாக்டர் மறுத்துவிட்டார். “உங்கள் தம்பியின் உயிரின் விலை ஐந்நூறு ரூபாய் என்கிறீர்களா? உயிருக்கு ஏது சார் விலை? உயிர் என்பது ஆண்டவனின் அன்பளிப்பு. அதை அளிப்பது பெற்றோரும் அல்ல. அதை எந்த டாக்டராலும் காக்கவும் முடியாது. டாக்டருக்குத் தெரிந்ததை டாக்டர் செய்கிறார்.. அதற்குப் பொருத்தமான கூலியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும்”, என்றார். 

ஐந்நூறு ரூபாயைப் பெற்றுக் கொள்ளும்படி தொடர்ந்து வற்புறுத்தினேன். 

“திருக்குற்றாலநாதன்தான் என்னைச் சரியான சமயத்தில் அந்த ரோடில் கொண்டுவந்து உங்கள் தம்பியை எடுத்துச் செல்லும்படி செய்தார். ஆகையால் நீங்கள் இந்த ஐந்நூறு ரூபாயைக் குற்றாலநாதர் உண்டியலில் போட்டுவிட்டுப் போங்கள்,” என்று கூறிவிட்டு என்னுடைய நன்றிக்காகக்கூட நிற்காமல் வாசல்புற அறையில் காத்திருந்த நோயாளிகளைக் கவனிக்கச் சென்று விட்டார். பெரிய மனிதர்கள் பெரிய மாளிகையில் வாழ்வதில்லை என்பதை டாக்டர் நாதனைப் பார்த்துப் புரிந்து கொண்டேன். 

சிறிது நேரத்திற்கெல்லாம் அவரது உதவியோடு. மயங்கிக் கிடந்த திலீபனைத் தூக்கிக் காரின் பின் சீட்டில் ஏற்றினேன். பிறகு காரை மெதுவாகத் திருச்சி நோக்கி ஒட்டிச் சென்றேன். மதுரை வந்ததும் காரை நிறுத்திவிட்டுத் திலீபனின் வாயைத் திறந்து மருந்து ஊற்றினேன். பிளாஸ்க்கிலிருந்து சூடான ஹார்லிக்ஸில் ஒரு டம்ளர் மிகவும் கஷ்டப்பட்டுத் திலீபனின் வாயில் ஸ்பூன் ஸ்பூனாகப் புகட்டினேன். சூடான ஹார்லிக்ஸ் உள்ளே சென்றதும் அசைந்து கொடுத்தான். கண்களைத் திறந்து என்னை நோக்கினான். 

“அண்ணா! வந்துவிட்டாயா? அண்ணா… வந்துவிட்டாயா?” என்று ஒரு குழந்தை, பிரிந்த தாயைக் கண்டதுபோல கூவினான். 

“இத்தனை நேரம் நீ மயங்கிக் கிடந்தாய். நான் உன்னை டாக்டர் வீட்டிலிருந்து காரில் ஏற்றியது உனக்கே தெரியாது திலீபா”, என்றேன். 

“டாக்டர் ரொம்ப நல்லவர் அண்ணா. என்னால் நல்லவர்களுக் கெல்லாம் எவ்வளவு தொந்தரவு!” என்று சொல்லிவிட்டுக் கேவிக் கேவி அழுதான். 

அவனுடைய நிலையைப் பார்த்ததும் அவனிடம் அவன் குற்றாலத்துக்கு வந்தது. பாழும் கோவிலில் கிடந்தது பற்றி எல்லாம் அவனைக் கேட்க வேண்டாமென்று தீர்மானித்தேன். அவனை அமைதியாகப் படுத்துக்கொண்டிருக்கச் சொல்லி விட்டு நான் டிரைவர் சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டு கார் ஓட்ட ஆரம்பித்தேன். அவனால் எழுந்து உட்காரக்கூட முடியவில்லை. ஆனால் பின் சீட்டில் படுத்தபடியே என்னிடம் பேசிக் கொண்டே வந்தான். தாயைப் பற்றி விசாரித்தான். சீதாவைப் பற்றி விசாரித்தான். மாமா ராமலிங்கத்தைப் பற்றியும் கேட்டான். நான் எவ்வளவு சொல்லியும் கேளாமல் தான் செய்த தவறுகளை நினைத்து அழ ஆரம்பித்து விட்டான் திலீபன். இதுநாள்வரை செய்தவற்றை எல்லாம் மறக்கும்படியாக இருந்தது அவனுடைய அழுகை. கல்யாணத்தை மறந்து வீட்டை விட்டு ஓடியது. தாயின் கண்முன்னே கடற்கரையில் இரக்கமற்று நடந்து கொண்டது. அடையாறு வீட்டில் சீதாவை அவமதித்தது எல்லாம் பொய்யாகவே தோன்றின எனக்கு. 

“அண்ணா, என்னை வீட்டிற்குக் கொண்டு போய்விடு! இனிமேல் நான் அந்த அயோக்கியன் மேஜர் வீட்டுப் பக்கம் போகப் போவதில்லை. அந்தப் பாவி ஆனந்தியின் முகத்தில் நிச்சயமாய் விழிக்கப் போவதில்லை. உடல் சரியான ஒரு மாதத்திற்கு, பூஜை அறையை விட்டு விலகாமல் முருகன் பெயரையே ஜபம் செய்து கொண்டிருக்கப் போகிறேன்”, என்றான். 

நிமிடத்துக்கு ஒருமுறையாவது மேஜரையோ ஆனந்தியையோ அவன் திட்டாமல் இல்லை. மேஜரும் ஆனந்தியும் அவனுக்கு என்ன தீங்கு செய்தார்கள் என்று விளக்கமாக அவன் என்னிடம் சொல்லவில்லை. நானாக அவனைக் கேட்டேன். 

“திலீபா, மேஜர் உன்னை என்னதான் செய்தார்? ஏன் இப்படி நீ இதுநாள்வரை நடந்து கொண்டாய்?”

திலீபன் சில வினாடிகளுக்குப் பதில் சொல்லவில்லை. 

பிறகு, அண்ணா, “அதெல்லாம் ஒன்றும் என்னிடம் கேட்காதே. என்னை முதலில் வீட்டுக்கு அழைத்துப் போ. அந்த அக்கிரமங்களைப் பற்றிக் கேட்காதே,” என்றான். 

”பயப்படாதே, திலீபா. போலீசாரிடம் சொல்லி அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கச் செய்கிறேன்.” 

திலீபன் பதறினான், “அண்ணா. வேண்டாம். தயவு செய்து போலீசாரிடம் மட்டும் போகாதே. அது பெரிய ஆபத்தாகி விடும். நம் குடும்பத்துக்கே ஆபத்தாக முடியும். போலீசாரால் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது”. 

நான் போலீசாரிடம் போக மாட்டேன் என்று சத்தியம் செய்யும் வரை திலீபன் ஓயவில்லை. உளுந்துர்ப்பேட்டை வந்ததும் காரை நிறுத்தினேன். திலீபன் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்பலாமா என்று ஒரு வினாடி யோசித்தேன். ரத்தச் சோகையால் மெலிந்து போயிருக்கும் திலீபனுக்குத் தூக்கமே வலிமை தரும் மருந்து என்று நினைத்து அவனை எழுப்பவில்லை. நான் மட்டும் எதிரே இருந்த காப்பி ஓட்டலில் ஒரு கப் காப்பி சாப்பிட்டுவிட்டு வந்தேன் மறுபடியும் காரை ஓட்டத் தொடங்கினேன். 

திலீபன் கண்மூடித் தூங்கியபடி இருந்தான் சீதாவின் மன வேதனை தீரும் காலம் வந்துவிட் டது. இழந்துவிட்ட வலிமையைத் திலீபன் அடைய இன்னும் ஒரு மாதமாவது பிடிக்குமென்றாலும் திலீபன் எங்கள் வீட்டில்தான் இருப்பான். 

அவனுக்கும் ஆனந்திக்கு மிடையே மனக்கசப்பு குற்றாலக் காட்டில் ஏற்பட்டிருக்க வேண்டும். என்ன நடந்தது என்பதைத் திலீபன் தெளிவாகக் கூறவில்லை என்றாலும் அங்கு நடந்த நிகழ்ச்சிகள் ஆனந்தியை அவன் பூராவும் வெறுக்கும்படி செய்துவிட்டன என்பதில் சந்தேகமில்லை. மனம் மாறி வீடு திரும்பிய திலீபனைப் பார்த்ததும் சீதாவின் முகம் எப்படி மலர்ந்து பிரகாசிக்கும் என்பதை நினைத்து மகிழ்ந்து காரை ஓட்டி வந்தேன். 

– தொடரும்…

– உடல் பொருள் ஆனந்தி, குமுதம் வார இதழில் (29-10-1992 முதல்) வெளியான தொடர்கதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *