சுருக்கும் ஊஞ்சலும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 31, 2016
பார்வையிட்டோர்: 22,505 
 

வெயில் கொளுத்துகிறது. ஆனிமாதத்து வெயில். மூச்சு விடவே சிரமமாக இருக்கிறது. இங்கே, கல்லாப் பெட்டியில் இருந்துகொண்டு பார்த்தால் கிட்டத்தட்ட கால்மைல் தூரத்துக்கு முன்னால் ‘கண்டிவீதி’ விரிகிறது. வீதியின் இடது ஓடத்தில், கடை வாசலிலிருந்து சுமார் நூறுஅடி தூரம் தள்ளி இந்த ஊரின் பெயரைத்தாங்கிய சிமெந்துப் பலகை ஒன்று வெள்ளையாகத் தெரிகிறது. அதன்மேல் இந்த வெளியிலிலும் இரண்டு காக்கைகள் உட்கார்ந்து கொண்டு கரைகின்றன. அந்தக் காக்கைகளின் சத்தம் சன்னமாக, காதுக்கு சிரமந்தருவதாக இருக்கிறது. சுறுசுறுப்பாக, அங்குமிங்கும் பறந்து திரிந்து, இரைதேடும், இந்தக் காக்கைகள் கூட ஓரிடத்தில் சோம்பியிருக்கின்றனவே! அவ்வளவு வெயிலா?

கடைவாசலுக்கு நேரே றோட்டுக்கு அப்பால் ஒரு கம்பிவேலி. அக்கம்வேலிக்கும் றோட்டுக்கும் இடையில் ஒரு பசுமாடு படுத்துக் கொண்டு அசைபோடுகிறது. பக்கத்தில் ஒரு வெள்ளைக் கன்றுக்குட்டி தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, கண்கள் அரைத்தூக்கம் போலச் செருகிக்கொள்ள, கால்களைப் பரப்பிக் கொண்டு நிற்கிறது. இந்தமாடு எப்போதும் ‘ஆவ், ஆவ்’ என்று வாய்கொள்ளாமல் புல் மேயுமே? இன்று இதற்கு என்னவந்தது? ஆறுதலாகப் படுத்திருக்கிறதே! கன்னத்தோலினுக்கூடாக தாடை எலும்புகள் பீறித்தெரிய மெதுவாக இது அசைபோடுவதைப் பார்க்க, ஒரே சினமாக இருக்கிறது.

கம்பிவேலிக்கு அப்பால் சிறிய வயல்வெளி, அவ்வயல்வெளியின் மத்தியில் மஞ்சளாகவும், சற்றுப் பெரிதாகவும் காட்சியளிக்கிறது. ‘அப்போதிக்கா¢ ஆசுப்பத்திரி’. வயல் வெளியில் நான் வந்திறங்கிய போது சிறிய பூண்டாக- இன்னசெடி என்று அடையாளம் காண முடியாத நிலையிலிருந்த-சணல் இப்போ வேலியளவுக்கு வளர்ந்து மஞ்சட்பூக்களுடன் குலங்கிச் சாய்கிறது. ஆசுபத்திரி விறாந்தையில் ஓடலி பரமசிவம் இருந்து சுருட்டுப் பிடித்துக் கொண்டிருக்கிறார். கால்கள் இரண்டையும் அகட்டிப்போட்டுக்கொண்டு, வாங்கில் முதுகு சாயுமிடத்தில் கைகளை வீசிப்போட்டுக்கொண்டு தலையைக் கவிழ்த்துக்கொண்டுதான் இருக்கிறார். சுருட்டுப் பிடிக்கிறாரா இல்லையா?, என்பதே சந்தேகமாக இருக்கிறது. குரங்கு தூக்கத்திலிருந்து விழிப்பதுபோல இடைக்கிடை புகை மெல்ல வருவதுதான் அதை ஊர்ஜிதப்படுத்துகிறது. அவரும் கூட இந்த வெயிலில் சோர்ந்து சுருண்டுபோய் இருப்பதாக எனக்குப்படுகிறது.

ஆசுப்பத்திரிக்கு இடதுபுறம் கொஞ்சத் தூரம் தள்ளி சிவப்பாக அரசாங்க குவாட்டஸ் தெரிகிறது. குவாட்டஸின் முன்விறாந்தையில் இருதூண்களுக்கு நடுவே ஒரு கயிற்றுக்கொடி கட்டப்பட்டு அதில் சிலதுணிகள் காய விரிக்கப்பட்டிருக்கின்றன, சுவரோடு சாய்ந்து ‘சாயும் இடம்’ இல்லாத கதிரை ஒன்று வைக்கப்பட்டிருக்கின்றது. காற்றில் ஆடும் துணிகள் மெதுவாக, ஆடிக்களிக்கவே பிரியமற்றவைபோல, பலவந்தமாக ஆட்டப்படுவதாக எனக்குப்படுகிறது. அனேகமான வேளைகளில் அந்தக் கதிரையில் கனகசிங்கம் கால்மேல் கால்போட்டுக்கொண்டு, தொடையில் ஊன்றிய கையை நாடிக்கு முண்டு கொடுத்துக்கொண்டு, இருப்பதைக் காணலாம். இப்போ அதுவெறுமே வெறிச்சோடிக் கிடக்கிறது.

கல்லாவிலிருந்து பின்புறம் திரும்பிப்பார்த்தால் யன்னலினூடாக ‘றெயில்வேலைன்’ தெரிகிறது. அதை ஒட்டினாற்போல பற்றையும் மரமுமாக ஒரே காடு. அந்தப் பச்சைக்குமேல் நிர்மலமான நீல ஆகாயம். பச்சையும் நீலமும் பார்க்கவே சகிக்கவில்லையே. வானத்தைக் கண்கொண்டு பார்க்கவே முடியவில்லை. வெயில் கண்ணைக் குத்துகிறது. அப்பாடா, வெயில்! இந்த வெயில் நாசமாய்ப்போக!

முன்புறம் இப்படிக் கிட்டவாகக் காடு இல்லை. ஆசுபத்திரி, குவாட்டஸ் எல்லாம் தாண்டி பெரிய வயல்வெளி. ‘லக்ஷபான’விலிருந்து ‘யாழ்ப்பாணக்குடா’வுக்கு ‘கரண்ட்’டைச் சுமந்துசெல்லும் நீள நீளமான கம்பிகளும், அவற்றைத் தாங்கி நிற்கும் பிரமாண்டமான ‘போஸ்ட்’ களும் அவ்வயல்வெளியை ஊடறுக்கின்றன. அதற்குமப்பால் கருநீலநிறமாகத்தான் காடு தோன்றுகிறது. எங்களூரில் தொலைதூரப் பனைகள் காட்சியளிப்பதும் ஏறத்தாழ இதே காட்சிதான்.

மேலே கூரைக்குத் தகரம்தான் போட்டியிருக்கிறார்கள். அதனால் ஒரே வெக்கையாக அடிக்கிறது. அடிக்கிற வெக்கையில் முகம் கருகிவிடுமாற்போல் எரிந்து தள்ளுகிறது. போதாத குறைக்கு பின்னாலிருந்து ‘பொய்லர்’ சூடு முதுகை எரிக்கிறது. தண்ணீர் கொதிக்கும் ‘தள தள’ சத்தம் வேறு காதுக்கு நாராசமாக இருக்கிறது.

கண்டி வீதியில் செருப்புச்சத்தம் ‘சரசர’ என கையில் பிரப்பங் கூடையுடன் கருணே நடந்து போகிறான். அதற்குள் ‘போத்தில்’கள் இருக்கும். போகிற அவன் மெல்லிதாக என்னைப்பார்த்துச் சிரித்துக்கொண்டு போகிறான். வெயில் வெக்கையில் கண்ணையும், முகத்தையும் இடுக்கிக்கொண்டு, அவன் வேண்டா வெறுப்பாகச் சிரிப்பதைப் பார்க்க பாவமாக இருக்கிறது.

இப்படியே அவன் போகிற பாதையில் சிறிதுதூரம் போனால் ‘முதுபண்டா’வின் தச்சுவேலைக் கொட்டிலுக்கு முன்னால் சிறுபற்றைகளுக்கு இடையில் உள்ள பழுதடைந்த கிணற்றின் ‘மிதி’யில் அவன் இந்தப் பிரப்பங்கூடையுடன் உட்கார்வதைக் காணலாம். ‘இரண்டு ரூபா, ஐந்து ரூபா’ பேர்வழிகள் அடிக்கடி அவனிடம் வருவார்கள். ஒருதடவை போலிசிடம்கூட அகப்பட்டிருக்கிறான்.

அப்பா இப்போதைக்கு வரமாட்டார். வந்தால் நான்கொஞ்சம் தூங்கலாம். வர இரண்டுமணியாவது ஆகும். இப்போது நேரம் பன்னிரண்டிற்குள்தான் இருக்கும். நேரம் பார்ப்பதற்கு கடை மணிக்கூட்டை நம்ப முடியாது.

உள்ளே குசினியிலிருந்து தேங்காய் துருவுகிற சத்தம் கேட்கிறது. யாரோ இரண்டு பேர் துருவுகிறார்கள் போல இருக்கிறது. யாராக இருக்கும்? சமையல்காரனும் சிரிபாலாவும்தான். சிவலிங்கம்தான் இங்கே குழங்கையை முண்டு கொடுத்துக்கொண்டு மேசையில் தூங்கிவழிந்து கொண்டிருக்கிறானே. சின்னவன் அப்பாவுடன் சந்தைக்குப் போய்விட்டான்.

இது ஒரு சனியன்பிடித்த ஊர். சந்தைக்குப் போவதானாலும் எட்டுமைல் தூரம் பஸ்ஸில் போகவேண்டும். எனக்கு இப்போதுள்ள நிலையில் பஸ்ஸைப்பற்றி நினைக்கவே எரிச்சலாக இருக்கிறது. அதிகம் ஏன்? கக்கூசுக்குப் போவதாக இருந்தாலும் பின்னால் ரெயில்வேலைனைக் கடந்து, காட்டுக்குள்தான் போக வேண்டும். எனக்கு ரெயில்வேலைனைப் பார்க்கவே பயமாக இருக்கிறது. ஆயினும் என்ன செய்வது? இயற்கைக் கடனை நிறைவேற்ற நானும் ரெயில்வேலனைக் கடந்துதான் தீரவேண்டும்.

நெடுக, இப்படிக் காட்டையும் றோட்டையும் பார்த்துக் கொண்டிருக்கச் சலிப்பாகத்தான் இருக்கிறது. இந்த ஒருமணி நேரமாக றோட்டிலும் வாகன நடமாட்டங் குறைவு. அப்படியிருந்தால் வியாபாரமாவது சுறுசுறுப்பாக இருக்கும்.

யாராவது பேச்சுத்துணைக்கிருந்தால் பரவாயில்லை, சிவலிங்கத்தை கூப்பிடலாமா? வேண்டாம். பாவம்! அவன் இரவு படுக்கப் போனபோது நேரம் இரண்டு மணியிருக்கும். அதுதான் இப்போது தூங்கி வழிகிறான்.

‘ஐஸ்’ மாதிரிக் குளிராக ஏதாவது குடித்தால் நல்லது. சோடா….வேண்டாம்…செலவுகூட, இளநீர்….குடிக்கலாம்… என்ன செய்வது? கத்திஎடுக்க சிவலிங்கத்தைத்தான் அருட்ட வேண்டியிருக்கிறது.

“சிவலிங்கம்…சிவலிங்கம்….டேய்”

அவன் மெல்ல அருண்டு விழிக்கிறான். சிவந்த கண்களைக் கைகளால் தேய்த்து, கொட்டாவி சோம்பல் முறித்துக் கொள்கிறான்.

“எண்ண, சிண்ண மொதலாளி”

“குசினிக்கைபோய் சின்னக்கத்தி ஒண்டு எடுத்துக்கொண்டந்து ஒரு இளனி வெட்டித்தா…போ”

இவன் அரைச் சிங்களவன். தாய் சிங்களத்தி, தகப்பன் இந்தியத்தமிழன். அதுதான் தமிழ்ப் பெயரும் சிங்களக் கதையுமாக இருக்கிறான்.

அதோ, அந்தப்பெயர்ப்பலகையருகில் கனகசிங்கம் வருகிறார். எங்கோ, இந்த வெயிலில் போய்விட்டு களைத்துவிழுந்து, வியர்த்தொழுக ‘டியூட்டி யூனிபோம்’ உடன் வருகிறார். இந்த ‘போறஸ்ற் காட்’ வேலைகூடச் சிரமந்தான். காட்டுக்குள்ளே தனியாக அலையவேண்டும். ஆனால் கனகசிங்கம் அப்படியல்ல. குவாட்டஸிலேயே அந்தக் கதிரையில் இருந்துகொள்ளுவார். எப்போதாவது ஒருநாள் தான் அத்திப்பூத்தாற்போல் டியூட்டி யூனிபோம் உடம்பில் ஏறும்.

சிவலிங்கம் குசினிக்குள்ளிருந்து நன்குசீவிவெட்டிய இளநீருடன் வருகிறான். சிங்களவனாகியபடியால் ‘குறும்ப’ வெட்டிப் பழகிய கையால் நல்ல அழுத்தமாக வாய்பொருத்திக் குடிக்க ஏதுவாக இளநீர் வெட்டித் தருகிறான். ஆனால் இதைத் தூக்கிக் குடிக்கவே பெரிய சோம்பலாக இருக்கிறது, எனக்கு!

கனகசிங்கம் நேரே இங்கேதான் வருகிறார். சிகரட் வாங்கவாக இருக்கும். வாசலில் ஏறும்போதே “சூ….சா¢யான வெயில்” என்று அலுத்தபடியேதான் வருகிறார்.

“போறேசஸ் ஒண்டு தா…தம்பி”

இலாச்சியை இழுக்கவே அலுப்பாக இருக்கிறது. வேண்டா வெறுப்பாக சிகரட் விற்பனை நடத்துகிறேன். அவர் சிகரட்டைப் பற்றவைக்க சதா எரிந்து கொண்டிருக்கும் விளக்கண்டை போகிறார். அது அணைந்துபோயிருக்கின்றது.

“விளக்கு நூந்துபோச்சுத்தம்பி”

சிவலிங்கத்திடம் சொல்லிக் கொளுத்துவிக்கலாம்தான். அவன் பாவம்! மீண்டும் மேசையில் தூங்கி வழிகிறான். எனக்கும் எழச்சோம்பலாக இருக்கிறது.

“இப்படி உள்ளைவந்து பொயிலர் நெருப்பிலை பத்துங்கோ. அல்லது உப்பிடி உந்தக்கூரைத் தகரத்திலை பிடியுங்கோ எரியும்”

என்னுடைய நகைச்சுவைக்காக ஏதோ கடமைக்காகச் சிரிப்பதுபோல் சிரித்துவிட்டு, சிகரட்டைக் கொழுத்திக்கொண்டு மெதுவாக குவாட்டஸை நோக்கி நடக்கிறார் அவர்.

மீண்டும் வெறுமை. ஒரே எரிச்சலாக இருக்கிறது. ரேடியோவைத் திருகுகின்றேன். ஏதோ கிரிக்கட்நேர்முக வர்ணனை நடக்கிறது. இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் ‘டெஸ்ட்மச்’ நடப்பதாக கனகசிங்கம்தான் நேற்றுச் சொன்னார். “வெங்கட்ராகவனின் பந்துவீச்சுக்கு யாரோ ஒரு நியூசிலாந்துக்காரன் பெளண்டரி அடித்ததாக” அறிவிப்பாளன் அறிவிக்கிறான். வெங்கட் தமிழன். ஒரு தமிழனின் பந்துவீச்சுக்கு அந்நியன் ஒருவன் அடித்தானாம் பெளண்டரி! தமிழனுக்குச் சோம்பலா? சே… இந்த அறிவிப்பாளனின் கரகரத்த, சோம்பலான குரலைக் கேட்கவே பற்றிக் கொண்டு வருகிறது. ரேடியோவை வெறுப்புடன் மூடுகிறேன்.


தூரத்தே யாரோ மஞ்சள்நிற ஜப்பான் குடையுடன் வருகிறார்கள்.

ஜப்பான் குடைதான் இப்போது ‘பாசன்’

பெண்கள்தான் அதிகமாக ஜப்பான்குடை பாவிக்கின்றார்கள். எதிரே வருவதுகூட ஒரு பெண்ணாக இருக்கலாம் இருக்கலாம் என்ன? பெண்ணேதான்.

மஞ்சளுக்குக் கீழே சிறிது இடைவெளிவிட்டு மெல்லிய…மிக மெல்லிய சிவப்பாகத் தெரிகிறது. றோட்டின் கறுத்தப் பின்னணியில் மஞ்சளும் மென்சிவப்பும் நல்ல எடுப்பாக இருக்கிறது. அந்த மென்சிவப்பு, அப்பெண்ணின் ஆடையாக இருக்கும்.

மினிகவுண்தான் இப்போது ‘பாசன்’

இவளுக்கு தூரத்தேநின்று பார்க்க இது அழகாகத்தான் இருக்கிறது. கிட்டவர நன்கு பார்க்கலாம். முகத்தையும் பார்க்கலாம்.

அழகாக இருப்பாளோ? அழகாகத்தான் இருப்பாள். அதையே நான்….நான்மட்டுமென்ன, எல்லோரும் விரும்புகிறார்கள்.

இந்த வெயிலில் நடந்து வருகிறாளே! பாவம்! சுடாதா?

குதிச்சப்பாத்து போட்டிருப்பாள்.

குசிச்சப்பாத்துத்தான் இப்போது ‘பாசன்’

குதிச்சப்பாத்துப் போட்டால் வேகமாக நடக்கமுடியாது. அதுவும் நல்லது. சில பெண்களுக்கு அதுவே ஆறஅமர…. நிதானமாக நடக்கப் பழக்குகிறது.

இந்தப் பெண்ணின் நடை நன்றாயிருக்கிறது. மிக நன்றாயிருக்கிறது. அன்னநடை என்பார்களே! அதுமாதிரி.

இப்போது அவள் அந்தப் பெயர்ப்பலகைக்குக்கிட்ட வந்துவிட்டாள். நல்ல நிறம், நான் பெண்கள் எந்தநிறத்தில் இருக்க வேண்டுமென எண்ணுவேனோ? அந்த நிறம்.

இன்னும் கிட்டவந்தால் ஏன் கடைக்கே வந்தால்….? நான்றாகப் பார்க்கலாம்.

இந்த நேரத்தில் எங்கே வருகிறாள்? ஆகப்பத்திரிக்காக இருக்கும். இந்த அழகான பெண்ணுக்கு ஆசுப்பத்திரிக்குப் போகுமளவுக்கு நோயா? சீ…கூடாது. அப்படியிருப்பதை நான் விரும்பவில்லை.

இப்பொழுதுதான் நன்றாகக் கவனிக்கக்கூடியதாக இருக்கிறது. குழுகுழு கண்ணாடி மாட்டியிருக்கிறாள். சிவந்த முகத்திற்கு கறுத்தக் கண்ணாடி எடுப்பாக இருக்கிறது.

ஆமாம், இந்தச் சனியன் பிடித்த ஊரில்கூட இப்படிப் பெண்கள் இருக்கிறார்களா? ஏன் இருக்கக் கூடாது? ஒருவேளை இவர்கள் இப்பெண்ணின் குடும்பத்தினர்-என்னைப்போல வெளியூர்க்காரர்களாக இருக்கலாமல்லவா? இங்கே ‘பாம்’ எதாவது….

என்ன! இவள் கடைக்கல்லவா வருகிறாள்? நான் சற்று உஷாராக இருக்கவேண்டும். இப்படி இருந்தால் எப்படி? அதுவும் ஒரு அழகான பெண்ணுக்கு முன்னால்.

கடைவாசல்படி கொஞ்சம் உயரம். அதில் ஏறும்போது அவளுடைய குதிச்சப்பாத்து வழுக்கப் பார்க்கிறது. வாசல் தூணைப் பிடித்துக்கொண்டு சமாளித்துக் கொள்கிறாள்,

“கவனம்….பாத்துவரக்கூடாதா”

“It’s alright thank you”

ஆகா! மதுரமான குரல்…இவள் ‘இங்கிலீசு’ தெரிந்தவள். நானும் எனக்குத் தெரிந்ததாகக் காட்டிக்கொள்ளவேண்டும்.

“What do you want?”

“சோடா ஒண்டு தாங்க”.

சோடா என்று சொல்லும்போது சாயம்பூசிய, சிறிய அளவான உதடுகளின் பின்னணியில் முத்து வெள்ளைப் பற்கள்… வடிவமே முத்துப்போலச் சிறிதான பற்கள். நன்றாக இருக்கின்றன. சோடா கொடுக்க சிவலிங்கத்தை எழுப்பலாமா? வேண்டாம் நானே கொடுக்கலாமே! எழுந்த வேகத்தில் பாதி திறந்திருந்த இலாச்சி தொடையைப் பதம்பார்க்கிறது. கனகசிங்கம்…அவரால்தானே இலாச்சி திறக்கவேண்டி வந்தது….அவர் பாழாய்ப்போக…

“அம்மாடி” என்றவாறு திரும்ப உட்கார்ந்து கொள்கிறேன். அவள் முன்னாலிருந்த ‘சோடா ராக்’ கிலிருந்து சோடா ஒன்றை எடுக்கிறாள்.

“பரவாயில்லை opener ஐத் தாங்க…நானே உடைக்கிறன்”

எடுத்துக் கொடுக்கிறேன். நல்லகாலம் அது கையெட்டும் தூரத்திலேயே இருக்கிறது. இல்லாவிடில் அவள் முன்னாலேயே நொண்டி…நொண்டி…சீ…வெட்கக்கேடு.

சோடா குடிப்பதற்காகப் போலும், கண்ணாடியைக் கழற்றிக் கொள்கிறாள். நல்ல பெரிய விசாலமான கண்கள். உதட்டுக்குச் சாயமிட்டவள், கண்ணுக்கு மையும் இட்டிருக்கலாமே! இட்டிருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும்.

“எவ்வளவு காசு….”

“ஒண்டிருபது தாங்க….”

காசு தரும்போது தான் கவனிக்கிறேன். கையில் மெல்லிய பூனை மயிர்கள். அது கறுப்பாக இல்லாமல் உடலின் நிறத்திலேயே இருக்கிறது. அதுவும் ஒரு அழகுதான்…. காலிலும் இருக்கும், எட்டிப்பார்க்கலாமா? சீ…. அவள் என்ன நினைத்துக் கொள்வாள்…?

நான்தான் அவளையே பார்க்கிறேனே! அவள் என்னைக் கவனிப்பதாகவே காணோம்…

முகத்தைக் கைக்குட்டையால் ஒற்றித்துடைக்கிறாள். திரும்ப அதை மடிக்கும்போது…நான் நினைத்து நடக்கிறது. கணநேரம் தான். கண்களைத் திரும்பிக்கொள்கிறாளே! ஆமாம், இப்படியான சந்தோச சமாச்சாரங்கள் எல்லாம் கணநேரம் தானோ?

இன்னும் நிற்கிறாள். ஏதாவது வேறு தேவைகளும் இருக்கும்…

“வேறை என்ன வேணும்?”

“வெறும் Soda bottle கொடுத்தா….நல்லது”

ஓ…அது நாங்கள் விக்கிறதில்லையே”

“Oh…I See”

“எண்டாலும் பரவாயில்லை..உதிலை கிடக்கிற போத்தலை எடுங்க. இன்னும் ஒரு ரூபா தாங்க”

அலுவல் முடிந்து போகும்போது மீண்டும் ஒரு தடவை மின்வெட்டு, இப்போது அவள் மெதுவாக சிரிக்கிறதா எனக்குப்படுகிறது.


திடீரென பெயர்தாங்கிப் பலகையில் இருக்கம் காக்கைகள் உச்சஸ் தாயியில் கத்துகின்றன. அவை ஆரவாரமாக….மகிழ்ச்சிப்பெருக்குடன் கரைவதாக எனக்குப் படுகின்றது. அவை இப்போ நெருக்கமாக அமர்ந்து ஒன்றைஒன்று கொத்தியும் சீண்டியும் விளையாடுகின்றன.

அந்த மாடு இப்போது எழுந்து நிற்கிறது. அசைபோடுவதை நிறுத்திவிட்டது. புல்மேய ஆயத்தமாகின்றதா?… முதுகில் தொந்தரவு தரும் ஈக்களை வாலால் விளாசி விரட்டுகின்றது. அப்படித் தான் இருக்கவேண்டும் எதிரியை அடித்து ஓட….ஓட விரட்ட வேண்டும்.

கன்றுக்குட்டி துள்ளித் துள்ளி தாய்க்குக்கிட்ட வருகிறது. தாயைமுட்டி மோதிப் பால் குடிக்கிறது. அப்படித்தான் இருக்கவேண்டும். சேரவேண்டியதை எடுத்துக்கொண்டு ஆனந்தமாக…கோலாகலமாக வாழவேண்டும். ஓ! வாழ்க்கைதான் எவ்வளவு இன்பகரமானது..

அந்தப்பெண் ஆசுப்பத்திரிக்கேதான் போகிறாள். பரமசிவம் யோகத்திலிருந்து விழித்தெழுகின்றார். போகத்திற்கா? சி. என்ன அசிங்கமான எண்ணம்… சுருட்டு ‘புக்..புக்… என்று புகை கக்குகிறது. அந்தப்புகை அப்படியே மேலெழுந்து… மேலே… இன்னும் மேலே போய்க்கரைந்து காற்றோடு ஐக்கியமாகின்றது. அப்படிக் கரைவதைப்பார்க்க, எனக்கும் நான் அவ்வாறு மேலே மேலே போக வேண்டும் போல் இருக்கிறது.

குவாட்டஸ் முன்விறாந்தையில் கதிரையின் மேல் வழமையான பாணியில் கனகசிங்கம் உட்கார்ந்திருக்கிறார். கொடியிலுள்ள துணிகள் காற்றுடன் கலந்துறவாடி இன்பப் பெருக்கால் கனகசிங்கத்தின் முகத்தில் மெல்ல விசிறுகின்றன. ஓரொரு சமயம் அவா¢ன் முகத்திலேயே செல்லக்குழந்தையின் விளையாட்டு அடிகள் போலப்பட்டு விலகுகின்றன. அவர் முகத்தில் புன்னகை. அப்படித்தான் இருக்கவேண்டும்…. சதாநேரமும் சிரித்த முகத்துடன் அதைவிட்டு விட்டு கடுவன் பூனைமாதிரி கடுகடுத்த முகத்துடனா?

வெயில் இப்போதும்கூட சுள்ளென்று அடிக்கிறது. இந்த வெயில் இல்லாவிட்டால் நானில்லை… எதிரே தெரியும் காடு இல்லை…. தூங்கிவழியும் இந்தச் சிவலிங்கம் இல்லை…. இந்தக் கடையில்லை…. அந்தக் கன்னியில்லை…ஒன்றுமே இருக்காது. வெயில் வேண்டும், நன்கு எறித்து, எரிந்து தள்ளவேண்டும்.

கருணே செருப்புச் சத்தம் ‘சரசர’ க்கக் கடைக்கு வருகிறான். ரீ குடிக்கவா? வரட்டுமே! ஒரே வீச்சில் ஒன்பது ரீ அடிக்கமாட்டேனா நான்! அவனும் வெகு உற்சாகமாக இருக்கிறான். சீட்டி கூட அடித்துக்கொள்கிறானே! கைச்சரக்குத் தீர்ந்துவிட்டதா? காசு சேர்ந்து விட்டதா? சந்தோசம் கொண்டாட வருகிறானா…?

அப்பா இப்போதைக்கு வரமாட்டார். வராவிட்டால் போகட்டும்! நானிருக்கிறேன், கடையை நடத்த. வேலை செய்வது ஒன்றும் பெரிய கஷ்டமான காரியமில்லையே!

ரெயில்வேலைனின் கூட்ஸ்ஒன்று போகிறது. கடையே அதிருகிறது…கடை அதிர…கடையில் நிலம் அதிர…நான்..அதிர…என்னோடு பொய்லர் அதிர… எதிரே வீதி அதிர… ஆசுபத்திரி, அந்தப் பெண் அதிர… ஷோக்கேஸ்கள் அதிர…சிவலிங்கம் அதிர… அதிர… இந்த அதிர்வுகள்கூட இவ்வளவு லயத்தைத் தேக்கிவைத்திருக்கின்றனவே!

இந்தச் சத்தத்தில் சிவலிங்கம் விழித்துக்கொள்கிறான். அவனது சோம்பல் முறியவில்லையோ? சனியன் பிடித்தவன். மத்தியான வியாபாரநேரம் தூங்கிவழிகிறானே!

“சிவலிங்கம்…டே! சிவலிங்கம், என்ன நெடுகத் தூங்கிவிழுகிறாய்? போ..போய் முசுத்தைக் கழுவிக்கொண்டுவா…இப்பிடிநெடுகத் தூங்கிவழிஞ்ச வாறவனும் சாப்பிடாமல் திரும்பிப் போடுவான்…”

ரெயில்வே லைனைக்கடந்து ஒருவன் போகிறான், காலைக் கடனை மத்தியானத்தில் கழிக்க, கூட்ஸ்போன கையோடே போகிறான். இவ்வளவு நேரமும் கூட்ஸ் போகட்டும் என்று காத்து நின்றானா? பயந்தாங்கொள்ளி! பயம்…என்னபயம் சாவதற்கு?….ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு?

இருந்தாற்போல றோட்டில் ஒருபஸ் போகிறது. வேகம் அவ்வளவாக இல்லை. ஆமைவேகத்தில் உருட்டுகிறானே பஸ்ஸை! அடே! சோம்பேறிப் பயலே பஸ்ஸை வேகமாக, உன்னால் முடிந்தவரை வேகமாக ஓட்டு! பஸ்ஸைப் பார்க்க எனக்கு பரமானந்தமாக இருக்கிறது. றோட்டில் சுறுசுறுப்பு விஷம்போல் ஏறுவதாக எனக்குத் தோன்றுகிறது.

ரேடியோவைத் திருகுகிறேன். சத்தம்…ஏகச்சத்தம். யாரோ ஸிக்சர் அடித்துவிட்டானாம்! யார் பந்து வீசுவது? மடயன். ஸிக்சர் அடிக்கும்படியாகவா பந்து வீசுவது? “வெங்கட்ராகவனின் பந்துவீச்சு” என்ன அறிவிப்பாளன் சொல்கிறான். அவனுடைய குரலில் மிகுந்த உற்சாகம் தொளிக்கிறதா? அவனுடைய குரலில் மிகுந்த உற்சாகம் தொனிக்கிறதா? அவனுடைய குரலையும் மீறி சனங்கள் கத்துகிறார்களே! உயரேபோன பந்தைப் பார்த்து குதூகல வெறியுடன் அவர்கள் குரவையிடுகிறார்களா? கத்துங்கள் மகாசனங்களே! கத்துங்கள்! உலகமெங்கும் உற்சாகத்தை விதைக்கக் கத்துங்கள்!

வெங்கட் தமிழன்! தமிழன் என்றால் என்ன? எந்தக் கொம்பனாக இருந்தால் என்ன? திறமையைப் பாராட்டியே ஆகவேண்டும். ஸிக்சர் அடித்தவனுக்கு ஜே!

– மோகவாசல் – ரஞ்சகுமாரின் சிறுகதைகள் (நன்றி: http://www.projectmadurai.org/)

– மோகவாசல், முதற் பதிப்பு: ஏப்ரல் 1995, தேசிய கலை இலக்கியப் பேரவை இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *