விரல் ஆட்டும் வேட்பாளர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 5, 2014
பார்வையிட்டோர்: 15,479 
 

நாங்கள், மாடிவீட்டு ஒன்றில், வாடகையில் குடியிருந்தோம். நாங்க குடிப்போன வேலை, நாட்டில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு; வாக்காளர்களிடம் வேட்பாளர்கள், ஓட்டு சேகரப்பில், தீவிரமாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்கள். நாங்கள் குடியிருந்த பகுதிக்கும், அன்று ஒரு வேட்பாளர், திறந்த வெளி ஜீப்பில் வந்துக்கொண்டிருந்தார். அவர் வரும் ஒலிபெருக்கி சத்தம் கேட்டு, நான் மாடியில் இருந்து எட்டிப்பார்தேன். அவர் கீழே இருந்து என்னைப் பார்த்தார். அவர் கையைக் காண்பித்தார். நானும் என் கையைக் காண்பித்தேன். அவர் இரு விரல்களை மட்டும் மடக்காமல் பிற விரல்களை மடக்கி காண்பித்தார். நான் தலையாட்டினேன்.

அவ்வேட்பாளர் அப்படி காண்பித்ததும் எனக்கு பள்ளியில் படித்த ஞாபகமே வந்தது. என் கணக்கு வகுப்பில், மல்லிகா டீச்சரே என் கண்முன் வந்தார். நாங்க வெளியேப் போகனும் என்று முடிவெடுத்தால் உடனே எழுந்து, “டிச்சர்..” என்போம். அவர், “என்னங்கடா..” என்பார். நாங்க, எல்லா விரலையும் மடக்கி, ஆட்காட்டி விரலை மட்டும் நீட்டி காட்டுவோம். அவர், “போ, போ..” என்பார். நாங்க வெளியே ஓடுவோம். வராத அந்த காவேரி நீரை வலுக்கட்டாயமாக வரவைக்க முயல்வோம். அதுவும் வேண்டா வெறுப்பாகதான் வரும். அக்காவேரி நீர் பட்டதும் வரண்ட அச்செம்மண் பூமி, அப்படியே நீரை இழுத்துக் கொள்ளும். நேரம் கழித்து, ஒரு வழியாக நீரை வெளியேற்றிய சந்தோசத்தில், வகுப்பில் போய் அமர்வோம். அதற்குள், மல்லிகா டீச்சரின் அன்றைய கணக்கு வகுப்பு முடிவுக்கு வரும். அவரும் போய்விடுவார். சில நாள், நான் காலை கடன் கழிக்காமல் பள்ளிக்கு சென்றுவிடுவேன். மல்லிகா டீச்சர் வரும்வரை எல்லாம் சரியாகதான் போய் கொண்டிருக்கும். அவர் வகுப்பு எடுக்க ஆரம்பிப்பார். அதுவும் என் மேல் அவருக்கு என்னதான் தீராத கோபமோ… என்னையே குறிப்பிட்டு கேள்வி கேட்பார். நானும் அவர் வகுப்பை தவிர்க்கவே என் விரல் வித்தையை காண்பிப்பேன். அந்த வகுப்பிலே விரல் வித்தை ஆரம்பித்து வைத்ததே நான்தான், அதனால், எனக்கு ‘விரல் வித்தை வித்தகன்’ என்ற பட்டப் பெயரே இருந்தது. அவர் என்னை கேள்விக் கேட்பதற்கு முன்னே என் விரல் வித்தையை ஆரம்பித்துவிடுவேன். அன்று அவர் அல்ஜிபிரா எடுக்க ஆரம்பித்தார். எனக்கு அல்ஜிபிரா என்றால் அடிவயிரு உண்மையாலுமே கலக்க ஆரம்பிக்கும். அன்று நான், காலை கடன் வேற கழிக்காமல் வந்துவிட்டேன். அவர் அல்ஜிபிரா, எடுக்க, எடுக்க… எனக்கு கலக்க ஆரம்பித்துவிட்டது. என்னால் முடியவில்லை, தீடிர் என்று வானில் மின்னல் மின்னுவதுப்போல் எழுந்துவிட்டேன். குரலை உயர்த்தி “டீச்சர்….” என்றேன். அவர் கடும் கோவத்துடன் என்னைப்பார்த்து, “என்னடா..” என்றார். நான் எதுவும் பேசாமல், என் கை விரல்களை மடக்கி, அதில் இரண்டு விரலை மட்டும் விரித்து, உயர்த்தி காட்டினேன். அவர், “கழுத, கழுத… இதேல்லாம் வீட்டிலையே முடிச்சுட்டு வரக்கூடாதா… போ போ… இதுங்கேல்லாம் எங்க படிக்க வருதுங்க, பே..? வருதுங்க” என்று சொல்லிகொண்டே என்னை விரட்டினார். எனக்கு விட்டால் போதும் என்று, டவுசரையும் ஒரு கையால் பிடித்துக்கொண்டு, வேகமாக ஓடினேன். நான் முன்பு தண்ணீர் பாய்ச்சிய அதே இடத்தில், மண்ணுக்கு உரமும் இட்டேன். பிற்காலத்தில் அந்த இடத்தில் ஒரு மரமும் வளர்ந்தது. அது வேற கதை…

இப்படி விரல் வித்தை வித்தகனாக இருந்த எனக்கே, அந்த வேட்பாளர் விரித்து காட்டியதும், நான் வியந்துப் போனேன். அதுவும் அவர் பேன்டை பிடித்துக்கொண்டே காண்பித்தார். இதை மட்டும் மல்லிகா டீச்சர் பார்த்திருந்தால்.. என்ன சொல்லிருப்பாங்க, என்று நினைத்துக்கொண்டு சிரித்தேன்.

வேட்பாளர் காட்டிக்கொண்டே போனார். நானும் என் கையின் விரல்களை விரித்தும், விரிக்காமலும் காண்பித்தேன். வேட்பாளர் குழப்பம் அடைந்து அவர் எனக்கு கும்மிடுப் போட்டார். நான் தலையை மட்டும் ஆட்டினேன்.

தேர்தல் வந்தது, ஒரு வேலை நேட்டோ படை, நம் இந்தியா மீது போர் தொடுத்தால், நம் மக்களாட்சி என்ன ஆவது.? என்று பயந்துக்கொண்டே, நானும் வாக்களித்தேன்.

சில மாதங்கள் சென்றன, என் தொகுதியில் மக்கள் பிரச்சனை, நீண்ட நாளாக எங்கள் நொகுதியில் ஒரு ஆலை மூடியே இருந்தது. என் தந்தையும், அதில் வேலைச் செய்து வந்தார். அவ்வாலை மூடியதால், என் தந்தைக்கும் வேலை போய் விட்டது. இது போல பல பேரும் அவ்வாலையில் வேலை செய்து வந்தனர். மீண்டும் அவ்வாலை திறக்கனும் என நாங்கள் முடிவுச் செய்து, எங்கள் பகுதி எம்.எல்.ஏ விடம் போய் மனுக் கொடுத்தோம். அவர் சொன்னார், “இது இந்தியா அரசின் உதவி பெற்று இயங்கும் ஆலை, இதை பாராளுமன்ற வேட்பாளரிடம்தான் தெரிவிக்கனும், நான் சொல்கிறேன்” என்றார். அவர் சொல்கிறேன் என்று சொன்னாரே தவிர எம்.பியிடம் சொன்னது போல தெரியவில்லை. பல மாதங்கள் சென்றன. எந்த நடவடிக்கையும் இல்லை. நாங்க நேரே, பாராளுமன்ற உறுப்பினரையே சந்தித்து விடலாம். என்று முடிவுச் செய்து அவரிடம் சென்றோம். அவர் வீட்டின் மதில் சுவர், இரண்டாள் அடி உயரம் இருந்தது. அதை ஒட்டியே பெரிய கேட் ஒன்று, அதன் அருகில், காவலாளி ஒருவர் நின்றுக்கொண்டிருந்தார். நாங்க அவரிடம் வந்த விபரத்தை சொன்னோம். அவர், “எம்.பி வருவார், காத்திருங்க..” என்றார். நாங்க காத்திருந்தோம், எம்.பி வரவில்லை. அங்க இருந்த மரத்தடியில் நாங்க உட்கார்ந்து, அவர் வீட்டின் மாடியே பார்த்துக்கொண்டிருந்தோம்.

காலை மணி, 11 யை தாண்டிக்கொண்டிருந்தது. எம்.பி யின் மேல் மாடி வீட்டின், கதவு திறக்கப்பட்டு, எம்.பி தூக்க கலைப்புடன், சோம்பல் முறிதுக்கொண்டே அங்கு நின்றார். நாங்கள் எழுந்து நின்றோம், நண்பன், “தலைவா..” என்றான். மேலும் அவன், கைவிரல்களை மடக்கி, இரு விரல்களை மட்டும் விரித்து, உயர்த்தி ஆட்டினான். ஆனால் எம்.பி கையை மட்டும் ஆட்டினார். பின் உள்ளே போய்விட்டார். ஒவ்வொரு முறை நாங்க அவர் வீட்டுக்குச் செல்லும் போது, அதுவேதான் நடக்கும். ஒரு முறை என்னையும், என் நண்பன் விரல் காட்ட சொன்னான். “எனக்கு வயிறு கலக்கவில்லைடா, நான் காலையிலே போய்டேன்” என்றேன். அவன், “டேய், அது அப்போ, அது வேற, இது வேற, …ம்ம் காட்டு” என்றான். நானும் என் மக்களுக்காக காண்பித்தேன். எம்.பியும, அதே பழைய பாணியில் ஆட்டினார்.

இப்போது அவர் வேகமாக ஆட்டிவிட்டார். அவர் ஆட்டும் போதே, அவர் வேட்டி அவிழ்ந்துக்கொண்டது. ஒரு கையால் அவிழ்ந்த வேட்டியை பிடித்துக்கொண்டே உள்ளே போய் விட்டார். எனக்கு சந்தேகம், ஒரு வேலை நான் ஆட்டியதால், அப்போது என் டவுசர் கழண்டது போல, இப்போது இவருக்கு வேட்டி கழன்றுவிட்டதா என்று.. நினைத்துச் சிரித்தேன், என் நண்பன் என்னைப் பார்த்து முறைத்தான். “பாரு போய்ட்டாரு” என்றான். “ஆமா போய்ட்டாரு, இப்போ பாத்துரூமுக்கு போயிருப்பாரு, அதுக்கென்ன” என்றேன். அவன் எதுவும் பேசவில்லை. ஆனால் உள்ளே சென்றவர் மீண்டும் வரவேயில்லை. கடைசிவரை நாங்க எம்.பியை பார்த்து பேசவே முடியவில்லை.

சில வருடங்கள் கழிந்தன, இப்போது மறுபடியும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. “வேட்பாளர் உங்கள் இல்லம் தேடி வருகிறார். அவருக்கு உங்க பொன்னான வாக்குகளை அளியுங்கள்” என்று ஒலிப்பெருக்கியில் ஒலித்துக்கொண்டே வந்தார்கள். நான், அதே மாடிவீட்டில் இருந்து பார்த்தேன். வேட்பாளர் வந்தார். இப்போது வேட்பாளர் அவர் இல்லை, புதிய வேட்பாளர் ஆனால் அப்பதிய வேட்பாளர் அருகிலே அந்த பழைய வேட்பாளரும் இருந்தார். இப்போது அவர்கள், எங்க வீட்டு அருகில் வந்தார்கள். அவர், மாடிவீட்டின் மேலே, நான் இருப்பதை பார்த்துவிட்டு, இரு விரல் விரித்து ஆட்டினார். நான் கையை ஆட்டவில்லை. பார்த்துக்கொண்டே இருந்தேன். ஆனால், அவர் மட்டும் ஆட்டிகொண்டே இருந்தார். அவர் அருகில் இருந்த பழைய வேட்பாளர் என்னை காண்பித்து, அவரிடம் என்ன சொன்னார் என்று தெரியவில்லை, இப்போது அவர், வேகமாக ஆட்டினார். நான் முறைத்துக்கொண்டே இருந்தேன். அவர் முனுங்கிக் கொண்டே சென்றுவிட்டார்.

நாங்க ஒரு நாள் மேலிருந்து ஆட்ட, அவ்ர்கள் கீழ் இருந்து ஆட்டுவது. பின் அவர்கள், ஐந்து வருடம் மேலிருந்தே ஆட்டுவது, அதை நாங்க கீழ் இருந்தே பார்பது. மறுபடியும் அவர், ஒரு நாள் கீழ் இறங்கி வருவது பின் ஆட்டுவது. இப்படிதான் எளிய மக்களை ஆட்டோ, ஆட்டேன்று ஆட்டிவைக்கிறார்கள். இதனால், நாட்டில் நித்தமும் ஆடிக்கொண்டுதான் போகிறது. மக்களாட்சியின் மகத்துவம், விரல் ஆட்டும் வேட்பாளரால்…!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *