தண்ணீர் டேங்கி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 31, 2018
பார்வையிட்டோர்: 16,319 
 

பக்ரி; யாராலும் எளிதில் சந்திக்க முடியாத ஒரு பிசியான மனுசன். அப்படியே சந்தித்துதான் ஆகவேண்டுமென்றால் ஊருக்குள் நடக்கும் இரண்டு விசேஷங்களில்தான் ஆளைக் காணாலாம்!.

ஒன்று திருமண வீடு, இன்னொன்று எழவு வீடு. இந்த இரு வீடுகளில் ஏதாவது ஒன்றில் ‘உதவி ஒத்தாசை பன்னுவதற்காக போயிருப்பாரு’னு மட்டும் நினைச்சுடாதிங்க அங்கெல்லாம் நடக்கும் பிரியாணி விருந்துக்கு அழையாத ரெகுலர் விருந்தினர் நம்ம பக்ரி.

உடல் கட்டுகோப்பின் பிதாமகன்கள் என்றால் ஹொலிவூட்டின் ‘சில்வர்ஸ்டானோ,வொலிவூட்டின் அமீர்கான்’னு சிலரை உதாரணம் சொல்வார்கள் ஆனால் தொந்திக்கு உதாரணம் சொல்வதென்றால் தொப்பையின் பிதாமகன் நம்ம பக்ரிதான்!.

போகின்ற இடமெல்லாம் வஞ்சகமில்லாமால் கொட்டிக்கொள்ளுவதாலவோ என்னவோ நிறைமாத கர்ப்பிணி உருவில் “அடேங்கப்பா”… என்று வியக்குமளவுக்கு தொப்பையை சுமந்துகொண்டு பைல்ஸ் வந்தவனைப்போலானான் பக்ரி.

எதிலும் கஞ்சத்தனம் கொண்ட பக்ரி குடும்பச் செலவைக்கூட வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் பாராளுமன்ற பட்ஜெட், கூட்டத்தைப்போலவே அமலி, துமலியுடன் வாசித்து முடிப்பான்.

இதனால் சில நேரங்களில் தேய்ந்தபோன செருப்புகளும், எவர் சில்வர் பாத்திரங்களும் பக்கிரியின், கபாலங்களை பதம் பார்க்கின்றபோது இதுதான் சாட்டுப்போக்குனு வெளிநடப்பு செய்துகொண்டு ‘எந்த வீட்டில் இன்று திருமணம்,எழவுனு மோப்பம் பிடித்து சென்ற வரலாறுகளும் உண்டு.

வழமைபோல் வயிறு முட்ட எங்கேயோ சென்று விருந்தோம்பல் கடமையை முடித்துவிட்டு, ஹோலில் உள்ள சாயிவு நாட்களில் மப்லர் உடைந்த ஆட்டோ சைலேன்ஸர் போன்ற சத்தத்துடன் குறைட்டை இட்டுக்கொண்டு, பிரியாணியும்,பிரயாணமும் கொடுத்த அசதியில் ஆழ்ந்த தூக்கத்திலிருந்தான் பக்ரி.

பக்கத்து வீட்டில் சிறுவன் ஒருவன் தண்ணீர் டேங்கியொன்றை(தண்ணீர் தொட்டி) கழுவிக்கொண்டிருந்ததை பார்த்துவிட்ட பக்ரியின் மனைவி, ‘தங்களுடைய டேங்கியையும் கழுவித்தறுமாறும், கூலி தருவதாகவும்’ கூறினாள்.

சரியென்று அந்த வீட்டின் தண்ணீர் டேங்கியை கழுவி முடித்துக்கொண்டு இறங்கிவந்த சிறுவன் “உங்களோட பிளாஸ்டிக் டேங்கில் குனிந்து கழுவுவது கொஞ்சம் கஷ்டம், 150ரூபாய் கூலி கொடுத்தால் கழுவித் தருகிறேன்” என்றான்”

“இல்லை 100ரூபாய்தான் தருவேன் தம்பி பார்த்து செய்ப்பா” என பக்ரியின் மனைவி பேரம்பேசிக் கொண்டிருக்கும்போதே ‘”ரூபாய்'” சவுண்ட் கேட்டதுமே கஞ்சன் பக்ரி திடுக்கிட்டு எழுந்த உஷாரிக்கொண்டான்.

தொப்பையை தடவியபடி எழுந்து வந்த பக்ரி, “எனக்கு தெரியாமல் பணப்புழக்கமா? எதுக்கு இந்த பணப் பட்டுவாடா?” லஞ்ச ஊழல் தடுப்பு போலீஸின் பாணியில் கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைந்தெடுத்தான் தன் மனைவியை.

தண்ணீர் டேங்கி கழுவும் விபரத்தை அவள் கூறியதும், ‘அடடா 100ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கவில்லையே இப்ப என்ன பண்ணலாம்!’ என நீண்ட நேரம் யோசித்துவிட்டு “ஆம்பலனு நான் ஒருத்தன் இங்கு இருக்கேன்…! போடா டேய்”னு அந்த சிறுவனுக்கு தலையில் அரையொன்றை போட்டு விரட்டிவிட்டான் பக்ரி.

மனைவியின் கொடூரமான ரியாக்ஸனை புரிந்துகொண்ட பக்ரி அடுத்து இடம்பெறவிருந்த செயற்கை அனர்த்ததை தடுக்கும்விதமாக லுங்கியை அவிழ்த்து எரிந்து விட்டு போட்டிருந்த ஜம்பருடன் தாவி வீட்டின் மேல் ஏறி, டேங்கியை சென்டைந்தான்.

“நம்ம புருஷன் கஞ்சனாக இருந்தாலும் அறிவாளி” என மனதுக்குள் மெச்சிக்கொண்டாள் பக்ரியின் மனைவி.

‘நெஞ்சிருக்கும்வரை’ சைசை ஒற்ற பிளாஸ்டிக் டேங்கியின் இரு பக்கமும் கைகளை அழுத்தியபடி தன்னுடை நிறைமாத கர்ப்பிணியாட்டமுள்ள தொந்தியை உப்பிக்கொண்டு அசால்டாக உள்ளே இறங்கிகொண்டான் பக்ரி.

மனைவி வீசிய துடப்பம், துண்டுகளை லாபகரமாக வாங்கி குனிந்து கழுவத்தொடங்கினான் பக்ரி. அடிக்கடி எழுந்து நின்று கீழே நின்றிருந்த மனைவியைப் பார்த்து “ஹே பார்த்தாயா 100ரூபாய் போகப் பார்த்துச்சே நல்லவேளை தப்பிச்சது. ம்… யாருக்கிட்ட… எங்ககிட்டவா..?! ” இப்படியே ஒரு பத்து தடவையாவது சொல்லிக்கொண்டான்.

கழுவி முடிந்ததும் டேங்கியின் மேலே ஏறுவதற்காக முயற்சி செய்த பக்ரிக்கு அதிர்ச்சியொன்று தொப்பை ரூபத்தில் காத்திருந்தது .

“இறங்கியதும் உப்பிக்கொண்ட தொப்பை ஏறும்போது உப்பிக்கொள்ளமுடியவில்லையே!…. “”

‘நியூற்றனின் 3ம் விதியில்கூட இந்தவொரு ஆய்வு இடம்பெற்றிக்க வாய்ப்பில்லை…, அது சரி அவரு காசுக்கு கஞ்சத்தனம் பார்த்திருந்தா நாம ஏன் இப்படி அவஸ்த்தை பட்டிருக்கப்போறோம் என்று தன் நிலையை நினைத்து ஏதோதோ சொல்லி புலம்பிக்கொண்டான் பக்ரி.

மனைவியும் முடிந்தளவுக்கு கீழேயிருந்து ஐடியாக்கள் கொடுத்தும் எந்தவொரு நல்ல முடிவுக்கும் தொப்பை விட்டுக்கொடுப்பதாக இல்லை.

நீண்ட நேர முயற்சி பலனளிக்கவில்லை என்றதும் பக்ரியின் அலரலில் அயலவர்களும் கூடிவிட்டனர்.

ஊரில் இருந்த அறிவாளிகள் மூன்று பேர் ஏறிச்சென்று பக்ரியை வெளியே எடுக்க முயற்சி செய்தும். ‘ம்ஹூம்…’ அதுவும் தோல்விலேயே முடிந்தது. இறுதியில் மூன்று அறிவாளிகளும் ஓட்டின்மேல் நின்று மீட்டிங்கொன்றைப் போட்டு ஒரு முடிவுக்கு வந்தனர்.

டீவி ஆண்டனாவின் பிடிமாணம் போன்று இரு கைகளிலும், கழுத்திலும் கயிற்றை கட்டி மேலே இழுத்துப் பார்த்தனர் ஒரளவுக்கு திட்டம் நிறைவேரும்போது பக்ரியின் தொப்பை வீம்பு பன்னியது.

ஒரு பக்கம் நிரபராதியான பக்ரிக்கு தூக்குதன்டனை பாணியில் விடுதலை முயற்சி மேற்கொள்ளப்படுவதை பார்த்த மக்களெல்லாம், மூன்று அறிய வகை அறிவாளிகளுடைய அசாத்திய திறமையை நினைத்து பூரித்துப்போனார்கள் .

சம்பவத்தை கேள்விப்பட்டு ஒடோடி வந்த நாசா,அப்பலோவில் பணி செய்யக்கூடிய திறன்படைத்த!!! பக்ரியுடைய தகப்பனார், கொண்டுவந்த மரம் அறுக்கும வாளுடன் மேலிருந்த மேதாவிகளுடன் தானும் இனைந்துகொண்டார்.

பக்ரியை பார்த்து “டேங்கி முக்கியமா? உன் உசுரு முக்கியமா?” என்று கேட்டார்.

“அய்யா அப்பாச்சாமி என்னை எப்படியாவது வெளியே கொண்டுவந்துடுங்க புன்னியமா போகும்” என அழுதுகொண்டே சொன்னான் பக்ரி.

மறுகணம் டேங்கி இரண்டாக பிளக்கப்பட்டு டைனோசர் முட்டையிலிருந்து வெளியே வந்த குட்டி டைனோசர் போன்று மறு பிறவி எடுத்து வந்தான் பக்ரி. ‘100ரூபாய்க்கு கஞ்சத்தனம் பார்த்த விளைவு அய்யயோ 10,000ரூபாய் டேங்கி போச்சேனு’ இரண்டாக பிளக்கப்பட்ட டேங்கியை தடவிக்கொண்டே புலம்பினான்.

யாரோ கீழே நின்றுகொண்டு இந்த சம்பவங்களை பார்த்து சத்தமாக சிரிப்பதை உற்று கவனித்தான் பக்ரி.

குச்சி ஐஸ் ஒன்றை சுவைத்தபடி ஒரு கையை பக்ரியை நோக்கி நீட்டி “இதோ பார்ரா டேங்கி கழுவுர மூஞ்சை… 100க்கு, 10,000ம் போச்சா…? என்று மேலும் சத்தமா சிரித்தான் பேரம் பேசி அடித்து விரட்டப்பட்ட சிறுவன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *