அப்புசாமியின் ‘வால்’ நாளில்…

2
கதையாசிரியர்: , ,
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 25, 2012
பார்வையிட்டோர்: 13,924 
 

அனைத்து சென்னை வாசிகளின் காதுகளிலும் அந்த இரவு நேரத்தில் கொசுக்களின் ரீங்காரம் ‘நொய்ய்ய்ங்’ துன்பமாகச் சத்தமிட்டுக் கொண்டிருக்க அப்புசாமியின் காதில் மட்டும் வேறொரு வகை சத்தம் இன்பமாக ரீங்கரித்துக் கொண்டிருந்தது. ‘காலை எட்டு மணிக்கு நாம் ஓர் இடத்துக்குப் போகிறோம். ‘அன்டில் ஈவினிங்’ அங்கேயே நாம்
இருந்துவிட்டுத் திரும்புகிறோம். நாளைக்கு என் பிறந்த நாளில்லையா?

முதல்வர்-கவர்னர் உறவு முறையிலிருந்து மனைவி சீதேயும் அவரை மதித்து அவருக்கு ஒரு ‘நாம்’ அந்தஸ்து முதல் முதலாகக் கொடுத்துப் பேசியிருக்கிறாள்.

அப்புசாமி தன் தலையில் ஒரு பெரிய திருஷ்டிப் பூசணிக்காயை வைத்துக்கொண்டு ராஜாக் குட்டியைச் சுற்றிச் சுற்றி ஒன்பது தரம் ரவுண்ட் வந்தார்.

பூசணிக்காயின் மேல் கற்பூரம் தகதகவென்று எரிந்து கொண்டிருந்தது.

ராஜாக்குட்டி அறைக்கு நடுவே கை, கால், வால் எல்லாம் கட்டுப்பட்டுத் தன் சேஷ்டைகளை காட்ட முடியாமல் பரிதாபமாக உட்கார்ந்திருந்தது. இரு கடை வாயிலும் வாழைப்பழம் அடைத்துக் கொண்டிருந்தது.

சீதாப்பாட்டி சொன்னாள். “ஒன்பது சுற்றி சுற்றியாயிற்றென்றால் போதும். பாவம், குழந்தையை எவ்வளவு நேரம் கட்டிப் போட்டிருப்பது? ரிலீஸ் ஹிம்,” என்றார். “நீங்கள் பூசணிக்காயை தெரு முனையில் கொண்டு உடைத்துவிட்டு வாருங்கள். நான் உங்களுக்கும், ராஜாவுக்கும் சேர்த்து ஆரத்தி எடுக்கிறேன்.”

“சீதே!” என்றார். அப்புசாமி நெகிழ்ந்து போய், “என் ராஜாவை நீ வெறுக்கவில்லையா? அதன்மீது உனக்குத்தான் எவ்வளவு பிரியம்!”

சீதாப்பாட்டி அவர் கையிலிருந்த குரங்குக் குட்டியை லேசாகத் தட்டிக் கொடுத்துவிட்டு வாஷ்பேஷனில் சோப்பு போட்டுக் கையைக் கழுவியவாறே, “உங்க ராஜா ஒரு ஜீனியஸ்… அது செய்து காட்டுகிற வேலைகளை ஒரு மனிதன்கூடச் செய்ய முடியாது. நேற்று ராத்திரி காம்பவுண்ட் கேட்டை நான் பூட்டாமல் வந்துவிட்டேன். உங்கள் ராஜாக்குட்டிக்கு என்ன புத்தி பாருங்கள். படுத்திருந்த என் கையைப் பிடித்துப் பிடித்து இழுத்தது. சாவி ஸ்டாண்டிலிருந்து காம்பவுண்ட்கேட் சாவியைச் சரியாகத் தெரிந்து எடுத்து வந்து தானே கேட்டுக்கு ஓடிச்சென்று பூட்டிவிட்டது. ·பண்டாஸ்டிக்! அனிமல்ஸை வைத்துப் படம் எடுப்பாரே. தேவர்ன்னு ஒருத்தர் அவர் இப்போது இல்லாததை நினைத்து ரொம்ப வருத்தப்படறேன். ஆனாலும்

ஒன் மிஸ்டர் நாராயணராமான்னு இருந்தார். அவரை கன்ஸல்ட் பண்ணினேன். ராஜாவுடைய பர்·பாமென்ஸைப் பார்த்து அசந்துவிட்டார். ராஜாவை வைத்து ஹி இஸ் டேக்கிங் எ ·பண்டாஸ்டிக் பிக்சர். ஆனால் ஒன் திங்…படம் ரிலீஸ் ஆன பிறகுதான் ராஜாவுக்குச் சம்பளமாம்…”

பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அப்புசாமி, “அதுக்கு வேறு ஆள் பார்க்கட்டும்… கை மேலே காசு வாய் மேலே தோசை.”

“நோ…நோ…நோ… நாமும் கொஞ்சம் விட்டுத் தரணும்.”

“நீ எதுனா நடுவிலே துட்டை வாங்கிக்கிட்டு ஜிம் ஜிலாக் பண்ணிட்டியா?”

“யு மீன் உங்களை நான் டபிள் கிராஸ் பண்ணிவிட்டேனோ என்று சந்தேகப்படுகிறீர்கள்.”

“பணம்மா பணம்? பணத்துக்காகத்தானே பொன்னமா டேவிட்டைக் கடத்திட்டுப் போயிருக்காங்க. சீதே! பணம் நிறைய வைத்திருந்தாலே மற்றவங்களை ஏதாவது தப்புத்தண்டா பண்ணச் சொல்லும். அதுக்குத்தான் உன்னைப் போன்றவங்க என்னைப் போலவங்களுக்குப் பணத்தைத் தள்ளி விட்டிடணும்…”

“ஐ டூ அக்ரீ…ஆனால் பிஸினஸ் இஸ் எ பிஸினஸ் இல்லையா? என்னதான் இன்ட்டெலிஜெண்ட்டாயிருந்தாலும், அது குரங்கு…அனதர் திங்க் உங்க-நம்ம-ராஜாவின் கழுத்தைக் கவனித்தீர்களா?”

“கவனித்தேனே…ஏதாவது அதிருஷ்ட மச்சம்! மறைந்திருக்கிறதோ”

“கழுத்திலே வளையம் மாதிரி கயிறு இருக்குதே பார்த்தீங்களா? ராஜா எங்கிருந்தோ வந்த குரங்கு இல்லே… எந்தக் குரங்காட்டியிடமிருந்தோ தப்பித்து வந்த குரங்கு.”

அப்புசாமி ராஜாவைத் தடவிப் பார்த்து அதன் கழுத்தில் முடிகளுக்கு இடையில் மறைந்திருந்த கயிறு வளையத்தைக் கண்டு பிடித்தார். “சீதே! உன் காடராக்ட் கண்ணுக்கு இவ்வளவு சக்தியா? தினமும் ராஜாவுக்குப் பவுடர் போட்டு விடுவேன். உனக்குத் தெரிந்திருக்கிறதே.”

“நானும் தற்செயலாக நோட் பண்ணினதுதான். நாளைக்கு ராஜா நடித்த படம் ஓகோ என்று பிரமாதமாக ஓடி…பட முதலாளியும், லட்சக்கணக்கான ரூபாய் உங்களுக்குத் தர்ரான்னு வையுங்க…”

“சீதே! அப்படி மட்டும் நடக்கட்டும். உன் தலை சத்தியமாக உன் கைக்கு அரைப் பவுனிலே ஒரு வளையல் செய்து போடுகிறேன்…”

“தாங்க்யூ….” என்றாள் சீதாப்பாட்டி “அந்தப் பணம் உங்களுக்குக் கிடைத்தால் நிச்சயம் யு வில் டூ இட். ஆனால் படத்தைப் பார்த்ததும் குரங்குச் சொந்தக்காரன் வந்து க்ளெய்ம் பண்ணினால்-லீகல் ப்ராப்ளமெல்லாம் வரதுக்கு சான்ஸஸ் ஆர் தேர்”

அப்புசாமி பல்லைக் கடித்தார். “அதெப்படி நான் டஜன் கணக்கா வாழைப்பழமும், அப்பளமும், கடலை மிட்டாய் காக்காக்கடி கடித்தும் கொடுத்தெல்லாம் வளர்த்திருக்கேன்… போட்டோகூட எடுத்து வெச்சிருக்கேன். ராஜாக் குட்டியோடு…”

“அந்தச் சொந்தக்காரனும் எடுத்து வைத்திருக்கலாமில்லையா?”

“அதெப்படி… அவன் குரங்கு எந்தக் குரங்கோ…இதே குரங்குன்னு நிரூபிக்கட்டும்…”

“நோ! நோ…நம்ம ஸைடு கொஞ்சம் வீக்தான். சப்போசிங் கோர்ட்டில் கேஸ் நடக்கிறது. குரங்கை மாஜிஸ்திரேட் நடுவே நிற்க வைத்து இரண்டு பேரையும் ஒரே சமயத்திலே குரங்கைக் கூப்பிடச் சொல்கிறார். குரங்கு அவன்கிட்டே போய்விட்டால் உங்க கட்சியே தோற்றுப் போயிடுமே. உங்களுக்குப் பேராசை வேண்டாம்….குரங்கு கீப்பரைக் கண்டு பிடித்து பி·ப்டி பி·ப்டின்னு ஒப்பந்தம் பண்ணிக்கொண்டு விடலாம்”

“எனக்கு முழுசாக ஒரு பத்து ரூபாய் வருகிறது என்றால் உனக்கப் பிடிக்காதே….” அப்புசாமி பல்லைக் கடித்தார்.

“நாட் தட் ஐந்து ரூபாய் வந்தால்கூட லிடிகேஷன் எதுமில்லாமல் வரவேண்டும் என்ற பாலிஸி என்னுடையது. அன்டஸ்டாண்ட்”

“சீதே! நீ தற்கால மனுஷி மாதிரி நடித்தாலும், கற்கால மனுஷிதான். பணம், புகழ் இதெல்லாம் ஒரு குறுக்கு வழியிலே வந்தால்தான் இனிமே சுவாரசியம்.”

டெலிபோன் கிணுகிணுத்தது. ராஜா ஓடிச்சென்று டெலிபோனை எடுக்க முயன்றது.

“வாயிலேருந்து வால் நுனிவரை ராஜாவுக்கு மூளையோ மூளை, பார்த்தியா, வாய்ப்பக்கம் எது, காதுப்பக்கம் எதுன்னு தெரியுது பார் அதற்கு?”

“உங்களைவிட அதற்கு பெட்டர் அய் க்யூ…” என்றவாறு டெலியோனை ராஜாவிடமிருந்து வாங்கிப் பேசினாள்.

போலீஸ் அதிகாரி தனபால், “மேடம், ரொம்ப ஸாரி. கமிஷனர் உங்க வீட்டையும் சோதனை போடவேண்டுமென்கிறார். கழக எலெக்ஷனில் எப்போது மிஸஸ் பொன்னம்மா டேவிட்தான் போட்டி என்பதால் ஸாரிங்கம்மா ஸஸ்பெக்ட்ஸ் பட்டியலில் கடைசியாக உங்கள் பெயரும் இருக்கிறது.”

சீதாப்பாட்டி புருவத்தை லேசாக நீவி விட்டுக் கொண்டாள். பதட்டம் சிறிதும் இல்லாத குரலில், “கிவ்மீ டூ மோர் டேஸ் டைம். ஐ ஷல் ஹாண்ட் ஓவர் டு யு த ரியல் கல்ப்ரிட் ஆஸ் வெல் பொன்னம்மா டேவிட்!”

புதிதாக மாருதி கார் வாங்கிய போது தெருமூலை வரைகூடக் கூட்டிப்போக இஷ்டப்படாதவள் நாளைக்கு எங்கேயோ கூட்டிப் போகப் போகிறாள்.

‘நாம் போகிறோம்’

நின்னொடு ஐவரானோம் என்று ராமர் குகனைச் சகோதரனாக ஏற்றது போலக் கிழவி அவருக்குரிய கணவன் அந்தஸ்து தந்து ‘நாம்’ என்று கூட்டுச் சேர்த்துக் கொள்கிறாளே!

சில சிறிய நாடுகளுக்குப் பல நூற்றாண்டுகள் போராடிய பிறகுதான் சுதந்திரம் கிடைக்கும். மண்டேலாக்களைச் சரிசமமாக உட்கார அனுமதிப்பார்கள்.

“சீதே! எங்கே போகப் போறோம்? உன் பிறந்தநாளை வழக்கமாகக் கிழவிங்க கும்பலோடு வீட்டிலே தானே கொண்டாடுவே…ஹஹஹ” அதுகள் மீது உனக்கு வெறுப்பு! புரியுது புரியுது…. நீ உண்டாக்கிய கழகத்தின் மீதே உனக்கு வெறுப்பு! சீதே! இதுதாம்மா உலகம்!” என்று கெக்கலித்தார் அப்புசாமி.

“வில் யு ப்ளீஸ் கீப் கொய்ட்” என்ற சீதாப்பாட்டி, “கொஞ்சம் இடம் கொடுத்தால் நீங்கள் உங்களுக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களையெல்லாம் பேசறீங்க. நாளைக்கும் இதே மாதிரி பிதற்றுவதாயிருந்தால் ஐ கான்ஸல் த ஹோல் ட்ரில். வாட் டு யூ ஸே?” என்று ஓர் அதட்டல் போட்டதும் அப்புசாமி கப்சிப் ஆகிவிட்டார்.

ஏதாவது பேசப் போய் ‘நாம்’ அந்தஸ்தை அவள் வெடுக்கென்று பறித்து விட்டால்?

எந்த இடமாயிருக்கும்? இதிலே என்ன புரிய வேண்டியிருக்கிறது?

அப்புசாமிக்கு ஏ.யிலிருந்து இஸட் வரையிலான சகலவித டி.வி.காரர்களின் மீதும் கோபமாக வந்தது. எல்லாரும் புதிர் நிக்ழச்சிகள் போட்டுப்போட்டு அன்றாட வாழ்க்கையையே புதிராகச் செய்துவிட்டார்கள்.

அப்புசாமி பொழுது எப்போது விடியும் என்று காத்திருந்தார். சீக்கிரமே எழுந்து ஜிப்பாவுக்கு இஸ்திரி போட்டுக் கொள்ள வேண்டும். அதற்குள்ளே லாண்டிரி திறக்க மாட்டான்.

அழுத்தினால் தானே நீர் தெளித்துக் கொண்டு இஸ்திரி செய்யும் இஸ்திரிப் பெட்டி அதோ பீரோ மீது ஆனால் அதைத் தொட்டால் ஷாக் அடிக்கும்! ஷாக்கின் பெயர்: சீதே.

இருக்கவே இருக்கு டபரா… நாலு தணலைப் போட்டு கற்கால முறையில் ஒரு தேய் தேய்த்துக் கொள்ள வேண்டியதுது¡ன்.

மகாபலிபுரமாயிருக்குமோ? ஆனால் கிழவிக்கு மகாபலிபுரம் பிடிக்காதே… புதுக்கட்டிடங்கள் கட்டி புராதன அழகையே கெடுத்துக் குட்டிச் சுவராக்கி விட்டார்கள் என்று சொல்லுவாள்.

அய்! தங்கக் கடற்கரை! அதுவாகத்தான் இருக்கும். ஏதாவது ரூம் கீம் போட்டுக் கொண்டு, ஒரு நாள் பூராத் தன்னுடன் உல்லாசமாகத் தங்கிவிட்டு வரத் திட்டமிட்டிருப்பாளோ!

பெண்களின் மனசு ஆழம் என்பார்கள். கிழவிங்க மனசு இன்னும் படு, படு ஆழமோ இன்னாவோ.

எதுக்கும் நாம சல்லுனு இஸ்திரி ஜிப்பாவிலே, வழ வழக் கன்னத்தோடு இருக்கிறது நல்லது..

கறார் கண்டிப்பாக, கொலைகாரியாக, கொள்ளைக்காரியாக, பூலான் தேவியாகவே இருந்தாலும்கூட அவளும் பொண்ணுதான், புருஷனைப் பக்கத்திலே உட்கார வைத்துக்கிட்டு போட்டோவுக்குப் போஸ் தர ஆசைப்படுவாள்.

கோல்டன் பீச்சாக இருந்தால் அந்த நீள தோசை சாப்பிட்டுப் பார்க்கணும். ஆனால் அதை ஒழித்துக் கட்டறதுக்கு ஒரு கும்பலாய்ப் போனால்தான் தேவலை. கிழவிக்குத் தன் காரில் வேறு யாரும் ஏறுவது பிடிக்காது. ரசகுண்டு, பீமாராவ் இதுகளையும் அப்படியே வளைச்சுப் போட்டுகிட்டுப் போனால் செம தூளாயிருக்கும்.

ஆனால் அதைக் கிழவிகிட்டே சொன்னால் அவரையே தூள் பண்ணிடுவாள்.

சீசீ! அவர்களெல்லாம் இப்பகூடாது. சீதோ ஏதோ ஆசையாக அபூர்வமாக, ஒரு நாளைத் தன்னோடு கழிக்க ஆசைப்படறாள். சில நேரங்களில் சில நண்பர்கள்.

இப்பல்லாம் நண்பர்களைக் கூட்டிட்டுப் போகக்கூடாது. நியாயமில்லை.

இத்தனை வயசு கழித்து அவள் தன்கிட்டே சந்தோஷமாக என்ன பேசப் போகிறாள். “நாதா!” என்பாளா?

அதெல்லாம் கர்நாடகமான சினிமாவில், இப்போ வெல்லாம் புருஷனை ‘யார் நாதா’ என்கிறார்கள். சில படிச்ச பொண்ணுங்க, பெயரைச் சொல்லிக் கூப்பிடுதுங்க. இன்னும் சில படித்த பெண்கள் ஆம்பிளையைப் பொம்பிளை பண்ணிடுதுங்க. புருஷனை, “என்னம்மா நீ… ஏம்மா நீ…” என்கிறாங்க.

இவன் அவளை ஆம்பிளை மாதிரி நினைத்து ‘இருடா வந்துடறேன். பொறுடா கொஞ்சம்.’ என்று பேசுகிறான்.

சீதே தன்னைப் பெயர் சொல்லி எந்த ஜென்மத்திலோ அழைத்தது அவருக்கு ‘மலரும் நினைவு’ ஆக மலர்ந்தது.

முதலிரவின் போது பாலைக் கொடுத்துவிட்டு ராத்திரி பூரா உட்காராமல் நின்று கொண்டே இருந்தாள். அப்புசாமியும் ராத்திரி பூரா உட்கார்ந்து கொண்டே தூங்கி முடித்தார். (லட்டு, திரட்டுப்பால் எல்லாம் தூக்கத்திலேயே சாப்பிட்டாயிற்று)

ஒரு பத்து நாள் கழித்த பிறகு பெரியப்பா வீட்டுக்கு விருந்து சாப்பிடக் கூண்டு வண்டியிலே போகிறபோது, வண்டி குலுங்கிப் புது மனைவியின் நெற்றியும் அவர் நெற்றியும் இடித்துக் கொண்டு விட்டது.

அப்போதுதான் சீதே, “வந்து… வந்து…” என்று ஏதோ தயங்கினாள்.

அப்புசாமி, “நாசமாய்ப் போகிற ரோடு!” என்று மங்களகரமாக மனைவியுடன் முதல் டயலாக்கைப் பேசினார்.

“இல்லே வந்து…” புது மணமகள் சீதேயின் கன்னங்கள் காலில் இட்டிருந்த நலங்கு மாதிரி சிவந்தது.

‘பர்ஸ்ட்டு கிளாஸ் குட்டியாத்தான் புடிச்சிருக்கோம்’ என்று அப்புசாமி பெருமிதப்பட்டுக் கொண்டார்- மனைவியின் அழகை ரசித்து.

“வந்து… வந்து,” என்றாள் சீதே.

“சொல்லுடி குட்டி, என்னை எப்படிக்கூப்பிடணும்னு தெரியலியோ? இங்கே பாரு, என்னை ‘உங்களைத்தானே… ஏன்னா… ‘கீன்னா’ன்னெல்லாம் கர்நாடகமாக் கூப்பிடாதே. அதெல்லாம் பிடிக்காது. ‘டேய் மடையா’ன்னு கூப்பிடு…ரொம்பப் பிடிக்கும்” என்று சொல்லிச் சிரித்தார்.

புராணக் கதைகளில் சில ராட்சஸர்கள் வரம் கேட்கும் போது தங்களை அறியாமல் ஏதாவது உளறி விடுவார்கள். அதுவே பலித்து அவர்களை ஒருவழி பண்ணிவிடும்.

தான் கேட்டுக் கொண்ட வரமும் அப்படித்தான் ஆகிவிட்டது என்று பிற்காலத்தில் மனைவியிடம் திட்டுவாங்கும் போதெல்லாம் நினைத்துக் கொள்வார்.

அந்தப் பழைய சீதை புதுமணமகன் அப்புவின் நகைச்சுவையைக் கேட்டு முகத்தை மூடிக்கொண்டு பெரிசாக அழவே அழுது விட்டாள்.

“அடடே! நான் விளையாட்டுக்குச் சொன்னேன்” என்று சொன்னாரே தவிர, அந்தப் பொத்திய கையை எடுத்து விடுகிற சாக்கில் தொட வேண்டுமென்கிற ரசனை தோன்றவில்லை.

அப்புறம் சீதே தானே தேற்றிக் கொண்டு, “ஒரு தரம் இடிச்சுக்கக் கூடாது. ஆகாது. மூணு தரம் இடிச்சுக்கணும்னு சொல்லுவாங்க” என்று விஷயத்தைக் கூறி முடித்தாள்.

அப்புசாமி அப்புறம் மனைவி தலையோடு இரண்டு தரம் முட்டிக் கொண்டார் எவ்வளவு இன்பமான கிளுகிளுப்பான மோதல்.

இப்போ மோத விட்டால் கிடா சண்டையில் ஆடும் ஆடும் மோதுகிற மாதிரி முட்டிக் கீழே ஒரே சாயாக சாய்த்துத் தள்ளி விடுவார்.

சே! சே! கியவி ரொம்ப நல்ல கியவி! இல்லாவிட்டால் பிறந்தநாளன்று தன்னோடு நாள் பூராக் கழிக்கணும்னு ஆசைப்படுவாளா?

ஆனால் எங்கே கூட்டிக் கொண்டு போகப் போகிறாள்?

கார், தரமணியை நெருங்கிக் கொண்டிருந்தது,

“¨ஹாயோ! சீதேய்! சீதேய்! நீ ஒரு சூப்பர் லேடி!” அப்புசாமி குதூகலித்தார். “என் மூளைக்கு எட்டவே இல்லையே. திரைப்பட நகருக்கா நாம் போகிறோம்? சபாஷ்! காலையிலிருந்து சாய்ந்தரம் வரை இங்கேயே தங்கி ஷ¥ட்டிங்கெல்லாம் பார்த்துவிட்டு… சீதே! உன் மூளையே மூளை! வாழ்க ஜெ! வாழ்க சீதே!”

ஆனால் கார், திரைப்பட நகரில் நுழையாமல் வேறு எங்கோ ஒரு பொட்டலை நோக்கிச் சென்றது.

‘வாராய் நீ வாராய்’ என்று பழைய மந்திரகுமாரி படத்தின் பாட்டு எங்கேயோ ஒலித்தது. அந்தச் சினிமாவில் வருகிற மாதிரி சீதே தன்னை மலையுச்சிக்குக் கூட்டிப்போய் உருட்டிவிட்டுவிட ஏதாவது சதி பண்ணுகிறாளோ?” சதி சீதா.

“அடியே கியவி! ‘கொலையும் செய்வாள் பத்தினி’ என்கிற பழமொழியை நிஜம் பண்ணி விடாதேடி…

அவர் பயந்து நடுங்கிக் கொண்டிருந்த போது கார் ஒரு விசாலமான காம்பவுண்டுக்குள் நுழைந்தது.

நுழைவாயிலில் இருந்த பெயர்ப் பலகையைப் பார்த்ததும் அப்புசாமி, “அடியே! துரோகி, சண்டாளி, பாதகி, வஞ்சகி, குள்ளநரி ஓநாய்! பெனாஸீர்! அணுகுண்டு! இப்படி ஒரு கெட்ட எண்ணமா? சதித்திட்டமா?” என்று கூவியவாறு கார்க் கதவைத் திறந்து கொண்டு வெளியே குதிக்க முயன்றார்.

“காம்டெளன் ப்ளீஸ்! காம் டெளன்… இப்ப என்ன ஆயிட்டுதென்று இப்படிக் கூச்சல் போடறீங்க…மைண்ட் யூ! நீங்க கத்தினீர்களானால் வாட்ச்மேனிடம் உங்களை ஒப்படைக்க வேண்டி வரும்.” என்றாள் சீதாப்பாட்டிகறார் கண்டிப்பாக.

அப்புசாமியின் கண்களில் அந்தக் காம்பவுண்டின் பெயர்ப் பலகை மீண்டும் தெரிந்தது.

முதியோர் அனாதை விடுதி!

நுழைவு: இலவசம்,

திரும்பிய பக்கமெல்லாம் சுவரில், மரத்தில் ஏதாவது ஓர் அறிவிப்பு.

‘பேருவகை தருவது பெரியோர் சேவையே.’

மேலும் சில அறிவிப்புக்கள்.

‘அனுபவங்களை அலட்சியம் செய்யாதீர்.’

‘முதியோரெல்லாம் முதியருமல்லர், புதியோரெல்லாம் புதியருமல்லர்.’

‘தந்தை தாய் பேன்!’ (மூன்று சுழி ‘ண்’ போடுவதற்கு பதில் இரண்டு சுழி ‘ன்’ போட்டுப் பெற்றோரைப் பேன் செய்திருந்தார்கள்.)

ஓலைக் குடிசைகள், அஸ்பெஸ்டாஸ் ஷீட் குடிசைகள், அசல் கட்டிடங்கள், மரத்தடி, என்று பல வகையான வசிப்பிடங்களில் ஆங்காங்கே முதியோர் சிறுசிறு தொகுதிகளாக, லாட்ஜ் சுவர்களில் மூட்டைப் பூச்சிகள் பதுங்கியிருப்பது போல் தெரிந்தும், தெரியாமலும் காணப்பட்டனர்.

சுறுசுறுப்பான ஒல்லியான, குள்ளமான, மினிக்கிழவர் ஒருத்தர் தண்டவாள மணியை டங்டங்டங் என்று இரும்புக் கரண்டியில் அடித்து ஓசைப்படுத்தினார்.

உடனே காம்பவுண்டு பூராச் சிதறியிருந்த கிழவர்களும், கிழவிகளும் கெலிடாஸ்கோப்பைத் திருப்பிய மாதிரி, நாலா திசையிலிருந்தும் வந்து ஓர் ஒழுங்காகவும் அதே சமயம் ஒழுங்கு இல்லாமலும் அங்கங்கே சிறுசிறு க்யூவாகி நின்றனர்.

காலை எட்டு மணிக்குச் சத்துணவுக் கஞ்சியைச் சிலர் விரும்பினர். சிலருக்கு டீ. சிலர் சுக்குக் காப்பி.

எல்லோரும் ஓர் இனம், எல்லோர்க்கும் ஓரே கஞ்சி, எல்லோரும் இவ்விடுதி மன்னர் என்றாலும், ஒற்றுமையில் வேற்றுமையாக பல ருசி உடையவர்களாக இருந்தனர்.

“சீதே…” அப்புசாமிக்கு வியர்த்துக் கொட்டியது.

டியூபில் ஒட்டை இல்லாத நல்ல ரக, ரத்த அழுத்தக் கருவியைக் கொண்டு கலந்து பி.பி.யை அளவெடுத்திருந்தால் மேலே முன்னூறு கீழே நானூறுகூட இருந்திருக்கும்.

“அடியே பாதகி! என்னைக் கொண்டு வந்து இங்கே தள்ளிவிட்ப் போவதுதான் உன் பிறந்தநாள் திட்டமா?”

சீதாப்பாட்டி அவர் தோளை லேசாகத் தட்டித் தந்தாள்.

“நான் ஒருத்தி உயிரோடு இருக்கிறவரை யு கான்ட் பிகம் எ டெஸ்ட்டியூட்! போய் டிக்கியைத் திறந்து பேக்கட்ஸ¤களை யெல்லாம் எடுத்திட்டு வாங்க…” என்று மனைவி சொன்னதும்தான் அவருக்குப் போன உயிர் திரும்பியது அவள் நோக்கமும் புரிந்தது.

கார் டிக்கி முழுவதும் ஸ்வீட், காரம் இன்னும் பல வகையான பேக்கட்டுகள் அடைத்து வைத்திருந்தாள் – விடுதியிலிருந்த முதியவர்களுக்கு வினியோகிக்க.

விடுதியின் தலைவியைச் சீதாப்பாட்டி முறைப்படி பார்த்துப் பேசிவிட்டு வந்தவுடன், ‘லெட் அஸ் ஸ்டார்ட்…” என்று சொல்லி விட்டு, ஸ்வீட் பாக்கெட் ஒன்றை தலைவர்கள் செடி நடும் நிகழ்ச்சி போல ஒரு பாட்டியம்மாளின் கையில் கொடுத்துச் சேவையைத் துவக்கிவிட்டு, “இனிமேல் டிஸ்ட்ரிப்யூஷனை நீங்கள் செய்யலாம்” என்று அப்புசாமிக்குக் கட்டளை இட்டு விட்டுத் தலைவியின் ஏஸி அறைக்குப் போய்விட்டாள் சீதாப்பாட்டி, முக்கியமான விஷயம், ஏதோ பேச வேண்டுமென்று.

முக்கிய விஷயமென்ன! வெ ளியே நின்றால் வெயில் மண்டையை உடைக்கிறது. தலைவி ரூம் என்றால் ஏஸியில் ஜாம்மென்று இருக்கலாமே’ – (அப்புசாமியின் ஊகம்)

கொஞ்ச நேரத்திலேயே அப்புசாமிக்கு சமூக சேவை அலுத்துச் சலித்துவிட்டது! இரண்டெரு காரா சேவைவாயில் போட்டுக் கொண்டாலும் கூட சமூக சேவை அவருக்குப் பிடிக்கவில்லை. ஏண்டா அந்த இடத்துக்கு வந்தோம் என்றாகிவிட்டது.

மனசிலே பெரிய அன்னை தெரசான்ன்னு நினைப்பு என்று பாட்டியை நினைத்துப் பல்லை நறநறத்துக் கொண்டார்.

முதியவர்களுக்குப் பொட்டலங்களை வினியோகிக்க வேண்டிய மாபெரும் பணியை நிறைவேற்றவே அவரைச் சீதாப்பாட்டி அழைத்து வந்திருக்கிறாள் என்பது அவருக்குப் புரிந்தது.

வந்தோமா, விடுதித் தலைவியிடம் எல்லாவற்றையும் கொடுத்தோமா, விடை பெற்றோமா என்கிற மாதிரியாயிருந்தால் பரவாயில்லை.

ஒவ்வொரு கிழவன் கிழவியாக, அவரவர், இருந்த இடத்துக்கே கொண்டு சென்று, முக மலர்ச்சியுடன் கும்பிடு போட்டு, சில பத்திரிகைகளின் இலவச இணைப்புக்கள் போல, ஒரு ஸ்வீட், கார பாக்கெட், ஒரு சோப்பு, ஒரு சீப்பு, ஒரு டவல், ஒரு கமகம ·ப்ரெஷ்னர் பாக்கெட் இத்தனை அயிட்டங்களைத் தரவேண்டும்.

‘எத்தனை கோடி கிழவர் வைத்தாய் இறைவா, இறைவா என்று அப்புசாமி கதறிவிட்டார். பெண்டு நிமிர்ந்துவிட்டது. கால் கெஞ்சியது.

தூக்கிப் போட்டால் காட்ச் பிடித்துக் கொள்கிற சாமர்த்தியமும் முதியவர்களிடம் இல்லை என்பதையும் அப்புசாமி இரண்டொரு ஸ்வீட் பாக்கெட்டுகளை வீசிப் பார்த்ததில் தெரிந்துகொண்டுவிட்டார்.

மெல்லிசாக வெளுத்த உயரமான ஓர் ஒல்லிக் கிழவி, சில ‘லொக்கு லொக்கு’களை எ·ப் எம் அலைவரிசையில் துல்லியமாக ஒலிபரப்பிக் கொண்டு வண்டலூர் சாஸ்வதக் கொக்கு மாதிரி தனியாக ஒரு மரத்தடியில் நின்றிருந்தாள்.

தனிமை விரும்பி போலும்.

அப்புசாமி ஒரு ஸ்வீட். ஒரு சோப்புக்கட்டி தருவதற்குப் பதில் இரண்டு சோப்புக் கட்டிகளாக, அச்சுப் பிழையாக வினியோகித்து விட்டார்.

(உடம்பு மிகவும் களைத்திருந்ததால் சில மீட்டர் தூரத்திலிருந்தே பாக்கெட்டுகளை அப்புசாமி வீசிப் போட்டார் என்று சொல்வோருமுளர்.)

அந்தக் கிழவி சோப்புக் கட்டியைக் கடித்துவிட்டு “தூதூ!” என்று துப்பினாள். கண்ணில் வோல்ட்டேஜ் குறைவு போலும், அப்புசாமி அடுத்த வாக்கியத்திலேயே அவசரமாகப் பிழைத் திருத்தம் வெளியிட்டார்.

“பாட்டீம்மா! அது சோப்புக் கட்டி சோப்புக்கட்டி!” என்று கத்தினார். “இந்தாங்க ஸ்வீட் காரம் பாக்கெட்! புடிச்சுக்குங்கோ பாட்டீம்மா காட்ச்!”

கிழவி ஓர் உறுமு உறுமினாளே பார்க்க வேண்டும்! இருபது பைசா மெழுகுவத்தி மாதிரி படு ஒல்லியாக உள்ள அந்த உடலிலா அவ்வளவு பெரிய இடிக்குரல்…

“பாட்டீம்மாவா? யாருடா பாட்டீம்மா… நீ ரொம்ப பேரம்மாவா? நீ ஒரு கிழவன்… என்னைப் பார்த்து நீ பாட்டீம்மா என்கிறாயா? நீ ஸ்வீட் கொண்டு வந்து தரலையென்று யாராவது அழுதாங்களா? கொடுத்தால் அழகாக மரியாதையாகப் பக்கத்தில் கொண்டு வந்து தந்து, ‘இது ஸ்வீட்டுங்க… சாப்பிடுங்க….’ன்னு கையிலே எடுத்துத் தரணும் சாப்பிட்டு முடிக்கிற வரையில் பக்கத்திலேயே இருந்து விக்கினால் தண்ணி எடுத்துத் தந்து ஒரு மரியாதை கிடையாதா? ஸ்வீட்டும் காரமும் நீயும்!” என்று அப்புசாமி தந்தவைகளை அவர முகத்திலேயே வீசி எறிந்தாள்.

ஒரு சிறு காராசேவுத்தூள் ஜூபிடரில் மோதிய விண்கல் போல அப்புசாமியின் கண்ணை வந்து தாக்கியது.

அப்புசாமி பொறுமை இழந்தார்! “அடியே சாவு கிராக்கி!” என்று கூவினார் கண்ணெரிச்சல் தூண்ட.

“இந்தத் தெனா வெட்டுதாண்டி இந்த விடுதிக்கு உன்னைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது. தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் புடிச்சுப் பார்க்கிறியா?” என்று கூவி விட்டார்.

கிழவி தன் கையிலிருந்து வாக்கிங் ஸ்டிக்கை அப்புசாமியை நோக்கி வீசி எறியெறிந்தாள். “பொறுக்கிப் பையா?”

அப்புசாமி “நீதாண்டி கிறுக்கி, …கிறுக்கி, இறுக்கி …றுக்கி, டிறுக்கி, ணிறுக்கி, திறுக்கி, நிறுக்கி, பிறுக்கி, மிறுக்கி, யிறுக்கி, ரிறுக்கி, லிறுக்கி, விறுக்கி, ழிறுக்கி, ளிறுக்கி, றிறுக்கி, னிறுக்கி” என்று ஆசை தீர தெளஸண்ட் வாலாப்பட்டாசு சரம் மாதிரி திட்டித் தள்ளினார்.

இதற்குள் அக்கம் பக்கத்திலிருந்து சில முதியவர்கள் கூடி விட்டனர். ஓட்டலில் சப்ளையரைத் திட்டி விட்டால் எல்லா சப்ளையர்களும் குழுமி விடுவார்களே அதுபோல, ‘அப்புசாமி நடந்து கொண்டது மரியாதைக் குறைவு. அவர் ஏழெட்டு மீட்டர் நீளத்துக்குத் திட்டினதற்கு அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்பது போலச் சில கிழங்கள் போர்க் கொடியை உயர்த்த முயன்றனர்.

சீதாப்பாட்டியுடன் பேசிக் கொண்டிருந்த விடுதித் தலைவி, வெளியே மரத்தடியில் ஏதோ கலாட்டா என்றதும் ஸ்தலத்துக்கு விரைந்தாள்.

“ஸிஸ்ட்டர் இந்தக் கிழவர் நம்ம மேடத்தை கிறுக்கி அது இதுன்னு நீளமாகத் திட்டி, ஸ்விட்டுகளை வீசி அவளைத் தாக்கினார் ஸிஸ்ட்டர்!”

“நம்ம மேடத்தையா?” அதிர்ச்சியடைந்த தலைவி… மரத்தடிக்கிழவியிடம் விரைந்து சென்று அவளது கையைப் பிடித்துக் கொண்டு, “மேடம்ஜி! எனக்காக இந்த ஆளை மன்னித்து விடுங்கள். நான் உடனே இதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதியின் ஓய்வு பெற்ற மனைவி தலைமையில் ஒரு கமிட்டி போடுகிறேன்… என்று சமாதானப்படுத்தினாள்.

ஒல்லிக் கிழவிக்குக் கோபத்தில் மூச்சு இரைத்தது. “ராஸ்கல்! என் மேலே சோப்பை வீசி அடிக்கிறான். ஸ்வீட்டை வீசி அடிக்கிறான். இவனையெல்லாம் யார் உள்ளே விட்டது…”

“ரொம்ப ரொம்ப மன்னியுங்கள்…” என்று கெஞ்சிய விடுதித் தலைவி அப்புசாமியைப் பார்த்து, “தயவு செய்து மேடத்திடம் உடனே மன்னிப்புக் கேளுங்கள் காலில் விழுவது கூட நல்லது…” என்றாள் குரலைத் தாழ்த்திக் கொண்டு,

அப்புசாமி, “யாமார்க்கும் குடியல்லோம். கிழவி அஞ்சோம்”, என்று எதிர்க்குரல் கொடுத்தார். “பலகாரம் கொண்டு வந்து கொடுத்திட்டுப் பணிவிடையும் செய்யணுமா இந்தக் கிழவிக்கு? தாவாக் கட்டையைப் புடிச்சிகிட்டுக் கெஞ்சினாத்தான் சாப்பிடுவேன்னு கூடச் சொல்லுவாள்.”

அப்புசாமியை மிருதுவான ஸ்பான்ச் கரம் அழுத்தமாகப் பற்றியது.

“கொஞ்சம் இப்படி வர்ரீங்களா? ப்ளீஸ்…” சீதாப்பாட்டிதான்.

“சீதே! இந்தக் கியவி?…” அப்புசாமி கொதித்தார்.

“ப்ளீஸ்… டோன்ட் க்ரியேட் எனிமோர் ஸீன்ஸ். அந்த மேடம் யார் தெரியுமா? அவளைத் தூரத்தில் பார்த்ததும் எப்படிப்பட்ட அதிர்ச்சி எனக்கு ஏற்பட்டது தெரியுமா? அவள் விஷயமாகப் பேசத்தான் தலைவியின் அறைக்குப் போனேன், யுநோ ஹ¥ஷீ இஸ்?”

“பூலான் தேவியா?” என்றார். அப்புசாமி சம்பந்தமில்லாமல்.

“முதலிலே அவளிடம் உங்கள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்ற சீதாப்பாட்டி விரைந்து சென்று அந்த விஸ்வாமித்திரக் கிழவியின் மெலிந்த கைகளைப் பற்றிக் கொண்டு… “எக்ஸ்ட்ரீம்லி ஸாரி மேடம்… என் கணவருக்கு பி.பி. ஷ¤ட் ஆகிவிட்டது. ஆல் த வே ஸ்டிரெய்ன் பண்ணிக் கொண்டு வந்தததால் அவர் எதாவது தவறுதலாக நடந்து கொண்டிருந்தால் எனக்காக அவரை மன்னித்து விடுங்கள்… மேடம்ஜி! யு ரிமெம்பர் மி?” என்றாள்.

வெடுக்கென்று சீதாப்பாட்டியின் கைகளை அந்தக் கொக்குக் கிழவி உதறினாள். “எனக்கு யாரையும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. என் தனிமையைக் கலைக்காதே – நீ யாராயிருந்தாலும் எனக்கு அக்கறையில்லை.”

சீதாப்பாட்டி கூனிக் குறுகிப் போய்விட்டாள்.

அப்புசாமி மனத்துக்குள், ‘வேணும் குட்டிக்கு வேணும்’ என்று மகிழ்ச்சி அடைந்தவராக. “இன்னாமே அந்தக் கெயவி உன் மூக்கை இப்படி உடைச்சிட்டாளே… செரியான தெனாவட்டுக் கேஸ் போல கீது… காரைப் போட்டுகினு இவ்வளவு தொலவு வந்து மனுசங்க காரா சேவுப் பொட்டலத்தைத் தராங்களேன்ன ஒரு பிரியம் பாசம் இருக்குதா பார்த்தியா அந்தக் கிழவிக்கு! என் மூஞ்சி மொகரையுலேயே பொட்டலத்தைத் தூக்கி எறிஞ்சி… சீதே! நான் உன் ஒருத்திகிட்டேதான் அவமானப்படலாம். ஊரிலே போகிற வருகிற, இருக்கிற, இனி கிழவி ஆகப் போகிற கிழவிவங்களெல்லாம் என்னை அவமானப்படுத்தினாலும் சும்மா இருக்கனுமா? நான் ஆம்பிளைடி… அக்மார்க் ஆம்பிளை!”

சீதாப்பாட்டி அவரைச் சமாதானம் செய்யாமல், திட்டிய கிழவியிடம் சமாதானப்படுத்தும் குரலில், “ஸாரி வி ஹாவ் டிஸ்ட்டர்ப்ட் யூ… எங்கள் பா.மு.க. ஆல்வேஸ் ரிமெம்பர் யூ என்றாள்.

“ஏண்டி, இப்ப நீ போறியா இல்லியா? போ போ எல்லாரும் போங்க! நாசமாப் போங்க”

கிழவி கூச்சலிட்டாள்.

விடுதியின் தலைவி, “சரி, சரி. மேடத்தை யாரும் தொந்தரவு பண்ண வேண்டாம்… எல்லாரும் அவுங்க அவுங்க செக்ஷனுக்குப் போங்க…” என்று வேடிக்கை பார்க்கக் கூடிய முதிய பெண்மணிகளை விரட்டினாள்.

வினியோகத்தை ஒருவாறு முடித்துக் கொண்டு சீதாப்பாட்டி அப்புசாமியிடம் திரும்பிக் கொண்டிருந்தபோது ஸ்டியரிங் வீலைப் பற்றியிருந்த சீதாப்பாட்டியின் சிந்தனை வேறெங்கோ இருந்தது.

“கிரீச்!” என்று எதிரே வந்த ஓர் ஆட்டோ வீரிட்டு திசைமாறிச் சமாளித்து, விலகியது.

சீதாப்பாட்டி தன் நினைவின்றிப் பிரேக்கை அழுத்திச் சுய நினைவுக்கு வந்து “ஸாரி மிஸ்ட்டர்!” என்று ஆட்டோ டிரைவரிடம் மன்னிப்புக் கேட்டாள்.

அவன் உன் ‘ஸாரியைக் கொண்டு போய் எதிலேயோ போடு,” என்று கெட்ட வார்த்தையில் திட்டி விட்டுப் பறந்தான்.

சீதாப்பாட்டி பிரேக் அடித்த வேகத்தில் டாஷ் போர்டில் தலையை மோதிக் கொண்ட அப்புசாமி, “அடியே பார்த்துடி பாவி பார்த்து! பிறந்த நாள் செத்த நாளா ஆயிடப் போகுதுடி” என்றார்.

“ரியலி ஸாரி, அடி கிடி பட்டுதா? நல்லவேளை, அந்த ஆட்டோ மேன் கெட்டிக்காரன். அதர்வைஸ் பெரிய ஆக்ஸிடெண்ட்டே நடந்திருக்கம். தாங்க் காட்…” என்றவள், “உங்களைக் கோபித்துக் கொண்டாளே அந்த மேடம் யார், உங்களுக்க ஞாபகமிருக்கிறதா? நீங்ககூட ஒரு தடவை அவளைப் பார்த்திருக்கிறீர்கள்?”

“சின்னக் குழந்தையிலா?” என்றார். அப்புசாமி, “உன்னை ஞாபகம் வைத்துக் கொள்வதே கஷ்டமாயிருக்கிறது. ஊரிலிருக்கிற கிழவிகளைத்தான் ஞாபமிருக்கப் போகிறதோ”

“அந்த லேடியை அனாதை விடுதியில் பார்த்ததும் ஐ வாஸ் ஸோ ஷாக், யு நோ… ஷி வாஸ் எ மில்லியனர். இன்றைக்கு பா.மு.க. ஒரு கட்டிடத்திலே கம்பீரமாக இயங்கி வருது என்றால் அதற்குக் காரணம் அந்த மேடம் வாரிக் கொடுத்த டொனேஷன்தான். இன்·பாக்ட் கட்டடிமாகவே டொனேட் செய்து விட்டாள். சகந்தலா வரதன்னு நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்களே… அவள் இப்படி அனாதையாக… ஐ காண்ட் பிலீவ் அவள் ஏன் விடுதிக்கு வந்துவிட்டாள். தெரியுமா உங்களுக்கு?”

அப்புசாமி கொட்டாவி விட்டார். “வண்டியையும் உன் பேச்சையும் கொஞ்சம் நிப்பாட்டுமே… சமூக சேவை செய்து செய்து உடம்பு ரொம்ப களைப்பாயிட்டுது. கால் டஜன் கூல் டிரிங்க்ஸ் அடித்தால்தான் உடம்பு தேறும்…”

சீதாப்பாட்டி மறுப்புச் சொல்லாமல், “பை ஆல் மீன்ஸ்” என்று காரை சாலையின் ஒரத்திலிருந்த ஒரு குளிர்பானக் கடை அருகே மர நிழலில் நிறுத்தினாள். இஞ்சினும் சற்றுச் சூடு ஆறினாற் போலிருக்கும் என்று உணர்ந்தவளாகக் கணவனுடன் குளிர்பானக் கடைக்குள் நுழைந்தாள்.

“ஹை! கோன் ஐஸ் கூட…” என்றார் அறிவிப்புப் பலகையைப் பார்த்து ஆனந்தித்து.

“இப்ப போடறதில்லிங்க… கப் ஐஸ்தாங்க. ஓடுது…” என்றான் கடைக்காரன்.

‘கப் ஐஸ் ஓடுதா? சரி. கப்புனு அமுக்கிடறேன்…’ சீதே! முதல்ல ஐஸ் கிரீம். அப்புறம் கூல் டிரிங்… இன்னன்றே? நிறைய சமூக சேவை செய்திருக்கிறேன்… அந்தப் புறம்போக்குக் கிழவிகிட்டே திட்டு வேறு வாங்கிட்டிருக்கிறேன்…”

“தட்ஸ் ஆல் ரைட்!” என்று சீதாப்பாட்டி அவரது வேண்டுகோளுக்கெல்லாம் பச்சைக்கொடி காட்டிவிட்டுத் தான் ஒரு கிரஷ் வாங்கிச் சிறிது உறிஞ்சிவிட்டு, வைத்து விட்டாள். “மெதுவாகச் சாப்பிடுங்க… ஒன்றும் அவசரமில்லை. நான் வேண்டுமானால் காரில் போய் ரிலாக்ஸ் எடுக்கட்டுமா?”

அப்புசாமி சட்டென்று சீதாப்பாட்டியின் புடவை நுனியை ஒரு சட்டசபை இழுப்பு இழுத்துத் தன் வேட்டி நுனியுடன் அவசரமாக முடிச்சப் போட்டுக்கொண்டார்.

திகைத்துப் போய்ச் சீதாப்பாட்டி, “வாட்ஸ் திஸ் நான்ஸ்சென்ஸ்… என்றாள் கடுமையாக, “யு ஆர் இன் காரிஜிபிள்!”

“சரிதான் போமே… உன்னை நம்பறதுக்கில்லேம்மே, நம்பறதுக்கில்லே. என்கிட்டே காரியத்தை வாங்கி கிட்டு விட்டே. சாப்பிட்டதுக்குப் பணம் தராமல் என்னை மாட்ட விட்டுட்டு நைஸா நீ போனாலும் போயிடுவே.”

“ஸில்லி!” சீதாப்பாட்டி சிரித்தாள். “வயசானவர்களின் அவநம்பிக்கைக்கு நீங்கள் ஒரு டிபிகில் எக்ஸாம்பிள் இந்தாங்க, பர்ஸை நீங்களே வைத்துக் கொள்ளுங்க. ப்ளீஸ். முடிச்சை மட்டும் அவிழ்த்துவிட்டு விடுங்கள்,” என்று அப்புசாமியிடம் பர்ஸைத் தந்தாள்.

அப்புசாமி நம்பிக்கை ஏற்படாமல் பர்ஸைத் திறந்து பார்த்தார்.

நிஜமாகவே பர்ஸில் பணமிருந்தது.

“உன்னை நம்புறதுக்கில்லேடிம்மே. மசால் தோசை இரண்டு சாப்பிட்டேன் என்கிறதுக்காக என்னை அம்போன்னு மாட்டிவிட்டுட்டுப் போனவள்தானே?” என்றார் அப்புசாமி பர்ஸிலிருந்து நூறு ரூபாய் நோட்டு ஒன்றை உருவி முன் ஜாக்கிரதையாகத் தன் பையில் வைத்துக் கொண்டு.

சீதாப்பாட்டி சிரித்தாள். “இன்னும் நீங்க அந்த இன்ஸிடென்ட்டை மறக்கவில்லையா? இதெல்லாம்தான் முதியவர்களின் நெகடிவ் ச சப்ஜெக்ட். ஒரு மகனோ பேரனோ, மருமகளோ எப்போதோ கோபத்திலே சொன்னதையோ செய்ததையோ மனசுக்குள்ளேயே வைத்துக் கொண்டுருக்கிற பழக்கம் தப்பு, ·ப்ரெட்டிங் அண்ட் ·ப்யூமிங் கூடவே கூடாது.

“அவர்கள் செய்த நல்லது, அவர்களிடமுள்ள நல்ல குணங்கள் அதைத் திரும்பத் திரும்ப நினைக்கிறதுதான் உடம்புக்கும் மனசுக்கும் ஆரோக்கியம். மேன் இஸ் மேட் அ·ப் எரர்ஸ் யு ஸீ. டு எர்ர் இஸ் ஹ்யூமன் என்பார்கள். எல்லாருமே தப்பு செய்கிறவர்கள்தாம். யார்கிட்டேயும் குற்றம் கண்டு பிடிக்கலாம். மனுஷங்களே வேண்டாமென்று மிஸன்த் ரோப்பாக இருக்கலாம். அது ஈஸி, ஆனால் அப்படி வெறுக்கிறவர்கள் கதியெல்லாம், கடைசியில் மிஸஸ் சகுந்தலா வரதன் கதிதான். தனது லட்சக்கணக்கான சொத்துக்களை அனாதை விடுதிக்கு டொனேட் பண்ணிவிட்டு அவளும் இங்கேயே வந்து விட்டாள்.”

“லூஸ் கிராக்கியாயிருக்கும்.”

“நோ. நோ. ஷி இஸ் பர்·பெக்ட்லி ஹேன். த பிடி இஸ் அவள் அவள் அன்பை. அ·பெக்ஷனைப் புரிந்துகொண்டு ரெஸ்பாண்ட் பண்ண அவளுக்கு மனிதர்களில்லை. அவளும் மனப்பூர்வமாக யார்கிட்டேயும், பிரியமாக இருந்ததில்லை, இருக்க விரும்பவில்லை.”

“அவள் நிலைமை அப்படியாயிருக்கும்” அப்புசாமி இடது கண்ணைப் பட்டென்று அடித்து, “நான் கூடத்தான் என் பிரியத்தையெல்லாம் உன் மேலே பிழிபிழின்னு இடியாப்பம் பிழியற மாதிரி பிழிய ஆசைப்படறவன். ஆனால் நீ என் தலையிலே எலுமிச்சம் பழம் பிழியறவளாக இருக்கிறே?” என்றார்.

“நீங்க ஒரு எக்ஸப்ஷனல் கேஸ். வாட் ஐ ஆம் டிரையிங்கப் இஸ்… டைஜஸ்டிலேகூடப் போட்டிருந்தது. வீடுகளிலே செல்லப் பிராணிகள் வளாக்கிறார்களே, நாய், பூனை, கிளி என்று. அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் அதிகமாக வருகிறதில்லையாம். என்ன ரீஸன்னா, அவர்களுக்குத் தங்கள் அன்பைக் காட்ட ஒரு வென்ட், ஐ மீன் அவுட்லெட் இருக்கிறது. செல்லமாகப் பூனை உங்கள் காலை உரசிக்கொண்டு உங்களையே சுற்றிச்சுற்றி வருகிறபோது, உங்களுக்கு ஒரு மகிழ்ச்சி இம்பார்ட்டன்ஸ் ஏற்படுகிறது… நீங்கள் யாராலோ விரும்பப்படுகிறீர்கள் என்கிற உணர்வு வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியம்.

“உங்களைத் தெருமுனையில் பார்த்ததும் நீங்க வளர்க்கிற நாய் வீட்டிலிருந்து ஒடிவந்து உங்களை ரிஸீவ் பண்ணும்போது உங்க மனசு எப்படி நெகிழ்ந்து போகிறது.”

“சரி, சரி, நீ என்ன சொல்றே… ஏதாவது நாய், பேய் வளருடா என்கிறேயா?

“யாரையும் வெறுக்காதீங்கன்னு செல்கிறேன். ஐ மீன்…” என்று சொல்லிக்கொண்டே கார்க் கதவைத் திறந்த சீதாப்பாட்டி அடுத்த நிமிஷம், ‘ஓ! மைகாட்!” என்று வீரிட்டவாறு பின்னடைந்தாள்.

டிரைவர் ஸீட்டில் ஒரு குரங்குக்குட்டி! ஸ்டீரியங் வீலின் மீது உட்கார்ந்திருந்த குரங்குக்குட்டி சீதாப்பாட்டியைப் பார்த்து “கிர்ர்ர்” என்று பல்லைக் காட்டியது.

சீதாப்பாட்டிக்கு உடம்பு வெடவெடவென்ற நடுங்கியது. அப்புசாமியோ “ஐய் குரங்கு!” என்று சந்தோஷ மிகுதியோடு துள்ளினார்.

அடுத்த கணம் குரங்கு ஒரே தாவு அவர்மீது – குறிப்பாகச் சொல்லப்போனால் அவர்கையில் இன்னும் சாப்பிடாமல் அரையும், குறையுமாக வைத்திருந்த வாழைப் பழத்தின் மீது, அப்புசாமி அந்தக் கணமே குரங்குக் குட்டியிடம் உள்ளத்தையும், வாழைப்பழத்தையும் ஒருங்கே பறி கொடுத்தார்.

“ராஜா ராஜா! எங்கேடா கண்ணா தொலைஞ்சே… வெண்பொங்கல் ஆறினால் நல்லா இருக்காதுடா.. இப்படிப் படுத்தினால் எப்படிடா…”

தனது ராஜாவைத் தேடியவாறு அப்புசாமி சமையல் அறைக்கு வந்தார்.

சீதாப்பாட்டி டோஸ்ட்டர் மிஷினில் ரொட்டித் துண்டுகளைக் கடகடவென்று போட்டு வாட்டிக் கொண்டிருந்தவள், “ஜஸ்ட் எ மினட்… ஏன் இப்படிப் பிச்சைக் காரனாட்டம் கையிலே தட்டை வைத்துக் கொண்டு… தட்டிலே என்ன?” என்றாள். “நான் ஏதாவது சேஞ்ச் போடணுமா” என்றாள்.

“ராஜாப் பயலைத் தேடறேன்… இங்கே வந்தானோ?” என்ற அப்புசாமி. “கண்ணனைக் கண்டதுண்டோ சகியே. ஏ…ஏ…ஏ… என் கண்ணனைக் கண்டதுண்டோ” என்று பாடவேறு ஆரம்பித்து விட்டார். சீதாப்பாட்டியின் முகம் கடுகடுப்பாயிற்று.

“சமையல் ரூமுக்கெல்லாம் அதை அலவ் பண்ணாதீங்கன்னு நான் சொல்லிட்டேயிருக்கேன். அது இங்கே வரலை…” என்றாள்.

“ராஜாவுக்கு வெண்பொங்கல் ரொம்பப் பிடிக்கிறதுன்னு ஓட்டலிலே போய் ஒரு பொட்டலம் வாங்கிட்டு வந்தேன். பயலைக் காணோமே… அட்டூச் விளையாடறது.

“அட்டூச்சுமாச்சு – அவரைக் காயுமாச்சு…” என்ற சீதாப்பாட்டி, ‘வந்தது வந்தீங்க.. ப்ளீஸ்… காஸைப் பற்ற வைத்து, குக்கரிலே ஒரு ஆழாக்கு அரிசியைக் களைந்து… எட்ஸெட்ரா எட்ஸெட்ரா..” என்றாள்.

“அதோ! கண்டுபிடிச்சுட்டேன்” என்றார் அப்புசாமி உற்சாகமாக.

சமையலறை மேடைக்கு அடியில் காஸ் ஸிலிண்டர் பின்னாடி ராஜா ஒளிந்துகொண்டு அவரைப் பார்த்து இளித்தது.

“படவா ராஸ்கல்… எங்கே ஒளிஞ்சிட்டிருக்குது பார்த்தியா… சரியான குறும்பு…” என்று மகிழ்ச்சி பொங்க அதை வாரி எடுத்துக் கொண்டார். “ஏண்டா பொங்கல் உனக்குத்தானே வாங்கிட்டு வந்தேன்… நீ பாதி, நான் பாதி கண்ணே!”

சீதாப்பாட்டி கடும் கோபத்துடன் “லிஸன்” என்றாள். “காஸ்கிட்டயெல்லாம் உங்க குரங்குக்குட்டி வருகிறது… ரொம்பத் தப்பு. அது பாட்டுக்கு ஸிலிண்டரைத் திறந்து விட்டுட்டுது என்றால் மைகாட் ஐ காண்ட் இமாஜின், கொஞ்சம் கட்டிப் போட்டு வையுங்க.”

அப்புசாமி அலட்சியமாக “கட்டிக் கிட்டதுகளெல்லாம் மட்டும் கட்டுப்பாட்டில் இருக்கிறதுங்களா? ராஜா விஷயத்தில் தலையிடாதேம்மா. அது உன்னை விடப் புத்திசாலி தெரிஞ்சுக்கோ. ராஜா, கிழவிக்கு வவ்வவ்வே காட்டு” என்று குரங்குக்குச் சொல்லித் தர அது பாட்டிக்கு வவ்வவ்வே காட்டியது.

“இவரை ஏதாவது பெட் வளர்க்க அனுமதித்தது விபரீதமாகப் போய்விட்டது போலிருக்கிறதே” என்று சீதாப்பாட்டி கவலைப்பட்டாள்.

அப்புசாமி உதடுகள், ‘பூவே, பூச்சூடவா’ என்று பத்மினிப் பாட்டியின் பழைய சினிமாப் பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தது. ஆர்டர் கொடுத்து அலங்காரமாகத் தைக்கப்பட்ட மட்டைப் பூ அவர் கையில். நாட்டுப்புறச் சீமந்தப் பெண்கள் போட்டோ ஸ்டுடியோவில் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்ள தலைநிறைய வைத்துப் பின்னிக் கொள்வார்களே, அது மாதிரியான ரெடிமேட் மட்டைப்பூ.

அப்புசாமியைப் பூவும் கையுமாகப் பார்த்ததும் சீதாப்பாட்டிக்குத் திடுக்கென்றது.

ஏதாவது கிறுக்குத் தனமாக அவளுக்குத்தான் வாங்கி வந்து விட்டாரோ, ஹி இஸ் அன்ப்ரடிக்டபிள், என்ன வேணும்னாலும், செய்வார்? என்று எண்ணித் திகிலடைந்தவள், “யார் வீட்டிலே என்ன விசேஷம்? எந்தக் கல்யாண வீட்டுக்காவது பூ காண்ட்ராக்ட் எடுத்திருக்கிறீர்களா என்ன?” என்றாள்.

“அந்தப் பயல் எங்கே? எல்லாம் அவனுக்குத்தான். பார்த்தியா நைலான் சவுரி! நான் ரொம்ப ஷோக்காகத் தலை பின்னிவிடுவேன் தெரியுமா? உனக்குக் கூட அந்த நாளில் ரெண்டொரு தடவை பின்னி விட்டிருக்கேன். ஒரு பேன்கூட எடுத்திருக்கேன். ஹிஹி!”

சீதாப்பாட்டி கடுகடுத்தாள். “ஹ¥ ஆஸ்க்ட் யூ டு பர்ச்சேஸ் ஆல் திஸ் நான்சென்ஸ்? உங்க குரங்குக்கு இப்போ அலங்காரம் செய்து ஏதாவது ப்யூட்டி கான்ட்டெஸ்ட்டுக்கு அனுப்பப் போகிறீர்களா? ராஜா வந்ததிலிருந்து, உங்களிலே யார் குரங்கு என்ற ஐ காண்ட் அண்டர் ஸ்டான்ட்” சிடுசிடுத்தாள்.

“சீதே” என்றார் அப்புசாமி. “நீதான் பிராணிகளை விரும்பினால் ஹார்ட் அட்டாக்கெல்லாம் வராது என்றாய். ராஜா எவ்வளவு புத்திசாலி என்று உனக்குத் தெரியாது… இரண்டு மூன்று நாளாக ராஜாதான் பாத்திரங்களையெல்லாம் சமையலறையில் அழகாகக் கவிழ்த்து வைக்கிறது தெரியுமா உனக்கு?”

சீதாப்பாட்டி உண்மையில் ஆச்சரியப்பட்டு விட்டாள் “இஸ் இட் ஸோ… ஆனால் ஐ வோன்ட் பிலீவ்… ஒரு குரங்கா இவ்வளவு அழகாக அடுக்கியிருக்கிறது?”

தொப்பென்று மேலே மின்சார விசிறியிலிருந்து ராஜா, அப்புசாமியின் தலையில் குதித்தது.

“அடி செல்வம்! எங்கேடி ஒளிஞ்சிட்டிருந்தே! உனக்கு பூ சவரி டிரெஸ் எல்லாம் வாங்கி வந்திருக்கேன். சமத்துக் கண்ணில்லையா? அழகாக உனக்குத் தலைவாரிப் பின்னிப் பூ வைத்து… நானும் ராஜாவும் போட்டோ ஸ்டுடியோவுக்குப் போய் ஒரு போட்டோ எடுத்துக்கப் போறோம்.”

ராஜா அப்புசாமியின் கன்னத்தில் ஒரு ‘இச்’ தந்துவிட்டு அவர் ஜிப்பாவுக்குள் கைவிட்டுத் துழாவியது.

“யமப்பயல்! பையில் கைவிட்டு வாழைப்பழம் தேடறான். ஹ ஹ ஹ! நேற்று இப்படித்தான் பையிலே கையை விட்டுத் துழாவி, என் பொடி டப்பியைத் தூக்கி வெச்சிக்கிட்டேன். அடே கண்ணா, அது மூக்குப் பொடிடா! மூக்குப் பொடியின்னு கத்தறேன், டப்பியைத் திறந்து ஒரு சிமிட்டாய் பொடி எடுத்து, நல்ல வேளை காதிலே போட்டுக் கொண்டான்.”

சீதாப்பாட்டி பாட்டிகள் கழகத்துக்குக் கிளம்பிக் கொண்டே, “உங்க ராஜாவைத் தலையில் தூக்கி வெச்சிட்டுக் கொஞ்சாதீங்க. ஓவரா இடம் கொடுத்தால் அது அன்ட்யூ அட்வான்டேஜ் எடுத்துக் கொண்டு விடும்.” சொல்லிவிட்டுக் காரில் ஏறினவளின் பார்வை ஜன்னல் கம்பியில் விஷமம் செய்து கொண்டிருந்த குரங்குக் குட்டியின் கழுத்தைப் பார்த்தது.

அவள் முகத்தில் சிந்தனை படர்ந்தது.

கழகத்தில் ஒரே பரபரப்பு. போலீஸ் அதிகாரிகள், அவர்கள் வந்திறங்கிய பழைய புதிய, ஒயர்லெஸ், லெஸ்ஒயர், மோட்டார் சைக்கிள்கள், ஜீப்கள், துப்பறியும் நாய்கள்.

சீதாப்பாட்டியின் கார் வந்து நின்றதும் ஒரு நாய் ஓடி வந்து அதை முகர்ந்து பார்த்துவிட்டு நகர்ந்தது.

கமிஷனர் நடனகுமார் சீதாப்பாட்டிக்கு ஏற்கனவே அறிமுகமானவர்.

“வெரி ஸாரி மேடம். எப்படியும் ரெண்டு நாளில் கண்டுபிடித்து விட முடியும்-எல்லாரும் ஒத்துழைக்க வேண்டும்.” என்றார் நட்பும் மரியாதையும் கலந்த குரலில்.

சீதாப்பாட்டிக்கு என்ன விஷயம் என்றே தெரியவில்லை. ‘ஆபீசர், வாட் இஸ் இட் கோயிங் ஆன் ஹியர்?’ என்று தான் வந்ததுமே கேட்க நினைத்தாள். ஆனால் அதற்குள் அதிகாரி முந்திக் கொண்டு, என்னத்தையோ கண்டு பிடித்துவிடுவோம் என்று அவள் கேட்காமலே அவளுக்கு அஷ்யூரென்ஸ் கொடுக்கிறார்.

காரியதரிசி அகல்யா சந்தானத்தைச் சீதாப்பாட்டியின் கண்கள் தேடின.

எந்த உறுப்பினராவது வைர நெக்லஸையோ, வளையலையோ எங்காவது தொலைத்துவிட்டு, ‘கழகத்தில்தான் காணாமல் போயிற்று,’ என்று போலீஸ்-கம்ப்ளெயிண்ட் கொடுத்து விட்டாரா?

கழகக் கேம்பஸில் ஸ்னி·ப்பிங் டாக்ஸ்! நோ, நோ… இங்கே இந்தவிதமான தவறுதல்களெல்லாம் நடைபெற சான்ஸே இல்லை.

எதுவாயிருந்தாலும் தனக்கு ஒரு வார்த்தை இன்·பர்மேஷன் ஸேக்காகவாவது தெரிவிக்க வேண்டாமா! வாட் எல்ஸ் திஸ் அகல்யா இஸ் டூயிங்?

அகல்யா சந்தானத்தை உயர் அதிகாரி என்னவோ விசாரித்துக் கொண்டிருந்தார். அகல்யா பதில் சொல்லிக் கொண்டிருந்தது பாட்டியின் காதில் விழுந்தது, “கழகத்தில் ஆகாதவர்களென்று மிஸஸ் பொன்னம்மா டேவிட்டுக்குக் குறிப்பாக யாருமில்லை… எல்லார்கிட்டேயும் நட்பாகவே இருப்பாங்க. தன்னோடு நாலு பேராக காரில் ஏற்றிட்டுப் போய் பெரிய ஓட்டல்களில் உல்லாசமாகச் சாப்பிடுவது ரொம்பப் பிடிக்கும்…”

போலீஸ் அதிகாரி: கோபக்காரா? கோபம் வந்தால் யார் மீது வரும்?

அகல்யா : யார் போட்டிக்கு நின்றாலும் அவருக்குக் கோபம்தான். தான் ஜெயிக்க வேண்டுமென்பதற்காக நிறையச் செலவு செய்வார். போன தடவை எல்லா மெம்பர்களுக்கும் ப்யூர் ஸில்க் ஸாரி-ஒரு ஸாரி இரண்டாயிரம் ரூபாய் இருக்கும்…வாங்கி வினியோகித்தார்.

போலீஸ் அதிகாரி புரியாதவர் போல நெற்றியைப் புன்னகையுடன் நீவிக் கொண்டு “நீங்க போட்டி என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?” டி.வி. ரவி பெர்னார்டு மாதிரி வாயைப்பிடுங்க முயன்று கொண்டிருந்தார் அதிகாரி. அகல்யா மேலும் விவரமாக உளறுமுன் சீதாப்பாட்டி ஸ்தலத்துக்கு விரைந்தாள்.

“குட் மார்னிங் மேடம்” என்றார் அந்த ஆபீசரும்.

சீதாப்பாட்டி ஆனரரி மாஜிஸ்திரேட்டாக-சீதே ஜே.பி.யாக இ ந்த சமயத்திலிருந்தே பாட்டிக்கு அறிமுகமான போலீஸ் அதிகாரி.

“குட் மார்னிங் மிஸ்டர் ஆபீசர்,” என்றாள் சீதாப்பாட்டி.

“குட் மார்னிங் மேடம். ஸாரி, நீங்கள் வந்து நின்றதைக் கவனிக்கவேயில்லை.”

“தட்ஸ் ஆல் ரைட் மிஸ்ட்டர், ஆபீசர்” என்றாள் சீதாப்பாட்டி.

“மேடம்” என்றார் அதிகாரி சங்கடமாக, “என்னை வெறுமே தனபால் என்று கூப்பிடுங்கள் மேடம். நான் உங்க வீட்டுப் பையன்.”

“நோ…நோ…நோ…நீங்க டியூட்டியில இருக்கிற போது அப்படியெல்லாம் நான் பெயர் சொல்லி அழைக்கக் கூடாது….ஆல்ரைட் கான் ஐ.பி.அ·ப் எனி ஹெல்ப் டு யூ….” என்றாள்.

அகல்யா தன்னிலை விளக்கமாக, “பொன்னம்மா டேவிட் மூன்று நாளாகக் காணாமல் போய்விட்டது பற்றி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.

சீதாப்பாட்டி திடுக்கிட்டாள். “வாட்?” என்றாள். “மிஸஸ் பொன்னம்மா டேவிட் காணோமா? நியூஸ் டு மி” என்றாள். “ஷாக்கிங்”

போலீஸ் அதிகாரி தனபால் அடக்கமான குரலில், “எங்களுக்கு முடிந்த உதவிகளை நீங்கள் எல்லாரும் செய்யக் கேட்டுக் கொள்கிறோம்…”

சீதாப்பாட்டியின் முகம் இருண்டு கறுத்தது.

அதிகாரி தனபால் போலீஸ்காரத்தனமான அனுதாபத்துடன் “உங்கள் கழகத்தில் தேர்தல் அடுத்த வாரம் நடக்க இருக்கிற சமயம், அந்த மேடம் காணாமல் போனது ஒரு துரதிருஷ்டமான சங்கதி. யாராவது கிட்நாப் செய்து கொண்டு போய் எங்காவது அடைத்து வைத்திருப்பார்களோ… என்று அவர் கணவர் டேவிட் சந்தேகப்படுகிறார்….”

சீதாப்பாட்டிக்கு வியர்ப்பது போலிருந்தது. பொன்னம்மா எத்தகைய ஸ்டண்ட்டுக்கும் துணிந்தவள். தானே எங்காவது தலைமறைவாகிவிட்டு, போலீஸில் ஒரு பரபரப்பு ஏற்படுத்தி, சில நாள் கழித்துத் தானே வெளியே வந்து தன் எதிரியான சீதேதான் இதற்குக் காரணம் என்று அழகாகக் கற்பனைகூட ஜோடிக்கக் கூடியவள்…

தன் குழப்பத்தைக் காட்டிக் கொள்ளாமல் மலர்ந்த முகத்துடன், “வாருங்கள் ஆபீஸர். உங்களுக்குத் தேவையான-எனக்குத் தெரிந்த எல்லா விவரங்களையும் கூறுகிறேன். பொன்னம்மா எப்போதும் நிறைய நகைகள் போடக்கூடியவள். எங்கள் பா.மு.க.வில இன்ன தினத்துக்கு இது என்று ஸெட் ஸெட்டாக ஜ்வெல்ஸ் போட்டுக் கொண்டு வருபவள் அவள் ஒருத்திதான். அவள் காணாமல் போனதில் கழக பாலிடிக்ஸ் எதுவுமில்லை என்று என்னால் கூற முடியும்…”

விவரமான விசாரணைக்குப் பிறகு வருவதாகச் சொல்லிவிட்டு சீதாப்பாட்டி தந்த விவரங்களுடன் அதிகாரி விடைபெற்றார்.

சீதாப்பாட்டி கவலையும் சோர்வுமாக வீடு வந்த போது வீடு பூராக் காகிதக் குப்பையாக இருந்தது.

அப்புசாமி குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் தனது இடுப்பைச் சுற்றி ஒரு பழைய பெல்ட் கட்டிக் கொண்டிருந்தார். அதிலிருந்து நீளமாக ஒரு கயிறு ஆன்ட்டென்னா ஒயர் மாதிரி எங்கோ சென்று கொண்டிருந்தது.

ஆயர்பாடியில் யசோதை கண்ணனை உரலில் கட்டிப் போட்டாள். அப்புசாமி தனது பெல்ட்டில் பிரிய குரங்குக் குட்டியைக் கட்டிப் போட்டிருந்தார்.

கயிறு நீளமாக இருந்ததால் குரங்குக்குட்டி இஷ்டத்துக்க அறை பூராவையும் அலசி
கொண்டிருந்தது.

மாலைப் பத்திரிகை ஒன்றைக் கிழித்துக் கிழித்துக் கொஞ்சத்தை வாயில் வைத்துத் தின்பதும் மீதியைக் கீழே பறக்க விடுவதுமாக அது மும்முரமாகப் படித்துக் கிழித்துக் கொண்டிருந்தது.

சீதாப்பாட்டிக்கு வந்த கோபத்தில் அப்புசாமியின் முகத்தில் ஒரு வாளி நீரை ஜலீர் எனக் கொட்ட வேண்டும் போல ஆத்திரமாக வந்தது.

“யூ ஸில்லி டாங்க்கி!” என்று கோபமாகக் கையிலிருந்த சாத்துக்குடிப் பழம் ஒன்றை எடுத்துக் குரங்குக்குட்டி மேல் வீசினாள்.

ராஜா அதை லட்சியமே செய்யவில்லை. தன் கையிலந்த கிழிசலை உற்றுப் பார்த்துக்
கொண்டிருந்தது.

பாட்டி பழத்தை அதன்மீது வீசி எறிந்தாள். பழத்தை லகுவாகப் பிடித்துக் கொண்ட ராஜா கையில் அதுவரை பார்த்துக் கொண்டிருந்த கிழிந்த காகிதத்தைக் கீழே வீசி விட்டுப் பழத்தை உரிக்கத் தொடங்கியது.

ஜன்னல் வழியே வீசிய காற்றினால் ராஜா பார்த்துக் கொண்டிருந்த துண்டுக் காகிதம் வேகமாகப் புரண்டு அவளது காலடிக்கு வந்தது.

அதைப் பார்த்துச் சீதாப்பாட்டி திகைத்தாள்.

பொன்னம்மா டேவிட்டின் புகைப்படம் பத்திரிகையில் கொட்டை எழுத்தில் செய்தி வெளியாகியிருந்த பக்கத்தில் படமும் பிரசுரமாகியிருந்தது. பிரபல தொழிலதிபரின் மனைவி காணோம்! கடத்தப்பட்டாரா? போலீஸ் வலைவீச்சு!

பொன்னம்மாவின் புகைப்படத்தைக் குட்டிக்குரங்கு உற்று பார்த்த காட்சி திரும்பத் திரும்ப சீதாப்பாட்டியின் மனக்கண் முன் நின்றது.

பிரபலமான இரு தமிழ் நாளேடுகளில் வெளியாகியிருந்த விசித்திர விளம்பரம் ஒரு பரபரப்பேற்படுத்தியது.

பிரபல நடிகருக்குப் பாராட்டும் பரிசளிப்பும்

படத்திலுள்ள ராஜா என்ற குரங்குக் குட்டி நடித்து அற்புதமான திரைப்படமான அனாதை ராஜா தீபாவளிக்கு வெளி வருகிறது.

இதனுடைய அட்டகாச நடிப்பை மெச்சி இதன் தயாரிப்பாளர் ராஜாவுக்குப் பத்து லட்சம் ரூபாய் வெகுமதி தரப் போகிறார். தரமணி அருகில் அனாதையாகக் கிடைத்த இந்தக் குரங்குக் குட்டிக்கு உரிமை பாராட்டுவர்களிடம் மேற்படி பரிசைக் கொடுக்கத் தயாரிப்பாளர் விருப்பம் தெரிவிக்கிறார்.

தகுந்த அடையாளம் சொல்லி ராஜாவின் உரிமையாளர் விழாவன்று நேரில் வந்து ராஜாவின் சம்பளத் தொகையை நேரில் பெறலாம்.

இந்தியன் வங்கி திரு. கோபாலகிருஷ்ணன் பண முடிப்பை மேடையில் உரியவருக்கு வழங்குவார். இங்ஙனம் நாராயண ராமன் டைரக்டர். விளம்பர இடம் வழங்கியவர்கள் : பா.மு.கழகம், சென்னை.

அப்புசாமி பிரசவ வேதனைக்காரி போல ராத்திரியெல்லாம் தூக்கமில்லாமலிருந்தார்.

படுக்கப் போகும் முன் வேர்க்கடலை உருண்டையோ முறுக்கோ, காராபூந்தியோ, சாப்பிட்டுப் படுப்பாரே தவிர, பிரார்த்தனை அது இது என்று ஒரு நாளும் செய்து அறியாதவர். அன்று விசேஷப் பிரார்த்தனை செய்தவாறு இருந்தார்.

“சகல லோகத்திலுமுள்ள சாமிகளெல்லாம் அறிவது ராஜாவுக்கு நான்தான் சொந்தக்காரன் என்று கடவுளே நாளைக்கு யாரும் வரக் கூடாது. நான் தான் எடுத்து வளர்த்தவன் என்று நிரூபணமாகி நிரூபணம் பணமாகி என்னிடம் வர வேண்டும். அப்படி வந்தால் நானும் ராஜாவும் மொட்டை அடித்துக் கொள்கிறோம்” என்றவருக்குத் திடீர் சந்தேகம்.

குரங்குக்குட்டி மொட்டை அடித்துக் கொள்ளுமா?

சலூனில் அதற்கு அடித்து விடுவார்களா? விசேஷ கட்டணம் சுமார் எவ்வளவு இருக்கும்? அப்படியே அடித்தாலும் அது தலையைக் காட்டிக் கொண்டு ஒழுங்காக இருக்குமா? இப்படி அப்படி கத்தி கித்தி பட்டு முதலுக்கே மோசமாகி விட்டால் என்னாவது?

எந்தத் தகவல் நிலையத்தில் தன் சந்தேகங்களைக் கேட்டால் விடை கிடைக்கும் என்று தெரியாதவராகத் தூங்கிப் போனார்.

காலையில் எழுந்து இடுப்பைத் தொட்டுப் பார்த்தால் ராஜாவைக் காணோம்!

ஐயோ! வெற்றிச் சீட்டு எண்ணும்போது ஓட்டுப் பெட்டியைக் தூக்கிக் கொண்டு யாரோ ஓடிவிட்டது போல், இதென்ன கொடுமை.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவே எட்டாதா?

“சீதே! சீதே! என் ராஜா! ராஜா! ஐயோ ஏன் ராஜா! பார்த்தியா? பார்த்தியா?” என்று பதறினார்; கதறினார்.

“அமைதி! அமைதி!” என்ற சீதாப்பாட்டி அலாரம் கடியாரத்தை அவர் கண் முன்னே காட்டினாள். “இட் இஸ் ·பைவ் மினிட்ஸ் டு எய்ட். இவ்வளவு லேட்டாக நீங்கள் எழுந்திருந்தால் எப்படி? ·பங்க்ஷன் காமராஜ் மெமோரியலில் ஷார்ப்பாக நைனுக்கு. ராஜாவுக்கு மேக்கப் போட்டு, டிரெஸ் பண்ணி விட்டிருக்கிறேன், ப்ரெக் ·பாஸ்ட்கூட தந்துவிட்டேன். இன்றைக்கு அவன் எத்தனை வி.ஐ.பிஸ்களைப் பார்க்கப் போகிறான்…”

“சீதே!” என்றார் அப்புசாமி “உன்னை அப்படியே கட்டிக்கணும் போலிருக்கிறது. உன்னைப் போய்த் தப்பாக நினைத்துவிட்டேன். நீ தான் ஒருகால் கடைசி நிமிஷத்தில் அதைக் கத்தரித்துவிட்டு விட்டாயோ என்று.”

“ஆல்ரைட்… நீங்களும் சீக்கிரம் குளித்து டிபன் சாப்பிட்டு ரெடியாகுங்கள்.”

அப்புசாமி டிரெஸ்ஸிங் மேஜை அருகில் கட்டிப் போட்டிருந்த ராஜாவைப் பார்த்தார்.

“அய்யோ! என்ன அழகு! என்ன அழகு! சீதே! உன்னுடைய லிப்ஸ்டிக்கைக்கூட ராஜாவுக்குப் போட்டு விட்டிருக்கிறாயே… நான் கூட ஒரு நாளில் போட்டுக் கொண்டதில்லை.”

“ராஜா எக்ஸப்ஷன்ஸ். அழகு போட்டு விட்டால் மனுஷக் குழந்தை மாதிரி இருக்கு. நீங்க போட்டுக் கொண்டால் குரங்குத் தாத்தா மாதிரி தோன்றிவிடக் கூடாதில்லையா? சரி… சரி… ஹரி அப்…

காமராஜ் மெமோரியல் ஹாலில் மேடை படாடோபமோ பெரிய அலங்காரங்களோ செய்யப்படாமல் எளிமையாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.

ரசிகர்கள் என்று எண்ணினால் இருநூறு முன்னூறு பேர்தான்.

ராஜாவை உரிமை கோரி வந்திருந்தவர்கள் நூறு பேருக்கும் அதிகமாக இருக்கும்.

பல தினுசுக் குரங்காட்டிகள், நரிக்குறவர்கள், சில நாகரிகமான பெண்மணிகள் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர்கள் என்று கூடைச்சோறு மாதிரி கலந்து கட்டியிருந்தார்கள். அந்தக் கும்பலோடு கும்பலாக அப்புசாமியும் தனது டோக்கன் எண் வரிசைப்படி நாற்பத்து ஒன்பதாவதான நாற்காலியில் அமர்ந்திருந்தார். மேடையில் நடுநாயகமாக உயரமான மேஜையின் மீது ராஜா உட்கார வைக்கப்பட்டிருந்தது. அது சுலபமாக இங்குமிங்கும் சஞ்சரிக்கச் சற்று நீளமான கயிறாலேயே கட்டப்பட்டிருந்தது. அதனுடைய நடவடிக்கைகள் நன்கு தெரியுமாறு அதற்கு மட்டும் பிரத்தியேக ஆர்க் ஒளிவட்டம்.

நடுவர்கள் மூவரும், விசாரணை செய்யும் குழுவினரும் மேடையின் பக்கவாட்டில் அமர்ந்திருந்தனர்.

அனைவரும் டைரக்டர் நாராயண ராமனின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

சீதாப்பாட்டியின் கண்களும் ஆவலுடன் நுழைவாயிலை நோக்கிக் கொண்டிருந்தது.

சரியாக எட்டு ஐம்பத்தொன்பது நாராயண ராமன் கம்பீரமாகத் தனது நாலைந்து கூட்டாளிகளுடன் நுழைந்தார்.

அரங்கத்திலுள்ளோர் கைதட்டி வரவேற்றனர்.

நிகழ்ச்சிகளைப் படமெடுக்க வீடியோ காமெராக்கள் ஒளி வீசின.

டைரக்டர் நாராயண ராமனைப் பார்த்ததும் மேடையில் மேஜை மேல் உட்கார்ந்திருந்த ராஜா எழுந்து அவருக்கு சலாம் செய்தது. கை கொடுத்துக் குலுக்கியது.

அரங்கத்தில் ஒரே கைதட்டல்… “என்ன புத்திசாலிக் குரங்கு!

டைரக்டர் நாராயண ராமன் மேஜையில் தன் நாற்காலியிலிருந்தவாறே மைக்கில் பேசினார்.

“அன்பர்களே, ரசிகர்களே, நடுவர்களே ராஜாவை உரிமை கோரி வந்திருக்கும் உரிமையாளர்களே, இந்த நிகழ்ச்சியை ஸ்பான்ஸர் செய்த பா.மு. கழகத் தலைவி மேடம் சீதாஜி அவர்களே, பரிசுத் தொகையைத் தம் திருக்கரத்தால் உரியவருக்குக் கொடுப்பதற்கு வருகை தந்திருக்கும் இந்தியன் வங்கித் தலைவர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களே, விழாக் கதாநாயகனாக அடக்கமாக வீற்றிருக்கும் ராஜா அவர்களே,

அனைவருக்கும் என் பணிவார்ந்த வணக்கம்.

இங்கே நம்மிடையே கதாநாயகனாக உள்ள ராஜா குட்டிக் குரங்கு கடவுளின் அற்புத சிருஷ்டி.

மனிதர்களைப் புரிந்து கொண்டு அவர்கள் செயலாற்றுவதைப் போலவே செயல் புரியும் திறமை கொண்ட ராஜா – எனது வெளிவரப் போகிற திரைப்படத்தில் அற்புதமாக நடித்துள்ளது. படம் ரீலீஸ் ஆவதற்கு முன்னமேயே அதனுடைய சம்பளமாகிய இரண்டு லட்சத்தைத் தர நான் ஆசைப்படுகிறேன். உழைத்த கரம் கழுவிய ஈரம் காயுமுன் முழுக் கூலியையும் கொடுத்து விடு என்பார்கள் பெரியோர்.

அதற்கு முன்னுதாரணமாக இந்த நிகழ்ச்சி அமையட்டும்.

ஆனால் ராஜாவைத் தற்சமயம் வளர்த்துவரும் அப்புசாமி என்னும் நண்பர். அது அனாதையாக அவருக்குக் கிடைத்தது. அதை வளர்த்து வித்தைகள் கற்று தந்ததெல்லாம் தானே என்று கூறியுள்ளார்.

ஆனால் மாண்புமிகு நீதிபதிகள், ‘ராஜாவைக் கூர்ந்து ஆராய்ந்தபோது முக்கியமாக அதன் கழுத்தில் உள்ள கயிறு வளையத்தைப் பார்க்கையில் அது அப்புசாமியிடம் வருவதற்கு முன்பே எந்தக் குரங்காட்டியிடமோ ஏற்கனவே இருந்திருக்க வேண்டும் என்ற கருத்தைத் தெரிவித்தனர்.

ராஜாவுக்கு இத்தனைச் சிறப்பாக வித்தை கற்றுத் தந்த கலைஞரைத் தேடிக் கண்டு பிடிக்கவே இந்த மகத்தான நிகழ்ச்சி.

உரிமை கோருபவர்கள் தங்கள் நாற்காலியிலேயே இருக்கலாம். ராஜாவை நடுவர்களில் இருவர் அழைத்து வருவார்கள். ராஜா தன் கையிலுள்ள பூமாலையை யார் கழுத்தில் போட்டு, கைகுலுக்குகிறதோ அவர்தான் அதன் வளர்ப்புத் தந்தை. அதற்குப் பிறகு அவர் மேடைக்கு வந்து ராஜாவின் இதர அங்க அடையாளங்களைக் கூறிப் பரிசுத் தொகையைக் பெறலாம்.”

அப்புசாமி, “தெய்வமே! கடவுளே! தேவுடா, அடே ராஜா! என் கழுத்திலேயே மாலையைப் போட்டுடு. என்னப்பனல்லலா. என் தாயுமல்லவா, பொன்னப்பன் அல்லவா.”

மனமுருகி மனத்துக்குள் பிராத்தனை செய்து கொண்டார்.

ராஜா ஓரொரு வரிசையாகப் பார்த்து வந்தது.

நாற்பத்தாறு, நாற்பத்தேழு, நாற்பத்தெட்டு, அப்புசாமியின் இதயம் டொங்காம், டொங்காம், டொங்காம் என்று பேரிகை மாதிரி அடித்துக் கொண்டது.

கழுத்தை முன்னுக்குத் தள்ளி மாலை வாங்கிக் கொள்ளத் தயாரானார்.

அந்தோ! ராஜா அவருக்குப் போடாமல் அவருக்கு அடுத்தாற் போலிருந்த ஒரு கட்டை குட்டையான ஆசாமியின் கழுத்தில் போட்டு விட்டது.

போட்டதோடு ஒரே தாவலாகத் தாவி அவன் தலையில் உட்கார்ந்து கொண்டு விட்டது.

நடுவர்கள் கை தட்டி மகிழ்ந்தனர். சீதாப்பாட்டி தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து, கட்டை குட்டை ஆசாமியின் கையைக் குலுக்கி, “ராஜாவை வளர்த்தது நீங்களதானா? அற்புதமாக வளர்த்திருக்கிறீர்கள். பரிசு மேடையில் காத்திருக்கிறது. சிரமத்தைப் பாராமல் வருகை தந்த உங்களுக்கு பா.மு.கழக சார்பாக நன்றி, வணக்கம்” என்றார்.

ராஜாவுடன் வந்த நடுவர்கள் பரிசுக்குரியவரை இரு பக்கமும் கைலாகு கொடுத்து மேடைக்குக் கூட்டிச் சென்றனர்.

அப்புசாமி, “ஐய்யோ, அநியாயம் அநியாயம்… லக்கி நம்பரில் ஒரு நம்பர் தவறுதலாக விட்டுப் போவதுபோல என் கழுத்திலே போட வேண்டியதை ராஜா தவறாகப் போட்டுவிட்டது. நடுவர் அவர்களே. மறுபரிசீலனைச் செய்யுங்கள் இல்லாவிட்டால் நான் தேர்தல் கமிஷனர் சேஷன் வரை இந்த ஊழலைக் கொண்டு போவேன்” நாற்காலியைப் போட்டு உருட்டினார். தள்ளினார்.

மேடைக்குக் கழுத்தில் மாலையும், தலையில் குரங்குக் குட்டியுமாக நடுவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட அதிருஷ்டசாலியை, போலீஸ் கமிஷனர் கை குலுக்கினார்.

“நீதானாப்பா இந்தக் குரங்கின் டிரெய்னர், இந்தா பிடி பரிசு!”

டகாரென்று அவன் கையில் விலங்கை மாட்டினார் போலீஸ் கமிஷனர். ராஜாவையும் தயாராக இருந்த ஒரு வாலைப் பெட்டியில் போட்டு மூடி விட்டார்கள்.

இரு தினங்கள் கழித்து எல்லாப் பத்திரிகைகளிலும் சீதாப்பாட்டியின் புகைப்படத்துடன் விதம் விதமாகச் செய்திகள் பிரசுரமாகி இருந்தன.

தொழிலதிபர் மனைவி மீட்பு! பா.மு. கழகத் தலைவி
சீதாவின் அபாரமான சாதனை!

கடத்தியவர் யார்? காரணம் என்ன? திடுக்கிடும் தகவல்கள்.

சென்னை பிரபல தொழிலதிபர் டேவிட் அவர்களின் மனைவி பொன்னம்மா டேவிட் சில தினங்கள் முன்பு கடத்தப்பட்டது தெரிந்ததே. அவர் கழகத் தலைமைத் தேர்தல் சம்பந்தமாக கழக உட்பூசல் காரணமாக கடத்தப்பட்டிருக்கலாம் என்று. ஒரு சில பத்திரிகைகளில் வந்த தகவல் (நமது பத்திரிகையில் அல்ல) சரியல்ல.

கழகத் தலைவி சீதே

பாட்டியின் முன்னேற்றக் கழகத் தலைவி சீதே போலீசுக்குச் சில பயனுள்ள தகவல்கள் கொடுத்ததன் பேரில், கடத்தப்பட்ட பொன்னம்மா டேவிட் கண்டு பிடிக்கப்பட்டார். கடத்தப்பட்ட காரணமும் கடத்தியவர் விவரமும் பின்வருமாறு.

கணவர் டேவிட்டுடன் தகராறு

பொன்னம்மாவின் கணவரும் தொழிலதிபருமான டேவிட்டுக்கும், மனைவி பொன்னம்மாவுக்கும் நீண்ட நாளாகவே தகராறு இருந்து வருகிறது. சொத்துக்களைத் தன் தம்பி பால்ராஜ் நிர்வகிக்க வேண்டும் என்று பொன்னம்மா வற்புறுத்தி வந்தாள்.

டேவிட் சதி

ஆனால் டேவிட், மனைவியின் வேண்டுகோளை நிராகரித்து அடிக்கடி சண்டை போடுவதுண்டு. பொன்னம்மாவை ஏதாவது காரணம் காட்டி விவாகரத்து செய்து விடத் திட்டம் தீட்டினார். மனைவியைச் சில நாட்கள் சாமர்த்தியமாக எங்காவது கடத்திச் சென்று தலைமறைவாக்கத் திட்டமிட்டார். அவள் கொஞ்ச நாள் கழித்து வந்ததும், “நீ ஒரு வார காலம் வெளியே கடத்தப்பட்டு இருந்தவளாதலால் உன் நடத்தையின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. திரிந்த பால் திரிந்ததுதான்” என்று கூறி ஒதுக்கி விடத் தீர்மானித்தார்.

படுக்கை அறை

மனைவியைக் கடத்திச் செல்லும் பணியைத் தாமே செய்யத் தீர்மானித்தார். கடத்தல் தினத்தன்று வெளியூர் செல்வது போல் சென்று விட்டார்.

பொன்னம்மா டேவிட் பங்களாவில் தனது படுக்கை அறையில் கதவுகளையும் ஜன்னல்களையும் தாழிட்டு விட்டுப் பார்த்தார். ஆனால் ஒரு ஜன்னலில் மட்டும்தான் இல்லாமலிருந்தது. அதை ஒரு பொருட்டாக பொன்னம்மா நினைக்கவில்லை. அந்த ஜன்னல் இடைவெளி வழியாக யாரும் நுழைய முடியாது.

குரங்காட்டி உதவி

மேற்படி ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்து, மெயின் கதவை எப்படித் திறப்பது என்று டேவிட்டின் மூளை தீவிரமாக வேலை செய்தது. தெருவில் வித்தை காட்டும் ஒரு குரங்காட்டியின் உதவியை நாடினார்.

கட்டையன் என்ற குப்பன் என்ற ஜன்னலுடைச்சான் பலமுறை ஜெயிலுக்குப் போய் வந்தவன். அவன் குரங்குக் குட்டிக்குப் பயிற்சி கொடுத்து, அதை ஏவி, ஜன்னல் வழியே திறக்க வைத்து உள்ளே அனுப்பி மெயின் கதவை அதைக் கொண்டே திறந்துவிட ஏற்பாடு செய்தான்.

பத்தாயிரம்

இந்தச் செயலைக் கட்டையன் செய்து முடிக்கப் பத்தாயிரம் ரூபாய் ரொக்கமாக டேவிட் கட்டையனுக்குத் தந்தார். ‘காரியம் முடிந்ததும் உன் குரங்கையும் நீ துரத்தி விடு’ என்று சொன்னதன் பேரில் குரங்கை அவன் விட்டு விட்டு கிருஷ்ணகிரிக்கு ஓடி விட்டான்.

அனாதைக் குரங்கை அப்புசாமி என்பவர் பிரியமாக வளர்த்து வந்தார். அதன் கழுத்தில் கட்டியிருந்த கயிறிலிருந்து அது யாராலோ முன்பு பழக்கப்பட்ட குரங்காக இருக்க வேண்டும் என்று அப்புசாமியின் மனைவியும் பா.மு. கழகத் தலைவியுமான சீதேக்கு ஆரம்ப முதலே சந்தேகம்.

தனது சந்தேகத்தைச் சில ஆதாரங்களுடன் போலீசுக்குத் தெரிவித்துக் குற்றவாளியையும் சதியையும் கண்டுபிடிக்கப் பெரிதும் உதவினார்.

கம்ப்யூட்டர் மூளையால் கள்ளனைக் கண்டு பிடித்த சீதாவின் பேட்டி:

நிருபர் : பொன்னம்மா டேவிட்டின் கடத்தலில் குரங்குக் குட்டியின் பங்கு இருக்கிறது என்பது எப்படித் தங்களுக்குத் தெரிந்தது?

சீதா : மாலைப் பத்திரிகையில் பொன்னம்மா டேவிட்டின் புகைப்படம் வெளி வந்திருந்தது. அந்தப் படத்தை குரங்குக் குட்டிராஜா ரிபீட்டட்டாகப் பார்த்துக் கொண்டிருந்தது. மிக இண்ட்டலிஜண்ட்டானதால் அதற்குப் புகைப்படத்தில் உள்ளவரை அடையாளம் தெரிகிறது என்று ஊகித்தேன். நீண்ட நாளைக்கு முன்னதாக இருந்தால் அதற்கு மறந்திருக்கும். ஆகவே சம்பவம் மிகச் சமீபத்தில் தான் நடந்திருக்க வேண்டுமென ஊகித்தேன்.

நிருபர் : திறந்த ஜன்னல் வழியே உள்ளே செல்லக் கூடியது. கதவைத் திறக்கக் கூடியது என்பதை எவ்வாறு அறிந்தீர்கள்?

சீதா : டூ ப்ளஸ் டூ இஸ் ·போர். ஒரு தினம் என் வீட்டுக் காம்பவுண்ட் கேட்டைப் பூட்ட மறந்துவிட்ட போது ராஜாவே சாவி எடுத்துச் சென்று பூட்டியது. அதற்குப் பூட்டுகளை, தாழ்களை ஆபரேட் செய்யத் தெரியும் என்று ஊகித்தேன்.

நிருபர் : டேவிட்டுக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருப்பது எப்படித் தங்களுக்குத் தெரிந்தது.

சீதா : (சிரித்து) பின்னே, லேடீஸ் கிளப்புகள் எதற்குத்தான் நடத்துகிறோம்?

நிருபர் : தொழிலதிபர் டேவிட்தான் கடத்தியிருக்கக் கூடும் என்று எப்படி ஊகித்தார்கள்?

சீதா : அந்த ஊகம், டேவிட்டின் ப்ரதர் இன் லா ஐ மீன் பொன்னம்மாவின் ப்ரதர் பால்ராஜினால் தரப்பட்டது. ஒரு தினம் எனக்குப் போன் செய்து என்னோடு சண்டையிட்டார். என்னை அவர் கேட்டார். “நீங்களெல்லாம் பொண்ணுரிமை காக்கப் பெரீதாகக் கழகம் நடத்திக் கிழிக்கிறீங்களே… உங்க கழகத்திலே உறுப்பினராயுள்ளவர்களின் நிலைமையை, உரிமையை உங்களால் காப்பாற்ற முடியவில்லையே?” என்று கொதித்தார். சகோதரி பொன்னம்மாவை, கணவர் டேவிட் ரொம்பக் கொடுமைப் படுத்துவதாகவும் பொது நிகழ்ச்சிகளின்போது, தம்பதியர் மிக ஒற்றுமை போல வந்து போவதெல்லாம் நடிப்பு… என்றும், ஏதோ ஒரு நாள் மனைவியை ஆள் வைத்து அந்த ஆள் மர்டர் பண்ணினாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை… டைவர்ஸ¥க்கு ஏதாவது காரணம் கிடைக்காதா என்றும் அலைகிறார்…” என்று கூறி வருத்தப்பட்டார்.

டேவிட் சாமர்த்தியமாகத் திட்டமிட்டிருந்தார். ‘பொன்னம்மா இஸ் இன்ட்டரெஸ்டட் இன் கம்ப்பீடிங் ·பர் பிரசிடெண்ட்ஷிப்’ என்று அவருக்குத் தெரியும். எலெக்ஷன் டைமில் காணாமல் போனால், அவளை எதிர்க்கட்சிக்காரர்கள் எங்காவது கொண்டு போய் ஒளித்து வைத்திருக்கலாம் என்று கவனத்தைத் திசை திருப்பப் பார்த்திருக்கிறார்.

நிருபர் : டேவிட் தண்டனை பெறுவாரா? போலீஸ் அவரைக் கைது செய்யுமா? அவர் அமைச்சருக்கு வேண்டியவர் என்று கூறப்படுகிறதே.

சீதாப்பாட்டி : நோ காமெண்ட்.

“சீதே! சீதே!” அப்புசாமி கூவினார். “வந்து உன் கையாலே போணி பண்ணும்மே…”

சீதாப்பாட்டி விடியற்காலை நேரச் செல்லத் தூக்கத்திலிருந்தவள். “இட் இஸ் டூ எர்லி…” என்று திரும்பக் கண்ணை மூடிக் கொண்டு விட்டாள்.

அப்புசாமி கோபத்துடன் “மனுஷன் உன்னை மதிச்சுக் கூப்பிடறேன். இங்கே வந்து பார்த்து உன் கையாலே போணி பண்ணும்மே… நான் வெளியே பொழப்புக்கு நாலு இடம் போகத் தாவலை’…

கணவன் வாயிலிருந்து கூட “பிழைப்பு அது இது” என்று உருப்படியான வார்த்தைகள் வருவது சீதாப்பாட்டிக்கு ஆச்சரியமாயிருந்தது.

“வாட் இஸ் திஸ்… போணி பண்ணு. துணி பண்ணு காலையிலே ஏதாவது இடியாப்பம் விற்கக் கிளம்பி விட்டீர்களா என்ன?” என்றவாறு எழுந்து வந்தாள்.

அப்புசாமி பளப்பளீர் என்று நெற்றியில் குழைத்த திருநீறென்ன, அதில் மாடர்ன் ஆர்ட் போல சந்தன, குங்குமச் சித்திர வேலைப்பாடென்ன, காது இரண்டிலும் தலா ஒரு சாமந்திப் புஷ்பம் என்ன, கழுத்தில் ஒரு துளசி மாலை என்ன, என்ன, என்ன?

கையிலே ஒரு பளபள பித்தளை பாலிஷ¤டன் ஜொலிக்கும் கம்பி போட்ட பெட்டி.

“பட்சி சாஸ்திரம் பார்க்கிறதேய்!” என்றார் அப்புசாமி.

கூண்டுக்குள் ஒரு கிளி இப்படியும் அப்படியும் அசைந்து ஆடிக்கொண்டிருந்தது.

“இறக்கையெல்லாம் போதுமான அளவு அவனே வெட்டிட்டானாம். அடேய், ராஜா, கூண்டிலேருந்து வந்து அம்மாவுக்கு ராசியான ஒரு சீட்டை எடுறா… நல்ல பலன் சொல்லு… அம்மாவுக்கு கட் அவுட் வைப்பாங்களா? பாத்து எடுடா பாக்யவதிக்கு ஒரு சீட்டு. ரெண்டு ரூபாய்க்கு ஒரு சீட்டு… அஞ்சு ரூபாய்க்கு மூணு சீட்டு… அவாளவாள் பலாபலன்களை வெளியே வந்து சொல்லுடா ராஜா…”

சீதாப்பாட்டி. “மை காட்! இது என்ன புது பிஸினஸ்?… என்று திகைத்தாள்.

“செல்லப் பிராணிகளைப் பிரியமாக வளர்த்தால் வயதான எங்களுக்கு மாரடைப்பு வராதுன்னு சொன்னே. குரங்குக்குட்டி ராஜாவை வளர்த்தேன். உனக்கே மாரடைப்பு வர்ற மாதிரி ஆயிட்டுது. அதனாலே இப்ப பட்சி சாஸ்திரம்! டூ இன் ஒன் என்பார்களே அந்த மாதிரி செல்லப் பிராணிக்கு செல்லப் பிராணியா வளர்க்கலாம்.

நம்ம ராஜாக்கிளி இருக்கானே… மகாபுத்தி… டேய் வந்து இந்த ஊட்டு ராணியம்மா போணி செய்ய வர்றாங்க… ரெண்டு ரூபாய்க்கு ஒரு சீட்டு எடுடா…” என்று படச் சீட்டுகளைக் குலுக்கி கூண்டுக்கு முன்னே பரப்பி, கம்பிக் கூண்டைத் திறந்து விட்டார்.

“இந்த வீட்டு எஜமானிக்குச் சிறந்த எதிர்காலம் உண்டா? நல்ல சீட்டா எடுத்துக் குடுடா ராஜா. எஜமானருகிட்டே அம்மா பிரியமா இருப்பாங்களா.. பார்த்து சீட்டு எடுடா!”

கிளி, மதிப்புக்குரிய ஜனாதிபதி போல மெதுவாக நிதானமாக அசைந்து வந்து ஒரு சீட்டைக் கொத்தி எடுத்து அப்புசாமியிடம் தந்தது.

அப்புசாமி தயாராகக் கிண்ணத்திலிருந்து நெல் ஒன்றை அதற்குத் தர அது கூண்டுக்கு திரும்பியது.

அப்புசாமி படிக்கத் துவங்கினார்.

“கேளப்பா நீயுமே காதினாலே. பாரப்பா நீயுமே கண்ணினாலே. மங்களகரமாக லட்சுமி தேவி பார்வதி பரமேஸ்வரி, துர்க்காதேவி வந்திருக்கிறபடியாலே, நீயுமே பணம் காசோடு, தன தான்ய சம்பத்துக்களோடு சுபிட்சமும், பொன்னான பொட்டும், பூவும் புருஷனுமா நல்லா இருப்பே… போன பொருள் திரும்ப வரும்… சுபம்… ரெண்டு ரூபாய் தரவும்…”

சீதாப்பாட்டி சிரித்தபடி, நூறு ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினாள்.

“அய்யோ! சீதே! உனக்குக் கூட இத்தனை தாராள மனசா? ரெண்டு ரூபாய்க்கு நூறு ரூபாயா?”

“சீட்டுக்கு அல்ல. பெட்டிக்கே. செல்லப் பிராணிகளை வளர்க்கிறது மனதுக்கு நல்ல ஆரோக்கியமானதுதான். ஆனால் அந்த அனிமல்லின் ஆரோக்கியமும் பாதிக்கக் கூடாதில்லையா? முதல்லே கொண்டு போங்க! கிளிக்கூண்டை ரிடன் பண்ணிட்டு வாங்க… உங்க ஜோஸ்யமும் நீங்களும்…”

அப்புசாமி பல்லை நறநறத்தார். “அடியே கியவி நான் எங்கே நல்லாப் பிழைச்சிடுவேனோன்னு உனக்கு எப்பவுமே ஒரு பயம்… ஆனால் நான் கிளி ஜோசியரானது ஆனதுதான். இந்த கிளியை வெச்சே கோடீஸ்வரன் ஆகிக்காட்டறேண்டி.. சவால்… என்னன்றே?”

“உங்க சாலஞ்சுக்கு ஒரு முடிவு உண்டா என்ன?” என்ற சீதாப்பாட்டி கழகத்துக்குக் கிளம்பினாள். அப்புசாமி, ‘ஜோசியம் பார்க்கிறதேய்! கிளி ஜோசியம்!” என்று பெட்டியுடன் கிளம்பினார் உற்சாகமாக.

Print Friendly, PDF & Email

2 thoughts on “அப்புசாமியின் ‘வால்’ நாளில்…

  1. அருமை அருமை பிரமாதமான கதை நிறைய சஸ்பென்ஸும் காமெடியும் கலந்த கதை நல்ல இருக்கு வாழ்த்துக்கள் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *