கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 11,979 
 

ஐந்துநாளும் வேலை, விடியற்காலை போனால் பின்நேரம்தான் வீடு. சனி ஞாயிறு நின்மதியாக நித்திரை கொள்ளுவோம் என்று நினைத்தால் சடங்கு, சம்பிரதாயம் எண்டு ஏதாவது வந்துவிடும் அவற்றுக்கொன்றே பிறிம்பாக உழைக்கவேணும். செக்கில் கட்டிவிட்டமாடாய் உழன்றாலும் காசாவது மிஞ்சுகிறதா? அதுவும் இல்லை. உழைத்து உழைத்துக் கடனைக்கடியும் கடனாளியாய் சாகவேண்டியதுதான் விதி.

மேமாதத்தில்தான் பியொர் எண்ற மரம் இங்கே பூத்துத்தள்ளும். அதன் மகரந்கங்கள் கண்ணைக்கடிக்கும், மூக்கால் வழியும், நெஞ்சு இழுக்கும், கடசியில் குரல்வளையை நெரிக்கும், மூச்சுத்திணறும். இதுதான் என் மே மாதவாழ்க்கை. ஏதோ எங்கள் நாட்டில் இல்லாதபூக்கள் என்று இந்தமரம் நினைத்ததோ என்னவோ? இந்நாட்டுப் ப+க்களின் மகரந்தங்களே ஒவ்வாமையாகும் போது நாடு எப்படி ஒத்துப்போகும்? மகரந்தங்களின் புரதம் எனக்கு இரசாயணத்தாக்கம். நாங்கள் செத்தாலும் பறுவாயில்லை இவர்களுக்கு மரங்கள் வேணும். இந்தமரங்களை வெட்டியும் எறியமாட்டார்கள், ஆனால் மனிதர்களுக்கு மருந்து கொடுத்துக் கொல்லுவார்கள். மாசியில் ஒருபூண்டு பூக்கக் கடிக்கத் தொடங்கி மேயில் தான் உச்சக்கடி இது ஆவணி மட்டம் தொடரும். என்னடாவாழ்கை என்றாகிவிடுகிறது. வருடசத்திலை 6மாதம் இழுத்துதிழுத்தே சாகவேண்டியதுதான். போக்கத்தவர்களுக்கு போறவிடமெங்கும் பள்ளமும் திட்டியும்தான். கறுப்பன் என்கிறான் வெள்ளையன். வேலை இல்லை களுவித்தின் என்றான் இன்நாட்டவன். பூக்களே ஒருபடிதாண்டி இங்கிருந்தாயோ கொல்லுவேன் என்று அடம்பிடிக்கிறது. இந்தநாட்டுப் பாஸ்போட் நான் இந்தநாட்டவன் இல்லை. இலங்கையன் என்றாலும் அங்கு வாழவும் விசாவேணும். இந்த உலகில் எனக்கு நாடே இல்லையா?

இன்று சனி நிம்மதியாகத் தூங்கி எழுலாம் என்றால் சனியல் சனிபிடித்தமாதிரி ஒன்பது மணிக்கோ வீட்டிலை அமளி துமளி. நேரம் 12 நடுச்சாமல் இல்லை மதியம் 12. இன்னும் அலுப்புத் தீர்ந்தபாடில்லை. இந்த அலேயிக்கு மருந்தைப் போட்டால் மொச்சுக் கொண்டு வந்துவிடுகிறது.

‘பிள்ளையள் என்ன ஒரே சத்தமாகவும், அமளி துமளியாகவும் இருக்குது நின்மதியாக ஒருநாளாவது நித்திரை கொள்ளவிடமாட்டியளோ’

‘அப்பா இப்ப நேரம் என்ன எண்டு தெரியுமோ? என்ன நாள் எண்டாவது தெரியுமோ? தங்கைச்சி குழந்தைகள் ஊர்வலத்துக்குப் போட்டு வந்தும் விட்டாள்’ இது மூத்தவள்.

பிள்ளைகளின் கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நிலைமையில்தான் நாம் இருக்கிறோம். குழந்தையில் இருந்து கேட்கத் தொடங்கிய கேள்விகள் இன்னும் நின்றபாடில்லை.

‘ஒ ஓம்பிள்ளை இண்டைக்கு மே 17. உங்கடை தேசியதினம்…சீ… நோர்வே நாட்டின் தேசியதினம்’

‘எங்கடை இல்லையப்பா உங்கடையும் தான்’

‘அது எப்படியடி என்ரையாக ஏலும்’

‘இண்டைக்கு நோர்வே அடிப்படைச்சட்டம் இயற்றிய திருநாள். சட்டத்தை மதிக்கும் அனைவரும் கொண்டாடும் பெருநாள். இந்தச்சட்டத்தை வைத்துத்தான் உங்களுக்கும் அகதி எண்ட அந்தஸ்துக்கிடைச்சது, நோவேயியன் என்ற பாஸ்போட்டும் கிடைச்சது. இதை மறந்து போகாதைங்கோ. நீங்கள் தான் சொல்லுவியளே என்னன்றி கொன்றார்க்கும் என்று ஏதோ ஏதோ எல்லாம்’

இன்று மே 17 நோவேயியச்சட்டம் 1814ல் இயற்றப்பட்ட நாள். உலகில் எங்குவாழ்ந்தாலும் இத்திருநாளை அனைத்து நோவேயிர்களும் கொண்டாடுவார்கள். இன்று 200 ஆவது ஆண்டு, சொல்லவும் வேண்டுமோ. கொண்டாட்டங்கள் குதூகலங்கள் இன்னும் என்ன என்னவோ. கிட்லர் நோர்வேயை ஆக்கிரமித்தபோது இக்கொண்டாட்டம் அடியோடு மறுக்கப்பட்டது இருந்தாலும் அவர்கள் தம்மிடையே கொண்டாடுவார்கள். மௌமனமாக, வீடுகளுக்குள், மனங்களுக்குள், பொத்திப் பொத்தி கொண்டாடினார்கள். பிடிபட்டால் மரணதண்டனை.

இம்மண் அன்னிய ஆதிக்கத்தில் இருந்து மீட்கப்படும் வரை மௌனமாகக் கொண்டாடினார்கள். இந்த மே 17 வைத்தே இனத்தை ஒன்றுதிரட்டினார்கள். அனைவரும் வேறுபாடின்றி இணைந்தார்கள். இச்சட்டம் பேப்பரில் அல்ல மனங்களில் எழுதப்பட்டது. எழுதியசட்டத்தை மதிக்கிறார்கள் அதன்படி நடக்கிறார்கள், கொண்டாடுகிறாகள். மண்ணின் விடுதலை மனத்தில்தான் இருந்தது. இது மனதில் மண்ணின் மக்களுக்கு எழுதிய சட்டமாகவே இருந்தது. இச்சட்டம் அவர்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டவர்களுக்கும் பாதுகாப்பைக் கொடுகிறது. ஆனாலும் இச்சட்டத்தை மீற வந்தவர்கள்தானே நாங்கள். பொய்களால் பொலிசுக்குப் பூசை செய்துதானே பிரசாவுரிமை பெற்றோம். குழந்தையில் இருந்து பஞ்சதந்திரக் கதைகேட்டு வளர்ந்த எமக்கு சுத்துமாத்து என்ன புதியவிசயமா?
என்மக்களை எண்ணிப்பார்க்கிறேன் என்னுடல் கட்டிலுடன் ஒட்டிக் கொள்கிறது. எமது மக்களுக்கு ஏற்றசட்டம் எது? ஆண்ட இனத்துக்கு அரசோச்சச் சட்டம் இல்லாது போனது எப்படி? தமிழர்களின் சட்டம் எது? முஸ்லீம்களுக்கு இஸ்லாமியச்சட்டம், இலங்கைக்கு அரசின் சட்டம்? உலகில்; தமிழர்களுக்கு எது சட்டம்? எமக்கான பொதுச்சட்டம் எது? எம்மைக் கட்டுப்படுத்தும் பாதுகாக்கும் தமிழர்களை ஒன்றாக இணைக்கும் சட்டம் எது. அனைவரும் ஒன்றாக ஏற்கும் சட்டம் எது? கொடி எது? தமிழனுக்கான பொதுவானதளம் எது? அடையாளமா? எது அடையாளம்? மண்ணா? மக்களில்லாத மண்ணில் தமிழன் என்ற அடையாளம் எப்படி? நாடா? நாடில்லாத தேசிய இனங்கள் வாழ்கின்றனவே. யூதர்களும் மண்ணின்றிய தேசிய இனமாக வாழ்ந்தார்களே. இன்று குறுடர்களும் வாழ்கிறார்களே.

பொதுத்தளம் எது? மொழி தமிழ்….தமிழ். இந்தத்தமிழ் தமிழ்நாட்டிலேயே மேலைநாட்டு மோகத்தாலும், வேலைவாய்ப்பு தாகத்தாலும் துவம்சம் செய்யப்படுகிறதே. தமிழ்நாட்டிலேயே தமிழ்தெரியாத் தமிழர்கள். தமிழைவைத்து எப்படித் தளம் அமைப்பது? என்றாவது தமிழர்கள் தம்மை தமிழர்கள் என்று அடையாளப்படுத்தி உள்ளார்களா? தமிழர்கள் தாம் வந்தநாட்டையே அடையாளமாகக் கூறுகிறார்கள். பலநாடுகளில் குருடிஸ் இனத்தவர்கள் வாழ்ந்தாலும் அவர்கள் தம்மை நாடு சார்ந்து அடையாளப்படுத்தமாட்டார்கள். இனம்சார்ந்து குருடர்கள் என்பார்கள். எம்மினம் கெடுகிறேன் பிடிபந்தம் என்றால் என்ன தான் செய்யமுடியும்;?

நாம் எங்கே ஒன்றாக இணைவது. நாம் இணைவதற்கான பொதுத்தளத்தை எப்படி? எங்கே உருவாக்குவது? இது உருவாக்கப்பட வேண்டும். தமிழ் தமிழ் தமிழ் இது ஒன்றுமட்டுமே எமது அடிப்படை அடையாளம். ஆனால் இந்தத்தமிழ்; தமிழனாலேயும், வந்தேறிகளாலும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே. தூக்கி வாரிப்போட்டது எழுந்து கட்டிலில் இருக்கிறேன். மூத்தவள் அழகாக உடையணிந்தவண்ணம் என்படுக்கை அறையினுள்ளே நுளைய கடைக்குட்டியும் நடுவிலாளும் நோவேயிக்கொடியுடன் நுழைகின்றனர்.

அந்தக் கொடி என்கண்ணைக் குற்றவில்லை, கண்ணுக்குள் குற்றி நெஞ்சை இரணமாக்கியது. மனச்சாட்சி விழித்துக் கொள்கிறது. எனக்கு அடைக்கலம் தந்த நாட்டிலே, அக்கொடி மேலோ அன்றி நோர்வேயிர்கள் மீதோ எதிர்ப்போ, வெறுப்போ பொறாமையோ கிடையாது. எமக்கும் இல்லையே என்ற ஏக்கம் தான் என்னை இப்படி ஆட்டுகிறது. நானும் என்மக்களுடன் இவர்களைப்போல்….ஏன் முடியவில்லை?

‘டேய் மடையா! நோவேயிர்கள் சுதந்திரத்துக்காக மௌனமாகக் கூடப்போராடினார்கள், வென்றார்கள், தமக்கென ஒரு கொடியை உருவாக்கினார்கள். அதைக்கண்டு பெருமை கொண்டு அவர்களை வாழ்த்துவதை விட்டு விட்டு அவிகிறாயே. அடிமைப்பயலே’ மனம் மறுதலிக்கிறது. கூடிப் போராடமுடியாதவர்கள் தானே நாங்கள். இயலாமை இழிவுபடுத்தியது.

போராட்டம் முடிந்து விட்டது ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டது என்றார்கள். ஆனால் என்மனதில் அந்தப்போராட்டம் மெனமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. நோவேயியர்கள் நேர்மையாக தம்மக்களை, நாட்டை கருத்தில் கொண்டு போராடினார்கள். எந்த ஆயுதமும் தூக்காமலே கத்தியும் இரத்தமுமின்றி நாட்டை வென்றெடுத்தார்கள். நாம் எதிரிகளால் மட்டுமல்ல எம்மக்களாலுமே ஏமாற்றப்பட்டோம். நம்பிக்கை ஊசலாடுகிறது. ஏமாற்றியவர்களே மீண்டும் மீண்டும் பாதைகளை வகுக்கும் போது அந்தப்பாதையில் நாம் எப்படிக் காலடி எடுத்து வைப்பது? பாதைகளை எப்படி நம்புவது? பயணங்களை எப்படித் தொடர்வது? கொலுக்கொலுவாய் கொல்லப்பட்டபோதும் கண்ணீர்விட்டுக் கதறுபவர்கள் போல் நடித்தவர்கள் போரச்சாட்டி தம்காசுப்பைகளை நிரப்புவதிலேயே கண்ணாக இருந்தனர். யாரை நம்பி எந்தப்பிடிமானத்தை நம்பி நாம் மீண்டும் எம்கால்லைகளை வைப்பது. காலைகளைத் தொலைப்பது?

மூத்தவள் தொடர்கிறாள்

‘அப்பா நீங்கள் 17மே கொண்டாட்டத்துக்கு வாறீங்களா? இல்லையா’

இடையில் புகுந்து வயிரவருக்கு நாய்மாதி என்மனைவி ‘நீங்கள் என்னத்தைச் சொன்னாலும் கொப்பர் பிடித்த முயலுக்கு மூன்றுகால்தான். அவர் வரமாட்டார். அவரும் வரமாட்டார் உங்களையும் போகவிடமாட்டார். 30வருடத்துக்கு மேல் சேர்ந்வாழ்ந்த எனக்குத் தெரியாதோ. வாங்கோ நாங்கள் போவம் பிள்ளையள். அப்பற்றை கனவையும் கற்பனையையும் அவரே வைச்சிருக்கட்டும்’
‘இல்லையம்மா நீங்கள் போங்கோ. என்னால உங்களின் சுதந்திரக்காற்றுச் சுவாசிக்க முடியவில்லை. காற்றேங்கும் மகரந்தங்கள் கலந்திருக்குது, மனமிருந்தாலும் நுரையீரல் உங்கள் சுதந்திரக்காற்றை ஏற்கமறுக்கிறது. மருந்துபோட்டால் கூட கொல்லத்தானே நிற்கின்றன உங்கள் மகரந்தங்கள் ஒவ்வாமை…ஒவ்வாமை..எனக்கு எல்லாமே ஒவ்வாமை. நீங்களாவது ஒத்து வாழுங்கள். அலெயிக்காக மருந்து போடுகிறேன், வாழமுயற்சிக்கிறேன். மகரந்தங்கள் நிறுத்தப்படும் போதுதான் என் இழுப்பும் நிற்கும். இது இரண்டும் நடக்கக் கூடியதா என்று சிந்தி. கண்ணுக்கு, இமைக்கு, நெஞ்சுக்கு, சுவாசத்துக்கு என்று மருந்து மருந்தாய் இந்த மே மாதத்தில் போடுகிறேன்;. மருந்து கொடுத்தாலும் வாங்க முடியாத சுதந்திரம் அம்மா என் மனதில் இருப்பது. நீங்கள் போய் கொண்டாடுங்கள். ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள் இது இரவல் சுதந்திரம். இரவல்சேலையின் கொய்யகம்’

‘சுதந்திரம் என்பது ஒவ்வொரு உயிரினதும் பிறப்புரிமை என்று சொல்லித் தந்தவரே நீங்கள் தானே அப்பா. இப்ப நீங்களே இரவல் சுதந்திரம் என்றால்…? யாரோ சிலர் போராடவேண்டும் அவர்கள் போராடாது போனால் நாம் போராடவேண்டி வந்திருக்கும். இதுதானே உங்கள் நாட்டில் நடக்கிறது’

உங்கள் நாடு உங்கள் நாடு என்று மகள் சொல்லும்போதுதான் உணர்கிறேன். எனக்கும் என்பிள்ளைகளுக்கும் உள்ள இடைவெளியை.

‘இந்தச்சுதந்திரம் உனது நிலையானது என்று எண்ணுகிறாயா? நாளை உன்னை ஒருவன் கறுப்பு நாயே பேயே எனும் போது இந்தச்சுதந்திரத்தை நீ உணர்வாயா? இதைத்தான் நான் இரவல் சுதந்திரம் என்றேன்’

‘நிச்சயம் இச்சுதந்திரத்தை நான் என்றென்றும் உணர்வேன். மக்கள் வெறுக்கலாம், என்சுதந்திரத்தை யாரோ ஒரு புல்லுருவி அபகரிக்க எண்ணலாம். ஆனால் என்னைப் பாதுகாப்பதற்கு அடிப்படைச்சட்டம் என்னுடன் நிற்கும் அப்பா. அந்த அடிப்படைச்சட்டம் இயற்றப்பட்ட நாள்தானப்பா 17மே எனக்கு என் பிறந்தநாள் போன்றது. இச்சட்டம் அவர்களைத் தண்டிக்கும்’

எனக்குச் சிரிப்புத்தான் வந்தது அடக்கிக் கொள்கிறேன். அவர்களை இந்நாடு அப்படி வளர்த்துள்ளது. பிள்ளைகளின் அறிவு வளர்ந்திருக்கிறது. பிள்ளைகளை எண்ணிப் பெருமைக் பட்டுக்கொண்டாலும், காலவரிப்பாக காவுகொடுத்துவிட்டோமே என்று அடிமனம் தவித்தது. அன்னியம் எம்முள் கதிரைபோட்டு உட்கார்ந்து குசலம் விசாரித்துக் கொண்டிருந்தது.

‘மகளே சட்டம் தண்டனை கொடுக்கலாம். சட்டத்தில் ஓட்டைகளுடாக ஒழுகி ஓடிவிடுபவர்கள் பலர். மனிதன் உருவான காலத்தில் இருந்து இன்றுவரையும் தண்டனை கொடுத்துக் கொடுத்து சமூகத்தைத் திருத்த முயன்றார்கள். முடிந்ததா? மனதால் ஒருவன் திருந்தாதவரை எந்தச்சட்டத்தாலும் எந்தத் தண்டனையாலும் அவனைத் திருந்தவே முடியாது மகளே’

’அப்பா இப்படியொருவன் உருவாகக் கூடாது என்பதற்காவேதான் இந்த 17மே திருநாள். நாம் சட்டத்தை என்றும் மதிக்கிறோம் எம்நோவேயிச்சட்டத்துக்கு நாம் நேர்மையாகவும், அன்பாகவும், பணிந்தும் நடப்போம் என்பதை குழந்தைபிள்ளையில் இருந்தே ஊட்டிவளர்ப்பதுடன் அவர்கள் மனதிலும் பதியச்செய்து விடுகிறார்கள். வளர்ந்தபின்னர் இப்பிள்ளைகள் என்றும் அதையே கருத்தாகக் கொள்ளும். இதனால்தான் குழந்தைப்பிள்ளைகளுக்கே முன்னுருமையும், காலை ஊர்வலமும், அரசமாளிகையை நோக்கிப் போகிறது அங்கே அரசகுடும்பம் எமக்காகக் காத்திருக்கும். அப்பா… அப்பா இங்கே மக்களுக்காகத்தான் அரசன்’
எம்நாடு எம்மை இலங்கையர் என்று தட்டிக்கொடுத்து வளர்த்ததா? தமிழர் சிங்களவர் இந்து பௌத்தர் என்றுதானே இனம்பாட்டியது. வெறுப்பையும் காழ்புணர்வையும் தானே காட்டி வேட்டுக்களைச் சம்பாதித்தார்கள் அரசியில்வாதிகள். என்று நாம் இலங்கையர் என்று உணர்ந்தோம். எம்மை அப்படி உணரத்தான் விட்டார்களா?

அதிர்ந்து போகிறேன். இந்த ஒருதிருநாளின் பின்னால் இவ்வளவு இருக்கிறதா? இந்த ஒருநாளுக்காகவே ஆயிரக்கணக்கில் செலவிட்டு, பெறுமதியான தேசிய உடைகளை பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள். நாம் மறந்து விட்டோம், தமிழ்குழந்தைகளை மறந்துவிட்டோம், உண்மையில் எம்மெதிர்காலத்தைத் தொலைத்து விட்டோம். வந்தநாடுகளில் நாம் கற்றுக்கொண்ட நல்லவற்றையாவது மறக்காமல் இருப்போமா? மொழிகளில் நாம் படிப்பது தூசணை வார்த்தைகள் தானே. கனியிருக்கக் காய்கவர்ந்தற்று. வெக்கிப் போகிறேன்.

‘நீ சொல்வதில் நியாயமும் ஆழமான உண்மையும் இருக்கிறது. பெருமைப்படுகிறேன் மகளே! இந்தநாட்டுக்கும், சட்டத்துக்கும், நேர்மையாகவும் அன்பாகவும் இருக்கிறாய் என்பதில் மகிழ்ச்சிதான், இருந்தும் அடிமனதில் ஒரு கீறல், இரத்தக் கண்டல் இருக்கிறது மகளே. எனக்கும் இப்படி ஒருதேசமும் தேசியமும் இல்லையே என்ற ஏக்கத்தின் தாக்கம் தான் அவை’

‘இது உங்களுக்கு இருக்கும் அதையும் என்னால் உணரமுடிகிறது. அதற்கு மருந்தே நீங்கள் தான். அதை மாற்ற உங்களால் மட்டும் தான் முடியும். நீங்கள் சுமந்து வந்த வடுக்கள், காயங்கள், வேதனைகள், அனுபங்கள் இலகுவில் ஆறக்கூடியவை அல்ல’
இவள் என்மகளா? அறிவுக்கடலா? 23வயதில் ஒரு ஞானி???? என்னால் நம்பவே முடியவில்லை. மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து மதிக்கும் வண்ணம் வளர்ந்திருக்கிறார்கள். இல்லை நாட்டால் வளர்க்கப்பட்டார்கள்.

‘நான் அங்கு மட்டுமல்ல இங்கும் காயப்பட்டேன் மகளே என்னுடைய அடையாளம் தெரிந்தோ, தெரியாமலோ சிதைக்கப்பட்ட போது நெஞ்சில் உதைக்கப்பட்டேன். நீ நோவேயிய தேசியக்கூடைப்பந்தாட்டத் தலைவியாக சுவீடன் நாட்டில் நோவேயிக் கொடியை ஏற்ற ஒலிபெருக்கியில் அழைக்கப்பட்டு போது புழகாங்கிதம் அடைந்தேன், பெருமை கொண்டேன். இந்நாட்டின் சின்னமாக, பிரதிநிதியாக, தலைவியாக, இந்நாட்டுக்கொடியை உயர்ந்தி சுதந்திரமாக அதைப்பறக்க விட்டபோது என்னையறியாலே கண்கள் கரைந்து விழுந்தன. இருப்பினும் என் இதயத்தின் பின்பிறத்தில் உணர்வுகள் என்னிதயத்துக்கு முள்மகுடம் தரிந்தன. என்மகள் எந்தத் தேசக்கொடியை….?’

‘ஏனப்பா இப்பகூடக்கண்கலங்குகிறீர்கள்’

‘அது வெறும் கொடியிலை மகளே. சுதந்திரம்…. சுதந்திரம். நீ கட்டவிழ்த்து விட்டபோது அந்த நோவேயிக்கொடி இன்னொரு நாட்டிலும் பறந்ததே மகளே அதுதானடி சுதந்திரம்…அது எனக்கும் இல்லை என்னுள்ளும் இல்லை எமக்கென்று ஒரு கொடி கூட இல்லையடி’

கண்கள் பனித்தன. மகள் அருகில் வந்து என்கட்டிலில் இருந்தபடி என்கையை இழுகப்பற்றிக் கொள்கிறாள் ‘அப்பா …என்னப்பா ஏனப்பா’

‘இல்லை மகளே! அன்று நீ நோவேயிக்கொடியை ஏற்றும் போது கொடி உயர தேசியகீதம் இசைத்தது. பெருமை ஒருபக்கம் இருந்தாலும் வேதனை மறுபக்கம் என்னை எரித்தது. என்பிள்ளை என்நாட்டுக் கொடியை அல்லவா ஏற்றியிருக்க வேண்டும். சுருட்டிக் கட்டப்பட்டு சுதந்திரமற்றிருந்த நோர்வே கொடிக்கு சுதந்திரம் கொடுத்துப் பறக்கவிட்டாய். அந்தநிகழ்வை கண்டு அனைவரும் மகிழ்ந்து மௌனமாக நின்று வணங்கினர், பின் கைதட்டி ஆரவாரித்தார்கள். நானும் அதையே செய்தேன். என்மகளை எண்ணிப்பெருமைப்பட்டேன் ஆனால் அடிவயிற்றில் ஒருபிரளம் பிரண்டு உருண்டு கொண்டு தான் இருந்தது. என்னாட்டுத் தேசியக் கொடியைச் சுதந்திரமாகப் பறக்கவிடவேண்டிய என்பிள்ளையின் கரங்கள் இரவல்தேசத்தின் கொடிக்கு சுதந்திரம் கொடுத்து மகிழ்கிறதே என ஆதங்கப்பட்டேன். இதனால்தான் இரவல் சுதந்திரம் என்றேன்.

‘அதுபுரிகிறது அப்பா அடையாள முரண்பாடுகள், ஆதங்கம், தேசப்பற்று இனப்பற்று, அனைத்துக்குள்ளும் நின்று நீங்கள் அடிபடுகிறீர்கள் அப்பா.’

‘உன்னைக் தலைவியாகக் கொண்ட கூடைப்பந்தாட்ட உலகப்போட்டியில் எப்படி உன்னை அழைத்தார்கள் என்பதை நீ அறிவாய். எனது தந்தையின் பெயரே எமது குடும்பப்பெயர். உனதுபெயருடன் எமது குடும்பப்பெயரான திருச்செல்வம் என்பதை திரு சவம் என்றல்லவா அழைத்தார்கள். அதாவது புனிதமான பிரேதம் என்று அழைத்தார்கள். எனது பெயர்களையே சரியாக உச்சரிக்க முடியாத, மாசுபடுத்தும் நாட்டில் பெயர் சொல்லுமாறு எப்படியம்மா என்னால் வாழமுடியும்?

‘ஏனப்பா இப்படி எல்லாம் சிந்திக்கிறீர்கள். உங்களுக்கு என்ற ஒரு நாடிலைத்தான். உங்களின் இனத்துக்கென்று ஒரு வரையறுக்கப்பட்ட எல்லாத்தமிழர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொடி இருக்கிறதா? அந்தக் கொடியை மறுக்காமல் அனைவரும் ஏற்பார்களா? அதன் பின் அணிதிரள்வார்களா? வாழ்க்கை பின்நோக்கி மட்டும் பார்க்கப்பட வேண்டியதல்ல. வாழ்க்கை என்றும் முன்நோக்கியே நகர்கிறது. இதற்கு நீண்டபார்வையும், தெளிவும், உயர்நோக்கமும் தேவை. போராடுவதற்கு ஆயுதம் தேவையில்லையே இல்லை. மனவுறுதி மட்டும் போதும். ஒவ்வொரு மனிதனின் மயிரும் போராடும். சிலவேளை அதை மயிர்போராட்டம் என்பீர்கள். நோர்வேயிர்கள் நாட்டை மீட்போம் என்ற நம்பிக்கையுடன் மௌனமாகவே போராடினார்கள். நம்பிக்கை மட்டும்தான் அவர்களிடன் இருந்தது. ஆயுதமாக மௌனத்தையும், ஆழமாக நாட்டையும் விடுதலையையும் நேசிக்கும் தன்மை இருந்தது. அதனால் வென்றார்கள். உங்கள் நாட்டுத்தலைவர்களே உங்களை ஏமாற்றியுள்ளார்கள். இதனால் நம்பிக்கை இழக்கும் ஒரு சமூகத்தால் விடுதலைக்காக எப்படிப் போராட முடியும்? உண்மை, யதார்த்தம், நேர்மை இவற்றை மக்கள் முன்வைத்து இனியாவது நம்பிக்கையைக் கட்டியெழுப்ப யார் தயாராக உள்ளார்கள். அப்படி இருந்தாலும் அதைத் தட்டக் கொட்டுவதற்கு ஒருகுழு உருவாகும். பின்பு எப்படி அப்பா?

மகளின் வார்த்தைகளுக்குப்பின்னால் உண்மை உறங்கிக் கொண்டிருக்கவில்லை விழித்துக் கொண்டிருந்தது.

‘அப்பா இதையும் கேளுங்கள் இங்குள்ள பூக்கள் கடிக்கின்றன, கொலைசெய்ய மூச்சை நிறுத்துகின்றன என்கிறீர்கள். ஊரில் மாமரங்களுக்குள் வாழ்ந்து மாம்பழங்களாகவே உண்டு களித்த மாம்பழங்களே இப்போ கடிக்கின்றன என்று அன்று மருந்து போட்டீர்களே. இனி அங்கேயும் உங்களால் வாழ இயலாதப்பா. நீங்கள் ஒரு காலத்தின் கைதி. உங்கள் விடுதலை உங்கள் கைகளில்தான் இருக்கிறது. அதேபோல் ஒருரினத்தின் விடுதலை அந்த இனத்தின் நம்பிக்கையில் உள்ளதப்பா.

ஊருக்குப் போய்வந்து சித்தப்பா என்ன சொன்னார்? பழைய அன்பு பாசம் எல்லாம் அங்கு கிடையாது. உங்களை காசுகாய்கும் மரமாகத்தான் பார்க்கிறார்கள். நீங்கள் அன்று உங்கள் இதயத்தினுள் கட்டிக்காத்து வந்த கலாச்சார அடையாளங்களுடன் தான் வாழ்கிறீர்கள். அது இன்று உங்களைப்போன்ற சில புலம்பெயர்வாழ் தமிழர்களிடம் மட்டும்தான் உள்ளது. ஆனால் அங்கேயோ அனைத்தும் மாறிவிட்டது. மக்கள் மாறிவிட்டார்கள். அடையாளம் வேறு வடிவம் பெற்றுள்ளது. அவர்கள் மேற்குலகக் கனவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களோ ஊர்கனவில் உலைந்து, தொலைந்த கொண்டிருக்கிறீர்கள். கனவுகளில் வாழ்வதல்ல வாழ்வு. அதில் இருந்து வெளியில் வாருங்கள். உண்மையை உணருங்கள். வாழ்க்கை வாழ்வதற்காகத் தரப்பட்டது கனவில் அழிப்பதற்காக அல்ல. வாருங்கள் வெளியே. உங்கள் மக்களைக் கொல்லக் காரணமாக இருந்த அரசும் இராணுவமும் நாளை தமிழர்களாகக் கூடப்பிறக்கலாம். நோவேயிப் பழமொழி ஒன்று உண்டு காலம் என்றும் கழிம்பு பூசம். காலத்தால் தீர்க்கமுடியாத பிரச்சனைகளே இல்லை. கனவுலகில் இருந்து வெளியே வாருங்கள். முரண்பாடுகளை மூட்டை கட்டி வையுங்கள்’
ஒருதத்துவாசிரியைபோல் பேசிமுடித்தாள். உண்மைகளை உணர்ந்தபோதும் பாவிமனம் தான் கட்டிக்காத்த அடையாள இனவுணர்வுகளுள் இருந்து வெளிவரவே மறுக்கிறது. முரண்பாடுகளுடனான உடன்பாடுதானே வாழ்க்கை. எம்மக்களிடையே உடன்பாடுகளும் எட்டப்படுவதில்லையே.

‘மகளே உங்களுக்கு 17மே பெருநாள் திருநாள் நாளை எனக்கும் எம்மக்களுக்கும் கரிநாள். எப்படி இந்த மே17ஐ நான் உங்களுடன் கொண்டாட முடியும். கதறக்கதற எம்மக்கள் கொல்லப்பட்டு, அனாதைப்பிணங்களாகவும், உயிருடனும் சொந்தமண்ணிலே வெறியாடப்பட்டு அழிந்து ஒழிந்தநாள். நான் என்மக்களைப்பற்றியே பேசுகிறேன். இறந்துபோன தாயின் மார்பில் பால்குடித்துத் தூங்கிய குழந்தையைக் கண்டாயோ? கேட்டாயோ? பெற்றோர்கள் படுக்கையிலே கொல்லப்பட்டபோது அனாதையாய் கிடந்த பிள்ளையை புலியென்று ஏறிமிதித்துக் கொன்ற இராணுவ கால்களை கண்டாயோ?…கேட்டாயோ? உயிருடனேயே சவக்குளிகளுக்குள் எறியப்பட்ட மக்களைக் பார்த்தாயோ? அறைகளுக்குள் நச்சுவாயு நிரப்பிக் கொண்டான் கிட்லர். இலங்கை அரசு திறந்தவெளியிலேயே இரசாயண உயிர்கொல்லி வாயுக்களை பாவித்துக் கொன்றதே யார் கேட்டார்கள்? எம்மினத்தைக் கொன்றொளித்த வெறியர்களின் வெற்றித்திருநாளை நாளை கொண்டாடுகிறார்கள். இறந்தவர்களுக்குக் கொடுக்கும் மரியாதைக்கான தீபமேற்றல் கூட தடுக்கப்படுகிறது அறிந்தாயோ? உன்மொழியில் சட்டப்படி சொன்னால் இதுசர்வதேச சட்டமறுப்பு. என்மக்களின் அவலங்கள்தானடி என்கண்முன் தெரிகிறது. எம்மக்களை உம்முறவுகளைக் கொன்றதைக் எதிரி கொண்டாடும் போது ஒரு தீபம்கூட என்னுறவுக்காக ஏற்றமுடியாத இனத்தவனாய் உள்ளேன். உங்கள் நோர்வேயின் தூதில் நாம் தூர்ந்து போனோம். உங்கள் மினிஸ்டரின் அறிவுரையுடன் வெள்ளைக் கொடியுடன் போனவர்களே கொல்லப்பட்டார்களே, நோர்வே என்ன செய்தது? வேடிக்கை பார்த்தடி… வேடிக்கை பார்த்தது. கொண்டாட வா என்கிறீர்களே. இன்று உங்கள் கொண்டாட்டம், நாளை இலங்கையரசின் வெற்றிக் கொண்டாட்டம். தமிழனத்தின் ஒருபகுதி அழிந்த, அழித்த கொண்டாட்டம். என் மனம் கொண்டாட வேண்டுமே அம்மா. எப்படிக் கொண்டாடுவது. சாவின் குரல்களை அவலத்தின் அதீதிகளை காணத்தயாராகும் போது எப்படியம்மா மனதில் மகிழ்ச்சி பொங்கும், அம்மகிழ்ச்சி மனதில் தங்கும்.?’

‘அப்பா உங்கள் உணர்வுகள் எனக்குப் புரிகிறது. அரசியல் சாணக்கியம் இருந்திருந்தால் குறைந்தபட்சம் நோர்வேயை நீங்கள் பகடையாகப் பாவித்திருக்கலாமே. சந்தர்ப்பங்களை நழுவவிட்டுவிட்டு குறைசொல்வது சாணக்கியமாகாது அப்பா. காற்றுள்ளபோது தூற்றவேண்டும் என்பீர்களே. ஏன் தவறவிட்டீர்கள். எல்லாரும் வெளிக்கிட்டு தயாராக உள்ளோம். வளர்ந்தவர்களுக்கான தேசியத்திருநாள் பேரணி வந்துகொண்டிருக்கிறது. நாங்கள் போய்வருகிறோம். மாறுங்கள் மாற முயற்சியுங்கள். இதுவும் கடந்து போகும்’

‘பிள்ளை நீ என்ன சொன்னாலும் அப்பா எம்முடன் வரப்போவதில்லை. நாங்களாவது போவம் வாருங்கள்’ இது என்மனைவி. காலநீரோட்டத்தில் கரையத்தான் நிற்கிறாள். பார்ப்போம்…முடிகிறதா என்று

‘நீங்கள் போய் கொண்டாடி விட்டு வாருங்கள். எனக்கு என்மாண்டுபோன மக்களுக்காக இனத்தின் அமைதிக்காகப் பிரார்திப்பதற்காக மௌனமான நேரமாவது கிடைக்கும். நான் என்னுணர்வுகளுடன் வாழ்ந்து கொள்கிறேன். போட்டு வாருங்கள்’

என்மூன்று பிள்ளைகளும் மனைவியும் வாசலைத்தாண்டித் தெருவில் இறங்கி விட்டார்கள். மாடிவிறாந்தையில் நின்று நான் அவர்களுக்குக் கைசைக்கிறேன். என்னையே திருப்பிப்பார்த்தபடி என்னுடைய மனைவி ‘வாங்கோப்பா வாங்கோப்பா’ என்று சையை காட்டியபடி வந்து கொண்டிருந்த ஊர்வலத்துடன் கலந்து மறைந்து விடுகிறாள். சாரைபோல் சாரை சாரையாக ஊர்ந்து வந்த ஊர்வலத்தினுள் என்பிள்ளைகளும் மனைவியும் கலந்து மறைந்து விடுகிறார்கள். அசைத்த கையை இறக்காது இந்தநாட்டு அரசன் போல் கையை அசைத்தவண்ணம் மாடியில் நிற்கிறேன். தெரிந்தவர்கள் எனக்கும் கையை அசைத்துவிட்டுச் செல்கின்றனர். நானும் அரசன்தான் உணர்வால், எண்ணத்தால், என்மக்களின் மேலுள்ள நேசிப்பால் நானும் அரசன்தான்.

ஊர்வலம் போய்கொண்டே இருக்கிறது. அது முடிவதாகத் தெரியவில்லை. இவ்வூர்வலத்தில் தம்மடையாளங்கள் அழியாதபடி வௌ;வேறு வடிவங்கள், நிறங்களில் வடிவமைக்கப்பட்ட தேசிய உடைகளுடன் அனைவரும் அசைந்து கொண்டிருந்தனர். கரையோரப்பிரதேசத்துவர் நீலம் கலந்த தேசிய உடையும். நடுப்பகுதியில் இருந்த வந்தவர்கள் பச்சை கலந்த தேசிய உடையையும் அணிந்து தம் அடையாளங்களை காட்டியபடியே செல்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமைதானே வாழ்க்கை. முரண்பாடுகளின் சமன்பாடுதானே தேசியம்.

வீட்டுமாடியின் வெளிவிறாந்தையில் நின்று தம்மக்களின் துயரை எண்ணிக் கூவிக்கொண்டிருக்கிறது இந்த ஒற்றைக்குயில். யாரும் கேட்காத கீதம் எனக்குமட்டும் நானே பாடும் பாடல் என்னுள் இசைத்துக் கொண்டிருக்கிறது. ஊர்வலத்தின் அந்தம் வந்துவிட்டது பிள்ளைகள் நோவேயியர்களுடன் நோவேயியர்களாய் கலந்து விட்டார்கள். ஊர்வலத்தில் நடுவில் நுளைந்த என்மனிசி மட்டும் ஊர்வலம் ஊர்ந்து போனபின்னரும் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள். எனக்காகவே அவள் ஊர்வலத்தினுள்ளும் காத்திருந்திருக்கிறாள்? அவளைத்தாண்டி ஊர்வலம் போய்விட்டது. வழிதெரியாத வாழ்க்கை!!! முயன்றாலும் முடியாதுபோன வளர்ப்பு. அவளால் ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியாது. ஊர்வலம் அவளை ஏற்றாலும் அவளால் இணைந்து ஊரமுடியவில்லையே. உறவுப்பாலங்கள் அமைக்கப்பட்டாலும் நாம் சிறகிழந்த பறவைகள் தானே.

ஊர்வலத்தில் பிள்ளைகளைத் தவறவிட்டவள் போல் ஊர்வலத்தையும் என்னையும் பார்த்தபடி என்மனிசி நடுரோட்டிலேயே நிற்கிறாள். ஆம் நாம் தவறவிட்டவர்கள் தான். பாவம் கட்டுப்பட்டவள்… கழுத்திலும் கட்டுப்பட்டவள் கட்டுப்பட்;டாள் கணவனுக்காக. அவளுக்காக நான் விட்டுக்கொடுத்தது என்ன? ஒன்றுமே இல்லை. அவளுடைய பாதை அவளுக்குரியதாகவே இல்லை. அங்குமின்றி இங்குமின்றி வாழும் வாழ்க்கையைத்தானே உலகமும் நானும் அவளுக்குக் கொடுத்தோம். அவளால் தானாகவும் இருக்க முடியவில்லை தள்ளியும் நிற்க முடியவில்லை. மே எம்மை மேய்துக் கொண்டே இருக்கிறது. மேயப்பட்டோம்?????

«வாழ்க நோவேயின் 200 ஆவது தேசியத்திருநாள்»

அறைக்குள் நுளைகிறேன் குரலிழந்த குயிலாக, துடுப்பிழந்த படகாக, உணர்விழந்த சடமாக, அச்சாணி களன்ற தேராக, இன்னும் இன்னுமாக…..நானில்லாத நானாக….

– 17 மே 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *