கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 28, 2014
பார்வையிட்டோர்: 12,120 
 

என்னதான் வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும், சொந்த மண் மிதிக்கும் போது கிடைக்கும் சுகமும், சந்தோஷமும் வேறுதான். அம்மாவையும், அண்ணாவையும் பார்த்து எத்தனை நாளாயிற்று. அண்ணியை கல்யாணத்தின் போது நேரில் பார்த்தது. ஆகாஷ் குட்டியையும் வெப் கேமாராவில் பார்த்ததுதான். முதன் முறையாக நேரில் பார்க்கப் போகிறேன். நான் பிறந்து வளர்ந்த ஊர், பழகிய மக்கள் எல்லோரையும் எத்தனை வருடங்கள் கழித்துப் பார்க்கப் போகிறேன். சென்னையிலிருந்து ஊர் வந்து சேரும் வரை மனதில் சொல்லமுடியாத உற்சாகம்.

கல்யாணமாகி பன்னிரெண்டு வருடங்கள் கழித்து, அண்ணாவுக்கு ஆகாஷ் பிறந்திருக்கிறான். பிறந்த நாளுக்கு இந்தியா வருவதற்கு, இரண்டு மூன்று மாதங்களாகவே முயற்சி செய்து, ஒரு வழியாக வந்தாயிற்று. ஒரு வயது பிறந்த நாளை ஒரு திருவிழா போல் கொண்டாடி விட வேண்டும்; என்று நாங்கள்; முடிவு செய்திருந்தோம்.

டாக்சி வீட்டு வாசலை அடைந்த போது எல்லோரும் எங்களை வரவேற்க, வாசலிலேயே நின்று கொணடிருந்தார்கள். பரஸ்பர விசாரிப்புகள் முடியவே வெகு நேரமாயிற்று. அம்மாதான் அன்று சமைத்தாள். ஆச்சரியமாக இருந்தது. பத்து வருடங்களுக்கு முன் சாப்பிட்ட மோர் குழம்பின் ருசியும், மணமும், கொஞ்சமும் மாறாமல் அப்படியே இருந்தது. அம்மா பார்த்துப் பாhத்துப் பரிமாறினாள். ‘பத்து வருஷமாச்சே இப்படி எல்லாரும் ஒண்ணாச் சாப்பிட்டு” அம்மா ஆதங்கத்தோடுச் சொன்னாள்.

‘என்னம்மா பண்றது இடையில ரெண்டு முறை வந்திருக்க வேண்டியது. ஒருமுறை லீவுக்கு கிளம்பிக்கிட்டிக்கிறப்பதான், இவருக்கு அந்த ஆக்சிடெண்ட் ஆச்சுது. வரமுடியல! அடுத்த தடவ ஏற்பாடு பண்ணி தயாராயிட்டோம் ஆனா சூறாவளி வந்து சொதப்பிடுச்சு. எல்லா பிளைட்டும் கான்சல். இரண்டு பேருக்குமே ஆபிஸ்ல நினைச்ச நேரம் லீவு கிடைச்சிடுதா என்ன? அப்படி இப்படின்னு இவ்வளவு வருஷம் ஓடிடுச்சு”.

சாப்பாடு முடிந்ததும் அண்ணாவும் அவரும், மாடிக்குச் சென்று விட்டார்கள். எனக்கும் களைப்பாக இருந்தது. ஆனாலும், அம்மாவிடம் இத்தனை வருடக் கதைகளை இப்போதே பேசி விட வேண்டும்; என்ற ஆர்வம், களைப்பையெல்லாம் போக்கிவிட்டது.

‘யாரையெல்லாம் பிறந்தநாளுக்குக் கூப்பிட்டிருக்கே?”

‘உள்@ர்ல நம்ம சொந்தக்காரங்க வீடு, திருச்சியிலிருந்து உங்க அத்தை அப்புறம் இங்க அக்கம் பக்கத்துல வழக்கமாக கூப்பிடுற ஒரு நாலஞ்சு வீடு. உங்க மாமனார் வீட்டுக்கும் போன் பண்ணி அண்ணன் கூப்பிட்டுருக்கான். வருவாங்கல்ல?”

‘இல்லம்மா மாமாவுக்கு இன்னும் கால் வலி சரியாகலையாம். அவ்வளவு தூரத்திலிருந்து வரமுடியாதுன்னு சொல்லிட்டாங்க. நேத்து, கிளம்பறப்பதான் இவர் பேசினார்”

பிறந்த நாளை ஏக அமர்க்களமாகக் கொண்டாடினோம். மறுநாள் குல தெய்வ வழிபாடு எல்லாம் முடிந்ததும் ஞாயிற்றுக்கிழமை விருந்து தயாராகிக் கொண்டிருந்தது. உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் என பந்தி நிரம்பி வழிந்தது. பேசி பேசி வாய் வலித்தது. மனசு நிறைந்தது. விருந்து முடிந்ததும் எல்லோரும் கிளம்பிப்போனார்கள். பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் பார்த்தபோது எனக்கு, லலிதா, பத்மினியின் ஞாபகம் வந்தது. அம்மாவிடம் விசாரித்தேன்.

‘லலிதா இறந்து போயிருச்சாம். பத்மினி மட்டும் திருவாரூர்ல இருக்கறதாக் கேள்விப்பட்டேன்.”

‘ஓ! அந்த பாட்டுமாமி!”

‘அதப்பத்தி ஒன்னுந் தெரியல”

லலிதாவும், பத்மினியும் எங்கள் தெருதான். பூசைவீடு என்று தெருகாரர்களால் அறியப்பட்ட அந்த வீட்டில் அந்த அக்கா தங்கை இருவரை தவிர யாரும் கிடையாது. அவர்களின் அப்பா அரசாங்க அதிகாரி வேலையில் ஊர் ஊராக செல்லும் போது இந்த ஊர் அவருக்கு ரொம்பப் பிடித்து விட்டதாம். ஓய்வு பெற்ற பிறகு இங்கு தான் கழிப்பது என்று, இந்த வீட்டை வாங்கி போட்டிருக்கிறார்.

லலிதாவை திருவாரூரில் கல்யாணம் செய்து கொடுத்திருக்கிறார்கள். மகன்கள் சிறு குழந்தைகளாக இருந்தபோதே கணவர் இறந்து போய்விட்டார். தனியாக குழந்தைகளை வளர்க்;க சிரமப்பட்ட அக்காவுக்குத் துணையாக தங்கையும் அவளுடனே தங்கி விட்டார். அதற்குள் அம்மா, அப்பா காலம் முடிந்து போக பத்மினி தனக்கு திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்து அக்கா பிள்ளைகளை கவனித்து வந்தார். மகன்கள் இருவரும் படிப்பு முடிந்த கையோடு அமெரிக்காவில் வேலை தேடிக்கொண்டு சென்றுவிட்டார்கள். சில காலம் தங்கள் சொந்த வீட்டில் தங்கியிருக்கலாம் என இங்கு குடி வந்திருந்தார்கள். எங்கள் தெருவில் அதுதான் பெரிய வீடு. அவர்கள் இருவரும் வருடம் முழுவதும் பூஜை, விரதம் என்றே கழித்து விடுவார்கள்.

அவர்கள் அந்த வீட்டிற்கு வரும் போது நானும், அண்ணாவும் ஆறாவதும், எட்டாவதும் படித்துக் கொண்டிருந்தோம் என நினைக்கிறேன். லலிதாவின் இரண்டாவது மகனுக்கு வரன் பார்த்து முடித்தார்கள். கல்யாணம் முடிந்த கையோடு எல்லோரும் குடும்பத்தோடு வெளியூர் சென்று விட்டார்கள். மகன்கள், மருமகள்கள் எல்லோரும் அப்படியே விமானம் ஏறிவிட்டார்கள் போல! அக்கா தங்கை இருவரும் ஒரு மாதம்; கழித்து ஊர் திரும்பினார்கள். அவர்கள் கூடவே ஒரு நடுத்தர வயது பெண்மணியையும் கூட்டிக்கொண்டு வந்திருந்தார்கள்;. அவள் பார்க்க சற்று வித்தியாசமாக இருந்தாள். கழுத்தில் மூன்று நான்கு வண்ணங்களில் பாசிமாலை. செம்பட்டை தலைமுடியை நீளமாக சவுரி வைத்து பின்னியிருந்தாள். முழங்கை வரைக்கும் தொளதொளவென ஒரு சட்டை. சற்று அழுக்கேறிய புடவை என அவள் தோற்றம் லலிதாவுக்கும், பத்மினிக்கும் அவள் சொந்தக்காரியாக இருக்க வாய்ப்பில்லை என்பதாகவே பட்டது

அம்மாவைப் போலவே பக்கத்து வீட்டுப் பெண்களுக்கும் பொறுக்க முடியவில்லை. அவர்களிடமே கேட்டு விட்டார்கள். ‘நாங்க மன்னார்குடிக்கு சாமி கும்பிடப் போயிருந்தோம் இல்லையா அங்க எங்க உறவுக்காரா இருக்கிற அக்ரஹாரத்துல இவ அனாதையா சுத்திண்டிருந்தா. விசாரிச்சோம் சரியா எதுவும் சொல்லலை. வீட்டு வேலை செஞ்சுண்டு எங்களோடவே இருந்திடறயான்னு கேட்டோம். சரின்னா! அழைஞ்சுண்டு வந்துட்டோம்”.

‘ உங்க சாதியா?”.

‘எதுவும் சொல்ல மாட்டேங்குறாளே. பூர்வீகம் பத்தி ஏதாவது கேட்டா திருதிருன்னு முழிக்கறா. கொஞ்சம் அழுத்திக் கேட்டா கோபப்படறா. காது கொஞ்சம் மந்தம் போல. ஒன்னுக்கு ரெண்டு தடவ சத்தமா கேட்டாதான் பதில் சொல்றா. ஏதோ சொல்ல முடியாத கஷ்டமாயிருக்கலாம். அவளே மனசு தெளிவாகி பேசட்டுமுன்னு விட்டுட்டோம். பார்த்தா நல்ல குடும்பத்து பொம்மனாட்டி போலத்தான் தெரியறது. அவளுக்குன்னு மனுஷா யாரும் இல்லைன்னு மட்டும் சொல்றா”

அந்த பெண்மணி அவர்கள் வீட்டில் துணி துவைப்பது, வீடு வாசல் சுத்தம் செய்வது, கிணற்றிலிருந்து தண்ணீர் எடுப்பது, கடைக்கு போய் வருவது என எல்லா வேலைகளையும் சுற்றிக் கொள்ள ஆரம்பித்தது. சாயங்கால வேளைகளில் அவர்கள் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும். யாராவது சிரித்தால் பதிலுக்கு சிரிக்காது. யாரும் சிரிக்காத போது அவர்களை பார்த்து புன்னகைக்கும். அந்த பெண்மணியின் நடவடிக்கை சற்று புதிராகவே இருந்தது.

அவர்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் கிணற்றடியில் தான் அது தினமும் குளிக்கும். ஒரு நாள் அப்படிக் குளிக்கும் போது, கிணற்றுக்குள் வாளியை இறக்குகையில் சிரித்த முகமாக இருந்த அந்தப் பெண், வாளியை வெளியே இழுக்கும் போது நறநறவென்று பல்லைக் கடித்து கோபமாகி விட்டதாம். இதை கவனித்துவிட்ட லலிதாவின் பின்வீட்டில் குடியிருக்கும் சுபத்ரா அக்கா மறுநாள் எங்கள் வீட்டுக்;கு வரும் போது அம்மாவிடம் சொன்னாள். உடனே அண்ணன் ‘ஆமாம்மா அன்னிக்கு கடையில என் பக்கத்துல நின்னுதான் சாமான் வாங்கிட்டிருந்துச்சு. அப்ப நான்கூட பார்த்தேன். காசு குடுக்கும் போது மூக்கை விரிச்சு, கோபத்துல ஏதோ முணுமுணுத்துச்சு.” இப்படி, பலரும் பல சந்தர்ப்பங்களில் கவனித்திருக்க வேண்டும். அவரவர் அனுபவங்களைப் பேசிக் கொண்டார்கள்.

அம்மா இது குறித்து பத்மினியிடமே கேட்டு விட்டாள். ‘ஆமாங்க! நாங்களும் கவனிச்சிருக்கோம். வேலையெல்லாம் ஒழுங்கா செய்யறா. சில நேரங்கள்ல இந்த மாதிரி நடந்துக்கறா. மனசுல ஏதோ ஒரு பாதிப்பு இருக்கு. அவதான் ப்‡ரீயா பேசவே மாட்டேங்குறாளே அப்புறம் எப்படி தெரிஞ்சுக்கறது?” சாதாரணமாக பதில் சொன்னார்.
ஆனால் தெருவில் எல்லோருக்கும் அந்தப் பெண்ணுக்கு மனசுல பாதிப்பா அல்லது மூளையில கோளாறா என்ற சந்தேகம் வந்தது. அடுத்தடுத்த நாட்களில் அது ஏதாவது வித்தியாசமாக நடந்து கொள்கிறதா என்று நாங்கள் சிறுவர்கள் எல்லாம் உற்று உற்று ஆராயத் தொடங்கினோம். அப்படி ஏதாவது பார்த்து விட்டால் உடனே, வீட்டுப் பெரியவர்களிடம் சென்று அதைச் சொல்வதில் அப்படியொரு ஆர்வம்.

ஒரு முறை மத்தியானம் லலிதாம்மா வீட்டிலிருந்து பாதாளக்கரண்டி வாங்கி வரும்படி என்னையும், அண்ணாவையும் அம்மா அனுப்பி வைத்தாள். வாசலிலேயே அந்தப் பெண்மணி உட்கார்ந்திருந்தது. மதிய நேரம் என்பதால் தெருவில் ஆள் நடமாட்டமேயில்லை. நாங்கள் சற்றுத் தயங்கியவாறு அந்த வாசலுக்குள் நுழைய முயற்சித்;தோம். திண்ணையிலிருந்தபடியே கையை நீட்டி எங்களைத் தடுத்தது அந்தப் பெண். என்ன வேண்டும் என்பதாக புருவங்களை உயர்த்தியது. எனக்கு பயம் பிடித்தது. அண்ணன் தான் கொஞ்சம் தைரியமாகப் பேசினான்.

‘லலிதாம்மாவை பார்க்கணும்”

‘தூங்கறாங்கன்னு சொல்றேன்ல்ல” கொஞ்சம் அதட்டலாகவே அந்த பெண்மணி சொல்லியது. எங்களுக்குப் புரியவில்லை. ‘இப்பத்தானே வந்தோம். ஏற்கனவே சொல்லிவிட்டது போல ‘சொல்றேன்ல்ல’ என்கிறதே என்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்! ‘என்ன வேணும்?” என்ற அந்த பெண்மணியிடம், ‘பாதாளக்கரண்டி’ என்று இருவரும் ஒரே குரலில் கூறினோம்.

‘போ! போ! அதெல்லாம் இங்கில்லை போ! போ! போ!”

அது போ! போ! என்று கிட்டத்தட்ட ஒரு பத்து நிமிடத்திற்கு தொடர்ந்து சொன்னது. அவ்வளவுதான் நாலுகால் பாய்ச்சலில் மூச்சிரைக்க, வீட்டுக்கு ஓடி வந்தோம். அம்மாவிடம் நடந்தைச் சொல்ல, அம்மா ‘சந்தேகமேயில்லை அது நாம நினைச்சது போல கொஞ்சம் கழண்ட கேசுதான்’ என்றாள். அம்மா, தான் ஊர்ஜிதப்படுத்தியதை எதிர்வீட்டு திலகா அத்தையிடம் சொல்ல, உள்@ர் வானொலியான அவள் இதை ஊரறிந்த விஷயமாக ஆக்கிவிட்டாள். அதற்கு பிறகு வந்த நாட்களில் எல்லோரும் அந்தப் பெண்ணை வேறொரு கண்ணோட்டத்தில் பார்க்க ஆரம்பித்தார்கள்.

ஒரு நாள் லலிதா மாமியின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் நாங்கள், சிறுவர்கள் நாலைந்து பேர் விளையாடிக் கொண்டிருந்தோம். ‘உள்ளங்கள் ஒன்றாகித் துள்ளும் போதிலே அள்ளும் இன்பமே சொர்க்கம் வாழ்விலே” இனிமையான குரலில் யாரோ பாடுவது கேட்க நாங்கள் கீழே எட்டிப் பார்த்தோம். ‘ இங்கப் பாருங்கடா அந்த கிறுக்குப் பொம்பளை தாண்டா பாடுது”, சுப்பு பதுங்கிய குரலில் இப்படிச் சொன்னதும் அவன் நின்றிருந்த இடத்திற்கு எல்லோரும் வந்து எட்டிப் பார்த்தோம். அங்கே லலிதா மாமி வீட்டு கொல்லைப்புறத்து கிணற்றடியில் அந்தப் பெண்மணி துணிகளுக்கு சோப்பு போட்டுக் கொண்டே தலையை ஆட்டி ரசித்துக் பாடிக் கொண்டிருந்தது. அது எங்களை கவனித்துக் விடக்கூடாது என்பதற்காக கைப்பிடிச் சுவரின் கீழே முட்டுப் போட்டுக் கொண்டு தலையை மட்டும் எட்டிப் பார்த்தோம். முழுப் பாடலையும் அழகாக பாடியது.

அடுத்து ‘வாங்க மச்சான் வாங்க வந்த வழியைப் பார்த்து போங்க!” தாளம் பிசகாமல் வந்தது. அடுத்து

‘பூவரையும் பூங்கொடியே பூமாலை போடவா”,

‘கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே”,

‘புதுப் பெண்ணின் மனதைத் தொட்டுப் போறவரே” என வரிசையாகக் நான்கைந்து பாடல்கள். பிண்ணனி இசை மட்டும் தான் இல்லை. மெட்டு விலகாமல், வார்த்தை மாறாமல்; தெளிவாக கணிரென அது பாடியதை, வானொலியில் பாட்டு கேட்பதை போல நாங்கள் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தோம். எங்கள் எல்லோருக்கும் ஆச்சரியம். தடுக்கி விழுந்தால் இசைக்கென சேனல்களும், ரியாலிட்டி ஷோக்களும் இல்லாத அந்த கால கட்டத்தில் இது மாதிரி யாராவது பாடிக் கேட்பது பரவசமான அனுபவம் தானே! துணிகளை அலசிப் பிழிந்து போடும் போதும் பாட்டுதான். வேலையெல்லாம் முடிந்தவுடன் அது பாடுவதை நிறுத்திவிட்டது. எங்கள் கூட்டாளிகளில் சுப்பு கொஞ்சம் வம்பு பிடித்தவன். பட படவென கை தட்டியபடி எழுந்து நின்றான். சத்தம் வந்த திசையில் அந்த பெண் தலையைத் தூக்கிப் பார்த்தது. நாங்கள் எல்லோரும் பயத்தில் தரையோடு தரையாக படுத்துக் கொண்டோம்.

’மாமி! பாட்டெல்லாம் சூப்பரு. ரேடியோவில் கேட்ட மாதிரி இருந்தது” சுப்பு சற்று உரக்கச் சொன்னான். கல்லெடுத்து எறிந்து திட்டப் போகிறது என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.

‘பாடினத கேட்டியாடா அம்பி! நன்னாயிருந்துச்சா? தேங்க்ஸ்” அந்தப் பெண்மணி சுப்புவிடம் சிரித்துப் பேசிவிட்டு உள்ளே போக எங்களுக்குத் தலை சுற்றியது. ’எப்படிடா சுப்பு கோபத்துல அசிங்கமா திட்டப் போகுதுன்னு பார்த்தா தேங்க்ஸ் சொல்லிட்டுப் போகுதே” நாங்கள் இப்படிக் கேட்டதும் சுப்புவுக்குப் பெருமை பிடிபடவில்லை. ‘நான் உண்மையிலேயே பாராட்டினேன்டா. கிறுக்குப் பொம்பளையா இருந்தாலும் எவ்வளவு அழகாப் பாடுச்சு” என்றான். அன்று எல்லோரும் அவரவர் வீட்டில் அந்தப் பெண்ணின் பாட்டை பற்றித் தான் பேசினோம். யார், எப்போது வைத்தார்கள் என்றே தெரியவில்லை. கிறுக்குப் பெண் என்ற பெயர், நாளடைவில்; பாட்டுமாமி என்று மாறிவிட்டது.

நவராத்திரி வந்தால் பூசைவீடு களைக்கட்டும். பதினோறு படிகளில் பொம்மை கொலு வைத்து காலையும், மாலையும் பூசை செய்வார்கள். தெருப் பெண்கள் எல்லோரையும் அழைப்பார்கள். மூன்றாம் நாள் பூசைக்கு நானும், அம்மாவும் சென்றிருந்தோம். நாங்கள் போகும் போது அக்கா, தங்கை இருவரும் கையில் புத்தகத்தை விரித்து வைத்து அதை பார்த்தும் பார்க்காமலும் ‘லலிதா சஹஸ்கரநாமம்’ படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு பின்னால் உட்கார்ந்தபடி எதையும் பார்க்காமல் அவர்களுக்கு இணையாக அட்சர சுத்தமாக அந்தப் பாட்டுமாமி ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருந்தது. அதைப் பார்த்ததும் ஆச்சரியம் விலகாமல் நாங்கள் இருவரும் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டோம். ஸ்லோகம் முடிந்ததும் அந்தப் பெண்மணியை பார்த்து பத்மினி சைகை செய்ய, கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் குரலெடுத்து பாடத் தொடங்கியது. ‘அம்மையே என்னை கண்பாரம்மா! ஆறுதல் தந்திட தாமதம் ஏனம்மா?” உருக்கும் பாவத்தில் அந்தப் பெண் மெய்மறந்து பாட எனக்கும் அம்மாவுக்கும் திறந்த வாய் மூடவேயில்லை. என் புறங்கையில் மயிரிழைகள் நட்டுக் குத்தின. பிரசாதம் வாங்கிக் கொண்டு விடை பெற்றோம்.

வீட்டுக்கு வந்ததும் அம்மா, அப்பாவிடம் அந்தப் பாட்டைப் பற்றி சொல்லிச் சொல்லி மாய்ந்து போனாள். அடுத்த மூன்று நாட்களும் பாட்டுமாமியின் பாட்டை கேட்பதற்காகவே தெருப் பெண்கள் நிறைய பேர் கொலுவிற்கு சென்றார்கள். ஆறாவது நாள் பூசையன்று வீட்டில் வேலை இருந்ததால் அம்மா பூசைவீட்டிற்குப் போகவில்லை. சாயங்காலம் அடுக்களையில் வடை சுட்டுக் கொண்டிருந்த அம்மாவிடம் ஓடி வந்தான் அண்ணன்.

‘அம்மா! அம்மா! “

‘என்னடா”

‘அந்தப் பாட்டுமாமி நம்ம வீட்டுக்கு வந்திருக்குதும்மா” சற்று பதற்றத்துடனையே சொன்னான். அம்மாவிற்கு ஆச்சரியம். வெளியே வந்து பார்த்தோம். அங்கே கையில் ஒரு கிண்ணத்தோடு பாட்டுமாமி நின்று கொண்டிருந்தது.

‘இன்னிக்கு ஏன் வரலை?”

‘வீட்டுல வேலையிருந்துது. உள்ள வாங்க!” அம்மா கூப்பிட்டதற்கு சிநேகமாக புன்னகைத்தபடி மறுத்து விட்டது.

“இந்தாங்க பிரசாதம்! பத்மினி குழந்தைகளுக்குக் கொடுத்திட்டு வரச்சொன்னா” தெளிவாகப் பேசியது.

‘கொஞ்சம் இருங்க கிண்ணத்தைக் தந்துடுறேன்” என்றபடி அம்மா அடுக்களைக்குச் சென்று பிரசாதத்தை வேறு பாத்திரத்தில் மாற்றிவிட்டு அதில் ஐந்தாறு வடைகளை வைத்து பாட்டுமாமியிடம் கொடுத்தாள்.

‘இதுல வடை இருக்குது. நீங்களும் சாப்பிடுங்க”

அம்மா சொன்னதும் அதுவரை சாதாரணமாக இருந்த அந்த பெண்மணி முகம் சுளித்தது. பற்களை நறநறவென்று கடிக்க ஆரம்பித்தது. நானும் அண்ணாவும் அம்மாவின் பின்னால் பதுங்க ஆரம்பித்தோம். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

‘வடை தராதேன்னு சொல்லியிருக்கேன்ல” அம்மாவைப் பார்த்து கோபமாக திட்டியபடி, கையிலிருந்த கிண்ணத்தை அப்படியே கவிழ்த்தியது. காலி கிண்ணத்தோடு விருட்டென கிளம்பி விட்டது. அம்மா திருதிருவென முழித்தாள். ‘என்ன ஆச்சு இந்தப் பொம்பளைக்கு? இதுவரைக்கும் நல்லாத்தானே பேசிக்கிட்டிருந்தது?’. அப்பா அலுவலகத்திலிருந்து வந்ததும் தட்டில் வடைகளை வைத்துக் கொடுத்த அம்மா, மறக்காமல் இந்த விஷயத்தைச் சொன்னாள். ‘ஒருவேளை ஏற்கனவே நம்ம வீட்டு வடையைப் பற்றி கேள்விபட்டிருக்கும். அதான் முன்னெச்சரிக்கையா கோபப்பட்டு அதைப் போட்டுட்டு ஓடிடுச்சோ?” அப்பா, அம்மாவைக் கிண்டல் செய்ய நாங்கள் சிரித்தோம். வடையை பார்த்ததும் ஏன் அந்த மாமி கோபப்பட்டது என்பதற்;கு விடையை கண்டு பிடித்தே ஆகவேண்டும் என்று மறுநாள் அம்மா நேராக லலிதாவின் வீட்டிற்கேப் போய்விட்டாள்.

‘வாங்கோ!”

‘அந்த பாட்டுமாமி வீட்டுல இருக்குதா?”

‘என்ன சொல்லுங்கோ. அவா மாவு மில்லுக்குப் போயிருக்கறா”

‘இல்ல நேத்து எங்க வீட்டுக்குப் பிரசாதம் கொண்டு வந்தப்ப நான் வடை கொடுத்தேன்” அம்மா முடிப்பதற்குள்,

‘வடையைப் பார்த்ததும் கோபமாக் கத்தினாளா?” என்று லலிதாம்மா கேட்க, எங்களுக்கு வியப்பாக இருந்தது.

‘அதை ஏன் கேட்கறேள்? இதுவரையிலும் ஒரு நாலைஞ்சு தடவ இந்த மாதிரி நடந்திருக்கறது. உளுந்த வடையைப் பார்த்தா, மட்டும் அவளுக்கு கோபம் வர்றது. சாப்பிடவே மாட்டா கேட்டா. ஒன்னும் சொல்லலை. அவளுக்கு பயந்தே நாங்க வீட்டுல பருப்பு வடையோட நிறுத்திக்கறோம்” லலிதா சொல்லவும் ‘சரிதான் காரியகார கிறுக்கு போல’ என்று முணுமுணுத்தபடியே அம்மா வீட்டுக்குத் திரும்பினாள். தெருவுக்குள் இந்த விஷயம் பரவ எல்லோருக்கும் மண்டை காய்ந்தது. உளுந்த வடைக்கும், அந்தப் பெண்ணுக்கும் என்ன சம்பந்தம் இருக்கலாம் என்று ஆளாளுக்கு ஒரு கட்டுக்கதை கூறினார்கள்.

நாங்கள் சுப்புவைத் தயார் படுத்தினோம். அவன் மாமி கொல்லைப்புறத்தில் பாட்டுப் பாடிக் கொண்டிருந்த ஒரு சந்தர்ப்பத்தில் வழக்கம் போல கைத்தட்டி பாராட்டிவிட்டு வடை விஷயத்துக்கு வந்தான். நாங்கள் எதற்கும் இருக்கட்டும் என்று ஓடத் தயாரானோம்.

‘ஏன் மாமி உளுந்து வடையைப் பார்த்தா உங்களுக்கு கோபம் வருது” பட்டென்று கேட்டு விட்டான் சுப்பு. முதலில் கண்களை அப்படியும், இப்படியும் உருட்டிய பாட்டுமாமி கரகரவென கண்ணீர் வடித்தது. எங்களுக்கு பாவமாக இருந்தது. ‘மாமி அழாதீங்க’ என்று எல்லோரும் சமாதானம் படுத்தினோம். வடையைப் பற்றி எதுவும் வாயை திறக்காமலேயே வீட்டுக்குள் போய் விட்டது. எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. அன்றிலிருந்து, என் திருமணம் முடிந்து செல்லும் வரை மனதை அரித்துக் கொண்டேயிருந்த விஷயம் அது.

வருடங்கள் செல்லச் செல்ல பாட்டுமாமியை யாரும் பெரிதாக சட்டை செய்யவில்லை. அந்த ஊர்க்காரியாகவே மாறியிருந்தது. நான் கடைசியாக பார்த்தது என் கல்யாண வரவேற்பு அன்றைக்குத் தான். லலிதா, பத்மினியோடு பாட்டுமாமியும் வந்திருந்தது. மணமேடையில் எங்கள் அருகே வந்த போது நான் கணவருக்கு அறிமுகப் படுத்தி வைத்தேன். ‘ இவங்க பாட்டுமாமி! நம்ம தெருதான். ரொம்ப நல்லாப் பாடுவாங்க” நான் சொன்னதைக் கேட்டு மாமியின் முகம் பிரகாசமானது. அதன் பிறகு நான் மாமியைப் பார்க்கவே இல்லை. இப்போது பத்மினி கூடவே இருக்குமா, தன் சொந்த பந்தங்களோடு சேர்ந்து இருக்குமா தெரியவில்லை. தெரிந்து கொள்ள எனக்கு ஆவலாக இருந்தது.
‘ஈஸ்வரன் கோவில் அர்ச்சகருக்கு திருவாரூர் தான் சொந்த ஊர். அவரை கேட்டால் தெரியும்’, என்றாள் அம்மா. மறுநாள் கோவிலுக்குச் சென்று அவரை விசாரித்தேன்.

‘பத்மினி தனியாகத் தான் இருக்கிறதா கேள்விப்பட்டேன். அவாளப் பத்தி வேற எதுவும் தெரியலை. வீடு எங்க இருக்குதுன்னு தெரியும். லலிதா இறந்தப்போ போயிருந்தேன். வேணும்னா விசாரிச்சுக்கோங்கோ”, அர்ச்சகர் தந்த முகவரியை குறித்துக் கொண்டேன்.

அடுத்த மாதம் ஏழாம் தேதி கணவருடைய சித்திப் பெண்ணுக்கு தஞ்சாவூரில் கல்யாணம். திருவாரூர் பக்கம ;தானே. அங்கு போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வர வேண்டும். என் ஆசையை சொன்னபோது மறுப்பேதும் சொல்லவில்லை கணவர். அம்மாதான், ‘ஏம்மா உனக்கு லீவே குறைச்சலாதான் இருக்குது ஏன் அலையற? மேலும் அவங்களையெல்லாம் பார்த்து என்ன ஆகப்போகுது. நம்ம உறவுக்காரங்களா என்ன?” என்றாள்.

ஆனாலும் பால்யத்தில் என் மனதை, வெகுவாக பாதித்த அந்த பாட்டுமாமியின் குரல், சோகம், கோபம் எல்லாமும் எனக்குள் எப்படியும் அந்த மாமியை பார்த்து விட வேண்டும், குடும்பம் பற்றி ஏதாவது தெரிந்ததா என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரித்தது. யாருக்கும் தெரியாது, இன்னமும் உளுந்த வடையைப் பார்க்கும் போது நான் பாட்டுமாமியை நினைக்கும் விஷயம்.

தஞ்சாவூரில் கல்யாணத்தில் கலந்து கொண்டு விட்டு மறுநாள் காலை கணவரின் நண்பர் வீட்டுக்கு அவசரமாக செல்ல வேண்டியிருப்பதாக எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு திருவாரூருக்கு வந்தோம். அர்ச்சகர் சொன்ன முகவரியை தேடிக் கண்டு பிடிப்பது கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஒரு வழியாக அந்த வீட்டைக் கண்டுபிடித்தோம். வாசலின் அகலமான
திண்ணையில் கால்களை நீட்டியபடி கையில் ஒரு ஓலை விசிறியை விசிறிக் கொண்டு உட்கார்ந்து இருப்பது ………… பத்மினி அம்மாவே தான். அருகில் சென்றேன். இடுங்கிய கண்களால் என்னை உற்றுப் பார்த்தார்?.

‘யாரு”

‘நான் சோழவந்தான்லேயிருந்து வர்றேன். பெரியநாயகி ஞாபகம் இருக்கா?. அப்பா சீனிவாசன் சொசைட்டியில வேலை பார்த்தாரே!”

‘ஓ! மலர்விழியா ?”

பத்மினி அம்மாவுக்கு என்னைப் பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி. வீட்டுக்குள் அழைத்துச் சென்று உட்கார வைத்தார். கணவரிடமும் நலம் விசாரித்தார். அம்மா, அப்பா, அண்ணா என எல்லோரையும் கேட்டார். ‘இருங்க ஏதாவது சாப்பிட கொண்டு வர்றேன்”; என்று உள்ளே சென்றார். வீடு முழுவதையும் கண்களால் ஆராய்ந்தேன். பழையகாலத்து வீடு. இருட்டாக இருந்தது. நிறைய அறைகள். எல்லாம் பூட்டியிருந்தது. ‘இவ்வளவு பெரிய வீட்டில் இந்த அம்மா தனியாகவா இருக்கிறது? பாட்டுமாமி? இப்போது என்னைப் பார்த்தால் அதற்கு ஞாபகம் இருக்குமா’?.

பத்மினி அம்மா ஒரு தட்டில் கொஞ்சம் பேரீச்சம் பழமும், கற்கண்டும் வைத்து எடுத்து வந்தார். ‘வீட்டுல வேற எதுவும் வாங்கி வச்சுக்கலை. இங்க யாரு வர்றா? சாப்பிடுங்கோ!” அன்பாக தந்ததை மறுக்க மனமில்லாமல் என் கணவர், கற்கண்டு ஒவ்வொன்றாக எடுத்து வாயில் போட்டுக்கொண்டிருந்தார். நேரடியாகவே கேட்டு விட்டேன்.

‘அம்மா! உங்க வீட்டுல பாட்டுமாமி இருந்தாங்களே?”. பாட்டுமாமியை பற்றிக் கேட்டதும் பத்மினி அம்மாவின் முகத்தில் உணர்ச்சிகள் அலை மோதுவது தெரிந்தது. பெருமூச்சோடு பேச ஆரம்பித்தார்.

‘அவளை உனக்கு இன்னும் ஞாபகம் இருக்கா? எங்கேயோ இருந்து வந்தா! கூடயிருந்தா! எங்களை அப்படி கவனிச்சுண்டா. அக்கா சாகறப்போ கடைசி ஒரு மாசம் ரொம்ப அவஸ்தைப் பட்டுட்டா. படுக்கையிலதான் எல்லாம். பாட்டுமாமி தான் கிட்டயிருந்து அவளை நன்னா பாத்துண்டா. அவ, எங்களுக்கு செஞ்ச உதவியை எல்லாம் மறக்கவே முடியாது. என்னால தான் அவளுக்கு எதுவும் பண்ண முடியாம போயிட்டுது”. பத்மினி அம்மா விட்டத்தை பார்த்தபடி கொஞ்ச நிமிடங்கள் அப்படியே அமைதியாக அமர்ந்திருந்தார்.

‘ஏம்மா அப்படி சொல்றீங்க?. நீங்களும் அவங்களை உங்க வீட்டு மனுஷியாத்தானே கவனிச்சுகிட்டிங்க! அநாதையா சுத்தினவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வந்து காப்பத்துனீங்களே”. பத்மினி அம்மா மௌனமாக மேலும், கீழும் தலையை ஆட்டினார்.

‘இப்போ அவங்க எங்க?”

‘அக்கா இறந்து இரண்டு வருஷம் எனக்கு எல்லா வேலையும் செஞ்சுண்டு அப்படி கவனிச்சுக்கிட்டா. திடீருன்னு ஒரு ராத்திரி கடுமையான காய்ச்சல் கண்டு படுத்தா. பக்கத்து வீட்டில உள்ளவா உதவினா. ஆஸ்பத்திரிக்கு அழைச்சிட்டு போனேன். தஞ்சாவூர் பெரிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு போயிடுங்கோன்னு சொல்லிட்டா. சரின்னு அங்கப் போனோம். ஏதோ புதுசா ஒரு காய்ச்சல் பேரு சொன்னா. ரெண்டு மூணு நாள் வச்சு பார்க்கலாம்னு சொன்னா. கூடவே இருந்தேன். பேச்சு நினைவு எதுவும் கிடையாது. ரெண்டாவது நாள் காலைல கண் முழிச்சா. என் கையைப் பிடிச்சுண்டு ஏதோ சொல்ல நினைக்கிறவளா என்னைப் பார்த்தா. கண்ணீர் முட்டியிருந்தது. நேக்கு ஏதோ புரிஞ்ச மாதிரி இருந்தது. ஒரு மனுஷன்அநாதையா வாழறதை விடக் கொடுமை, அவன் அநாதையா சாகறது. இப்படி ஏதோ நினைச்சுதான் அவ அழறான்னு புரிஞ்சது. ‘இப்பவாச்சம் ஏதாவது சொல்லுடி’ன்னு திரும்பத் திரும்ப கேட்டுப் பார்த்தேன். ‘ஸ்ரீரெங்கம், ரெங்கநாதன்மெஸ்” இந்த வார்த்தைகளை மட்டும் திக்கி;த் திணறி; சொன்னா அதுக்கு மேல அவளால பேச முடியலை.

எங்க சின்ன பிள்ளையோட மாமனார் ஆரம்பத்தில திருச்சிலதானே சப்கலெக்டரா இருந்தார். அவர்கிட்ட சொல்லி ஸ்ரீரெங்கத்துல விசாரிக்கச் சொன்னேன்”. பத்மினி அம்மா சொல்லச் சொல்ல என் மனம் பரபரத்தது. பாட்டுமாமியின் பூர்வீகம் பற்றி தெரிந்ததா இல்லையா?.

‘சம்மந்தி ரொம்ப ஸ்ரமத்தின் பேரில ஸ்ரீரெங்கம் ரங்கராஜனை கண்டு பிடிச்சிருக்கார். அங்க ஓராயிரம் ரங்கராஜன் இருப்பா இல்லையா? மெஸ்ன்னு சொன்னதால எப்படியோ விசாரிச்சு தெரிஞ்சுண்டுருக்கார். அது அவளோட அப்பாவாம். மெஸ் வச்சு நடத்தியிருக்கார். அகிலாண்டம் ஒரே பொண்ணு. அதான் பாட்டுமாமின்னு நீங்க பேர் வச்சேளே அவளோட நிஜப் பெயர்”.

‘’அகிலாண்டம்”; மனதுக்குள் ஒருமுறை சொல்லிப் பார்த்துக் கொண்டேன்

‘அம்மா இல்லை, அப்பா கஷ்டப்பட்டு இவளை உள்@ரில் கொஞ்சம் வசதியான குடும்பத்துல கல்யாணம் பண்ணிக் கொடுத்துருக்கார். இவளுக்கு காது கொஞ்சம் மந்தமில்லையா? விஷயம் தெரிஞ்சதும் அதை மறைச்சு கல்யாணம் பண்ணி வச்சுட்டாருன்னு அவங்க அப்பாவை மாமியாரும், புருஷனும் சேர்ந்து திட்டிண்டேயிருப்பாளாம். புருஷன் அம்மா கோண்டு போல. அந்த பொம்மனாட்டி ராட்சசி. இவளைப் படாத பாடு படுத்தியிருக்கா. ஒரு பிள்ளையும் ஆயிடுச்சு. குழந்தைகிட்ட கூட இவளை அண்ட விடாம தனிமைப்படுத்தி அராஜகம் பண்ணியிருக்கா. வரதட்சணை கேட்டு அடிக்கடி அப்பா வீட்டுக்கு அனுப்பியிருக்கா. அவ அப்பாவும் முடிஞ்சதை செஞ்சு இவ வாழ்க்கையை காப்பாத்த போராடியிருக்கார்.

அந்தப் போராட்டத்துலயே மனுஷன் மண்டைய போட்டுட்டாராம். யாருமில்லைன்னு ஆனதுக்கப்புறம் மாமியார் இவள ரொம்ப கொடுமைப்படுத்தியிருக்கா. இதுக்கிடையில புருஷன் சிங்கப்ப+ருக்கு வேலை கிடைச்சு போயிருக்கான். அதுக்கப்புறம் இவ பட்ட கஷ்டம் கொஞ்ச நஞ்சமில்லை. குழந்தையை இவகிட்டேயிருந்து பிரிச்சே வச்சதாலே மனநிலை பாதிக்கப்பட்டிருக்கு. பைத்தியம் புடிச்சுட்டுதுன்னு பிள்ளைக்கிட்ட சொல்லிட்டு ஒரு ரூம்ல இவள அடைச்சு வச்சிருக்கறா. பிள்ளை சம்பாதிச்சு அனுப்புறதை எல்லாம் ஏக போகமா அனுப்பவிச்சுண்டு பேரனை அவளே வளர்த்திருக்கறா. இந்த சூழ்நிலையில தான் ஒரு நாள் இவ வீட்டை விட்டு தப்பி வந்திருக்கா.

அப்புறம் எப்படி மன்னார்குடி வந்தாள்ன்னு தெரியலை. நாங்க பார்த்தோம் கூட்டிண்டு வந்தோம். இவள பத்தின விவரங்கள் தெரிஞ்சதும் ஆஸ்பத்திரியில பக்கத்து வீட்டுப் பெண்ணைத் துணைக்கு வச்சுண்டு எங்க சம்மந்தியோட நானே ஸ்ரீரெங்கத்துக்கு நேராப் போனேன். அவ, புக்காத்தத் தேடி போனோம் அங்க யாரும் இல்லை. பக்கத்துல விசாரிச்சா, அகிலாண்டத்தோட மாமியார் செத்ததுக்கப்புறம் அவ புருஷன் மகனையும் கூட்டிண்டு சிங்கபூருக்கே போயிட்டானாம். அங்க ஒரு சீன பொம்பளையை கல்யாணம் பண்ணின்டு அப்படியே செட்டில் ஆயிட்டானாம். வீட்டையும் வித்துட்டதா சொன்னா.

அவனோட நம்பர் வாங்கி சம்மந்தி பேசிப் பார்த்தார். அகிலாண்டம் உயிருக்கு போராடிண்டு இருக்கிறதைச் சொன்னார். பிள்ளைய பார்க்கணும்னு அந்த தாயுள்ளம் தவிக்கறதைச் சொன்னார். எதிர்முனையில் எந்த பதிலும் இல்லை. நானும் பேசிப்பார்த்தேன்;. அகிலாண்டம் சாகறச்சே கொள்ளிப்போட பிள்ளை இருந்தும் அநாதையாப் போயிடப்படாது, அது ரொம்பப் பாவம் அப்படின்னு எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ‘அகிலாண்டம்னு யாரையும் எனக்கு தெரியாதே, ராங் நம்பர்’ன்னு ஒரே வரியில் சொல்லி போனை வச்சுட்டான் அந்தக் கடங்காரன்.

அவ அப்பா வழியில யாராவது உறவுக்காரா இருக்கறாளான்னு விசாரிச்சுப் பார்த்தோம். அகிலாண்டம் மனசு பாதிச்சு ஊர் ஊரா சுத்த ஆரம்பிச்சதுமே அவாள்ளாம் இவளை சொந்தக்காரா பட்டியல்லயிருந்து நீக்கியிருக்கணும். எல்லோரும் நமக்கெதுக்கு வம்புன்னு ஒதுங்கிட்டா. வேற வழியில்லாம ஏமாற்றத்தோட ஆஸ்பத்ரிக்கு திரும்பி வந்தேன்.

உயிர் பிரிஞ்சு அரை மணி நேரம் ஆச்சுன்னு பக்கத்து வீட்டுப் பொண்ணு சொன்னா. சம்மந்தி உதவியோட எல்லா காரியமும் பண்ணினேன். சாகறப்போ தன் பிள்ளைய நினைச்சு எப்படி ஏங்கினாளோ? சித்தப் பிரமையா இருந்தாலும் தாய் மனசு இல்லையா?. அந்த விஷயத்துல என்னால அவளோட கடைசி ஆசையை நிறைவேத்த முடியலை. அதை நினைச்சா இப்பவும் நேக்கு மனசு வலிக்கும்”.

நான் தேடிவந்த பாட்டுமாமியை பற்றிய விஷயங்களும் அவளின் முடிவும் எனக்குள் சொல்ல முடியாத சோகத்தைக் கிளறியது. கொஞ்ச நேரத்திற்கு நான் எதுவும் பேசவில்லை. பத்மினி அம்மா தொடர்ந்தார்.

‘நோக்கு ஞாபகம் இருக்கிறதா மலர்? அகிலாண்டம் வடையை பார்த்தா கோபப்பட்டு கத்துவாளே ஏன் தெரியுமோ? அவளோட பக்கத்தாத்துப் பெண் சொன்னா. மாமியார் முதல்ல இவளை காது கேட்காத செவிட்டு மாட்டுப்பொண்ணுன்னு தான் திட்ட ஆரம்பிச்சுருக்கா. அவங்க அப்பா மெஸ் வச்சிருந்தாரு இல்லையா. அப்ப கடையில மீந்துடற உளுந்து வடையை வீட்டுக்கு எடுத்துண்டு வருவாராம். பல நாள் இவ அதையே சாப்பாடு மாதிரி சாப்பிட்டுட்டு தூங்கிடுவாளாம். இத தெரிஞ்சுண்ட இவ மாமியார் உளுந்து நிறைய சாப்பிட்டதால தான் செவிடு ஆயிடுத்துன்னு சொல்லிண்டே இருந்திருக்கா. அது இவ மனசுல ‘உளுந்து வடை தான் நம்ம எல்லா பிரச்சனைக்கும் காரணம்’ அப்படீன்னு ஆழமா பதிஞ்சுருக்கு. ஒரு நாள் சுவாமிக்கு நைவேத்யம் பண்றதுக்கு வச்சிருந்த வடையை எடுத்து வாசல்ல கொட்டியிருக்கா. அன்னேலயிருந்துதான் அவளை பைத்தியம்ன்னு மாமியார் எல்லார்கிட்டேயும் சொல்லியிருக்கா. உளுந்து பொம்மநாட்டிகளுக்கு இடுப்பு பலத்துக்கு நல்லதுன்னு சொல்லுவா. உண்மையிலயே உளுந்துக்கு காதை செவிடாக்குற குணம் இருக்கா என்ன?”

பத்மினி அம்மா என்னிடம் கேட்டார். எனக்கு பதில் சொல்லப் பிடிக்கவில்லை. மனம், மூளை இரண்டிலும் பாட்டுமாமியின் முகம் தான் நிறைந்திருந்தது. பத்மினி அம்மாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினோம்.

‘இந்த பக்கமா வந்தா அவசியம் வீட்டுக்கு வாங்கோ. அம்மாவை நான் ரொம்ப விஜாரிச்சதா சொல்லு”. வாசல் வரை வந்து வழியனுப்பினார்.

காரில் ஏறி அமர்ந்தேன். செல்லும் வழியில் எதிர்பட்ட வயல்களும், மரங்களும், ஓட்டு வீடுகளும் பால்ய பிராயத்தின் மலரும் நினைவுகளை மடியில் கொட்டின. நாங்கள் குடியிருந்த அந்த வளவு வீடு, லலிதாம்மா வீட்டுக் கொல்லைப்புறம் என நினைவடுக்குகளில் கறுப்பு வெள்ளைகளாகப் பதிந்திருந்தவை காட்சிகளாக விரிந்;தன.

பெற்ற பிள்ளை கையால் கொள்ளி வாங்கும் பாக்கியம் கூட இல்லாமல் போகும் அளவுக்கு அந்தப் பாட்டுமாமி என்ன பாவம் செய்தாள்?

‘பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர்

புண்ணியமின்றி விலங்குகள் போல்“

பாகவதரின் பாடல், பாட்டுமாமியின் குரலில் எங்கோ தூரத்தில் கேட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *