கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: November 10, 2014
பார்வையிட்டோர்: 11,600 
 

எவ்வளவோ பேர் எத்தனை தடைவ சொல்லியும்கூட தன் சைக்கிளை விட்டுவிடவோ, விற்று விடவோ குமரவேலு பிரியப்பட்டதில்லை. இருபத்து ஐந்து வருஷம் முன்பு புதிதாக வாங்கின சைக்கிள் அது. இன்னமும் கூட சுத்தமாக வைத்திருந்தான். அதை விலையுயர்ந்த கார் மாதிரியோ, அல்லது மோட்டார் சைக்கிள் மாதிரியோ துடைத்து பராமரிப்பது அவன் முக்கியமான வேலைகளில் ஒன்று. ஏறி உட்கார்ந்தால் மெத்தென்று சொகுசாய் இருக்கும். வெண்ணெயில் கத்தி இறங்குகிற மாதிரி சல்லென்று சாலையில் வழுக்கிக் கொண்டு ஓடும். அந்த சைக்கிளுக்கு முன் விளக்கு.பின்னால் சிகப்பு விளக்கு தவிர குழந்தைகள் உட்காரும் ஒரு சீட் கூட உண்டு. தன் ஒரே மகள் லட்சுமிக்காக அப்போது அவன் அந்த சீட்டை வைத்திருந்தான். இப்போது பேத்தி அதில் உட்காருகிறாள். அவள் அப்பன் பைக்கை விடவும். தாத்தாவுடன் அந்த சீட்டில் உட்கார்ந்து சவாரி செய்வது அந்தக் குழந்தைக்கும் பிடிக்கும். அப்புறம் அந்த சைக்கிளை விற்க எப்படி மனம் வரும்.

அந்த சைக்கிள் நிறைய சம்பாதித்தும் கொடுத்திருக்கிறது. குமரவேலுவுக்கு பால் ஊற்றுவதும் ஒரு தொழில், காலை ஐந்து மணிக்கு இருட்டோடு எழுந்து கவுண்டர் வீட்டுக்கு போக வேண்டும். அங்கே ஒரு அலுமினியக் கேனில் அவனுக்கான பால் தயாராக இருக்கும். கொண்டு போகிற காலிக் கேனை வைத்து விட்டு பால்கேனை சைக்கிள் உள்ள அகலமான கேரியரில் கட்டி பால் ஊற்றப் புறப்பட்டு விடுவான். சரியாக இருபது லிட்டர் விற்பனை வாடிக்கை. அதற்கு மேல் பால் ஊற்றுவது அவன் கொள்கை அல்ல. காலையில் இருபது லிட்டர், சாயந்திரம் இருபது லிட்டர்.அவன் ஊற்றுகிற பாலுக்காக பதினைந்து வீட்டுக்காரர்கள் காத்திருப்பார்கள்.

ஒரு சொட்டுத் தண்ணீர் இராது. உறை குத்தினால் தயிர் கல்மாதிரி கட்டி தட்டி மணக்கும். உடைத்துக் கடைந்தால் வெண்ணெய் மல்லிகைப் பூச்செண்டு மாதிரி திரள வரும். காய்ச்சினால் சொல்லக்கூடாது. நெய் வாசனை தெருவையே தூக்கும்.. “குமரவேலு மனசு மாதிரி அவன் பாலும்…திரிஞ்சும் போகாது… கெடவும் கெடாது” என்று அவனிடம் பால் வாங்குகிறவர்கள் சொல்வார்கள். எவ்வளவு வேண்டிக்கேட்டாலும் அதிகப் பால் வியாபாரம் வைத்து கொள்ளமாட்டான். நிறையப் பேர் கேட்டுப் பார்த்துவிட்டார்கள். அவன் சம்சாரம் போராட்டம் செய்துகூட பார்த்து விட்டாள். குமரவேலு, ஒப்புக்கொள்ளவில்லை. அவன் முடிவு செய்துவிட்டால் மாறுவது இல்லை. அவன் குணம் அது…..

இப்போது பால் ஊற்றி முடிந்து. நாயர் கடைக்கு வந்திருந்தான் குமரவேலு. அவன் தலை தெரிய நாயர் ஒரு ஸ்பெஷல் டீ போட்டு குமரவேலு உட்கார்ந்ததும் கையில் வைத்து விடுவான். கூடவே ஒரு பண்ணும், வாரத்துக்கு ஒரு நாள் இரண்டு நாள் மிச்சமாகிற பாலை நாயருக்கு ஊற்றி விடுவான். இதெல்லாம் கூட வாடிக்கைதான். குமரவேலு பண்ணை டீயில் தோய்த்தபோது ராசு வந்து சேர்ந்தார்.

“நாயர்… ஒரு டீ போடுய்யா… வந்துட்டியா.. கொமரு… சாப்புடு….

“மாமனுக்கு டீ போடு நாயர்…

“இதோ…”நாயர் டீ கொடுக்க ராசு ஒரு மிடறு குடித்து சப்புக்கொட்டி டீயை ரசித்து விழுங்கினார். “நல்லா டீ போடராண்டா இவன்.. ம்.. அப்புறம் கொமரு… வர்ற வெள்ளிக் கிழமை உனக்கு பென்ஷன் ஆயிடுமாமே…

“ஆமா… மாமா”

“சர்த்தான் போ…. என்ன சத்தியமா வேலை செஞ்சாலும் வயசானா வெளியே வந்துதானே ஆகனும்.. போகட்டும்… சந்தோஷமா பொழுதைக் கழி… நிறைய உழைச்சிட்டே… ஓய்ஞ்சி எங்க உட்கார்ந்தே…. நாயரு.. நம்ம கொமரு நறுவிசா வேலை செய்வான்.. ஒரு கோபம் வராது… ஒரு பயகிட்ட கை நீட்ட மாட்டான்…. அநாவசியமா லீவு போடமாட்டான்.. பத்து மணிக்கு உள்ளே போனால் அஞ்சு மணி வரை ஆபீஸ்லேயே கிடப்பான்…ப்ய+ன்னு பேரே தவிர ரொம்ப கவுரதையா இருப்பான்… நல்ல ஆத்மாய்யா..”

குமருக்கு வெட்கத்தில் கூசியது.. உதடு பிரியாமல் சிரித்தான்.

“என்னமோ மாமா.. எதச் செஞ்சாலும் சத்தியமா செய்யற மனசை ஆண்டவன் கொடுத்திட்டான்…”

“அடேய்… அது பெரிய விஷயமில்லையா… இந்த கெட்ட காலத்திலே காசு வாங்காம, நேரத்தை தங்கமா மதிச்சு வாங்குகிற சம்பளத்துக்கு துரோக மில்லாம எத்தனை பேர் வேலை செய்யறான்… அதுவும் கவர்மெண்டு வேலையிலே…”

“நமக்குத் தெரியல்லே… மாமா… நெறயப்பேர் நல்லபடிதான் இருக்காங்க…..”

“இதாண்டா கொமரவேலு குணம்… ஒருத்தனை தப்பு சொல்ல மாட்டான்… பார்த்தியா நாயரு….”

நாயர் நிறைய நாளாகப் பார்த்துவிட்டான். சலனப்படாத சத்தியம்..பாராட்டும்படி பெரிய மனசுக்காரன் இந்தக் குமரவேலு.

“மாமா.. நான் புறப்படறேன்….”

“சரி புறப்படுய்யா.. லே… இந்தப் பக்கமா போற… நாத்தம் குடலைப் புடுங்குமேய்யா..”

“பழகிருச்சி மாமா…”

கொமரவேலு பத்தடி அகலம் கூட இராத அவன் வழக்கமாகப் போகும் இட்டேரிப் பக்கம் திரும்பினான். ஏறக்குறைய நாற்பது குடும்பங்களும் நூத்தைம்பது பேருக்கு குறையாத ஜனத் தொகையும் கொண்ட அந்தப் பகுதிக்கு அந்த இட்டேறி ரோடுதான் திறந்த வெளிப் பொதுக் கழிப்பிடம்..அவன் போகும்போது கூட இரண்டு பேர் உட்கார்ந்து கொண்டு சிரித்து வைக்க சங்கடத்துடன் தலையாட்டியபடி அவர்களை தாண்டினான் கொமரு. ஆண்கள் காலை நேரத்தில் அங்கே வருவதால் பெண்கள் இருட்டு நேரத்தில்தான் அங்கே வருவார்கள். முள்ளுக் கிளுவை மரங்களும், கள்ளிச் செடிகளும் இட்டேரி ஓரத்தில் இருப்பது சரியான மறைப்பு. எழுதி வைக்கப்பட்ட ஒரு விதிபோல, பெண்கள் ஒதுங்கும் இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் உள்ள எந்த ஆணும் இட்டேறிப் பக்கம் வரமாட்டான்… ஊர் வேகமாக வளர்ந்து வந்ததால் அந்தப் பகுதி ஜனத்துக்கு அந்த இட்டேரி தவிர ஒதுங்க வேறு இடம் இல்லை. எந்தக் காலத்திலோ ஆளுக்கு ஒரு செண்ட் வீதம் நல்ல மனுஷன் ஒருத்தன் பிரித்துக் கொடுத்த அந்த மனை நிலத்தில் வீட்டுக்கு ஒரு கக்கூஸ் கட்டுமளவுக்கு அந்தப் பகுதி ஜனங்களுக்கு வசதியிருக்கவில்லை. சின்ன சின்ன ஓட்டு வீடுகளும், கூறைச்
சாலைகளுமே கொண்டிருந்த அந்த பகுதிக்கு ஒரு கழிப்பிடம் என்பது சற்று அதிகப்படி. தவிர சுற்றி வயல்காடு இருந்த அந்தப்பகுதிக்கு சமீபம்வரை கழிப்பிடம் தேவையில்லாமல்தான் இருந்தது. ஆனால், இப்போது வயல் காடுகள் மனை நிலங்களாகிவிட்டதால் அந்தச் சேரி மக்களுக்கு சோதனை ஆரம்பித்திருந்தது.

அந்த இட்டேரி முடிவில், அந்தப் பகுதிக்கு சற்று சேர்ந்தாற்போல் கொமருவுக்கு ஐந்து செண்ட் இடம் இருந்தது. அதை அவன் ரொம்ப வருஷம் முன்பு யாருக்கும் தெரியாமல் வாங்கியிருந்தான். அதில் இப்போது ஒரு வேப்பமரம், ஒரு புங்க மரம், ஒரு முள் வேளாண் மரமும் முளைத்திருந்தது. சுற்றிலும் வேலியாக கத்தாழை… இப்போது குமருவின் இடம் கூட ஒரு பொதுக்கழிப்பிடமாய் மாறிப்போயிருந்தது… ஆனால் அதை குமரு கண்டு கொள்ளவில்லை.. வெறும் இடம் எல்லாருக்கும் உதவட்டுமே என்று விட்டுவிட்டான்.

“போன வாரம் குமரு.. ஆராயாளுக்கு வயிறு புடுங்கிடுச்சி…காலங்கார்த்தாலே ஆம்பளைங்க மத்தியிலே அவ எங்க போவா.. ஒரு கொடம் தண்ணீயோட உன் இடத்துக்கு போயிட்டா… வீட்டுக்குக் கூட வரலை.. மருந்துகூட அங்கதான் போய் கொடுத்தாங்களாம்… என்னா ஊரு போ…” என்று ராசு கூட சலித்துக் கொண்டார்.

கக்கூஸ் கேட்டு எத்தனை பேருக்கு எழுதியும் ஒருத்தனும் கவனிக்கவில்லை. வக்கத்தவர்களும், போக்கத்தவர்களும், இங்கே என்னதான் சாதிக்க முடிகிறது… அந்தப் பகுதி மக்களை ஒரு பொருட்டாக நினைக்க ஒரு அரசியல் வாதிக்கும், அதிகாரிக்கும் பிடிக்கலை போல என்றுதான் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். ஒரு பஸ் மறியல் பண்ணப்போய் ஏழு பேர் லத்தியடி வாங்கி ஒரு வாரம் ஸ்டேஷனுக்கு நடந்ததுதான் மிச்சம்.. அப்புறம் பஸ்மறியல் பண்ண ஆள் இல்லை.

குறிப்பிட்ட ஜாதி, அல்லது குறிப்பிட்ட அரசியல் கட்சி இல்லாததால் அந்த ஜனங்கள் எல்லோரும் அநாதையாகத்தான் கிடந்தார்கள்.

சரியாக எட்டுமணிக்கு வீட்டுக்கு வந்துவிட்டான் குமரு. வந்து சேர்ந்ததும் பால் கேனைக் கழுவி வைக்க வேண்டும். இதெல்லாம் அவன் மனைவி மங்காத்தா செய்யமாட்டாள். ஒன்னாம் தேதி வந்தால் அவன் வாங்கும் சம்பளம் நாலாயிரமும் அவளுக்கு வந்து விடவேண்டும். தவிர பால் விற்பனையில் வரும் பணமும் வாங்கி விடுவது என்று அவள் தீர்மானித்து எவ்வளவோ ஆடிப்பார்த்து இருபது வருடத்தில் ஒரு தடைவகூட அவள் ஜெயிக்கவில்லை. குமரு முடிவெடுத்து விட்டால் அப்புறம் எதற்கும் வளைந்து கொடுக்கமாட்டான். அது அவன் குணம்.

“இந்தாய்யா டீ என்று மங்காத்தா நீட்டியதை வாங்கி ஒரு வாய் உறிஞ்சினான். டீ வழக்கம் போல் இல்லாமல் ருசியாக நாயர், டீ மாதிரி இருந்தது. பத்து நாளாக டீ மாத்திரமில்லை…. குழம்பும் சோறும் கூட ருசியாகவும் பதமாகவும்தான் தெரிகிறது. இதற்கு முன்பு சோறு என்றால் ஒன்று செதிள் மாதிரி விரைத்துக் கிடக்கும். அல்லது வேகாத செங்கல் மாதிரி கையோடு ஒட்டிப் போய் வழித்து சாப்பிடுகிற கணக்காய் இருக்கும். இந்த மாற்றம் எல்லாம் ரிட்டெயர்மெண்ட் பணத்தின் மகத்துவம்”.

“டீ நல்லாயிருக்கா”

“ம்…….”

“தே…. வாயத் தொறந்து சொல்றது..”

“நல்லாயிருக்கு…”

“சரி….சரி… அது கெடக்கு.. வெள்ளிக்கிழமை உனக்கு செக்கு தந்துடுவானா…”

“தந்துடுவான்….”

“மறுநா பேங்கிலே போட்டுறு… செவ்வாக்கிழமை முழுசா என் பேர்லே மாத்திடு…”

ரெண்டு மாதங்களாக தொடர்ந்துபடும் இந்த ரோதனையை இன்று முடிவுக்கு கொண்டு வருகிறதென்று குமரு முடிவு செய்திருந்தான்.

“பணத்தை உம் பேர்லே போட்டா என்ன செய்வே…”

சுள்ளென்று தேள் கடி பட்ட மாதிரி துடித்துப்போனாள் மங்காத்தா…“அடப்பாவி மூணூவது நாளே வாங்கப் போற அம்புட்டு பணத்தை இவன் என்ன செய்யப் போறானோ இழவெடுத்த சனியன்..”

“பின்னே என் பேர்லே போடாமே உன் வப்பாட்டி பேர்லே போடுவியோ..”

இந்த அதிகப்படி பேச்சுக்கு குமரு பதில் சொல்லவில்லை. அவள் எத்தனை சாட்டையில் விசிறினாலும் அவனுக்கு வலிக்காது. பழகி மரத்துப் போன மனசு அவனுடையது.

“சொல்லுய்யா… உன் திட்டம்தான் என்னா… எனக்கு மாத்தப் போறியா இல்லையா…”

“முதல்லே அதுக்கு என்ன செலவு சொல்லு..”

“ஏன் புள்ள இல்ல… பேத்தி இல்ல…. மருமகன் இல்ல… நான் இல்ல…”

“இருக்கீங்க தான்… உனக்கு வீடு கட்டி கொடுத்திருக்கேன். வாடகை மாசம் மூவாயிரம் வருது… உன் மருமகன் உன்கிட்ட இதுவரை வாங்கின ரெண்டு லட்ச ரூபா என்ன ஆச்சு…. வசதியில்லாதவனா என்ன.. அப்பன் ஆயி கிட்ட வாங்கி வியாபாரம் செய்யலாமே.. உன்கிட்ட வாங்கித்தானே ஆடி முடிச்சான்.. கடன் வேற பண்ணி கிட்டான்.. விளங்காத பய….”

“அவரு கடனை அடைக்க வேணாமா..”

“அவன் அப்பன் தரட்டுமே இல்லே போன மாசம் எடுத்தியே சீட்டு அத வச்சி கடனைக் கட்டு….”

“தா… நீ அதப்பத்தி பேசாத…. வர்ர பணத்தை மரியாதையா என் கணக்குல போடற.. இல்ல நடக்கிறதே வேற….”

விருட்டென்று கோபம் கொப்பளிக்க எழுந்து போனாள் மங்காத்தா…என்ன நடக்கும்… குமருவுக்கு யோசிக்கப் பிடிக்கவில்லை, என்னவும் நடக்கும்… சில சமயம் குரூரமாக சண்டையின்போது சொல்லுவாள்….

“தலையிலே கல்லைத் தூக்கி போட்டுருவேன்… என்கிட்ட வச்சுக்காதே… ஜாக்கிரதை…”

மங்காத்தா அதற்கும் துணிந்தவள்தான்… ஆனால், இப்போது எதுவும் செய்யமாட்டாள்… ஏனென்றால், ஐந்தரை லட்ச ரூபாயை ஏதாவது குளறுபடி செய்து வில்லங்கம் பண்ணிக் கொள்ள அவளுக்குப்
பிரியமிருக்காது.

நிமிஷத்தில் நாட்கள் ஓடி மூன்றாம் நாள் செக் கைக்கு வந்தது. அதற்கு முதல் நாளே மகளும், மருமகனும், பேத்தி சகிதமாக குமருவின் வீட்டுக்கும் வந்தாகி விட்டாயிற்று. பணம் என்னமாய் வேலை செய்கிறது என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான் குமரவேலு, பின்னே எப்போதும் மதித்துப் பேசாத மருமகன் ஆசையாய் அன்பாய்க் குசலம் விசாரித்தால் இனிப்பு காரம் வாங்கி வந்தால் வராதா சிரிப்பு.

செக் வாங்கின மறுநாளே அது பாங்குக்குப் போய்விட்டது என்று மங்காத்தாவுக்கு தெரிந்து போனது… திக்கென்றது.. பாவி மனுஷன் என்ன செய்யப் போகிறானோ என்று அடித்துக் கொண்டாள்… நாத்தனார் பையன் நாலு தடவைக்கு குறையாமல் வந்து போனான்.. என்ஜினியர் காலேஜிக்கு பணம் கேட்கிறானோ என்னவோ.. இன்னொரு நாத்தனார் பெண்ணுக்கு கல்யாண ஏற்பாடு நடக்கிறது… அதுக்குப் போய் விடுமோ….பணம்….”

குமருவின் வீட்டில் மூன்று பேரும் கலங்கிப் போய்தான் காத்துக் கிடந்தார்கள். நயந்து பேசி பணத்தை வாங்கின பின்பு இவனைப் பார்த்துக் கொள்ளலாம் என்று மங்காத்தா யோசித்தாள். நடுவில் மகள் மருமகன் இருவரோடு மங்காத்தா வக்கீலை பார்த்ததாகச் சொன்னார்கள். குமரு சாதாரணமாய்த்தான் இருந்தான். எந்த பாங்கியில் செக் போட்டான் என்று கூடத் தெரியவில்லை. கேட்டால் மழுப்பலாய் பதில் சொன்னான்…

அன்றைக்கு ராஜி மாமன் டீக்கடை வந்தபோது குமரு வந்து சேர்ந்திருக்கவில்லை. ஆனால், அவருக்காக காத்திருக்கிற மாதிரி அதிசயமாக மூன்று நான்கு பேர் கடைக்கு வந்திருந்தார்கள்…

“என்னடா ஞாயித்துக்கிழமைன்னு இங்க வந்திருக்கீங்க…”

“சும்மா வந்தோம் மாமா… நம்ப கொமரு நிலத்தை சுத்தம்பண்ணி போர் போடறாங்க மாமா… நூறு அடி ஓடிருச்சி…”

“என்னடா இது ஆச்சரியமா இருக்கு… எனக்கும் கூட சொல்லலையே..வெள்ளிக்கிழமைதானே செக்கு வாங்கினான்… ரெண்டு நாள்கூட ஆகல்லியே…. அதுக்குள்ளார பணம் வந்திருச்சா.. ஊடு கட்டறான் போல….”

இந்த பேச்சு நடந்து கொண்டிருந்தபோதே குமரு தன் சைக்கிளில் வந்து சேர்ந்து விட்டான்.. நாயர் வழக்கம்போல் டீ போட்டு வைத்திருந்தான்.

“என்னடா குமரு… ஊடு கட்டிறியா… பணம் வந்துடிச்சா என்ன….போர் கூட நூறு அடிக்கு மேலே ஓடிடுச்சாமே….”

“ஆமா மாமா… ஆழமான ஒரு எண்ணம் நாள் தள்ளாம வேலை ஆரம்பிச்சிட்டேன்…”

“நீ வீடு கட்டறது மங்காத்தாவுக்குத் தெரியுமா….”

“அவளுக்கு இங்க நெலம் இருக்கிறதே கூட தெரியாது மாமா…”

“அப்படியா சரியான ஆள்டா நீ. சரி வா போய்ப் பார்க்கலாம்…”

இடம் சுத்தமாகி முள்ளுச்செடி மரம் எல்லாம் விடியற்காலையிலே அப்புறப்படுத்தப்பட்டு போர் ஓடிக் கொண்டிருந்தது..

“வெங்க கல்லும், ஈரமும் வருதுங்க….”

பத்து நிமிஷத்தில் தண்ணீர் பொச பொசவென்று ஆரம்பித்து வேகமாக பீரிட்டது.

“ரெண்டு இன்ச் வருது கொமரு…”

கொமரு சந்தோஷமாகச் சிரித்தான்….

பத்துமணிக்கு எல்லா கட்டிட சாமானும் வர எலக்ட்ரிக் வேலைகூட ஆரம்பமாகிவிட்டது…

நான்கு நாட்களாக கொமரவேலு எப்பவும் போல் பால் ஊற்றிக் கொண்டிருந்தான். ஆபிசில் கொஞ்ச வேலை பாக்கி என்று போய் கொண்டிருந்தான். ஒரே வாரத்தில் கட்டிட வேலை மிக அதிகப்படி ஆட்களுடன் செய்யப்பட்டு பத்தடி சுவர் மேலே வந்துவிட்டது. ஓடு போர்த்தத் தயாராகி இரும்பு டிரஸ்ஸூம், சிமெண்ட் ஓடும் வந்த பின்புதான் ராஜூ மாமாவுக்கு சந்தேகம் வந்தது. குமரு வீட்டுக்கும் போகாமல் கட்டிடத்தின் ஒரு மூலையிலேயே படுத்துக் கிடந்தான்.

வழக்கம் போல டீ சாப்பிட வந்தபோது ராஜூ மாமன் ஆரம்பித்தார்.

“ஏண்டா கொமரு.. உன் கட்டிடம் ஊடு மாதிரி தெரியில்லியே..என்னடா பிளானு இது…”

கொமரவேலு டீ குடித்து முடித்திருந்தான்.. “நா வீடு கட்டல்லே மாமா.. ஒரு பெரிய சாலையும் கக்கூஸூம் கட்டறேன் மாமா…”

ராஜூ மாமனுக்கு ஒன்றும் புரியவில்லை.. “என்னடா சொல்றே..

“சொல்றேன்மாமா… உங்ககிட்ட கூட எதுவும் பேசாம மறைச்சேன். என் திட்டத்தை யாரும் மாத்திடக் கூடாதுன்னு நெனைச்சேன்.. அதான் ஒன்னும் சொல்லல மாமா… வேலைக்கு சேர்ந்து சத்தியமா ஒழச்சி கடமையைச் சரியாச் செஞ்சேன்.. நெருப்புக்கு முன்னே கட்டின தாலிக்கு சத்தியமா எத்தனை மோசமா நடந்தாலும் கடமை தவறாம மங்காத்தாவுக்கு வேண்டியதை செஞ்சேன்… மகளுக்கும் நல்லபடி கல்யாணம் முடிச்சேன்…மனசில ரொம்ப நாளா அரிப்பு எல்லோருக்கும் செஞ்சோமே.. நம்ம கூட இருக்கிற சக மனுஷாளுக்கு ஏதாவது செய்ய வேண்டாமான்னு கிடந்து இந்த ஜனங்க.. பொம்மனாட்டிங்க… ஒதுங்க இடமில்லாமலும், வயசுப் புள்ளைங்க படற அவதி பார்க்க சகிக்கலை… ஊரும் நாறிப் போச்சு… அதான் ஆம்பளகை;கும் பொம்பளைக்குமா ஒரு டஜன் பொதுக் கக்கூசு கட்டி விட்டுட்டேன்… அப்புறம் வயசானதுங்க படுக்க எடம் கெடைக்காம அலையுதுங்க.. அதுங்க படுக்க ஒரு சாளையும் போட்டுருக்கேன்…கக்கூசுக்கு போர், தண்ணித் தொட்டி, குப்பை போட ஒரு பெரிய குப்பைத் தொட்டி… எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன்… நாலு லட்ச ரூபா காண்டி ராக்டருக்கு கொடுத்திட்டேன்.. அதான் இவ்வளவு வேகமா வேலை முடியுது…”

ராஜூ மாமன் குக்கிப்போய் உட்கார்ந்துவிட்டார். சுதாரிப்பு வந்ததும் தெய்வம்டா நீ… எவனுக்கும் வரும் இந்த மனது… நல்லாயிருப்பேடா…ஊரே கும்புடற வேலை செஞ்சிருக்கடா நீ.. என்று சொன்னபோது அவர் கண்ணீர் நீர் குளமாகி நின்றது.

கேட்டுக் கொண்டிருந்த எல்லோரும் ஒரு கணம் உறைந்து போனார்கள்.

விஷயம் பொல்லென்று பரவி டீக்கடை முன்பு ஜனம் கூடிவிட்டது.

ஒரு பெண் ஆவேசம் வந்த மாதிரி கொமருவின் காலில் விழுந்தாள்.

“கொமரு.. நீ தான் சாமி மவராசனா இருப்பே…”

இப்போதுதான் ராஜூ மாமா கூட்டத்தில் ஓர் மூலையில் மங்காத்தா இருப்பதை பார்த்தார். அவள் வரவு அதிசயமாக இருந்தது. என்ன தீம்பு கொண்டு வரப் போகிறாளோ என்று பயந்தார்.

“லே… எல்லாம் போங்க… கட்டடத்தைப் பாருங்க.. எல்லாம் உங்களுக்குத்தான்… லே… போங்கறேன்.. போங்கடா…. “கூட்டத்தை விரட்டினார்.

கூட்டம் கட்டிடம் பார்க்கப் போனபோது மங்காத்தாவை அருகில் அழைத்தார்.. “வா புள்ள இங்க..”

மங்கா.. அருகில் வந்தாள்…

“மங்கா.. உனக்கு விவரம் தெரியுமா..”

“ராத்திரியே இது சொல்லிட்டது மாமா.. கொஞ்சம் ஆடித்தான் போனேன்.. நாலு லட்சம் வாரி இறைச்சிடுச்சேன்னு துக்கம்… மருமகன் தூன்னு துப்பிட்டுப் போயிட்டான்..”

“அது அப்படித்தான் நடக்கும்… துப்பிட்டா போனான் நாயி”

“ஆமா.. மாமா… ஆனா யோசிச்சுப் பார்த்தேன்.. சைக்கிளும் அதுவுமா தேஞ்சது… நிறைய சம்பாரிச்சது… தனக்குன்று எதுவும் ஆசைப்படல…. எல்லாம் ஊருக்கே செஞ்சது… எவ்வளவு பெரிய மனசுக்கு வாழ்க்கைப்பட்டேன்னு அப்புறமா தெரிஞ்சது. கடைசிக்காலம் வரை இதோட இருக்கறதுதான் பெருமைன்னு இப்ப பட்டுப் போச்சி. என் தப்பையெல்லாம் மறந்து அது ஊட்டுக்கு வந்து என்னோட சந்தோஷமா இருக்கனும்னு சொல்லத்தான் இப்போ… இங்க.. வந்தேன்…”

குமரு சிரித்தான்… நான் ஊட்டுக்கு வரமாட்டேன்னு எப்பவும் சொல்லலையே மங்கா..

“நீ சாமி அய்யா… உன்னாலே அந்த மாதிரியெல்லாம் சொல்ல முடியாதுன்னு எனக்கும் தெரியும்…. என்று கையெடுத்துக் கும்பிட்டாள் மங்கா….

Print Friendly, PDF & Email

1 thought on “சக மனுஷனுக்காக…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *